நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 16, 2025

கன்னிப் பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 3
வியாழக்கிழமை


கன்னிப் பொங்கல் என்பதே இற்றை நாளின் காணும் பொங்கல்..

காணும் பொங்கலைக்  கணுப் பண்டிகை என்றும் வழங்குவர். 

இந்நாளின் நோக்கம்  உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதலும் பெரியோர்களிடம் நல்வாழ்த்துகளைப் பெறுதலும் ஆகும் . 

அன்றைய கலாச்சாரத்தின்படி இளம் பெண்கள் அம்மன் கோயிலின் வாசல், கோயிலைச் சார்ந்த தோப்புகள் இங்கெல்லாம் கூடி பெரியோர் வழி காட்டுதலின்படி
பொங்கல் வைத்து மகிழ்வர்..
இதுவே கூட்டாஞ்சோறு என்று பேசப்படுவது..

இப்படி கன்னியர் திரண்டிருக்கும் தோப்புகளுக்குள் ஆண்களுக்கு அனுமதியே கிடையாது..

அங்கே கோலம் வரைதல், நூலிழை கொண்டு பின்னல் வேலை செய்தல், பூ தைத்தல், வளை பந்து எறிதல்  எல்லாவற்றுக்கும
 மேலாக சீராக சமைத்தல் என்ற பங்கெடுப்புகள்..

இந்தப் பக்கம் கோயில் திடலில் - 
விடலைகளுக்கும் இளைஞர்களுக்கும்
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் - காளை மறித்தல் , கல்யாணக் கல் தூக்குதல், கயிறு இழுத்தல், உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்றவை ..

கால ஓட்டத்தில் பட்டிமன்றம், கவியரங்கம், கோலப்போட்டி
என, பல்வேறு அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளும் சேர்ந்து கொண்டன..

இது கன்னியர்க்கும் சுமங்கலிப் பெண்களுக்கும் உரிய முக்கியமான நாள் ஆகும்... 


மூத்தவர்களிடம் ஆசி பெறுவதும் சுமங்கலிப் பெண்களிடம்  மஞ்சள் கிழங்கினைக் கொடுத்து வாங்கிக் கொள்வதும் மரபு..
இப்படி வாங்கிய மஞ்சளைக் கல்லில் இழைத்து  முகத்தில் பூசிக் கொள்வதனால் தாலி பாக்கியம் நீடிக்கும் என்பது மரபு..

சமயம் சார்ந்த  சில சமூகங்களில் உடன் பிறந்த சகோதரர்கள் நலமுடன் வளமுமாக வாழ்வதற்கு என, சகோதரிகள் பிரார்த்தனை செய்து
கணுப்பிடி நோன்பு என்று இந்நாளில் அனுசரிக்கின்ற்னர்..

சில நாட்களாக எல்லா தொ. காகளிலும் பொங்கல் விழா என்ற பேரில் மங்கையர் நெற்றியில் திலகம் இன்றி - தலை விரி கோலமாகக் குதிப்பதும் மதிப்பு மரியாதை இன்றிப் பேசுவதும் காட்டப்படுகின்றன.

இது இந்த மண்ணின் மரபே அல்ல..

இப்படியான
 தலைவிரி ஆட்டங்கள் கல்லூரிகளில் கலை என்றே நடத்தப்படுவது வெகு சிறப்பு..

இந்த நாளில் அன்பு நிறை குடும்பங்கள் பலவற்றிலும் - பல விதமான சித்ரான்னங்கள் பலகாரங்களுடன்  குடும்பமாக கோயில் முற்றங்கள்
ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்கு சென்று, மகிழ்ச்சியாக உற்சாகமாக பொழுதைக் கழித்து விட்டு வருவது வழக்கமாகி இருக்கின்றது. 

பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்...
-: கோதைநாச்சியார் :-

அனைவரும்
இன்புற்று வாழ்க

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், ஜனவரி 15, 2025

மாட்டுப் பொங்கல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 2
புதன்கிழமை


இன்று 
மாட்டுப் பொங்கல்
வாழ்க ஆனினம்


கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு 
மாடல்ல மற்றை யவை..


பெஞ்செல்வத்தினை மாடு என்னும் சொல்லைக் கொண்டு குறிக்கின்றார் திருவள்ளுவர்..


தேவாரத் திருப் பாடல்களிலும் - மாடு என்னும் சொல்லால்  பெருஞ்செல்வம்  குறிக்கப்படுகின்றது..


வேளாண்மையில் தோளுக்குத் தோள் கொடுக்கின்ற 
கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகக் 
கொண்டாடப்படுவது தான் - மாட்டுப் பொங்கல் நாள்..


வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம்

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம்

எருமை சிறுவீடு

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் 

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

என்பதெல்லாம் ஸ்ரீ கோதை நாச்சியார் காட்டுகின்ற மனை வளம்..


இன்று காவிரிப் படுகையில் வேளாண் நிலப்பரப்பு பற்பல  காரணங்களால் குறைந்து கொண்டிருப்பது கண்கூடு.. வயல்வெளிகளில் ஏர் பூட்டிய உழவு என்பதே அரிதாகி விட்டது..

கால்நடைகளைச் சிறப்பித்து அறுவடைத் திருநாளைக்
கொண்டாடுகின்ற மக்களுக்கு மத்தியில் தான் Beef பிரியாணிக் கடைகள் திறக்கப் பட்டிருப்பட்டிருக்கின்றன என்பது சிந்திக்கத் தக்கது..  

வீடு பிறப்பை
  அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன
  பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன
  மன்னு மாநடம்
ஆடி உகப்பன
  அஞ்செ ழுத்துமே.. 3/22/7
-: திருஞானசம்பந்தர் :-

உருவமும் உயிரும் ஆகி 
  ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் 
  நின்றஎம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா 
  மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாதம் அல்லால் 
  மற்றொரு மாடி லேனே.. 4/63/3
 -: திருநாவுக்கரசர் :-


கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
  கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
  மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
  குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
  பழவினை உள்ளன பற்றறுத் தானை.. 7/74/2
 -: சுந்தரர் :-
**
அனைவரும்
இன்புற்று வாழ்க

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஜனவரி 14, 2025

தைத் திங்கள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
தைத்திங்கள்
முதல் நாள் 
செவ்வாய்க்கிழமை

அன்பின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்
**


உத்ராயண புண்ணிய காலத்தினை வணங்கி வரவேற்போம்..

தேவர்களின்  இரவுக் காலம் முடிந்து பகல் பொழுது ஆரம்பமாகின்றது  என்பதே ஐதீகம்..

சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கின்ற மாதம்..

கால கதியில் பத்தாவது மாதமாகத் திகழ்வது..

பாரதத் திருநாட்டின் பல பகுதிகளிலும் தை மாதம் அறுவடைக் காலமாக விளங்குகின்றது..


நல்ல விளைச்சலைத் தந்தமைக்காக
சூரியனை வழிபட்டு  போற்றி வணங்கி 
நன்றி தெரிவிப்பது இம்மண்ணின் மரபு.. 

கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும்
இல்லங்களில் மங்கல நிகழ்வுகளும் தைத் திங்களின் கொடை..

தை மாதத்தின் மிகச் சிறந்த திருவிழா தைப்பூசம்!..


தமிழ் கூறும் நல்லுலகம்  காலகாலமாக தை முதல் நாளில் சூரியனை வணங்கி திருப்பொங்கல் நாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது..

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது மண் சார்ந்த முது மொழி..

அந்த வகையில் எல்லாருக்கும் நல்ல வழி அமைந்திட வேண்டும் என, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொண்டு -

 
அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
**
ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஜனவரி 18, 2024

சங்கராந்தி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை  4 
வியாழக்கிழமை

மாட்டுப் பொங்கலன்று
தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில்
நடைபெற்ற 
சங்கராந்தி விழாவின்
காட்சிகள்



செவ்வாய்க் கிழமை  
மாட்டுப் பொங்கலன்று 
தஞ்சை மகா நந்தியம்பெருமானுக்கு 
இரண்டு டன் எடையுடைய 
காய்கனிகள், இனிப்பு வகைகளால் 
அலங்காரம் செய்யப்பட்டு 
மகா ஆரத்தி நடைபெற்றது... 


அத்துடன் 
நூற்றெட்டு கோ பூஜையும் நடைபெற்றது. 

முன்னதாக முதல்நாள் மாலையில் 
சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப் பெற்றன. 

நன்றி 
சிவனடியார் திருக்கூட்டம்..
 

திரு ஐயாறு
பஞ்சநதீசுவரர் கோயில்



இல்லக விளக்கது  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-
***

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஜனவரி 17, 2024

காணும் பொங்கல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின்
மூன்றாம் நாள் 
புதன் கிழமை




கிராமங்களில் 
கோலம் கும்மி கோலாட்டம் என -
காணும் பொங்கல் தனிச் சிறப்புடன் 
நிகழ்வது வழக்கம்..

நமது தளத்திலும்
கிளித்தோப்பு எனும் இலுப்பைத் தோப்பில்
குமரிப் பெண்களின் கோலாகலக் கும்மி 
கேட்கின்றது..


தந்தான தன தந்தான தன 
தந்தான தன தந்தானா...

காவேரிக் கரை கழனி ஓரமா
காத்து இருக்கிறான் செல்லக் கண்ணு..

காத்து இருக்குற வேளையில இந்த 
சேதியச் சொன்னவன் செல்லக் கண்ணு..

காத்தோட காத்தா சொல்லுறதுன்னு 
காதுல சொன்னவன் செல்லக் கண்ணு..

காத்தோட காத்தா சொல்லுறதுன்னு 
காதல சொன்னவன் செல்லக் கண்ணு..

அது என்னா ன்னு தான்
சொல்லுங்களேன்!..

காலுக்குக் கொலுசு தாறாங்களாம்..
கைக்கு வளயல் தர்றாங்களாம்....

கண்ணுக்கு மையி தர்றாங்களாம்..
காதுக்குத் தொங்கல் தர்றாங்களாம்..

நெறஞ்ச மஞ்சளும் குங்குமத்தோட 
நெத்திக்கு சுட்டி தர்றாங்களாம்..

கட்டிக்கக் கூறை தர்றாங்களாம்..
கஞ்சிக்கு அரிசி தர்றாங்களாம்..

கார்த்திகச் சம்பா குதிரு நெறச்சு
காலம் பூரா தர்றாங்களாம்...

தந்தனத் தானா தானா.. ன்னு 
வீட்டுக்கு வெளக்கு ஏத்தணுமாம்...

வெத்தல பாக்கு மடிச்சுக் கொடுத்து
வெவரம் கொஞ்சம் பேசணுமாம்.. 

தந்தான தன தந்தான தன 
தந்தான தன தந்தானா...

கூடிக் களிக்கிற கூடத்துல ஒரு 
தொட்டிலும் இறுக்கிக் கட்டணுமாம்..

தூங்குற புள்ளக்கி தாலாட்டு..
அத நானே பாடி வைக்கணுமாம்..

என்ன ன்னு சொல்லுவேன் 
ஏது ன்னு சொல்லுவேன்..

எங்க அப்பனுக்குக் கூட தெரியாதே..
எங்க அண்ணேன் காதுல சொல்லிடணும்..  

ஏரிக்கரைப் புள்ள எழுந்து வாங்க
சின்னக்கிளி நெஞ்சு தவிக்கிது..

எழுந்து இங்கே வாற போது  தம்பியத் 
துணைக்குக் கூட்டி  வாங்க..

இங்க ரெண்டு கிளி காத்துக் கிடக்கு.
எல்லாம் நல்லதா நடக்கட்டும்..

தையில பேச்சு தகஞ்சதுன்னா 
மாசியில் மேளம் முழங்கட்டும்..

தந்தான தன தந்தான தன 
தந்தான தன தந்தானா..
**

காணும் பொங்கலுடன்
கனவுகளும் நிறைவேறட்டும்..

 நல்வாழ்த்துகளுடன்
வாழ்க நலம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஜனவரி 15, 2024

தைப்பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஸ்ரீ சோபகிருது வருடம்
மங்களமிகுந்த 
தை மாதத்தின் முதல் நாள்..


உத்ராயண புண்ணிய காலம்..

கீழுள்ள சித்திரங்கள் ஓவியர் ஸ்ரீ மாதவன் அவர்களது கைவண்ணம்..







பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
அன்பின் நல்வாழ்த்துகள்..


தைப் பொங்கல் நாளில் நாம் காணும் 
இத்தனை நலங்களும் 
அன்னை காவிரியாளின் 
அருட்கொடை...

அன்னையைப் புகழ்ந்து 
அருந்தமிழ் மாலை..
**

காவிரி போற்றி
காவிரி போற்றி..

பூ விரித்த காவிரியாள் 
புனல் விரித்தாயே..
புனல் விரித்த வழியெங்கும் 
புகழ் விரித்தாயே..

புகழ் விரித்த வழியெங்கும் 
நலம் வளர்த்தாயே..
நலம் விரித்த நடையெங்கும் 
தமிழ் வளர்த்தாயே..

பா விரித்த பசுந்தமிழோடு 
உடன் பிறந்தாயே
கா விரித்த கலைகளோடு
நடை பயின்றாயே..

கல்லினோடு கசிந்துருகி 
கலை வடித்தாயே..
காற்றுக்குள் ஊற்றாகி 
உயிர் வளர்த்தாயே.. 

சோற்றுக்கும் சுகத்திற்கும் 
வழி வகுத்தாயே..
வற்றாத நிறை வளத்தில் 
எமைத் தொகுத்தாயே..

பாட்டுக்குள் பாட்டு என்று 
பதம்  கொடுத்தாயே..
பாடாத நாவுக்கும் 
நலம் கொடுத்தாயே..

ஏர் முனை வாழ இனிதருள் புரியும் 
புண்ணிய காவிரி பொன்னடி போற்றி..

நீர்த் திரள் எல்லாம் நெல் மணியாக 
நல்லருள் நல்குவை பதம் போற்றி..

பேர் துணையாக பிணி பல நீக்கி பேரிடர் 
தீர்ப்பாய் திருவடி போற்றி..

ஊர் நலம் காக்க பேரருள் கூட்டும் 
காவிரி உந்தன் கழலடி போற்றி..

காவிரி போற்றி
காவிரி போற்றி
***

 ஓம் மஹாலக்ஷ்ம்யை 
நமோ நம:
**
ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஜனவரி 18, 2023

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று தை 5
புதன்கிழமை


தஞ்சை அருள்மிகு  பெருவுடையார் திருக்கோயிலில் நிகழும் தை மாதத்தின் முதல் நாள் மாலை மகா அபிஷேகம் நடைபெற்று,

இரண்டாம் நாள் காலை (திங்கட்கிழமை)  மாட்டுப் பொங்கலன்று காய் கனி அலங்காரமும் மகா சங்கராந்தி வழிபாடும்  நூற்றெட்டு கோபூஜையும் மிகச் சிறப்பாக நடைபெற்றன..

காலையில் நந்தியம் பெருமானுக்கு இரண்டு டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

கத்தரிக்காய், வாழைக்காய்,
பூசணிக்காய், வெண்டைக்காய், முட்டைக் கோஸ், சௌசௌ, உருளைக் கிழங்கு, பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய் போன்ற  காய்களாலும், வாழை, மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள்,  கொய்யா, அன்னாசி முதலான  பழங்களாலும், பால்கோவா, அதிரசம், முறுக்கு முதலான  தின்பண்டங்களாலும் பல வகையான மலர்களாலும் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு பதினாறு வகையான தீபாராதனைகளுடன் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்தன.

வைபவத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..













ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஜனவரி 17, 2023

காணும் பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
செவ்வாய்க்கிழமை
மங்கலகரமான
தை மாதத்தின் மூன்றாம் நாள்.
  
அனைவருக்கும்
அன்பின் இனிய
காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்..


இந்நாளில் பெரும்பாலான
மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சந்தித்து  அன்பையும் மகிழ்ச்சியையும் மங்கலங்களையும் பகிர்ந்து கொள்வர்.. 




இது தைப்பொங்கலின்  மூன்றாம் நாள் விழா.

காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் கூறுவர்..

கிராமங்களில் பொது மந்தையில் இளம் பெண்கள் கூடி கூட்டாகப் பொங்கல் வைத்து கோலாட்டம் கும்மி என விளையாடி மகிழ்வர்..

பெண்கள் தமக்கிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர்.

ஆண்களும் உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசங்கள் நிகழ்த்திக் காட்டுவர்..

பெண்களுக்கு சிறப்பான நாள் இன்று.




இந்நாளில் 
சில குடும்பத்துப் பெண்கள் தமது குல வழக்கப்படி கணுப்பிடி நோன்பு என, உடன் பிறந்த சகோதரர்களுக்காக ஏற்பர்..

தமிழகத்தின் சில வட்டாரங்களில்
காணும் பொங்கல் ஆற்றங்கரைத் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது..

இன்று சுவாமி தீர்த்தவாரிக்கு ஆற்றங்கரைக்கு எழுந்தருள்வார்.. மக்கள் குதூகலத்துடன் பல விதமாக  விளையாடி மகிழ்வார்கள்..




பாதமணிக் கொலுசுக்குள்
பவளம் என மாறேனோ..
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து மனம் ஆறேனோ!..

செங்காந்தள் கைகளிலே
செவ் வளையாய் மாறேனோ..
சிலுசிலுக்கும் வேளையிலே
செந்தமிழாய் வாரேனோ!..

காதோரம் கவி பாட
செவிப்பூவாய் மாறேனோ..
கரு மையாய்க் காத்திருந்து
கண்ணழகைப் பாரேனோ!..

பனிமுல்லைப் பூவாகி
பூங்குழலில் சேரேனோ..
செந்தூரத் துகளாகி
நெற்றியில் நான் வாழேனோ!..

வாத்யாரே.. 
இது உமக்கே நியாயமா!?..


கன்றாத தமிழெடுத்துக்
கனி மகளைப் பாடுகையில்
காற்றோடு ஊடாடி
காலம் அது திரும்பிடுதே..

திகட்டாத சொல்லெடுத்துத்
திருமகளைப் பாடுகையில்
தித்திக்கும் தெய்வநலம்
திசையெங்கும் பரவிடுதே!..
***
அனைவருக்கும்
அன்பின் இனிய
காணும் பொங்கல்
நல்வாழ்த்துகள்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
***