நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 28, 2018

அழகு.. அழகு 4

கடந்த மூன்று நாட்களாகவே
குடியிருப்பில் தண்ணீர் பிரச்னை...

தண்ணீர்த் தொட்டிகளில் ஒன்று உடைந்து போனது...

தண்ணீர் பற்றாக்குறை... என்றாலும் -

வியாழன் மாலையிலிருந்து சனிக்கிழமை இரவு வரை
இங்கே குடியிருப்பில் திருவிழாக் கொண்டாட்டம் தான்...

தண்ணீர் இல்லை என்றாலும் பரவாயில்லை..
நாங்க கேட்கமாட்டோமே!.. - என்று ஒரு கோஷ்டி...

ஆனால், நமக்கு எல்லாம் சம்பிரதாயம் தான்!..

அதனால் -
குளிப்பதும் அதன்பின் சமைப்பதும் தாமதமாகிப் போனது...

கணினியைத் திறந்தால் -
ஏதும் பதிவிட முடியாதபடிக்கு - இணையத்தின் வேகம் ... ஆகா!..

இருந்தாலும் -
கதை ஒன்றைத் தட்டச்சு அனுப்பியாயிற்று - எபிக்கு!..

இன்று காலையில் அவசியமான வேலை ஒன்று...
சிட்டிக்குச் சென்றாக வேண்டும்!..

ஆனாலும் பாருங்கள் -
நேற்றிரவு ஒருபொழுது வீசிய காற்றில் எல்லாம் குளிர்ந்து போயின...

தண்ணீரைச் சுட வைப்பதற்கு ஹீட்டரைப் போட்டால்
அது எனக்கென்ன?... - என்றிருக்கின்றது...

சரி.. அதற்குள் ஏதாவது பதிவைப் போட்டு விடுவோம் என்று தான் -
இதோ இந்தப் பதிவு!...

அந்த ஊர்லயும் மழை பெய்யுதாண்டி.. தங்கம்.. 
ஒரு கப் காஃபி கிடைச்சா நல்லாயிருக்கும்!... 
நம்மை ஏம்மா வாத்து....ங்கிறாங்க?...
நாம வரிசையா போறோமில்லையா.. அதனாலத் தான்!..
 
ராஜா...ன்னு இருந்தாலும் ஸ்ட்ரா போட்டுக் குடிக்க முடியுமா!...
ஏன்.. அந்த நரம்பைப் போட்டு தேய்ச்சிக்கிட்டு!.. 
ஏதோ... இது கொஞ்சம் பரவாயில்லை!...
காக்காய் எல்லாம்
இப்போ பாட்டுப் பாடறதே இல்லை!... 
மறுபடியும் உப்புமா....வா!...
உள்ளே ஒன்னும் இல்லே... ன்னுட்டு வர்றேன்..
இவன் இப்ப தான் ஆராய்ச்சி பண்ணப் போறான்!... 
படங்கள் வழக்கம் போல
அங்கும் இங்குமாக 
Fb ல் கிடைத்தவை..

எங்கும் அழகு 
எதிலும் அழகு 

வாழ்க நலம்..
ஃஃஃ

வியாழன், அக்டோபர் 25, 2018

அன்னாபிஷேகம்

நேற்று ஐப்பசி நிறைநிலா..
சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நிகழ்த்தப்படும் நாள்...

அன்னம்!...

அது தான் மனிதனின் எண்ணம்...

சாப்பிடும் உணவுக்குத் தகுந்த மாதிரியே
ஒரு மனிதனுடைய எண்ணங்கள் மலர்கின்றன...

அதனால் தான் சோறு ஆக்கும்போது
நல்ல எண்ணங்களுடன் சமைக்கச் சொன்னார்கள்...

அப்படி ஆக்கப்பட்ட உணவையும்
நல்ல எண்ணங்களுடன் பரிமாறச் சொன்னார்கள்...

இது நிதர்சனமான உண்மை...

குருஷேத்ர போர்க்களம்...

சிகண்டியின் பாணங்களாலும்
அர்ச்சுனனின் கணைகளாலும் தாக்கப்பட்ட
பிதாமகர் களத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்...

அவரது உடலை ஊடுருவிச் சென்ற கணைகள் பல நூறு..

அம்புப் படுக்கையில் கிடக்கின்றார்.. 
தலை மட்டும் தாழ்ந்து தொங்குகின்றது..

தலைக்கு அணை கேட்கிறார்..

அன்னத்தின் தூவிகளால் ஆன,
தலையணையைத் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள் - துரியோதனாதிகள்....

அடப் போங்கடா!.. - என்று சொல்லும்போது
அர்ச்சுனன் அம்பினால் தலைக்கு முட்டு கொடுக்கின்றான்...

தாகத்தினால் தவிக்கின்றார் பீஷ்மர்..

வழக்கம் போல அறிவிலிகள் கூஜாவைத் தூக்கிக் கொண்டு வர -
அர்ச்சுனனோ - பாதாள கங்கையை ஓரம்பினால் வரவழைக்கின்றான்...

சிம்மம் வீழ்ந்ததைக் கேட்டு உறவு முறைகள் எல்லாம்
கதறி அழுது கொண்டு போர்க்களத்திற்கு வருகின்றன...

அவர்களுள் பாஞ்சாலியும் ஒருத்தி!...

திரௌபதியைக் கண்டதும் ஆதுரத்துடன் அருகில் அழைக்கிறார்...

கண்ணீர் மல்க நெருங்கி பீஷ்மரின் அருகில் அமர்கின்றாள்..

அம்மா... அன்றைக்கு அந்தப் பாவிகள் செய்தது அநீதி!.. - என்கிறார்...

அந்த சோகத்திலும் சிரிக்கிறாள் அன்னை பாஞ்சாலி..

எல்லோரும் கோபாவேசமாகிறார்கள் -
மறுபடியும் இவள் சிரிக்கிறாளே!... - என்று..

மகளே.. நீ ஏன் சிரிக்கின்றாய்.. - என, எனக்குத் தெரியும்...
அன்றைக்கு சபையில் எதிர்த்து ஒரு குரல் கொடுக்காதவன்
இன்றைக்கு நியாயம் பேசுகின்றானே!... என்று தானே...

தாயே!... அன்றைக்கு நான் உண்டு கொண்டிருந்தது துரியனின் சோறு..
அதனால் என் சிந்தை செயலிழந்து போயிருந்தது...
அன்றைக்கு எதும் பேசமுடியவில்லை தான்..

அவனிட்ட சோற்றைத் தின்றதனால் வளர்ந்த நிணமும் குருதியும்
இன்றைக்கு அர்ச்சுனனின் கணைகளால் வழிந்தோடி விட்டன...

 உன்னுடைய வீர புருஷனால் நான் தாகம் தணிந்தேன்!...
அதுவும் நீதி நேர்மையறிந்த காண்டீபனின் கணையினால்!..
ஊற்றெடுத்த பவித்ர கங்கை என் பாவங்களைத் தீர்த்தாள்!..

கங்கை மறுபடியும் என்னைப் பெற்றெடுத்தாள்...
இன்று மீண்டும் நான் புதிதாய்ப் பிறந்தேன்...
நீதியையும் நியாயத்தையும் இனிமேல் தான் பேச முடியும்!..

இதைக் கேட்ட திரௌபதி
ஓ!.. - என்று அலறியவாறு பீஷ்மரின் திருவடிகளில்
முகம் புதைத்துக் கொண்டாள்...

இதற்கப்புறம் தான் பீஷ்மர்
எல்லாவித நீதி நெறிமுறைகளையும் புகல்கின்றார்..
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் மொழிகின்றார்..

மகாபாரதத்தில் கர்ணனும் சல்லியனும் சோற்றால் வீழ்ந்தவர்களே!..

பஞ்ச பூத சேர்க்கையினால் மண்ணிலிருந்து
பயிர்களும் உயிர்களும் தோன்றுகின்றன...

பயிர்களும் உயிர்களும் வாழ்க்கைச் சக்கரத்தில்
மனிதனுக்கு உணவாகின்றன...

உணவாகும் பயிர்களுள் உயர்வானது - மிக உயர்வானது - நெல்!..

அதிலிருந்து தோன்றும்
அரிசி, சோறு - இவையெல்லாம் சிவலிங்க வடிவம்...

அதனால் தான் அரிசியும் சோறும்
கருவான சமயத்திலிருந்து -
கட்டையில் கிடத்தப்படும் வரை
உடன் வருகின்றன...

அதற்கப்புறம் எஞ்சிய சாம்பல் நீரில் கரைந்த பின்னும்
ஆத்ம சாந்திக்கு என்று நீரில் கரைபட்டு
நம்மைக் கரையேற்றுவது சோறு!...

இதனால் தான் -
நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும்..
நல்ல எண்ணங்களுடன் பரிமாற வேண்டும்..
நல்ல எண்ணங்களுடன் சாப்பிட வேண்டும்!..
என்றெல்லாம் வகுத்து வைத்தனர் ஆன்றோர்...

ஆனால், பாருங்கள்.. 
இன்றைய நாளில் -
பிரியாணி எனும் ஒருவகைச் சோற்றுக்காக
பெற்றெடுத்த பிள்ளைகளைக் கொன்றொழித்த
பாவத்தையும் கேட்கும் நிலைக்கானது - நாடு...

ஒரு ஆணிடம் நல்ல உயிர் அணுக்கள் விளைவதற்கும்
ஒரு பெண்ணிடம் நல்ல கருவாய் அவை வளர்வதற்கும்
அடிப்படையானது நல்ல உணவு...

உணவினால் மனிதனுக்கு காமம் விளைகின்றது...
உணவினால் மனிதனுக்கு மோகம் விளைகின்றது...

உணவினால் மனிதனுக்கு கோபம் விளைகின்றது...
உணவினால் மனிதனுக்கு கொடூரம் விளைகின்றது...

இப்படியான உணவு தான் மனிதனுக்கு
அன்பையும் அறிவையும் அருளையும் கொடுக்கின்றது.. 

அன்பையும் அறிவையும் அருளையும் கொடுக்கின்ற
நல்ல உணவில் தலையானது - சோறு..

அந்த சோறு தான் சிவம் என்று மனதில் கொண்டு
மங்கலங்கள் அனைத்தையும் பெறுவோம்...

இனி நேற்றைய அன்னாபிஷேக திருக்காட்சிகள்...

தஞ்சாவூர் கோயில்களின் திருக்காட்சிகளைவழங்கியவர்
நண்பர் திருமிகு. ஞானசேகரன்.,

மற்றைய படங்கள்
பாரெங்கும் படர்ந்திருக்கும் சிவனடியர் திருக்கூட்டத்தினர்...

அவர் தமக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!...

ஸ்ரீபெருவுடையார் - தஞ்சை 
தஞ்சை ஸ்ரீ பிரஹதீஸ்வரருக்கு 
ஆயிரம் கிலோ அரிசி கொண்டு
அன்னாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது..

ஸ்ரீகொங்கணேஸ்வரர் - தஞ்சை..
ஸ்ரீவிஸ்வநாதர் - தஞ்சை..
ஸ்ரீசங்கரநாராயணர் - தஞ்சை.. 
ஸ்ரீ பூமாலை வைத்யநாதர் - தஞ்சை.. 
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.. (5/1)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ பெருவுடையார் - கங்கைகொண்டசோழபுரம்.. 
கங்கைகொண்ட சோழபுரத்தில் 
5625 கிலோ அரிசி கொண்டு 
அன்னாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது..

ஸ்ரீ மாகாளநாதர் - அம்பர் மாகாளம்.. 
ஸ்ரீ அக்னீஸ்வரர் - கஞ்சனூர்.. 
ஸ்ரீ குந்தளேஸ்வரர் - திரு குரக்குக்கா..
ஸ்ரீ கயிலாயநாதர் - திங்களூர்.. 
ஸ்ரீ கோடிகா குழகர் - திருக்கோடிகா.. 
வண்டாடு பூங்குழாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருஆரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே.. (6/81)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

புதன், அக்டோபர் 24, 2018

சிவனே உன் அபயம்...

இன்று ஐப்பசி நிறைநிலா நாள்..

சகல சிவாலயங்களிலும்
சிவலிங்க மூர்த்திக்கு அன்னாபிஷேகம் நிகழ்கின்றது..

அன்னம் சிவஸ்வரூபம் - என்பர் பெரியோர்...

மூண்டு முளைத்தெழும் வித்துக்கள் எல்லாமே சிவஸ்வரூபம் தான்..

சோறுடைத்த சோழ நாட்டில் - காவிரி நதிக்குத் தென்கரையில்
திகழும் திருத்தலம் - திருச்சோற்றுத்துறை...

ஊருக்கு உபகாரம் செய்விக்கும்
அடியார் ஒருவர் வறுமையுற்ற காலத்தில்
அவர்பால் இரக்கங்கொண்ட இறைவன்
உலவாக்கிழி - அக்ஷய பாத்திரம் வழங்கியருளியதாக தலபுராணம்..

இத்தலத்தில் தரிசனம் செய்தோர் இல்லத்தில்
அன்னம் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்...

அப்பர் ஸ்வாமிகளுடன் ஞானசம்பந்தப் பெருமானும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் திருப்பதிகங்கள் அருளிச் செய்துள்ளனர்...

சப்தஸ்தானப் பெருவிழாவின் மூன்றாவது திருத்தலம்...

சப்தஸ்தானப் பெருவிழாவின் போது
திருஐயாறு ஐயாறப்பருடன் வரும் பக்தர்களுக்கெல்லாம்
திருச்சோற்றுத்துறையில் வீடுதோறும் அன்னம் பாலிக்கப்படுகின்றது...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
கண்டியூர் வழியாக வீரமாங்குடிக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

வீரமாங்குடியிலிருந்து 
ஒன்றரை கி.மீ., தொலைவில் திருச்சோற்றுத்துறை...

திருஐயாறு வழியாக எனில் திருப்பழனத்தில் இறங்கி
தெற்காக காவிரி ஆற்றுக்குள் இறங்கிக் கடக்க வேண்டும்..

கோடை வெயிலானாலும் மழையானாலும்
காவிரியைக் கடப்பதென்பது சிரமம்...

திருச்சோற்றுத்துறைக்கு நேரடியாக பேருந்துகள் கிடையாது...

கும்பகோணத்திலிருந்து
பாபநாசம் வழியாக திருச்சோற்றுத்துறைக்கு
பேருந்து இயக்கப்படுவதாக சொல்கின்றனர்..

விசாரித்து அறிவது நலம்..

வாகனங்களில் செல்வது எனில்
தஞ்சை - கண்டியூரிலிருந்து மேற்காக 5 கி.மீ ., தொலைவு...  

இன்றைய பதிவில் இடம் பெற்றுள்ள படங்களை வழங்கியோர் -
சிவனடியார் திருக்கூட்டம் திருச்சோற்றுத்துறை FB..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...

திருத்தலம்
திருச்சோற்றுத்துறை


இறைவன் - ஓதவனேஸ்வரர், தொலையாச்செல்வர்..
அம்பிகை - ஓதவன நாயகி, அன்னபூரணி..
தலவிருட்சம் - பன்னீர் மரம்
தீர்த்தம் - காவிரி..

அப்பர் ஸ்வாமிகள் அருளிய தேவாரம்
ஆறாம் திருமுறை - திருப்பதிக எண் - 44.. 
***
அதிகார நந்தி வாகனத்தில்
அம்மையப்பன் 
மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயினானே
இன்பனாய்த் துன்பங் களைகி ன்றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (01)

தலையவனாய் உலகுக்கோர் தன்மையானே
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கு இன்ன முதானானே
நிலையனாய் நின்னொப்பார் இல்லா தானே
நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட
கூற்றுவனே கொடிமதில்கள் மூன்றும் எய்த
சிலையவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (02)

ஸ்ரீ ஓதவன நாயகி 
முற்றாத பால் மதியஞ் சூடினானே
முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந் தொப்பானே
உற்றாரென் றொருவரையும் இல்லா தானே
உலகோம்பும் ஒண்சுடரே ஓதும் வேதங்
கற்றானே எல்லாக் கலைஞா னமுங்
கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (03)

கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே
காலங்கள் ஊழி கண் டிருக்கின் றானே
விண்ணவனாய் விண்ணவரக்கும் அருள்செய் வானே
வேதனாய் வேதம் விரித்திட் டானே
எண்ணவனாய் எண்ணார் புரங்கள் மூன்றும்
இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (04)


நம்பனே நான்மறைகள் ஆயி னானே
நடமாட வல்லானே ஞானக் கூத்தா
கம்பனே கச்சிமா நகரு ளானே
கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவிலாப் பெருமையானே
அடியார்கட் காரமுதே ஆனேறு ஏறுஞ்
செம்பொனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (05)

ஆர்ந்தவனே உலகெலாம் நீயே ஆகி
அமைந்தவனே அளவிலாப் பெருமை யானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா
கொடுமூ விலையதோர் சூலம் ஏந்திப்
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய
பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற்
சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (06)


வானவனாய் வண்மை மனத்தி னானே
மாமணிசேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின்சென்றானே
கடிய அரணங்கள் மூன்று அட்டானே
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே
தன்னொப்பார் இல்லாத மங்கைக் கென்றுந்
தேனவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (07)

தன்னவனாய் உலகெலாந் தானே ஆகித்
தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே
என்னவனாய் என்னிதயம் மேவி னானே
ஈசனே பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாக மாக
வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (08)


எறிந்தானே எண்திசைக்குங் கண்ணா னானே
ஏழுலகம் எல்லாம் முன்னாய் நின்றானே
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம்
ஆதியும் அந்தமும் ஆகி அங்கே
பிறிந்தானே பிறரொருவர் அறியா வண்ணம்
பெம்மானென் றெப்போதும் ஏத்து நெஞ்சிற்
செறிந்தானே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (09)

மையனைய அகண்டத்தாய் மாலும் மற்றை
வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே கடியிலங்கைக் கோனை அன்று
கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற
மெய்யவனே அடியார்கள் வேண்டிற் றீயும்
விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ்
செய்யவனே திருச்சோற்றுத் துறை யுளானே
திகழொளியே சிவனேயுன் அபயம் நானே.. (10)

செய்யவனே.. திருச்சோற்றுத்துறையுளானே..
திகழொளியே சிவனே உன் அபயம் நானே!.. 
ஊரெங்கும் உலகெங்கும்
பசிப் பிணி நீங்கட்டும்..

ஓம் நம சிவாய சிவாய நம ஒம்..
ஃஃஃ

செவ்வாய், அக்டோபர் 23, 2018

திருக்கோலம்

கடந்த நவராத்திரியின் போது
பல்வேறு திருக்கோயில்களில் நடைபெற்ற
வைபவங்களின் திருக்காட்சிகளைப் பகிர்ந்திருந்தேன்...

நிறைய படங்கள் - நண்பர்கள் அனுப்பியிருந்தவை..

அவற்றுள் சிறந்தவற்றைத் தேர்வு செய்து
நமது தளத்தில் வெளியிட்டது போக இன்னும் இருக்கின்றன...

அவற்றை வேறொரு சமயம் பார்க்கலாம்..

எனினும் -
தஞ்சை பெரியகோயிலில்
நவராத்திரி முதல்நாள் தொட்டு விஜயதசமி வரையிலும்
ஸ்ரீ ப்ரஹந்நாயகி அம்பிகைக்கு செய்விக்கப்பெற்ற
அலங்காரங்களை இன்றைய பதிவில் வழங்குகின்றேன்...

அத்துடன் மற்றும் சில கோயில்களின்
அலங்காரத் திருக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன..

இன்றைய பதிவிலுள்ள படங்களை வழங்கியவர்
தஞ்சை திரு. ஞானசேகரன் அவர்கள்..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஸ்ரீமனோன்மணி 
ஸ்ரீ மீனாக்ஷி 
சதஸ் - தர்பார் 
ஸ்ரீ காயத்ரி 
ஸ்ரீ அன்னபூரணி 
ஸ்ரீ கஜலக்ஷ்மி 
ஸ்ரீ சரஸ்வதி
ஸ்ரீ ராஜேஸ்வரி 
ஸ்ரீ மகிஷாஸுரமர்த்தனி 
ஸ்ரீ காமாக்ஷி 
தாமம் கடம்பு படை பஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளிசெம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே.. (73)
-: அபிராமி அந்தாதி :-

ஸ்ரீ அன்னபூரணி
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில் - தஞ்சை
ஸ்ரீ துர்கை
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்
மேலராஜவீதி, தஞ்சை 
ஸ்ரீ ப்ரசன்னவேங்கடேசப்பெருமாள்.,
ஐயங்கடைத்தெரு - தஞ்சை.
 
ஸ்ரீ முத்துமாரியம்மன்,
மேலராஜவீதி, தஞ்சை..
ஸ்ரீ முத்துமாரியம்மன்,
புன்னைநல்லூர் - தஞ்சை.. 
சந்த்ர சடாதரி முகுந்த சோதரி துங்கசல சுலோசன மாதவி
சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலக்ஷணி சாற்றருங் கருணாகரி
அந்தரி வராஹி சாம்பவி அமரதோத்ரி அமலை ஜகஜால சூத்ரி
அகிலாத்ம காரணி விநோதசய நாரணி அகண்டசின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரைராச சுகுமாரி கௌமாரி உத்துங்க
கல்யாணி புஷ்பாஸ்திராம் புயபாணி தொண்டர்கட்கருள் சர்வாணி
வந்தரி மலர்ப்பிரமராதி துதிவேதஒலி வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே..
-: அபிராமிபட்டர் :-
***
எங்கும் நலம் வாழ்க
ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ 

ஞாயிறு, அக்டோபர் 21, 2018

எங்கோன் உலா

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயத் திருவிழா
நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது...

காலையில்
யானையின் மீது பன்னிரு திருமுறைகள் நகர் வலம் வந்த பிறகு -

ஸ்ரீ பெருவுடையாருக்கும் ஸ்ரீ பெரிய நாயகி அம்மனுக்கும்
108 கலச அபிஷேகமும் 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகமும்

நன்றி - தினத்தந்தி 
அதனைத் தொடர்ந்து -
புஷ்பாஞ்சலியும் பெருந்தீப ஆராதனையும் நடந்தன...


மஹா அபிஷேகத்தின் போது
பெருவுடையார் சந்நிதிக்கு முன்பாக -


மாமன்னன் ராஜராஜ சோழன், உலகமாதேவியார் மற்றும்
ராஜேந்திர சோழனின் திருமேனிகளை எழுந்தருளச் செய்திருந்தனர்..

மாமன்னன் ராஜராஜ சோழன்
உலகமாதேவியார் 

பேரரசன் ஸ்ரீ ராஜேந்திர சோழன் 
மாலையில் -
அம்பிகையுடன் விடைவாகனத்தில் பெருமான் திருஉலா எழுந்தருளினார்.. 

விடை வாகனத்தில் எம்பெருமானும் அம்பிகையும் 



அத்திருக்கோலத்தை நேருக்கு நேராக தரிசனம் செய்தவாறே
ராஜராஜ சோழனும் உலகமாதேவியும் ராஜேந்திர சோழனும்
திருவீதி எழுந்தருளினர்...

ஸ்ரீ நாகநாதப் பிள்ளையார் 

மேல ராஜவீதியில் -
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயிலுக்கு எதிரில்
மேற்கு முகமாகக் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ நாகநாதப் பிள்ளையார்
விடை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மையப்பனை
மூன்று முறை வலம் செய்து வணங்கிய கோலாகலம் நிகழ்ந்தது...

ராஜவீதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்களிலிருந்து பெருவுடையாருக்கும் மாமன்னனுக்கும் சிறப்புகள் செய்யப்பட்டன...

மக்களும் திரண்டு வந்து வழிபாடு செய்து மகிழ்ந்தனர்...


இன்று காலையில் இங்கே இணைய வேகம் இல்லாததால்
பதிவு சற்றே தாமதமாகி விட்டது...

திருமுறை வீதியுலா
(நன்றி - விகடன்) 

சதயத் திருவிழா - 2015
( நாந்தானுங்கோ!..)

இன்றைய பதிவில் -
தனியாகக் குறிக்கப்பட்டவை தவிர்த்த
ஏனைய படங்களையும் காணொளியையும் வழங்கிய -
திரு. தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...
***

கடந்த சில ஆண்டுகளாக சதய விழாவினைக்
கண்டு களிக்கும் வகையில் வருடாந்திர விடுப்பு அமையவில்லை...

எனினும்
நெஞ்சமெல்லாம் நேற்றைய நிகழ்வுகளில்
மகிழ்ந்து கிடக்கின்றது...

மாமன்னன் பெரும்புகழ்
என்றென்றும் வாழ்க..
ஃஃஃ