நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சுந்தரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுந்தரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 12, 2024

ஸ்ரீ சுந்தரர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 27
திங்கட்கிழமை


சுந்தரர்..

திருக்கயிலை மாமலையில் பளிங்கு என ஒளிர்ந்த பனிப்பாறையில்  ஈசனின் திரு உருவம் பிரதிபலிக்க  - அதில் இருந்து பிரதி பிம்பமாகத் தோன்றியவர்.. இதனாலேயே சுந்தரர்.. 

திருப்பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் மூண்டு எழுந்தபோது அதை நாவற்பழ அளவிற்கு திரட்டிக் கொணர்ந்தவர்.. 

 சிவபிரானுடைய அனுக்கத் தொண்டர் சுந்தரர். இறைவனுக்கென்று மலர் கொய்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு நித்ய கைங்கர்யம் புரிபவர்.. திருநீற்று மடலை நிற்கின்ற பேற்றினைப் பெற்றவர்.. இதன் பொருட்டே இவர் திருக்கயிலைக்கு மீண்டபோது இவருக்காக 
திருக்கயிலையில் இருந்து
அயிராவணம் எனும் யானை பூமிக்கு வந்தது..
நந்தவனத்தில் பூக்கொய்த வேளையில் கமலினி அநிந்திதை எனும் தேவ கன்னியரை விநாடியிலும் விநாடிப் பொழுது பார்த்ததற்காக பூமியில் பிறந்து வளர்ந்து வாழ வேண்டும் என அருளாணை பிறந்தது.. இவர் பொருட்டு கமலினி அநிந்திதையும் பூமியில் பிறந்தனர்..

சுந்தரரின் திருமணத்தில் முகூர்த்த நேரத்தில் இறைவன் தடுத்து ஆட்கொண்டு திருவெண்ணெய் நல்லூரில் தன்னைக் காட்டினன்..

முற்பிறவியை உணர்ந்து கொண்ட சுந்தரரின் வாழ்வு அற்புதம் நிறைந்தது..


ஞானசம்பந்தப் பெருமானைப் போல அப்பர் ஸ்வாமிகளைப் போல - சுந்தரரும்  முதலையால் உட்கொள்ளப்பட்ட பாலகனை அவிநாசி தலத்தில் மீட்டளித்திருக்கின்றார்..

இறைவனிடம் கோபம் கொண்டு பேசியதால் வன் தொண்டர் என்ற சிறப்பு இவருக்கு..

திரு அதிகை வீரட்டத்தில் திருவடி தீட்சை பெற்றார்.. சீர்காழியில் தோணியப்பர் தரிசனம் கண்டு இன்புற்றார்...

இவருக்காக திருக்கச்சூர் தலத்தில்  இரந்திட்ட வரதன் என்றும் விருந்திட்ட வரதன் என்றும் லீலைகள் புரிந்தனன்..

வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிலை மா நிலந் தருகோம்
உய்யக் கொள்க மற் றெங்களை.. 
என்று, நாட்டில் பஞ்சம் வந்துற்ற போது மாமழை வேண்டி திருப்புன்கூரில் திருப்பதிகம் பாடிய அருளாளர்..

திருநாட்டியத்தான்குடியில்
உழவனும் உழத்தியும் என நாற்று நட்ட திருக்கோலத்தில் திருக்காட்சி நல்கிய ஈசனும் அம்பிகையும் அம்பர் மாகாளத்தில் சோமாசி மாறநார் யாகத்தில் புலைத் தம்பதியர் என எழுந்தருளினர்.. 

திருநாட்டியத்தான்குடியில் கோட்புலி நாயனாரின் மகள்களாகிய வனப்பகை, சிங்கடி இருவரையும் தமது பிள்ளைகளாக ஏற்று பதிகத்தில் வைத்துப் பாடிய பண்பாளர் சுந்தரர்..

திரு ஆரூரில் பிறந்திருந்த பரவை நாச்சியாரைக் காதலித்த வேளையில் இறையருளால்
திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கைப்பிடிக்கும்படி நேர்ந்தது.. அவ்வேளையில் திரு ஒற்றியூரில் இருந்து வேறெங்கும் செல்வதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்தார்.. அதையும் மீறும்படியான சூழல் உண்டாகியது.. அதன் விளைவாக சுந்தரரின் பார்வை பறி போனது.. (சொன்னதை மறக்கின்ற நாம் எல்லாம் எம்மாத்திரம்?..)

தட்டுத் தடுமாறி நடந்த சுந்தரருக்கு மின் ஒளியாய் அம்பிகை வழிகாட்டினாள்.. திருவெண்பாக்கத்தில் இறைவன் ஊன்றுகோல் அருளினன்..  அங்கிருந்து காஞ்சி மாநகரை அடைந்த சுந்தரர் காமாட்சி அன்னையின் அருளால் இடககண்ணில் பார்வை பெற்றார்.. அதன்பின் திரு ஆரூரை அடைந்தபின் அங்கே வலக்கண்ணிலும் பார்வை பெற்றார்.. 


இவருக்காக குண்டையூர்க் கிழார் வழங்கிய நெல் மூட்டைகள் நெல் மலைகளாகி விட சிவகணங்களைக் கொண்டு திரு ஆரூரில் வீடுகள் தோறும் நெல் மணிகளை நிறைத்தவர் சுந்தரர்.. 

திரு முதுகுன்றத்தில் ஈசனிடம்  பெற்ற பொற்காசுகளை அங்கே ஆற்றில் விடுத்து திரு ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் திரும்பப் பெற்ற புண்ணியர்..

 திருமுருகன் பூண்டியில் ஈச்ன் கொடுப்பது போல் கொடுத்து பூத கணங்களை வேடுவர் ஆக்கி வழிப்பறி செய்து கொள்ள சுந்தரருக்கு வந்ததே கோபம்...

எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே?.… என்று இறைவனிடமே நியாயம் கேட்டு வழக்காடியவர்...

பதினெட்டு வருடங்கள் வையகத்தில் வாழ்ந்ததும் திருக்கயிலைக்கு மீள வேண்டும் என எண்ணம் கொண்டார்..

அந்த அளவில் திருக்கயிலையில் இருந்து
அயிராவணம் எனும் யானை பூமிக்கு வந்தது..


அவ்வேளையில் சேரமான் பெருமாள் நாயனாரும் புறப்பட - இருவரும் திருக்கயிலைக்கு ஏகினர்.. 



அங்கு வானோரால் வரவேற்கப்பட்டார் சுந்தரர்.. 


சேரமான் பெருமாள் நாயனார் இறைவன் முன்பாக ஞான உலா எனும் நூலை அரங்கேற்ற  எழுத்தாணி கொண்ட சாஸ்தா அதனை
ஏடுகளில் எழுதினார்..


மீண்டும் சிவத்தொண்டு இயற்றி சுந்தரர் இன்புற்றார்..

சுந்தரர் அருளிச்செய்த திருப்பதிகங்கள் 3800.. இவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பவை நூறு மட்டுமே..

ஊனாய்உயிர் ஆனாய்உடல்    
  ஆனாய் உலகானாய்    
வானாய்நிலன் ஆனாய்கடல்    
  ஆனாய்மலை ஆனாய்    
தேனார்பெண்ணைத் தென்பால் 
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்    
ஆனாய்உனக் காளாயினி     
  அல்லேன்என லாமே..  7/1/7

மேலை விதியே வினையின் பயனே
  விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
  கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
  மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
  ஆலக் கோயில் அம்மானே..  7/41/5 

நீறணி மேனியன்
  நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு
  ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை
  அழல்வளர் மழலைவெள்
ளேறணி அடிகள்தம்
  இடம்வலம் புரமே..  7/72/3 
 நன்றி : பன்னிரு திருமுறை


நேற்று ஆடிச்சுவாதி..
சுந்தரர் குரு பூஜை.. 

சேரமான் பெருமாள் நாயனார் போற்றி
சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், செப்டம்பர் 26, 2023

சுந்தரத் தமிழ் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 9
செவ்வாய்க்கிழமை

வானியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

இயற்பியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

உடலியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

உயிரியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

அவர்கள் வராதிருந்தால்?..

கூமுட்டைகளாக இருந்திருப்போம்!..

இப்படிச் சொல்கின்ற கூமுட்டைகளுக்குத் தெரியாது -

அவர்கள் எல்லாம் அங்கம் கழுவும் விதம் அறிவதற்கு முன்பே நம்மவர்கள் அண்டப் பிரபஞ்சத்தை அலசி ஆராய்ந்து வைத்திருந்ததை!..

இங்கே -
வழிப்போக்காகத் திரிந்திருந்த இறையடியார்கள் கூட எல்லா இயல்களிலும் வல்லவராகத் திகழ்ந்தனர் என்பது!..

 நன்றி விக்கி
தவளை, தேரை ஆகியன நீரிலும் நிலத்திலும் வாழ்வதால் இருவாழ்விகள் (Amphibian) என்று பெயர் பெறுகின்றன.. அவற்றின் உடலுக்குள் நுரையீரல் உருவாகும் வரை மீன்களைப் போல  செவுள்களால் சுவாசிப்பவை.. 
நீரில் நீந்துவதற்கு ஏதுவாக வாலினை உடையவை.. 

நுரையீரல் உருவானதும் செவுள்கள் மூடிக் கொள்ள வால் கழன்று விடும்.. இதன் பின் தவளை/தேரை நிலத்திலும்  வாழ்வதற்குத் தகுதி உடையதாகி விடும் - 

என்பது பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்தவை..

அவர்கள் வந்து சொல்லிக் கொடுத்ததான - 
இந்த வால் கழன்று விழும் விஷயம் - 

தேவாரத்தில் வாழ்வின் தத்துவ மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றது எனபது சிறப்பு..

இப்படி, இயற்கையை
இயற்கையாகக் கற்று நமக்கும் அறிவுறுத்துபவர் 
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்..

வாருங்கள் - சுந்தரத் தமிழைச் சுவைப்போம்..
**
-: திருப்பதிகத் திருப்பாடல் :- 
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
 நன்றி விக்கி
அவன் அரசன். பேரரசன்..

எதிர்ப்போர் எவரும் இன்றி இளஞ்சிங்கமாக ஆட்சிக் கட்டிலில் இருப்பவன்..

துணிவுடைய வீரர்களையும் துடிப்பான குதிரைகளையும்  மதங்கொண்ட யானைகளையும் உடைய பெரும் படையைக் கொண்டவன்..

நிகரற்ற வலிமையுடன் அவன் வென்றெடுத்த நாடுகள் பலப்பல.. அவனது கொடி பறக்காத திசைகள் இல்லை.. 

தொலை தூர தேசங்கள் எல்லாம் இந்த அரசனைக் கண்டு வியப்பும் அச்சமும்  கொண்டு கை கூப்பி வணங்குகின்றன..

இப்படியான பெரும் புகழ் கொண்டு கடல் சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆட்சி செய்தாலும் - இது நிலையற்றது.. 

மட நெஞ்சே!..

தேரையோடு வளர்ந்தாலும்  ஒருநாள் உதிர்ந்து விடும் வாலைப் போல - 

இந்தப் புகழ் எல்லாம் கடைநாளில் கழன்று விழுந்து விடும் - என்பதை நீ அறிவாயாக!..

ஆதலால், புறத்தே விளங்கும் புகழைப் பற்றிக் கவலை கொள்ளாதே!..

இந்த அரசனை விடவும் வணங்கத் தக்கவன் ஒருவன் உளன்..

அவன் -

நீர் பாயும் மடைகளில்  செங்கழுநீர்ப் பூக்கள் மலர்தலாலும்  ஆலைகளில் கரும்பை இட்டுப் பிழிதலாலும் சோலை மலர்கள் தேன் மணம் கமழ்வதாலும் பெருஞ்சிறப்பினை உடைய திருப்புறம்பயத்தில் வீற்றிருக்கும் சிவலோ கன்.. அந்த இறைவனே நாம் வணங்கத் தக்கவன். 

ஆதலின்,
எம்பெருமானை வணங்கச் செல்வோம்.. புறப்படுவாயாக!..
***
திருத்தலம்
திருப்புறம்பயம்


இறைவன்
ஸ்ரீ சாட்சி நாதர்


அம்பிகை
ஸ்ரீ கரும்பன்ன மொழியாள்

தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம் 
ஸப்த சாகர தீர்த்தம் 

தல விருட்சம்
புன்னை

ஸ்ரீ சாட்சி நாதர்

படையெலாம் பகடார ஆளிலும்
பௌவஞ் சூழ்ந்து அரசாளிலும்
கடையெலாம் பிணைத் தேரை 
வால்கவலாது எழு மடநெஞ்சமே
மடையெலாம் கழுநீர் மலர்ந்து
மருங்கெலாம் கரும்பு ஆடத் தேன்
புடையெலா மணம் நாறு சோலைப்
புறம்பயந்தொழப் போதுமே.. 7/35/6
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-


ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஜூலை 26, 2023

ஆடிச் சுவாதி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 10
புதன் கிழமை


திருக்கயிலாய மாமலையின் பனித் திரளில் இருந்து சிவபெருமானது பார்வையினால் தோன்றியவர் சுந்தரர்..

ஈசனுக்கு அருகில் திருநீற்று மடல் தாங்கியிருந்தவர் சுந்தரர்..


தேவியின் பணிப் பெண்களாகிய கமலினி அநிந்திதா எனும் தேவ மங்கையர் கயிலாயத்தின் நந்தவனத்தில் மலர் கொய்தபோது
கண் இமைப்பொழுது அவர்களைக் கண்டு நோக்கியதால  புவியில் பிறக்கும்படி நேரிட்டது..

இறைவன் அருளாணையின்படி
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திரு ஆரூரில் பரவை நாச்சியாரை மணம் கொண்டு,


நாச்சியாரின் திரு மாளிகையிலேயே எழுந்தருளி
திரு ஆரூரில்  உறைந்தருளும் தியாகேசப் பெருமானை முப்போதும் போற்றித் துதித்து வருகின்றார்..

அந்த வேளையில்
திருநாட்டியத்தான்குடி தலத்தில் வாழ்ந்து வந்த  கோட்புலியார் - இவர் முன்பொரு சமயத்தில் போர்த் தொழில் உடையவர் - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் அருட்திறத்தைக் கேள்வியுற்று -

திரு ஆரூருக்கு வந்து ஸ்வாமிகளை வணங்கித் தொழுது தம்முடைய ஊராகிய திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளுமாறு பணிவுடன் 
அழைக்கின்றார்.  

சுந்தரரும் இசைவு கொள்ள கோட்புலியார் மகிழ்வுடன் தமது இல்லத்திற்கு விடைபெற்றுச் செல்கின்றார். 

சில தினங்களில் வன்தொண்டர் ஆரூரிலிருந்து புறப்பட்டுத் திரு நாட்டியத்தான்குடி தலத்தினை அடைகின்றார். 

எம்பெருமான் - இத்தலத்தில்
ரத்னபுரீஸ்வரர், மாணிக்கவண்ணர் - எனும் திரு நாமங்கள் கொண்டு அன்னை ஸ்ரீ மங்களாம்பிகையுடன் அருள் பாலிக்கின்றார்..

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் வருகையை ஊர் மக்களுக்கு அறிவித்த கோட்புலியார்  தமது இல்லத்தையும் வீதியினையும் நல்ல முறையில் அலங்கரிக்கின்றார்..

ஊரின் எல்லையில் தம்பிரான் தோழரைக் கண்டு மனமகிழ்ந்து மேள தாள சிவ கோஷங்களுடன் வரவேற்று தம் மனைக்கு அழைத்துச் செல்கின்றார்.. 

ஸ்வாமிகளை தங்கப் பலகையில் எழுந்தருளச் செய்து,  திருப்பாதங்களைக் கழுவி பாத பூஜை செய்து சிவானந்தம் கொள்கின்றார். 

ஸ்வாமிகளுக்குத் திருவமுது செய்விக்கின்றார். 
தம்முடைய புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் அழைத்து சுந்தரரைப் பணியச் செய்கின்றார்.. 

அத்துடன்,
" அடியவனின் புதல்வியராகிய இவர்களைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு அருள வேண்டும்.. "- என்று விண்ணப்பமும் செய்து கொள்கின்றார்.      

அது கேட்ட சுந்தரர், பெருங் கருணையுடன் அம்மங்கையர் இருவரையும் தம்முடைய புதல்விகளாக அறிவித்து -  ஏற்றுக் கொண்டு இரும்பூது எய்துகின்றார்.. 

சிங்கடி, வனப்பகை இருவரையும் - தம் மடிமேல் இருத்தி ஆசி கூறி அருள்கின்றார்..

பின்னர் அனைவருடனும்  திருக்கோயிலுக்குச் சென்று, ஈசன் எம்பெருமானைக் கண்ணார தரிசித்து  திருப்பதிகம் பாடித் துதித்தார்..

திருப்பதிகத்தின் 
நிறைவில் கோட்புலி நாயனாரைச் சிறப்பித்துப் பாடி - தம்மைச் சிங்கடியப்பன் என்று குறித்து மகிழ்கின்றார் சுந்தரர்..

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற 
கொடிறன் கோட்புலி சென்னி 
நாடார் தொல்புகழ் நாட்டியத்தான்குடி 
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடியப்பன் 
திரு ஆரூரன் உரைத்த
பாடீராகிலும் பாடுமின் தொண்டீர் 
பாடநும் பாவம் பற்றறுமே.. (7/15/10)


அதன்பின் -
மேலை வினையின் பயனாக திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டு அன்பு கொண்டு -  உனை விட்டு நீங்க மாட்டேன்.. - என, சூளுரை செய்து கொடுத்து அவருடன் வாழ்ந்தார்.. 

சில மாதங்களில் ஆரூர் காண்பதற்கு ஆவல் மீதூற - தாம் செய்து கொடுத்த சூளுரையை மீறி ஒற்றியூரின் எல்லையைக் கடந்தபோது இரு கண்களிலும் பார்வையைப் பறி கொடுத்தார்.. 

காஞ்சியில் காமாட்சி அன்னையின் திருவருளால் வலக் கண்ணைப் பெற்ற சுந்தரர் ஆரூரில் இடக் கண்ணையும் பெறுகின்றார்..

சுந்தரரின் செயலால் மனம் வருந்தியிருந்த பரவை நாச்சியாரின் மனைக்கு தூது சென்றனன் பரமன்..

அச்சமயம் 
ஆரூர் பூங்கோயிலில் திருத்தொண்டர் தொகையைப் பாடுகின்றார்..


குண்டையூர் கிழார் அளித்த நெல் மூட்டைகள் ஈசன் அருளால் நெல் மலைகள் ஆகின்றன..  

அந்த நெல் மலையை சிவ பூத கணங்களைக் கொண்டு ஆரூரின் மனைதோறும் நிறைத்தவர் சுந்தரர்..


அவிநாசி தலத்தில் முதலை விழுங்கிய பாலகனை மீட்டு அளித்தவர்..

மலைநாட்டின் திரு அஞ்சைக் களத்தில் சுந்தரர் இருந்த போது காலம் கனிந்தது..
 
ஐராவணம் எனும் வெள்ளை யானையை  எம்பெருமான் கருணையுடன் அனுப்பி வைத்தார்..


நிறை தேகத்துடன்  வெள்ளை யானையில் ஆரோகணித்து
தனது தோழராகிய சேரமான் பெருமாளுடன் திருக்கயிலாய மாமலைக்கு ஏகினார் சுந்தரர்..

திருக்கயிலாயத்தின் தோர்ண வாயிலில், 
" உமக்கு இப்போது அழைப்பில்லையே!.. " - என, பூத கணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் சேரமான் பெருமாள்..

சுந்தரர் அம்மையப்பனைத் தரிசித்து தமது தோழராகிய சேரமான் பெருமாளுக்கும் திருக்காட்சி நல்குமாறு விண்ணப்பித்துக் கொண்டார்.. 

சுந்தரர் தம் பிரார்த்தனையின் பேரில் அம்மையப்பனைத் தரிசித்த சேரமான் பெருமாள் திருக் கயிலாய ஞான உலா பாடித் துதித்தார்..


சுந்தரரின் திருக் கயிலாயத் திருப்பதிகத்தினை வருணனும் சேரமான் பெருமாள் பாடிய திருக்கயிலாய ஞான உலாவினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவும் பூவுலகிற்கு கொண்டு வந்து சேர்த்ததாக சிவ மரபு..

இப்பூமியில் பதினெட்டு ஆண்டுகளே வாழ்ந்து ஈசன் தமக்களித்த செல்வங்களைப் பிறர்க்கே அளித்து -  செயற்கரிய செயல்கள் பல செய்தவர் சுந்தரர்..

சுந்தரர் பாடியருளிய திருப்பதிகங்கள் மூவாயிரத்து எண்ணூறு.. நமக்கு  கிடைக்கப் பெற்றவை நூறு திருப்பதிகங்கள் மட்டுமே.. 

அவற்றுள் ஏழு திருப்பதிகங்களில் தம்மைச் சிங்கடியப்பன் என்றும், ஒன்பது திருப்பதிகங்களில்  வனப்பகையப்பன் என்றும் குறித்து மகிழ்கின்றார்.. 


சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் 
திருக்கயிலாயத்திற்கு ஏகிய 
ஆடிச் சுவாதி இன்று..
**

சேரமான் பெருமாள் நாயனார் போற்றி..
சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

சனி, பிப்ரவரி 04, 2023

சுந்தரத் தமிழ் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 21
 சனிக்கிழமை

நன்றி:-
பதிகப் பாடல்கள்: 
பன்னிரு திருமுறை
படங்கள்: இணையம்..
**
காஞ்சியில் இருந்து திரு ஆரூருக்குப் புறப்பட்ட சுந்தரர்,


முன்னெறி வானவர் கூடித் தொழுதேத்து முழுமுதலை
அந்நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர் குலக்கொழுந்தை மறந்திங்ஙனம் நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.. (7/51)

- என்ற உணர்வுடன் சென்றார். 

வழியில் திரு ஆமாத்தூர், திருநெல்வாயில் அரத்துறை ஆகிய தலங்களைத்  தரிசித்து சோழ நாட்டை அடைந்தார்..

திருவாவடுதுறையை வணங்கி வழிபட்டுத் திருத்துருத்தியைச் (குத்தாலம்) சேர்ந்தார்..

அங்கே வட குளத்தில் மூழ்கிக் குளிக்க அவரைப் பற்றியிருந்த தோல் நோய் விலகிற்று.. 

உத்தால வேதீஸ்வரரையும் பரிமள சுகந்த நாயகியையும் தரிசித்த பின் - 

அங்கிருந்து திரு ஆரூரை அடைந்தார்..

ஆரூர் பூங்கோயிலினுள் சென்று வழிபட்டார்..

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திரு ஆரூரீர்
வாழ்ந்து போதீரே.. (7/95)

எனக்கு இத்தனை இன்னல்களைக் கொடுப்பது தான் நீதி எனில், நீரே வாழ்ந்து கொள்ளும்!.. 

- என்று, மனம் குழைந்து பாடினார்..

இது கேட்ட - இறைவன் இரக்கங்கொண்டு
போதும் விளையாட்டு எனவலக் கண்ணிலும் பார்வையைத் தந்தருளினன்..


இரு விழிகளிலும் பார்வை மீளப் பெற்ற சுந்தரர் - புற்றிடங் கொண்டாரையும் அல்லியங்கோதை அன்னையையும் கண்ணாரக் கண்டு வணங்கி இன்புற்றார்..

ஸ்ரீ சுந்தரர் - பரவை நாச்சியார்

இதற்கிடையே - 
திருஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டதால் வருத்தமுற்றிருந்த பரவை நாச்சியாரின் ஊடலையும் தியாகேசப் பெருமான் தீர்த்து வைத்தருளினார்..


பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து அணி
ஆரூரானை மறக்கலுமாமே..

என்று, சுந்தரரும் -  தியாகேசப் பெருமானை வணங்கி இன்புற்றிருந்தார்..


ஸ்ரீ சுந்தரர்

திருக்கயிலாயத்தின் வெண்பனிப் பளிங்கில் இருந்து - எம்பெருமானின் சாயலாகத் தோன்றியவர்.. 

ஈசனின் அணுக்கத் தொண்டராக திரு நீற்று மடல் தாங்கி திருப்பணி புரிந்தவர்..

ஈசனால், சுந்தரா.. என விளிக்கப்பட்டவர்.. 


நந்தவனத்தில் மலர் கொய்த வேளையில் அம்பிகையின் பணிப் பெண்களாகிய அநிந்திதை கமலினி என்ற நங்கையர் இருவரை மின்னல் பொழுது நோக்கிய காரணத்தால் அவர்களுடன் வாழ்தற்பொருட்டு பூமியில் தோன்றினார். 
 
தமிழகத்தில் திருமுனைப்பாடி நாட்டின் தலை நகராகிய திருநாவலூரில்  ஆதிசைவ வேதியர் மரபில் சடையனார்  இசைஞானியார் தம்பதியருக்கு மகவாகப் பிறந்தார்..


குழந்தைக்கு நம்பி ஆரூரர் எனப் பெயரிட்டு வளர்த்து வருங்கால், திருமுனைப்பாடி நாட்டின் அரசராகிய  நரசிங்க முனையரையர்  குழந்தையின்  அழகினைக் கண்டு மகிழ்ந்து பெற்றோரிடம் சென்று  கேட்டுப் பெற்றுத் தமது வாரிசாக  வளர்த்து வந்தார்.. 


பதின்ம வயதில் திருமணம் கூடி வந்த வேளையில் - ஈசனால்  தடுத்தாட் கொள்ளப்பட்டார்..
அது முதல் அரச உரிமையைத் துறந்து சிவாலயங்கள் தோறும் வணங்கி வழிபட்டவர் ஆரூரர்.. 

ஈசனிடம் கொண்ட அன்பினால் தம்பிரான் தோழர், வன்தொண்டர் என்பன சிறப்புப் பெயர்கள்.. 

மக்களைக் காப்பதற்கு அறியீரானால் எதற்காக இருந்தீர் எம்பெருமானீர்?.. என, வினவும் அளவுக்குத் திறம் படைத்தவர்..

ஈசன் தமக்களித்த பெருஞ் செல்வத்தை எல்லாம் ஊர் மக்களுக்குப் பகிர்ந்தளித்தவர்.. 

கோட்புலி நாயனாரின் மகள்களான வனப்பகை, சிங்கடி - எனும் இருவரையும் தன் மகள்களாக ஏற்றுக் கொண்டு பதிகங்களில் பாடி மகிழ்ந்தவர்.. 

சோமாசி மாற நாயனார்க்கு சிவதரிசனம் செய்து வைத்தவர்..


அவிநாசியில் முதலை தின்று தீர்த்த  சிறுவனை அதன் வாயில் இருந்து மீட்டுக் கொடுத்தவர்..

ஆரூரில் பரவை நாச்சியாரையும் திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரையும் இறையருளால் மணந்து கொண்டவர்.. 

இப்படி இருந்தும் சங்கிலி நாச்சியாருக்கு செய்தளித்த சாத்தியத்தை மீறியதால் இரு விழிகளிலும் பார்வையை இழந்து எண்ணற்ற துன்பங்களை அடைந்தவர்..

பார்வை இழந்த நிலையிலும் மன உறுதியுடன் தலங்கள் பலவற்றைத் தரிசித்தவர்..

வையகத்து மாந்தராகிய நம்மில் யாரும் 
நம்பி ஆரூரர்க்கு  அணுவளவும் ஈடாக மாட்டோம்.. 

இருப்பினும் துயருற்ற வேளையில் ஸ்ரீ நம்பி ஆரூரர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் நம் பொருட்டு நின்று உலவுகின்றன..

அத்திருப்பதிகங்களின் துணை கொண்டு நாம்  பிறர்க்காகவும் நமக்காகவும் - ஈசன் எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்..


கட்டமும் பிணியும் களைவானைக்
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கை வெந்நோய் களைவானை
விரவினால் விடுதற் கரியானைப்
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை
வாராமே தவிரப் பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூரானை மறக்கலுமாமே.. (7/59)

ஆரூரா தியாகேசா.. 
தியாகேசா ஆரூரா..


சுந்தரர் திருவடிகள் 
போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வியாழன், பிப்ரவரி 02, 2023

சுந்தரத் தமிழ் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 19
வியாழக்கிழமை

நன்றி:-
திருப்பதிகம்: 
பன்னிரு திருமுறை
படங்கள்: இணையம்..
**

திரு ஊறல் தலத்தில் இருந்து புறப்பட்ட சுந்தரர் - கச்சி என்று புகழப்பட்டிருந்த காஞ்சி மாநகரத்தை அடைந்தார்..

காஞ்சியின் பெருமைகள் சொல்லவும் அரிதானவை..

எம்பெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு அன்னை முப்பத்திரண்டு அறங்களையும் நடத்தி அருளிய தலம்..

செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேல் தளிய னாரே.. (4/43)

கரையிலாத கல்வியை காஞ்சி மாநகர் தன்னில் ஈசன் வைத்தருளினார்!.. - என்று அப்பர் ஸ்வாமிகள் புகழ்ந்த திருத்தலம்..


ஒரு சமயம் உமையாம்பிகை கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட்டனள்.

அப்போது இறைவன் கம்பை ஆற்றில் பெருவெள்ளம் வருமாறு செய்தார்.. 

அவ்வேளையில் உமாதேவி சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டு அதைக் காத்திட - ஈசன் வெளிப்பட்டு அருள் புரிந்தனன் என்பது தலவரலாறு. 

அம்பிகை மணல் லிங்கத்தைத் தழுவிக் கொண்ட போது அதன் மேல் அம்பிகையின் கை வளைத் தழும்பும் திரு முலைத் தழும்பும் பதிந்தன..  

இதனால் தழுவக் குழைந்த பிரான் என்றும் பெருமானுக்குப் பெயர்.


இப்படியான புகழுடைய தனது திரு வாசலுக்கு
மிகுந்த சிரமத்துடன்  வந்து நின்ற சுந்தரரைக் கண்டு காமாட்சி அன்னையின் மனம் பதைபதைத்தது..

" ஏதோ உலக நடப்பில் நாட்டம் வைத்த குழந்தை சத்தியத்தை மீறி விட்டான்.. தவறு தான்.. அதுக்காக இப்படியா குழந்தையை போட்டுப் படுத்துறது?.. "
- என்று, மனம் இளகியது..

சிவமே!.. என்றிருந்தது ஏகாம்பரேச சிவம்..

வேகவதியில் வெள்ளம் வந்தாற்போல - சுந்தரரிடம் இருந்து செந்தமிழ்ப் பதிகம் பொங்கியது..


அதற்கு மேலும் மனம் பொறுக்காத காமாட்சி தன் பங்கிற்கு இடக் கண்ணில் பார்வையைத் தந்தருளினாள்..
 
ஏகாம்பரநாதன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்..

இந்த அளவில் -
இடக்கண் பெற்ற சுந்தரர், அம்மையப்பனை வலம் செய்து வணங்கி விட்டு காஞ்சியில் இருந்து திரு ஆரூருக்குப் புறப்பட்டார்..
***
திருப்பதிகம்
திருக்கச்சி ஏகம்பம்

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 61


இறைவன்
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ ஏலவார்குழலி

தலவிருட்சம்
மா
தீர்த்தம்
கம்பா தீர்த்தம்

ஆலந் தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந் தான் பெரிதும் உடை யானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையு ளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 1

உற்றவர்க்கு உதவும் பெரு மானை
ஊர்வதொன்று உடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க் கென்றும் பற்றவன் தன்னைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 2

திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காமனைக் கனலா விழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 3

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டையந் தடங்கண் உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 4

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலைநஞ் சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அருமறை அவை அங்கம்வல் லானை
எல்லையில் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள்பி ரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 5

திங்கள் தங்கிய சடையுடை யானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 6

விண்ணவர் தொழுது ஏத்த நின் றானை
வேதந்தான் விரித்து ஓதவல் லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புக ழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 7

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் தன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
பாலொடு ஆனஞ்சும் ஆட்டுகந் தானை
அந்தமில் புகழாள்உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 8

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
வாலி யபுர மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் தன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புகழாள் உமை நங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 9


எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவிஓடித் தழுவ வெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 10

பெற்றம் ஏறுகந்து  ஏறவல் லானைப்
பெரிய எம்பெரு மான்என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர்பொழில் திருநாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெறி உலகு எய்துவர் தாமே.. 11

திருச்சிற்றம்பலம்


சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், பிப்ரவரி 01, 2023

சுந்தரத் தமிழ் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 18
புதன் கிழமை

-:நன்றி:-
தலவரலாறு/திருப்பதிகம்: 
பன்னிரு திருமுறை
படங்கள்: விக்கி..


திருவிளம்பூதூர் என்று வழங்கப்பட்ட தேவாரத் திருத்தலமாகிய திருவெண்பாக்கம்,
தற்போது - பூண்டி நீர்த் தேக்கத்தினுள் மூழ்கிக் கிடக்கின்றது..

பூண்டி நீர்த்தேக்கம்
சென்னைக்குக் குடிநீர் கொண்டு வருவதன் பொருட்டு  பூண்டியில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டபோது
திருவெண்பாக்கம் நீர்த்தேக்கத்தினுள் அடங்கிற்று..

அப்போதைய 
அறநிலையத்துறை அமைச்சர் திரு எம். பக்தவத்சலம் அவர்கள், மற்றும் அறநிலையத்துறை ஆணையர் திரு. உத்தண்டராமப் பிள்ளை  ஆகியோரின் பெருமுயற்சியால் திருவெண்பாக்கம் கோயில் மட்டும் அடியோடு பெயர்த்து எடுக்கப்பட்டு பூண்டி கிராமத்தில்  கட்டப்பட்டுள்ளது..


பூண்டியில் (தற்போது உள்ள இடத்தில்) -  புதியதாகக் கட்டப்பட்ட கோயில் 1968 ஜூலை ஐந்தாம் தேதி அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

(நன்றி - காமகோடி.Org)
***
திருமுல்லைவாயிலில் இருந்து புறப்பட்ட சுந்தரர் - தொடர்ந்து நடந்து திருவெண்பாக்கம் என்ற தலத்தினை அடைந்தார்..

தொண்டர்கள் எதிர்கொண்டு  - வணங்கி வரவேற்றனர்.. சுந்தரரும் திருவெண்பாக்கத்து இறைவனை வணங்கி, தேவரீர்..  இத்திருக் கோயிலில்  உள்ளீரோ?. - என்று  வினவினார்.. 

பெருமானும் - உளோம் போகீர்!.. - என்றபடி ஊன்றுகோல் ஒன்றை அருளினார்.. 

வன்தொண்டராகிய சுந்தரர்க்குக் கோபம் வந்து விட்டது..

கண் பார்வையைத் தர வேண்டிய இறைவன், தனக்குக் கண்களைத் தராமல் ஊன்று கோலைத் தந்தனனே!.. - என்று  ஊன்று கோலை வீசியெறிய அக்கோல் பட்டு நந்தியின் வலக் கொம்பு ஒடிந்து போனது..

பின்னர் சுந்தரர், மனம் வருந்தி -
பிழையுளன பொறுத்திடுவர்..  - என்று பதிகம் பாடித் துதித்தார்..


இதனை நினைவு கூறும்படிக்கு
நந்தியம்பெருமானின் அருகில் கையில் ஊன்றுகோலுடன் கூடிய சுந்தரர் திரு மேனி வடிவமைக்கப் பட்டுள்ளது.

உளோம் போகீர் எனும் இறைவனின் வாக்கு - உளம் பூதூர் என்று மருவி திருவிளம்பூதூர், என வழங்கியது.


இறைவன்
ஸ்ரீ ஊன்றீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ மின்னலொளியாள்

தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் அக்னி தீர்த்தம் 

கண்ணில் பார்வை இழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்திற்கு வந்து சேரும் வரை திருமுல்லை வாயில்  கொடியிடை நாயகி மின்னல் ஒளியாக வழி காட்டி அருளினாள் என்பர் ஆன்றோர்..

திருமுல்லைவாயிலில் இருந்து - கொடியிடை நாயகியாள்  - சுந்தரரைப் பின் தொடர்ந்து வந்தது இதற்காகத்தான்!..

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் இங்கிருந்து காஞ்சீபுரம் சென்று சேரும் வரையில் அவருக்கு முன்பாக  மீண்டும் மின்னல் போலத் தோன்றி அம்பிகை வழி காட்டியதால்  இத்தலத்தில் அம்பிகைக்கு மின்னலொளியாள் - எனப் பெயர் அமைந்தது.. 

பின்,
இங்கிருந்து புறப்பட்ட சுந்தரர் காரைக்காலம்மையார் வழிபட்ட  திருவாலங்காட்டில் இறைவனைப் பணிந்து திருப்பதிகம் பாடித் துதித்தார்..

பின் அங்கிருந்து
திருவூறல் தலத்தை அடைந்து வழிபட்ட பின்னர்,

கச்சி என்று வழங்கப்பட்ட காஞ்சி மாநகரை நோக்கிப் புறப்பட்டார்..
***
திருப்பதிகம்
திருவெண்பாக்கம்


ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 89

பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே
படலம்என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா
கோயிலுளாயே என்ன
உழையுடையான் உள்ளிருந்து
உளோம்போகீர் என்றானே.. 1

இடையறியேன் தலையறியேன்
எம்பெருமான் சரணம்என் பேன்
நடையுடையன் நம்மடியான்
என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன்
வெண்ணீற்றன் புலியின்தோல்
உடையுடையான் எனையுடை யான்
உளோம்போகீர் என்றானே..  2

செய்வினையொன் றறியாதேன்
திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தாயோ 
என்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான்
உளோம்போகீர் என்றானே.. 3


கம்பமருங் கரியுரியன்
கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன்
சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே இருந்தாயே
என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணை எனக்கு
உளோம்போகீர் என்றானே.. 4

பொன்னிலங்கு நறுங்கொன்றை
புரிசடை மேற்பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள்
பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார்
தொழுதேத்த அடியேனும்
உன்னமதாய்க் கேட்டலுமே
உளோம்போகீர் என்றானே.. 5

கண்ணுதலால் காமனையுங்
காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல்
தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய்
இங்கிருந்தாயோ என்ன
ஒண்ணுதலி பெருமான்தான்
உளோம்போகீர் என்றானே.. 6

பார்நிலவு மறையோரும்
பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச்
சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர்
ஈங்கிருந்தீரே என்ன
ஊரரவம் அரைக்கசைத்தான்
உளோம்போகீர் என்றானே.. 7

வாரிடங்கொள் வனமுலையாள்
தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப்
பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன்
கருதுமிடந் திருவொற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான்
உளோம்போகீர் என்றானே.. 8

பொன்னவிலுங் கொன்றையினாய்
போய்மகிழ்க் கீழிருவென்று
சொன்னஎனைக் காணாமே
சூளுறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே
இங்கிருந்தாயோ என்ன
ஒன்னலரைக் கண்டாற்போல்
உளோம்போகீர் என்றானே.. 9

மான்றிகழுஞ் சங்கிலியைத்
தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தாய்
என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில்
இங்கிருந்தாயோ என்ன
ஊன்றுவதோர் கோலருளி
உளோம்போகீர் என்றானே.. 10


ஏராரும் பொழில்நிலவு
வெண்பாக்கம் இடங்கொண்ட
காராரும் மிடற்றானைக்
காதலித்திட் டன்பினொடும்
சீராருந் திருஆரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க்கு
அடையா வல்வினை தானே.. 11

திருச்சிற்றம்பலம்

சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***