நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வியாழன், பிப்ரவரி 27, 2014

ஸ்ரீ மஹாசிவராத்திரி - 2

திருக்கயிலை மாமலையின் பொன் முகடு.

அம்மையும்  அப்பனும் அருள் வடிவாக வீற்றிருந்தனர்.


அருகில் விநாயகரும் வேலவனும் விளையாடிக்கொண்டிருந்தனர்.  

சிறகைக் கோதியபடி மயில் ஒருபுறம் இருக்க - மறுபுறம் மூஷிகம் கிடைத்ததைக் கொறித்துக் கொண்டிருந்தது.
பொற்பிரம்பினைத் தாங்கியவராக நந்தியம்பெருமான் சேவகம் சாதிக்க - 

முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும் கணங்களும் வித்யாதரர்களும் யட்சர்களும் நாகர்களும் கின்னரர்களும் ஐயனின் திருவடிகளில் விழுந்து வணங்கி மகிழ்வதற்கு பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த வேளை அது.


எம்பெருமானின் திருமுடிமேல் வெண்கொற்றக்குடை என  படம் விரித்திருந்த நாகராஜன் மெல்ல அசைந்து கொண்டிருந்தான். 

அவனுக்குள் சட்டென ஒரு நினைப்பு.

''... நமக்கும் சேர்த்துத் தானே... இந்த மதிப்பும் மரியாதையும்!...''

அவன் இறுமாப்பு எய்திய  அந்தக் கணமே - அதள பாதாளத்தில் தலைகீழாக விழுந்தான். விழுந்த வேகத்தில், அழகிய தலை ஆயிரமாக சிதறிப் போனது.

ஜயகோஷத்துடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சி அடைந்து  பின் வாங்கி நின்றது. 

'' ஈசனின் சிரசில் இருந்தவனுக்கு புத்தி பேதலிக்கலாமா!.. இனி அவன் கதி என்ன  ஆகுமோ?.. '' - என அனைவரும் நடுங்கினர்.

கண்ணீரும் செந்நீருமாக கயிலை மாமலையின் அடிவாரத்தில் நின்று கதறினான்  நாகராஜன்.

''... ஐயனே!... அகந்தையினால் அறிவிழந்து விட்டேன்... என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்... ஸ்வாமி!..''

பாதாளத்திலிருந்து மெல்ல மேலேறிய அவனுக்கு, எம்பெருமானின் சந்நிதியில் வருவதற்கு அச்சம்!...

அம்பிகை ஐயனை ஏறிட்டு நோக்கினாள். அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். எம்பெருமானும் புன்னகைத்தார்.  

நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளையார், நாகராஜனிடம் சென்று -

'' சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் எம்பெருமானை வழிபட்டு பாவம் நீங்கப் பெறுவாயாக!...'' - என்று வழிகாட்டினார்.

'' உத்தரவு... ஐயனே!...'' என வணங்கிய நாகராஜன், நூலாக நைந்து தொங்கிய தலைகளைத் திரட்டிக் கொண்டு சென்றான். 


பின்னிப் பிணைந்திருந்த, வேம்பு அரசு - விருட்சங்களின் நிழலில் இருந்து விநாயகரைக் குறித்துத் தவம் செய்தான். 

பேரொளியுடன் பிரசன்ன விநாயகர் எதிர் நின்றார். அவரிடம் -

சிவராத்திரியின் நான்கு காலத்திலும்  வழிபடும் முறைகளைக் கேட்டறிந்து, அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டான். 

மண்டையில் வைத்துக் கொண்டால் தான் -  கனமாகி விடுகிறதே!...

தான் செய்த பிழைக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டும். அதற்கு ஆதிசேஷன் தலைமையில்  மாநாடு கூட்டினான் - நாகராஜன்.

அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய அனைவருடைய ஆதரவினையும் வேண்டினான்.

''சிவதரிசனம் செய்த மாதிரியும் இருக்கும். ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும்'' - என்று அனைவரும் உடனே தலைகளை ஆட்டி சம்மதித்தனர். 

ஆனால், அவர்களுக்குத் தெரியாது - இரவில் சிவபூஜை செய்யப் போவது!....  

தலை சிதறிய வேதனையிலும் - மகிழ்ச்சியடைந்த நாகராஜன், தன் இனத்தின் அத்தனை தலைகளையும் உடன் அழைத்துக் கொண்டு, ஆதிசேஷன் தலைமையில் -  காவிரியின் தென்கரைக்கு விரைந்தான்.

மகா சிவராத்திரியை நோக்கி அத்தனை பேருடன் தவமிருந்தான்.  

அவனை நல்ல காலம் நெருங்கியது.

சிவராத்திரியின் முதல் காலம்
(மாலை 6 மணி முதல் முன்னிரவு 9 மணி வரை)


விநாயகர் குறித்துக் கொடுத்தபடி - காவிரியில் நீராடினான். தலைக்காயம் கொஞ்சம் ஆறியிருந்தது. நதிக்கன்னியர் நீராடிய திருக்குளத்தில் மீண்டும் நீராடினான். 

தன்னை மறந்த நிலையில் தன் பிழை தீர - சிவபூஜை செய்தான். மனம் நிறைவாக இருந்தது.

கண்களில் நீர் வழிய நெடுங்கிடையாக விழுந்து வணங்கினான்.

இரண்டாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

சிவராத்திரியின் இரண்டாம் காலம்
(இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

முதற்கால பூஜையினை நிறைவு செய்த நாகராஜன் தன் கூட்டத்தாருடன் விரைவாக வந்து சேர்ந்த திருத்தலம் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த சண்பகாரண்யம்.

அங்கே ஆதியில் சூரியனும் சந்திரனும் சிவபெருமானை வணங்கியபோது உண்டாக்கியிருந்த சூரிய புஷ்கரணி  நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது.

பயணக் களைப்பு தீர - நன்றாக முழுகிக் குளித்தனர் எல்லோரும்!...

இரண்டாங்காலத்தில்  இறைவனை வழுத்தி வணங்கி நின்றான் நாகராஜன்.

''தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி!... 
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி!... ''

- என்று தொழுது நின்றான். நினைவில் சேர்ந்த அழுக்கு தீர அழுது நின்றான்.

மூன்றாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

சிவராத்திரியின் மூன்றாம் காலம்
(நள்ளிரவு  12 மணி முதல் பின்னிரவு 3 மணி வரை)

நள்ளிரவு. இருளில் தட்டுத் தடுமாறினாலும் - தடம் மாறாமல் விநாயகர் அருளிய திருக்குறிப்பின்படி வந்து சேர்ந்தாகி விட்டது.

இனி தாமதிக்க நேரமில்லை. நலிந்திருந்த நாகராஜனுக்குத் துணையாக ஆதிசேஷன் தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தான். குறைகள் தீரும் வண்ணம் குளித்தாகி விட்டது.


ஆலம் விழுதில் அகத்திப் பூக்களைத் தொடுத்து ஐயனுக்குச் சாற்றி -

 ''..அகந்தை அழித்த அருட்சுடரே!..'' - எனப் பணிந்து வணங்கினான் நாகராஜன்.

கண்களில் நீர் வழிய மெய்மறந்து நின்ற நாகராஜனிடம் - நான்காம் காலம் நெருங்குவது நினைவூட்டப்பட்டது.

சிவராத்திரியின் நான்காம் காலம்
(பின்னிரவு 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை)

பிழை பொறுத்து அருளும் பெருமான் உறையும் திருத்தலம் அல்லவா!.. 

பரபரப்புடன் ஓடி வந்தனர். மெய் சோர்ந்தது. கண்கள் பெருகி வழிந்தன. 

சாப விமோசனம் நிகழும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாகராஜனுக்கு அழுகையும் ஆற்றமையும் அடக்க முடியாமல் பொங்கிப் பீறிட்டு வந்தன.

ஆதிசேடன் அருகிருந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.

புண்டரீக மாமுனிவர் அமைத்திருந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான் நாகராஜன்.


அங்கே விநாயகர் எழுந்தருளி - கருணையுடன் நாகராஜனை வாழ்த்தினார். அவருடைய திருவயிற்றில் உதரபந்தனமாக நாகம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

நாகாபரணப் பிள்ளையாரின் திருப்பாதங்களில் விழுந்த நாகராஜன் ''ஓ'' எனெக் கதறி அழுதான்.  

நாகராஜனின் சிரத்தில் கை வைத்து தேற்றினார் விநாயகர். அவருடைய அனுமதியுடன் திருத்தலத்தினுள் பிரவேசித்தான்.

கால்கள் தள்ளாடின. கண்களில் நீர் சுரந்து பெருகி பார்வையை மறைத்தது.

கரங்களைத் தலைக்கு மேல் தூக்கி வணங்கியபடி - சிவலிங்க பீடத்தில்  தன் கூட்டத்தாருடன் விழுந்தான்.

''...குற்றமே செய்த கொடிய மகன். ஆனாலும் புத்திர வாஞ்சையுடன் என்னைப் பொறுத்தருள்க!.. எம்பெருமானே!..''

குமுறி அழுத நாகராஜனின் கண்கள் கூசின.

அவன் செய்த வழிபாட்டின் பெரும்பயனாக - பேரொளிப் பிழம்பென,


கவலைகளை எல்லாம் தீர்த்தருளும் கருந்தடங்கண்ணி அம்பிகையும் கருநீலகண்டனாகிய காயாரோகண ஸ்வாமியும் தோன்றியருளினர்.

அவர்தம் பாதாரவிந்தங்களைப் பற்றித் தொழுதான். தன் பிழை பொறுத்தருள வேண்டினான்.

அம்மையும் அப்பனும் புன்னகைத்தனர்.

பாவம் நீங்கிய நாகராஜனும் முன் போலவே திருக்கயிலை மாமலையில் ஐயனின் அடி போற்றி பணி செய்து கிடக்கும் பெருவாழ்வுதனைப் பெற்றான்.

*  *  *

நாகராஜன் தவமாய்த் தவமிருந்து - வழிபட்ட திருத்தலங்கள்

முதல் காலம் 
நலம் தரும் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஸ்ரீ பிரஹந்நாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரன் திருக்கோயில்.

ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்

சித்திரை மாதம் 13,14,15 - ஆகிய நாட்களில் சூரிய  பூஜை நிகழும் திருத்தலம்.

இரண்டாம் காலம் 
தனம் தரும் திருநாகேஸ்வரம் 
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை சமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமி திருக்கோயில்.

ஸ்ரீ நாகநாதஸ்வாமி திருக்கோயில்

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்தலை  அரவின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச்சரவரே!..(5/52)
                                                                        
திருநாவுக்கரசு சுவாமிகள், நாகராஜனை - ஐந்தலை அரவு - எனக் குறிப்பிட்டு  பாடுகின்றார்.

காலப்போக்கில் திருக்கோயிலின் வெளித்திருச்சுற்றில் நாகராஜனுக்கு - நாககன்னி, நாகவல்லி - எனும் தேவியருடன் சந்நிதி  எழுப்பப் பட்டது.

இந்தத் திருக்கோலத்தைத் தான், ராகு பகவான் என - பிழையாகக் கொண்டு தவறான வழிகாட்டுதல்களுடன் - வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மூன்றாம் காலம்  
அருள் தரும் திருப்பாம்புரம் 
ஸ்ரீ வண்டார்குழலி சமேத ஸ்ரீசேஷபுரீஸ்வரர் திருக்கோயில்.

ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்

திருப்பாம்புரம் திருக்கோயிலினுள் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யாதபடி - நாகங்கள் உரிமையுடன் உலாவுவதை நாம் காணலாம்.

நான்காம் காலம்  
வளம் தரும் திருநாகப்பட்டினம்  
ஸ்ரீ நீலாயதாட்சி சமேத ஸ்ரீகாயாரோகணேஸ்வரர் திருக்கோயில்.

ஸ்ரீகாயாரோகணேஸ்வரர் திருக்கோயில்

முசுகுந்த சக்ரவர்த்தி தேவலோகத்திலிருந்து கொணர்ந்து அமைத்த விடங்கத் திருத்தலங்கள் ஏழினுள் - சுந்தர விடங்கத் தலம்.

நாகராஜனுக்கு அருளிய நாகாபரண விநாயகர் திருக்கோயிலின் முதலில் வீற்றிருக்கின்றார்.

நாகம் என்பது யோக நூல்களில் குண்டலினியாக உருவகப்படுத்தப்படுவது. குண்டலினி நமது ஜீவசக்தி. மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் உயிர் சக்தி.

இப்போது இவற்றை ஒன்றுபடுத்திப் பாருங்கள்!...

அகங்காரத்தினால் சிதறிப் போகின்றது ஜீவசக்தி. 
நாம் ஒன்றிய மனத்துடன் சிவபூஜை செய்து - 
இதை ஒருங்கிணைத்தால் பெறுதற்கு 
அரிய பெருவாழ்வினை மீண்டும்  பெறலாம் .

இதுவே - சிவராத்திரியன்று நிகழ்த்தும் சிவவழிபாட்டின் தத்துவம்!..


இந்த புனிதமான பொழுதில், உங்களோடு என்னையும் திருத்தலங்களைத் தரிசிக்கும்படித்  தண்ணருள் செய்த - எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்குகின்றேன்!..

''ஓம் நம சிவாய... சிவாய நம ஓம்''
''திருச்சிற்றம்பலம்''

புதன், பிப்ரவரி 26, 2014

ஸ்ரீ மஹாசிவராத்திரி - 1

மஹா சிவராத்திரி 
வியாழக்கிழமை
மாசி -  15 (27.02.2014)

திருஞான சம்பந்தப்பெருமான் 
அருளிய 
பஞ்சாட்சரத் திருப்பதிகம் .

மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண்  - 22.


துஞ்சலுந் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்சஉ தைத்தன அஞ்செ ழுத்துமே.

உறங்கும் பொழுதிலும் விழித்திருக்கும் பொழுதிலும்  ஒருமுகமாக  -  வஞ்சம் முதலிய தீய குணங்களில் இருந்து நீங்கி - மனம் கசிந்துருகி நாளும் நமசிவாய எனும் திரு ஐந்தெழுத்தை நினைத்து இறைவனைப் போற்றுக!.. 

தன் உயிரினைப் பறிக்க வந்த - கூற்றுவன் அஞ்சி அலறும்படி உதைத்துக் காத்தருளிய  எம்பெருமானின் திருவடிகளை நினைத்து - மார்க்கண்டேயன் போற்றியது - நமசிவாய  எனும் திருஐந்தெழுத்தே!..

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
  

மந்திரங்களாகவும் , நான்கு மறைகளாகவும் விளங்கி தேவர்களின் சிந்தையில் நின்று அவர்களை ஆட்கொண்டு அருள்வது நமசிவாய  எனும் திரு ஐந்தெழுத்தே ஆகும் . 

தீமைகளுக்கு செந்தழல் - என, மனதினை வளர்த்து செம்மை நெறியில் நிற்கும்  அனைவரும் வேதியர் என - அந்திசந்தி வேளைகளில் தம்நெஞ்சில் தியானிக்கின்ற மந்திரம் - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..


ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்து
ஏனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 

உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி ,  ஒண்சுடராகிய ஞானவிளக்கினை ஏற்றி ஐம்புலன்கள் எனும் நன்புலன்களால் மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுபவர்கட்கு ஏற்படும் துன்பங்களைக் கெடுத்து அவர்களைக் காத்து நிற்பன - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.  

நல்லவர் தீயவர் என்ற வேறுபாடு இன்றி விரும்பித் துதிப்பவர்கள் எவரேயாயினும் அவர்களுடைய வினைகளை நீக்கிச் சிவமுத்தி அளிப்பது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

யமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும்  வேளையில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவன - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 


கொங்கலர் மன்மதன் வாளி ஐந்தகத்து
அங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.

மன்மதனின் பாணங்கள் தேன் நிறைந்த  ஐந்து மலர்கள்.  நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்பன ஐம்பூதங்கள். மணம் கமழ  விளங்கும் பொழில்களும் ஐந்து. நல்லரவின் படமும் ஐந்து.  பிறர்க்கு உதவும் கரத்தின் விரல்களும் ஐந்து. 

இவ்வாறு ஐவகையாக விளங்குவன அனைத்திற்கும் மேலாக விளங்குவது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.  

தும்மல் , இருமல் தொடர்ந்த பொழுதும் , கொடிய நரகம் போல துன்பத்தை அனுபவிக்க நேர்ந்த  பொழுதும் , முற்பிறப்புக்களில் நாம் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், 

இடையறாது - ஈசனை சிந்தித்திருந்தால் -  மறுபிறவியிலும் நம்முடன் வந்து நமக்குத் துணையாவது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..  

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செ ழுத்துமே. 

இறப்பு , பிறப்பு இவை நீங்கும்படியாக சிவமந்திரத்தைத் தியானிப்பவர்களின் துன்பங்களை நீக்குவதும், நாள்தோறும் சகல செல்வங்களைக் கொடுப்பதும்,

சீர்மிகும் நடமாடி மகிழும் எம்பெருமானின் - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..   

 
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டையி ராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.  

வண்டு மொய்க்கும் பூக்களைச் சூடியவளான ஏலவார்குழலி சிந்தித்திருப்பது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

திருக்கயிலாய மாமலையைப் பெயர்த்து எடுக்க முயன்று அதன் கீழேயே சிக்கிக்கொண்ட இராவணன் உயிர் பிழைத்து உய்தல் வேண்டிப் பாடியது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

தம் சிந்தையில் வைத்து வந்தித்தவர்க்கு அண்டங்களையெல்லாம் அள்ளிக் கொடுப்பது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..


கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வண மாவன அஞ்செ ழுத்துமே. 

திருமாலும் நான்முகனும் காண இயலாத சிறப்புடைய பெருமானின் திருவடிச் சிறப்புகளை  நாளும் பேசிக் களிக்கும் பக்தர்களின்  ஆர்வமாக விளங்குவது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன அஞ்செ ழுத்துமே. 
 

புத்தர் , சமணர் -  வார்த்தைகளைக்  கருத்தில் கொள்ளாதவராகி, பொய் இல்லாத சித்தம் கொண்டு தெளிந்து தேறியவர் தம் கருத்தில் விளங்குவது -  நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

ஞானமாகிய திருநீற்றை அணிபவருடைய - வினை எனும் பகை தனை, அழித்தொழிக்கும் கூரிய அம்பாக விளங்குவது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்ப ராவரே. 

நற்றமிழும் நான்மறைகளும் கற்று - ஈசனின் பெருமைகளைத் தியானித்து - சீர்காழி மக்களின் மனதில் உறைபவனாகிய ஞானசம்பந்தன் பாடிய - திருவைந்தெழுத்து மாலை - வாழ்வில் கேடுகள் வாராமல் தடுக்கும்.  

திருஐந்தெழுத்து மாலையின் பத்துப் பாடல்களையும் 
சிந்தித்திருக்க வல்லவர் வானவர் ஆவர் - என்பது 
திருஞான சம்பந்தப்பெருமானின் திருவாக்கு.

திருச்சிற்றம்பலம்.

ஞாயிறு, பிப்ரவரி 23, 2014

பொன்மாலைப் பொழுது

கடந்த பிப்ரவரி 19. புதன்கிழமை.

மாலைப் பொழுது. நேரம் - 5.30 மணி.


''.. ஐயா வணக்கம்!.. நான் விஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் செல்வராஜூ பேசுகின்றேன். தங்களைச் சந்திக்க வேண்டும். தற்சமயம் தாங்கள் எங்கே இருக்கின்றீர்கள்!?.. வீட்டிலா... வெளியிலா!..''


அந்தப் பக்கம் - அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

''..வணக்கம்.. நலமாக இருக்கின்றீர்களா!.. எப்பொழுது குவைத்தில் இருந்து வந்தீர்கள்!?..''

''..மகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் வந்தேன்.. எல்லாமே அவசரகதியில் நடந்ததால்  - தங்களுக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுக்க இயலாமல் போய்விட்டது. திருமண அழைப்பிதழை வலைப் பதிவில் கூட பதிவு செய்ய இயலவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்.. ஐயா!.. தங்களை நேரில் பார்த்து பதில் பேசாமல் என் மனம் ஆறாது.. சொல்லுங்கள்.. உடனே அங்கு...''

''..நம்ம..  முத்து நிலவன்  அவர்களைத் தெரியுமா!..''

''.. தெரியுமே!..''

''.. அவர்கள் இன்று தஞ்சைக்கு வருகின்றார்கள்!..''

''..அப்படியா!..''
நன்றி - கரந்தை ஜெயக்குமார்

''..சாமியப்பா கேம்பஸ்ல - புத்தகக் கண்காட்சி நடக்கின்றதல்லவா.. அங்கே சிறப்புரையாற்ற வருகின்றார்கள். நான் அவர்களை அழைத்து வரச் செல்கின்றேன்.. நீங்கள் அங்கே வந்து விடுங்கள்.. இடம் தெரியுமல்லவா?!..''

''.. தெரியும்.. இதோ...  வந்து விட்டேன்!..''

கரும்பு தின்னக் கூலியா!.. 

அடுத்த அரை மணிநேரத்தில் நான் - தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சாமியப்பா கூட்டுறவு  மேலாண்மைப் பயிற்சி நிலைய வளாகத்தில் இருந்தேன். 

சாமியப்பா கூட்டுறவு  மேலாண்மைப் பயிற்சி நிலைய வளாகம்   - பரந்து விரிந்து விளங்குவது.

நன்றி - FB.,

அங்கே தான், Rotary Club Of Thanjavur Kings  அமைப்பினர் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வரும் - புத்தகக் கண்காட்சி,

புத்தகத் திருவிழாவாக - பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 23 வரை தினமும் மாலை வேளையில் சிறப்புச் சொற்பொழிவுகளுடன் நடந்து கொண்டிருக்கின்றது. 

மாலை வேளையில் வண்ண வண்ண விளக்குகள் தோரணங்களாக ஒளிர  - 

அங்கே நூற்றுக் கணக்கானவர்கள். புத்தகங்களை வாங்குவதற்கும் நல்லோர் தம் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கும்!..

நீண்டு விளங்கிய அரங்கினுள் - இருபுறமும் தமிழகத்தின் புகழ் பெற்ற பதிப்பகங்களின் கடைகள்.  கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
 
வளாகத்தின் பரந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், 


அப்போது தான் - நம் அனைவருடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு. முத்து நிலவன்  அவர்கள் தனது சிறப்புரையைத் தொடங்கியிருந்தார்கள். 

அவர்களுடைய நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது அதுவே முதன்முறை. 

மேடைக்கு எதிரில் - முதல் வரிசையில், அன்பின் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களும்,


முனைவர் ஜம்புலிங்கம்  - ஆகிய வலைத் தளங்களை  நடத்தி வரும் -


சித்தாந்த ரத்தினம் திரு. முனைவர் B. ஜம்புலிங்கம்  (கண்காணிப்பாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை) அவர்களும் அமர்ந்திருந்தனர்.

அங்கே - மடை திறந்த வெள்ளம் என  - ஐயா முத்து நிலவன் அவர்களின் செந்தமிழ்ப் பெருக்கு.

அதனிடையே அமிழ்ந்தவாறு - அரங்கில் திரண்டிருந்த மக்களின் ஊடாக நானும் அமர்ந்து கொண்டேன்.

அன்றைய நாள் - பிப்ரவரி பத்தொன்பதாம் நாள். 

19.2.1855 - 28.4.1942

தமிழ் கூறும் நல்லுலகம் பெருமையுடன் கொண்டாடும் தமிழறிஞர் உ.வே.சா. அவர்களின் பிறந்த தினம்.  

ஓலைச் சுவடியில் அழியும் நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை மீட்டு பதிப்பித்து அளித்த உ.வே.சா. அவர்களுக்கு  நிகராக வேறு எவரும் இல்லை. 


தனது வாழ்நாளில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். தொண்ணூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுப் பதிப்பு செய்தார்.

தமது தளராத உழைப்பினால் தமிழின் அருமை பெருமைகளை தமிழர் அறியும் படிக்குச் செய்தவர் - உ.வே.சா. அவர்கள்.

ஆதலால், அன்பின் திரு. முத்து நிலவன் அவர்கள் எடுத்துக் கொண்டிருந்த தலைப்பு -  

உ. வே.சா. அவர்களின் சமயம் கடந்த தமிழ்ப் பணிகள்!.. 

அடடா!.. 

எடுத்துக் கொண்ட தலைப்புக்கு ஏற்றதாக - 

எத்தனை எத்தனை விளக்கங்கள்!.. 

எத்தனை எத்தனை  சொல் நயங்கள்!.. 

அத்தனையும் அழகு!..

தமிழ்த் தாத்தா என அன்புடன் அழைக்கப்படும் - உ.வே.சா. அவர்களின் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி விவரித்த பாங்கு சிறப்புடையது!..

அதுவரையிலும் சிற்றிலக்கியங்களை மட்டுமே பயின்றிருந்த உ. வே. சா. அவர்கள் -

தனது நண்பர் சேலம் திரு. இராமசாமி முதலியார் - ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான - சீவக சிந்தாமணியைப் பற்றி அறிமுகம் செய்த பின்,

சமய வேறுபாட்டினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண காப்பியமாகிய - சீவக சிந்தாமணியின் சுவடிகளைத் தேடிப் புறப்பட்டதையும்

அரும்பாடுபட்டு, அந்த ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து - பதிப்பித்து வெளியிட்டதையும் திரு. முத்து நிலவன்  அவர்கள் மெய்சிலிர்க்க விவரித்தார்.


முத்து நிலவன் ஐயா அவர்கள் - தனது சிறப்பான சொற்பெருக்கினால் அனைவரையும் கட்டிப் போட்டார் என்பதே உண்மை..

பலத்த கரகோஷங்களுக்கிடையே திரு. முத்து நிலவன் அவர்கள் தனது சிறப்புரையினை நிறைவு செய்தபோது,

இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே!..  - என்று என் மனம் ஏங்கியது .

மேடையில் இருந்து திரு. முத்து நிலவன் அவர்கள் கீழே இறங்கியதும் நான் சென்று - 

அன்பின் திரு. ஜெயக்குமார் அவர்களை அணுகி எனது வணக்கத்தினைச் சொன்னேன். 

பாசப்பெருக்குடன் எனது கரங்களைப் பற்றிக் கொண்டார் திரு. ஜெயக்குமார் அவர்கள்.

அருகிருந்த முனைவர் திரு. ஜம்புலிங்கம் அவர்களிடம் என்னையும் ஒரு பொருட்டாக அறிமுகம் செய்து வைத்தார். 

அத்துடன் - அன்பின் திரு. முத்து நிலவன் அவர்களிடமும் -

''..தஞ்சையம்பதி எனும் அழகிய வலைத் தளத்தை நடத்துபவர்!..'' - என்று,

என்னை அறிமுகம் செய்து வைத்தபோது என் மனம் நெகிழ்ந்தது.


அன்பின் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுடனும் 
அன்பின் திரு. ஜம்புலிங்கம் அவர்களுடனும் 
அன்பின் திரு. முத்து நிலவன் அவர்களுடனும் 
- நான் பேசிக் கொண்டிருந்த நேரம் பொன்னானது.

இரவுப் பொழுது.  நேரமும் ஆகி விட்டது. 


எவருக்கும் - அங்கிருந்து - புத்தகத் திருவிழாவிலிருந்து பிரிவதற்கு மனம் இல்லை.

ஆயினும் என்ன செய்ய!?.. 

ஒருவருக்கொருவர் அன்பின் பரிமாற்றங்களுடன் விடை பெற்றுக் கொண்டோம்.

அன்பின் திரு.  முத்து நிலவன் அவர்கள் அன்பும் ஆதரவும் கொண்டு என்னிடம் உரையாடிய நிமிடங்கள் மறக்க இயலாதவை.

மனதிற்கு நெருக்கமான மகிழ்ச்சியான தருணங்கள் அவை. 

அனைவருக்கும் இத்தகைய 
பொன்மாலைப் பொழுதுகள் கிடைக்க வேண்டிக் கொள்கின்றேன்.

நல்லாரை காண்பதுவும் நன்றே; நலம் மிக்க 
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் 
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு 
இணங்கி இருப்பதுவும் நன்றே!..

சனி, பிப்ரவரி 15, 2014

மாசி மகம்

எல்லாம் வல்ல இறைவனின் தனிப்பெருங்கருணையினாலும் அன்பு நிறை நெஞ்சங்களின் நல்லாசிகளினாலும் எனது அன்பு மகளின் திருமணம் - சிவகாசி நகரில் - பிப்ரவரி ஒன்பதாம் நாள் ஞாயிறன்று இனிதே நிகழ்ந்தது.

அந்த நிகழ்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முன்பாக இனியதொரு பதிவு..

சூரியன் கும்ப ராசியிலும் தேவகுரு ஆகிய பிரகஸ்பதி வருடாந்திர சுழற்சியாக ஒரு ராசியிலும் இருக்க - மக நட்சத்திரத்தில் சந்திரன் நிறை நிலவாகக் கூடும் திருநாள் - மாசி மகம். 

சூரியன் கும்ப ராசியிலும் தேவகுரு ஆகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் இருக்க - மக நட்சத்திரத்தில் சந்திரன் நிறை நிலவாகக் கூடும் திருநாள் - மகாமகம்.  


வியாழ வட்டம் எனப்படும் சுழற்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்.

மகாமகம் எனப்படும் திருநாள் எதிர்வரும்  2016 - ல் நிகழ இருக்கின்றது. 

ஆயினும் - இப்போது மிதுன ராசியில் குரு விளங்க - வழக்கம் போல மாசி மகம் அனுசரிக்கப்படுகின்றது.

இன்று பிப்ரவரி 15. மாசி மகம்.

முன்னொரு சமயம் - 

ஊழிப் பெருவெள்ளம் கொண்டு  உலகைப் புனரமைக்க விரும்பிய ஈசன் - நான்முகனை அழைத்து சிருஷ்டிக்கான ஜீவ அமுதத்தினை ஒரு கும்பத்தில் நிறைத்து வழங்கினார்.

அதனை ஊழிப் பெருவெள்ளம் ஏற்படும் போது அதில் மிதக்க விட்டு - அந்தக் கும்பம் எவ்விடத்தில் தங்குகின்றதோ அங்கே அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி ஆணையிட்டார்.

பிரம்மனும் அவ்வாறே செய்ய  - ஈசன் வேட வடிவங்கொண்டு எய்த அம்பினால்   - கும்பம் உடைந்து அதிலிருந்த அமுதம் பூமியில் பரவி ஓரிடத்தில் திரண்டு நின்றது. 

அதுவே - மகாமகத் தீர்த்தம். கும்பம் தங்கிய திருத்தலம் - கும்பகோணம்.

அமுதம் ஊறிக் கிடந்த மண்ணில் இருந்து  சுயம்புவாகத் தோன்றிய லிங்க வடிவத்தினுள் - உலகம் உய்யும் படிக்கு ஈசன் ஜோதி வடிவாக நிறைந்தார்.


எனவே, ஈசன்  - ஸ்ரீகும்பேஸ்வரர் என  விளங்குகின்றார்.

அம்பிகை சர்வ மங்களங்களையும் அருளும் ஸ்ரீ மங்களாம்பிகை.

பின்னொரு சமயம் -

மக்களின் பாவங்களை சுமந்ததால் - களையிழந்த நதிகள் அனைத்தும் கங்கையின் தலைமையில் காசி விஸ்வநாதரிடம் முறையிட்டன. 

கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரை, கிருஷ்ணை, சரயு -

எனும் நவ கன்னியரின் அல்லலைப் போக்குதற்கு - சிவபெருமான் தாமே அவர்களை அழைத்து வந்து அடையாளங்காட்டியருளிய தீர்த்தம் - மகாமகத் தீர்த்தம். 

ஐயன் அருளியபடி,  அவர்கள்  தீர்த்தத்தில் நீராடி தமது பாவங்களைத் தொலைத்த நாள்  - மகாமகத் திருநாள்.

இந்தத் திருநாள் - திருக்குடந்தையில் சகல சிவாலயங்களிலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது

சிலவருட இடைவெளிக்குப் பின் - இந்த வருடம் மாசி மகத்தின் போது தஞ்சையில் இருக்கும் பேற்றினைப் பெற்றேன். 

இன்று மாலையில் கும்பகோணம் சென்று -

ஸ்ரீ உச்சிப் பிள்ளையார் திருக்கோயில்,
ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில், 
ஸ்ரீ தேனார்மொழி சோமசுந்தரி சமேத ஸ்ரீவியாழ சோமேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ பிரஹந்நாயகி  சமேத ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், 
ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், 
ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீஅபிமுகேஸ்வரர் திருக்கோயில் 

- என  ஆலய தரிசனம் செய்து அனைவருடைய நலனும் வாழ்க என்று வேண்டிக் கொண்டு மகாமகத் திருக்குளத்தை வலஞ்செய்து வணங்கினேன்.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சில - இன்றைய பதிவில்!..

பதிவில் உள்ள படங்கள் கைத்தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டவை.

ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ சார்ங்கபாணி தெப்போற்சவம்
ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில்
ஸ்ரீ உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்
ரிஷப வாகனத்தில் பெருமான்
ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ வடிவேல் குமரன்
வெள்ளி விமானத்தில் பெருமான்

திருக்கயிலாய சிவகண வாத்ய முழக்கத்துடன் , மகாமகக் குளக்கரையில் பெருமான் வலம் வந்தருளிய போது -

அப்பகுதியே - சிவலோகம் என விளங்கியது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் - என மூன்றினாலும் சிறந்து விளங்கும் திருத்தலம்  - கும்பகோணம்.

திருக்குடந்தையைக் கண்டு தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

சிவாய திருச்சிற்றம்பலம்!..

புதன், பிப்ரவரி 05, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 16

காணக் கண்கோடி வேண்டும் என அனைவரும் தவித்தனர். காரணம் -

ஐயன் மணிகண்டன் - ஆயிரங்கோடி சூரியனைப் போல்  ஜொலிக்கின்றான்.

கண்டு தரிசித்தவர் - தம் கடுவினைகள் எல்லாம்  - அனல் பட்ட மெழுகாய் அழிந்து போயின.


ஐயனே சரணம்!.. அப்பனே சரணம்!.. என அனைவரும் விழுந்து வணங்கினர்.

தேவதேவனே!.. எம் குலம் காக்க வந்த கோமகனே!.. எம்மையும் ஒரு பொருட்டாக ஆண்டு கொள்ளுக!.. என நெக்குருகி நின்றனர்.

தேவர்கள் பூமழை பொழிந்தனர்.

பந்தளத்தின் ராஜ தம்பதியினர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.  யாம் பெற்ற பேறு - வேறு யார் பெறக்கூடும்!?..

மன்னரின் கேள்விக்கு விடையாக  - மணிகண்டப் பெருமான் திருவாய் மலர்ந்தான்.

யான் ஹரிஹரசுதன். ஸ்ரீதர்ம சாஸ்தாவின் மறு அவதாரம். தங்களது பூர்வ ஜன்ம புண்னியத்தினால் பந்தளத்தின் அரண்மனையில் மகவாக வளர்ந்தோம். இங்கே இதுவரையில் நிகழ்ந்ததெல்லாம் ஈசனின் அருளாணையின் படியே நிகழ்ந்தன.  எனவே எவ்விதத்திலும் கலக்கம் கொள்ள வேண்டாம்!..

ஐயனே!.. பிள்ளைப் பாசம் எங்கள் நெஞ்சை அழுத்துகின்றது. தாங்கள் எம்முடன் வளர்ந்த நாட்களில் வாழ்ந்த நாட்களில் -  தங்களுக்கு நாங்கள் ஏதும் பிழை புரிந்திருந்தால் - பெருங்கருணையுடன் அவற்றைப் பொறுத்தருள வேண்டும். இந்நாட்டையும் மணிமகுடத்தையும் தங்களின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன். அவற்றை ஏற்று  எம்மை வழி நடத்தி - அருள் புரிக!..

மன்னர் வேண்டிக் கொண்டார்.

அப்பா!.. மணிகண்டா!.. சர்வக்ஞனாக எல்லாம் அறிந்திருந்தும் எந்தன் பிழையைப் பொறுத்தருளி - வஞ்சனை தொலைக்க வேண்டி வன்புலி வாகனனாக வந்த வள்ளலே!.. உன் மேல் உற்ற அன்பினால் எப்படி எப்படியெல்லாமோ அழகு செய்து பார்த்து மகிழ்ந்திருந்தேன். இன்னும் ஒரு குறையாக - நீ மணிமுடி தரித்து செங்கோல் ஏந்தி அரசு கட்டில் அமர வேண்டும். அதனை நான் கண்ணாரக் கண்டு இன்புற வேண்டும்!..

தாயே!.. தந்தையே!... உங்களின் பாசத்தினால் நான் கட்டுண்டு இருக்கின்றேன். ஆயினும் எனக்கென விதிக்கப்பட்டது ஒன்று உண்டு!...

சொல்லுக.. ஐயனே!.. அதை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம்!..

அங்ஙனமாயின் - தாங்கள் எமக்கு சூட்டுவதாக இருந்த மணிமுடியினை தம்பி ராஜராஜனுக்கே சூட்டுங்கள்!..

என்ன!?.. மூத்தவனாக முன்னவனாக தாம் இருக்கையில் - இளையவனுக்கா!..

ஹரிஹரபுத்ரனாகிய நான்  - கலியின் கொடுமைகளில் இருந்து மக்களைக் காத்தருளவே - அவதாரம் செய்தேன். மணிமுடி தரித்து - மண்ணை ஆள்வது  எனது நோக்கம் இல்லை. என் பணி நிறைவடைந்ததாக உணர்கின்றேன்!.. தாங்கள் அனைவரும் எனக்கு விடை கொடுக்க வேண்டும்!..

மன்னருக்கும் அரசிக்கும் ஆற்றாமை தாள் இயலவில்லை.

என் ஐயனே!.. என் அப்பனே!.. உனக்காக   திருஆபரணங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அவற்றை உனக்கு சூட்டி அழகு பார்க்க இனி என்றைக்கு இயலும்!?..

உங்கள் விருப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டியது என் கடமை. இதோ இந்த சரம் சபரிமலைக்காட்டில் எந்த இடத்தில் பதிந்திருக்கின்றதோ  - அங்கே எனக்காக பதினெட்டுத் திருப்படிகளுடன் கூடிய  திருக்கோயிலை எழுப்புக..

அந்தத் திருக்கோயிலில்  எழுந்தருளும் திருமேனியில் மகர சங்கராந்தி அன்று திருஆபரணங்களைச் சூட்டி மகிழ்க. காந்த மலையில் பொன்னம்பல மேட்டில்  ஜோதி வடிவாகத் தோன்றியருள்வேன்!.. ஏக சிந்தையுடன் என்னை வழிபடும் அடியவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தந்து காத்தருள்வேன்!..

- என்று மணிகண்டப்பெருமான் திருவாய் மலர்ந்தருளினான்.

ஐயனே!.. அந்தத் திருத்தலத்தை நாங்கள் எவ்விதம் காண்பது?..

கருடன் வழிகாட்டுவான்.. திருமேனியினை ஸ்ரீபரசுராமர் பிரதிஷ்டை செய்வார். ஸ்ரீ அகத்திய மகரிஷி பூஜா தர்மங்களை விளக்குவார்!..

என்று மொழிந்த மணிகண்டன் - கோதண்டத்தில் சரம் தொடுத்து எய்தான். அது காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பாய்ந்து மறைந்தது.

அதுவரையிலும் பொன்னாபரணங்களுடனும் பட்டு பீதாம்பரத்துடனும் விளங்கிய மணிகண்டன் - அனைத்தையும் துறந்தவனாக - மரவுரியுடனும் ருத்ராட்ச துளசி மாலைகளுடன் திருக்கோலம் காட்டி  அருளினான்!..

மனதைத் திடப்படுத்திக் கொண்ட மன்னரும் மற்றவர்களும் மணிகண்டப் பெருமானை மனதாரத் துதித்து வணங்கினர்.

அங்கே மங்களம் நிறைந்திருந்தது.


அப்போது,  மன்னன் ராஜசேகர பாண்டியனும் மற்றவர்களும் தமக்கு நல்லுபதேசம் செய்தருளும்படி - மணிகண்டனிடம் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டனர்.

நம்மை வாழ வைக்கும் பூமிக்கும் பூமியில் உள்ள உயிர்களுக்கும் எந்த விதத்திலும் தீங்கு செய்யக்கூடாது. எதைச் செய்தாலும்  இயல்பிலிருந்து மாறாமல் தனக்கு நன்மையானவைகளை விருப்புடன் செய்து கொள்வது போல - இந்த சமுதாயத்திற்கும் விருப்புடன் செய்வதே மேன்மைக்கு வழி வகுக்கும்.

ஈசனை வாயார வாழ்த்திப் போற்றுவதோடு  அனைவருக்கும் இனியதாக சந்தோஷமாக பேசவேண்டும்.

நம்முடைய மனம் கொண்டு ஈசனை தியானித்து - தனக்கும் தன் குடும்பத்திற்கும் நன்மைகளைக் கேட்கும் போது - பரந்து விரிந்த இந்தப் பூவுலகிலுள்ள அனைத்தும், அனைவரும் நன்றாக வாழவேண்டும் என்று உலக நன்மைகளுக்காகவும் பிரார்த்திக்க வேண்டும்.

இறைவனை வணங்குவதோடு மட்டுமல்லாமல் - அவனை மனதில் நிறுத்தி - செய்யும் கார்யங்களை சிறப்பாக செய்ய வேண்டும். அவனால் விளங்கும் இந்த பூமியில் யாவருக்கும் பயன்படுமாறு பொது சேவைகளை இயன்றவரை மனதாரச் செய்யவேண்டும்.

இப்படி வாழும் வாழ்க்கையில், தன் வியர்வையினால் சேர்த்த செல்வத்தை தனக்கும் தன் குடும்பத்திற்கும் என பத்திரப்படுத்து நியாயம் தான். எனினும் அத்துடன்  நில்லாமல் - பரோபகாரமாக  அற்றார்க்கும் அலந்தார்க்கும் எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல் - தானமும் தர்மமும் செய்ய வேண்டும்.

ஸ்வதர்மப்படி அவரவருக்கு இயன்றவரை, சகல ஜீவராசிகளுக்கும் நலம் விளையும்படி எளிய தர்மங்களைச் செய்வதே பரோபகாரம். பரோபகாரம் என்றால் - பரன் ஆகிய பரம் பொருளுக்கே செய்யும் நற்காரியம்.

இத்தகைய அருஞ்செயல்களை  - தன் விருப்பத்தால் செய்யும் தனி ஒருவர்  என்றாலும் ஒத்த மனம் உடைய பலர்  என்றாலும் அத்தகைய அருளாளர்கள் இருக்கும் இடம் புனிதமாகின்றது.

விருப்பத்துடன் தெய்வத்திற்கு  தொண்டு செய்வதைப் போலவே - திக்கற்ற எளியோருக்கும் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அதுவும் இறை வழிபாடாகவே ஆகின்றது.

தெய்வத்திற்கும் தேசத்திற்குமாக வாழ்வதே வாழ்க்கை. இப்படி வாழ்வதே மிகச்சிறந்த தவம்.
 
இக வாழ்க்கையை - அது இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் அதனோடு விருப்பு வெறுப்பு இன்றி, இரண்டறக் கலந்து - எல்லாம் ஈஸ்வரார்ப்பணம் என்று வாழ்பவருடைய நெஞ்சத்தில் அருட்பெருஞ் சோதியாக  - இறைவன் ஒளிர்வான்.


தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் - தான் எனும் அகங்காரத்தைத் துறந்து - யார் ஒருவர் பரோபகாரமாக தர்மங்களைச் செய்கின்றாரோ  அவர்தம் நெஞ்சம் கோயில் ஆகின்றது. அங்கே அழைக்காமலேயே தெய்வம் வந்து கொலு இருக்கும்.

எல்லா உயிர்களையும் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பாவித்து திரிகரணமாகிய  மனம் மொழி மெய் இவற்றால் பரோபகாரத்துடன் வாழ்ந்து சாயுஜ்ய நிலையை  அடைய வேண்டும்.

இதைத் தான் ஞானிகளும் மகான்களும் சித்தர்களும் உத்தமர்களும் ஆன நம் முன்னோர்கள் நமக்கு உரைத்தனர். அதையே பின்பற்றி மேல்நிலையை அடைவீர்களாக!..

என்று கலியுக வரதனாகிய ஸ்ரீமணிகண்டன் ஆசீர்வதித்தான்.

ஐயா.. சரணம்!.. அப்பா சரணம்!..  ஐயப்பா சரணம்!..

என முழங்கியவாறு  - மணிகண்டனை வலம் செய்து வணங்கினர்.

இதுவே - எனது சரண மந்திரம் ஆகட்டும்!.. இருமுடி சுமந்து -  பெருவழி எனப்படும் அடர்ந்த காட்டிலும் மேட்டிலும் நடந்து, சபரிமலை உச்சியில் - ஐம்புலன்கள், அஷ்ட ராகங்கள், மூன்று குணங்கள் - எனும் பதினாறுடன்   அஞ்ஞானம் , ஞானம் எனும் இரண்டும் சேர்ந்ததாகத் திகழும் பதினெட்டுப் படிகளையும் கடந்து வரும் எவர்க்கும்  -


"..நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்!.." - என்பதை உணர்த்துவேன்!.. அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும்!..

மணிகண்டன் ஜோதி வடிவாக எங்கும் நிறைந்தவன் ஆனான்.   

ஐயா சரணம்!.. அப்பா சரணம்!..  
ஐயப்பா சரணம்!..
சுவாமியே சரணம் ஐயப்பா!..

சுவாமியே சரணம் ஐயப்பா!..
சுவாமியே சரணம் ஐயப்பா!..

திங்கள், பிப்ரவரி 03, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 15

வள்ளல் மணிகண்டனைச் சுமந்தபடி  வனபூமியைக் கடந்தது - வன்புலி.

பொழுது புலர்கின்ற நேரம். மெல்ல விழித்துக் கொண்டிருந்தது பந்தளம்.

புள்ளினங்கள் எல்லாம்  - இன்னும் சற்று நேரத்தில் நிகழ இருக்கும் அற்புதத்தினைக் காண்பதற்கு ஆவலுடன்  ஆரவாரித்துக் கொண்டிருந்த வேளையில் -

விடிந்தது பொழுது என வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் -


கானகப் புலியின் மீது கம்பீரமாக அமர்ந்து பாலகன் ஒருவன் வருவதைக் கண்டு அதிர்ச்சியில் அலறியபடி - விக்கித்து விழுந்தனர்.

அலறல் சப்தம் கேட்டு  - என்ன  என்று அறிவதற்குத் திரண்டு ஓடி வந்தவர்கள் திகைத்து நின்றனர்.

அஞ்சி நடுங்கினர் மக்கள். தாம் காண்பது மெய்யா.. பொய்யா.. என, மதி மயங்கினர். அவர்களால் நம்பவே முடியவில்லை.

வன்புலி வாகனனையும் அவனுடன் சேர்ந்து வந்த புலிக் கூட்டத்தையும்  கண்ட பந்தளத்தின் மக்கள்  பதறித் துடித்தபடி  - பாய்ந்தோடிச் சென்று மூலை முடுக்குகளில் பதுங்கிக் கொண்டனர்.

''..இப்படியும் நடக்குமோ!..'' - என அச்சத்தில் உறைந்து போயினர்.

அச்சம் தீர்க்க வந்த ஐயன் என்பதனை அவர்கள் உணர்ந்தார்களில்லை.


ஓரிருவர் சற்றே மனம் தெளிந்து - புலி மேல் வருபவர் - ''..நம்முடைய ராஜகுமாரன்....  மணிகண்டன்!..'' - என அடையாளங்கண்டு கொண்டனர்.

வெம்புலி மேல் பவனி வரும் அம்புலியைக் கண்டு  - அதிசயித்த மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் பிறந்தது.

புலிவாகனனைச் சூழ்ந்தபடி வானில் பலவிதமான பறவைகளுடன் - கிருஷ்ண பருந்துகளும் வட்டமிட்டதைக் கண்ட மக்கள்  - 

''..இத்தனைப் புலிகள் கூட்டமாகப் போயும் ஒரு அசம்பாவிதம் கூட ஏற்பட வில்லையே... இங்கே ஏதோ ஒரு தெய்வ காரியம் நடக்க இருக்கின்றது..'' என்பதைப் புரிந்து கொண்டு  புலிக்கூட்டம் போன வழியை நோக்கி கைகூப்பிக் கும்பிட்டனர்.

தெளிந்தோர் - மனதில் ஆனந்தம் அலை அலையாய்ப் புரள - உன்மத்தராகினர்.

புலிக்கூட்டம் போன வழிப் புழுதியில் விழுந்து புரண்டனர்.

அங்கே -  அரண்மனைக்குள்,

மகனின் நிலையினை அறிய இயலாத மன்னர் சிவபூஜையில் அமர்ந்திருக்க,

அசடனான  - மந்திரி - அகமகிழ்ந்திருந்தான்..

''..மகாராணியார்.. மனம் களைக்கவேண்டாம்.பந்தளத்தின் மணிமுடி தங்களின் மகனுக்குத்தான்!..''

இந்த வார்த்தைகள் அரசியின் காதுகளில் தித்தித்தன. மனம்  குதுகலித்தது.

அந்த நேரத்தில் - வெளியே எழுந்த  பெருத்த ஆரவாரம் - அவர்களுடைய ஆனந்தத்தை அற்பமாக ஆக்கி ஆசைக் கனவுகளைக் கலைத்துப் போட்டது.

''.. ராஜ குமாரன்!..  ராஜ குமாரன்!..  புலிக்கூட்டத்தோடு வருகிறார்!..''

திடுக்கிட்ட அனைவரும்  கொட்டாரத்தின் வாசல் தேடி விரைந்தனர்.

புன்னகை பூத்த முகத்துடன் மணிகண்டன் - புல்லர்தம் செருக்கு அழிய - பூத்தெழுந்த இளங்காலைச் சூரியனைப் போல தேஜோமயமாக வந்து கொண்டிருந்தான்.

கூடவே - பெரிதும் சிறிதுமாக புலிகள்.. ஒன்றோடொன்று உரசிக் கொண்டு..

அந்தப் புலிகளின் உறுமல் சப்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே -

பொய்யுரைத்த ராஜ வைத்தியன் - தன் கையிலிருந்த மூலிகைப் பெட்டித் தூக்கி எறிந்து விட்டு, தப்பித்து ஓடும் வழியறியாமல் அரண்மனைச் சுவரில் முட்டிக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்தான்.

கொழு கொழு என்றிருந்த புலி தன்னை உற்று நோக்கியபடி வருவதைக் கண்டு வெலவெலத்த மந்திரி - அப்போதே தன் குருதியெல்லாம் வற்றிப் போனதை உணர்ந்தான்.


மணிகண்டன் - புலி மீது ஆரோகணித்து வருவதைக் கண்ட மாத்திரத்தில், ''..மகனே!..'' - என்று கதறிய அரசியைப் பிணைத்திருந்த மாயச்சங்கிலிகள் இற்று விழுந்தன.

மன்னரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்..

''..மகனே.. மணிகண்டா!.. செயற்கரிய செய்தவனே!..'' - என இரு கரங்களையும் ஏந்தியபடி- நெருங்கினார்.

''.. தந்தையே!..'' - என்றபடி - புலியின் மீதிருந்து இறங்கினான் மணிகண்டன்.

''..என் செல்வமே.. மணிகண்டா!..''-  அழுத விழிகளுடன் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் - தாய்..

''..அம்மா!.. தங்களுக்காக புலியைக் கொண்டு வந்துள்ளேன்!.. அமைச்சரே.. வேண்டுமளவுக்கு பாலைக் கறந்து ராஜவைத்தியரிடம் கொடுங்கள்!.. புலியைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் அருகில் இருக்கின்றேன்!..''

தாய்மை பெருக்கெடுக்க - தன் குற்றத்தை உணர்ந்தவளாக கதறினாள் அரசி.

''..என்னை மன்னித்து விடு.. ஐயா!.. என்னை மன்னித்து விடு.. என் அன்புச் செல்வமே!.. சுயநலத்தினால் என் புத்தி கெட்டது. வாராது வந்த மாமணியே!.. மணிகண்டா!.. என வாரித்தழுவி வாஞ்சையுடன் சீராட்டிப் பாராட்டி பாலூட்டி வளர்த்த உன்னை - வகையற்றோர் சொல் கேட்டு வனம் அனுப்பி வைத்த வஞ்சகி ஆனேனே!..''

அரசியின் கதறலைக் கேட்ட மன்னர் அதிர்ந்தார்.


''.. என்ன!.. எல்லாம் வஞ்சனையா.. நாடகமா?.. நம் கண்மணிக்கு எதிராக இப்படியொரு சதித்திட்டமா!.. அவன் யாருக்கு என்ன கெடுதல் செய்தான் என்று இத்தகைய சூழ்ச்சியைச் செய்தீர்கள்!?...''

''..மணிகண்டன் மணிமுடி தரித்து அரியணையில் ஏறி விட்டால் - அந்தஸ்தும் கௌரவமும் அவனுக்கே போகும். மதங்க வனத்தில் கிடைத்தவனுக்கு வாழ்வும்!.. உங்கள் வயிற்றில் பிறந்தவனுக்குத் தாழ்வும்!.. என்ற துர்போதனை என் குணத்தை அழித்தது ஸ்வாமி!..''

''..இத்தகைய துர்போதனை செய்தது யார்?.. கூடவே இருந்து குழி பறித்தது யார்?.. வீட்டுக்குள் விஷ வித்தை விதைத்தது யார்?...''

விழிகள் எரிதணல் என சிவக்க - மன்னரின் கை உடைவாளைப் பற்றியது.

''..மன்னா.. நான்தான் அந்தப் பாதகத்தை விதைத்தேன்.. என்னை தங்கள் வாளால் தண்டித்து விடுங்கள்..'' - மந்திரி நெடுஞ்சாண்கிடையாக மன்னரின் பாதங்களில் விழுந்தான்.

''..நீயா... உன்னை என் சகோதரன் போல அல்லவா நடத்தினேன்!.. உன் புத்தியும் இப்படி கெட்டுச் சீரழிந்ததே!.. தளபதி!.. இவனை இழுத்து அந்தப் புலிக் கூட்டத்தினுள் தள்ளி விடுங்கள்!..''

''..வேண்டாம் தந்தையே!.. இவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்!..''

''.. மணிகண்டா.. பால்வடியும் உன்முகங்கண்டு மயங்கி - கானகப் புலிகளும்  உன் பின்னால் வந்தனவே!.. அப்படியிருக்க - பன்னிரண்டு வருடங்கள் ஒருவருடன் ஒருவராய் வளர்ந்தும் வாழ்ந்தும் உன்னைக் கண்டு வஞ்சனை கொண்டனர் என்றால்!?..''.  - மன்னரின் மனம்  அடங்கவில்லை.

''..ஏன் என் கால்களில் விழுந்து கிடக்கின்றாய்.. போ.. போய் மணிகண்டனின் கால்களில் விழு.. இனியாவது நல்ல புத்தி வரட்டும்!..'' - அமைச்சரை  நோக்கி சீறினார்.


கதறிக் கண்ணீர் வடித்தபடி - மணிகண்டனின் கால்களை இறுகப்பற்றிக் கொண்டான் மந்திரி.

''..என்னை நீங்கள் எது செய்தாலும் தகும்!.. உங்கள் மீது பூதப்பிரேத பிசாசங்களை ஏவி விட்ட பாவி நான்.. அது போதாது என்று தாங்கள் அருந்திய பாலில் நாக விஷத்தைக் கலந்த கொடியவனும் நான் தான்.. அதிலெல்லாம் நீங்கள் தப்பி விட்டீர்கள் என்று தான் - புலிப்பால் வேண்டும் என்று உங்களைக் காட்டுக்கு அனுப்ப சதி வலை பின்னிய சண்டாளனும் நான் தான்!..''

''..இளவரசே!... உங்கள் மீது - இத்தனை குரோதம் ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. மதிகெட்டு பாழாகிப் போனேன்.  தங்களின் கை வாளால் என்னைச் சேதித்து விடுங்கள். அதுதான் நான் செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனை!..''

காலில் விழுந்தவனை - கைதூக்கி விட்டான் மணிகண்டன்.

''..உன்னுடைய பாவங்கள் நீ சிந்திய கண்ணீரால் கரையட்டும்!..''

''.தவறிழைப்பது மனிதமனம். அதை மன்னிப்பது தெய்வகுணம்.. மணிகண்டா!.  உன்னை மகனாகப் பெற்ற அந்தநாளை விட, இன்றுதான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்!..''

மன்னர்  - மணிகண்டனை மார்புறத் தழுவிக் கொண்டார்.

அரசியின் மனம் ஆறவில்லை. இத்தனை பாதகத்துக்கும் துணை நின்றது - தனக்குத் தகுதியானது தானா - என்று சிந்திக்க சிந்திக்க -  கண்ணீர் ஆறாகப் பெருகிய வண்ணம் இருந்தது.

அதைக் கண்ட ஐயன் அன்னையின் கரங்களை ஆதுரமாகப் பற்றியவாறு -

''..தாயே!.. நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள்.. இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்!.. இன்னும் ஆக வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன!..'' - என்றான் கனிவுடன்.

''..ஆம் மகனே!.. இன்னும்  ஆக வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன!..'' - அரசி மணிகண்டனின் முடிசூட்டு விழாவினை மனதில் கொண்டு பேசினாள்.

அதேவேளை, ''..மணிகண்டனுடன் வந்த புலிகளை சாந்தப்படுத்தி அவற்றை திரும்பவும் கானகத்துக்கு அனுப்ப வேண்டுமே!.. என்ன செய்வது?..''  - என்று மன்னர் யோசித்தார்.

தந்தையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மணிகண்டன்,

''..தேவேந்திரா!.. உனது உதவிக்கு மிக்க நன்றி!.. நீயும் மற்ற தேவர்களும் என்றென்றும் மக்களுக்குத் துணையிருப்பீர்களாக!..'' - என்று கூறியதும்
- ஒருகணம் - புலிகள் எல்லாம் தேவ ஸ்வரூபம் காட்டி மறைந்தன.

இதைக் கண்ட அனைவரும் திடுக்கிட்டு நின்ற வேளையில்  - ஐயன் மணிகண்டன் ஜோதிஸ்வரூபனாக திவ்ய தரிசனம் தந்து நின்றான்.


''..ஆ!..ஆ!.. என்னே அற்புதம்!.. என்னே அற்புதம்!..  அல்லும் பகலும் நான் என் அகத்தாமரையில் வைத்துப் பூஜிக்கும் ஹரனா!.. அல்லது கோமகன் வடிவம் கோவிந்த ஸ்வரூபம் என ஹரியா!.. ஐயனே.. தாங்கள் யார்!?...''

''..என்னுள்ளத்தின் ஓர் ஓரத்தில் உண்மை சுடர் விட்டது. இத்தனை புலிகளைத் தன்வயப்படுத்திக் கொணர்வது சாமான்ய காரியம் அல்ல!.. இதில் ஏதோ தெய்வ அனுக்ரஹம் இருக்கின்றது என்று!..''

''.. ஆயினும்  நுட்பமாக உணர்ந்தேனில்லை.. ஐயனே!.. இனியும் தங்களை ஒளிக்காமல் தாங்கள் யாரென்பதை எமக்கு உரைத்தருள வேண்டும்!..''

மன்னர் கைகூப்பி நின்றார். தன் மடி தவழ்ந்து வளர்ந்த பிள்ளை தெய்வ வடிவு கொண்டு நிற்பதைக் கண்டு தாயின் மனம் தத்தளித்தது.

பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம் 
ஆர்தத்ராணபரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..