நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 30, 2017

அருள்மொழி


மகாத்மா அமரத்துவம் எய்திய நாள்
இன்று..
***

நமது சிந்தனைக்கு
அண்ணலின் அருள்மொழிகள்..


எங்கே அன்பிருக்கின்றதோ 
அங்கே தான் வாழ்க்கை இருக்கின்றது..

மனித குலத்தை அன்பு என்கிற விதிதான் ஆட்சி செய்கின்றது.. 
வெறுப்பு வன்முறை போன்றவை நம்மை ஆட்சி செய்தால் - காட்டுமிராண்டிகளாகி விடுகின்றோம்..


எல்லாவிதத்திலும் ஒத்துப் போவது நட்பு அல்ல.. 
இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்ட போதிலும் 
அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு..

தண்டி யாத்திரை
நீ ஏதொன்றையும் செய்வதற்கு முன் 
எவ்வித ஆதரவும் இல்லாத ஏழை ஒருவனின் 
முகத்தை ஒருகணம் நினைவுக்குக் கொண்டு வந்து 
அவனுக்கு நீ என்ன செய்திருக்கின்றாய் என்பதை நினைத்துப் பார்..


பேச்சாலோ அல்லது எழுத்தாலோ 
பிறரை நம் வசம் இழுக்க வேண்டும் என்ற தேவையில்லை.. 
நமது வாழ்வின் மூலமாகத் தான் அதை அடைய முடியும்.. 

***


வாழ்கநீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா.. நீ வாழ்க.. வாழ்க!.. 
-: மகாகவி பாரதியார் :- 

அண்ணலின் பாதக் கமலங்களுக்கு
எளியேனின் அஞ்சலி.. 
*** 

வெள்ளி, ஜனவரி 27, 2017

முன் செய்த புண்ணியம்

விரைவாக நடந்து வந்த மார்க்கண்டேயர் -
திருக்கடவூர் எனப்புகழ் பெற்றிருந்த திருத்தலத்தினை நெருங்குவதற்கும்
சந்தியாவேளை கூடி வருவதற்கும் சரியாக இருந்தது.


ஆசார அனுஷ்டானங்களை முடித்து - சிவபூஜைக்கென கமண்டலத்தை எடுத்ததும் அதனுள்ளிருந்து கங்கை பிரவாகமாகப் பொங்கி - பெருகி வந்தாள்.  

சந்தோஷமாக பூஜை செய்து முடித்த மார்க்கண்டேயர் தியானத்தில் ஆழ்ந்தார்.


திருக்கடவூரில் நிகழ்ந்த அற்புதங்கள் எல்லாம் அவருடைய மனவெளியில் காட்சிகளாக விரிந்தன. நிறைந்த மனத்தினராக, தியானத்தினின்று எழுந்தார். தீர்த்தப் பிரசாதத்தினை அருந்தினார்.

வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் வெளிப்பட்டன. 

சில தினங்களாக தரிசித்த சிவ தலங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த வேளையில் - இமயத்தின் அடிவாரத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் தந்தை, மிருகண்டு முனிவர் -  தம் நினைவலைகளில் குறுக்கிடுவதை உணர்ந்தார்..

''..வணக்கம்!... தந்தையே!..''

''..நல்லாசிகள்.. மகனே!..  அன்னை அபிராமவல்லியுடன் எம்பிரான் அமிர்த கடேஸ்வரன் எழுந்தருளியுள்ள திருக்கடவூரில் இருக்கின்றாய்  - நீ,  இப்போது!..''

''..ஆம்!...ஐயனே!..''

''..இத்துடன் நீ நூற்றெட்டு சிவதலங்களில் வழிபட்டிருக்கின்றாய்!..''

''..அப்படி - கணக்கில் கொள்ளவில்லை!..''

''..ஆயினும் நீ கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றாய்!..''

''..யாருடைய கவனத்தில்?..''

மார்க்கண்டேயர் மெளனமாக இருந்தார்.

''..உன் தாய் உன் நினைவாகவே இருக்கின்றாள்!..''

''..அன்னையிடம் என் வணக்கத்தினைச் சொல்லுங்கள்!.. காலம் வகுத்த பாதையில் தான் உயிர்கள் அனைத்தும் பயணிக்க வேண்டும். நாரைக்கு ஒளித்த குளமும் நமனுக்கு மறைத்த உயிரும் உண்டோ இவ்வுலகில்!..''

''..கலக்கமா... மகனே!..''

''..இல்லை!... எம்பெருமானின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தேன்!..''

''..மேற்கு நோக்கிய சிவசந்நிதி உனக்கு நன்மைகளை அருள்வதாக!. சிவ நாமம் உன்னைக் காக்கும்!.. நாளை - சூர்யோதயத்திற்குப் பின் எதுவும் நடக்கலாம்!..''

''..பெற்று வளர்த்துப் பேணிக் காத்த தாய் தந்தையர்க்கு என் பணிவான வணக்கங்கள்!..  நாம் மீண்டும் சந்திக்க - இறைவன் நல்லருள் புரிவானாக!..''

''..ஜயமுண்டு.. பயமில்லை!.. நம சிவாய!..''

''.. ஓம் நம சிவாய!..''

தந்தையுடனான மானஸ உரையாடலை நிறைவு செய்து கொண்ட
மார்க்கண்டேயர் - மெல்ல நித்திரையில் ஆழ்ந்தார்.

மகப்பேறின்றி வருந்திய மிருகண்டு முனிவருக்கும் மருத்துவதிக்கும்  - 
ஈசன் அருளால் - பதினாறு வயதில் மரணம் என்ற நிர்ணயத்துடன் பிறந்தவர். 

வளர்கின்ற போதே சிவபூஜையில் நாட்டம் கொண்டு சிவநேசச் செல்வனாக விளங்கினார்..

அதனால் - காலனை எண்ணிக் கலங்காமல் வாழ்க்கையின் கடைசி விநாடி வரை சிவபூஜை நிகழ்த்த  விரும்பி, தீர்த்தயாத்திரை புறப்பட்டார்..

அவருடைய கமண்டலத்தில் - நினைக்கும் போது கங்கை நீர் பெருகும் எனில் அவர்தம் பெருமை தான் என்னே!...


கூவின பூங்குயில். கூவின குருகுகள்!.. 
ஒளி கொண்டு மின்னிய தாரகைகள் ஒளியிழந்து மறைந்தன. 

நித்திரை கலைந்து எழுந்த மார்க்கண்டேயர் சிவ நாமத்தில் திளைத்தபடி அனுஷ்டானங்களை முடித்து விட்டு வந்தார்..

சிவபூஜைக்காக கமண்டலத்தைக் கையில் எடுத்தார்.
வழக்கம் போல் அதில் கங்கை பெருகி வந்தாள். 

கங்கை நீரில் ஜாதி மல்லிகைப் பூங்கொத்து மிதந்து வந்தது!... 

தமக்காக மலர் கொண்டு வந்த கங்கைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.


எப்போதும் போல சிரத்தையுடன் சிவபூஜையினை நிகழ்த்தினார்.
ஆரத்தி செய்தார். வலஞ்செய்து வாழ்த்தினார்.
உலக உயிர்கள் இன்புற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்டார். 

பிஞ்சிலம் எனப்படும் ஜாதி மல்லிகைப் பூக்களை இறைவன் மீது உதிர்த்தார். 


ஐயனின் திருவடிகளில் விழுந்து வணங்கி  - எழுந்தார்.

இலையும் தளிருமாக சிறு கொப்பு அவருடைய கையில் இருந்தது. அதை வாஞ்சையுடன் நோக்கிய மார்க்கண்டேயர் - தென்புறமாக ,  மண்ணில் ஊன்றி வைத்தார். 

கைகளால் நீர் வார்த்தார். தழைத்து வாழ்வாயாக - என்று வாழ்த்தினார். நடப்பட்ட கொப்பு இப்படியும் அப்படியுமாக காற்றில் அசைந்தது.

மீண்டும் சந்நிதிக்கு வந்தார். சிவ தியானத்தில் அமர்ந்தார்.

திடீரென பெருஞ்சத்தம்!... அனல் காற்று!... விழித்து நோக்கினார்.

சற்று தூரத்தில் தர்மராஜனாகிய யமன். யமனின் கையில் பாசக் கயிறு சுழன்று கொண்டிருந்தது. அவனை சுற்றி காலதூதர்கள் தம்முடைய இயலாமையைச்  சொல்லிக் கொண்டிருந்தனர்..

''..பிரபு!.. மார்க்கண்டனுடைய தவவலிமை அக்னியாக சுட்டது!. எங்களால் நெருங்கக்கூட முடியவில்லை!..''

ஈசன் அருளிய - பதினாறு ஆண்டுகளின் இறுதி விநாடிகள்!.. அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது!.. 

சுழன்று கொண்டிருந்த பாசக் கயிறு - காற்றில் தாவி - மார்க்கண்டேயனின் கழுத்தை நோக்கி வருவதற்கும் மார்க்கண்டேயன் -


''..இறைவா!...'' - என்றபடி அமிர்தலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொள்வதற்கும் சரியாக இருந்தது!..

தன் கடமையினைச் சரியாகச் செய்வதாக நினைத்துக் கொண்ட யமன்  - பாசக் கயிற்றினைச் சுண்டி இழுத்தான்!... அது அமிர்தலிங்கத்தையும் சேர்த்துப் பற்றியிருப்பதை உணராமல்!... அப்போது தான் அது நிகழ்ந்தது!..

அண்ட பகிரண்டமும் சேர்ந்து நடுங்கிக் குலைந்து அவன் தலையில் விழுந்த மாதிரி இருந்தது. 

என்ன!.. ஏது!.. - என்று யோசிப்பதற்குள் எருமையின் மீதிருந்து கீழே விழுந்தான்.  

(Thanks to Animation Images - Markandeya story  - Telugu)

நான்முகன் படைப்பில்  - ஈ , எறும்பு என எண்ணாயிரங்கோடி யோனி பேதம் உடைய  - அத்தனை உயிர்களின் ஆயுளையும் முடித்துக் கணக்கினைத் தீர்க்கும் யமனின் கணக்கு தீர்ந்து விட்டது.

தன்னுடல் கீழே கிடப்பதையும் 
தான் ஆவியாக  - தனித்திருப்பதையும் கண்டான்!.. திடுக்கிட்டான்!.. 

எதிரே - எம்பெருமான் - சம்ஹாரமூர்த்தியாக 
உக்ரத்துடன் எழுந்தருளியிருப்பதைக் கண்டான்!.. 


தான் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் பிணைத்திருப்பதைக் கண்டு அஞ்சி நடுங்கிய யமன்  -

''..பெருமானே!.. என்னை மன்னியுங்கள்!..''

- என்று அலறியபடி ஐயனின் அடித்தாமரைகளில் வீழ்ந்தான்.

அதற்குள் - தேவாதி தேவர்களும் மகரிஷிகளும் மஹாவிஷ்ணுவும் நான்முகப் பிரம்மனும் அங்கே கூடி காலசம்ஹார மூர்த்தியைச் சாந்தப்படுத்திக் கொண்டிருந்தனர். 

''..காலன் மாண்டு விழுந்த ஒரு நொடியில் விளைந்த பாரத்தினை என்னால் சுமக்க முடியவில்லையே!...'' - என பூமாதேவி கண்ணீருடன் கலங்கி நின்றாள்.

அப்போது மின்னல் கொடியெனத் தோன்றிய அம்பிகை -
பாலாம்பிகையாக ஐயனின் இடப்புறம் எழுந்தருளினள்.

ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தி - பாலாம்பிகை
அன்னை புன்னகைத்தாள். அன்னையைக் கண்டு ஐயனும் புன்னகைத்தார்.

அந்த வேளையில் - தன்னுயிர் மீண்டும் உடலில் பிரவேசிப்பதை உணர்ந்த யமன் - துள்ளி எழுந்து பெருமானின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டான். 

அழுதான். தொழுதான். துதித்தான். துவண்டான்...

''..மார்க்கண்டேயனே!. இன்று போல் என்றும் பதினாறாக - சிரஞ்சீவியாக நீடூழி வாழ்வாயாக!..''

''..எல்லாம் நின்பெருங்கருணை.. எம்பெருமானே!..'' - மார்க்கண்டேயர் பணிந்து வணங்கி வலஞ்செய்து  போற்றினார்.

''...யமதர்ம ராஜனே!.. சிவராஜதானியின் பிரதிநிதி அல்லவா நீ!.. உனக்கு நிதானம் வேண்டாமா!..''

''..ஐயனே!.. தாங்கள் இட்ட பணியேற்று வாழும் ஏழையேனாகிய நான் எடுத்த காரியத்தில் இடறி விழுந்தேன்!..  பிழை ஏதும் நேரக்கூடாது என எண்ணி பிழை புரிந்து விட்டேன்!.. கடையனாகிய யான் தங்கள் கருணையினால் மீண்டும் பிழைத்தேன்!.. என் பிழை பொறுத்த புண்ணியனே!.. நின் பதம் போற்றி!..''

ஸ்ரீ அபிராமவல்லி
''..யமனே!.. இனி இத்தலத்திற்கு வந்து எம்மை அடிபணியும் எவருக்கும் நீ மரணபயம் கொடுக்கலாகாது!..''  - அன்னை திருவாய் மலர்ந்தாள்!.

''.. தாயே!. உந்தன் சித்தம்.. ஐயனின் திருமேனியில் இடங்கொண்ட எம்பிராட்டி  நீயல்லவோ என்னை உதைத்து அருளினாய்!.. ஈசர் பாகத்து நேரிழையே!.. உன் திருவடியல்லவோ எனக்கு தீட்சை கொடுத்தது!.. இனி உன் திருப்பெயரை நினைப்பவர்கள் பக்கம் கூட - திரும்பிப் பார்க்க மாட்டேன்!..'' 

பணிவுடன் கை கட்டி வாய் மூடியபடி - மொழிந்தான் யமன்.

கூடியிருந்தோர் அனைவரும் சிரித்தனர். யமனும் அதில் சேர்ந்து கொண்டான்.

திருக்கடவூர் வீரட்டம்
அன்னையையும் ஐயனையும் வலஞ்செய்து வணங்கினான்.

''.. பெருமானே!.. காலசம்ஹார மூர்த்தியாக தாம் இத்தலத்தில் இருந்தருளி - அனைவருக்கும் அடைக்கலம் தந்தருளவேண்டும்!.. '' 

நான்முகன் வேண்டிக் கொண்டார்.

அந்த அளவில் -
காலசம்ஹார மூர்த்தியும் பாலாம்பிகையும் தென்திசை நோக்கி எழுந்தருளினர்..

அந்தத் திருக்கோலத்தினைத் தரிசித்தபடியே - யமனும் எதிரில் அமர்ந்தான்...

அன்னை புன்னகைத்தாள். ஐயனும் புன்னகைத்தார்.
யமபயம் நீங்கிய உயிர்க்குலமும் புன்னகைத்தது.

ஒல்கு செம்பட்டு உடையாள்
இத்திருத்தலத்தில் தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்
தை அமாவாசை தினத்தன்று அற்புதம் ஒன்று நிகழ்ந்தது..

அல்லும் பகலும் தன்னையே நினைத்துத் தவங்கிடந்த சுப்ரமணிய குருக்களுக்காக - அம்பிகையாகிய அபிராமவல்லி நிகழ்த்திய அற்புதம் அது!..

அபிராமி அந்தாதி என - அம்பிகையின் அருமை பெருமைகள் உணர்த்தப்பட்ட நாளும் இன்று தான்...

அன்பனின் பொருட்டு - அவர் மொழிந்த அமுதத் தமிழின் பொருட்டு 
இருள் சூழ்ந்து கிடந்த வானில் ஒளிநிலவாக அம்பிகை உதயமானாள்...

முன் செய்த புண்ணியம் வேண்டும் அம்பிகையைச் சிந்திப்பதற்கு!..
- என்றுரைக்கின்றார் அபிராமி பட்டர்..

தனம்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா 
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!..(69)

அம்பிகையின் புகழ் பாடும் அபிராமி அந்தாதியைச் சிந்தித்திருப்பவர்க்கு சொல்லும் செயலும் சித்திக்கும் என்பது ஆன்றோர் தம் வாக்கு...

அபிராமவல்லியின் கடைக்கண்கள் நல்லன எல்லாவற்றையும் தருகின்றன!..
எனில் வேறென்ன வேண்டும்!.. 

அதனால் தான் -

நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கேபரம் எனக்குள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே!..(95)

என்று நமக்கு வழி காட்டுகின்றார் - அபிராமிபட்டர்..

கனந்தரும் பூங்குழலாள்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்

பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே!..


ஓம் சக்தி.. சக்தி ஓம்!.. 
* * *

வியாழன், ஜனவரி 26, 2017

வாழ்க பாரதம்!..

அனைவருக்கும் அன்பின் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
***
சாரநாத் ஸ்தூபியில்
கம்பீரமாகத் திகழும் காளைக்கு
பிரத்யேக வணக்கம்!..



இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டங்களின் சிறப்பு விருந்தினராக
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி இளவரசர் மாட்சிமை தங்கிய
ஷேக் முஹம்மத் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் வருகையளித்துள்ளார்..

ஜனவரி 25 அன்று - 
அபுதாபி இளவரசரை குடியரசுத் தலைவர் அவர்களும்
பாரதப் பிரதமர் அவர்களும் வரவேற்ற காட்சிகள்..







அபுதாபி இளவரசரின் இந்திய வருகையின் காரணமாக 
துபாயில் வானுயர்ந்து விளங்கும் புர்ஜ் கலீபாவில் 
அமீரகத்தின் கொடியுடன் இந்திய தேசியக் கொடியும் 
வண்ண விளக்குகளால் ஒளிர்கின்றது..


காணொளி வழங்கியோர்
கலீஜ் டைம்ஸ்
(Khaleej Times)



இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா..
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா!..

ஒருபெருஞ்செயல் செய்த இளைஞர் பேரலை - சென்னை..
கற்றலொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா..
ஒற்றுமைக் குளுய்யவே நாடெல்லாம்
ஒருபெருஞ் செயல் செய்வாய் வா வா வா!..


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறிமனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
- மகாகவி பாரதியார் -
***
வாழ்க பாரதம்.. வளர்க தமிழகம்!..

ஜய் ஹிந்த்!..
 ***

புதன், ஜனவரி 25, 2017

சத்தியமே லட்சியமாய்..




அறவழியில் நிகழ்ந்த போராட்டம் அடிதடியால் நிலைகுலைந்து போனது..

பாரம்பர்யத்தைக் காப்பதற்கு முனைந்து நின்ற போராட்டத்தை
முடித்து வைத்தனர் - மிகக் கொடூரமாக!..

காவல் பணியில் இருக்கின்றவர்களே -
ஆட்டோவுக்கும் குடிசை வீட்டுக்கும் தீவைக்கின்றனர்..

வீட்டு வாசலில் அஞ்சி நடுங்கியபடி ஒதுங்கியிருக்கும் பெண்ணை
கைத் தடி கொண்டு விளாசுகின்றனர்..

ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை உடைக்கின்றனர்..  புரட்டிப் போட்டு மூர்க்கத்தைக் காட்டுகின்றனர்...

அடிதடியால் நிலைகுலைந்து கிடக்கும் பெண்ணைச் 
சுற்றியிருப்பவர்களை முரட்டுத்தனமாக வெளுத்து வாங்குகின்றனர்..  

காவல் பணியில் இருந்தவர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டு இன்னமும் மனம் ஆறவில்லை....

சிறியவர் பெரியவர் எனத் திரண்டிருந்த கூட்டத்தினுள் நிகழ்ந்தப்பட்ட
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்களும் மற்றவர்களும் நலமடைவதற்கு வேண்டுவோம்...


இந்த சூழ்நிலையில் -

நீலமலைத் திருடன் (1957) எனும் திரைப் படத்திற்காக 
கவிஞர் திரு. மருதகாசி அவர்கள் எழுதிய பாடல் நினைவுக்கு வருகின்றது..

காலத்தை வென்று நிற்கும் இந்தப் பாடல் 
பற்பல விஷயங்களை உள்ளடக்கியிருப்பதை உணரலாம்!..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடற வைத்துத் தள்ளப்பார்க்கும் குழியிலே!..
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா.. - நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா!..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..

குள்ள நரிக்கூட்டம் வந்து குறுக்கிடும்..
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா..
அவற்றை எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா!..

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..

திரையிசைத் திலகம் K.V.  மகாதேவன் அவர்கள் இசையில் 
T.M. சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் இதோ பாடல் ஒலிக்கின்றது..


ஏறு போல் பீடு நடை!..
தமிழ் கூறும் சொல் வழக்கு..

பீடு கொண்டு நடந்த பெரும் போராட்டத்தில்
கலந்து கொண்டு பங்களித்தவர்களை விட
இதில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே!.. 
- என, வருத்தப்படுவோர் ஆயிரம்.. ஆயிரம்!..


இந்த மண்
எத்தனை எத்தனையோ 
மாற்றங்களைக் கண்டிருக்கின்றது!..

ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 
ஆர்வங்கொண்டு
பாரம்பர்யம் காப்பதற்கென - பண்பாடு தவறாமல்
கடற்கரை மணலோடு மணலாகக் கிடந்தார்கள்!..

அவர்களைக் கண்கொண்டு நோக்காமல்
அடித்து நொறுக்கியது காவல் துறை!..

அழுத கண்ணீரும் சிந்திய செந்நீரும் 
பயனற்றுப் போனதாக சரித்திரமே இல்லை..

நிகழ்ந்த வேதனைகளை மறக்க முயற்சிப்போம்... 

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.. (987)

வாழ்க தமிழினம்..
வளர்க தமிழினம்!.. 
***

சனி, ஜனவரி 21, 2017

புண்ணியத் தலம்

புனித பாரதத்தில் அங்கிங்கெணாதபடிக்கு ஊர்கள்..

அத்தனைக்குள்ளும் ஏதாவதொரு கோயில்..

அதனுடன் பின்னிப் பிணைந்து -
காலகாலமாகத் தொடர்ந்து வரும் ஒரு கதை...

அதனை ஒட்டி மக்களின் நம்பிக்கை - இது ஒரு புண்ணியத் தலம்!..

அந்த வகையில் பட்டியலிட முடியாதபடிக்கு புண்ணியத் தலங்கள்!..

அவற்றுடன் மிகச் சமீபத்தில் மேலும் ஒன்று சேர்ந்து கொண்டது..

அது..

மெரினா!.. 

தமிழுணர்வு ஊற்றெடுத்து ஒன்றுபட்டு நின்ற திருத்தலம்!..

உலகின் இரண்டாவதான சென்னை மெரினா கடற்கரை!..

இன்று உணர்வுபூர்வமாக முதலிடத்தில் நிற்கின்றது..


அங்கே ஆயிரங்களாக லட்சங்களாகத் திரண்டிருந்த மக்களுள் -

எத்தனை பேர் அலங்கா நல்லூரைப் பார்த்திருப்பார்கள்?..

எத்தனை பேர் அடங்காத காளையைக் கண்டு திகைத்திருப்பார்கள்?..

எத்தனை பேர் வாடி வாசலைக் கண்டு வணங்கியிருப்பார்கள்!..

அத்தனை பேரையும் ஒரே கூட்டுக்குள் கொண்டு வந்து
அடைத்து வைத்ததொரு சூழ்நிலை..

அதற்கு நாம் மிகவும் நன்றி சொல்லத்தான் வேண்டும்!..

கடந்த நான்கு நாட்களாகவே மனதிற்குள் போராட்டம்...

நம்மால் கலந்து கொள்ளமுடியவில்லையே!.. - என்று..

வெறும் எழுத்துக்கள் மட்டும் தானா!..
செயலாக்கம் என்று எதுவும் கூடவில்லையே!..

என்னடா.. தலையெழுத்து இது!..

தோளோடு தோளாகத் தொட்டுக் கிடப்பவர்களின்
பாதாரவிந்தங்களைக் கண்ணாரக் காண முடியாமல்!..

உளைச்சல்.. மன உளைச்சல்..

நேற்று முன் தினம் விடியற்காலை..
வீட்டிலுள்ள தொலைபேசி எனது அழைப்பினால் சிணுங்கியது..

எல்லாம் பேசி விட்டு.. தம்பி.. எங்கே!.. - என்றேன்..

சென்னைக்குப் போயிருக்கின்றான்!..

சென்னைக்கா!.. எதற்கு?..

வேலை விஷயமாக!.. - எதிர்முனையில் பதில்...

ஒன்றும் சொல்லவில்லை..

மதியத்திற்குப் பிறகு சென்னையிலிருக்கும் என் மகனுடன் தொடர்பு கொண்டேன்..

வேலை தேடிச் சென்ற நிறுவனத்தைப் பற்றிக் கேட்டு விட்டு -

மெரினாவுக்குப் போய் விட்டு வா!.. - என்றேன்..

மெரினாவுக்குத் தான் கிளம்பிக் கொண்டிருக்கின்றேன்!.. -  என்றான் என் மகன்...

கேட்டபோதே மனம் சில்லென்று ஆனது..

தற்போது மூன்றாவது நாளாக அங்கிருக்கின்றான் என் மகன்..

தமிழுணர்வு பொங்கித் ததும்பும் கடற்கரை மணலில்
பாரம்பர்யத்திற்கு ஆதரவாக தனது குரலையும்
எனது உயிரின் உயிர் பதிவு செய்து கொண்டிருக்கின்றது...

அங்கிருந்தபடி எனது மகன் அனுப்பிய படங்கள் சில!..






அங்கே கொடுக்கப்பட்ட கோயில்பட்டி கடலைமிட்டாய் பாக்கெட்..
மற்றும் சுவையான உணவு.. எல்லாமும் படங்களாக கண்முன்!..

பத்து நிமிட இடைவெளியில் தங்கு தடையில்லாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்களாம்!..

கேட்கும்போதே நெஞ்சம் நெகிழ்ந்தது...

என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே!.. என்ற ஏக்கமும் தீர்ந்தது..

திரு ராகவா லாரன்ஸ்..
எல்லாவற்றுக்கும் மேலாக - 
உடல் நலம் இல்லாத நிலையிலும் போராட்ட களத்தில் முன்நின்ற -
திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் பெண்களுக்கான ஒதுங்குமிடத்தை வழங்கியிருக்கின்றார்..

மனித நேயமிக்க அவரை மனதார வாழ்த்துகின்றது - தமிழினம்.. 

திரு. ராகவா லாரன்ஸ் வழங்கிய கேரவன்
கீழுள்ள படங்கள் எல்லாம் Fb ல் கிடைத்தவை...


தஞ்சையில் திரண்டிருக்கும் இளைஞர்கள்
தஞ்சை


தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக...
சென்னை
மதுரை
மதுரை
எதையும் மாற்ற வல்லது காலம்!.. என்பார்கள்..

அப்படித்தான் ஆகிவிட்டது..

மாபெரும் எழுச்சி...

விவரிக்க முடியாதபடிக்கான வல்லமை வந்துற்றது..

இந்த வல்லமையைக் கைநழுவ விடக்கூடாது..

அடுத்து அடுத்து சாதிக்க வேண்டியவை - என நிறைய!..

முன்னேறுவோம்.. முன்னேறுவோம்..
தடைகளைத் தகர்த்து முன்னேறுவோம்!..


நிலைமை இவ்வாறிருக்க -

எவ்வளவோ பிரச்னைகள் முன்னிருக்க
இதற்கு ஏன் இத்தனை - போராட்டம்?.. - என்கின்றனர் ஒரு சிலர்..

காவிரியின் பிரச்னை என்றாவது ஒருநாள் தீர்ந்து விடக்கூடும்..
சக மனிதருக்கு நல்ல குணங்கள் அமைந்து விட்டால் ஒழுங்கீனங்கள் தொலைந்து விடும்..

ஆனால்,

காளைகளையும் பசுக்களையும் எருமைகளையும்
அழிவின் விளிம்புக்குத் தள்ளிவிட்டால் - அவற்றை
என்றைக்குமே நம்மால் மீட்டெடுக்க இயலாமல் போய்விடும்..

அந்த உணர்வு தான் தற்போது வெடித்துக் கிளம்பியிருக்கின்றது..

இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி இனியும் தொடரும்..

அதனை அடக்குதற்கு முற்பட்டால் அவர்களுக்கே அழிவு நிச்சயம்!..


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே..
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்!..
- மகாகவி பாரதியார் -

வாழ்க தமிழினம்..
வளர்க தமிழினம்!..
***