நாடும் வீடும் நலம் பெறவேண்டும்
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து
அனுசரிக்கப்படுவது ஆஷாட நவராத்திரி...
இந்த நவராத்திரி
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
உரியதாகும்...
ஆஷாட நவராத்திரி இல்லங்களில்
கடைப்பிடிக்கப்படுவது அவரவர் விருப்பம் என்ற நிலையில்
சாக்த சம்பிரதாய மடங்களில்
அனுசரிக்கப்படுகின்றது..
சிவாலயங்களில்
சப்த கன்னியருள் விளங்கும்
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நிகழ்கின்றன...
ஸ்ரீ வராஹி அம்மன்
காசி மாநகருக்கு அடுத்ததாக
தஞ்சை பெரிய கோயிலில் தான்
தனி சந்நிதியில்
கொலு வீற்றிருக்கின்றாள்
என்கின்றனர் ஆன்றோர்..
தற்சமயம்
தனிப்பட்ட அறக்கட்டளைகளைச்
சார்ந்த கோயில்களில்
ஸ்ரீ வைரவர், ஸ்ரீ வராஹி,
ஸ்ரீ பிரத்தியங்கிரா - என
பிரதிஷ்டை செய்திருக்கிறனர்..
அவை இந்தக் கணக்கில்
சேர மாட்டாது...
இந்த அளவில்
தஞ்சையில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
ஆஷாட நவராத்திரி
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..
அந்த வைபவத்தின்
திருக்கோலங்கள்
இன்றைய பதிவில்..
படங்களை வழங்கிய
திரு. ஞானசேகரன் அவர்களுக்கு
நன்றி..
வரம் தந்து வளம் தந்து
வளர்கின்ற நலம் தந்து
வாழ்விக்கும் அன்னையே
வாராஹி போற்றி.. போற்றி..
படை கொண்டு களம் கண்டு
பகை வென்று முடி கொண்டு
புகழ் கொண்ட சோழனின்
தோள் நின்ற தேவி போற்றி...
துணை என்று தமிழ் கொண்டு
தூ மலர் இதழ் கொண்டு
துதிக்கின்ற முகம் கண்டு
துயர் தீர்க்கும் அன்னை போற்றி..
நிலம் கண்டு நீர் கொண்டு
நிறைகின்ற நலம் கொண்டு
நிமிர்கின்ற மனம் கண்டு
மகிழ்கின்ற வாராஹி போற்றி...
வருகின்ற துயர் கண்டு
பயங்கொண்ட முகம் கண்டு
நான் உண்டு என வந்து
நலம் காட்டும் அன்னை போற்றி..
துயர் கொண்டு வழிகின்ற
விழி கண்டு முன் நின்று
பிணி மாற்றி அருள் கின்ற
வாராஹி அன்னை போற்றி..
அனல் கொண்ட வினை என்று
தளர் கின்ற நிலை கண்டு
புனல் கொண்ட முகில் என்று
வருகின்ற வாராஹி போற்றி..
சஞ்சலம் என்று வரும்
நெஞ்சகம் வாழ்ந்திட
அஞ்சல் என்றருள் கின்ற
தஞ்சையின் வாராஹி வாழ்க..
ஸ்ரீ வராஹி வாழ்க.. வாழ்க..
ஸ்ரீ வராஹி வாழ்க.. வாழ்க..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ