நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 20
வெள்ளிக்கிழமை
குறளமுதம்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.. 105
**
ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்..
**
முப்பத்து முக்கோடி தேவர்களையும்
காத்தருள்பவனே
கண் விழிப்பாயாக..
செம்மை உடையவனே..
பகைவரை அடக்கி அவர்களுக்கு
அனல் போன்று துன்பங்களைக் கொடுப்பவனே..
எழுந்து வருவாயாக..
செப்பன்ன மென்முலையும்
செவ்விதழும் சிற்றிடையும்
இலங்கும் நப்பின்னைத் திருவே..
எழுந்து வந்து எமது நோன்புக்குத் தேவையான
ஆல வட்டத்தையும் கண்ணாடியையும்
உன் மணவாளனையும் தந்து நாங்கள் மகிழ்ச்சியில் நீராடும்படிக்கு அருள்வாயாக!..
**
திருப்பாசுரம்
வெண்திரைக் கருங்கடல் சிவந்துவேவ முன்ஒர்நாள்
திண்திறல் சிலைக்கை வாளி விட்டவீரர் சேரும்ஊர்
எண்திசைக் கணங்களும் இறைஞ்சிஆடு தீர்த்தநீர்
வண்டிரைத்த சோலைவேலி மன்னுசீர் அரங்கமே.. 801
-: திருமழிசையாழ்வார் :-
திருப்பாவையைப் பாடி சேவிக்கும் போது ஏனைய பாசுரங்கள் ஓதப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் இத்துடன் திருப்பாசுரப் பகுதி நிறைவடைகின்றது..
**
சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1
-: திருஞானசம்பந்தர் :-
**
போற்றித்
திருத்தாண்டகம்
(திரு ஆரூர்)
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 9
-: திருநாவுக்கரசர் :-
**
திருவாசகம்
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 9
-: மாணிக்கவாசகர் :-
**
தொகுப்பிற்குத் துணை
நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
படங்களை ரொம்பவே ரசித்தேன்.
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் அருமை. பாடல்களை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குபால் நினைந்தூட்டும் பள்ளியில் படிக்கும் நாளில் மனப்பாட பகுதியில் இடம்பெற்றது. அடிக்கடி பாடிய பாடல்.
சிக்கெனப் பிடித்த பாடலுக்கு ஏற்ற படம் அருமை.
பதிலளிநீக்கு