நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மார்கழிக் கோலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்கழிக் கோலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 14, 2015

மார்கழிக் கோலம் 30

குறளமுதம்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணிய
திண்ணியராகப் பெறின். (666)  

எண்ணியதைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பவர்
எண்ணியதை எண்ணியவாறே 
வெற்றியுடன் அடைவர். 
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 30


வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்!..


திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே 
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே 
ஒருநூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள் வாழியே
உயர்ரங்கற்கே கண்ணி உகந்தருளி தாள் வாழியே 
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீஆண்டாள் அருகிருந்து 
 மார்கழிக் கோலம் எனும் பதிவுகளை 
அவளே மங்கலகரமாக நிறைவு செய்தாள்..

ஆண்டாள் திருவடிகள் சரணம்!..

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
தஞ்சை யாளி நகர்

தஞ்சை யாளி நகர்
மூலவர் - வீரநரசிம்ஹ பெருமாள்
உற்சவர் - லக்ஷ்மி நாராயணன்
தாயார் -  தஞ்சை நாயகி
விமானம் - வேதசுந்தர விமானம்

ப்ரத்யட்சம்
பராசரர், மார்க்கண்டேயர்

தஞ்சை மாமணிக்கோயில்
மூலவர் - நீலமேகப்பெருமாள்
தாயார் - செங்கமலவல்லி 
விமானம் - செளந்தர்ய விமானம்

தஞ்சை மணிக்குன்றம்
மூலவர் - மணிக்குன்றப்பெருமாள்
தாயார் - அம்புஜவல்லி 
விமானம் - மணிக்கூட விமானம்

மூன்று திருக்கோயில்களிலும் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். 

தலவிருட்சம் - மகிழமரம். தீர்த்தம்  - வெண்ணாறு. ப்ரத்யேகமாக அம்ருத தீர்த்தம், கன்னிகா புஷ்கரிணி, சூர்ய புஷ்கரிணி, ஸ்ரீ ராமதீர்த்தம் ஆகியனவும் விளங்குகின்றன.

திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகிய புண்ணியர் தம் திருவாக்கினால் மூன்று திருமேனிகளுடன் கூடிய சாந்நித்யங்களை ஏக திவ்ய தேசமாக மங்களாசாசனம் செய்விக்கப்பட்டதிருத்தலம்.

பிரம்மாண்ட புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சோழ மண்டல சதகம், பிரகதீசுவர மகாத்மியம் முதலிய நூல்கள் இத்தலத்தின் மகத்துவத்தைப் பற்றி சிறப்பித்துப் புகழ்கின்றன.

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் பெரும்பதி - தஞ்சையம்பதி. 

வானளாவ உயர்ந்த - அடர்ந்த சோலைகள் சூழ்ந்த விசாலமாக விளங்கிய தஞ்சபுரி. இதன் பேரழகும்  வளமும் பராசர மகரிஷியை மிகவும் கவர்ந்தது. தம் சீடர்களுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து  தவம் மேற்கொண்டார். 

இந்நிலையில் வடக்கே தண்டகாரண்யத்திலிருந்து வளமையான தென்திசை நோக்கி வந்த - தஞ்சன், தாரகன், தண்டகன் ஆகியோர் வானளாவிய மரங்களும் சோலைகளும் நிறைந்து விளங்கிய இந்த பகுதியில்  குடியேறினர்.  

அரக்க குணங்களுக்கு ஆட்பட்ட அவர்களால் - முனிவர்களுக்கு தீராத இடையூறு ஏற்பட்டது.

பராசர மகரிஷி இதனை முறையிட்டு  ஸ்ரீமந் நாராயணனைக் குறித்துத் தவம் செய்தார். 

மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமாள், முதலில் நீலமேகமாகத் தோன்றி அமிர்த புஷ்கரணி நீரைப் பருகி - ஸ்ரீநீலமேகப் பெருமாளாய் அவதாரம் செய்தார்.


தண்டகன் -  பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். பெருமாள் ஸ்ரீவராஹ மூர்த்தி எனத் தோன்றி  பூமிக்குள் சென்று அவனை அழித்தார்.

பெருமாள் வராஹ மூர்த்தியாக எழுந்ததால் -
இந்த தலத்துக்கு வராஹ க்ஷேத்ரம் எனும் பெயரும் உண்டு.

தாரகனை - பெருமானுடன் தோன்றிய ஸ்ரீகாளி வதைத்தருளினாள்.

தஞ்சகன் கோரமான யானை வடிவத்துடன் எதிர்க்க - மகாவிஷ்ணு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி என எதிர்நின்றார். 

புகழ் தஞ்சை யாளியைப் பொன் பெயரோன் தன் நெஞ்சம் அன்றிடந்தவனை -  
- என திருமங்கை ஆழ்வார் புகழ்ந்துரைப்பது - இந்தத் திருக்கோலத்தையே!.

பெருமானின் திருக்கரங்களுக்குள் சிக்கினான் தஞ்சகன்.  ஸ்பரிச தீட்சை ஆனதால் - அந்த அளவில் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் நீங்கப் பெற்ற அவன் பெருமானைப் பணிந்து -

என் பொருட்டு நரசிம்மமூர்த்தியாக வந்த தாங்கள் இங்கேயே தங்கி சகல மக்களுக்கும் அருள வேண்டும். எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்!.. - என வரங்கேட்டான். 

பெருமாளும் அவ்வாறே  அருள் புரிந்தார்.

தஞ்சை யாளி நகர் ஸ்ரீ வீரநரசிம்மர்
அரக்கர்களை அழித்து  அனைவரையும் காப்பாற்றினார். அதன்பின்,  ஸ்ரீபராசர மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன், இத்தலத்திலேயே திருக்கோயில் கொண்டார். 

அசுரர்களை அழித்து கருட வாகனத்தில் தேவியுடன் பெருமாள் காட்சி கொடுத்த நாள் -  வைகாசி  திருஓணம். 


வருடந்தோறும் வைகாசித் திங்கள் திருஓண நட்சத்திரத்தன்று  கருடசேவை மகோத்சவம், ஸ்ரீ நீலமேகப்பெருமான் அருளால் சிறப்புற நடைபெறுகின்றது.

கருட மகோத்சவத்தில் முதல் நாள் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி திவ்ய தேசப் பெருமாள்களை மங்களாசாசனம் செய்விப்பார். 

அன்றிரவு திவ்ய தரிசனம். மறுநாள் காலையில் கருட சேவை. 


நகரிலுள்ள ஏனைய சந்நிதிகளிலிருந்தும், பெருமாள் கருட வாகனத்தில் ஆரோகணித்து உடன் வர - தஞ்சாவூர் கோட்டை நான்கு ராஜ வீதிகளிலும் கண்கொள்ளாக் காட்சியாக கருட சேவை நிகழும். 

மூன்றாம் நாள் நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி. 

நிறைவாக விடையாற்றி நடத்துவதும், எல்லா நாள்களிலும் அனைவருக்கும் அன்னதானம் செய்வதும் சிறப்பாக நிகழ்கின்றது.

தஞ்சை மாமணிக் கோயில்கள்  - வெண்ணாற்றின் தென்கரையில் அருகருகே அமைந்துள்ளன.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாறு, பாபநாசம், திருக்காட்டுப்பள்ளி,  திருக்கருகாவூர் - செல்லும்  நகரப் பேருந்துகள் -

ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் திருக்கோயில் வாசல் வழியே செல்கின்றன. 

நல்லனவெல்லாம் அருளும் நாயகன்  - ஸ்ரீமந்நாராயணன் - ஸ்ரீவீரநரசிங்கப் பெருமாளாக, ஸ்ரீமணிக்குன்றப் பெருமாளாக, ஸ்ரீநீலமேகப் பெருமாளாக - சேவை சாதிக்க - 

சனிக்கிழமைகளிலும், பிரதோஷ வேளைகளிலும் தஞ்சையம்பதியின் மிகப் பழைமையான -  திவ்ய தேசத்தை மக்கள் தரிசித்து இன்புறுகின்றனர். 

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் 
எனக்கரசு என்னுடை வாழ்நாள் 
அம்பினால் அரக்கர் வெருக்கொள 
நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல் 
வம்புலாஞ்சோலை மாமதில் 
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி 
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் 
நாராயணா என்னும் நாமம். (953) 
திருமங்கை ஆழ்வார்.

ஓம் ஹரி ஓம்.
* * * 

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவாசகம் - பிடித்த பத்து

ஸ்ரீ பிரகதீஸ்வரர்
பால் நினைந்தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய 
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!.. (9) 
* * *

திருக்கோயில்
தஞ்சையம்பதி

ஸ்ரீ கொங்கணேஸ்வரர் சந்நிதி
இறைவன் - கொங்கணேஸ்வரர்
அம்பிகை - ஞானாம்பிகை, அன்னபூரணி
தீர்த்தம் - கமல தீர்த்தம்
தலவிருட்சம் - மகிழ மரம்

தலப்பெருமை
கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்து வணங்கிய திருத்தலம்.

பிரதோஷ நந்தி
காவிரியின் தென்பால் - தஞ்சையம்பதியின் - மணிமுத்தா நதி எனப்படும் வடவாற்றின் கரையில் கரந்தை எனும் பதியில் மகரிஷி வசிஷ்டரும் அவரது பத்னியாகிய அருந்ததி அம்மையாரும் தெய்வ பசுவாகிய நந்தினியுடன் வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து தவம் இருக்கின்றனர் என்பதை அறிந்த கொங்கண சித்தர் ஹிமாசல மலையிலிருந்து விரைந்து வந்து மகரிஷியைச் சந்தித்தார். 

அவர்களுடன் அளவளாவி மகிழ்ந்தார்- கொங்கண சித்தர்.

வசிஷ்ட மகரிஷி சற்றே தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகவே கரந்தை வனத்திலிருந்த சந்திர தீர்த்தத்தில் நீராடி நாளும் சிவபூஜை செய்து கொண்டிருந்தார். 

மகரிஷியைத் தரிசித்த பிறகு கொங்கணசித்தர் தாமும் தஞ்சையம்பதியின் மகிழ வனத்தில் தவநிலை கொண்டார். 

அவரது தவத்திற்கு இரங்கிய ஈசன் - அவரது மேனியிலிருந்து வெளிப்பட்ட ஜோதியில் ஐக்கியமாகி அவருடனே இருந்தார். 

ஈஸ்வரன் சித்தரின் மேனியில் ஐக்கியமாகி விட்டதால் பிரபஞ்ச இயக்கம் தடுமாறியது.

அதைக் கண்டு திகைத்தனர் தேவர்களும் சப்த ரிஷிகளும். கொங்கண சித்தரின் தவத்தைக் கலைக்க முயற்சித்தனர். தேவகணங்களுள் ஒருவனை புலியாக்கி சித்தரின் தவத்திற்கு இடையூறு செய்ய அனுப்பினர். 

சித்தரோ மாயப் புலியை தனது தண்டத்தால் அடக்கி வாகனமாகக் கொண்டு தவத்தைத் தொடர்ந்தார். 

வேறு வழியின்றி சித்தரையே சரணடைந்து நிலைமையை விளக்கினர். மனம் இரங்கிய சித்தர் ஓராண்டு காலம் ஜோதி வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்று அருளினார்.

365 தீபங்கள் கொண்ட ஜோதி பீடம்
அதன்படி மகாமேரு எனும் ஜோதி வழிபாடு செய்தனர். ஈசனும் கொங்கண சித்தரின் மேனியில் இருந்து வெளிப்பட்டனன்.

பின் யாவரும் வேண்டிக் கொண்டதன் பேரில் கொங்கண சித்தர் தாம் தவமிருந்த இடத்தில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்தார். 

ஈசன் கொங்கணேஸ்வரராக அந்தத் திருமேனியில் நிலைத்து கோயில் கொண்டு அருளினன் என்பது தலவரலாறு. 

அதன் பின் ஈசனுக்கு இணையாக அம்பிகையையும் சித்தர் பிரதிஷ்டை செய்தார். 

அம்பிகை ஞானாம்பாள். நின்ற திருக்கோலம். அம்பிகையும் ஈசனைப் போலவே ஜடாமகுடம், மான் மழு, அபய வரத ஹஸ்தங்களுடன் அற்புதத் தோற்றங்கொண்டு விளங்குகின்றாள்.

ஞானாம்பிகையை வழிபட கல்வியும் ஞானமும் விளையும்.


நவராத்திரியில் சாகம்பரி அலங்காரம்
குழந்தை வரம் வேண்டிய அன்பர் ஒருவருக்கு அம்பிகையே மகளாகத் தோன்றி - வளர்ந்து - ஈசனை மணம் செய்து கொண்டதாகவும் ஒரு ஐதீகம்.

ஈசனை மணந்து கொண்ட அம்பிகை அன்னபூரணி என விளங்குகின்றாள். காஞ்சி காமாட்சியைப் போல யோகாசனத்தில் அமர்ந்திருக்கின்றாள்.

அன்னபூரணிக்குக் காவலாக மேற்கு நோக்கி காளியும் கிழக்கு நோக்கி துர்க்கையும் எழுந்தருளியுள்ளனர். 

சோழ வளநாட்டில் அன்னபூரணி விளங்குவது இங்கே தான்!.. இங்கே எழுந்தருளியிருக்கும் அன்னபூரணியை வழிபட ஒருநாளும் சோற்றுக்குக் குறைவு வராது என்பது ஐதீகம்.

அம்பிகை தோன்றியது ஐயன் குளம் எனப்படும் கமல தீர்த்தத்தில்.
இக்குளம் திருக்கோயிலுக்கு எதிரில் ஈசான மூலையில் உள்ளது.

கொங்கண சித்தர் வடிவமைத்த மகாமேரு ஜோதி பீடம் - கொங்கண சித்தரின் முன்பாக உள்ளது. 365 தீபங்களை உடையது. வியாழக் கிழமைகளிலும் பௌர்ணமி நாட்களிலும் மிகச் சிறப்பாக ஜோதி வழிபாடு நிகழ்கின்றது. 

வைகாசி விசாகத்தை அனுசரித்து பெருந்திருவிழா. ஸ்வாமி அம்பாள் திருக் கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகின்றது.

கொங்கணேஸ்வரர் திருக்கோயில் - மேலராஜ வீதியின் நடுநாயகமாக அமைந்துள்ளது.

அடுத்த வீட்டுக்கு அடுத்த வீடு அடையாளம் என்பது போல இந்த மேல ராஜ வீதியின் தெற்கு மூலையில் - 

சித்திகணபதி - சங்கர நாராயணர் திருக்கோயில் அடுத்து கொங்கணேஸ்வரர் அடுத்து காசி விஸ்வநாதர் அடுத்து விஜய ராமர் எதிரில் படித்துறை விஸ்வ நாதர் அடுத்து பங்காரு காமாட்சி அடுத்து நவநீத கிருஷ்ணன் அடுத்து மூலை ஆஞ்சநேயர் - என வரிசையாக திருக்கோயில்கள்..

தஞ்சையின் புராதனமான திருக்கோயில்களுள் கொங்கணேஸ்வரர் திருக் கோயிலும் ஒன்று..

தேவாரம் பாடிய மூவர் திருநாவிலும் தஞ்சைத் தளிக்குளம்  - என்று
வழங்கியதோடு தனியாக திருப்பதிகம் இத்தலத்திற்கு கிடைக்கவில்லை.

தஞ்சைத் தளிக்குளம் என -  அப்பர் சுவாமிகள் குறிப்பிடும் திருக்கோயில் எது என இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றன. 


இந்த அளவில் மார்கழிக் கோலம் என்ற பதிவுகளின் வாயிலாக ஒவ்வொரு நாளும் திருக்கோயில்களில் தரிசனம் காண வைத்த இறைவனின் திருவடித் தாமரைகளைத் தொழுது எழுகின்றேன். 

இவற்றில் ஒரு சில கோயில்களைத் தவிர மற்ற அனைத்தும் நான் தரிசனம் செய்த திருத்தலங்களாகும்.

நண்பர்கள் பலரும் - பதிவுகளில் பதிவிடப்பட்ட படங்களைப் பாராட்டினர்.
அவை இணையத்தில் இறையன்பர்களால் வலையேற்றப்பட்டவை.
Facebook - வழியாகவும் எனக்கு படங்கள் கிடைத்தன.

வழி நடத்திய வள்ளல் பெருமானுக்கு நன்றி!..

இன்னும் நிறைய செய்திகளைப் பதிவிட வேண்டும்.. 
அருகிருந்து ஐயனும் அம்பிகையும் அருளிடவேண்டும்!.. 
      இந்த வேளையில் என்னுடன் பயணித்த அன்பு நெஞ்சங்களுக்கு 
மனமார்ந்த நன்றியும் வணக்கமும் என்றும் உரியன..

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!.. (5/90/1)

நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நமசிவாயவே நானறி இச்சையும்
நமசிவாயவே நாநவின் றேத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமே!.. (5/90/2) 
திருநாவுக்கரசர்.

அனைவருக்கும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!..  

திருச்சிற்றம்பலம் 
* * *

செவ்வாய், ஜனவரி 13, 2015

மார்கழிக் கோலம் 29

குறளமுதம்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)  

பொய் இல்லாத வாழ்க்கையே அறத்தின்பாற்பட்டது.
அவ்வாழ்க்கை வாழத் தலைப்பட்டோர் 
வேறு அறம் செய்யவில்லை ஆயினும்

பொய்யாமையே மிகச்சிறந்த அறம்.
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 26


சிற்றம்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேள்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
திருக்கோளூர்



மூலவர் - வைத்த மாநிதிப் பெருமாள்
உற்சவர் - நிஷோபவித்தன்
தாயார் - கோளூர்வல்லி, குமுதவல்லி
தீர்த்தம் - தாமிரபரணி, குபேர தீர்த்தம். 
ப்ரத்யட்சம்- குபேரன்

ஸ்ரீஹர விமானத்தின் கீழ் புஜங்க சயனம்.
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

காசு கண்ணை மறைக்கின்றது என்பார்கள். 

நாளும் நாளும் அவதிப்படும் மானிடருக்கே இந்த நிலை என்றால் வற்றாத நிதியங்களைத் தன் பொறுப்பில் வைத்திருப்பவனுக்கு எப்படியிருக்கும்!.. 

ஒருநாள் இனிய மாலைப் பொழுது. 

திருக்கயிலை சென்று சிவதரிசனம் செய்ய விரும்பினான் அவன். 

அவன் - குபேரன். பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியரின் பேரன். வைஸ்ரவனின் மகன்.

குபேரனின் தாய் தைவ வர்ணினி. யக்ஷ குலத்தைச் சேர்ந்தவள். 

குபேரனின் தந்தை வைஸ்ரவன் சுமாலியின் மகளான கேகசி என்பவளை மணந்ததால் பிறந்தவர்களே இராவணன் கும்பகர்ணன் விபீஷணன் மற்றும் சூர்ப்பநகை.. 

குபேரனை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நவநிதிகளுக்கும் அதிபதி.

நிலைமை இப்படியிருக்க - சனைச்சரன் குபேரனைப் பின் தொடர்ந்திருந்த நேரம் அது.

சிவதரிசனம் வேண்டி - கயிலை மாமலைக்குச் சென்றபோது தான் -
காசு கண்ணை மறைத்தது.

தமிழில் காசு என்றால் - குற்றம் என்ற அர்த்தமும் உண்டு!..

அம்பிகை சர்வாலங்கார பூஷிதையாக வீற்றிருந்த கோலத்தைக் கண்டான். 

குபேரன் என்ன நினைத்தானோ - அதை அம்பிகையே அறிவாள்!..

அந்த நொடியே - ஆ!.. என அலறித் துடித்தான்.

அவனுடைய விழிகளில் ஒன்று தெறித்து விழுந்தது.

சீற்றத்துடன் அம்பிகை சாபம் கொடுத்தாள்..

ஒற்றைக் கண் கொண்டு உற்று நோக்கிய உனது பெருஞ்செல்வம் உன்னை விட்டுத் தொலையட்டும்.  நீ பெற்ற பேரும் புகழும் உன்னை விட்டு நீங்கட்டும்.
உன் உடம்பு காமாலை கண்டது போல் மஞ்சளாகட்டும்!..

கதறித் துடித்தான் குபேரன். 

நீ பெற்ற பேரும்புகழும் ஈஸ்வரன்அளித்தது. இத்தனைக்கும் உனக்கு சிவசகன் என்ற பட்டப் பெயர் வேறு!.. ஏதோ இந்த அளவில் தப்பித்தாய் என சந்தோஷம் கொள்!.. 

திருக்கயிலையில் கூடி நின்றவர்கள் சொல்லியதை விட அவனது மனமே அவனை இடித்தது.

கதறி அழுதான். கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பதைப் போல் - கண் கெட்ட பிறகு தான் குபேரனுக்குப் புத்தி வந்தது.

அங்குமிங்கும் அலைந்தும் அவனுக்கு ஆறுதல் கூற யாரும் முன்வரவில்லை.

அவனை விட்டு அகன்ற நவநிதியங்களும் கொள்வாரின்றிக் கிடந்தன. ஏதோ ஒரு நல்வினையால் ஸ்ரீஹரிபரந்தாமனை எண்ணித் தவம் செய்ய - பரந்தாமன் அவற்றை அரவணையில் தலைக்குக் கீழ் வைத்துக் கொண்டு துயின்றான்.

மீண்டும் சிவபெருமானைச் சரணடைந்து பலவாறாகத் துதித்து பொறுத்தருள வேண்டினான் குபேரன்.

பெருமானோ - அம்பிகையின் பக்கம் கையைக் காட்டி விட்டு -  தவத்தில் ஆழ்ந்தார்.

குபேரனைக் கண்டு மனமிரங்கிய அம்பிகை -
உடலின் நிறம் மாறிவிடும். ஆனாலும் ஒரு கண் போனது தான்!..  - என்றாள்.

அம்மா!.. அகத்துள் விழுந்த குழி அப்படியே இருந்தாலும் முகத்தில் விழுந்த குழியை மாற்றலாகாதா!.. - என அழுது நின்றான்.

சரி.. உன் முகத்தில் முன்னைப் போலவே இரண்டு கண்களும் விளங்கும். அவற்றுள் ஒரு கண்ணில் தான் பார்வை!..

ஆகட்டும் தாயே!.. - ஆனாலும் அங்கேயே தலையைக் குனிந்தவாறு நின்று கொண்டிருந்தான் - குபேரன்.. 

அவன் ஏன் இன்னும் இவ்வாறு நின்று கொண்டிருக்கின்றான் என்பதை அறியாதவாளா அம்பிகை!..  புன்னகைத்தாள். 

அதர்மம் தோற்றோடிய திருத்தலம் ஒன்று தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. அங்கே இருக்கின்றன உன் செல்வங்கள் அனைத்தும். அங்கே பொன்னளந்த மரக்காலைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு எனது சகோதரன் துயில்கின்றான். சென்று வாங்கிக் கொள்!.. 

ஓட்டமும் நடையுமாக ஓடி வந்த குபேரன் - பெருமாளைக் கண்டு திகைத்து நின்றான்.

பொல்லாத நேரம் இன்னும் போய் விடவில்லை.  பெருமாளை எழுப்புதற்கு - நாம் முயற்சி செய்து வேறு ஏதாவது கோளாறு ஆகிவிட்டால்!?.. 

அதற்குள் - வைகுந்தவாசனே திருவாய் திறந்து பேசினான். 

வந்துவிட்டாயா!. அதோ இருக்கின்றதே ஒரு மூட்டை- அதை எடுத்துக்கொள்..

குபேரன் தயங்கினான்.. - சிறிய மூட்டையாக இருக்கின்றதே?..

எல்லாம் இது போதும்..  இதை வைத்துக் கொண்டு பரிபாலனம் செய்!..

ஸ்வாமி.. மன்னிக்க வேண்டும்.. மீதியெல்லாம்!?...

அதை எல்லாம் மஹாலக்ஷ்மி பார்த்துக் கொள்வாள்..செல்வம் அனைத்தும் திரண்டு ஓரிடத்தில் கிடக்காமல் எங்கும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். கிடைத்ததைக் கொண்டு திருப்தி கொள்.. திருப்தியே மிகப்பெரிய செல்வம்!..

அங்கிருந்து விடைபெற்றுக் கொண்ட குபேரன் பின்னும் தவங்கள் செய்து தனது பிழைக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டான்.

ஆனாலும் - கண்பார்வை போனதாகவே ஆயிற்று.

அழகிய முகத்தில் விளங்கும் இரு விழிகளில் ஒன்றில் மட்டுமே பார்வை என்பது வியப்பூட்டும் செய்தி மட்டுமல்ல படிப்பினை வழங்குவதும் கூட!..

பின்னாளில் - பிருகு முனிவரால் வைகுந்தத்தில் கலகம் ஏற்பட்டது.

மாலவனை விட்டு மஹாலக்ஷ்மி பிரிந்தாள்.

கல்யாண நேரத்தில் - குபேரன் தன்னிடம் இருந்த சிறிய அளவில் இருந்துதான் பெருமாளுக்குக் கடன் கொடுத்தான்.  

திருமலையில் - திருமணத்தின் போது வட்டிக்குக் கடன் கொடுத்து பத்திரம் எழுதி வாங்கியது கூட - ஒரு திருவிளையாடல் தான்!..

ஏனெனில் செல்வம் எங்கும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கட்டும் என்ற நியதிக்குத் தானும் ஆட்பட்டவராக பெருமாள் நடத்தியதும் ஒரு லீலை தான்!..


இப்படி பொன்னளந்த மரக்காலைத் தலைக்கு வைத்துக் கொண்டு பெருமாள் துலங்கும் திருத்தலம் தான் - திருக்கோளூர்.

ஸ்ரீஹர விமானத்தின் கீழ் புஜங்க சயனத்தில் பொன்னளந்த மரக்காலைத் தலைக்கு வைத்துக்கொண்டு துயிலாமல் துயிலுகின்றான் வைத்த மாநிதிப் பெருமாள்.

இடது கையில் அஞ்சனம் இட்டு - பொருட்குவியல் எங்கெல்லாம் உள்ளது?.. - என்று பார்ப்பதாக பாவனை!..

தனித்தனி சந்நிதிகளில் கோளூர்வல்லி குமுதவல்லி என இரு நாச்சியார்கள். 

இத்தலத்தில் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி - காசு கண்ணை மறைத்த பாவத்திற்கு பிராயச் சித்தம் தேடிக் கொள்ளலாம்.

இருந்த பொருளை இழந்து நிற்பவர்கள் பெருமாளிடம் கையேந்தி நிற்கலாம்.
ஏதும் அற்றவராய் இருப்பவரும் வள்ளலிடம் வரம் கேட்டு நிற்கலாம்.

பிராயச்சித்தம் என்றால் - கிடைத்த பொருளைக் கொண்டு இயன்ற அளவுக்கு இல்லாதவர்க்கு உதவி செய்வதே!..

வறுமையால் இருண்ட வீட்டில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பதே!..

குபேரனுக்குப் பெருமாள் ஐஸ்வர்யத்தைக் கொடுத்த நாள் - மாசி மாத சுக்ல பட்ச துவாதசி.

அன்றைய நாளில் - குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்த மாநிதிப் பெருமாளை வணங்குபவர் நலம் பெறுவர் என்பது ஐதீகம்.


ஆவணியில் பெருந்திருவிழா நிகழ்கின்றது. நாளும் சேவை சாதிக்கும் பெருமாள் ஒன்பதாம் நாளன்று தேரோட்டம் காண்கின்றார்.

அன்று அதிகாலை ஐந்து மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
அதற்குப் பின் திருஆராதனையும் தீர்த்த விநியோகமும்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெறும்.

நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டு - அவரையே பாடிப் பரவி நற்கதி அடைந்த மதுரகவியாழ்வார் பிறந்தது திருக்கோளூரில்!.. 

நவதிருப்பதிகளுள் - திருக்கோளூர் - செவ்வாயின் இடர் தீர்க்கும் தலம்.

ஆழ்வார் திருநகரியில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ளது 

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம். எல்லாம் கண்ணனாக உருகுகின்றார் - ஆழ்வார்.

எல்லாமே கண்ணன் என்றாகி விட்டால் என்றுமே தொல்லைகள் இல்லை.

உண்ணுஞ் சோறுபருகுநீர் தின்னும்வெற் றிலையும்எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக்க அவனூர் வினவி
திண்ணம் என்னிள மான்புகும்ஊர் திருக்கோளூரே!.. (3517)
நம்மாழ்வார் அருளிய திருப்பாசுரம். 
* * * 

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவாசகம் - பிடித்த பத்து


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவ பெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே!.. (3) 

* * *

திருக்கோயில்
உவரி


இறைவன் - ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி
அம்பிகை - ஸ்ரீ பிரம்ம சக்தி
தீர்த்தம் - நாழிக் கிணறு, அக்னி தீர்த்தம் (கடல்)
தலவிருட்சம் - கடம்ப மரம்

தலப்பெருமை
கடம்ப வனத்தில் முளைத்தெழுந்த சுயம்பு லிங்கம் 

தென் மாவட்டங்களில் பிரசித்த பெற்ற திருக்கோயில்களுள் உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலும் ஒன்று.

இங்கே - எங்கள் குல தெய்வம் வீற்றிருக்கின்றது என்பது எமக்குப் பெருமை!..


இத்திருக்கோயிலில் மார்கழி மாதம் முழுதும் சூர்ய பூஜை நிகழ்வது சிறப்பு.

அதிகாலை 6.55 மணியளவில் மூலவராகிய ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமியின் மீது சூரிய ஒளிக் கதிர்கள் படர்ந்தன.

திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


மற்ற திருக்கோயில்களில் சில தினங்கள் நிகழும் இந்த சூர்ய வழிபாடு - உவரியில் மாதம் முழுதும் நிகழ்வதே சிறப்பு.

மற்ற மாதங்களில் அதிகாலை நாலரை மணிக்கு சந்நிதி நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்.

மார்கழியில் அதிகாலை மூன்றரை மணிக்கு நடை திறக்கப்படுகின்றது.

தொடர்ந்து - திருப்பள்ளி எழுச்சி.
ஸ்வாமிக்கு அபிஷேகம். உதய மார்த்தாண்ட பூஜை.

திருவாதிரை அன்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சி. உதய மார்த்தாண்ட பூஜைக்குப் பின் மகாஅபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடந்தது.

உற்சவர் ஸ்ரீசந்திர சேகரர் மனோன்மணி அம்பிகையுடன் வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதி எழுந்தருளினார்.


வைகாசியில் மூன்று நாள் விசாகப் பெருந்திருவிழாவும்
தை மாதத்தில் தைப்பூச தேர்த் திருவிழாவும்
மாசியில் மகாசிவராத்திரி வழிபாடுகளும் குறிப்பிடத்தக்கவை.

ஆவணி இரண்டாம் செவ்வாய் அன்று பிரம்மசக்தி அம்பிகைக்கும் பேச்சியம்மனுக்கும் மாடஸ்வாமி ஐயனுக்கும் கொடைவிழா.

இந்த வைபவம் ஆவணி இரண்டாவது திங்கள், செவ்வாய், புதன் - என மூன்று நாட்கள் நிகழ்ந்தாலும் செவ்வாய்க் கிழமையே வெகு சிறப்பு!..


சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் முன்னோடியார் மற்றும் பரிவார தேவதைகள்
விளங்க - ஸ்ரீ காளியின் அம்சமாக - ஸ்ரீ பிரம்மசக்தி அம்பிகை.

சந்நிதியின் இருபுறமும் பிரம்மசக்தியின் வேறொரு அம்சமும் சிவனணைந்த பெருமாளும்!..

அருகில் உள்ள திரு மண்டபத்தில் ஸ்ரீ பேச்சியம்மனுடன் ஸ்ரீ மாடஸ்வாமியும் ஸ்ரீ இசக்கி அம்மனும் - தமது பரிவாரங்களுடன் விளங்குகின்றனர்.

கன்னி மூலை கணபதி தனியாக கோயில் கொண்டுள்ளார்.

திருக்கோயிலுக்குப் பின் புறம் மரங்கள் அடர்ந்த பகுதியில்
ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேதரராக ஸ்ரீ வன்னியடி சாஸ்தா

பழந்திருக்கோயில். ஆனாலும் திருப்பதிகங்கள் என்று ஏதும் இல்லை.

வங்கக் கடலோரத்தில் உள்ள திருக்கோயில்.

திருக்கோயிலின் எதிரில் தெப்பக்குளம் உள்ளது.
கடற்கரைக் கோயிலின் அருகில் கிணறுகள் உள்ளன.
அவற்றில் நல்லதண்ணீர் சுரப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூரில் இருந்து 40 கி.மீ., .
நாகர்கோயில் செல்லும் கடற்கரைச் சாலையில் உள்ளது உவரி.

கடற்கரைக் கிராமமான உவரி இரண்டு பகுதிகளாக இருக்கின்றது.

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா கோயில்
திருச்செந்தூரில் இருந்து குலசேகரன் பட்டினம் மணப்பாடு வழியாகச் செல்லும் போது கூட்டப் பனை கிராமத்திற்கு அடுத்த - நாடார் உவரியில் தான் திருக்கோயில் உள்ளது.

இத்திருத்தலம் தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனக்கஷ்டம் பொருட்கஷ்டம் என எதுவானாலும் -
வந்தவர்க்கு மன நிறைவையும் பொருளாதார வளங்களையும்
ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி அருள்கின்றார்.

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே!.. (5/100) 
திருநாவுக்கரசர்.

திருச்சிற்றம்பலம். 
* * *