நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 21, 2024

கரிமுகன் போற்றி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 8
செவ்வாய்க்கிழமை



தஞ்சை திரு ஐயாற்றுக்கு அருகிலுள்ள கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில்  
(ஆயிரத்தெட்டு இளநீர் அபிஷேக நாளில்) எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..

மூலஸ்தான மூர்த்தியாக ஸ்ரீ மஹா கணபதி.. ஆயினும் சந்நிதிக்கு இடப்புறத்தில் சிவலிங்கம் திகழ்கின்றது..













அபிஷேக இளநீர் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது..

இளநீர்க் காய்களும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன..




தஞ்சை சரபோஜி மன்னர் இத்திருக்கோயிலுக்கு பலமுறை  வருகை தந்திருக்கின்றார்..

மதுரை ஸ்ரீலஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் விஜயம் செய்த போது திருமேனி உயிர்ப்புடன் விளங்குவதால் கருவறையில் எவ்வித மாற்றமும் கூடாது என்று அருளியுள்ளார்..
 









இந்தத் திருக்கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் கொண்டிருக்கின்றார்..





பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா..
-: ஒளவையார் :-

ஓம் கம் கணபதயே நம
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், மே 20, 2024

கணபதி என்றிட


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 7  
திங்கட்கிழமை


 வைகாசி ஆறாம் நாள் ஞாயிற்றுக் கிழமையாகிய 
நேற்று கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹாகணபதிக்கு 1008 இளநீர் அபிஷேகம் நிகழ்த்தப்பட்டது..

பெருமானுக்கு அபிஷேகம் ஆரத்தி 
நடந்து முடிந்த பத்து நிமிடத்திற்கெல்லாம்
மண் குளிரும்படிக்கு மழை பெய்தது..

தொடர்ந்து 
இரவு பத்து மணிவரை 
திரு ஐயாறு தஞ்சாவூர் பகுதிகளில் 
நல்ல மழை..
 


எல்லாருக்கும் ஆகட்டும்
நன்மையும் நலமும்..


கணபதி வீற்றிருந்து அருள் புரியும் திருத்தலங்கள் எத்தனை எத்தனையோ!...

அவற்றுள் பழம் பெருமையுடன் சிறப்பாக - விளங்கும் திருத்தலம்,

கணபதி அக்ரஹாரம்!..

அகத்திய மாமுனிவர் - குடகு மலையில் தவமிருந்த சமயம், நதிப்பெண்கள் ஒன்று கூடி உலா கிளம்பினர். அவர்களுள் துள்ளலும் துடிப்புமாக இருந்தவள் காவிரி. 

விதியின் விளையாட்டால், இளம் மங்கையரின் ஆட்டமும் பாட்டும் மகாமுனிவரின் தவத்தைக் கெடுத்தன. அகத்தியர் விழித்து நோக்கினார். 

காவிரி - ஒருத்தியைத் தவிர, மற்ற எல்லாரும் திகைத்து ஒதுங்கினர். காவிரியோ - அகத்திய மாமுனிவரின் வடிவத்தைக் கண்டு சிரித்தாள்.  

அவளது அறியாமையை உணர்ந்த முனிவர்,  அவள் திருந்தவும் அவளால் வையகம் வளங்கொண்டு பொருந்தவும் திரு உளங்கொண்டார். விளைவு - 

அகத்திய மாமுனிவரின் கமண்டலத்தில் நீராக - சிறைப்பட்டாள்!..

அதைக் கண்டு, அஞ்சி நடுங்கிய மற்றவர்கள் ஓடிச்சென்று - நின்ற இடம் இந்திர சபை. தேவேந்திரன் மற்றவர்களுடன் கூடி ஆலோசித்தான். நான்முகன் கூறினார். 

''..காவிரிப் பிரச்னை தீர வேண்டும் என்றால்  - கணபதியின் திருவடிகளைச் சரணடையுங்கள்!..'' - என்று.

தேவர்கள் எல்லாரும், ஓடிச் சென்று - உமை மைந்தனின் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்கினர். 

''அஞ்சேல்!..'' - என்று அபயம் அளித்தார் ஐங்கர மூர்த்தி.

அதன்பின்  - ஒரு சுபயோக சுப தினத்தில், காக்கை வடிவங் கொண்டு - அகத்தியரின் அருகிருந்த கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார் - பெருமான்..

சிறைப்பட்டுக் கிடந்த காவிரி - சிரித்த முகத்துடன் வெளிப்பட்டாள்.

'' ..தம்மை மீறி ஒரு காக்கை  இச்செயலைச் செய்வதா!.. '' எனக் கோபங்கொண்ட அகத்தியர், தவம் கலைந்து எழுந்தார். அந்தப் பொல்லாத காக்கையோ - இளம் பாலகனாக மாறி, கைக்கெட்டும் தூரத்தில் நின்றது!..

''..யாரடா.. நீ .. மாயக்காரன்!..'' - என்று தாவிப் பிடித்து, 

'' ..இத்தனை தலைக்கனமா உனக்கு!..'' - என்றபடி, தலையில் ''நறுக்''  என குட்டினார்.

குதுகலத்துடன் சிரித்தபடி - தன்னுருவம் காட்டி மறைந்தார் கணபதி!..

அவவளவு தான்!.. தடுமாறிப் போனார் தவமுனிவர். ஒருகணம் சிந்திக்காமல் செயல் பட்டதை உணர்ந்தார். கண்ணீர் பெருகியது.

''..ஐயனே!.. என்பிழை பொறுத்தருள்க!..'' - எனப் பணிந்தார்.

'' ..அகத்தியரே!.. முதலில் காவிரியை வாழ்த்தி விடை கொடுத்தருளுங்கள். அவளும் அவளால் இந்த அவனியும் பெருமை கொள்ளட்டும்!..'' - என்று பெருமான் திருவாய் மலர்ந்தார்.

''..காவிரி மடந்தாய்!.. துடுக்குடன் செருக்குற்றுத் திரிந்தாய்!.. அதனால், என் கமண்டலத்தினுள்  சிறைப்பட்டுக் கிடந்தாய்!.. ஐங்கரன் அருளால் சுதந்திரம் அடைந்தாய்!.. அன்பும் அருளும் பெற்றுப் பொலிந்தாய்!.. இனி, தமிழகத்திற்கு நீயும் ஒரு தாய் எனச் சிறந்தாய்!.. நலந்திகழ நெடுவழி நடந்தாய்!.. நடந்தாய் வாழி காவேரி!.. நாடெங்குமே சிறக்க நன்மையெல்லாம் செழிக்க.. நடந்தாய் வாழி காவேரி!..'' 

- என்று, மகிழ்வுடன் 
வாழ்த்தி காவிரிக்கு விடை கொடுத்தார்..

ஆயினும், மனம் ஆறவில்லை. முதற்பிள்ளையின் உச்சியில் குட்டிய சோகம் தீரவில்லை!..  காவிரி சென்ற வழியிலேயே நடந்தார். அவள் சென்ற வழியெல்லாம் மங்கலம் விளைந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தார்.  பற்பல திருத்தலங்களைத் தரிசித்தபடி சென்றவர் - செல்வக் கணபதியைக் கண்டு கைகூப்பித் தொழும் வேளையும் வந்தது.

காவிரியின் வடகரையில் மாஞ்சோலைகள் அடர்ந்திருந்த வனப்பகுதியில் விநாயகப் பெருமான் தரிசனம் அளித்தார். அகத்திய மாமுனிவர் ஆனந்தக் கண்ணீர்  பெருகி வழிய, பணிந்து வணங்கினார்.

''..அகத்தியரே.. கவலை வேண்டாம்.. உமது பிழை பொறுத்தோம்!..''

''..ஆனாலும் ஸ்வாமி!..  உம்மை அறியாமல் பாலன் என்றும் பாராமல், பலங்கொண்டு உச்சியில் குட்டி- பெருந்தவறு புரிந்தேனே!..''

" ஆயினும் - தாயினும் நல்லாளாக - காவிரி, வளம் கொடுக்கின்றாள்!.. மண்ணும் மக்களும் நலம் பெறுகின்றனர்!.. இதுவே நமக்கு மகிழ்ச்சி!.. உயிர்கள் இன்புற்று வாழ நாம் எதையும் ஏற்றுக் கொள்வோம்!.. இனி.. இது முதற்கொண்டு நீர் - எமை வழிபடும் போது, உமது சிரசில் குட்டிக் கொள்ளும்!..''

விநாயகப் பெருமான் - அகத்தியரை வாழ்த்தியருளினார்..

இப்படி, அகத்திய மாமுனிவர், விநாயகப் பெருமானை வணங்கி நின்ற திருத்தலம் தான்  - கணபதி அக்ரஹாரம்!.. 

அகத்திய மாமுனிவரைக் குருவாகக் கொண்டுதான் நாமும் , தலையில் குட்டிக் கொண்டு விநாயகப் பெருமானை வணங்குகின்றோம்!..

கணபதி ஸ்தலங்களில் சிறப்புடையதும் , அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான பெருமையுடைய - இத்தலத்தின் பெருமையை உணர்ந்த கெளதம மகரிஷி கணபதியை பூஜித்து  - நித்ய மங்கல ஸ்வரூபத்தினை - காவிரிக்குப் பெற்றுத் தந்தார்.

கணபதி அக்ரஹாரத்தில் - விநாயக சதுர்த்தி அன்று, மக்கள் அனைவரும்  கணபதியின் ஆலயத்தில் ஒன்று கூடி, அங்கேயே பெருமானுக்கு நிவேத்யங்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்து மகிழ்கின்றனர்..





கணபதி அக்ரஹாரம் - தஞ்சையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயங்குகின்றன. கண்டியூர், திருவையாறு , திருப்பழனம், திங்களூர், ஈச்சங்குடி - தலங்களை அடுத்து உள்ளது.

கும்பகோணம் - திருவையாறு பேருந்துகள் கணபதி அக்ரஹாரம் வழியாகத் தான் இயங்குகின்றன..

சோழ மண்டலத்தில் சிறப்புற்று விளங்கும் இத்திருக்கோயில் - நாயக்க, மராட்டிய மன்னர்களால் வணங்கப்பட்ட பெருமை உடையது..

காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் இஷ்ட மூர்த்திகளுள் - கணபதி அக்ரஹாரத்தின் பிள்ளையாரும் ஒருவர்..


கணபதியை கைகூப்பித் தொழுவோம்!..
கவலையெல்லாம் நீங்கப் பெறுவோம்!..

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!..

ஓம் கம் கணபதயே நமஹ:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, மே 19, 2024

அரசு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 6
ஞாயிற்றுக்கிழமை


அரச மரம்..

இம்மண்ணுக்கே உரிய மரம்..

ஒரு மணி நேரத்தில் அதிக அளவு உயிர்வளியை  இவ்வுலகிற்கு வழங்கி முதலிடத்தில் திகழ்வது - அரச மரம்..

அரசமரம்.. அதன் கீழ் பிள்ளையார்.. அருகில் ஒரு குளம்..

இது தானே அன்றைய கிராமங்களின் அடையாளம்!..

இப்படியான அரச மர நிழலில் தான் ஊர்ப் பஞ்சாயத்துக்கள் நடைபெற்றன.. 

அரச மரம் இருபத்து நான்கு மணி நேரமும் சுத்தமான காற்றை வெளியிடுவதாக  சொல்லப்படுகின்றது..


எனவே தான்  ஆறு குளம் போன்ற பொது
இடங்களில் இம்மரத்தை வளர்த்து அதன் கீழ் விநாயக மூர்த்தியை வைத்தனர்.. வனங்கினர் - ஆன்றோர்..

அரச இலைகளின் சலசலப்பு மணிகளைப் போல ஒலிக்கும்.. 

அரச மரத்தின் நிழலில் நேர் நிறை ஆற்றல் நிறைந்திருக்கும்.. 


அரச மரத்தின் வேரில்  பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் சிவபெருமானும் விளங்குவதாக புராணங்கள்.. இதனாலேயே இது அரச மரம்.. ராஜ விருட்சம்..

' மரங்களில் நான் அரசமரமாக இருக்கின்றேன்..  - என்பது கீதாச்சாரியனின் திருவாக்கு..


சமய உணர்வுடைய ஹிந்துக்களுக்கு புனித மரம்.. இதன் சுள்ளிகள்  வேள்விப் பொருட்களில் முதலிடம் பெறுபவை...

மக்கள் அரச மரத்தை வணங்கி நின்றதைக் கண்டு - எள்ளி நகையாடி இழித்துப் பழித்த போது - ஏதும் சொல்லுதற்கு இயலாதவர்களாகி நின்றோம்..

இன்றைக்கும் - மரத்தைக் கும்பிடுபவன் மடையன் என்றே நம் ஊரில் அறியப்படுகின்றது.. 

அரச மரம் தருகிஞ உயிர்வளி மட்டும் வேண்டும் என்றால் எப்படி?..

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இந்நாட்டின் சமயம் சார்ந்த மக்களின் நம்பிக்கை..
 
இதன் காரணமாகவே அரசினை நம்பி - என்றொரு சொல் வழக்கு உருவாகி - அரசனை நம்பி என்று சிதைந்து ஏளனத்துக்கு உள்ளானது..

அரச மரத்தைச் சுற்றி வந்து ஆதாயம் பெற்றோர் ஆயிரம் ஆயிரம் பேர்..

அரச மரம் வெளியிடுகின்ற காற்றைச் சுவாசிக்கின்ற பெண்களுக்கு மாதச்சுழற்சி மற்றும் கர்ப்ப சம்பந்தமான பிரச்னைகள் சீரடைகின்றன -  என்று அறியப்பட்டுள்ளது..

முன்னோர்களின் அறிவாற்றலுக்கு இதுவும் ஒரு சாட்சி..

இருந்தும் இன்று ஊருக்கு ஊர் செயற்கை மருத்துவ முறைகளை மக்கள்
நாடுவது வியப்பு தான்..

அன்றைய நாட்களில் பெண் குழந்தை தளர் நடை இடும் பருவத்தில் இடுப்பில் அரசிலை என்றொரு  ஆபரணம் சாற்றுவது வழக்கம்.. இது தாய் மாமன் செய்ய வேண்டிய சடங்கு..

அஞ்சாம் மாசம் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின் போது திரும்பி வந்தானாம்.. - என்று, கால தாமதத்திற்கான - சொல் வழக்கும் உண்டு..

இப்போது அரசிலை சாற்றுகின்ற சம்பிரதாய சடங்கு இல்லை..

அரசிலைக்கு  மேகலை என்றும் பெயர்..  அரச மகளிர்க்கான ஆபரணங்களில் மேகலையும் ஒன்று.. 

மகாபாரதத்தில் துரியோதனின் மனைவியுடன் கர்ணன் பகடை ஆடிய போது அவனுக்குப் பின்புறமாக தனது கணவன் வருவதை கண்ணுற்று -  அரசியான பானுமதி எழுந்திருக்க,

அது கண்டு கர்ணன் கை நீட்ட அதற்குப் பின் நிகழ்ந்தது நட்பின் உச்சம்..


மேலை நாகரிகத்தில் காதலின் அடையாளமாகக் குறிக்கப்படுகின்ற அடையாளம் இதயத்திற்கானது என்று சொல்லப்பட்டாலும் அது மேகலையின் அடையாளம்...

மேலும், அறிவாற்றல் இம்மரத்தின் நிழலில் விளைகின்றது என்பதும் உண்மையே.. 

இதன் பொருட்டே 
ஞானத்தின் வடிவாகிய விநாயகர் அரச மரத்தின் கீழ் திகழ்கின்றார்..

மதுரையம்பதியில் அரசரடி என்றொரு வட்டாரம் பிரசித்தம்.. அங்கே அரசரடிப் பிள்ளையார் சிறப்புடையவர்..


திருமூலர் திரு ஆவடுதுறையில் அரச மரத்தின் கீழ் யோகத்தில் இருந்தே
திருமந்திரம் எனும் ஞான நூலை அருளினார்..

சித்தார்த்தர் - ஞானம் பெற்று புத்தர் என்றானதும் அரச மரத்தின் கீழ் இருந்தே..

இம்மரத்தின் இலைகளில் புல்லை விட  கூடுதலாகப் புரதச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதனால் அவை எளிதில் செரிக்கப்பதில்லை - என்கின்றனர் வல்லுநர்கள்..

ஆயினும் ஆடு மாடுகள் விரும்பித் தின்கின்றன.. யானைகளுக்கு அரச இலை விருப்பமான உணவு..

அரசங்காய்கள் முத்து முத்தாக இலைக் காம்பினை ஒட்டியவாறு காணப்படும்.. அரசம் பழங்கள் பறவைகளுக்கு மிகவும் பிடித்தமானவை.. 

அரசங் கன்றுகள் ஆங்காங்கே முளைப்பதற்கு பறவைகளே காரணம்..

ஹிந்து திருமணங்களில் அரசாணிக்கால் (அரசாணைக் கால்) என்று நாட்டுவது அரச மரத்தின் சிறு கிளையைத் தான்..

அரசம் பட்டைகள் சித்த வைத்தியத்தில் மருந்து ஆகின்றன.. 

அரச மரத்தின் விதைகள் உயிர்த் திரளை அதிகரிக்க வல்லவை.. தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது..

அரச மரத்தை மனதில் நினைத்து வணங்கினாலே புண்ணியம் என்கின்றனர்..

அரசூர், அரசம்பட்டி என்று பல ஊர்கள் அதன் சிறப்பைக் காட்டுதற்கே..

அரச மரம் - திருவாவடுதுறை, திருநல்லம், திருப் பரிதிநியமம், ஆவூர்ப் பசுபதீச்சுரம் , திருஅரசிலி , திருவியலூர், திருவெண்காடு , திருச்சுழியல்  முதலிய சிவத்தலங்களின் தலவிருட்சம்.
 
அரச மரத்தை
வணங்குவோம்
வளம் பெறுவோம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, மே 18, 2024

உடையவர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 5  
சனிக்கிழமை

ஸ்ரீ உடையவரின் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு அப்போது எழுதிய பதிவு - சிறு மாற்றங்களுடன்..


ஓம் நமோ நாராயணாய!..

அஷ்டாங்க விமான தளத்திலிருந்து கேட்கின்றது அந்தப் பெருங்குரல்!..

ஆங்காங்கும் பற்பல வேலைகளைச் செய்து கொண்டிருந்த
உழைப்பாளிகளும் பாமர மக்களும் திடுக்கிட்டனர்..

தேஜோ மயமான துறவி ஒருவரை அஷ்டாங்க விமானத்தின் அருகில் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

திருக்கோஷ்டியூர் விமானம

ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளின் திருக்கோயிலின் 
முன்பாகக் கூடி -  விமான தளத்தினை வியப்புடன் 
நோக்கினர்..

இதோ மீண்டும்...

ஓம் நமோ நாராயணாய!..

யார் இவர்!.. எப்படி மேலேறிச் சென்றார்?..

இதோ மீண்டும் மூன்றாவது முறையாக - 

ஓம் நமோ நாராயணாய!..

கதிரவனால் கவரப்பட்ட கமல மலராக - கீழே திரண்டிருந்த அனைவரது முகங்களிலும் ஆனந்தப் பரவசம்!..

அவர்களை அறியாமல் ஆனந்தப் பெருக்குடன் முழங்கினர்..

ஓம் நமோ நாராயணாய!..
ஓம் நமோ நாராயணாய!..
ஓம் நமோ நாராயணாய!..

மேலே நின்று முழங்கிய துறவியின் கண்களிலிருந்து நீர்த் துளிகள் திரண்டு  அஷ்டாங்க விமான தளத்தில் விழுந்து கொண்டிருந்தன..


புண்ணிய பூமியாகிய திருக்கோஷ்டியூர்...

பரமானந்த அலைகளினூடே தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் -
திருக்கோயிலின் அருகில் இருந்த இல்லத்தின் கதவுகள் வேகமாகத் திறந்து கொண்டன..

அவ்வீட்டினுள்ளிருந்து சிவந்த கண்களுடன் வெளிப்பட்டார் - திருக்கோஷ்டியூர் நம்பி..

சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயிலின் முன்பாக -

ஆயிரக் கணக்கில் ஏழை எளியோர்.. ஏதும் அறியாப் பாமரர்.. கூப்பிய கரங்களுடன் கசிந்துரும் நெஞ்சங்கள்.. 

அண்ணாந்து நோக்கிய வண்ணம் கலங்கித் ததும்பும் கண்கள்!..

இதோ எம்மையும் கரையேற்ற ஒருவர் வந்து விட்டார்!... - என, சொல்லாமற் சொல்லின...

எல்லாவற்றையும் கவனித்த திருக்கோஷ்டியூர் நம்பி சினம் கொண்டார்..

இதன் பொருட்டோ நீ பதினெட்டு முறை எமது வாசலுக்கு வந்தனை?..

இதன் பொருட்டோ யாம் உனக்கு மகாமந்த்ரத்தை உபதேசித்தோம்?..
இந்த மகாமந்த்ரம் முக்தி தரவல்லது.. புனிதமானது.. ரஹஸ்யமானது.. 
சாமான்யர் எவர்க்கும் உபதேசித்தல் ஆகாது!.. - என, கூறியிருந்தோம்..

நீயும் எமக்கு ரஹஸ்யம் காப்பதாக பிரமாணம் செய்திருந்தாய்..
ஆயினும், எமக்கு அளித்த வாக்குறுதியினை மறந்து 
நீ பிழை புரிந்ததனால் 
கொடுநரகில் கிடந்து உழல்வாயாக!.. "

அங்கே அஷ்டாங்க விமானத்தின் அருகே -
நின்று கொண்டிருந்த இளந்துறவியை நோக்கிக் கூவினார்..

அதற்கு பதில் அளிக்கின்ற விதமாக -

" ஸ்வாமி!.. அடியேனைத் தாங்கள் பொறுத்து அருளல் வேண்டும்!... 

நாராயண மந்த்ரத்தின் துணை கொண்டு நானொருவன் மட்டும் 
வைகுந்தம் புகுதல் சரியோ?.. அது நீதியோ?...

கரையேற்றுவார் இன்றிக் கிடந்துழலும் இந்த மக்கள் அனைவரும் வைகுந்தம் செல்லும் பேறு எய்துதல் வேண்டாமோ!..

மகாமந்த்ரத்தினை உச்சரித்த இவ்வளவு பேரும் 
வைகுந்தத்திற்கு ஏகுவார்கள் எனும்போது எளியேன் நரகிற் புகுந்தாலும் பாதகமில்லை!...

எளியேனைத் தாங்கள் மீண்டும் பொறுத்தருளல் வேண்டும்!... "

அஷ்டாங்க தளத்திலிருந்து இனிய குரல் காற்றலைகளில் தவழ்ந்தது..

அந்த மாத்திரத்தில் கீழே நின்று கொண்டிருந்த 
மக்கள் அனைவரும் தம்மை மறந்து ஆரவாரித்தனர்...

திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் கண்கள் பனித்தன..

என்ன தவம் செய்தனை மனமே!.. இத்திருமகனை மாணாக்கனாகப் பெறுதற்கு!.. - என, அவருள்ளம் பேருவகை கொண்டது..

அதற்குள்ளாக -  அஷ்டாங்க விமானத்திலிருந்து அந்த இளந்துறவி கீழே இறங்கி ஏழை எளிய மக்களுடன் கலந்திருந்தார்..

தமது ஆச்சார்யராகிய திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களை நெருங்கிப் பணிந்து நின்றார்..

" ராமானுஜனே!..  என்னிலும் பெரியவன் நீ!.. "

தனது மாணாக்கனை ஆனந்தப் பெருக்குடன் ஆரத் தழுவிக் கொண்டார் - திருக்கோஷ்டியூர் நம்பிகள்...

தற்போது ஸ்ரீபெரும்புதூர் என்றழைக்கப்படும் 
ஸ்ரீபெரும்பூதூர் தான் உடையவரின் அவதாரத் திருத்தலம்..

அக்காலத்தில் ஸ்ரீபெரும்பூதூரின் திருப்பெயர் - ஸ்ரீ பூதபுரி என்பதாகும்..

120 ஆண்டுகள் இப்பூலகில் வாழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர்..

வாழ்ந்த காலத்திலேயே ஜாதி பேதங்களைக் கடந்த நிலையைக் காட்டியவர்..

சமயத்திலும் சமூகத்திலும் பற்பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர்..

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் அன்பு காட்டி - அவர்களைத் திருக்குலத்தார் என்று அழைத்துப் பெரும் புரட்சி செய்தவர்...

தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கருணை கொண்டு அவர்களைத் தம்முடன் அரவணைத்துக் கொண்ட உத்தமர்...

ஸ்ரீ ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள் - ஒடுக்கப்பட்ட மக்களைத் தாழ்வாகக் கருதும் மனோநிலையில் இருந்து மீளாதிருந்ததுவே ஸ்ரீ ராமானுஜர் துறவு கொள்வதற்குக் காரணமாயிற்று..


எண்ணற்ற அருஞ்செயல்களைப் புரிந்தவர் ஸ்ரீ ராமானுஜர்...

நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார அடிசில்சொன்னேன்
ஏறுதிரு உடையான் இன்றுவந்து இவைகொள்ளுங் கொலோ..(89)
-: நாச்சியார் திருமொழி:-

அன்றைக்கு நேர்ந்து கொண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்..

ஆனால், அவள் வேண்டிக் கொண்டபடி அவளுக்குக் கைகூடவில்லை..

திருமாலிருஞ்சோலைக்கு உடையவர் தரிசனம் காண வந்தபோது ஆண்டாளின் நேர்ச்சை நினைவுக்கு வந்தது..

அழகர்கோயிலில் கள்ளழகருக்கு முன்பாக சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளின் நேர்த்திக் கடனை நிறைவேற்றியருளினார்...

அதன்பின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உடையவர் எழுந்தருளியபோது,
திருமூலத்தானத்தின் உள்ளிருந்து -

" வாரும் எம் அண்ணாவே!.. "

- என்றழைத்தவாறு எதிர் நின்று வரவேற்று மகிழ்ந்தாள் - கோதை நாச்சியார்...

நிலமகளாகிய 
கோதை நாச்சியாருக்கு 
ஆதிசேஷனாகிய உடையவர் - அன்பினால் அண்ணன் ஆகினார்!.. 
- என்றால் மேனி சிலிர்க்கின்றது..

உடையவரை ஆராதித்து வணங்குவோர்க்கு அவர் தம் நல்லாசிகளினால் சகல பாவங்களும் குற்றங்களும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு..

பரிபூரணமான பக்தி சரணாகதி இவையிரண்டும் தான் இறைவனை அடைவதற்கான எளிய வழிகள் 

- என, உபதேசித்தருளியவர் ஸ்ரீ ராமானுஜர்..

திருஅரங்கத்தில் இருந்தபோது திருக்கோயிலில் நடத்தப்பெறும் வழிபாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்தார்.. 

அந்த நடைமுறைகளே இன்றளவும் பின்பற்றப்படுகின்றன..

திருவரங்கத்தில் 
தானான திருமேனியாக 
ஸ்ரீ பெரும்பூதூரில் 
தானுகந்த திருமேனியாக  
திருநாராயணபுரத்தில் 
தமருகந்த திருமேனியாக
உடையவர் ஸ்ரீ ராமானுஜர் அருளாட்சி செய்கின்றார்.. 

சக மனிதரை மதித்து ஆதரித்து அரவணைப்பவர் அனைவரும்
உடையவரின் அன்புக்குரியவர்களே!..


மனுக்குலம் மேம்படுவதற்கான நல்வழியைக் காட்டியவர்
உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர்..

அவர் காட்டிய வழியில் பயணித்து பரமனின் நல்லருளைப் பெறுவோமாக..
 
ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே போற்றி..

ஓம் நமோ நாராயணாய..
ஃஃஃ