நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆஞ்சநேயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆஞ்சநேயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி

சொல்லின் செல்வன். இது ஆஞ்சநேயருக்குக் கிடைத்த உயரிய விருது.

தன் பலம் எல்லாம் இன்னதென்று தெரிந்திருந்தும் தன்னடக்கத்துடன் இருந்த மாவீரன் - வாயு மைந்தன்!..


வைகுந்தத்தில்  - 

இராவணனனுக்கு ஒரு முடிவு கட்டுவதென்று முடிவானதும் - 

அந்த கைங்கர்யத்தில் யாரெல்லாம் எந்த மாதிரியெல்லாம் பங்கெடுத்துக் கொள்வது என்று மிகப் பெரிய மந்த்ராலோசனை நடை பெற்றிருக்கின்றது. 

கதை போகும் போக்கு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாததாலும் புரியாததாலும் ஸ்ரீமந்நாராணயனே - 

அவரவருக்குமான பாத்திரப் படைப்பினை வகுத்தருளினார்.

மிக மிக முக்யமானதும் ஆபத்தானதுமான - அந்த பாத்திரத்தைத் தாங்கக் கூடியவர் யாரென்று யோசித்து யோசித்துக் களைத்த வேளையில் -

எல்லாம் வல்ல சிவம் - ருத்ராம்சம் கொண்டு வெளிப்பட்டு நிற்க,

அதன் பின்  - எல்லாத் திட்டமிடலும், 

மங்களம் சுப மங்களம் என்று பூரணமாகியிருக்கின்றது.

இந்த அற்புதத்தினை அருணகிரிப் பெருமான் - திருப்பரங்குன்ற திருப்புகழில் பாடி மகிழ்கின்றார். 


இரவி இந்த்ரன் வெற்றிக் குரங்கின்
அரசன் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கினக் கர்த்தனென்றும் - நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற் சிறந்த 
அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர் 
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து  - புனமேவ

அரியதன் படைக் கர்த்தர் என்று
அசுரர் தங்கிளைக்கட்டை வென்ற 
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின்  - மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து 
உலகமும் படைத்துப் பரிந்து 
அருள்பரங் கிரிக்குட் சிறந்த  - பெருமாளே!.. 

வெற்றி கொள்ளும் வானர அரசர்கள் எனும் - 
சுக்ரீவனாக - சூரியன் ,  வாலியாக  - இந்திரன் 
ஜாம்பவான் ஆக - திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரமன்
நுட்மான திறன் கொண்ட நீலன் ஆக  - அக்னி ,

- என்று திட்டமிடப்பட்டபோது,

அஷ்டமா சித்திகளையும் தன்னகத்தே கொண்ட அனுமன் - என,

எல்லா வகையிலும் சிறந்த ருத்ரன் விளங்க - இப்படியாக, தேவர்கள் அனைவரும்  அரியதோர் படைக்கு நாயகர்களாக - பூமிக்கு வந்து தன்னுடன் இணைந்திட -

அந்தப் படையைக் கொண்டு - அசுரர் தம் சுற்றம் எனும் பெருங்கூட்டத்தைப் பூண்டோடு அழித்தவனாகிய  - ஸ்ரீராமன் எனும் ஹரிமுகுந்தன் மகிழ்ந்து, 

நற்பண்பில் விளங்கும் என் இனிய மருகனே!.. எனப் புகழும்  திருப்பரங் குன்றத்தின் முருகனே!..- என்று அருணகிரி நாதர் புகழ்கின்றார்.

இத்தகைய சிறப்புக்குரிய ஆஞ்சநேயர்,  

வானர வீரன்  கேசரி - அஞ்சனா தம்பதியினரின் அன்பு மகனாக  - மார்கழி மாதத்தில் -  மூல நட்சத்திரத்தன்று  தோன்றினார்.

சிவபூஜையில் சிறந்து விளங்கிய அந்த இளந்தம்பதியரை வாழ்த்தி  - ருத்ர அம்சத்தை மாங்கனியாக வழங்கியவன் - வாயு!.. எனவே - வாயு புத்ரன்!..


பிறந்ததுமே வானில் தெரிந்த இளஞ்சூர்யனைப் பழம் எனக் கருதி விண்ணில் தாவினார். 

ராகு கேது முதலான அசுரர்களின் தொல்லைகளினால் அஞ்சிக் கிடந்த இந்திரன் - பால ஆஞ்சநேயரின் அசாத்தியத்தைக் கண்டு அஞ்சினான். 

எப்போதும் எதையும் முன்னதாக யோசித்தறியாத இந்திரன் வழக்கம் போலவே - தவறாக முடிவெடுத்து - சூரியனைக் காப்பதற்காக நினைத்துக் கொண்டு குழந்தையின் மீது வஜ்ராயுதத்தை பிரயோகிக்க - 

அது பால ஆஞ்சநேயரின் தாடையில் தாக்கியது. பெருந்தாக்குதலினால் - நிலைகுலைந்த ஆஞ்சநேயரின் அபயக்குரல் கேட்டு ஆர்த்தெழுந்த வாயு - இந்திரனின் அடாத செயலைக் கண்டு மனம் பொறுக்காதவனாக - 

பால ஆஞ்சநேயரைத் தன் தோளில் சுமந்து கொண்டு ஒரு குகைக்குள் சென்று  மறைந்து  - தன்னைத் தானே  முடக்கிக் கொண்டான்.  தன் இயக்கத்தைத் தானே நிறுத்திக் கொண்டான்.  இதனால் - சர்வலோகமும் ஸ்தம்பித்தது.

அதன் பின்,  தேவர்களும் மூவர்களும் ஒன்று கூடி - அஞ்சனையின் மகனுக்கு  - வர ப்ரசாதங்களை வழங்கி - சிறப்பித்தனர்.


ஆஞ்சநேயருக்கு சூரியனே - ஓம் என வித்யாரம்பம் செய்து வைத்தான். 

அதன் பின்,  ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷியின் குருகுலத்தில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

அனைத்தையும் கற்று உணர்ந்திருந்தாலும்  - வேடிக்கைக் குறும்புகள் அவரை விட்டுப் போகவில்லை. இதனால் அவரது வலிமை குறைந்து விடக்கூடாது எனக் கருதிய மகரிஷிகள் - 

அனுமனின் பலம் தற்காலிகமாக அவருக்கு மறந்து போகட்டும். ஸ்ரீராம கைங்கர்யத்தின் போது ஜாம்பவான் நினைவு படுத்தும் போது மீண்டும் பொலிந்து விளங்கட்டும்!..   - என கட்டுப்படுத்தி வைத்தனர்.

காலச் சக்கரம் வேகமாகச் சுழல - வானரவேந்தன் சுக்ரீவனின் அமைச்சராக அமர்ந்தார்.

வாலியின் கோபத்திலிருந்து சுக்ரீவனைப் பாதுகாத்து, ரிஷ்ய சிருங்க மலையில் - தங்க வைத்தார்.

அண்ணலும் இளைய பெருமாளும் - ஜானகியைத் தேடி வந்த போது  - அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு - ராமபிரானுடன் சுக்ரீவன் நட்பு கொள்ள காரணமானார்.

இராம பாணத்தால் - வாலி வீழ்ந்த பிறகு -  பேச்சுப்படி படை திரட்டாமல் மயங்கிக் கிடந்தான் சுக்ரீவன். அந்நிலையில் வெகுண்டு வந்த இளைய பெருமாளின் கணைகளிடமிருந்து - மீண்டும் சுக்ரீவனின் உயிரைக் காப்பாற்றி அருளினார்.

சீதா தேவியைத் தேடிக் களைத்த வேளையில் - தோற்று விட்டோம் என அஞ்சிய வானர வீரர்கள் தற்கொலைக்கு முயன்றபோது - அவர்களைக் காத்தருளியவர்  - ஆஞ்சநேயர்.


பின்னும் இலங்கையில் - இராவணனின் கொடுமையால்  - தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சீதையையும் காத்தருளினார். 

யுத்தத்தின் போது  - இந்திரஜித் ஏவிய பாணங்களினால் மயங்கி விழுந்த லக்ஷ்மணனைக் காத்தருள வேண்டி - சஞ்சீவி மூலிகைக்காக  - மலையையே பெயர்த்தெடுத்து வந்தவர் ஆஞ்சநேயர்.


பின்னும்  - அண்ணன் சொன்ன நாள் கடந்து விட்டதெனக் கருதி  பெருந் தீக் குழியினுள் புகத் துணிந்த பரதன் உயிரையும் காத்து நின்றவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயரைக் குறித்த தகவல்களுக்கு அளவேயில்லை.

இத்தனை அசாத்தியங்களும் அவருக்கு எப்படிக் கிடைத்தது?.. 

அதிகார மூர்த்தியாகிய நந்தி தேவர் - இராவணனுக்கு அளித்த சாபத்தினால்!..

இராவணன் - தனது சகோதரன் - குபேரனிடமிருந்த புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டு - அதில் கர்வத்துடன் பயணித்தபோது , திருக்கயிலாய மாமலையைக் கடக்க வேண்டியிருந்தது. 

அந்த விமானத்தை இயக்கிய சாரதி சொன்னான். கயிலாயத்தை வலம் வர வேண்டும் - என்று!..

நானாவது!.. வலம் வருவதாவது?.. இங்கே இருப்பது தானே இடைஞ்சல்!.. எடுத்து விட்டால்!..

எடுக்க முயற்சித்தான். அதைக் கண்ட நந்தி தேவர் கூறினார்.

அடாத செயலைச் செய்யாதே!.. ஐயன் உறையும் மலை!.. அடங்கிச் செல்!..

நான் இராவணன்!.. இலங்காதிபதி!.. எட்டுத் திக்கும் என் காலடியில்!.. பத்துத் தலைகளுடன் பாராளுபவன்!.. கனங்கொண்டவன்!.. அரக்க மனங் கொண்டவன்!.. அப்படிப்பட்ட எனக்கா புத்தி சொல்கின்றாய்?.. அதுவும் குரங்கைப் போல முகம்  கொண்ட - நீயா சொல்வது!..

வெகுண்டெழுந்த நந்திதேவர் சாபமிட்டார்.

மூடனே.. முன்னைப் பழவினை மூண்டு வந்து உன்  - மூளையைச் சிதைக்கின்றது. கனம் கொண்டவன் எனக் கொடுவிடம் கொண்டிருப்பவனே - உன்னைக் களங்கண்டு வெல்ல வருவான் ஒருவன். வெற்றுத் தலைகொண்ட வீணனே!.. உன் பத்துத் தலைகளையும் கத்தரித்து எறிய கையில் கோதண்டம் ஏந்தி வருவான் ஒருவன்!.. குறுமதி கொண்ட நீயும் உன் நாடும் ஒரு குரங்கினாலே அழியக் கடவாய்!.. 

இந்த சாபமே - ஸ்ரீ ஆஞ்சநேயரின் திரு அவதாரத்திற்கு அடிப்படை. 


ஆஞ்சநேயர் தம்மை நாடித் தொழும் பக்தர்களுக்கு - புத்திக் கூர்மை, புகழ், நெஞ்சுறுதி, அஞ்சாநெஞ்சம், ஆரோக்யம், உற்சாகம், வாக்கு வன்மை - ஆகியனவற்றை நல்குவதாக -  த்யான ஸ்லோகம் மொழிகின்றது.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா 
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத்:

குருக்ஷேத்திரத்தில், பரந்தாமன் - பார்த்தசாரதியாக  - அர்ச்சுனனுக்குக் கீதை உரைத்தபோது, அதனைத் தேரின் கொடியில் இருந்தபடி -  தாமும் கேட்டவர் ஸ்ரீஆஞ்சநேயர்.


எங்கெல்லாம் - ஸ்ரீராம நாம பாராயணம் நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீர் அருவியாக வழிய - கேட்டுக் கொண்டிருப்பவர் ஸ்ரீஆஞ்சநேயர்.

நாளை - 01.01.2014 - ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்தி!..

தூய உள்ளத்துடன் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியைப் 
பணிந்து அனைத்து நலன்களையும் பெறுவோமாக!..

கார்ய ஸித்தி மந்த்ரம் 
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் தவ கிம்வத 
ராமதூத க்ருபாசிந்தோ மத கார்யம் ஸாதய ப்ரபோ: 

நமஸ்கார மந்த்ரம் 
ராம தூத மஹாதீர ருத்ர வீர்ய ஸமுத்பவ 
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்ர நமோஸ்து தே;

காயத்ரி மந்த்ரம் 
ஓம் தத் புருஷாய வித்மஹே 
வாயு புத்ராய தீமஹி 
தந்நோ: மாருதி ப்ரசோதயாத்: 


அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப்புதல்வன் செல்வன் 
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராம தூதன் 
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பருக்கென்றும் 
அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே!..

ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜயராம்

புதன், ஜனவரி 09, 2013

ஸ்ரீஆஞ்சநேயர்

thanjavur14
ஸ்ரீஆஞ்சநேயர், கேசரி - அஞ்சனாதேவி என்ற உத்தமமான வானர தம்பதியர்க்கு வாயுபகவான் அருளால் ருத்ர அம்சத்துடன் மார்கழி மாதம் - மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். 

வானர வீரனான கேசரியும் அஞ்சனாதேவியும் வனத்தில் தவமிருந்த முனிவர்களுக்கு பலவகையினிலும் உறுதுணையாய் இருந்ததன் பொருட்டு, முனிவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயினர். 

உலகம் உய்வடைய வேண்டி பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்  எம்பெருமான் - ஸ்ரீராமபிரானாக திருஅவதாரம் கொள்ள திருஉளம் பற்றிய நேரத்தில், 

ஸ்ரீமன் நாராயணமூர்த்தியுடன் ருத்ர அம்சமும் பூமியினில் அவதரிக்க கேசரி - அஞ்சனா தம்பதியினரே - கருத்தில் கொள்ளப்பட்டனர் என்றால் இவர்களின் பெருமையினை என்ன என்பது!..... அனுமன் ருத்ர அம்சம் என்பதனை அருணகிரி நாதர் - திருப்பரங்குன்ற திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.

அனுமன், வாயு புத்திரன் என்பன  திருப்பெயர்கள். மாருதம்  ஆகிய வாயுவின் மகன் எனும் பொருளில் மாருதி எனும் திருப்பெயர் பிரசித்தமானது.

அனுமன் குழந்தையாய் இருந்தபோது, சூரியனை - பழம் என  நினைத்து அதைப் பறிப்பதற்காக வானில் தாவி சூரியனை நெருங்கினார். இதைக் கண்ட இந்திரன் அனுமனைத் தடுக்க வேண்டி - 

'' ஒரு வானரத்திற்கு இத்தனை வலிமையா?...'' என அஞ்சி, ''அசுரர்களின் வேலை இது''... என்று வழக்கம் போல தவறாக முடிவெடுத்து - வஜ்ராயுதத்தால் அனுமனை அடித்தான். 

இந்திரனின் அடாத செயலைக் கண்டு வெகுண்ட வாயு, தாடையில் அடிபட்டதால் மயக்கமடைந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஒரு குகைக்குள் நுழைந்து தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டான்.

வாயுவின் இயக்கம் நின்றதால் பிரபஞ்சம் தடுமாறியது. நிலைமையினை உணர்ந்த மும்மூர்த்திகளும் ஏனைய தேவர்களும்  அனுமனை பற்பல வரங்களால் சிறப்பித்தனர். இதனாலேயே மறுபடியும் அனுமன், சூரியனைத் தொடர்ந்து சென்று ''ஹரி ஓம்'' என மந்திர உபதேசம் பெற்றார். பின் யாக்ஞவல்கிய மகரிஷியிடம் வேதங்களைக் கற்றார். மகாபலசாலியாகவும் ஆனார். 

சிறு பிள்ளைக் குறும்புகளால் தன் சக்தியினை - தானே மறந்தவரானார். அதே சமயம் எவரேனும் போற்றித் துதித்தால், அந்த சக்தி பன்மடங்காக வளரும் என வரமும் பெற்றவர். தாய் தந்தையரிடம் பெரு மதிப்பும் மரியாதையும் கொண்டு விளங்கியவர். பிரம்மசர்ய விரதம் பூண்டவர். ஸ்ரீராமபிரானின் வருகையினை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்.  

கால ஓட்டத்தில் சுக்ரீவனின் முதலமைச்சராக இருந்து, கிஷ்கிந்தா வனத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தபோது தொலைவில் ராம - லக்ஷ்மணரைக் கண்டார். அதுவரை ராமனை நேரில் கண்டிராத அனுமன் உள் உணர்வால் உந்தப்பட்டு  "என் ராமனோ" என ஐயுற்றார். 

ஒரு அந்தணச் சிறுவனைப் போல உரு மாறி அவர்கள் எதிரில் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். வந்திருப்பவர்கள் ஸ்ரீராம - லக்ஷ்மணர் தான் என அறிந்து கொண்ட அனுமன் தன்னுடைய சுய உருவத்தினை வெளிப்படுத்தி - மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் வணங்கி நின்றார். ஸ்ரீராமனும் சந்தோஷத்துடன் அனுமனின் மதி நுட்பத்தைப் பாராட்டி  வாழ்த்தினான். அனுமன் மூலமாகவே ராம - சுக்ரீவன் நட்பு விளைந்தது.  

தென் திசையை நோக்கி சீதா பிராட்டியைத் தேடிச் சென்ற வேளையில் - அன்னையைக் காணாது மனம் நொந்த அங்கதனும் மற்றவர்களும் தம் உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் போது அவர்களுடைய மனத் துயரை மாற்றி, அவர்களுடைய உயிரைக் காத்தவர் அனுமன். 

சீதையைத் தேடி மகேந்திர மலையிலிருந்து வானில் பறந்து பெருங்கடலைக் கடந்து, இலங்கையில் இறங்கி - இராவணனின் நெஞ்சுரத்திற்கு நெருப்பு வைத்து - அவன் சரிவுக்கு அடிகோலியவர் அனுமன். தன் உருவினை தான் விரும்பும் வண்ணம் சுருக்கவும் பெருக்கவும் மாற்றிக் கொள்ளவும் வல்லமை உடையவர் அனுமன்.

அதேபோல இராவணனின் கொடுஞ்சொற்களைத் தாங்க மாட்டாதவளாக சீதை,  தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் போது "ராம் ராம்" என்று முழங்கியவாறே சீதையின் மனத் துயரை மாற்றியவர் அனுமன். சீதையினால் சிரஞ்சீவியாக திகழ்வதற்கு வாழ்த்தப்பட்டவர் அனுமன்.


ஸ்ரீராமனின் கணையாழியினை சீதையிடம் கொடுத்தும்,  சீதையின் சூடாமணியினை ஸ்ரீராமனிடம் கொடுத்தும்  - இருவருக்கும் சந்தோஷத்தினை ஏற்படுத்தியவர் அனுமன்.

ஸ்ரீராம - ராவண யுத்தத்தின் போது இந்திரஜித்தின் மாயாஸ்திர தாக்குதலில் மூர்ச்சையான இளையபெருமாளின் உயிர் காக்க வேண்டி சஞ்ஜீவி மூலிகையினை - மலையுடன் பெயர்த்துக் கொணர்ந்தவர் அனுமன். யுத்தம் முடிந்ததும் சிவபூஜைக்கு என காசியிலிருந்து லிங்கம் எடுத்து வந்தவர் அனுமன். வான் வழியில் விரைந்து வந்து ராமனின் வருகையினை பரதனுக்கு தெரிவித்து - பரதனின் அக்னி பிரவேசத்தினைத் தடுத்தவர் அனுமன்.  

ஸ்ரீராின் முடிசூட்டு விழாவின் போது,  சீதை அன்பின் பரிசாக அளித்த  முத்து மாலையில் ராமனைத் தேடி -  எல்லோரும் அறியும்படி - தன்  நெஞ்சைப் பிளந்து இதயக் கமலத்தில் கொலுவிருக்கும் ஸ்ரீராமனைக் காட்டியவர் அனுமன்.

இராமாயணம் தவிர மகாபாரதத்திலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. செளகந்தி மலரை பாஞ்சாலிக்காக பீமன் தேடி வரும் வழியில் - அவனுடைய அகங்காரத்தை மாற்றி, பீமனைக் கட்டித் தழுவி அவன் உடலில் மேலும் வலிமையினை ஊட்டியவர் அனுமன். பின் அர்ச்சுனனுக்காக ஸ்ரீகிருஷ்ணன் ஓட்டிய தேரின் கொடியில் அமர்ந்து, அர்ச்சுனனுடன் கீதை உபதேசம் கேட்டவர். ஸ்ரீகிருஷ்ணன் பாஞ்சசன்னிய சங்க நாதம் எழுப்பும் வேளையில் தாமும் பெருங்குரல் கொடுத்து எதிரிகளை கதிகலங்க வைத்தவர். பாரதப் போர் முடியும் வரையில் - தேர் கொடியில் இருந்தபடி கெளரவர்களின் மந்திர அஸ்திரங்களில் இருந்து  ஸ்ரீகிருஷ்ணன் துணையுடன் அர்ச்சுனனைக் காத்தவர் அனுமன்.

இத்தனை சிறப்புகளை உடைய அனுமன் பூமியில் அவதரிக்கக் காரணம் - நந்தியம்பெருமானின் சாபம்.  கடுந்தவம் செய்து வரம் பல பெற்ற இராவணன் குபேரனிடமிருந்து  அவனுடைய புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டு   அதில் செருக்குடன் வான் வெளியில் பயணித்தபோது திருக்கயிலாய மலையினை நெருங்கினான்.  

அப்போது விமானத்தின் வேகம் தடைப்படவே - மூடனாகி, திருக்கயிலாய மலை,  தனது பயணத்திற்கு தடையாக இருப்பதாகக் கருதினான்.  ஆத்திரத்துடன் அடாத செயலாக திருக்கயிலாய மலையினை பெயர்த்தெடுத்து எடுக்க முயற்சித்தான். இதைக் கண்ட நந்தியம்பெருமான் அவனைத் தடுத்து திருக்கயிலாய மலையினை வலம் வந்து செல்லுமாறு நல்லுரை கூறினார். 

மூர்க்கனான இராவணன் - " குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டு நீயா எனக்கு புத்தி சொல்கிறாய்....." என இகழ்ந்தான். சீற்றமடைந்த நந்தியம்பெருமான், " குரங்கினால் உன் நாடும் நகரும் அழிய நீயும் அழிவாய்" - என சாபம் விடுத்தார். அவன் அப்படியும் கேட்காமல் திருக் கயிலாய மலையினைப் பெயர்த்தெடுக்க - சிவபெருமான் கால் விரலை ஊன்றியதும், மலையின் அடியில் சிக்கிக் கொண்டு ரத்தச் சகதியாகி  " ஓ..." என அலறி, பின் சாம கானம் பாடி, ஈசனிடம் வாழ்நாளும் வரங்களும் பெற்றுக் கொண்டு உயிர் தப்பி ஓடிப் பிழைத்தான். 

அப்போது ஓடி உயிர் பிழைத்தாலும் நந்தியம்பெருமான் விடுத்த சாபத்தின்படி,  பின்னாளில் இராவணன் அழிய அனுமனின் அளவிலா ஆற்றலும் ஒரு காரணமாயிற்று.
" ஸ்ரீராம் ஜயராம் " எனும் நாம ஜபத்தினால் மிக்க மகிழ்ச்சியடைபவர் அனுமன். தன்னைப் பணிபவர்க்கு எல்லாவித இன்னல்களையும் நீக்குபவர் அனுமன்.

அப்படிப்பட்ட அனுமனின் அவதார தினம் மார்கழி 27 (11.01.2013) வெள்ளிக்கிழமை. அனுமனை வணங்கி உய்வடைவோம்.. 

நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்கும் "அன்பும் அடக்கமும் " ஸ்ரீஆஞ்சநேயரின்  அருளுக்கு  நம்மை இட்டுச் செல்வன.