நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருஞானசம்பந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருஞானசம்பந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 26, 2024

ஞான சம்பந்தம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 13 
ஞாயிற்றுக்கிழமை


திருமறைக்காடு..

அலைகள் புரள்கின்ற வங்கக் கடலின் பேரழகில் பெருந்தகை இருவரும் திளைத்திருந்த வேளையில் ஆள் அரவம் கேட்டு திரும்பிப் பார்க்க -
திருமடத்தின் அடியார்களுடன் வந்திருந்த  வீரர்கள் " சிவாய திருச்சிற்றம்பலம் "  என்றவாறு தண்டனிட்டு வணங்கினர்..

பெரியவராகப் பொலிந்தவர் திருநீறு வழங்கினார்..

மீன் கொடி தாங்கி நின்ற அவர்களில் தலைமை வீரனாக விளங்கியவன் - தன் வசமிருந்த ஓலைச் சுருளினைப் பணிவிலும் பணிவாக இளைய பிரானிடம் சமர்ப்பித்தான்...

செங்கரம் நீட்டி அதனைப் பெற்றுக் கொண்ட இளைய பிரான் திருமுகத்தில் புன்னகை.. 

புன்னகையின் பொலிவு மாறாமல் அருகிருந்த பெரிய பிரான் திருமுகத்தை நோக்கி,

" அப்பர் ஸ்வாமிகளே.. வழுதியின் நாடு வருக என்று அழைக்கின்றது.. " - என்று மொழிந்தார்..

அது கேட்ட அப்பர் ஸ்வாமிகளின் திருமுகத்தில் மகிழ்ச்சியும் கலக்கமும் ஒருசேரத் தோன்றின..

" ஆயினும், நாளும் கோளும் நல்லனவாக இல்லையே..
அங்கிருப்போர் பெரிதும் இன்னல்  விளைப்பவர் ஆயிற்றே.. " 

பதற்றமும் தடுமாற்றமும்
நிறைந்திருந்தன ஸ்வாமிகளின் திருவாக்கில்..

சுண்ணாம்பு நீற்றறையும், நாக விஷத்துடன் கூடிய வஞ்சனைச் சோறும், இடறுவதற்கு ஏவி விடப்பட்ட மத களிறும், கல்லினொடு பிணைத்து கடலில் இறக்கிய  வன்மமும் நினைவுக்குள் வந்த நொடியில்,


வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட 
கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் 
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன 
வெள்ளி சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறுநல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.. 2/85/1

ஞான சம்பந்தப் பெருமானின் திருவாக்கில் இருந்து திருப்பதிகம் ஒன்று மலர்ந்து பிரபஞ்சப்பெருவெளி எங்கும் நிறைந்தது...

" அம்மையப்பன் திருவருள் துணை இருக்க அடியார் நெஞ்சகத்தில் அச்சமும் கலக்கமும் எதற்கு?.." - என்று திருவாய் மலர்ந்த ஞானசம்பந்தப் பெருமான் நாவுக்கரசரைப் பணிந்து வணங்கினார்..

மறுநாள் உதயாதி நாழிகையில் - குதிரை வீரர்கள் முன்னே செல்ல, ஞானசம்பந்தப் பெருமானின் பல்லக்கு  ஆலவாய் எனப்பட்ட கடம்ப வனத்தை  நோக்கி விரைந்து கொண்டிருந்தது..

ஆலவாய் நகர எல்லையில் பூரண பொற் கும்பங்களுடன் எதிர்கொண்டழைத்தார் பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியார்..

அவருக்கென திருமடம் அமைக்க உத்தரவாகியது..
தலைமை அமைச்சராகிய குலச்சிறையார் முன்னின்று அவ்வண்ணமே திருமடம் அமைத்துத் தந்தார்.. 

ஆனால், அன்றிரவு அத்திருமடம் தீக்கிரையானது..

நீதியும் நேர்மையும் வீழ்ந்திருப்பதைக் கண்ட ஞான சம்பந்தப் பெருமான் புன்னகையுடன்,
" பையவே சென்று பாண்டியர்க்கு ஆகுக.. " - என்று மொழிந்தார்..

அந்த அளவில் திருமடத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த தீயின் வெம்மை - மன்னனாகிய கூன் பாண்டியனைப் பற்றியது..

வெப்பு நோயைத் தீர்ப்பதற்கு முயன்ற சமணர்கள் தங்களது மணி மந்த்ர ஔஷதங்கள் அனைத்திலும் தோல்வியுற்றனர்.. 

நல்லடியார் திருமடத்திற்கு தீ மூட்டப்படுவதைத் தடுக்க இயலாத மன்னனை வெப்பு நோய் வாட்டியது..

ஞான சம்பந்தப் பெருமானைச் சரணடைந்தான் கூன் பாண்டியன்...

திருஞானசம்பந்தப் பெருமானும் மன்னனைப் பொறுத்தருளி திரு ஆலவாய் திரு ஆலயத்தின் மடைப்பள்ளியில் இருந்து சாம்பலைத் தருவித்தார்.. 

மன்னனின் உடல் முழுதும் பூசி விட்டார்.. அந்த அளவில் மன்னனைப் பற்றி இருந்த வெப்பு நோயும் தணிந்து அடங்கி மறைந்து போனது..

மந்திரம்  ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாய்உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.. 1

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.. 2

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.. 3

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.. 4

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே.. 5

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.. 6

எயிலது வட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திரு ஆலவாயான் திருநீறே.. 7

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.. 8

மாலொடு அயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆல வாயான் திருநீறே.. 9

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.. 10

ஆற்றல் அடல்விடை யேறும் ஆல வாயான் திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.. 2/66/11

அனல் வாதம், புனல் வாதம் - என வென்றெடுத்த சிவ சமயம் மீண்டும் தழைத்தெழுந்தது..

கூன் பட்டிருந்த பாண்டியனும் நின்ற சீர் நெடுமாறன் 
என்றானார்..

பாண்டிய நாட்டில் சைவ சமயத்தை மீட்டெடுத்த ஞான சம்பந்தப் பெருமான் சிவ சாயுஜ்யம் அடைந்த வைகாசி மூலம் நேற்றும் இன்றுமாக..

திருஞானசம்பந்தரின் திருக்கரம் பற்றிய  
தோத்திர பூர்ணாம்பிகை,
சிவபாத இருதயர்,
திருநீலகண்ட யாழ்ப்பாணர்,
மதங்க சூளாமணியார்
முருக நாயனார், திருநீலநக்கர், 
நம்பாண்டார் நம்பி முதலான பெருமக்கள் 
சிவஜோதியுள் கலந்த நாள் வைகாசி மூலம்..

அவர் தம் திருவடிகள் போற்றி போற்றி..
**

ஞானசம்பந்தப் பெருமான் 
திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூன் 05, 2023

வைகாசி மூலம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 22
திங்கட்கிழமை

இன்று
ஞானசம்பந்தர் குருபூஜை

சீர்காழி.. 

இவ்வூரின் பழைமையான பெயர்களுள் ஒன்று பிரமபுரம்..

இவ்வூர் தான்
திருஞானசம்பந்தர் அவதரித்த திருவூர்..

தந்தையார் சிவபாத இருதயர். தாயார் பகவதி அம்மையார்.

சிவபாத இருதயர் ஒருநாள் தமது குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிரம்மபுரீசர் திருக் கோயிலுக்குச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு வயது மூன்று..

கோயிலுக்குச் சென்றவர் பிரம்ம தீர்த்தக் கரையில் குழந்தையை இருத்தி விட்டு குளிப்பதற்காகக் குளத்தினுள் இறங்கி நீருக்குள் மூழ்கியிருந்தார்..

தந்தையார் நீருக்குள் மூழ்கியிருந்த சமயம் தந்தையைக் காணாது பதற்றமடைந்த குழந்தை - " அம்மா.. அப்பா.. " - என்று  அரற்றியது. அழுதது.. 

அது கேட்டு, மேலை வினையின் புண்ணியத்தால், 
உமையாம்பிகை  எழுந்தருளினாள்..


 திருமுலை சுரந்து ஒழுகிய பாலைப் 
பொற்கிண்ணம் ஒன்றில் ஏந்தி சம்பந்தருக்கு ஊட்டி விட்டு மறைந்தாள். அதனைப் பருகிய குழந்தை சிவ ஞானத்தைப் பெற்றது..

நீராடி முடித்து விட்டுக் கரையேறிய சிவபாத இருதயர் குழந்தையின் உதடுகளில்  பால் அருந்திய தடத்தைக் கண்டார்..

அதிர்ச்சியுடன்,
" யார் கொடுத்த பாலைக் குடித்தாய்?.. " - என்று கேட்கவும் , குழந்தை கோயிலைச் சுட்டிக் காட்டியது..

இதைக் கண்டு வழக்கம் போல குளக்கரையில் கூட்டம் கூடி விட்டது..

தந்தையார் மேலும் அதட்டிக் கேட்கவும் குழந்தை தனது  பிஞ்சுக் கைகளால் தாளமிட்டு,
" தோடுடைய செவியன்!. " - என்று பாடியபடி விண்ணைக் காட்டியது..

அங்கே சிவபெருமான் உமையாம்பிகையுடன்  ரிஷப வாகனத்தில் திருக்காட்சி நல்கினார்..

அதிசயங் கண்ட
கூட்டத்தினர், " சம்பந்தர்.. ஞான சம்பந்தர்!.. " -
 என்று ஆர்ப்பரிக்க, இறையடியார்கள், " திருஞான சம்பந்தர்!.. " -  எனக் கொண்டாடி நின்றனர்..

திருநாவுக்கரசர் - காழிப் பிள்ளையைப் பற்றிக் கேள்வியுற்று சீர்காழிக்கே வந்து  ஞானப் பாலுண்ட குழந்தையை வாரியெடுத்துக் கொஞ்சிய போது குழந்தை மொழிந்தது அப்பரே!.. என்று..

எருக்கத்தம்புலியூரில் இருந்து  தம்மைக் காண்பதற்கு வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் மதங்க சூளாமணி அம்மையாரையும் தம்முடன் இருத்திக் கொண்டார் ஞானசம்பந்தர்..


இறைவனால்
பொற்றாளம் அருளப் பெற்ற தலம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்கோலக்கா..

ஞானசம்பந்தர் திருப்பதிகத்தால்
பாலையாய் இருந்து மருதம் ஆன தலம் திருநனிபள்ளி..

ஞானசம்பந்தருக்கு
முத்துப்பல்லக்கு, குடை அருளப் பெற்ற தலம்
திருநெல்வாயில் அரத்துறை

கொல்லி மழவன் மகளைப் பற்றிய முயலக நோயைத் தீர்த்த தலம் திருப்பாச்சிலாச்சிராமம்..

கொங்கு நாட்டில்
குளிர் காய்ச்சலைத் தீர்த்த தலம் கொடி மாடச் செங்குன்றூர்..

முத்துப் பந்தல் அருளப் பெற்ற தலம் 
திருபட்டீச்சுரம்..


உலவாப் பொற்கிழி அருளப் பெற்ற தலம் 
திருவாவடுதுறை..

உடனாகி வந்தவன் விடம் தீண்டி மாள - கதறித் துடித்த காதல் மங்கையின் துயர் தீர்த்த தலம் 
திருமருகல்..

திரு தருமபுரத்தில் யாழ்மூரிப் பதிகம் பாடியருளிய ஞான சம்பந்தர் ஆளில்லாத  ஓடத்தைத் தமிழால் செலுத்தியது திருக் கொள்ளம்பூதூரில்..

ஆண் பனைகளைப்  பெண் பனைகளாக்கிய தலம் திருஓத்தூர்..


என்பு நிறைந்த குடத்தினுள்ளிருந்து  பூம்பாவையை மீட்டது திருமயிலையில்..

அப்பர் திருஞானசம்பந்தர்
முதல் சந்திப்பு சீர்காழியில் இரண்டாம் சந்திப்பு திருப்புகலூரில்..

திருஅம்பர் மாகாளம், திருக்கடவூர், 
திருக்கடவூர் மயானம் திருஆக்கூர் திருமீயச்சூர் திருப்பாம்புரம்  திருவீழிமிழலை திருவாஞ்சியம் திருமறைக்காடு, திருவாய்மூர் ஆகிய தலங்கள் புண்ணியர் இருவராலும் ஒருசேர தரிசிக்கப்பட்ட தலங்கள்

மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் தமக்கு அருளுரை நல்கி - மன்னனின் வெப்பு நோயைப் போக்கி சமணருடன் அனல் வாதம் புனல் வாதம் புரிந்து கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கி சைவத்தைத் தழைக்கச் செய்தது திரு ஆலவாய் தனில்..

அப்பருடன் மூன்றாம் சந்திப்பு நிகழ்ந்தது 
திருப்பூந்துருத்தியில்..

திருச்சாத்த மங்கையில் நீலநக்கர்
திருப்புகலூரில் முருகர்
திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர்
திருக்கடவூரில் குங்கிலியக் கலயர் ஆகிய மெய்யடியார்கள் ஞானசம்பந்தரைத்  தரிசித்திருக்கின்றனர்..

திருப்புகலூரில் இறைவனை வழிபட்டு முருக நாயனார் திருமடத்தில்  நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியார்களோடு உரையாடி இருந்த போது, அங்கே 
திருநாவுக்கரசர் எழுந்தருள எதிர் கொண்டு அழைத்து அளவளாவி இருந்தனர்..


பதினாறாம் வயதில் திருநல்லூரில் திருமணக் கோலம் கொண்டு தோத்திர பூர்ணாம்பிகை எனும் மங்கை நல்லாளின் கரம் பற்றிய பின்
அவ்வூர் பெருமணம் கோயிலில் சிவ தரிசனம் செய்தபோது ஆங்கே மூண்டெழுந்த ஜோதியுள் மனையாளுடன் சிவமுக்தி எய்தினார்..

திருமண வேள்வி இயற்றிய திரு நீலநக்கரும் முருக நாயனாரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் மதங்க சூளாமணி அம்மையாரும் உடனாகி சிவஜோதியுள் ஒன்றாகினர்..

நரசிம்ம பல்லவனின் வாதாபிப் போர் 642 ல்..

பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் காலம் 640 - 670.. 

இதன் வழியே பெருமானின் காலம் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பட்டது என்று கணக்கிட்டுள்ளனர்..


ஞானசம்பந்தர் அருளிச்செய்த திருப்பதிகங்கள் பதினாறாயிரம் 16000.. இவற்றுள் திருச்சிற்றம்பலத்தின் நில்வறையில் இருந்து ராஜராஜ சோழனால் மீட்கப்பட்டு  நமக்குக் கிடைத்திருப்பவை 383 மட்டுமே..

நம்பியாண்டார் நம்பி அவர்களால் - முதல் திருமுறையில் 136  இரண்டாம் திருமுறையில் 122  மூன்றாம் திருமுறையில் 
125 - என, வகுக்கப்பட்டுள்ளன..


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நம சிவாயவே.. 3/49/1
-: திருஞானசம்பந்தர் :-

ஸ்ரீ தோத்திர பூர்ணாம்பிகையுடன்
திருஞானசம்பந்தப் பெருமான் 
சிவமுக்தி எய்திய நாள் இன்று..

திருஞானசம்பந்தர் திருவடிகள் 
போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூன் 07, 2020

திருஞானசம்பந்தர்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று வைகாசி மூலம்..
ஞானசம்பந்தப்பெருமானின்
குருபூஜை நாள்...


இன்றைய பதிவில்
ஸ்வாமிகள் அருளிச் செய்த திருப்பதிகம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 130

திருத்தலம் - திருஐயாறு


இறைவன் ஸ்ரீ ஐயாறப்பர், செம்பொற்சோதிநாதர்
அம்பிகை - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தனி

தல விரிட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி, சூரிய புஷ்கரணி

ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி 
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்தபோதாக அஞ்சலென்று அருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்று அஞ்சி
சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருஐயாறே.. 1

விடலேறு படநாகம் அரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறு ஒன்றதுவேறி அஞ்சொலீர் பலியென்னும் அடிகள்கோயில்
சுடலேறித் திரைமோதிக் காவிரியின் உடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கம் செழுமுத்துஅங்கு ஈன்றலைக்கும் திருஐயாறே.. 2

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல்நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேடும் திருஐயாறே.. 3

ஊன்பாயும் உடைதலை கொண்டூருரின் பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறும் சங்கரனார் தழருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள் தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலரும் திருஐயாறே.. 4


நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலும் திருஐயாறே.. 5

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேம்தாம் என்றுஅரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருஐயாறே.. 6

நின்றுலா நெடுவிசும்பு நெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர் பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருஐயாறே.. 7

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைபத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்து அவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடி
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருஐயாறே.. 8

ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி 
மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகஅகழ்ந்து மிக்குநாடும்
 மாலொடு நான்முகனும் அறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலாடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலாடச் சிலையாடச் சேயிழையார் நடமாடும் திருஐயாறே.. 9

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித் தொண்டீர்
எண்தோளர் முக்கண்ணர் எம்ஈசர் இறைவன் இனிதமருங்கோயில்
செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்கும் திருஐயாறே.. 10

அன்னமலி பொழில்புடை சூழ்ஐயாற்றெம் பெருமானை அந்தண்காழி
மன்னிய சீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையால் இவைபத்தும் இசையுங்கால் ஈசனடி ஏத்துவார்கள்
தன்னிசையோடு அமருலகிற் தவநெறி சென்றெய்துவர் தாழாதன்றே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-



ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

செவ்வாய், மே 21, 2019

அரன் நாமமே சூழ்க

இன்று வைகாசி மூலம்..

திருஞானசம்பந்தப் பெருமானின்
குருபூஜை நாள்..


தமிழ் கூறும் நல்லுலகம்
ஞானசம்பந்த மூர்த்தியை
ஆளுடைய பிள்ளை என்று
கொண்டாடுகின்றது..

ஐயன் நிகழ்த்திய
அருஞ்செயல்கள் பலவாகும்..

ஐயனின் அருள்  வாக்கினில் பிறந்த
மங்கலங்கள் பற்பலவாகும்..


மதுரையம்பதியில்
சைவ சமயத்தை மீட்டெடுத்தபோது
அருளிச் செய்த
திருப்பதிகத்தின் முதற்பாடல்
இன்றைய காலகட்டத்தில்
மிகவும் அவசியமானதாகின்றது..

அன்னை பராசக்தியின்
அருட்பால் அருந்திய
ஞானக்குழந்தையின் திருவாக்கு
நமக்கு என்றென்றும்
உற்ற துணையாக விளங்கட்டும்...

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே...

ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வியாழன், மே 31, 2018

நல்ல வண்ணம்

அக்கா... அக்கா!..

வாம்மா.. தாமரை.. வா.. வா!..

என்னக்கா சேதி!... உடனே வரச் சொன்னீங்க?..


இன்னைக்கு ஞானசம்பந்தர் குருபூஜை... கோயில்ல விசேஷம்...
அதான் உன்னையும் கூட்டிட்டு போகலாம்..ன்னு!...

எங்கே அத்தான் பிள்ளைகள் எல்லாம்?..

அவங்க முன்னாலேயே போய்ட்டாங்க...ம்மா!..

முன்னால போய் என்ன செய்யப் போறாங்க?...

இந்த பசங்க எல்லாம்
சிவனடியார் திருக்கூட்டம்...ன்னு ஒன்னு சேர்ந்திருக்குதுங்க....

கோயில்ல விசேஷம் ..ன்னா தோரணம் கட்றது..
அங்கே இங்கே சுத்தம் செய்றது.. பிரசாத விநியோகம் செய்றது..ன்னு
ஏகப்பட்ட வேலைகள்... ஏதோ அவங்களுக்கு ஆர்வமா இருக்கு...

ஓ.. பரவாயில்லையே!... அதுசரி.. அக்கா..
நான் ஒன்னு கேக்கட்டுமா?..

கேளேன்!...

அந்தக் காலத்துல அவங்க.. யாரு ..என்ன பேரு சொன்னீங்க?..

ஞானசம்பந்தர்.. திருஞானசம்பந்தர்!..

திருஞானசம்பந்தர் பொறந்தாங்க... சாமிகிட்ட பால் குடிச்சாங்க...
சாமி பாட்டெல்லாம் பாடுனாங்க... சரி... இத்தனை வருசம் கழிச்சும்
அவங்களைக் கொண்டாடி கும்பிட்டுக்கிட்டு!...

இரு..இரு.. தாமரை.. ஞானசம்பந்தரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?..

அக்கா... தப்பா நினைக்காதீங்க!..
எனக்கு அவங்களப் பத்தி விவரமா தெரியாதுக்கா..
நீங்க கூப்பிட்டீங்களே..ன்னு வந்தேன்....

பூஜை....ல தேவாரம் எல்லாம் பாடுறே!... - வியப்புடன் கேட்டாள் - அக்கா...

ஆமாங்கா...
இந்த ஆன்மீக பத்திரிக்கைகள்..ல வர்றது ஒன்னு ரெண்டு..
அத வச்சிக்கிட்டுத் தான் நான் பாடுறேன்.. மத்தபடி,
உண்மையான வரலாறு..ன்னு எதுவும் தெரியாது..

கடவுள் வாழ்த்துப் பகுதியில -
தேவாரப் பாட்டு பள்ளிக்கூடத்தில சொல்லித் தரலையா!...

இருக்கும்.. நீங்களே படிச்சுக்குங்க.. ந்னு சொல்லிட்டு டீச்சர் போய்டுவாங்க!..
அதுக்கு அப்புறம் நாங்க எங்கே அதைப் படிச்சோம்!...
அந்த காலத் தமிழ் வாய்..ல நுழையாது..ன்னு நாங்களும் சும்மா இருந்துடுவோம்!....

அது தானே!...

ஆனா, தாத்தா அடிக்கடி பாடச் சொல்லுவாங்க....
அவங்களும் பாடுவாங்க... ஆனா புரியாது....
அதிகமா விளக்கம் கேக்கவும் பயமா இருக்கும்..
வீட்டுல.. ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருங்க.. ந்னு அதட்டல்...

போகட்டும் .. நான் ஒரு புத்தகம் தர்றேன்.. ஆதீன பதிப்பு அது!...
படிச்சுப் பாரு... அதுக்கப்புறம் ஞானசம்பந்தர் பாடின தேவாரம் படிக்கலாம்...

அக்கா.... தேவாரம் பாடுனா பணம் காசு சேரும்... 
நோய் வராது... ஜூரம் போகும்... ன்னு சொல்றாங்களே...
அதெல்லாம்  எப்படி..க்கா!..

உண்மை தாம்மா!... திருக்குறளை நீ நம்பறே!.. இல்லையா!..

ஆமாம்...

அதுல வள்ளுவர் என்ன சொல்றாரு!...

என்ன சொல்றாரு?...

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்...

அப்படி...ன்னு சொல்றார்... இல்லையா...
அப்படி உறுதியான நம்பிக்கையோட ஒரு பாடலையோ ஒரு பதிகத்தையோ பக்தி சிரத்தையா நாம பாராயணம் செய்றப்போ அதனோட பலன் கைமேல!...

உறுதியா சொல்றீங்களா அக்கா!...

இந்த மாதிரி பலன் அடைஞ்சவங்க எத்தனையோ ஆயிரம் பேர்..
அதையெல்லாம் வெளிக்காட்டிக்க மாட்டாங்க....

எங்க வீட்டுல சின்னாத்தா.. ன்னு இருந்தாங்க.. உனக்கு சொல்லியிருக்கேன்...

ஆமா.. சொல்லியிருக்கீங்க!...

அவங்க என்ன படிச்சாங்க... ஒன்னும் இல்லை..
ஆனா, எனக்கு காய்ச்சல் தலைவலி...ன்னா
அடுப்புச் சாம்பலை எடுத்து காளியாயி... மகமாயி..ன்னு சொல்லிட்டு
நெத்தியில பூசி விடுவாங்க.. அது அத்தோட சரியாயிடும்...

கஷாயம் கொடுப்பாங்க...ன்னு சொன்னீங்க!..

அது வேற... கஷாயம் கை கொடுக்காத நேரத்துல என்ன செய்றது?...
ஒவ்வொரு சமயத்தில எனக்கு கடுமையான வயித்து வலி இருக்கும்..
நடு ராத்திரியில டாக்டரத் தேடி எங்கே போறது?..
அவங்க தான் என்னை மடியில போட்டுக்கிட்டு விபூதி பூசி விடுவாங்க!...

..... ...... .....!..

அப்போ அவங்க என்ன சொல்வாங்க தெரியுமா...
சிவ சிவ ஹரனே.. ஹர ஹர சிவனே!... அவ்வளவு தான்!..

இதுக்கு பெரிய உபதேசம் எல்லாம் தேவையில்லை...
மனசு சுத்தம் இருந்தாப் போதும்!...

இதைத் தான் -

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினைஅடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே...

- அப்படின்னு, ஞானசம்பந்தர் சொல்றாங்க...

தும்மல் இருமலுக்கு சரி.. பெரிய நோய் ஏதும் வந்தா!?.. இது சரியாகுமா?...

ஆகியிருக்கு....

எங்கே!?...

எத்தனையோ ஆயிரம் இருக்கு.. ஆனாலும்,
அங்கே இங்கே..ன்னு போக வேண்டாம்...
எங்க அண்ணாச்சி அவுங்களைத் தெரியுமில்லே!...

ஆமா.. வலைத்தளத்தில எழுதுறாங்களே!..

அவங்க தான்... இந்த வருசம் ஆரம்பத்தில அவங்களுக்கு
சட்டுன்னு.. நரம்பு தளர்ச்சியாகி கைகால் அசைக்க முடியலை...

துணைக்கு யாரும் இல்லாத அந்த சமயத்தில -
அவங்களுக்கு கை கொடுத்தது - தேவாரமும் பிரார்த்தனையும் தான்!...

..... ..... ..... .....!..

இப்போ தான் ஊருக்கு வந்துட்டுப் போனாங்க....

டாக்டர் கிட்ட காட்டுனாங்களாமா!..

ம்.. இயற்கை மருத்துவம் தான்... உடம்புக்கு ஒன்னும் இல்லை...ன்னு சொல்லிட்டு தைலம் கொடுத்திருக்காங்க... ஆனா,

அதுக்கு முன்னாலேயே அவங்க குலதெய்வம் என்ன கொடுத்தது தெரியுமா!..

என்ன அது!?..

தீர்த்தமும் திருநீறும் அபிஷேக எண்ணெய்யும் தான்!...

இது எல்லாருக்கும் பொருந்துமா!?...

நம்பிக்கை வைக்கிறவங்களுக்கு நடராசன்....ன்னு சொல்வாங்க...
அவங்க அவங்க விதிப்படி ஆகும்... இருந்தாலும்,
வெல்லத்தை வாயில போட்டுக்கிட்டா தான் அருமை தெரியும்!...

நம்பிக்கை வைக்கிறவங்க கிட்ட நடராசன் போறதில்லை...
நம்பிக்கை வைக்காதவங்க கிட்ட யமராசன் போறதில்லை...
இதுக்கு என்ன சொல்றீங்க!..

யமராஜன் போறது சர்வ நிச்சயம்...
நடராஜன் போறதைப் பார்க்க முடியலை தான்...
நீ சொல்றது நிஜம்.. ஆனாலும்,
இதுக்கு நெறைய விளக்கம் இருக்கு..
இப்போ கோயிலுக்கு நேரம் ஆச்சு!...

அக்கா.. ஞானசம்பந்தர் அவங்களப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...


அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தியது ஐதீகம்...

நாடு முழுதும் நடந்து பக்தி நெறியை வளர்த்தார்...

திருக்குலத்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் 
அவரோட மனைவி மதங்க சூளாமணியையும் 
கடைசி வரையில் தன்னுடன் பேணிக்காத்து ஆதரித்தார்...



அப்பர் ஸ்வாமிகளோட சேர்ந்து 
திருவீழிமிழலை..ல மக்கட்பணி செய்தார்..

திருமருகல்....ல - 
ஏழை வாலிபனை மரணத்திலிருந்து மீட்டு அவனை நம்பி வந்த 
பணக்கார வீட்டுப் பெண்ணோடு திருமணம் செய்து வைத்தார்...

மயிலாப்பூர்...ல -
சிவநேசஞ்செட்டியார் மகள் பூம்பாவையை உயிருடன் மீட்டுக் கொடுத்தார்..

மதுரை...ல -
சைவத்தை மீட்டு கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கினார்...


ஞானசம்பந்தர் - திருமணக்கோலம்..
பெரியோர்களுடைய விருப்பத்துக்காக 
ஞானசம்பந்தர் திருமணக் கோலம் கொண்டார்... 
ஸ்தோத்திர பூர்ணாம்பிகா..ன்னு பொண்ணோட பேரு...

மாங்கல்யதாரணம் ஆனதும் 
எம்பெருமானும் அம்பிகையும் அருட்பெருஞ்ஜோதியா காட்சி கொடுத்தாங்க...

அந்த ஜோதி மயத்தில 
தன்னோட மனைவி கையப் பிடிச்சுக்கிட்டு ஐக்கியமானார்... 

ஞானசம்பந்தப் பெருமானோட எப்பவும் இருந்த 
திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடைய மனைவி மதங்க சூளாமணியார், திருநீலநக்கர், முருக நாயனார் ஆகியோரும் சிவசக்தியோட ஐக்கியம் ஆனாங்க...

அந்த நேரத்தில -
அருளப்பட்ட திருப்பதிகத்தோட திருப்பாட்டு தான் இது...


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நம சிவாயவே!..

மனம் உருகி சொல்றவங்களை
நல்ல நெறியில் செலுத்துவது நம சிவாய மந்திரம்...

நாம நல்ல வழியில நடக்க ஆரம்பிச்சுட்டா
நம்மைச் சுற்றி நடக்கிறதும் நல்லதாகவே நடக்கும்...

நம்மைச் சுற்றி நடக்கிறதெல்லாம் நல்லது தான்....ன்னா
அதை விட வேறென்ன வேணும் சொல்லு!..

அக்கா.. நல்லா தான் சொல்றீங்க!...

தாமரை... இல்லறத்தார் நாளும் பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இது..
மறந்திடாம மனசுல வைச்சிக்க....

சரிங்க அக்கா!...

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே...(3/24)

இன்று வைகாசி மூலம்..
திருஞானசம்பந்தர் குருபூஜை..

திருஞானசம்பந்தர் 
திருவடிகள் போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ 

சனி, ஜூன் 10, 2017

அருள்வழி

இன்று வைகாசி மூலம்..

நாட்டையும் மக்களையும் நன்னெறிக்கு உய்த்தருளிய
திருஞானசம்பந்தப் பெருமான் சிவப் பரம்பொருளுடன்
இரண்டறக் கலந்த நாள்...

பெருமான் அருளிய திருப்பதிகங்கள் -
திருக்கடைக்காப்பு எனும் சிறப்புடையவை..

முதல் மூன்று திருமுறைகளாக விளங்குபவை..

இறைவனை இயற்கையை ஏத்தும் திருப்பாடல்கள் அவை..

மக்களுக்கு நன்வழியைக் காட்டிய வித்தகர் - ஞானசம்பந்தப்பெருமான்..


ஒதுக்கப்பட்டிருந்த சமுதாயத்தினராகிய
திருநீலகண்ட யாழ்ப்பாணரையும்
அவரது துணைவியார் மதங்கசூளாமணி அம்மையாரையும்
தனது அடியார் திருக்கூட்டத்தினுள் இருத்தி -
தான் செல்லும் தலமெங்கும் தன்னுடன் அழைத்துச் சென்றவர்..

மக்கள் மனங்களின் மாசுகள் அறும்படிக்கு
நல்வழி காட்டியவர் - ஞானசம்பந்தப் பெருமான்..

இன்றைய நாளில் -
பெருமான் தரிசித்த திருத்தலங்களுள்
சிலவற்றை நாமும் தரிசனம் செய்வோம்...


திருப்பிரமாபுரம் 
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே!..(1/1)

தில்லையம்பதி 
செல்வ நெடுமாடஞ் சென்று சேண் ஓங்கிச்
செல்வமதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே!.. (1/80)

திருகோடிகா 
இன்றுநன்று நாளைநன்று என்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே!.. (2/99)

திருந்துதேவன்குடி 
மருந்துவேண் டில்இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே!..(3/25)


திருஐயாறு 
நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருஐயாறே!..(1/130)

திருஆனைக்கா 
வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதும்ஏதம் இல்லையே!..(3/53)

திருச்சிராப்பள்ளி 
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே!..(1/98)

திருவலஞ்சுழி 
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே!..(2/106)

திருக்குடமூக்கு 
கழைவளர் கவ்வைமுத்தங் கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும் இருந்தானவன் எம்மிறையே!..(3/59)

திருநாகேச்சுரம் 
கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே!..(2/24)

திருக்கோழம்பம் 
காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலோர் பால்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய
ஊரானை ஏத்துமின் நும்மிடர் ஒல்கவே!..(2/13)


திருஆரூர் 
வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு ஆரூரன்
இளைக்கும் போதெனை ஏன்றுகொ ளுங்கொலோ!..(3/45)

திருக்கோளிலி 
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே!..(1/62)

திருஆலவாய் 
மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதுவும் இதுவே!..(3/120)

திருநெல்வேலி 
அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று 
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலிஉறை செல்வர்தாமே!..(3/92)

திருக்கச்சி ஏகம்பம்
மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடு ஆணாகிய பெம்மானை
இறையானை ஏர்கொள் கச்சித் திருஏகம்பத்து
உறைவானை அல்லது உள்காது எனதுள்ளமே!..(2/12)


திருஅண்ணாமலை
பூவார்மலர் கொண்டு அடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்
தூமாமழை நின்று அதிரவெருவித் தொருவின் நிரையோடும்
ஆமாம்பிணை வந்துஅணையுஞ் சாரல் அண்ணாமலையாரே!..(1/69)

திருக்கயிலாய மாமலை 
சிங்கவரை மங்கையர்கள் தங்களன செங்கைநிறை கொங்குமலர்தூய்
எங்கள்வினை சங்கையவை இங்ககல அங்கமொழி எங்குமுளவாய்
திங்களிருள் நொங்கவொளி விங்கிமிளிர் தொங்கலொடு தங்கவயலே
கங்கையொடு பொங்குசடை எங்களிறை தங்குகயிலாய மலையே!..(3/68)

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நம சிவாயவே!..

ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

செவ்வாய், மே 24, 2016

அருள் ஞானசம்பந்தர்

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆனி மாதத்தின் முதல் நாள்!..

பகல் பொழுது முழுதும் கொக்குகளும் குருவிகளும் பறந்து திரிந்திருக்கும் அந்தப் பாசிக் குளம் வெறிச்சோடி இருந்தது...

நீரின் மீது வெள்ளிக் கீற்றுகளாகத் துள்ளிக் கொண்டிருக்கும் மீன்களைக் கூட காணவில்லை...

காரணம் - ஆனி மாதத்திலும் குறையாத வெயில்!..

நீரின் ஆழத்தில் அல்லித் தண்டுகளுக்குள் மீன்கள் அனைத்தும் அடைக்கலமாகியிருக்க -

கொக்குகளும் குருவிகளும் வெயிலுக்கு அஞ்சி -
குளக்கரையின் நாணற் புதருக்குள் ஒதுங்கிக் கிடந்தன..

அப்படிப்பட்ட கோடையின் அந்த நாள் -  சிறப்புற இருப்பதை அங்கிருந்த எந்த உயிரினமும் அறிந்திருக்கவில்லை..

சோழ வளநாட்டில் காவிரிக்குத் தென்பால் அழகிய சிற்றூர்..

எங்கெங்கு காணினும் பச்சைப் பசேலென்று!...
நிலமகள் கர்வம் கொள்ளும் படிக்கு அழகென்றால் அப்படிப்பட்ட அழகு!..-

தெய்வப் பசுவான காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு  சிவவழிபாடு செய்து உய்வடைந்த சிறப்புடையது - இந்த ஊர்..

மேலும் - ராஜரிஷி எனும் சிறப்பை விஸ்வாமித்திரர் எய்தியது - இங்கே தான்.. 

எல்லாவற்றுக்கும் மேலாக - 
ஸ்ரீராமபிரானும் சிவபூஜை செய்த பெருமையை உடையது - இந்த ஊர் ..

இத்தகைய ஐதீகங்களால் பெருமை கொண்டிருந்த தலத்தின் பெயர் - 

திருபட்டீச்சுரம்...

பட்டீச்சுரம் - அன்றைய தினம் விழாக்கோலம் பூண்டிருந்தது. 

காரணம்... 


ஞானசம்பந்தப்பெருமான் - எழுந்தருள்கின்றார்...

சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் - ஆளுடைய பிள்ளையாகத் தோன்றியவர்..

 தன் மூன்றாம் வயதில் - அம்பிகை அருளிய பாலினை அருந்தியவர்..

அதனால் - சிவஞானம் எய்தியவராக,

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரால்முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன் அன்றே!..

- எனத் திருப்பதிகம் பாடி - தான் கண்ட திருக்காட்சியினைத் தன் தந்தை சிவபாத இருதயருக்கும் காட்டியவர்

தோணிபுரம் எனும் சீர்காழியில் திருக்குளத்தினில் நீராடுதற்கு என தண்ணீரில் மூழ்கிய தந்தையைக் காணாது மனம் தவித்து அம்மே...அப்பா!.. என அரற்ற, 

அது பொறுக்க மாட்டாது எந்தை ஈசனுடன் விடை வாகனத்தில் தோன்றிய அம்பிகை, 

அளப்பரிய கருணை உணர்வினால் உந்தப்பட்டவளாய் - பெருகி வழிந்த திருமுலைப்பாலினை பொற்கிண்ணத்தில் ஊட்டினாள்!.. என்றால் -  

ஞானசம்பந்தப் பெருமானின் பெருமையைச் சொல்வதும் எளிதோ!..


அம்பிகையின் ஞானப்பாலினை அருந்தியதால் - சிவஞானம் நிரம்பப் பெற்ற திருஞானசம்பந்தர் நம் ஊருக்கு சிவதரிசனம் செய்ய வருகின்றார்.. அவரைக் காண்பதற்கும் அவர் தம் திருப்பதிகத்தினைக் காதாரக் கேட்பதற்கும் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்!...

இப்படியாகப் பேசிக் கொண்டு பெருந்திரளான மக்கள் ஆவலுடன் வீதியின் இரு மருங்கிலும் கூடியிருக்கின்றனர்.. 

அப்போது - கையில் தண்டத்துடன் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான் வாலிபன் ஒருவன்..

அவன் கிராமத்தின் தலையாரி.. காவல் வீரன்..

அங்கிருந்த பெரியோர்கள் அவனைக் கையமர்த்தினர்.. 

குடிப்பதற்கு குளிர்ந்த மோரினை வழங்கினர்..  
மோரினை அருந்தி - தாக சாந்தியடைந்த அவன் சொன்னான்.. 

சுவாமிகள் - ஆவூர் பசுபதீச்சுரத்தில் சிவதரிசனம் செய்த பின் திருச்சத்தி முற்றத்தைத் தரிசித்து  விட்டு - தம் அடியார்களுடன் வந்து கொண்டு இருக்கின்றார்கள்!... 

- என்று... 

இதைக் கேட்டதும்  கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பட்டீச்சுரத்தில் கூடியிருந்த மக்களுக்கு அமுதமழை பெய்ததைப் போலிருந்தது...

நல்ல செய்தி சொன்ன தலையாரிக்கு தோளில் பட்டு அணிவித்து ஆரவாரம் செய்தனர்..

அதோ - சற்று தொலைவில் சிவ கோஷங்கள் கேட்கின்றன.. 

அவ்வளவுதான்!.. மக்களுக்கு உற்சாகம் பீறிட்டது.  

ஆரவாரத்துடன்,  இவர்களும் எதிரொலியாக சிவகோஷங்களை முழக்கினர்..

பூரண கும்பங்களையும் மங்கல தீபங்களையும் ஏந்தியபடி  மங்கள இசையுடன் எதிர் கொண்டனர். 

ஆங்காங்கே வழிநடையில் குளிர் நிழலாக தென்னங் கீற்றுகளினால் பந்தல் அமைத்து வாழை, மாவிலை, பாளை, கமுகு, பனங்குலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன...

வீதியெங்கும் வெட்டிவேர் விலாமிச்சை போன்ற திரவியங்கள் ஊறிக் கிடந்த நீர் தெளிக்கப்பட்டிருந்ததால் - சுகந்த மணம் பரவியிருந்தது..

அத்துடன் ஆங்காங்கே தூப ஸ்தம்பங்களில் அகில் சந்தனம் சாம்பிராணி - ஆகிய இவைகளும் கமழ்ந்து கொண்டிருந்தன..

இருந்தாலும் - ஞானசம்பந்தப் பெருமானைத் தரிசிக்க ஆதவனும் ஆசை கொண்டு முகங்காட்டியதால் - சற்றே அதிகமாக பூமி தகித்தது. 

அதோ!... அதோ!...  

முத்துக் குடை தெரிகின்றது.. 
முத்துச் சின்னங்கள் தெரிகின்றன..

இவற்றுடன் - அடியார்கள் சுமந்து வரும்  முத்துப் பல்லக்கும் தெரிகின்றது!..

மக்களிடையே - அலைகடலையும் மிஞ்சிய ஆரவாரம்!...

அலங்காரப் பந்தலுக்கு சற்று முன்பாக -  பாதந்தாங்கிகள் - தாம் சுமந்து வந்த பல்லக்கினை இறக்குகின்றார்கள்..

முத்துப் பல்லக்கினுள் முழு நிலவாக - திருஞானசம்பந்தப்பெருமான்... 

அன்பும் அருளும் ததும்பி வழியும் திருமுகம்.  
உச்சி முடிக்கப்பட்ட கொண்டை. 

அந்தக் கொண்டையில் - என்ன தவம் செய்தேன்!..- என்றபடிக்கு மல்லிகைச்சரம். 
ஞானஒளி வீசும் திருமேனி முழுதும் மந்திரமாகிய திருநீறு.  
பெருமானின் திருக்கரங்களில் ஈசன் அருளிய பொற்றாளம்.

வெயிலின்  வெப்பத்தால் வெண்மணல் சற்றே சுடுகின்றது...

பல்லக்கினின்று பெருமான் -
பாதமலர்களைப் பூமியில் வைக்க முற்படுகின்றார்..

கூடியிருந்த மக்கள் - வாச மலர்களால் நடை பாவாடை விரிக்கின்றனர்..

அந்த நொடியில் தான் - அந்த அற்புதம் நிகழ்கின்றது.. 

அன்றைக்கு சீர்காழியில் முந்திக் கொண்டு திருமுலைப் பாலூட்டி பெருமை சேர்த்துக் கொண்டாள் அம்பிகை. 

பின்னும் திருக்கோலக்காவில் நம் தகுதிக்கு வெண்கலத் தாளம் கொடுப்பதாவது என்று  பொற்றாளம் கொடுக்க - அதில் ஒலியாய் ஓசையாய் இயலாய் இன்னிசையாய் அமர்ந்து கொண்டாள் - பராசக்தி. 

இன்றைக்கு என்ன செய்கின்றாள் பார்ப்போம்!.. - என எண்ணிய எம்பெருமான் - தம் அருகில் பணி செய்து நின்ற பூதகணங்களை நோக்கினார்.

வானத்தில் திருக்கயிலாய வாத்யங்களின் பேரொலி கேட்டது..
முத்துப்பந்தலை ஏந்தியவாறு, சிவபூதங்கள் நின்று கொண்டிருந்தன..

ஏறிட்டு நோக்கியருளினார் - ஞான சம்பந்தப்பெருமான்..

இது எம்பெருமான் பட்டீசுரர் அளித்தது!.. - எனக் கூறி ஞானசம்பந்தப் பெருமானின் சிவிகையின் மேல் நிழல் செய்தன. 

அருளே நிறைந்த அன்னையும் ஐயன் அளித்த முத்துப் பந்தலின் ஊடாக - அதன் இயல்பான குளிர்ச்சி மேலும் தழைக்கும்படி தண்ணிழலாகப் பொருந்தி எங்கும் குளிர்ந்து விளங்கும்படி பரவி நின்றாள்..

திருக்கோயிலில் உள்ள ஓவியம்
திருநெல்வாயில் அரத்துறையில் முத்துப்பல்லக்கு வழங்கப்பட்டதைப் போல
பட்டீச்சுரத்தில் முத்துப் பந்தல் அருளப்பெற்றது...

வானில் இருந்து இறங்கிய முத்துப்பந்தலை பணிந்து வணங்கி அடியவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கண் முன்னே நிகழ்ந்த அற்புதத்தினைக் கண்டு எங்கும் ஹர ஹர என்று ஜய கோஷம்!..

ஸ்வாமிகளின் பாதாரவிந்தத்தில் விழுந்து வணங்கினர் மக்கள்..

அடியவர்களும் அன்பர்களும் ஆரவாரத்துடன் முத்துப்பந்தலின் தண்ணிழலில் ஞானசம்பந்தப்பெருமானை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். 

ஈசனின் கருணையினைப் போற்றியவாறே ஞானசம்பந்தப் பெருமானும் தன் பூம்பாதங்களைத் தரையில் பதித்து மெல்ல நடக்க - 

திருக்கோயிலின் மூலத்தானத்திலிருந்து நந்தியம்பெருமானுக்கு - ஆணை பிறந்தது. 

ஞானசம்பந்தன் நடந்து வரும் அழகினைக் காணவேண்டும். 
சற்றே விலகி இருப்பாய்!...


விலகியிருக்கும் நந்தியும் கொடிமரமும்
அதன்படி பலிபீடமும் நந்தியும் கொடிமரமும் - விலகி அமைந்தன. 

அற்புதத்திற்கு மேல் அற்புதமாக நிகழ்ந்தது கண்டு - 
மக்கள் அனைவரும் பேரானந்தம் எய்தினர்...


காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமண நாறுபழையாறைமழ பாடியழகாய மலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி விண்ணுலகமாளுமவரே!.. (3/73)

ஞானசம்பந்தப் பெருமானும் அம்மையப்பன் மேல் அன்பெனும் வெள்ளம் கரை புரள  - திருப்பதிகம் பாடி மகிழ்ந்து - வணங்கி இன்புற்றனர்.

இப்படி ஞானசம்பந்தப் பெருமான் தோணி புரத்து அம்மையப்பனின் புத்திரராக விளங்கி நாடெங்கும் சிவதரிசனம் செய்து திருக்கடைக்காப்பு எனும் தமிழ் அமுதினைப் பொழிந்தார். 

அவர் செல்லும் வழியெங்கும் அற்புதங்கள் தான்...

இவர் பொருட்டு வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி எனும் தலம்  நெய்தலாகி -  பின் மருதமாயிற்று.  

திருப்பாச்சிலாச்சிராமத்தில் முயலகம் எனும் நோயால்  - நெடுநாளாக உணர்வற்றுக் கிடந்த மழவனின் மகள் நோய் நீங்கப் பெற்றாள்.

திருச்செங்கோட்டுக்கு வருகை புரிந்தபோது கொங்கு நாடெங்கிலும் பரவிக் கிடந்த குளிர் காய்ச்சல் - இவர் தம் திருப்பதிகத்தால் நீங்கி ஒழிந்தது.

திருமருகலில் வணிகர் குலமகளின் காதல் மணாளன் நாகந்தீண்டி இறக்க, கதறி அழுத அவளின் கண்ணீர் ஓயும் வண்ணம் மணாளனை உயிர்ப்பித்து மணம் முடித்து அருளினார்.  

திருநாவுக்கரசருடன் இணைந்து தலயாத்திரை செய்யுங்கால் திருவீழிமிழலையில் ஏற்பட்ட பஞ்சம் நீங்க இறைவனிடம் படிக்காசு பெற்று மக்களின் துயர் தீர்த்ததுடன்,  


திருமறைக்காட்டில் வேதங்களால் அடைத்துத் தாழிடப்பட்ட திருக்கோயிலின் கதவுகளைத் திறந்தும் அடைத்தும் மக்களுக்கு உதவினார். 

திருக்கொள்ளம்பூதூரில் முள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கின் போது ஆளில்லா ஓடத்தை அதுவாகவே செல்லும்படிக்கு  இயக்கி - அக்கரைக்கு அன்பர்களை அக்கறையுடன் சேர்த்தருளினார்.




மதுரையில் சமணத்தை வென்று சைவம் நிலை நாட்டினார். அத்துடன் பாண்டியனின் கூன் நிமிரப் பெற்றது. மன்னனும்  நின்றசீர் நெடுமாறன் ஆகினான். 


தொண்டை நாட்டில் திருஓத்தூர் எனும் தலத்தில் இறைபணிக்காக வளர்க்கப் பட்ட பனைகள், ஆண்பனைகள் ஆகிவிட, அவற்றை அன்பர்களின் பொருட்டு பெண்பனைகளாக்கி அருளினார்.  

திருமயிலையில், பாம்பு தீண்டி இறந்த - சிவநேசஞ் செட்டியாரின் அன்பு மகள்  பூம்பாவையை அஸ்திக் கலசத்திலிருந்து மீண்டும் உயிருடன் எழுப்பி அருளினார்..

இப்படியெல்லாம் தமிழுடன் தண்கருணையையும் சுரந்த திருஞானசம்பந்த மூர்த்தி - நம் பொருட்டு அருளிய திருப்பதிகங்கள் - நாளும் பாராயணம் செய்வோர்க்கு எல்லா நலன்களையும் வழங்கவல்லவை. 

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.. 

பில்லி, சூனியம், மாந்திரீகம், பரிகாரம், அது, இது - என, 
நாம் - மதி மயங்கி, அங்குமிங்கும் அலைந்து திரிந்து அல்லல் அடையாதபடிக்கு - நல்வழி காட்டியருளிய ஞானகுரு.

எல்லாவற்றுக்கும் மேலாக - தீண்டத்தகாதவராகக் கருதப்பட்ட -
திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் நட்பு கொண்டவர்.

இசைவாணராகிய திருநீலகண்டருடன் அவரது மனைவி மதங்க சூளாமணி அம்மையாரையும் தன்னுடன் பேணிக் காத்தருளியவர். 

அவர்கள் இருவரையும் - திருத்தலங்கள் தோறும் தன்னுடன் அழைத்துச் சென்று சிறப்பித்தவர்.

திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகங்களை - 
திருநீலகண்டர் தான் - தனது யாழில் மீட்டினார்.

இதுதான் - பேதங்களைக் கடந்த - உயரிய நிலை!.. 

இத்தகைய உயரிய நிலையை -
சிவநேசச்செல்வர்களுக்கு அருளிய - ஞானகுரு திருஞானசம்பந்தப்பெருமான்.

போற்றுதற்குரிய திருஞானசம்பந்தப்பெருமானின் குருபூஜை இன்று!..


நல்லூர் பெருமணம் எனும் ஆச்சாள் புரத்தில் - நம்பியாண்டார் நம்பிகளின் திருமகள் தோத்திர பூர்ணா எனும் நங்கையை  பெருமானுக்கென குறித்தனர். 

திருமண வேளையில்,  

பெருமானின் திருக்கரத்தில் - நம்பியாண்டார் நம்பி  மும்முறை மங்கல நீர் வார்த்துத் தமது மகளைக் கன்யா தானம் செய்து கொடுத்தார். 

ஞானசம்பந்தர், தோத்திரப் பூரணாம்பிகையின் திருக்கரம் பற்றி அக்னியை  வலம் வந்தார்.

அவ்வேளையில் - 

இவளொடும் சிவனடி சேர்வன்!.. - என திருஉளங்கொண்டார்.

திருப்பதிகம் பாடியருளினார். சிவப்பெருஞ்ஜோதி ஆங்கே மூண்டெழுந்தது. 

காதல் மனையாளின் கரம் பிடித்தபடி - ஜோதியை வலம் வந்த ஞான சம்பந்தப் பெருமான் - அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியவாறே - அதனுள் புகுந்தார்.

அவருடன் - திருமண மங்கலங்களை நிகழ்த்திய திருநீலநக்க நாயனார், முருக நாயனார்,  திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவர் மனைவி - ஆகியோரும் அந்தப் பிழம்பினுள் புகுந்தனர். அழியாஇன்பம் அடைந்தனர்.

திருமணத்திற்கு வந்த அனைவரும் சிவஜோதியுட் கலந்தனர்

இன்று வைகாசி மூலம்..
ஞான சம்பந்தப் பெருமான் முக்தி நலம் எய்திய நாள்.. 

ஞான சம்பந்தர் அழியா முத்தி நலம் எய்திய நாள் வைகாசி மூலம்..
பெருமான் அருளிய வழியில் நம் மனம் செல்வதாக!..
***
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் 
வீழ்க தண்புணல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழக வையகமும் துயர் தீர்கவே!..

ஞானசம்பந்தர் திருவடிகள் 
போற்றி போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
* * *