நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 30, 2017

ஸ்ரீ பரிதியப்பர் கோயில்

சூரியன் வழிபட்ட திருத்தலங்களுள் இதுவும் ஒன்று..

ஊரின் பெயரும் திருக்கோயிலின் பெயரும் பருத்தியப்பர் கோயில் என்று மருவி வழங்கப்படுகின்றது..

தஞ்சையிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள உளூர் கிராமத்திற்கு அருகில் உள்ளது - ஸ்ரீ பரிதியப்பர் கோயில்..

இத்தலத்தின் தொன்மைத் திருப்பெயர் - பரிதிநியமம். 


தன் மகள் தாட்சாயணியை கவர்ந்து சென்ற சிவபெருமானை அவமதித்து தட்சன் நடத்திய யாகத்தில் மற்ற தேவர்களுடன் சூரியனும் கலந்து கொண்டு , அவிர் பாகம் பெற்றான். 

இதனால் சிவ நிந்தை  செய்த தோஷம் ஏற்பட்டது.  

சிவபெருமானின் கோபத்திலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ வீரபத்ரமூர்த்தி -
தட்ச யாகத்திற்குச் சென்றவர்களையெல்லாம் வெளுத்துக் கட்டினார்..

அவர்களுள் சூரியனும் ஒருவன்.. தண்டத்தால் அடிபட்டதில் முன்பற்கள் உதிர்ந்து போயின.. அவனது பேரொளியும் குன்றிப் போனது..

தட்சனைப் பெரியவன் என்று எண்ணியதற்காக சூரியன் வருந்தினான்.. குற்றம் நீங்க வேண்டி சிவத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழிபாடு செய்தான். 

அப்படி வழிபாடு செய்த தலங்களுள் இந்தத் திருத்தலமும் ஒன்று...

சூரியனின் வழிபாட்டினை ஏற்றுக் கொண்ட - எம்பெருமான் அவனை மன்னித்தருளினன்..

சூரியனும் தன் முக அழகையும் பேரொளியையும் திரும்பப் பெற்றான்..


இதனால் மகிழ்ச்சி அடைந்த சூரியன் நன்றிக்கடனாக -
இன்றளவும் சந்நிதியிலேயே நேருக்கு நேர் நின்று  
சிவ பெருமானை - வழிபட்டுக் கொண்டிருக்கின்றான்.

மேலும் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் 18,19,20  
ஆகிய மூன்று நாட்களில் உதிக்கும் வேளையில் 
செங்கதிர்களால் எம்பெருமானைத் தழுவி வணங்குகின்றான். 

இன்றும் நந்தி, பலிபீடம் - அடுத்து மூலவருக்கு எதிரில் நின்று வழிபடும்  சூரியனின் திருமேனியினைக் காணலாம்.

இந்தத் திருத்தலத்தில் சூரியனுக்கு தோஷ நிவர்த்தி ஆனதால், 
இத்தலம் பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. 


திருத்தலம் - திருப்பரிதிநியமம்

இறைவன் - அருள்மிகு பரிதியப்பர்
அம்பிகை - அருள்தரு மங்கல நாயகி

தலவிருட்சம் - அரச மரம்
தீர்த்தம் - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், வேத தீர்த்தம்..

சூரியனின் திருப்பெயர்களுள் ஒன்று பரிதி.  சூரியன் சிவபெருமானை வழிபட்டு பழி நீங்கப்பெற்றதால், சுயம்பு மூர்த்தியான சுவாமிக்கு பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்றெல்லாம் திருப்பெயர்கள். 

பரிதியப்பர் - என்ற பெயரே நாளடைவில் பருத்தியப்பர் என மருவி விட்டது. 


அழகின் வடிவாகிய மங்கலநாயகி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியத்துடன் சகல ஐஸ்வர்யங்களையும் அருளுகின்றாள்.  

நூற்றுக்கணக்கான பால் குடங்கள் பால் காவடிகள் - என, 
பங்குனி உத்திரத்தன்று பெருந்திருவிழா நிகழ்கின்றது..

அன்றைய தினம் வரப்பிரசாத மூர்த்தியாக எழுந்தருளியுள்ள முருகப் பெருமானுக்கு, குளிரக் குளிர அபிஷேகங்களும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறுகின்றது..

ஸ்வாமி, அம்பாள், முருகன் என மூவரும் சிறப்புற்று விளங்குவதனால் இத்திருத்தலம் சோமாஸ்கந்த ஷேத்திரம் என்றும் புகழப்படுகின்றது.


தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சூரிய புஷ்கரணியில் நீராடி - பரிதியப்பர், மங்கலநாயகி, முருகப்பெருமான், சூரியன் ஆகியோரை வழிபடுவோருக்கு பிதுர் தோஷம் நீங்குகின்றது. 

திருஞானசம்பந்தப் பெருமானால் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம். 

திருநாவுக்கரசர் திருவூர்த் திருத்தொகையுள் போற்றிப்பாடுகின்றனர். 


மிக பழைமையான கிழக்கு நோக்கிய கோயில். ஐந்து நிலைகளையுடையது முதல் ராஜகோபுரம்.

திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம். வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி.

பிரகாரத்தில் சண்டிகேசருக்கு மூன்று திருமேனிகள் உள்ளன.

மூன்று நிலைகளையுடைய இரண்டாம் ராஜகோபுர வாயிலைக் கடந்தால் சந்நிதிகளில் விநாயகர், முருகன், கஜலட்சுமி திருமேனிகளைத் தரிசிக்கலாம்.

சிவகாமசுந்தரி அம்பிகையுடன் நடராஜ சபை உள்ளது. அருகில் ஸ்ரீபைரவர், சூரியன், சந்திரன்..

நவக்கிரக மண்டலமும் உண்டு.

துவார விநாயகரையும் துவார பாலகர்களையும் தொழுது உட்சென்றால் கருணையே வடிவான மூலவரைக் கண் குளிரத் தரிசிக்கலாம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து,
அருள்தரும் பரிதியப்பரை வணங்கினால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பர்..

நூற்றெட்டு தாமரை மலர்கள் என்றால் இன்னும் சிறப்பு..

திருக்கோயிலுக்குத் தென்புறம் பிடாரியம்மனும், கோயிலருகில் இடும்பனும் குடிகொண்டுள்ளனர்...

திருக்கோயிலின் முன்புறத்தில் சூரிய தீர்த்தம்,  பின்புறத்தில் சந்திர தீர்த்தம் ..

நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தினுள் சிவலிங்கத்தின் மீது சூரிய உதயத்தில் இளங்கதிர்கள் படர்கின்றன..

பங்குனி 18,19,20 (மார்ச்-31, ஏப்ரல்-1,2) தேதிகளில் சுயம்பு லிங்கமாகிய பரிதியப்பருக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்களுடன் சூரிய பூஜை நிகழும்..

இத்திருக்காட்சியினைக் காண்பதற்குத் தவம் செய்திருக்கவேண்டும்..

வாய்ப்புள்ளோர் அவசியம் தரிசனம் செய்க.. 

சிவலிங்கத்திற்கு எதிரில் சூரியன்
சிவபெருமானின் எதிரில் - சூரியன் நின்ற வண்ணம் வணங்கும் திருக்கோலத்தினை வேறு எங்கும் காண இயலாது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறந்து விளங்கும் இத்தலம் -
பிதுர் தோஷத்தினை நீக்கும்  பரிகார தலமாகவும்  
குறைவற்ற கண்ணொளி வழங்கும் தலமாகவும்  சிறந்து விளங்குகிறது. 

எந்தத் துறையிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான தொல்லைகளும் தீர, இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்..

இந்தத் திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையிலுள்ள  உளூர் கிராமத்திலிருந்து கிழக்காக 2 கி.மீ தூரத்தில் உள்ளது..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பரிதியப்பர் கோயில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன..

பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிந் நியமமே!.. (3/104) 
- திருஞானசம்பந்தர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, மார்ச் 25, 2017

ஸ்ரீ காமாக்ஷி வைபவம்

கடந்த வியாழக்கிழமையன்று (பங்குனி பத்தாம் நாள் - 23 மார்ச் )
காலை பதினொரு மணியளவில் - உத்ராட நட்சத்திரம் கூடிய சுபவேளையில்

தஞ்சை மேலராஜவீதி ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயிலுக்கு புனராவர்த்தன ஜீர்ணோத்தார மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தப்பெற்றது..

தஞ்சை ஸ்ரீ பங்காரு காமாக்ஷி
தஞ்சை மாநகர் மேலராஜவீதியில் -
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலுக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயிலுக்கும் நடுவே குடிகொண்டியிருப்பவள் ஸ்ரீ தங்கக் காமாக்ஷி..

காஞ்சி மாநகரிலிருந்து - தஞ்சையம்பதிக்கு எழுந்தருளி குடிகொண்டவள்..

அன்னை காமாக்ஷி அளப்பரிய கருணை கொண்டு இலங்குபவள்..

அவளுடைய புகழைப் பேசுதல் என்பது பெரும் புண்ணியம்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சீரிய நிர்வாகத்திற்குட்பட்டது இத்திருக்கோயில்..

ஸ்ரீ காமாக்ஷி அம்மனின் மூலஸ்தான விமானமும் ஸ்ரீ காமகோடி அம்மனின் மூலஸ்தான விமானமும் முழுதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன..

ஸ்ரீ காமாக்ஷி அம்மனின் சந்நிதிக் கதவுகள் வெள்ளித் தகடுகளால்
திருப்பணி செய்யப்பெற்றுள்ளன..

மேலும் கூடிய திருப்பணிகளாக - திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரமும் யாகசாலை கோசாலை ஆகியனவும் புதுப்பிக்கப்பட்டுள்ளன..

அத்துடன் மேற்கு வாசலில் புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது..

கடந்த 17 மார்ச் அன்று காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய திருப்பணி மங்கலங்கள் -

23 மார்ச் காலை ஏழாம் கால யாகபூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்துள்ளது...

இன்றைய பதிவில் கும்பாபிஷேக நிகழ்வுகள்... 













படங்களை வழங்கிய நண்பர்
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே..(050)
- அபிராமி அந்தாதி -

காமாக்ஷியின் கருணை 
அனைவரையும் காத்து நிற்கட்டும்

ஓம் சக்தி ஓம் 
***

வியாழன், மார்ச் 23, 2017

ஒரு துளி நீர்!..


உலக தண்ணீர் நாளை முன்னிட்டு நேற்று வெளியாக வேண்டிய பதிவு..

இணையம் இணையவில்லை...

ஆனாலும் என்ன!..

என்றென்றும் நீரை மதித்து வாழும் சிறப்பினை உடையவர்கள் நாம்!..

அந்தச் சிறப்புடன் இந்தக் கதைக்குள் அழைக்கின்றேன்..
***

இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் வெள்ளந்தி!..

இதோ அருகில் வந்து விட்டோம்!..

கேள்வி கேட்டவன் அந்த நாட்டின் மன்னன்.. மாமன்னன்!..

பதிலுரைத்தவன் அரசவையின் விகடகவி - வெள்ளந்தியான்...


காலையில் சூரியன் எழுந்ததிலிருந்து - இதே பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கின்றாய்!.. இப்போது சூரியன் இருப்பதோ உச்சியில்!...

அரசே!.. தாங்கள் தூரங்களைக் கடந்தவரில்லை.. அதனால் தான் களைப்பு மேலிடுகின்றது!..

ஓஹோ!.. (அரண்மனைக்கு வா.. உனக்கு இருக்கின்றது பூசை!..)

அரசனின் உள் மனம் கொக்கரித்தது...

ஆனாலும், குதிரைக்கு இப்போதே நாக்கு தள்ளி விட்டது!...

குதிரைக்கு இயலவில்லை எனில் தாங்கள் இறங்கி நடக்கலாமே!..

அரசனின் மனம் கொதித்தது - இந்த வார்த்தைகளைக் கேட்டு..

ஆனாலும் ஒன்றும் செய்வதற்கு இல்லை..

ஏனெனில், அரசன் என்ற அடையாளத்தை இறக்கி வைத்து விட்டு எளியவனாக சென்று கொண்டிருக்கின்றான் - விகடகவியின் விருந்துக்கு ...

மன்னனின் கண்கள் சுரைக்குடுக்கையைத் தேடின..

அதில் தண்ணீர் இருக்கின்றதா?...

இருக்கிறது.. பாவம்.. இந்த வாயில்லா ஜீவனுக்குக் கொடுப்போம்!..

என்று சொல்லியபடி - மீதமாக இருந்த தண்ணீரை குதிரையின் வாய்க்குள் ஊற்றி விட்டான் வெள்ளந்தி....

இப்போது சுரைக்குடுக்கையில் துளி நீர் கூட இல்லை...

இருப்பினும் கலங்காமல் சொன்னான் -

வேண்டுமானால் இன்னும் இரண்டு இலந்தம்பழங்களை வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்களேன்.. உமிழ்நீர் ஊறிக் கொண்டிருக்கும்!..

ம்.. நேரம்.. இதெல்லாம் நேரம்!.. - மன்னனின் மனம் மருகியது..

(உமிழ்நீர் அருந்த உயிர்த் தாகம் தீருமா?.. ஏற்கனவே ஏகப்பட்ட இலந்தம் பழங்களைச் சுவைத்ததால் வாய் முழுதும் ரணமாகிக் கிடக்கின்றது.. இந்த லட்சணத்தில் இன்னும் இரண்டா!?..)

வெள்ளந்தி!.. நீ ஏன் இப்படி நாட்டின் கடைக்கோடியில் இடம் வாங்கியிருக்கின்றாய்!..

என்ன செய்வது அரசே!.. ஊருக்குள் உள்ளதெல்லாம் தான் வலுத்தவர்களின் வகையறாக்களுக்குப் போய் விட்டதே!.. தாங்கள் எளியேனுக்கு அளித்த வெகுமதிகளினால் கடைக்கோடியில் தான் இடம் கிடைத்தது!..

ம்.. இடித்துரைப்பதற்கு ஒன்றும் குறைவில்லை!...

உள்ளதைச் சொன்னேன்!.. அரசே!.. ( இருந்தாலும், தாங்கள் இன்னும் வாரிக் கொடுத்திருந்தால் ஊருக்குள் இடம் வாங்கியிருக்க மாட்டேனா?..)

அங்கென்ன மாளிகையா எழுப்பியிருக்கின்றாய்!..

அதற்கெல்லாம் வழியேது ஐயனே!.. சாதாரண ஓலைக் குடிசைதான்!..

என்னது?.. ஓலைக் குடிசையிலா மன்னனுக்கு விருந்து?..

கொடுக்கக் கூடாது தான்.. ஆனாலும், தாங்கள் தான் இப்போது மன்னன் இல்லையே!..

திடுக்கிட்டான் மன்னன்.. இதெல்லாம் எனக்குத் தேவை தான்!..

நா வறண்டது.. ஒரு குவளை நீருக்காக ஏங்கியது...

கண்ணெதிரே ஆளில்லாப் பொட்டல்.. அருகம்புல் கூட இல்லாமல் விரிந்து கிடந்தது...

இவ்வேளையில் மன்னனின் மனம் சற்றே பின்னோக்கி ஓடியது..


உலக மகா கலையரசிகளின் நாட்டிய நிகழ்வுகளால் மகிழ்ந்திருந்த - அந்த வேளையில் அரக்கப் பரக்க ஓடிவந்து எதிரில் நின்றான் வாயிற்காவலன்...

தூங்கிக் கிடந்த எதிரி துருப்பிடித்த வாளுடன் எழுந்து விட்டானோ!..  - என அயர்ந்தான் தளபதி..

வரிக் கொடுமையை எதிர்த்து மக்கள் கொடி பிடித்து விட்டார்களோ?.. - என, அதிர்ந்தார் அமைச்சர்..

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. அஞ்சவேண்டாம் என்பதைப் போலிருந்தது வாயிற்காவலனின் விண்ணப்பம்..

மகாராஜா!.. வைர வைடூரிய கோமேதகங்களுடன் தூர தேசத்து வணிகர்கள் தங்களைச் சந்திக்க விரும்புகின்றார்கள்!..

இதைக் கேட்டதும் பெருமகிழ்ச்சி கொண்ட மன்னன் நடன மாமணிகளை சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளும்படிச் சொன்னான்..

கண்கவரும் நாட்டிய மாமணிகளை விட -
காடுமலை கடந்து வந்த நவ மாமணிகள் அவனது சிந்தையில் களி நடம் புரிந்தன...

சற்றைக்கெல்லாம் அரசவைக்குள் வணிகர்கள் புன்னகையுடன் வந்தனர்..


வைர வைடூரிய ரத்தினங்கள் பதிக்கப் பெற்ற பொன் நகைகளை
மன்னன் காணத் தந்தனர்...

தகவலறிந்த அரசி ஓடோடி வந்தாள்... அந்த அளவில் வணிகர்கள் கொண்டு வந்திருந்த அத்தனையும் கொள்முதலாகி விட்டன...

எல்லாவற்றினுள்ளும் அந்த நவரத்ன மாலை தலை சிறந்து விளங்கியது!..

இதைப் போல இவ்வுலகில் எவரிடத்தும் இல்லை!.. - வணிகர்கள் பணிவுடன் சொன்னார்கள்...

அப்படியாயின் இது என்னவருக்கே ஆகட்டும்!.. - என்று சொல்லி பூரிப்புடன் கணவனின் கழுத்தில் அணிவித்தாள்...

அரசவையில் இருந்தவர்கள் ஜயகோஷம் எழுப்பினர்..

 மன்னன் வாழ்க.. நாடு வாழ்க!..

இப்படியிருந்தால் நாடு எப்படி வாழும்!.. - வெள்ளந்தி மட்டும் முணுமுணுத்துக் கொண்டதை மன்னன் கவனித்தான்...

அன்றையப் பொழுது மன்னனின் நினைவுக்கு வந்ததும்
இனிமேல் நடக்க இருப்பதும் விளங்கி விட்டது..
***

மன்னா!.. இதோ.. எளியேனின் குடில்!.. வலது காலை எடுத்து வைத்து வருக!..

நினைவுகளில் இருந்து விழித்துக் கொண்ட மன்னன் நினைத்தான்...

கண்ணெதிரே இருப்பது காய்ந்து போன ஓலைக் குடில்..
அதற்குள் இருக்கப் போவது பழைய கஞ்சியும் பச்சை மிளகாயும்!..
இதற்கு வலது கால் என்ன!.. இடது கால் என்ன?...

எப்படியோ சமாளித்தவனாக குதிரையிலிருந்து இறங்கினான்....

எதிர் நின்று வரவேற்க யாரொருவரையும் காணோம்!..

அரண்மனையின் யானை பெருங்குரலெடுத்துப் பிளிறி
வரவேற்றதெல்லாம் நினைவுக்கு வந்தது..

என்ன செய்வது?... எல்லாம் தலையெழுத்து... இன்றைக்கு இறைவன் அளந்தது இவ்வளவு தான்!..

வருக.. வருக.. குடிலின் உள்ளே வருக!..

களைப்புடன் மன்னன் - குடிலின் உள்ளே நுழைந்தான்...

முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடு!.. தாகம் கண்களை மறைக்கின்றது..

சற்று நேரம் இருந்து பேசி மகிழ்ந்த பின் விருந்து உண்ணலாமே!..

ஏன்?.. இதுவரைக்கும் பேசியதெல்லாம் போதாதா!.. முதலில் தண்ணீர் கொடு!..

வந்த களைப்பில் உடல் முழுதும் வியர்த்திருக்கின்றது.. இவ்வேளையில் நீர் அருந்தினால் ஜலதோஷம் ஏற்படும்.. சற்றே மயிலிறகு கொண்டு வீசட்டுமா?..

மயிலிறகும் வேண்டாம்.. வெட்டி வேரும் வேண்டாம்.. முதலில் தண்ணீர் கொடு!..

மன்னா.. அதோ அங்கே பாருங்கள்.. அண்டை நாட்டின் எல்லை.. அங்கே எல்லைக் காவல் பூங்காவில் உயர்ந்திருக்கும் பசுமையான மரங்களைப் பாருங்கள்!.. சற்றே அருகில் நமது சுங்கச் சாவடி கண்ணுக்குத் தெரிகின்றதா!.. வெட்ட வெளியாய்.. மொட்டைத் திடலாய்!..

வெள்ளந்தி!.. முதலில் தண்ணீர் கொடு.. குடிப்பதற்கு!..

அரசே.. கோபங் கொள்ளற்க!.. இதோ விருந்துண்ணலாம்.. உங்களுக்காக..
தலை வாழையிலையில் புத்தரிசிப் பொங்கல்,நெய்ப் பணியாரம், தேங்காய்ப் பூரணம், கொழுக்கட்டை, அவல் சர்க்கரை சுழியன், அதிரசம், வரகரிசிப் புட்டு, தேங்காய் தினை கருப்பட்டி உருண்டை, சிறுபருப்பு அடை, பால் பாயசம்.. -

அதெல்லாம் கிடக்கட்டும் தண்ணீர் எங்கே?..

இதோ.. இங்கே!..

நோக்கிய இடத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தான்!..

என்ன இது?.. - மன்னன் அலறினான்...

நத்தையின் கூட்டுக்குள் தண்ணீர்!..

என்ன செய்வது மன்னா.. இங்கே தண்ணீர் பற்றாக்குறை.. 
எனவே, சிறு துளியை பெருவெள்ளமாகக் கொள்ளுதல் வேண்டும்!..

உனக்கு என்னடா வேண்டும்?.. 
இந்த நவரத்ன மாலை வேண்டுமா?.. 
இருந்து ஆளும் இந்த நாடு வேண்டுமா?..

இல்லையேல் என்னுடைய உயிர் வேண்டுமா?..
எடுத்துக் கொண்டு ஒரு குவளை நீரைக் கொடு!.. 

அரசே.. அதெல்லாம் ஒரு சிற்றெறும்பின் தாகத்தைக் கூட தீர்க்காது!..

வேறென்ன தான் வேண்டும்!..

எனக்கொரு வரம் வேண்டும்!..

வரமா?.. என்ன அது?..

நீர்நிலை காக்க வேண்டும்.. நீராதாரம் பெருக்க வேண்டும்!..

மன்னன் அதிர்ந்தான்.. கடைவிழியில் நீர் திரண்டது..

சட்டெனத் திரும்பிய வெள்ளந்தி - ஓலைக் குடிலின் மறுபுறத்திலிருந்து மண்கலயத்தில் குளிர்ந்த நீருடன் வெளிப்பட்டு -

மன்னனின் முன்பாக பணிவுடன் சமர்ப்பித்தான்...

மெய் சிலிர்த்திட திருக்கோயில் பிரசாதத்தினைப் போல்
அந்த மண் கலயத்தை ஏந்தினான் -  மன்னன்..

விலாமிச்சை வேருடன் ஏலமும் ஊறித் திளைத்திருந்த குளிர் நீர்
துளித் துளியாக மன்னனின் உயிருடன் கலந்து தாகத்தைத் தணித்தது..


மன்னா.. இதோ.. தங்கள் முன்னிருக்கும் உணவு வகைகள் எல்லாமும் நமது வளநாட்டில் விளைந்தவை தான்!..

ஆனாலும் -
நம் நாடும் வறட்சியினால் சூழப்படுகின்றது...
மழை நீர் தேக்கி வைக்கப்படுவதேயில்லை...
காடு கரைகள் ஏற்றம் பெற்றாலும் ஏரி குளங்கள் தூர் வாரப்படவில்லை..
மாதந்தவறாமல் பெய்யும் மழையும் திரண்டோடி கடலைத் தான் சேர்கின்றது..

இதைத் தங்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களோ -
தங்களைத் துதித்துப் பாடிக் கொண்டு வீணே வயிறு வளர்க்கின்றனர்...

எதிர்த் திசையைப் பாருங்கள்..
எதற்கும் உதவாத பாலையிலும் பயிர் செய்கின்றனர்..

எல்லாம் நீர் மேலாண்மையினால் தானே!..

தங்களுடைய முன்னோர்கள் செய்த நலன்களைப் போல தாங்களும் 
மக்கள் துயர் தீர்த்து மங்காப் புகழ் எய்த வேண்டும் என்பதே ஆவல்!..

மக்கள் நலம் பேண வேண்டாமா.. 

அரசே!.. மழை வளம் காக்க வேண்டாமா!..

இதை உணர்த்துவதற்காகத் தான் இத்தனை நாடகமும்.. அல்லவா!..

என்னைப் பொறுத்தருளல் வேண்டும்!..

நீர் வாழ்க!..

ஆமாம்.. நீரும் நிலமும் வாழத்தானே வேண்டும்!..

நான் உம்மை வாழ்த்தினேன் - வெள்ளந்தி!..

மன்னா!.. தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்..
தங்களால் நீரும் நிலமும் வாழ வேண்டும்!..

இதோ எமது வெகுமதியாய்.. இந்த நவரத்ன மாலை.. ஏற்றுக் கொள்க!..

மன்னா!.. இதெல்லாம் அழகுக்கு மட்டுமே!.. ஆபத்துக்கு உதவாது!.. 
இருந்தாலும், இந்த நவரத்ன மாலை தங்களிடம் இருப்பதுவே பெருமை!..

பட்டம் பதவி, பெருவிலை ஆரம், கொற்றம் குடை - என, 
எல்லாவற்றையும்.. ஒரு துளி நீருக்காக இழக்கத் துணிந்தீர்கள்!..

நீரின் பெருமையை தாங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்..

நல்மணி மாலைகளை நிலவறைக்குள் சேர்த்து வைப்பதனால் அல்ல..
நெல்மணி மாலைகளைக் குதிர்களுக்குள் நிறைப்பதனால் மட்டுமே -

தங்களுடைய புகழ்க்கொடி உயரே பறந்து கொண்டிருக்கும்!...

அகமகிழ்ந்த மன்னன் வெள்ளந்தியை ஆரத் தழுவிக் கொண்டான்..

வாழ்க மன்னன்!.. வாழ்க வளநாடு!.. - என, முழங்கினான் வெள்ளந்தி.. 


எதிர்வரும் ஆண்டுகளில் -
நீருக்காகப் போராட வேண்டியிருக்கும் என்கின்றனர் - ஆர்வலர்கள்...

இன்றைய நவீன அறிவியலால்
நீரும் நிலமும் பாழானதென்பது உண்மை..


ஆனாலும்,
நீர் நிலைகளைக் காப்பாற்றி -
இயற்கையைப் பேணுதலே அறிவுடைமை.


நீர் காப்போம்!.. 
நிலம் காப்போம்!..

நீர் உயரட்டும்.. 
நீருடன் கூடி நிலமும் உயரட்டும்!.. 
***

திங்கள், மார்ச் 20, 2017

கோலக் குருவி..

வாசலில் ஸ்கூட்டியின் சப்தம்..

விரைந்து வருவதற்குள்ளாக -


அக்கா.. அக்கா..வ்!..

கை நிறைந்த காய்கறிகளுடன் தாமரை.. சந்தையிலிருந்து வருகின்றாள்..

ஆனாலும், வீட்டிற்குள் வராமல் -  

வாசலிலிருந்த வண்ணக் கோலத்தில் லயித்திருந்தாள்...

வாம்மா.. தாமரை!..

அக்கா.. இன்றைக்கு என்ன விசேஷம்?... வாசலில் குருவிக் கோலம் எல்லாம்!..

என்ன விசேஷம் என்று நீதான் சொல்லேன்!..

அக்கா!.. அந்த அளவுக்கு நான் எங்கே?... இருந்தாலும் தலை இருக்க வால் ஆடக் கூடாது இல்லையா!.. அதனால்.. நீங்களே சொல்லி விடுங்களேன்!..



நல்ல பொண்ணு நீ!.. இன்னைக்கு சிட்டுக்குருவிகள் தினம்!.. உலகம் முழுதும் கொண்டாடுகின்றார்கள்!..

ஆகா!.. பல்பு வாங்கிட்டேன்!.. இருந்தாலும் அக்கா கிட்ட தானே!..

வா.. தாமரை.. உள்ளே வா!..  காய்கறி விலையெல்லாம் எப்படியிருக்கு?..

ஓரளவுக்கு மலிவு தான்!.. அக்கா.. நான் ஒன்று கேட்பேன்... தப்பாக நினைக்கக் கூடாது!..

என்னம்மா?..

சிட்டுக் குருவிக்கென்ன அவ்வளவு மகத்துவம்!.. அதுக்காக ஒரு நாளா?..

சிட்டுக்குருவி.. இயற்கையில அதுவும் ஒரு அங்கம்.. மனிதர்களோடு வாழ விரும்பும் உயிரினங்களுள் அதுவும் ஒன்று.. பழைய காலத்து வீடுகள்..ல சர்வ சாதாரணமா மக்களோட பழகித் திரியும்.. 

ஓ!..

வீட்டுத் தாழ்வாரங்கள் கூரை முடுக்குகள்... இங்கெல்லாம் ரொம்ப உரிமையா கூடு கட்டிக் கொள்ளும்.. யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாது...

ஓஹோ!.. 



வீட்டுக்குள்ள வந்து சிட்டுக் குருவி கூடு கட்டினாலே நல்ல அதிர்ஷ்டம் .. அப்படின்னு சொல்லுவாங்க..,

அது மட்டுமா!.. இளந்தம்பதிகள் இருக்கிற வீட்டுல குருவி கூடு கட்டினா.. குலம் விருத்தி.. ந்னு சந்தோஷப்படுவாங்க..

அக்கா!.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அக்கா?...

தாமரை!.. இதெல்லாம் உனக்கு தெரியாது.. குருவி மட்டுமல்ல.. குளவி வந்து கூடு கட்டினாலே பலப்பல அர்த்தம் இருக்கு.. குளவிக் கூட்டை கலைக்க மாட்டாங்க!.. குளவி கட்டுற கூட்டை வச்சி என்ன குழந்தை பிறக்கும்..ன்னு சொல்லிடுவாங்க!.. 

ஆச்சர்யமா இருக்கே!..

அந்த அளவுக்கு சிற்றுயிர்களோட இணைந்து வாழ்ந்த சமுதாயம் நம்முடையது.. தாமரை!..

கொஞ்சம் கொஞ்சமா நாகரிகம்..ங்கற பேர்..ல தன்னை இழந்துகிட்டு இருக்கிறதும் நம்முடைய சமுதாயம் தான்!...

ஊர் உலகம் எல்லாம் மாறி வருது தானே!..



ஊர் உலகம் போலவா நம்முடைய கலாச்சாரம்!..  தாத்தா காலத்தில எல்லாம் கறையானுக்கு மருந்து எறும்புக்கு மருந்து.. நெல்லுக்கு மருந்து தென்னைக்கு மருந்து.. இதெல்லாம் கிடையாது!... 

வீட்டு வாசல்ல சாணம் தெளித்து கோலம் போட்டால் கறையான் எறும்பு இதெல்லாம் வீட்டுக்குள்ளே வராது... நிலைப்படியில மஞ்சள் பூசி கூரையில நாலு வேப்பிலையும் மாவிலையும் தொங்க விட்டா கெட்ட கிருமிகளுக்கு வேலை இல்லை.. வீட்டைச் சுற்றி கோழி குருவி இதெல்லாம் இருந்தா விஷப் பூச்சிகள் ஒழிந்து போகும்...

கொல்லையில புழக்கடை தண்ணி ஓடுற இடத்தில நாலு வாழை வைச்சி வாழை இலையில சாப்பாடு..ன்னா உடம்புக்கு நல்லது... கிணற்றடியில துளசி மாடம்.. அப்படியே அந்தப் பக்கம் தும்பை தூதுவளை, செம்பருத்தி சோற்றுக் கற்றாழை..ன்னு இருந்துட்டா அந்த வீட்டுல நோய் நொடியே இருக்காது..

ஏ.. அம்மாடி!.. இவ்வளவு சேதிகளா!..

ஏழை.. ன்னாலும் பணக்காரன்.. ன்னாலும் காற்றோட்டமான வீடு... நல்ல தண்ணி.. நல்ல சாப்பாடு.. அவங்க அவங்க குணம் கொள்கை இதனால அப்படி இப்படி இருந்தாங்களே தவிர கிராமங்கள் யாரையும் கை விட்டதே இல்லை...

அக்கா!..


வாழையிலைக்குள் வாழும் குருவி
காத்து நின்ற கிராமங்களை நாம் தான் கை விட்டோம்!.. ஆற்றை குளத்தை அழித்தோம்.. மரம் மட்டைகளை ஒழித்தோம்.. நாம் வாழ இயற்கையைக் கெடுத்தோம்... வருங்கால சந்ததிக்கு வறட்சியைக் கொடுத்தோம்!..

... ... ...!..

எந்த நாட்டிலும் இல்லாதபடிக்கு எத்தனை எத்தனையோ ஞானிகள்!.. எத்தனை எத்தனையோ நீதி நூல்கள்!.. அத்தனையும் இருந்தும் அறிவழிந்து போனோம்!..

... ... ...!..

அடுத்த நாட்டுக்காரனைப் பற்றி பேச வேண்டாம்.. நம்மை நாமே கெடுத்துக் கொண்டோம்!.. உருப்படாத கல்வி முறையால் ஊர் அழிந்தது தான் மிச்சம்...

... ... ...!..

நம்முடைய பெருமையை திறமையை நமக்குச் சுட்டிக் காட்டணும்.. நல்லறிவை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகணும்.. அதுதான் கல்வி.. ஆனால் இன்றைக்கு நடக்கிறது என்ன?.. கொடுக்க வேண்டிய இடத்தில் காசைக் கொடுத்துட்டால் என்ன வேணும்...னாலும் செய்து கொள்ளலாம்... கழனியை அழித்து விட்டு கல்லூரியே கட்டலாம்!..

... ... ...!..

ஆறு குளம் எல்லாம் அழியுதே... குன்று மலை எல்லாம் மடுவாகிப் போகுதே... மரம் மட்டை எல்லாம் விறகாகிப் போனதே.. கூக்குரல் இட்டாலும் கேட்பாரில்லை.. கைமேல் பலன் பூஜ்யம் தான்!..

... ... ...!..

மக்களுக்கான குளத்தை ஏரியை தூர்த்து விட்டு மக்கள் நலப்பணி..ங்கறான்... நல்ல தண்ணிக்கு ஜனங்க குடத்தோட அலையுறப்போ ஆழ்துளைக் குழாய்.. ங்கறான்.. இதுனால பூமி பொத்தலாகிப் போனது தான் மிச்சம்...

... ... ...!..

பூமிக்குள்ள நீர் போய்ச் சேர்ந்தாத் தானேடா மேலே பொங்கி வரும்.. நமக்குத் தான் மழைத் தண்ணியைத் தேக்கி வைக்கிற பழக்கம் எல்லாம் கிடையாதே!.. ஆயிரம் வருஷத்துக்கு முன்னால செஞ்சு காட்டுனாங்க... அப்படியெல்லாம் நல்லது செஞ்சாங்க..ங்கறதே - இன்றைக்கு படிக்கிற பிள்ளைகளுக்குத் தெரியாது!.. அப்புறம் எப்படி உருப்படும் ஊரும் நாடும்?..

... ... ...!..

ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.. அப்படி..ன்னு ஔவையார் சொன்னாங்க.. நாம கேட்டோமா?.. ஒரு ஆறு அழிஞ்சா எத்தனை எத்தனை மரங்கள் அழியுது.. ஒரு மரம் அழிஞ்சா எத்தனை எத்தனை ஜீவராசிகள் அழியுது.. இதெல்லாம் நல்லதுக்கா!..

... ... ...!..

இத்தனை மரமும் நீ வெச்சதா?.. நான் வெச்சதா?.. காற்றும் தண்ணியும் பறவைகளும் விலங்குகளும் வெச்சது!..

நீ படிச்சதில்லையா?.. காற்றினாலும் தண்ணீராலும் பறவைகளாலும் விலங்குகளாலும் விதைகள் இடம் விட்டு இடம் பரவுகின்றன.. அப்படின்னு!..

மேட்டுல இருந்து பள்ளத்துக்கு தண்ணீர் வர்றதில்லை... அடைத்தாயிற்று.. ஆறு அழிந்தது.. ஆற்றங்கரை அழிந்தது.. மரம் ஒழிந்தது.. மேலே பறவைகள் இல்லை.. கீழே விலங்குகள் இல்லை..

ஒன்றுக்கும் உதவாத மனிதன்.. இவனுக்கு மட்டும் பாதை வேண்டுமாம். ஆனை வழியை அழிக்கிறான்... பூனை வழியை ஒழிக்கிறான்... கேட்டால் நடுராத்திரியில உடுக்கை எடுத்துக்கிட்டு அடிக்கிறான்... அங்கே அரளிய வெச்சேன்.. இங்கே குறளிய வெச்சேன்..ங்கிறான்...

ஏன்டா.. தஞ்சாவூர் மண்ணும் தகரக்குடி மண்ணும் ஒன்றா?... மண்ணுக்கு மண் மரத்தைப் பார்த்து வைத்தானே இறைவன்!.. அவன் பெரியவனா?.. அவன் பேரைச் சொல்லி வயிறு வளர்க்கிற நீ பெரியவனா?..

மரம் மட்டையெல்லாம் அழித்து விட்டு - மழை வர்றதுக்காக ஆயிரத்து எட்டு குண்டத்துல ஹோமம்... ங்கிறான்!..

புழு பூச்சிய எல்லாம் கொன்னு போட்டுட்டு பூமிய வாழ வைப்பேன்... என்கிறான்!.. பறவை மிருகம்.. எல்லாம் அழியுது.. இவன் சொல்றான்.. இந்தியா வளருது.. ன்னு!..

ஊர் குடியைக் கெடுத்தவன் எல்லாம் பெரியபேர் வெச்சிக்கிட்டு அலைகிறான்!.. ஏதிலிகளாகிப் போனோம் தாமரை.. ஏதிலிகளாகிப் போனோம்!..

அக்கா.. அக்கா!.. என்னாச்சு!..



இயற்கையைப் பற்றி பேசினால் இளக்காரமா இருக்கு!..

நாலு சுவற்றுக்குள்ளே ஒற்றைப் பனை மரம் போல வாழ்க்கை... இவனுங்களுக்கெல்லாம் என்ன தெரியும் இயற்கையைப் பற்றி?..

சம்பளத்துக்காக வாழ்வதா வாழ்க்கை?.. சந்ததிகளுக்காக வாழவேணும்!.. எறும்பும் தான் வேணும்.. யானையும் தான் வேணும்!.. மண்ணுந்தான் வேணும்.. மரமும் தான் வேணும்..

அங்கே புதுச்சேரிக்குப் பக்கத்தில பார்.. தானியத்தில விஷம் வைச்சதில இருபத்திநாலு மயில்கள் செத்துப் போயிருக்கு.. ஆனா, இவனுங்க மட்டும் நல்லா இருக்கணும்!?..

ஆமா..ங்க்கா.. நானும் படிச்சேன்.. ரொம்ப வருத்தமா இருக்கு...

மயில்களோட வாழ்விடத்தை அழிச்சிட்டா அதுங்க வாழறதுக்கு வேறெங்கே போகும்?.. மயில்கள் சாபம் இடுதோ இல்லையோ.. அதைப் பார்க்கிறவங்களோட வயிறு பற்றி எரியுதே.. அந்தப் பாவம் சும்மா விடுமா?..

சே.. என்ன ஒரு ஈனத்தனமான வேலை!..

இப்படித் தான் சிட்டுக்குருவி லேகியம்.. ந்னு வேட்டு வைத்தார்கள்... முடிவு என்னவாயிற்று... குலம் விளங்கவில்லை.. குணம் விளங்கவில்லை...

அதென்னக்கா.. சிட்டுக்குருவி லேகியம்?..

அது ஒரு ஏமாற்று வேலை!.. உருப்படாதவனுங்க செஞ்சது!..

மறுபடியும் சிட்டுக்குருவிங்க.. எல்லாம் பெருகுமா.. அக்கா?...



இப்போ ஓரளவுக்கு சிட்டுக்குருவிகள் விருத்தியாகி இருக்கிறதா இயற்கை ஆர்வலர்கள் சொல்றாங்க!..

இருந்தாலும் அதுங்க நிம்மதியா வாழ்றதுக்கான வாய்ப்புகளை நாமதான் பெருக்கணும்!..

அந்த நேரத்தில் சட.. சட.. என்று சிறகடித்தபடி பத்துப் பதினைந்து சிட்டுக் குருவிகள் முன் கூடத்திற்குள் புகுந்து பறந்தன..

அக்கா.. அக்கா!.. இங்கே பாருங்களேன்!..

என்ன.. தாமரை.. இது!.. ஆச்சரியமா இருக்கு!..

அவ்வேளையில் ஒரு குருவி பேசிற்று!..

வாழ்க வளமுடன்!.. உங்களைப் பற்றி கேள்விப்பட்டு வந்தோம்!..

தாமரை.. அங்கே வரகரிசி இருக்கு எடுத்து வாம்மா!.. ஒரு காலத்தில் எங்கள் பழைய வீட்டில் நெல்மாலை கட்டியிருப்போம்.. இன்றைய சூழ்நிலையில் அதெல்லாம் இங்கே இல்லை... என்றாலும் எங்கள் வீட்டில் அமுது செய்தல் வேண்டும்!..

நல்லது.. ஆயினும், அங்கே தஞ்சையம்பதியார் இல்லத்தில் அவர்களுக்கு இன்று திருமண நாள் என்று விருந்துண்டோம்.. அவர்கள் தான் தங்களைச் சந்திக்கும்படி சொன்னார்கள்...

அப்படியா!.. - தமிழ்ச்செல்விக்கு மகிழ்ச்சி..

அக்கா... இந்தாங்க.. வரகரிசி!..

கூடத்தில் வரகரிசியை வாரி இறைத்து - வாஞ்சையுடன் தண்ணீரும் வைத்தார்கள்..

குருவிகள் கூடிக் குளிர்ந்து - தானியங்களை உண்டன.. நீரை அருந்தின..

அங்குமிங்கும் ஆனந்தமாகப் பறந்தன...

மகிழ்ச்சி.. விரைவில் தாமரையின் வீட்டில் கூடு கட்டுவோம்!.. 

வலமாகச் சுற்றி வாழ்த்திய வண்ணம் - வானில் பறந்து காற்றில் கலந்தன!..

தாமரை!.. நல்ல சேதிதான்!.. தம்பி ஊருக்கு வர்றாங்க..ன்னு நினைக்கிறேன்!..

போங்க..க்கா!.. எனக்கு வெக்கமா இருக்கு!.. - முகம் சிவந்தாள் தாமரை..




இறைவனே இயற்கை.. இயற்கையே இறைவன்..
இயற்கை இருக்கட்டும்.. இயற்கையாகவே இருக்கட்டும்!.
இயற்கை இருக்கும் வரைக்கும் தான் நமக்கு இங்கே இருக்கை!..

இன்று உலக சிட்டுக் குருவிகள் நாள்..


நாமும் வாழ்வோம்..
வையகத்தையும் வாழ வைப்போம்..

இயற்கை வாழ்க..
இயற்கையோடு இணைந்த இன்பமும் வாழ்க!..
***

வெள்ளி, மார்ச் 17, 2017

அழகே.. தமிழே!..




வானளந்த நிலவு முகம்
தானளந்த நறுந் திலகம்
நல்லழகே தமிழ்கூறும் மங்கலமோ!..

கண்ணளந்த புன்னகையும்
காதளந்த பொன்னகையும்
காலமகள் செய்தளித்த நன்கலமோ!..

பூவளந்த நறுங்குழலும்
நாவளந்த இன்தமிழும்  
வானளந்த பேரழகைக் கூட்டாதோ!..

நானளந்த நற்கவியும்
தேனளந்த தென்தமிழும்
தேவியவள் திருவடிவைக் காட்டாதோ!..

பேரளந்த பெருந்தகவாய்
ஊரளந்த ஒலிமுழவாய்
பொன்மாலை பூந்தோளில் ஆடாதோ!..

தினையளந்த வயற்காட்டில்
எனையளந்த என்னுயிரே
என்கவியை நின்செவிதான் ஏற்காதோ!..

மலையளந்த பெருந்தனத்தாள்
நிறையளந்த நிலைகுணத்தாள்
குளிர்நிலவாய் கூடவந்தால் ஆகாதோ!..

பாலளந்த பசுங்குணத்தாள்
பாவளந்த தமிழ் வணத்தாள்
பூவிழியால் புன்னகைத்தால் ஆகாதோ!..


நீரளந்த நெடுங்கரையில்
நிழலளந்த குழல்உலர்த்தி
நீநடக்க என்கலியும் தீராதோ!..

தேனளந்த பூஞ்சரத்தாள்
வானளந்த புகழ்நலத்தாள்
தேவகன்னி என்றுரைத்தால் ஆகாதோ!..

பொன்னளந்த பூங்கரத்தாள்
மின்னளந்த விழிநலத்தாள்
நின்றெனக்கு ஒன்றுரைத்தால் ஆகாதோ!..

நெல்லளந்த நெடுவயலில்
நின்றளக்கும் தென்காற்றில்
உன்றனுக்கு என்றுரைத்தால் வாராதோ!..

சேலளந்த செவ்விழியும்
நூலளந்த மெல்லிடையும்
நூறுகவி நான்பாடச் சொல்லாதோ!..


சீரளந்த பெருங்குலத்தாள்
நீரளந்த முகில்குணத்தாள்
நானளந்த மொழிகேட்டால் ஆகாதோ?..

நானளந்த நற்கவியும்
தேனளந்த தென்தமிழும்
தேவியவள் திருவடிவை வாழ்த்தாதோ!..

நாலளந்த நறுங்குணத்தாள்
காலளந்த தூரமெல்லாம்
நான்நடக்க வாழ்நாளும் வாராதோ!..
***

மதிப்புக்குரிய ஓவியர் மாருதி அவர்களுக்கு நன்றி

அக்கா.. அக்கா!.. 

சொல்லம்மா!..

இதென்னக்கா!..

கவிதை.. கவிதை..ம்மா!..

கவிதையா.. அதான்.. எனக்குத் தெரியுதே!..

வேறென்ன உனக்குத் தெரியலை?..

அத்தான் உங்களைச் சுத்திச் சுத்தி வந்தப்போ எழுதுனது..ன்னு புரியுது!..

அப்புறம் என்னவாம்!..

எல்லா வரியிலயும் - அளந்த.. அளந்த.. - ன்னு அளந்திருக்காங்களே!.. உண்மையில அளந்த கவிதையா.. இல்லே.. அளந்த கவிதையா!..

என்னம்மா!.. சிலேடையெல்லாம் பொங்குது?..

அத்தானும்... தான் கவிதையில ஒருவரி சிலேடை வெச்சிருக்காரே!..
எந்த வரி..ன்னு தெரியுதா!?..

குறுஞ்சிரிப்பு தாமரையின் இதழ்களில்..

அக்காவின் முகத்திலும் - மெல்லிய பூஞ்சிரிப்பு!...

சொல்லுங்க அக்கா!.. எப்படி.. இதெல்லாம்!?..

உங்க அத்தான் வந்ததும் அவரையே கேளேன்!..

அத்தானைக் கேக்கறது இருக்கட்டும்...
நம்மைப் பார்த்து இப்படியெல்லாம் அளக்குறாங்களே!.. அது எப்படி..க்கா?..

அத்தானைக் கேட்டா - உள்ளதைச் சொல்றேன்!.. அப்படி..ன்னு சொல்லுவாங்க...

உள்ளதைச் சொன்னாங்களோ!.. உள்ளத்தைச் சொன்னாங்களோ!... பொதுவா இவங்களால நம்மை அளந்துட முடியுமா?..

ஓ.. முடியுமே!..

எப்படிக்கா?..

அன்பு!.. அன்பு தான் அளவு கோல்!.. 
அன்பை அளப்பதும் அன்பு தான்!.. 
அன்பை அளிப்பதும் அன்பு தான்!..

ஓ!.. அத்தானுக்கு ஏத்த அக்கா தான்!..

தாமரை சிரித்தாள்.. 
தாமரையுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வியும் சிரித்தாள்..


அழகு வாழ்க..
அழகுடன் சேர்ந்து அன்பும் வாழ்க!.. 
***