நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஸ்ரீராமநவமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீராமநவமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 05, 2017

ஸ்ரீ காகுத்தன்

விந்திய மலைச்சாரல்..

அதன் அருகில் சிலு.. சிலு.. என, மந்தாகினி நதி...

விந்திய மலைக்கும் மந்தாகினி நதிக்கும் பெருமை பிடிபடவில்லை!..

அதற்குக் காரணம் - அருகேயிருக்கும் சித்ர கூடம்!..

சித்ர கூடம் அருகேயிருந்து விட்டால் பெருமை ஆகி விடுமா!..

ஆகாது தான்!.. ஆனாலும்,

சித்ர கூடத்தில் இருப்பவர்களால் அல்லவோ -
அத்தனை பெருமையும் மகிழ்ச்சியும்!...

அத்தனை பெருமையும் மகிழ்ச்சியும் விளையும்படிக்கு
சித்ர கூடத்தில் இருப்பவர்கள் யார்?..

தேவர்களா?.. கந்தர்வர்களா?... வித்யாதரர்களா?...
கின்னரர்களா?... கிம்புருடர்களா?...

அவர்களில் யாரும் இல்லை!.. ஆனாலும் -

அவர்கள் எல்லாரும் தேடிக் கிடப்பது அவனைத் தான்!..

ஆனாலும், அவன் -
தகைசான்ற தேவியுடனும் தனது இளவலுடனும்
தன்னைத் தானே ஒளித்துக்கொண்ட தயாபரனாக
தளிர் மலர்ப் பாதங்களால் சித்ர கூடத்தை
வலம் வந்து கொண்டிருக்கின்றான்..

அண்ட பகிரண்டமும்
அவனை வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்கும்போது
அவன் சித்ர கூடத்தை வலம் வந்து கொண்டிருப்பது விந்தைதானே!..

அவன் -
ஜகன்மோகனன்..
சர்வகாரணன்..
பரிபூரணன்..


அவன் தான் ஸ்ரீமந்நாராயணன் - ஸ்ரீராமசந்த்ரன்!..
அவனுடன் நாயகனைப் பிரிந்தறியாத ஸ்ரீமந்நாராயணி - ஸ்ரீதேவி ஜானகி!..

அவர் தம் திருவடிகளைத் தொழுதவாறு
தொண்டனுக்கும் தொண்டனாக இளைய பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மணன்!..

என்ன தவம் செய்தனவோ -
சித்ர கூடமும் மந்தாகினியும் விந்திய பர்வதமும்!..

கையில் உள்ள சக்கரத்தைப் போல
காசினியைச் சுழற்றிடும் கருணாமூர்த்தி
தனக்குத் தானே நாடகம் ஒன்றினை இயற்றினான்.. -

அதில் தானே நடிகனாகி நாடகத்தையும் இயக்கினான்...

எத்தனை எத்தனையோ காட்சிகளைக் கடந்து வரும்
அந்த நாடகத்தின் அடுத்த காட்சி என்னவாக இருக்கும்?..

இன்னும் சிறுபொழுதுக்குள் என்ன நடக்கும்!?..
அதையும் - அவனன்றி யாரறியக் கூடும்?..

எல்லாம் வல்ல இறைவன் - மானுடம் தாங்கி வந்து
எல்லாத் துன்பங்களையும் துயரங்களையும்
திரண்ட தோள்களில் தாங்கிக் கொண்டனன்!..  

- என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்!...

இதோ!.. அடுத்த காட்சியினை நிகழ்த்துகின்றான் - ஸ்ரீஹரிபரந்தாமன்..

சித்ர கூட வனத்தின் பகல் பொழுது...

நிழல் பரப்பியிருந்த மரங்களின் பசுந்தளிர்கள் எல்லாம் மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தன...

மரக்கிளைகளுக்கு உள்ளிருந்து கீச் .. கீச்.. எனும் ஒலிகள்..

தம்மை மறந்திருந்த பறவைகள் - இன்னும் சிறு பொழுதுக்குள்
அங்கே நிகழ இருக்கும் விபரீதத்தை உணராது மகிழ்ந்து இருந்தன..

பெருங்குடையாய்ப் பரந்திருந்த புன்னை மர நீழலில்
அன்னை ஜானகியுடன்  சற்றே - ஓய்விலிருந்தான் ஐயன் ஸ்ரீராமசந்திரன்...

சற்று முன்தான் மதிய உணவு நிறைவேறியிருந்தது...

ராஜராஜனாக நடுவிருக்க ஏவலர்கள் உணவு வகைகளைப் பணிவுடன்
எடுத்து எடுத்துப் பரிமாறிய அன்றைய நாட்கள் நினைவில் வந்து போயின...

மாமன்னன் தசரதன் - கோசலை கைகேயி சுமித்ரை எனும் தேவியருடன்
தன் மக்கள் நால்வரும் அவர்தம் காதல் கிளிகளுடன் உணவு உண்ணும் அழகைக் கண்ணாலே கண்டு பசி தீர்ந்த காலம் அது...


நீ முதலில் உண்பாயாக!..

இல்லை.. இல்லை.. நீங்கள் முதலில் உண்ணுங்கள்!..

ராகவனும் மைதிலியும்!..

இவ்வாறே - அருகில்,
லக்ஷ்மணனும் ஊர்மிளையும்!..

அடுத்தாற்போல் - பரதனும் மாண்டவியும்!..
அவர்களையடுத்து - சத்ருக்னனும் ஸ்ருதிகீர்த்தியும்!..

அன்னத்தைப் பரிமாறிக் கொண்டார்களா!..
அன்பைப் பரிமாறிக் கொண்டார்களா!..

ஆனால், இன்றைக்கு நிலைமையே வேறு...

உணவு என்றால் உணவு எளிய உணவு...

ஊருக்கே உலகுக்கே படியளக்கும் பரமன்
தனக்குத் தானே உணவைத் தேடிக் கொண்டிருந்தான்..  

இளைய பெருமாள் பழுத்து உதிர்ந்திருந்த பழங்களைச் சேகரித்து கொணர்ந்திருந்தான்..

ஜனகராஜனின் புத்ரி மூங்கிலரிசியைப் புட்டு செய்திருந்தாள்..

சற்றுமுன் ஜானகி மூங்கிலரிசிப் புட்டு செய்த காட்சி
ஸ்ரீராமனின் கண்களுக்குள் நிழலாடியது..

வைரம் பாய்ந்து முதிர்ந்திருந்த மூங்கில்களில் இருந்து விளைந்த 
முத்துகளை - செங்காந்தள் விரல்களால் உதிர்த்த ஜானகி -
அவற்றை குடிலின் ஓரமாக இருந்த கற்பலகையில் வைத்து
வேறொரு கல்லினைக் கொண்டு இடித்துப் பொடியாக்க முயன்றாள்..

ஆனால் -

தான்ய லக்ஷ்மியாகவும் தன லக்ஷ்மியாகவும் திகழ்ந்த தயாபரி
கனக லக்ஷ்மியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை..

இப்படி கானக லக்ஷ்மியாக ஆகி விட்டாளே!.. - என,

மனம் இளகிய கற்களுக்கு முன்பாக
மூங்கிலரிசி முத்துகள் தாமாகவே
நொய்யாக குறு நொய்யாக துகளாகித் திளைத்தன..

எல்லாம் அறிந்த எம்பெருமாட்டி ஏதும் அறியாதவளைப் போல -
எப்படி!.. என் கை வண்ணம்!.. - என்பதாகப் புன்னகைத்தாள்...

எம்பெருமானும் - புன்னகைத்தான்..

கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்!..- என்று, அன்றைக்கு அகலிகையின் துயர் தீர்த்தபோது குருநாதர் விஸ்வாமித்திரர் புகழ்ந்து நின்றார்..

அதன்பின், கன்னிமாடத்தில் இருந்த நீ -
அரச சபையில் சிவதனுசை நான் ஏந்தியபோது

எடுத்தது கண்டார்.. இற்றது கேட்டார்!.. - என,
எனது கை வண்ணத்தை நேரில் கண்டாய்!..

நானும் இன்று கண்டேன்.. கண்டேன்.. உன் கை வண்ணம் நேரில் கண்டேன்!..

அகன் மார்பினுன்று அகலாதவளின் நினைப்பு
அக்காரக் கனியாக இனித்துக் கிடந்தது...

ஐயனே.. தாங்கள் இன்னும் உறங்கவில்லையா!..

தேனினும் இனிமையாகத் திருவாய் மலர்ந்தாள் - கள்ளிருக்கும் மலர்க்குழலாள்...

தேவதேவன் திருப்பாற்கடலில் தூங்காமல் தூங்கிக் கிடக்க -
ஐயனின் திருப்பாதக் கமலங்களைத் தான் வருடி மகிழ்ந்த நாட்கள்
வைதேகியின் நினைவுக்கு வந்தன போலும்..

வாஞ்சையுடன் தன் மடியில் தலை சாய்த்திருக்கும் 
பெருமானின் முக மலரை உற்று நோக்கினாள்... 

இளங்காற்றில் அங்குமிங்கும் 
அலைபாயும் கேசங்களைத் திருவிரல்களால் வருடினாள்... 

ஐயனும் அன்னையும் ஆழ்ந்திருந்த அன்பினுக்கு இடையூறு செய்யலாகாது!..
என்று பறவைகளும் அமைதி காத்திருந்த -

அவ்வேளையில் தான் -

பூமியில் நிகழும் லீலாவிநோதங்களைக் கண்டவாறே 
வான்வழி சென்றான் இந்திரன் மகனான ஜயந்தன். 

அவனுடைய பொல்லாத நேரம்!..


சித்ரகூட வனத்தில் ஓய்விலிருந்த அன்னையையும் ஐயனையும் கண்டான். அந்த அளவில் அவனது புத்தி பேதலித்துப் போயிற்று.  

அன்னையைக் கண்டு - கருத்தழிந்தான் இந்திர குமாரன்..
அவன் மனதில் வக்ரம் பொங்கியது.

வான்வழிச் சென்றவனை - அவனது வல்விதியானது கீழே இறக்கியது.

வெயிலைக் கண்டு அஞ்சி மரங்களின் நிழலில் தஞ்சமடைந்திருந்த பறவைக் கூட்டங்கள் இவனைக் கண்டன.. 

அன்றைக்கு அப்பனைப் போலவே - 
இன்றைக்கு பிள்ளையும் தப்பான எண்ணத்துடன் வந்திருக்கின்றான்..
ஜயந்தனை உள்ளுணர்வினால் உணர்ந்து கொண்டன..

மனம் பதைத்துப் பதறின...
எடுத்துரைக்க மொழியின்றித் தவித்தன..

தேவகணத்தில் தோன்றிய ஜயந்தன் , கலிபுருஷனின் கை வசப்பட்டதால் அசுர குணங்கொண்டு  நொடிப் பொழுதில் - காக்கையின் வடிவாக நின்றான்.

பறவையினங்கள் யாவும் பதைபதைத்த வேளையில் காக்கைகளுக்கு மட்டும் பெருமை பிய்த்துக் கொண்டு போனது.


ஆஹா!... நம்மைப் போலவும் ஒருவன் வடிவங் கொண்டானே!..- என்று..

பறவைகள்  தம் பதற்றத்தினை அண்ணலுக்கு உணர்த்துவதற்குள் - 
காக்கை வடிவான கொடியவன் - அன்னையின் திருமார்பினைத்  
தன் அலகால் கொத்தினான்.. 

அந்த அளவில் குருதி பெருகிற்று.

அதைக் கண்ட  பெருமான் சினம் கொண்டு துள்ளி எழுந்தான்..

தகாததைச் செய்த அந்த  காகத்தின் மீது தர்ப்பைப் புல்லைக் கிள்ளி வீசினான்...

சற்றே தொலைவிலிருந்த இளைய பெருமாள் ஆவேசத்துடன் ஓடி வந்தான்..

அதற்குள் ஸ்ரீராமபிரான் வீசிய தர்ப்பை அஸ்திரமாகியது..

இதனை எதிர்பார்க்காத காக்கை திடுக்கிட்டது...

உளங் கெட்ட காக்கை பறந்தது - சத்யலோகத்தை நோக்கி!..

ஆயினும் விடாமல் காக்கையைத் துரத்தியது - அஸ்திரம்...

சத்யலோகத்திற்கு செல்லும் முன்பே அங்கு கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன...


பயந்து நடுங்கிய காக்கை திரும்பிப் பார்த்தது. 

அதோ - அஸ்திரம் துரத்திக் கொண்டு வருகின்றது.. 

அடுத்து எங்கே?..  வைகுந்தமா... கயிலாயமா?...
இத்தனை சின்ன வயதிலேயே அங்கெல்லாம் போகும்படியாகி விட்டதே!. 

வைகுந்தத்தை நினைத்ததுமே குலை நடுங்கியது!... 

நேரங்காலம் தெரியாமல் ஜய விஜயர் - ஏதாவது சாபம் கொடுத்து விட்டால்!....

விடு... ஓட்டத்தை - கயிலாயத்திற்கு!...  

வேர்த்து விறுவிறுத்து பறந்தோடி வந்த காக்கையைத் தடுத்து நிறுத்தினார் -
நந்தியம்பெருமான்.. அவரது திருக்கரத்தில் பொற்பிரம்பு...

எங்கு வந்தாய்?. எதற்கு வந்தாய்?. எந்த முகத்தோடு ஈசனைக் காண வந்தாய்?..

கேள்விக் கணைகள் துளைத்தன - காக்கை வடிவில் இருந்த ஜயந்தனை..

ஸ்வாமியைத் தரிசனம் செய்ய!... - மேல் மூச்சு வாங்கியது..

பாதகம் செய்த நீ பரமனைத் தரிசிக்க இயலாது!...

எப்படியாவது!..  - கொடுஞ்செயல் செய்ததால் கண்ணீருடன் - கதறியது.

ஹூம்!.. - நந்தியம்பெருமானின் ஹூங்காரப் பேரொலி.. 

அந்த சோதனையான நேரத்திலும் காக்கைக்குப் புரிந்தது. 

ஒழுங்காக ஓடிப் போய் விடு!.. இல்லையேல் மன்மதனைப் போல் சாம்பலாகிப் போவாய்!.. - என்பதே அது!. 

ஆனால், காக்கைக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது...

எங்கு தவறு இழைத்தனையோ.. அங்கேயே செல்!..

கயிலாய மூர்த்தியின் கருணை காதுகளில் ஒலித்தது.

மூவுலகிலும் காக்கைக்கு - உயிர் தப்பிக்கவோ ஓடி ஒளிந்து கொள்ளவோ - அடைக்கலம் பெறவோ வழி இல்லாது போயிற்று..


ஸ்ரீ ராமன் - வடுவூர்
காப்பவர் யாரும் இல்லாததால் -

இராமா!.. ஓ!.. நின் அபயம்!.. - எனக் கதறிய காக்கை
ஸ்ரீராமபிரானின் திருவடிகளில் விழுந்து கதறியது.. 

ஆயினும், ஸ்ரீராமபிரான் ஏவிய அஸ்திரம் காக்கையைத் தண்டித்தது...

காக வடிவில் தவறு செய்த ஜயந்தனின் -  
ஒரு கண்ணில் பார்வை பறிபோனது...

ஜயந்தன் காக்கை வடிவம் கொண்டபோது காக்கைகள் மகிழ்ந்ததால் -
அவனது பிழைக்கான தண்டனையில் அவைகளும் சிக்கிக் கொண்டன..

கருத்தழிந்த ஜயந்தனால் காக்கை இனம் தன் கண்ணை இழந்தது.

இதனால் தான் காக்கை - தன் தலையை சிறிது சாய்த்தபடியே எதையும் பார்க்கும். 

இந்நிகழ்வினை - 
அருணகிரிநாதர் சுவாமிமலைத் திருப்புகழில்,

காதும் ஒருவிழி காகமுற அருள் மாயன்அரி திருமருகோனே!
காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே!...  

- எனப் புகழ்ந்து சுவாமிநாதப் பெருமாளை வணங்குகின்றார்.

ஸ்ரீ ராமன் - தில்லைவிளாகம்
இதனையே - சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் -
வினயமுனனு கௌஸி - எனும் ( செளராஷ்ட்ர ராக) கிருதியில்,

தனகு தானே காகாஸுருனி காசின -
ஸரமுனு ஜுசுன தென்னடிகோ - (சரணம் 4)

(தனக்குத்தானே காக்கை அசுரனைக் காத்த-
அம்பினைக் காண்பது என்றைக்கோ ) 

- என்று பாடிப் பரவுகின்றார். 

(மேற்குறித்த ஸ்ரீதியாகராஜர் கீர்த்தனைக்கு  
நன்றி - திரு.வி.கோவிந்தன்., தியாகராஜ வைபவம்)


ஸ்ரீ ராமன் - திருவஹீந்த்ரபுரம்
சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா! ஓ! நின் அபயம்! என்றழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓரடையாளம்... 

- என்று பெரியாழ்வார் வர்ணிக்கின்றார். 

இதனால் தான், ஸ்ரீ ராமபிரானுக்கு 
காகுத்தன் எனும் திருப்பெயர் என்பர். 

ஆனால்,
காகுத்தன் - முன்னோர் வழிவந்த மரபின் திருப்பெயர் என்றும் அறியப்படுகின்றது..


ஸ்ரீ ராமன் - பத்ராசலம்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் 
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை...

- என, குலசேகராழ்வாரும் 

வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான்

- என, திருப்பாணாழ்வாரும் நம்பெருமானுக்கு, சொல்மாலை சூட்டுகின்றனர். 


மேலும்,

கம்பனையெங் கயிலாய மலையான் தன்னைக்
கழுகினொடு காகுத்தன் கருதியேத்தும்
நம்பனை எம்பெருமானை நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே! (6/74)

காகுத்தனாகிய ஸ்ரீராமன் கருதி வழிபட்ட - சிவபெருமானை
நாரையூர் நகரில் நானும் கண்டு வழிபட்டேன்!.. 

- என்று அப்பர் ஸ்வாமிகள் பெருமைப்படுகின்றார்...

ஸ்ரீ ராமன் - புன்னைநல்லூர், தஞ்சை
இன்று ஸ்ரீராமன் பிறந்த நாள்..


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலேஉன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்!..
-: கம்பர் :-

ஸ்ரீ ராம் ஜய ராம் ஜயஜய ராம்.. 
*** 

வெள்ளி, ஏப்ரல் 15, 2016

வடுவூர் ஸ்ரீராமன்


ஸ்ரீ ராமநவமியாகிய இந்நன்னாளில்
ஸ்ரீ ராம தரிசனம்..

வடுவூர்
அபிமான திருத்தலம்


எம்பெருமான் - ஸ்ரீ கோதண்டராமன்

உற்சவர் - ஸ்ரீ கோதண்டராமன் 
ஸ்ரீ விமானம் - ஸ்ரீ புஷ்பக விமானம்..

ஸ்ரீ வைதேகி இளையபெருமாள்
ஆஞ்சநேயர் உடனாகிய திருக்கோலம் ..

கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்


ராவண வதம் முடிந்தது..
அயோத்தி மாநகருக்குத் திரும்பும் வேளை..

ஸ்ரீ ராமனையும் வைதேகியையும் வந்து தரிசித்த 
முனிவர்கள் தம்முடனேயே இருக்குமாறு
வேண்டிக் கொண்டனர்..

அதற்கு - மறுநாள் காலையில் 
விடை கூறுவதாக அருளினான்
சர்வலோக சரண்யன்..

அதன்படி பொழுது விடிந்ததும்  
தானே உகந்து - தன் திருமேனியை
தன்னை வந்து சந்தித்த முனிவர்களுக்கு 
ஸ்ரீராமன் அருளினான்..

அந்தத் திருமேனியின் வனப்பினில் மகிழ்ந்த
முனிவர் அன்பினொடு ஆராதித்துக் களித்தனர்..

முனிவர்களின் காலத்திற்குப் பின்
பூமிக்குள் அடைக்கலமாகின திருமேனிகள்..



நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு
தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னரின்
கனவில் தோன்றி
ஹிரண்ய கர்ப்பமாக இருந்த விக்ரகங்களை
மீட்டெடுக்குமாறு அருளினான்
அவதார புருஷன்..

அதன்படி, தலைஞாயிறு எனும் கிராமத்தில் 
திரு விக்ரகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன..

தஞ்சையை நோக்கி வரும் வழியில்
அன்றிரவு வடுவூரில் தங்கும்படியானது..
பொழுது விடிந்தவேளையில்
வடுவூர் மக்கள் வேண்டிக் கொண்டதன் பேரில்
ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோயிலில்
பிரதிஷ்டை செய்யப்பட்டன..


அது முதற்கொண்டு
ஆராவமுதனாகிய எம்பெருமான்
ஸ்ரீ கோதண்டராமன் எனத் திருப்பெயர் கொண்டு
திருக்கோயிலில் மட்டுமல்லாமல்
ஆயிரமாயிரம் அன்பர்களின்
நெஞ்சங்களிலும்
கோலோச்சி வருகின்றான்..


இத்திருத்தலத்தில் - நேற்று (14/4) முதல் 
பிரம்மோத்ஸவம் தொடங்கி நடைபெறுகின்றது..

13/4 புதன் கிழமை  
காலையில் 108 கலச திருமஞ்சனம் நிகழ்ந்தது..

மாலை 6 மணியளவில்
அனுக்ஞை மிருத்யுஸங்க்ரஹணம் நடைபெற்றது..

14/4 வியாழக்கிழமை
காலை 10.30 மணியளவில் திருக்கொடியேற்றம் ஆனது..

மாலையில் ஸ்ரீராமபிரான் சிவிகையில் எழுந்தருளி
திருவீதி வலம் வந்தருளினன்..

ஆண்டாள் திருக்கோலம்
தொடரும் நாட்களில் காலையில்
பல்லக்கில் திருக்கோலம் கொண்டு எழுந்தருளல்..

15/4 வெள்ளிக்கிழமையாகிய 
இன்று இரண்டாம் திருநாள்

மாலையில் சூரிய பிரபையில்
திருவீதி எழுந்தருளல்..

16/4 சனிக்கிழமை - மூன்றாம் திருநாள் - இரவு
வெள்ளி சேஷ வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்..

17/4 ஞாயிற்றுக்கிழமை - நான்காம் திருநாள் - இரவு
வைரமுடி தரித்து கருட சேவை


18/4 திங்கட்கிழமை - ஐந்தாம் திருநாள் - இரவு
ஆஞ்சநேய வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்..

19/4 செவ்வாய்க்கிழமை - ஆறாம் திருநாள் - இரவு
யானை வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்..
சீதா தேவி அன்ன வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்.. 

20/4 புதன்கிழமை - ஏழாம் திருநாள் - காலை
திருக்கல்யாணம்..


மாலையில் சூர்ணாபிஷேகம்
இரவு - பல்லக்கில் திருவீதி எழுந்தருளல்.. 

21/4 வியாழக்கிழமை - எட்டாம் திருநாள் - இரவு
குதிரை வாகனத்தில் திருவீதி எழுந்தருளல்.. 



22/4 வெள்ளிக்கிழமை - ஒன்பதாம் திருநாள்
காலை 10.00 மணிக்குள்
திருத்தேரோட்டம்..

மாலையில் சரயு தீர்த்தத்தில் தீர்த்தவாரி..

23/4 சனிக்கிழமை - பத்தாம் திருநாள்
காலையில் சப்தாவர்ணம்..
மாலையில் புஷ்பயாகம்..


ஆயுளில் ஒருமுறையேனும் 
வடுவூர் அழகன் ஸ்ரீ ராமனை ஆராதித்து
கண் கொண்ட பயனைப் பெறவேண்டும்..

தஞ்சை மன்னார்குடி சாலையில் உள்ளது வடுவூர்..
தஞ்சையிலிருந்து நகரப் பேருந்துகள் இயங்குகின்றன..
தஞ்சை மன்னார்குடி வழித்தடத்தில் 
புறநகர் பேருந்துகளும் வடுவூருக்கு இயங்குகின்றன..
***

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாய: பதயே நம:

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்..
-: கம்பர் :-

ஸ்ரீராம ராம ஜய ராம ராம..  
***