நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 31, 2024

உயிரே உணவே 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 17
புதன் கிழமை

முந்தைய பதிவு

பகுதி 2
சுத்தம் சுகாதாரம்


இன்று நவீன விவசாயத்தில் இரசாயன உரங்கள் கொண்டு காய்கள் பலவும் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருவதால் கல் உப்பு கரைக்கப்பட்ட நீரில் காய்களை நன்கு கழுவி எடுத்த பின்னர் தான் பயன்படுத்த வேண்டும்..

சமையல் அறையை இயன்றவரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. 

எலி மற்றும் பூச்சிகளின் தொல்லை இல்லாதிருக்க வேண்டும்.. 

சமையல் அறை இயற்கை வெளிச்சம் நிறைந்ததாகவும் காற்றோட்டமாகவும் இருத்தல் அவசியம்..

சமையல் பாத்திரங்களின் சுத்தத்தைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.. 


இருப்பினும் -
பாத்திரங்கள் கழுவுவதற்கு என - சந்தைப்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆபத்தானவை.. கலவைகளில் (Dish washing liquids) மிகுந்த கவனம் தேவை..


துரு படிந்த கத்திகள், செம்பு, அலுமினியப் பாத்திரங்களை ஒதுக்கி விடவும்..

மண்பாண்டச் சமையல் நல்லது என்றாலும் இன்றைய சூழலில் அவரவர் விருப்பம்..

சிறு தானியங்களை  கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்..

கீரை வகைகளை
மிகவும் கவனத்துடன் சுத்தம் செய்வது நல்லது.. 

கீரை வகைகளில் வேறு வித சிறு செடிகளும் கலந்திருக்கக் கூடும்.. எனவே மிகவும் கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்.. தவிர - சிறு சிறு பூச்சி புழுக்களும் கீரைகளில் இருக்கக் கூடும்..

வாழைப் பூவில் (கண்ணாடி) இழை  நரம்பு, வாழைத் தண்டில் நார், இஞ்சியின் தோல் இவற்றை நீக்குவதில் கவனம் தேவை..

காய்களைக் கழுவுவதற்கு சுத்தமான தண்ணீரைத் தான் பயன்படுத்த வேண்டும்..

தானியங்களையும் கவனமுடன் சுத்தம் செய்து நல்ல தண்ணீரில் தான் கழுவி எடுக்க வேண்டும்..

மிளகாய் மல்லி பருப்பு வகைகளை  மொத்தமாக வாங்கி சுத்தம் செய்து வீட்டில் சேமித்துக் கொள்வது நல்ல பழக்கம்..

இவற்றை கவனமுடன் சுத்தம் செய்து காற்று புகாத உலர்ந்த பாத்திரங்களில் சேமித்துக் கொள்ளவது நலம்..

வீட்டில் நெல்லை அவித்து அரிசியாக அரைத்தெடுக்கும் வழக்கம் முற்றாகவே தொலைந்து போயிற்று.. 

இந்நிலையில்
வீட்டு அரிசி எனில் இரண்டு முறை கழுவி எடுத்தால் போதும்.. வெளியிடத்து அரிசி என்றால் அதிக கவனம் தேவை..

இயன்றவரை -
நெய் எண்ணெய் இவற்றில் வெளி தயாரிப்புகளை விட்டு நீங்கினாலே வீட்டில் ஆரோக்கியம் நிலவும்..

அருகில் உள்ள கிராமங்களைத் தொடர்பு கொண்டு இயன்றவரை எள்,  கடலை இவற்றை நாமே முன்னின்று வாங்கி செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்துக் கொன்வதே சாலச் சிறந்தது..

இன்றைய உணவு வர்த்தகத்தில் எவர் மீதும் எதற்காகவும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதே நம்முடைய கலாச்சாரத்தையும்  உடல் நலனையும் மீட்டெடுப்பதற்கான ஒரே வழி..

மேலும் குறிப்புகள்
அவ்வப்போது
வெளிவர இருக்கின்றன..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

நாளும் வாழ்க
நன்றென வளர்க..
***

செவ்வாய், ஜனவரி 30, 2024

ஸ்ரீ வைத்ய நாதம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 16
செவ்வாய்க்கிழமை


இறைவன்
ஸ்ரீ வைத்தீஸ்வரன்


அம்பிகை
ஸ்ரீ தையல்நாயகி


தீர்த்தம்
சித்தாமிர்தம்
தலவிருட்சம்
வேம்பு 

சம்பாதி, ஜடாயு, என்ற கழுகரசர் இருவரும் ரிக் வேதமும்  முருகப்பெருமானும், சூரியனும் அங்காரகனும் காமதேனுவும் வழிபட்ட  திருத்தலம்.. 

தண்டக வனத்தில் இருந்து சீதையை வஞ்சத்தால் இராவணன் கடத்திச் சென்ற போது கழுகு அரசனான ஜடாயு இடைமறித்து அவனைத் தாக்கினான்..

இராவணனின் எதிர்த் தாக்குதலுக்கு உள்ளாகிய ஜடாயு சந்திரஹாசம் எனும் வாளால் வெட்டப்பட்டு - தன் சிறகை இழந்து பூமியில் விழுந்தான்.. 

பெரிய பெருமாளும்  சிறிய பெருமாளும் சீதையைத் தேடிக் கொண்டு வந்தபோது அவர்களிடம் நடந்ததைச் சொல்லி விட்டு ஸ்ரீராமபிரானின் மடியில் உயிர் துறந்தான்..

ஜடாயுவிற்காக கண்ணீர் வடித்த ஸ்ரீராமபிரான் தம்பியுடன் சேர்ந்து ஜடாயுவிற்கு இங்கே தகன க்ரியைகளைச் செய்ததாக தலபுராணம்..   

சித்தாமிர்த திருக்குளத்தின் வடகரையில் (கோயிலின் உட்பிரகாரம்)   ஜடாயுவிற்கு தீ மூட்டப்பட்ட  குண்டம் உள்ளது.. 

மனித குலத்தை எல்லாப் பிணிகளில் இருந்தும் காப்பதற்காக இறைவன் இங்கு வீற்றிருப்பதால் - 
வைத்தீஸ்வரன்..
வைத்தியலிங்கம்..
வைத்தியநாதன்..


அம்பிகை ஸ்ரீ தையல் நாயகி. சர்வ ரோக நிவாரணி.. தைலப் பாத்திரத்துடனும்,  வில்வ மரத்தின் வேரடி மண்ணுடனும் ஐயனுடன் எழுந்தருளியிருக்கின்றாள்..

தல விருட்சமாக
கிருத யுகத்தில் கொன்றை.
திரேதா யுகத்தில் அரசு.
துவாபர யுகத்தில் வில்வம்.
கலி யுகத்தில் வேம்பு..

மேற்கு முகமான திருக்கோயில்..

தீர்த்தம் சித்தாமிர்தம்..
நடுவில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம்..
இந்தக் குளக்கரையில் கற்பக விநாயகர்..

கருவறைக்குப்  பின்னால் கிழக்குத் திருச்சுற்றில்  நவக்கிரகங்கள்.. இத்தலத்தில் இறைவனின் ஆணைப்படி - ஆளுக்கொரு திசை என்றில்லாமல்   வக்கிரமின்றி
பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.. அருகில் தன்வந்த்ரி.. ஐயனார்..

தெற்கு திருச்சுற்றில் அறுபத்து மூன்று நாயன்மார்கள்.. இங்குதான் ஜடாயு குண்டம்.. ஸ்ரீராம லக்ஷ்மணர் திருமேனிகள்..

நேர் எதிரில் தக்ஷிணாமூர்த்தி.. நேர் மேலாக மாடத்தில் ஸ்ரீ சட்டநாத ஸ்வாமி..

சூரனுடன் போர் புரிவதற்குக் கிளம்புமுன் தேவசேனாதிபதியாக முருகன் இங்கே அம்மை அப்பனை வணங்கியதாக ஐதீகம்..

இத் தலத்தில் முருகப்பெருமான்  - செல்வ முத்துகுமார ஸ்வாமி.. இவரது சந்நிதி மூலஸ்தான வாசலுக்கு இடப்புறம்.. உற்சவ மூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் அலங்காரத் திருக்கோலம்.. 

இங்கு இவர் செல்லப் பிள்ளை ஆனதால் நித்ய அனுஷ்டானங்கள் இவருக்குப் பிறகு தான் அப்பனுக்கும் அம்மைக்கும்..

கிழக்கு வாசலின் எதிரில் காவல் நாயகமாக ஸ்ரீ முனீஸ்வரன்..

கிழக்குக் கோபுரத்தின் அருகில் ஸ்ரீ பைரவர்
வெளிப் பிரகார வட புறத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் சந்நிதி.. கீழைக் கோபுரத்தின் அருகில் தண்டாயுதபாணி சந்நிதி..  வெளியில் ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி சந்நிதி..

எதிரில் கலி யுகத்தின் ஸ்தல விருட்சமாகிய வேம்பு..

தென்புறம் தனியாக அங்காரகனின் சந்நிதி..

மனுக்குலத்தின் 
நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்ப்பதற்குத் திருவுளம் கொண்டு இறைவன் அருள் பாலிக்கின்ற திருத்தலம் இது..

ஞானசம்பந்தப் பெருமானும் நாவுக்கரசரும் திருப்பதிகம் பாடிவழிபட்ட திருத்தலம்..


பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்  
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்  
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலைக் கொண்ட  
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஜனவரி 29, 2024

உயிரே உணவே 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 15 
 திங்கட்கிழமை


தஞ்சையில் - 
கடந்த டிசம்பர் 30, 31 - ஜன 1 ஆகிய நாட்களில் - நளன் உணவகத்தினர்  நடத்திய உயிர் காக்கும் உணவு எனும் நிகழ்வில் வழங்கப் பெற்ற கையேட்டில் ஒன்பது தலைப்புகளின் கீழ் குறிக்கப்பட்டிருந்த விஷயங்கள் சற்று 
மெருகேற்றப்பட்டு இன்று முதல் நமது தளத்தில்  வெளியாகின்றன..

பகுதி 1

 தேர்ந்தெடுத்தல்


வாதம் பித்தம் கபம் என்று குறிக்கப்பட்ட மூன்றனுள் நமது உடல் வாகு எது என்பதை அறிந்து அதற்கேற்ற உணவு வகைகளை உண்பதே சாலச் சிறந்தது..

உடலுக்கு ஒவ்வாத உணவுகளை ஒதுக்கி விடுதல் நல்லது..

அன்றாட உணவில் ஓரளவு அரிசியுடன் இதர தானியங்கள், பருப்புகள், கீரைகள் காய்கள், கனிகள்  ஆகியனவும் இடம் பெறுதல் வேண்டும்..

இன்று நவீன விவசாயத்தில் இரசாயன உரங்கள் கொண்டு காய்கள் பலவும் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருவதால் கல் உப்பு கரைக்கப்பட்ட நீரில் காய்களை நன்கு கழுவி எடுத்த பின்னர் பயன்படுத்த வேண்டும்..

பருவ காலத்திற்கு ஏற்ற உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணுதல் வேண்டும்.. கோடையில் உடலுக்கு இயற்கையாகவே  குளிர்ச்சியூட்டும் உணவுகளையும் மழைக் காலத்தில் உடலுக்கு உஷ்ணம் தருகின்ற உணவுகளையும் உண்பது அவசியம்..

எளிதில் ஜீரணமாகின்ற உணவுகளே ஏற்றவை..



நாம் அன்றாடம்  பயன்படுத்துகின்ற தானியங்கள், பருப்புகள், கீரைகள் காய்கள், கனிகள் இவற்றைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம்..

உண்ணும் உணவில் இயன்றவரை அறுசுவைகளும் சீராக இருப்பது நல்லது.. 

கழிவுகள் தேங்காமல் இருப்பதற்கு நார்ச்சத்து அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

வேறு வேறு சுவையுள்ள பழங்களை (ஆரஞ்சு/வாழைப்பழம் ) உண்பது கூடாது..

சமைத்த உணவுடன் பச்சைக் காய்கள் ( வெள்ளரிக்காய்) மற்றும் பழங்கள் இவற்றைச் சாப்பிடுவதும் கூடாது..

தேநீர், காஃபி, நவீன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது..

இரவு கண் விழித்து தூக்கம் கெட்டிருந்தால் மறு நாள் அகத்திக் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.. 

அதே நேரத்தில் -
சித்த மருந்துகள் எடுத்துக் கொள்வதாயின் அகத்திக் கீரை கத்தரிக்காய் பாகற்காய் இவற்றை முற்றாகத் தவிர்த்திட வேண்டும். 

இவற்றால் மருந்து முறிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன..


மூன்று வேளையும் சமைத்த உணவு உண்பதை விடுத்து
(வாரத்தின் சில நாட்களில்) ஒரு வேளையாவது சமைப்பதற்கு அவசியம் இல்லாத காய்களையோ பழங்களையோ உண்பது நல்லது..

வாரத்தில் மூன்று நாட்கள் வசதிக்கு ஏற்றவாறு கம்பு சோளம் கேழ்வரகு இவற்றில் ஏதாவதொன்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..

வெள்ளை நிற சீனி, அதிக காரம் (மிளகாய்), புளிப்பு, மைதா இவை உடலுக்குக் கேடானவை..

செயற்கையான  சுவை, நிறம் மணம் - ஏற்றப்பட்ட உணவு வகைகளில் விலகி இருப்பது நல்லது..

உண்ணும் உணவு கொதிக்கக் கொதிக்க இல்லாமல் வெதுவெதுப்பாக இருத்தல் வேண்டும்..

காலை உணவு - கஞ்சி, இட்லி, இடியாப்பம், பொங்கல் என்று இருப்பது நல்லது..


வாரத்தில் ஓரிரு நாட்கள் துளசி, வேம்பு, அருகம்புல்,  கற்பூரவல்லி - ஏதாவதொரு மூலிகையைப் பயன்படுத்த வேண்டும்..

நோய் வாய்ப்பட்டோர் நோய் தீர்க்கும் உணவை அறிந்து உண்ணுதல் வேண்டும்..

கருகிய அல்லது சமைக்கும் போது அடிபிடித்த உணவுகள் உண்பதற்குத் தகாதவை..

மேலும்
குறிப்புகள்
அவ்வப்போது
வெளிவர இருக்கின்றன..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

நாளும் வாழ்க
நன்றென வளர்க..
***

ஞாயிறு, ஜனவரி 28, 2024

புள்ளிருக்கு வேளூர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 14
ஞாயிற்றுக்கிழமை

தற்சமயம் எனக்குக்
கை விரல்களில் வலி.. 
தட்டச்சு செய்வதில் 
பிரச்னை என்றாலும் நற்பணியாகிய இதைச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி..
**
ஸ்ரீ தையல் நாயகி சமேத
வைத்தீஸ்வரன் கோயில்
தரிசனம்

மயிலாடுதுறை
சந்திப்பில்




இறைவன்
ஸ்ரீ வைத்தீஸ்வரன்
அம்பிகை
ஸ்ரீ தையல் நாயகி

தீர்த்தம்
சித்தாமிர்தம்
தலவிருட்சம்
வேம்பு 













திறங்கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம்  உரைத்த பிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.. 2/43/6
-: திருஞானசம்பந்தர் :-

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, ஜனவரி 27, 2024

ஸ்ரீராம ராம..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 13
சனிக்கிழமை


என் நாதன் தேவிக்கு  அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே  தண்பூ மரத்தினை
வன் நாதப் புள்ளால்  வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையைப் பாடிப் பற
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.. 307

என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும்  தவத்தை எதிர்வாங்கி
முன் வில் வலித்து  முதுபெண் உயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற... 308

உருப்பிணி நங்கையைத்  தேர் ஏற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கு ஏக  விரைந்து எதிர் வந்து
செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.. 309


மாற்றுத்தாய் சென்று  வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து  எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக்  கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற.. 310


பஞ்சவர் தூதனாய்ப்  பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல்  பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற..311


முடி ஒன்றி  மூவுலகங்களும் ஆண்டு  உன்
அடியேற்கு அருள் என்று  அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.. 312

காளியன் பொய்கை  கலங்கப் பாய்ந்திட்டவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு  அருள்செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணிவண்ணனைப் பாடிப் பற..313


தார்க்கு இளந்தம்பிக்கு  அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள்  சொற்கொண்டு போகி  நுடங்கு இடைச்
சூர்ப்பணகாவைச்  செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.. 314

மாயச் சகடம் உதைத்து  மருது இறுத்து
ஆயர்களோடு போய்  ஆநிரை காத்து அணி
வேயின் குழலூதி  வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.. 315


காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி  ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.. 316


நந்தன் மதலையைக்  காகுத்தனை நவின்று 
உந்தி பறந்த ஒளியிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென்புதுவை  விட்ணு சித்தன்சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே.. 317
-: பெரியாழ்வார் :-

நன்றி
-: நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் :-

ஸ்ரீ ராம ராம
ஜெய ராம ராம
ஸ்ரீ கிருஷ்ண க்ருஷ்ண
ஜெய க்ருஷ்ண க்ருஷ்ண
***

வெள்ளி, ஜனவரி 26, 2024

உவரியில் தேர்



நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 12
வெள்ளிக்கிழமை

திருச்செந்தூரில் இருந்து நாற்பது கிமீ., 
தொலைவில் உள்ள கடற்கரை கிராமம் உவரி..

தென் மாவங்களில் பிரசித்தமான 
உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி 
திருக்கோயில் இங்குதான் உள்ளது.. 

ஆவணியில் பெருங்கொடை.. 

வைகாசி விசாகத்திலும் 
தைப் பூசத்திலும் 
பத்து நாள் திருவிழா ரதோற்சவம்... 

நேற்று 
ஸ்ரீ மனோன்மணி அம்பிகையுடன் 
ஸ்ரீ சந்திரசேகரர் திருத்தேரில் எழுந்தருளிய
தைப்பூசத் 
திருவிழாவின் 
சில காட்சிகள் இன்றைய பதிவில்..
**

படங்கள் காணொளிகளுக்கு நன்றி 
உவரி ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமி பக்தர் பேரவை..
















 

இல்லக விளக்கது
  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
  சோதி யுள்ளது
பல்லக விளக்கது
  பலருங் காண்பது
நல்லக விளக்கது
  நம சிவாயவே.. 4/11/8
-: திருநாவுக்கரசர் :-
**


இன்று
பாரதத் திருநாட்டின்
குடியரசு நாள்..

அனைவருக்கும்
அன்பின்
நல்வாழ்த்துகள்



வாழ்க பாரதம்
வாழ்க பாரதம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***