நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 18, 2018

தேவி தரிசனம் 5

நவராத்திரி வைபவங்களின் மகத்தான நாள் - இன்று...

ஸ்ரீ சரஸ்வதி பூஜை!..

இந்நாளை ஆயுத பூஜை என்றும் சிறப்பிக்கின்றோம்...

மதர்த்துத் திரிந்த மூர்க்கனாகிய மகிஷாசுரனை 
அன்னை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி வதம் செய்தருளினாள்..

அதுகண்டு ஆனந்தக் கூத்தாடிய தேவர்கள்
அம்பிகையையும் அவளது திருக்கரங்களில் இருந்த
பலவிதமான ஆயுதங்களையும் கொண்டாடி மகிழ்ந்தனர்...

அதனாலேயே இந்நாள் ஆயுத பூஜை எனப்பட்டது..

மங்கலகரமாகிய இந்நாளில் -
சகலகலாவல்லி மாலையைச் சிந்திப்போம்...

ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள்
அருளிச் செய்த
சகலகலாவல்லி மாலை..


வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளையுள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகமேழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே.. (1)

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும்பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே.. (2)


அளிக்குஞ் செழுந்தமித் தெள்ளமுது ஆர்ந்துன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடுங்கொலோ உளங்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலாவல்லியே.. (3)

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே.. (4)


பஞ்சப்பி இதந்தரு செய்யபொற் பாதபங்கே ருகமென்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே.. (5)

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே.. (6)


பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய் உளங்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகலகலாவல்லியே.. (7)

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனம்சேர்
செல்விக்கு அரிதென்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகலகலாவல்லியே.. (8)

ஸ்ரீ பிரஹந்நாயகி
தஞ்சாவூர்..
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றமென
நிற்கின்ற நின்னை நினைப்பவர்யார் நிலந்தோய் புழைக்கை
நற்குஞ்ச ரத்தின்பிடி யோடுஅரசஅன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே.. (9)

மண்கண்ட வெண்குடைக்கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே.. (10) 
***

ஸ்ரீ ராஜமாதங்கி - சியாமளை 


ஈசன் எம்பெருமானைப் போலவே - ஸ்ரீ சரஸ்வதிதேவியும் - 
வீணை, சந்த்ர கலை, ஜடாமகுடம்,சுவடி, அட்சமாலை 
இவற்றைத் தாங்கியவளாக ஸ்படிக வண்ணங்கொண்டு திகழ்பவள்...


அதே போல -
அகிலாண்டகோடி ப்ரம்மாண்ட நாயகியும்
ஸ்ரீ சரஸ்வதியாகவே தோற்றங்கொள்கின்றாள் என்கின்றார் திருமூலர்...

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண்தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரம் சொல்லுமே...
-: திருமந்திரம் :-

மகாகவி காளிதாசன் - தான் காளியிடத்து திருவருள் பெறுமிடத்து
ஸ்ரீ சரஸ்வதி தேவியாகத் தரிசனம் காண்கின்றான்...

நாம் நல்லறிவு பெறுதற்கு 
நாளும் நம்மை நடத்துபவள் - ஸ்ரீ சரஸ்வதி...

இந்நாளில் அன்னை கலைவாணியை வணங்கி 
நல்லறிவும் கல்வியும் ஞானமும் பெற்று உய்வடைவோம்...

அனைவருக்கும் 
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..

ஸ்ரீ சரஸ்வதி தேவி
கூத்தனூர் - திருவாரூர் (Dt) 
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உரு பளிங்கு போல்வாள் என்னுள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்..
-: கம்பர் :-

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே சதா..

ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

6 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.

    சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். சகலகலாவல்லி மாலை பகிர்வு சிறப்பு. சீர்காழி கோவிந்தராஜனும், அவர் மகன் சிவசிதம்பரமும் பாடி அருளிய இந்தப் பாமாலை எங்களிடம் கேசட்டில் இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. சரஸ்வதி / ஆயுத பூஜை நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. சரஸ்வதி பூஜை நாள் வாழ்த்துகள் ஜி வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  4. சரஸ்வதி பூஜை மூன்று நாளும் சகலகலாவ்ல்லி பாடல் பாடுவேன்.அம்மன் படங்கள் அற்புத தரிசனம்.
    கூத்தனூர் சரஸ்வதி தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பள்ளியில் படிக்கும் காலத்தில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும்போது உள் திருச்சுற்றில் உள்ள சரஸ்வதியை மறவாமல் கும்பிடுவோம். அப்படிக் கும்பிட்டால் படிப்பு நன்கு வரும் என்று எங்களுக்குள் கூறிக்கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  6. சரஸ்வதி தேவி அனைவர் நாவிலும் நர்த்தனம் ஆடிடப் பிரார்த்தனைகள். மிகச் சிறப்பான பதிவு. சகலகலாவல்லி மாலையைப் படிக்கையில் நான் ஆரம்ப காலத்தில் எழுதிய குமரகுருபரர் குறித்த இடுகைகள் நினைவில் மோதுகின்றன.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..