நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 08, 2025

பச்சைப் புடவை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 26
சனிக்கிழமை


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்.. 

ஞாயிற்றுக்கிழமை..

அன்னைக்கு நூற்றெட்டு கனி கொண்ட மாலை சாற்றி விட்டு அங்கேயே திருச்சுற்றில் தங்கி இரவு  தூங்கி விட்டு  காலையில் எழுந்து வருவோம்..

- என்று  குடும்பத்துடன் மாரியம்மன் கோயிலுக்குப் புறப்பட்டு ,

கீழவாசல் சந்தையில் ஒவ்வொன்றாகப் பார்த்து நூற்றெட்டு கனிகளுக்கும் சற்று கூடுதலாக வாங்கிக் கொண்டு கோயிலை அடைந்து  - சந்நிதிக்குச் சென்று தரிசனம் செய்யாமல் திருச் சுற்றில் அமர்ந்து கனிகளைத் தொடுத்தபோது ஒரு கனி பச்சை நிறம்.. 

இது எப்படி வந்தது?... விடை தெரியவில்லை..  

கைவசம் கனிகள் தான் அதிகமாக இருக்கின்றனவே..

அப்போது  - உள் மனதின் குரல் ஒலித்தது..

" அம்பாளே இன்று பச்சைப் புடவையில் தான் இருக்கின்றாள்!..

மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சொன்னேன்..

சிரித்தார்கள்..

சற்று நேரத்தில் -  மாலை தொடுத்ததும் அதனை எடுத்துக் கொண்டு சந்நிதிக்கு விரைந்தோம்..

அங்கே மூலஸ்தானத்தில்
அம்மன் பச்சைப் புடவையில் சிரித்துக் கொண்டிருந்தாள்..

அதுவரையில்
மாரியம்மனை பச்சைப் புடவையில் தரிசித்ததே இல்லை ..

பின்னாளில் பச்சைப் புடவை தரிசனக் காட்சி ஒளிப்படமாக இணைய வழியில் கிடைத்தது தான் ஆச்சர்யம்..

இங்கே
புன்னை நல்லூரில் நாளும் நாளும் அற்புதங்களுக்குக் குறைவே இல்லை..

அன்னையின் திருக்கோயிலுக்கு 
(10.2.2025) அன்று திருக்குட முழுக்கு..

அனைவரும் வருக
அருள் தனைப் பெறுக..


அடியேனின் பாமாலை

புன்னை வனப் புற்றுக்கு உள்ளே 
பூத்து வந்த புண்ணியமே 
தானென்று  முன்நடந்து 
மங்கலங்கள் தருபவளே
அறியாத பிள்ளை என அன்னை 
உனைப் பாட வந்தேன்
அன்பான தமிழைத் தந்து
ஆதரிப்பாய் மாரியம்மா..

பச்சைப் புடவையிலே 
பாசங் கொண்டு வந்தவளே
பக்கத்தில் நீ இருந்து நல்ல 
பாதையினைத் தந்தவளே..
உச்சிப் பொழுது என 
வாழ்வு அது தகித்திடுதே..
நெக்குருக நெஞ்சுருக நின் 
வாசல் சரணம் அம்மா..


 ஆயிரம் ஆயிரமாய்
அக்கிரமம் என்றாலும்
ஆயி மனம் பொறுத்திடணும்
ஆறுதலும் கொடுத்திடணும்
அத்தனையும் நீ பொறுத்து
ஆதரவு அளித்திடணும்
தாயி மனம் குளிரணும்
மக மாயி மனம் குளிரணும்..

விழி கேட்டு வருபவர்க்கு
வழி காட்டி அருள்பவளே
பழி அஞ்சி வாழ்வோருக்கு
பால் நிலவாய் குளிர்பவளே
குறை கொண்ட மனம் கண்டு
நிறைநலங்கள் தரும் தாயே
சிறை கொண்ட துயர் மாற்றி
மறு வாழ்வும் அருள்வாயே...

கண்ணில் கண்ட துன்பங்கள்  
காற்றோடு போகட்டும்
கண்ணீரும் பூக்கள் என்று 
காலடியில் நிறையட்டும்
பெண்ணரசி நின்னருளால் 
நல்லருளே நிறையட்டும்
எண்ணெயிட்ட திருவிளக்கும் 
என்றென்றும் ஒளிரட்டும்..


வீற்றிருக்கும் இந்த நிழல் தானே
வேதனை எல்லாம் தீர்க்கின்றது
வித்தகி உந்தன் அருள் தானே
விடியும் கதிராய் வருகின்றது..
ஏற்றிய விளக்கின் ஒளி யன்றோ 
எங்கள் குறையைத் தீர்க்கின்றது..
சாற்றிடும் மாலை மலர் எல்லாம்
சந்ததி வாழச் செய்கின்றது
**

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

1 கருத்து:

  1. மாரியம்மன் அருள்.  அன்னைதானே..  அன்பு என்றும் நம்மிடம் உண்டு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..