நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 30, 2022

அதிருங் கழல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 
வெள்ளிக்கிழமை


குன்று தோறும் ஆடும் 
குமரனைக் குறித்த திருப்புகழ்

குன்றுதோறாடல் என்பது
பழமுதிர்ச்சோலை என்று 
சில கருத்துகள் இருந்தாலும்
குன்றுதோறாடல் என்பதைத் 
தலமாகக் கொண்டு 
நான்கு திருப்பாடல்களை 
அருளிச் செய்துள்ளார் 
அருணகிரிநாதர்.. 

அவற்றில் இருந்து 
இனியதொரு திருப்புகழ்..


தனனந் தனன தந்த ... தனதான
தனனந் தனன தந்த ... தனதான

அதிருங் கழல்ப ணிந்து ... னடியேனுன்
அபயம் புகுவ தென்று ... நிலைகாண

இதயந் தனிலி ருந்து ... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ... அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி ... நடமாடும்
இறைவன் தனது பங்கி ... லுமைபாலா

பதியெங் கிலுமி ருந்து ... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ... பெருமாளே..
(நன்றி : கௌமாரம்)


அதிர்ந்து ஒலிக்கின்ற வீரக் கழல்களை உடைய உனது திருவடிகளை வணங்குகின்ற அடியனாகிய யான்

நீயே அடைக்கலம் என்று - புகுந்த நிலையில் -
மெய்ஞான நிலையை நான் காணுமாறு,

எனது நெஞ்சத்தில் கருணையுடன் வீற்றிருந்து  (எனது) துன்பங்களும் துயரங்களும் ஐயங்களும் கலங்கி ஒழிவதற்கு அருள் புரிவாயாக..

தமக்கு சமமாக எவருமில்லாமல்
ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற ஈசன் எம்பெருமானுடைய இடப் பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக் குமரனே..

திருத்தலங்களில் எல்லாம்
திருவிளையாடல்கள் புரிந்து, குன்றுகள் தோறும் குடி கொண்டு அருள் புரியும் பெருமாளே..

கந்தா போற்றி..
கடம்பா போற்றி..
கார்த்திகை மைந்தா
போற்றி..  போற்றி!..
***

வியாழன், செப்டம்பர் 29, 2022

ஆரூர் தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருத்தலம்
ஆரூர் மூலட்டானம்

ஆரூர் அரநெறி (நன்றி :  விக்கி)



ஆரூர் அரநெறி

திரு மூலட்டானம் எனப்படும் இக்கோயிலின்
உள்ளே தெற்குத் திருச்சுற்றில் அரநெறி எனும் தனிக் கோயிலும் அமைந்துள்ளது..

அசலேஸ்வரம் எனப்படும் இக்கோயிலில் ஸ்வாமி அகிலேஸ்வரர் .. அம்பிகை  வண்டார்குழலி..

இங்கு தான் நாயன்மார்களுள் ஒருவராகிய நமிநந்தியடிகள் - நீரால் விளக்கெரித்தார் என்பர்.. 

இந்தக்கோயில் அப்பர் ஸ்வாமிகளால் பதிகம் பெற்றதாகும்..

இரண்டாம் திருச்சுற்றில் மேற்குப் பக்கம்  மேலைக் கோபுரத்திற்கு அருகில் 
ஸ்ரீ ஆனந்தீஸ்வரம் எனும் கோயில் அமைந்துள்ளது..  

ஸ்ரீ ஜேஷ்டா தேவி


இங்கு தான் ஸ்ரீ ஜேஷ்டா தேவி எழுந்தருளியிருக்கின்றாள்..


ஸ்ரீ சித்தர் பீடம்
கமலமுனி  சித்தர் பீடமும் இங்கு தான் உள்ளது..

மேலைக் கோபுரத்திற்கு அருகில் உள்ள பழமையான மண்டபம் அருங்காட்சியகம் என அடைத்து வைக்கப் பட்டுள்ளது.. 

அதன் வெளி வாசலில் பெரிய அளவினில் கௌதம புத்தர்.. 

அன்பு வழி நின்ற அவரது மூக்கினை சிதைத்திருக்கின்றனர்.. 



வெளிப்புற விதானத்தில் பழமையான ஓவியங்கள்.. 


பாற்கடல் வாசன் வீதிவிடங்கப் பெருமானை நெஞ்சகத்தில் தாங்கியிருக்கும் திருக்கோலம்.. 


ஒருபுறம் ரதி மன்மதனும் மறுபுறம் முசுகுந்தரும் தேவேந்திரனும்.. 

ஸ்ரீ முசுகுந்தரும்
தேவேந்திரனும்

மேலைக் கோபுரம் கலையழகு மிக்க சிற்பங்களுடன் திகழ்கின்றது..

கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.. 2/101/7
-: திருஞானசம்பந்தர் :-

பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.. 6/34/8
-: திருநாவுக்கரசர் :-

கரியானை உரி கொண்டகை யானைக்
கண்ணின் மேலொரு கண்ணுடையானை
வரியானை வருத்தங் களை வானை
மறையானைக் குறை மாமதி சூடற்கு
உரியானை உலகத்துயிர்க் கெல்லாம்
ஒளியானை உகந்துள்கி நண் ணாதார்க்கு
அரியானை அடியேற்கு எளி யானை
ஆரூரானை மறக்கலுமாமே.. 
7/59/7
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், செப்டம்பர் 28, 2022

ஆரூர் தரிசனம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருத்தலம்
ஆரூர் மூலட்டானம்


இறைவன்
ஸ்ரீ தியாகராஜர்
அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை

ஸ்ரீ அல்லியங்கோதை

திரு ஆரூர் ஸ்ரீ புற்றிடங்கொண்டார் 
ஆலய தரிசனம் தொடர்கின்றது..

சோழர்களுக்கு ஹ்ருதய ஸ்தானம் இக்கோயில்.. 

சோழ வம்சத்தின் முசுகுந்த சக்ரவர்த்தி அவர்கள் ஆட்சி செய்த திருத்தலம்..

சிலப்பதிகாரத்தில் எடுத்துப் பேசப்படுபவர் மாமன்னர் மனுநீதிச் சோழர்.. அவரது மாண்பு வெளிப்பட்ட திருத்தலம்..

பிரம்மாண்டமான இக்கோயிலில் ஒன்பது ராஜ கோபுரங்கள், எண்பது விமானங்கள், பன்னிரண்டு மதில்கள், பதின்மூன்று பெரிய மண்டபங்கள், பதினைந்து தீர்த்தக் கிணறுகள் உள்ளன..

மூன்று நந்த வனங்களும் மூன்று பெரிய பிரகாரங்களும் விளங்கும் திருக்கோயிலில் முன்னூற்று அறுபத்தைந்து லிங்கங்களும் எண்பத்தாறு  விநாயகர் சிலைகளும்
நூற்றுக்கும் மேற்பட்ட சன்னதிகளும் அமைந்துள்ளதாக குறிப்புகள்..

இத்தலத்தின் சிறப்புகளை முழுதும் உணர்ந்தாரும் இல்லை.. உரைத்தாரும் இல்லை..

அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே!.. - என்று
அப்பர் ஸ்வாமிகளே வியந்து கேட்கின்றார் எனில் , மற்றவர்கள் எம்மாத்திரம்?..

முழுவதுமாக உணர்ந்து அறிவதற்கு இப்பிறவி போதாது என்பது மட்டுமே நிச்சயம்..

மஹாளய பட்சத்தன்று தர்ப்பணம் நிறைவேற்றிய பிறகு அவசர அவசரமாக தரிசனம் செய்த நிலை..

உணவகத்தில் சாப்பிட்டது  பெரிய பேத்திக்கு ஒத்துக் கொள்ளவில்லை. வாந்தி வயிற்றுப் போக்கு .. குழந்தை மிகவும் துவண்டு விட்டாள்..

பெரியவர்கள் மட்டுமே வந்து விட்டு உடனடியாகத் திரும்ப வேண்டிய சூழ்நிலை..

அந்த நிலையிலும் நமது வலைத்தள நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் இன்றைய பதிவில்!..





பஞ்சமுக வாத்தியம்

மூன்றாவது திருச்சுற்றின் வட புறத்தில் ஸ்ரீ கமலாம்பிகை சந்நிதி..

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்
முன் மண்டபத்தில் கொலு வைத்திருக்கின்றனர்..

கமலாம்பிகை சந்நிதி உள் திருச்சுற்றில் தான் அட்சர பீடம் அமைந்துள்ளது..


கமலாம்பிகை நந்தி மண்டபம்



சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்ற எங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறு மந்தணாரூ ரென்பதே.. 2/101/5
-: திருஞானசம்பந்தர் :-

பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே..6/34/5
-: திருநாவுக்கரசர் :-

செறிவுண்டேல் மனத் தால்தெளிவு உண்டேல்
தேற்றத்தால் வருஞ் சிக்கன உண்டேல்
மறிவுண்டேல் மறு மைப்பிறப்பு உண்டேல்
வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண்டு யாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை
பொன்போலுஞ் சடை மேற்புனைந்தானை
அறிவுண்டே உடலத்து உயிர் உண்டே
ஆரூ ரானை மறக்கலு மாமே.. 7/59/5
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், செப்டம்பர் 27, 2022

விருந்து


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
விருந்து
**


அன்று ஞாயிற்றுக்கிழமை.. 

மதிய விருந்துக்கு வருமாறு அழைப்பு.. நேரம் சொல்லப் படவில்லை.. 

தெரிந்தவர்கள் வந்திருந்தால் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கலாமே என்று பத்தரை மணிக்கெல்லாம் வந்து விட்டார்கள் சுந்தரமும் காமாட்சியமமாளும்..

அது வேறொன்றும் இல்லை..  

இவர்கள் வீட்டுக்குப் பின்புற வீட்டில் வசிக்கும் பெண் - காமாட்சியம்மாளுடன் நல்ல பழக்கம்.. அந்த அளவில் தனது மகனின் முதலாவது பிறந்த நாள் விருந்துக்கு வரவேண்டும் என்று கணவனுடன் வீட்டிற்கு வந்து அழைத்திருந்தாள்.. 

பக்கத்தில் இருக்கின்ற ஆடம்பர கல்யாண மண்டபத்தில் தான் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி.. 

பக்கத்தில் என்றாலும் நாலு குறுக்குத் தெருக்களைக் கடந்து  போக வேண்டும்.. ஆட்டோ இருநூறு ரூபாய் கேட்கின்றது.. அந்தத் தண்டம் எதற்கு என்று ஸ்கூட்டியில் வந்து விட்டனர் இருவரும்.. 

இவர்களைக் கண்டதும் அவர்களுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.. இளம் பெண்கள் இருவர் ரோஜாப் பூக்களுடன் சந்தனம் கொடுத்தனர்.. ஜில்லென்ற ரோஸ் மில்க் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் ஓடி வந்து உபசரித்தனர்.. யாரென்று விசாரித்தபோது தான் தெரிந்தது -  அவர்கள் கேட்டரிங் ஏஜென்ஸியின் பணிப் பெண்கள் என்று.. 

எதிர்பார்த்த மாதிரி அவர்கள்
வீட்டுப் பெரியவர்கள் எவரையும் காணவில்லை.. குடியிருப்பில் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் வசிப்பவர்கள் கூட காணப்படவில்லை..

ஆண்களும்  பெண்களுமாக அங்கு வந்து சூழ்ந்திருப்பவர்கள் அனைவருமே அலுவலகக் கூட்டாளிகள்.. 

குடியிருப்பில் நமக்கு மட்டும் தான் சொல்லி இருக்கின்றார்கள் - என்று புரிந்தது இருவருக்கும்.. 

அந்தப் பையனுக்கு வங்கி ஒன்றில் பெரிய உத்தியோகம்.. அந்தப் பெண்ணுக்கும் துறை சார்ந்த அலுவலகத்தில் வேலை.. இருவருக்கும் 
தற்போதைய தேவைக்கு அதிகமாகவே சம்பளம்.. 

தூரமாகச் செல்வதற்கு என்று சொகுசு ஹூண்டாய்.. அலுவலகம் செல்வதற்காக இருவருக்கும் தனித்தனி இருசக்கர வாகனங்கள் .. 

கல்யாணத்தை இவர்களாகவே செய்து கொண்டதால் அந்தப் பெண்ணுக்கு தாய் வீட்டோடு இருந்த தொடர்பு விட்டுப் போனது ..

அந்தப் பையனின் பெற்றோரும் அவ்வளவாக தொடர்பில் இருப்பதாகத் தெரியவில்லை.. 

அக்காளுக்கு சீர் செய்ய வேண்டும்.. தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்.. தம்பி படிப்பதற்குப் பணம் அனுப்பி வைக்க வேண்டும் - என்றெல்லாம் எதுவும் கிடையாது..

இப்படியிருந்தாலும் -
தலையில் நல்ல மாதிரியான எழுத்துக்கள்..

மணி பதினொன்று.. 

" ஓ.. " என்ற, சத்தத்துடன் பெரிய கேக் ஒன்று வெட்டப்பட்டது.. 

High Quality Cake - என்று பேசிக் கொண்டார்கள்.. 
Colourful Creamy Topping..

கண்களை மயக்கும் வண்ணங்களுடன் இருந்த அந்த Cake -
தங்க நிறத் துகள்களுடன் மினுக்கியது.. அதன் உள்ளீடுகளும் அப்படியே..  

Digital Delight என்று பெயராம்...

எல்லாருக்கும் வழங்கினார்கள்.. 

இவர்களிடத்தும் வந்தன சில துண்டுகள்..  

Diabetic என்று சொல்லி மறுத்தபோது சுற்றி இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள்..

பரிசுப் பொருட்களைக் கொடுத்த பலரும் பற்களைக் காட்டியபடி கிளிக்கிக் கொண்டார்கள்.. 
சிலர் மொய்ப் பணம் எழுதினார்கள்..

இவர்களுக்கு - சுந்தர காமாட்சியம்மாள் தம்பதியருக்கு - வீட்டில் விசேஷம் ஒன்றும் இல்லை.. இனிமேல் முறை செய்து மொய் வசூலிப்பதற்கு.. 

இருந்தாலும்,
ஐந்நூறு ரூபாய் தாளைக் குழந்தையின் கையில் வைத்தபடி, அந்தக் குழந்தையையும் பெற்றோர்களையும் மனதார வாழ்த்தி விட்டு அங்கும் இங்கும் தேடினர் சுந்தர காமாட்சி தம்பதியினர்..

"என்னம்மா?.."

"விபூதி, குங்குமம்!.."

" அது.. அது.. எடுத்து வர மறந்து போச்சு..ம்மா!.." - என்றாள் அந்தப் பெண்..

பையனோ சிரித்தபடி -
" இன்னுமா அந்த Culture.. ல இருக்கீங்க!.. " - என்றான்..

அருகில் தாடியுடன் நின்றிருந்த ஒருவன் - 'ஹீ... ' - என்று இகழ்ச்சியாக இளித்தான்..

அதற்குள் யாரோ சப்தமிட்டார்கள்... 

" ரெடி.. ரெடி.. எல்லாரும் வாங்க.. சாப்பிடலாம்!.. "

வித்தியாசமான மணம் காற்றில் வந்தது.. 

காமாட்சியம்மாள்
சந்தேகமடைந்தார்கள்..

" அம்மா.. வாங்க!..."  -  கைகளைப் பற்றியவாறு கனிவுடன் அழைத்த அந்தப் பெண்ணிடம்,
" என்னம்மா சாப்பாடு?.. " - என்று வினவினார்கள்..

" Mutton பிரியாணி, பனீர் Chicken குருமா, Fish fry, மசாலா Egg , Ice cream!.." - என்றாள் புன்னகையுடன்..

" அடடா... நாங்க அதெல்லாம் சாப்றதில்லம்மா!.. "

" Pure vegetation?.. What nonsense in this century?.. "

அந்தத் தாடிக்காரனின்
குரல் பின்னாலிருந்து கேட்டது...

உண்மையிலேயே வருந்தினாள் அந்தப் பெண்..

" வேற Arrangement கூட எதுவும் செய்யலை.. மா.. Very Very sorry!.. " - என்றாள் கலக்கத்துடன்..

" பரவாயில்ல..ம்மா.. நீங்க போய் முதல்ல அவங்கள கவனிங்க!.." - என்று ஆறுதல் சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்..

" குக்கர்..ல சாம்பார் சாதம் வச்சிடறேன்.. வடு மாங்கா இருக்கு.. தயிர் இருக்கு..  நாலு மெதுவடை மட்டும் ராவ்ஜி கடை..ல வாங்கிக்குங்க.. தயிர் வடை பண்ணிடலாம்!.. - என்றார்கள் காமாட்சியம்மாள்..

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும்  - கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம் என்று நறுக்கிக் கொடுத்தார் - சுந்தரம்...

சமையல் முடித்து தயிர் தாளிப்பதற்கு அரை மணி நேரம் ஆயிற்று.. 

இருவரும் சாப்பிட உட்கார்ந்த வேளையில்  வெளியே கார் வந்து நிற்கும் சப்தம்..

வாசலுக்கு வந்து பார்த்த போது அந்தப் பையனும் பெண்ணும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்..

இருவரிடமும் பரபரப்பு..
இவர்களைக் கண்டதும் அந்தப் பெண்,  அழுதபடியே ஓடிவந்து காமாட்சி அம்மாளின் தோளில் சாய்ந்து கொண்டாள்..

" ஏன்?.. என்ன ஆச்சு?.. "  
பலவாறான சிந்தனைகள் பெரியவர்கள் இருவருக்கும்..

மெல்ல வீட்டுக்குள் அழைத்து வந்து -
" ஏன்.. என்னம்மா ஆச்சு?.."  - என்று கேட்டபடி, கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார்கள்...

" விருந்துக்கு வந்தவங்கள்..ல ஏழெட்டு பேர் ரெண்டு பொண்ணுகளோட சேர்ந்து சரக்கு அடிச்சிட்டு வந்து
சாப்பிட்டாங்க.. நாங்க இதை 
எதிர்பார்க்கலை.. சும்மா ஜாலிக்கு.. ன்னு சொல்லிட்டு
கலகலப்பா ஆரம்பிச்சு ஒருத்தருக்கொருத்தர் கைகலப்பு சண்டை தள்ளு முள்ளு.. ன்னு முடிஞ்சு போச்சு.. இந்த மாதிரி பார்ட்டிக்கு சரக்கு வாங்கி வைக்கணும்.. னு ஏன் உனக்கு தோணலை.. ன்னு,
குடிபோதையில ஒருத்தன்  சண்டைக்கு வந்து இவரோட சட்டையப் பிடிச்சுட்டான்.. ஒரே சத்தம்.. ரகளை.. டைனிங் ஹால்ல ஏகப்பட்ட டாமேஜ்..

போலீஸ், கேஸ்.. ன்னு கிளம்பிட்டான் அந்த ஹால் மேனேஜர்.. போலீசுக்கெல்லாம் வேண்டாம்.. ந்னு சொல்லிட்டு அவங் கேட்ட தண்டம்  அம்பதாயிரத்தைக் கையில கொடுத்துட்டு வர்றோம்!.. "

கண்களைத் துடைத்துக் கொண்டாள்..

" சரி.. சரி.. அதையெல்லாம் கெட்ட கனவா மறந்துட்டு.. வாங்க சாப்பிடலாம்!.. "

கையில் குழந்தையுடன் 
மேஜையை நோக்கி நடந்த
காமாட்சியம்மாளைத் தொடர்ந்தனர் - அந்தப்  பெண்ணும் அவளது கணவனும்..

அங்கே,
சாம்பார் சாதமும்  தயிர் வடையும் வடு மாங்காயும் காத்திருந்தன..
ஃஃஃ

திங்கள், செப்டம்பர் 26, 2022

ஆரூர் மூலட்டானம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று
புரட்டாசி எட்டாம் நாள்
மஹாளய அமாவாசை

ஆலய தரிசனம்


ஆரூர்
திரு மூலட்டானம்

இறைவன்
ஸ்ரீ புற்றிடங்கொண்டார்
அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை

தலவிருட்சம்
பாதிரி
தீர்த்தம்
கமலாலய திருக்குளம்

சைவ மரபில்
பூங்கோயில் எனப்படும் 
திருத்தலம்

கமலாலயத் திருக்குளத்தின் 
கீழ்க்கரையில் மஹாளய தர்ப்பணம்
வழங்கி விட்டு
மேற்கு வாசல் 
வழியே நுழைந்து  
ஸ்ரீகமலாம்பிகையின் 
ஞான பீடத்தை தரிசனம் செய்து 
விட்டு வலமாக வந்து 
திரு மூலட்டான தரிசனம்..

ஸ்வாமி எழுந்தருளாத 
கீழைக் கோபுர 
வாசலைத் தவிர்த்து 
மேலை வாசல் வழியாகவே 
வெளியேறினோம்..





நேர் வரிசையில் நவகிரகங்கள்




திருமூலட்டானம்

ஸ்ரீ ஜேஷ்டா தேவி

ஸ்ரீ கமலையின் சந்நிதியில்

காணிக்கை மண்டபத்தில்


திருக்குளத்தின்
படிக்கட்டுகள்
மிகவும் குறுகியவை..
அவற்றில் பாசி வேறு.. 
இது இயற்கை ஆதலால் 
திருக்குளத்தில் நீராடவில்லை..
கிழக்கு முகமாக நின்று செய்யவேண்டும் 
என்பதால் நூறு நூறு பக்தர்கள்..
குளக்கரையில் 
இயல்பான வாகனப் 
போக்குவரத்து..
வழக்கமான
நெரிசல்..


விண்டவெள் ளெருக் கு அலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவன் இருந்தவூர்
கெண்டைகொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத வோ
ஓசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தண் ஆரூர் என்பதே.. 2/101/2
-: திருஞானசம்பந்தர் :-

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிகை ஏந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.. 6/34/1
-: அப்பர் ஸ்வாமிகள் :-

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப் பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்து அணி
ஆரூரானை மறக்கலுமாமே.. 7/59/1
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் :-

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, செப்டம்பர் 25, 2022

ஸ்ரீ வைத்யநாதம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றொரு தரிசனம்

வைத்தீஸ்வரன் கோயில்
எனப்படும்
புள்ளிருக்குவேளூர்


இரவு 7:30
மழைக்கான
 அறிகுறிகளால் கோயிலில் கூட்டம் இல்லை..

திருக்குளத்து நீர்
முற்றாக இறைக்கப்பட்டு
திருப்பணி
நடக்கின்றது..












ஸ்ரீ ஜடாயு குண்டம்


பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே..
6/54
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
**