நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வியாழன், நவம்பர் 28, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 2

என்ன தான் செய்யமுடியும்!.. 

''தட்க்ஷன் ஆகுதி கொடுக்கின்றான்!'' - என்று அங்கே போனால்  -  பிறகுதான் தெரிந்தது - அது சிவப்பரம்பொருளை மதிக்காமல் செய்யப்படும் யாகம் என்று!.. 


அதன் பிறகாவது -  நல்லபுத்தி சொல்லி தட்க்ஷனைத் திருத்த முயற்சி செய்திருக்கலாம். அல்லது, ''..நீயும் உன் யாகமும்!..'' - என்றாவது திரும்பி வந்திருக்கலாம்!.. 

மதி வேலை செய்யாததனால் - விதி புகுந்து விளையாட,

பின்னர் ஸ்ரீ வீரபத்ரஸ்வாமி தோன்றி - தட்க்ஷனின் விருந்தினர்களை வேட்டையாடும்படி ஆகிவிட்டது!..

''அப்படி  - வீரபத்ரரின் திருக்கரங்களால் தண்டிக்கப்பட்டு  - அந்தக் காயங்கள் ஆறுவதற்குள், மாயையின் மகனாகிய சூரபத்மனிடம் சகல போகங்களையும் இழந்து சீரழியும் நிலை வந்ததே!..''

''பட்டத்துக்குதிரை உச்சைச்சிரவம் எங்கே ஓடிப் போனதென்று இதுவரைக்கும் தெரியவில்லை!.. பிரியத்துக்குரிய ஐராவதமோ களையிழந்த காட்டு யானையாகி - திருவெண்காட்டில்!..''

''..மகன் ஜயந்தன் - மகேந்திர புரத்தின் சிறையில்!.. மனைவியுடன் நான் - இங்கே - மூங்கில் காட்டில்!.. சே.. என்ன வாழ்க்கை!..''

- இவ்வாறு எண்ணிக் கலங்கிக் கண்ணீர் வடித்தவன்  - தேவேந்திரன்!..

சூரபத்மனுக்கு அஞ்சி நடுங்கி இந்திராணியுடன் ஒளிந்து கொண்ட மூங்கில் வனம் - வேணுபுரம் எனப்பட்டது. அத்துடன் அஞ்சி நடுங்கிய இந்திரனுக்கு ஆறுதலான புகலிடம் ஆனதால் - புகலி எனவும் புகழப்பட்டது.

இத்தகைய பெருமைக்குரிய திருத்தலம்  - (இன்னும் ஒன்பது - என பன்னிரு திருப் பெயர்களுடன் விளங்கும் ) சீர்காழி!..

 
இப்படி மனக்கலக்கத்துடன் ஒளிந்து வாழ்ந்த தேவேந்திரன் - திருக்கயிலாய மாமலைக்குச் சென்று ஈசனைத் தரிசிக்க விரும்பினான்.

இதனை அறிந்த இந்திராணி, ''யாதொரு துணையும் இல்லாத நிலையில் - அசுரர்களின் குணத்தை அறிந்தும் - என்னைத் தனியே விட்டு விட்டுச் செல்லலாமா?..'' - என்று கலங்கினாள். இமையாத விழிகளில் இருந்து நீர் வழிந்தது.

அப்போது தான், 

ஸ்ரீ தர்ம சாஸ்தா எனவும் ஸ்ரீபூதநாதன் எனவும் போற்றப்படும் ஸ்ரீஹரிஹர புத்ரனைப் பற்றி இந்திராணியிடம் எடுத்துரைத்தான் தேவேந்திரன்.  

''பெண்மையைக் காக்கும் பெருந்தகையாளனாகிய பெருமான் இருக்கும் போது - நீ கவலை கொள்ளலாகாது. அடைந்தவரைக் காக்கும் ஐயனாகிய அவர் உனக்கு  அடைக்கலம் அருள்வார்!..'' - என ஆறுதல் கூறிய தேவேந்திரன் -

ஸ்ரீஹரிஹரபுத்ரனைத் தியானித்து தொழுது வணங்கி நின்றான்.

இந்திரனின் வேண்டுதலைக் கேட்ட பெருமானும் பெருங்கருணையுடன் தோன்றினான்.

எப்படி!..

கந்தபுராணம் அருளிய கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் கூறுகின்றார்!..

(இந்தப் பதிவில் எடுத்தாளப்பட்டிருக்கும் கந்த புராணத் திருப் பாடல்கள் - Project Madurai - எனும் தளத்தில் இருந்து பெறப்பட்டவை. அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்!..)


காருறழ் வெய்ய களிற்றி டையாகிப்
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ

வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்!..

இப்படி - பெருங்கருணையுடன் தோன்றிய பெருமானைப் போற்றி வணங்கி நின்றனர் தேவேந்திரனும் இந்திராணியும்.

பொன்னடி தாழ்ந்து புகழ்ந்து நின்ற இந்திரனிடம் -

''..தேவேந்திரனே!.. என்ன வேண்டும் என இயம்பு!..'' - எனக் கேட்டான் ஸ்ரீ ஹரிஹரசுதன்.

''..  மூவுலகுக்கும் முதல்வன் ஆகிய முக்கண் மூர்த்தியைக் தரிசித்து - எமக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களைக் கூறி,  கதறி அழுவதற்காக - கயிலை மாமலையை நோக்கிச் செல்கின்றேன். இவ்வேளையில் -''

தஞ்சம் இலாது தனித்த இவ்வனத்தே 
பஞ்சுறழ் செய்ய பதத்தியை வைத்தால் 
வஞ்சகர் கண்டிடின் வெளவுவர் என்றே 
அஞ்சினள் உந்தன் அடைக்கலம் ஐயா!.. 

- என்று கூறிக் கலங்கி நின்றான் இந்திரன்.

இதைக் கேட்ட பெருமான் புன்னகையுடன்,

''..உன் மனைவி தனித்திருப்பாள் எனக் கவலையுற வேண்டாம். எவ்விதக் குற்றமும் இலாத,  நின் ஏந்திழை தன்னைத் தீது அடையாது காப்பேன்!..'' - என்று அருளினார்.

அத்துடன்,  மகாகாளன் எனும் சேனைத் தலைவரை - இந்திராணிக்கு மெய்க்காவலாக நியமித்து -

மூவரின் முந்திய மூர்த்தி வரைக்குப் 
போவது உன்னினன் பொன்நகர் மன்னன் 
தேவி இருந்தனள் தீங்கு வராமே 
காவல் கொள் நீ!.. என - 

- ஸ்ரீ மகாகாளருக்கு கட்டளையிட்டு அருளினார்.


இந்த மகாகாளரே -  ஐயப்ப வழிபாட்டில் விளங்கும் ''ஸ்ரீ கருப்ப ஸ்வாமி!..''

அந்த அளவில் நிம்மதி அடைந்த தேவேந்திரன் - தாமரைத் தண்டினுள் விளையும் நூலிழையாக மாறி,  காற்றில் மிதந்தபடி  கயிலை மாமலையை நோக்கிச் சென்றான். 

ஸ்ரீ மகாகாளர் தோன்றாத் துணையாயிருக்க - திடம் கொண்ட மனத்தினளாக   - இந்திரன் விட்டுச் சென்ற சிவபூஜையைத் தொடர்ந்தாள் இந்திராணி. 

அதேவேளையில் அண்ட பகிரண்டம் முழுதும்  - இந்திரனைத் தேடி அலைந்து களைத்துப் போனது - அசுர சேனை. 

''..இந்தத் தடியன்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள்!..'' - என உணர்ந்து கொண்ட அஜமுகி - சூரபத்மனின் தங்கை - தானே தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தாள்.

அங்குமிங்கும் அலைந்து திரிந்தபோது - அண்டபகிரண்டமும் தங்களது அராஜகத்தால் - ஆர்ப்பாட்டத்தால் - வறண்டு கிடப்பதைக் கண்டாள்.

இந்த வறட்சியைக் கண்டு அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி!..ஆனாலும் -

அதோ அந்தப் பகுதி மட்டும்  பச்சைப் பசேல் என  விளங்குவதெப்படி!..

அவளுக்குள் அதிர்ச்சி!.. 


பொதுவாகவே - மூங்கில் காடுகள் எளிதாக உலர்ந்து விடுவதில்லை. அதிலும் இப்போது - இந்திராணி - சிவ வழிபாட்டில் இருக்கின்றனள். எனவே தான் முன்னை விட அழகாகத் தழைத்திருந்தது - அந்த மூங்கில் வனம்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை  - அல்லவா!..

இதை அறிந்து கொண்ட அஜமுகியின் முகத்தில் மலர்ச்சி!..

தேவேந்திரனைத் தேடித் திரிந்த அஜமுகி  - சிவபூஜை செய்து கொண்டிருந்த இந்திராணியைக் கண்டு கொண்டாள். இந்திராணியின் அழகைக் கண்டு அஜமுகி மருண்டாள்.

''..விநாச காலே விபரீத புத்தி!..'' - என்பதற்கிணங்க -

''..தன் அண்ணனுக்கு இவள் விருந்தாகட்டும்!..'' - என்ற  குரூர எண்ணத்துடன்  - இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள்!..

நிலைமை விபரீதமாகிப் போனது.


வீறிட்ட இந்திராணி - ''..அபயம் அபயம்!..'' என்று  அலறினாள்  கண்ணீர் வழிந்தோடக் கதறினாள்!..

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும் 
ஐயனே ஓலம்! விண்ணோர் ஆதியே ஓலம்! செண்டார் 
கையனே ஓலம்! எங்கள் கடவுளே ஓலம்! மெய்யர் 
மெய்யனே ஓலம்! தொல்சீர்வீரனே ஓலம்! ஓலம்!..

இந்திராணியின் அபயக் குரல் அந்த மூங்கில் வனம் எங்கும் எதிரொலித்தது!..

அதன் பின் நடந்ததென்ன!..

ஸ்ரீஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

திங்கள், நவம்பர் 25, 2013

ஸ்ரீ வைரவர்

''கால பைரவாஷ்டமி''


ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன் கைவாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை
மாதிமைய மாதொரு கூறாயினானை
மாமலர்மேல் அயனோடு மாலுங்காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே!..(6/20/1)
                                                                                           - திருநாவுக்கரசர்                                  

முன்னொரு காலத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் இடையில் -  '' யார் பெரியவர்'' என்று பெருங்கலகம் விளைந்தது. அப்போது சிவபரம்பொருள் நெற்றியிலிருந்து, வைரவரைத் தன் அம்சமாகத் தோற்றுவித்து அவர்களிடையே அனுப்பினார். 

அக்னி ஜூவாலைகளுடன் படர்ந்த கேசம். மூன்று திருவிழிகள். ஒளிரும் கோரைப் பற்கள். தண்டத்துடன் சூலம், உடுக்கை, பாசம் தாங்கியவராக ,   ஒலிக்கும் மணிகள் புரளும் ஆரத்துடன் வெண் சிர மாலையும் பூண்டு . இடையில்  நாகக் கச்சை புரள, திருவடிகளில் வீரத்தண்டைகள் முழங்க  - அவ்விடத்தில் தோன்றிய வைரவரைக் கண்ட பிரமன் - (அச்சமயத்தில் பிரம்மனுக்கு ஐந்து முகங்கள்) - அல்லாத சொல்லாக - '' வா என் மகனே'' - என்று அழைக்கவும் ,

மூண்டெழுந்த சினம் விழிகளில் தெறிக்க - முந்தி நின்று அகங்காரத்துடன் அல்லாதன மொழிந்த அந்த முகத்தைத் தன் கை நகத்தினால் கிள்ளியெடுத்தார் வைரவர்.

ஸ்ரீ பைரவர், பட்டீஸ்வரம்.
இப்போது திசைக்கு ஒன்றாக பிரம்மனுக்கு நான்கு முகங்கள். ஆறாத சினத்துடன் அடுத்த தலையையும் பறிக்குமுன் -  அகங்காரத்துடன் பொய் உரைத்த பிரம்மனை மன்னித்து அருளுமாறு, திருமால் வேண்டிக் கொள்ள - 

சினம்  தணிந்த  சிவபெருமான், நான்முகனை மன்னித்ததுடன்

'' வேதம்  ஓதுபவர்களுக்கு  நீயே குருவாக விளங்குவாய்!..'' - என்று மீண்டும் படைப்புத் தொழிலை - செருக்கு நீங்கிய பிரம்மனிடமே அருளினார்.

இச்செயல் அட்ட வீரட்டங்களுள் ஒன்றாக தேவாரம் முழுவதுமே புகழ்ந்து போற்றப்படுகின்றது.  

அட்ட வீரட்டங்களுள் முதலாவதான இச்செயல் நிகழ்ந்த திருத்தலம் - கண்டியூர். 

வைரவ மூர்த்தியின் முதற் திருத்தோற்றம் நிகழ்ந்த கண்டியூர் - தஞ்சையில் இருந்து திருவையாறு செல்லும் வழித்தடத்தில் உள்ளது.

ஈசன்  ''ஸ்ரீபிரம்ம சிரக்கண்டீஸ்வரர்''. அம்பிகை - ''மங்களநாயகி''.  
திருச்சேறை
 விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் 
சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!..(4/73/6 )
                                                                             
தேவாரத்தில் ஸ்ரீவைரவரின் திருப்பெயர் பயின்று வரும் ஒரே திருப்பாடல் இது.

திருச்சேறை என்னும் திருத்தலத்தில்  இறைவனைத் தரிசித்த போது - அப்பர் பெருமான் -  வைரவரின் திருமேனியழகை - பாடிப் புகழ்ந்து - மகிழ்ந்தனர்.

''..பிரபஞ்சம்  எங்கும் விரிந்து பரவும் பற்பல ஒளிக் கதிர்களுடன் திகழும்  திரிசூலம். வெடியென முழங்கும் உடுக்கை. இவற்றைத் தம் திருக்கரங்களில் ஏந்திய வண்ணம் கால வைரவன் எனத் தோன்றி -

தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து - ஏவி விட்ட யானையைப் பிடித்து அதன் தோலை உரித்து, அந்தத் தோலையும் தம் மீதே போர்த்திக் கொண்ட போது -

இத்தகைய அருஞ்செயலைக் கண்டு,   உமையவள் அச்சம் கொண்டனள். அப்போது, அம்பிகையை நோக்கி - பிரகாசமாகிய   பெருஞ்சிரிப்புடன் அருள் செய்த செந்நெறிச் செல்வனே!.. சிவபெருமானே!..'' - என்பது திருப்பாடலின் பொருள்.

திருச்சேறை குடந்தைக்கு அருகில் உள்ளது.
ஈசன் திருப்பெயர் '' ஸ்ரீசாரபரமேஸ்வரர். அம்பிகை - ''ஞானவல்லி''.


சிவபெருமான் யானையை உரித்த திருத்தலம் வழுவூர். 

இத்தலத்தில் ஈசன் ''ஸ்ரகஜ சம்ஹார மூர்த்தி'' எனவும் அம்பிகை ''பாலகுஜாம்பிகை'' எனவும்  திருவருள் புரிகின்றனர்.   

யானை உரித்த திருக்கோலம் பஞ்சலோகத் திருமேனியாக விளங்குகின்றது.

வழுவூர்,  திருஆரூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் மங்கநல்லூருக்கு உட்புறமாக 2 கல் தொலைவில் உள்ளது. 

யானையை உரித்த - திருக்கோலத்தினை பல்வேறு கோயில் கோபுரங்களில் சுதை வடிவாகத் தரிசிக்கலாம். எனினும், 

யானையை உரித்த திருக்கோலம் திருத்துறைப்பூண்டி- அருள்மிகு பிறவி மருந்தீசர் திருக்கோயிலிலும் தனியாக கருவறையில் பெருந் திருமேனியாகத் திகழ்கின்றது.

வைரவர் ஞானமூர்த்தி. அளப்பரிய வலிமையுடையவர். தம்மை அண்டினோர்க்கு சத்ரு பயத்தை நீக்கி, அடைக்கலம் அருள்பவர்.  

காம, குரோத, லோப, மோக, மதமாச்சர்யத்திலிருந்து உலகைக் காத்தருளும் பொறுப்பினை - தம்முள்ளிருந்து தாமாக வெளிப்பட்ட வைரவரிடமே - சிவபெருமான் வழங்கினார். 


ஸ்ரீ வைரவர் - காவல் நாயகம் என்பதால் நாய் இவருடன் திகழ்கின்றது. 

ஆணவம், அகங்காரம், செருக்கு, இறுமாப்பு, கர்வம் - இப்படியெல்லாம் நம்முள் மண்டிக் கிடக்கும் களைகளைக் களைந்து

அஞ்ஞான இருளை அகற்றி - ஞான விளக்கினை ஏற்றினால் - 

அதுவே மங்களம்  - சுப மங்களம்!..  என்பது இந்த புராணத்தின் தத்துவம்.

இந்த நிலையை நாம் எளிதில் எய்திட உறுதுணையாய் விளங்குவது, வைரவ  வழிபாடு.

தேய்பிறை அஷ்டமி மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்கள் வைரவ வழிபாட்டுக்கு உகந்தவை. அதிலும் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி - வைரவர்  தோன்றிய திருநாள். இந்நாளை ''கால பைரவாஷ்டமி'' என்று வழங்குகின்றனர்.

சிவபெருமான் உறையும் திருக்கோயில்கள் அனைத்திலும் ஈசான்ய  (வடகிழக்கு)  மூலையின் ஒரு பகுதியில் வைரவரின் திருமேனி விளங்கும். வைரவரின் அருகில் சனி பகவான் நிச்சயம் வீற்றிருப்பார். ஏனெனில்,   

சனி  பகவானுக்கு வைரவரே முழுமுதற் குரு என்பதாக ஐதீகம். இதனால் வைரவரை மனப்பூர்வமாக வழிபடும் அன்பர்களுக்கு சனி பகவானின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதனை சொல்லவும் வேண்டுமோ!..


ஸ்ரீ கால வைரவ மூர்த்தியை தியானித்து,  தினமும் காலை  மாலையில் பக்தியுடன் பாராயணம் செய்து போற்றுவோர்க்கு பிணி, வறுமை, பகை முதலான துன்பங்கள் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு. 

வைரவ வழிபாடு பல்வகையான துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி வாழ்வினைச் செம்மைப்படுத்தி நல்வழி காட்டும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. 

அஷ்டமி அன்று மாலையில் திருக்கோயில் சென்று ஈசனை வணங்கி வலம் வந்து, ஸ்ரீ வைரவரின் திருவடிகளின் அருகில் விளக்கேற்றி வைத்து -   

நம்மைப் பற்றி, நாமே - முறையிடுவோம்!.. 

நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக நம்முள்ளேயே வேரூன்றி விரிந்து பரந்திருக்கும் அகங்காரம் எனும் விஷ விருட்சத்தைக் கிள்ளி எறியும்படி - தலை வணங்கி வேண்டிக் கொள்வோம். 

ஸ்வானத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ; பைரவ ப்ரசோதயாத்:

 ''சிவாய திருச்சிற்றம்பலம்'' 

வெள்ளி, நவம்பர் 22, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் -1

ஐப்பசியும்  கார்த்திகையும்  - அடை மழைக்காலம். அடுத்து வரும் மாதமாகிய மார்கழியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்!..

இத்தகைய சூழலில் கார்த்திகை மாதத்தின் முதல் நால் மாலையணிந்து கடும் விரதம் மேற்கொண்டு - ஒரு மண்டல காலம் அல்லது தை முதல் நாள் மகர ஜோதி தரிசனத்துடன் விரதத்தை நிறைவு செய்யும்  பக்தர்கள் லட்சோப லட்சம் என - நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றனர்.


''..எங்க வீட்டுலேயே குருசாமி. அவரோட நானும் மூணு வருஷமா ஜோதி பார்த்திருக்கிறேன்!..'' - என்று சொல்லும் பாக்கியத்தம்மாள்.

''..எங்கஅப்பாவுக்கு இந்த வருஷம் பதினெட்டாவது மலை!..'' - என்று பெருமை கொள்ளும் சந்திரசேகரன்.

''..இந்த வருஷம் என் தம்பி கன்னி சாமி!..'' - என்று சந்தோஷப்படும் கெளரி.

''..எங்க சுதாவும் அவங்க அப்பாவோட இந்த வருஷம்  மாலை போட்டுக் கொண்டிருக்கின்றாள்!..'' - என்று குதுகலிக்கும் சரண்யா.

இவர்களை - அநேகமாக எல்லா ஊர்களிலும் காணலாம்.

இப்படி கணவரோ, தந்தையோ, சகோதரனோ, மகனோ, மகளோ - மலைக்குச் செல்லும் போது - 

அவர்களுடன் தாமும் ஆசார அனுஷ்டானங்களில் ஒன்றியிருந்து எல்லா நியமங்களையும் குறைவின்றி செய்வதிலும் செய்விப்பதிலும் முன் நிற்பது - அன்பும் அருளும் ஒன்றிணைந்து-  திருவடிவாகத் திகழும் பெண்மையே!..

அந்தப் பெருமைக்குரிய பெண்மையைக் காப்பதற்கு -  வந்தவர் தான் -

ஸ்ரீ தர்ம சாஸ்தா!.. 

மா சாத்தன் - எனப் பழந்தமிழில் போற்றப்படுபவர் இவரே!..

கந்தனின் கருணையைப் புகழ்ந்திடப் பிறந்த கந்த புராணத்தில் - ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம் - மா சாத்தப் படலம் என்றே  வழங்கப்படுகின்றது.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட அசுரர்கள் - அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு ஓடி விடுகின்றனர். 

கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் தவித்த தேவர்களுக்கு உதவி புரியவும், அமுதக் கலசத்தினை அசுரர்களிடம் இருந்து மீட்கவும் - ஸ்ரீமஹாவிஷ்ணு திருவுளங்கொண்டார்.

அதன் விளைவாக - ஜகன் மோகினி எனத் திருக் கோலமுங் கொண்டார்.

விஷ்ணு மாயையில் மதிமயங்கிய அசுரர்கள் - ''ஆரணங்கே சதம்!..'' என்று,   அமுத கலசத்தினை நழுவ விட்டனர். 


மோகினியாக நின்ற மஹாவிஷ்ணுவும் - அசுரர்களிடமிருந்து அமுதத்தை மீட்டு தேவர்களுக்கு அளித்தார்.

அவ்வேளையில்,  ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் சோதியாகிய சிவபெருமான் - அழகே உருவான மோகினியின் திருக்கரத்தினை வாஞ்சையுடன் பற்றிட - தேவ சங்கல்பத்தின்படி நிகழ்ந்ததே ஸ்ரீ தர்ம சாஸ்தா திருஅவதாரம்!..

அச்சமயம் அம்பாளே - அச்சுதனாக நின்றாள் - என்றும் ஒரு மறைபொருள் உண்டு. 

அம்பிகை - ஜகன்மோகினி, கோவிந்தரூபிணி, நாராயணி, சியாமளி - எனும் திருநாமங்களைக் கொண்டு விளங்குபவள். பரந்தாமனைப் போலவே பச்சை வண்ணமும் நீலமேக சியாமள வண்ணமும் கொண்டு இலங்குபவள்.

எரியலால் உருவமில்லை ஏறலால் ஏறலில்லை 
கரியலால் போர்வையில்லை காண்டகு சோதியார்க்குப் 
பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென்று ஏத்தும் 
அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே!.. (4/40)

- என, ''ஸ்ரீமந்நாராயண மூர்த்தியும் அம்பிகையும் ஒருவரே!..'' - என்ற விஷயத்தை நமக்கு உரைப்பவர் திருநாவுக்கரசு சுவாமிகள்.


மாதொரு பாகனாக எம்பெருமான் திகழும் போது ஐயனின் இட பாகமாகிய வாமபாகம் அம்பிகைக்கு உரியது.


அதே சமயம் எம்பெருமான் - சங்கர நாராயணர் எனத் திருக்கோலங் கொள்ளும் போது -  அதே வாமபாகம் ஸ்ரீமந்நாராயணர்க்கு உரியது.

இப்படி ஹரிஹர சங்கமத்தில் - திருக்கரத்தில் பூச்செண்டுடன் ஒளி வடிவாகத் தோன்றிய  மூர்த்தியே,

ஸ்ரீஹரிஹர புத்ரன் - எனும் ஸ்ரீ தர்ம சாஸ்தா!..

இவர் தோன்றிய அப்போதே - அண்ட சராசரங்களையும் காத்து ரக்ஷிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவேதான் இவர் லோக ரக்ஷகர் எனப் புகழப்படுகின்றார்.  இவ்வாறு பட்டம் சூட்டப்பட்ட ஸ்ரீ தர்மசாஸ்தா திருமணக் கோலம் கொண்டார்.


சத்யபூரணர் எனும் தபஸ்வியின் குமாரத்திகளான பூர்ணகலா தேவியும் புஷ்கலா தேவியும் மணக்கோலம் கொண்டு - ஸ்வாமியுடன் ரத்ன பீடத்தில் அமர - முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்த்தி மகிழ, திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்தது.

காருறழ் வெய்ய களிற்றிடையாகிப் 
பாரிட எண்ணிலர் மாங்குற நண்ணப் 
பூரணை புட்கலை பூம்புற மேவ 
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்!..

- என்று கந்த புராணத்தில், கச்சியப்ப சிவாச்சார்யார் - ஸ்ரீ ஐயனாரின் திருத் தோற்றத்தினைக் காட்டுகின்றார்.

ஸ்ரீ ஐயனார் வழிபாடு தொன்மையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீஐயனார் - என தமிழகத்தின் பற்பல கிராமங்களிலும் திகழும் காவல் தெய்வம் இவரே!..

சிறை காத்த ஐயனார், கற்குவேல் ஐயனார், அடைக்கலம் காத்த ஐயனார், ஏரி காத்த ஐயனார், அருஞ்சுனை காத்த ஐயனார், கரை காத்த ஐயனார்  - என்னும் திருப்பெயர்கள் எல்லாம் - ஸ்ரீ ஐயனார் மக்களுக்கு ஆற்றும் மகோன்னதமான அருஞ் செயல்களின் பொருட்டு சூட்டப்பட்டவை.

அடைக்கலம் காத்த எனும் சொற்குறிப்பு -  ஐயனார் ஒருவருக்கே உரியது.

அங்கண் மேவி அரிகர புத்திரன் 
சங்கையில் பெருஞ்சாரதர் தம்மொடும் 
எங்குமாகி இருந்தெவ்வுலகையும் 
கங்குலும் பகல் எல்லையுங் காப்பனால்!..


ஸ்ரீ ஐயனார் - பெரும் சைன்யத்தை உடையவர். பூத ப்ரேத பேய் பிசாசங்களை அடக்கி ஆள்பவர். மண்ணையும் மக்களையும் வயற்காட்டையும், ஏரி குளம் எனும் நீர்நிலைகளையும் கால்நடைச் செல்வங்களையும் கட்டிக் காப்பவர்.

ஸ்ரீ ஐயனார் வழிபாடு முறையாக நடைபெறும் கிராமங்களில் கள்வர் பயம் என்பதே இருக்காது. ஸ்ரீ ஐயனார்  வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து - தனது சேனைகளுடன் - நள்ளிரவு நேரத்தில் ஊர்க்காவல் மேற்கொள்வார் என்பது இன்றளவும் மெய்ப்பட விளங்கும்.

பெண்மையைக் காத்தருளிய பெருமானைப் பற்றி - அடுத்த பதிவில் காண்போம்!..

ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹர புத்ர 
ஸ்வாமியே சரணம்!.. சரணம்!..

ஞாயிறு, நவம்பர் 17, 2013

திருக்கார்த்திகை

தட்சிணாயணத்தின் ஐந்தாவது மாதம். கால கதியில் எட்டாவது மாதம்.

அடியும் முடியும் அறிய இயலாத அகண்ட ஜோதிப் பிழம்பாக - எல்லாம் வல்ல பரம் பொருளாகிய சிவபெருமான் விளங்கியது கார்த்திகையில் என்று சைவ சமயம் போற்றிப் புகழ்கின்றது.  


முழுநிலவும் கார்த்திகை நட்சத்திரக் கூட்டமும் சேர்ந்து வரும் நாளே திருக்கார்த்திகைத் திருநாள்.

இந்த புண்ணிய நாளில் - முழுநிலவு உதித்து எழும் வேளையில், தத்தம் இல்லங்களில்  - ஒளிமயமான அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஆராதிப்பது தமிழர்களின் வழக்கம்.

கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் (Tks. wikipedia)
இறைவன் ஒளி மயமானவன். ஒளி மயமான இறைவனை ஒளி கொண்டு வணங்குவது எல்லா மங்கலங்களையும் தரவல்லது என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். 


இன்று அதிகாலையில் திரு அண்ணாமலையில் - மகா பரணி தீபம்  ஏற்றப் பட்ட நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் - மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட இருக்கின்றது. 


லட்சோபலட்சம் பக்தர்கள் குழுமியிருக்க - இன்று ஒரு பொழுது மட்டுமே - அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து ஆனந்த நடனத்துடன்  காட்சியளிப்பார்.

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!..

- என்று திருஞானசம்பந்தர் அறுதியிட்டுக் கூறுவதும் அதனால் தானே!.. 

ஆயிரக்கணக்கான திருக்கோயில்களைக் கட்டி எழுப்பிய மாமன்னர்கள் - அத்திருக்கோயில்களில் தீபங்கள் நின்றெரிய பற்பல கட்டளைகளையும் செவ்வனே செய்திருக்கின்றனர் எனில் அதன் சிறப்பு தான் என்னே!..


எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் திருக்கோயில்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தின் தலைவாசலிலும் - வீடு முழுவதும் விளக்கேற்றி அலங்கரிப்பதும் மங்கல மரபாகும். 

கிராமங்களில் - வீட்டின் தலைவாசலில் தீபம் ஏற்றுவதோடு நில்லாமல் மாட்டுத் தொழுவத்திலும், பின்புறம் உள்ள குப்பை மேடு அல்லது உரக்குழியிலும் தீபம் ஏற்றி வைப்பார்கள். 

நாகரிகம் முற்றிப் போனதால் - நகரங்களில் கட்டப்படும் நவீன வீடுகளில் - தலைவாசல் நிலையின் இருபுறமும் மாடப் பிறைகள் கூட அமைக்கப்படுவது இல்லை.


திருக்கார்த்திகை தீப ஆராதனையானது - அனைத்து மங்கலங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். பொதுவாக வீட்டில் விளக்கேற்றுவதற்கு சில சிறப்பான நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு நடந்தாலே - துன்பங்களின் தாக்கம் குறையும் என்பது திருவாக்கு!..

பூஜை அறையில் அல்லது மாடத்தில் - தெய்வத் திரு வுருவங்கள் இருந்தாலும் சரி!.. அழகிய சித்திரங்கள் இருந்தாலும் சரி!.. நடுநாயகமாக ஒரு விளக்கு இருக்க வேண்டியது அவசியம். 

எவர்சில்வர் மற்றும் பீங்கான் - விளக்குகளைத் தவிர்க்கவும்.

விளக்கினைச் சுத்தம் செய்து - சந்தனம், குங்குமம், பூச்சரம் சூட்டி - கிழக்கு முகமாக வைத்து நல்லெண்ணெய் நிரப்பி, வெள்ளைத் திரியை இட்டு சுடர் ஏற்ற வேண்டும். சுடர் ஏற்றிய பின் - அணையாமல் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். 


பூஜை நேரத்தில் இந்த சுடரில் இருந்து வேறு எதையும் ஏற்றக் கூடாது. கற்பூரம் ஏற்றுவதானால் கூட வேறு ஒரு விளக்கில் இருந்து தான் ஏற்றவேண்டும். 

ஏனெனில்  - நடுநாயக விளக்கு மூலஸ்தான மூர்த்திக்கு ஒப்பானது. 

திருவிளக்கின் பிரதான சுடர் கிழக்கு முகமாக ஜொலிக்கும் போது நாம் வடக்கு முகமாக நின்று வணங்க வேண்டும்.


சூரியோதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தத்திலும் (4.30 - 6.00) அந்தி மாலையில் நித்ய பிரதோஷ வேளையிலும் விளக்கு ஏற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்.  இவ்வேளையில் தீபமேற்றினால் லக்ஷ்மி கடாட்க்ஷம் கிட்டும் என்பது ஐதீகம். 

ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும்,  அந்தி மயங்கும் மாலை வேளையில் அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். 

விளக்கை குளிர்விக்கும் போது எக்காரணம் கொண்டும் வாயால் ஊதக் கூடாது. கையை விசிறி போல் வீசி - அணைக்கக் கூடாது. பூவால் குளிர்விக்க வேண்டும். அல்லது தூண்டும் குச்சி கொண்டு திரியை எண்ணெய்யில் அழுத்தி குளிர்விக்க வேண்டும். 


வீட்டில் குத்து விளக்கு ஏற்றும் முன்  விளக்கின் எட்டு இடத்தில் திலகம் சூட்ட  வேண்டும் என்பது மரபு. அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. திருவிளக்கினை - தீபலக்ஷ்மி என்று போற்றுவதே நமது பாரம்பர்யம். 

எனவே ஆதிலக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி , வித்யா லக்ஷ்மி , தன லக்ஷ்மி , தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி , வீர லக்ஷ்மி , விஜய லக்ஷ்மி  - என தியானித்து திலகம் இடவேண்டும். இதனால், வீட்டில் அல்லல் அகன்று ஐஸ்வர்யம் பெருகும். 

எட்டு திலகங்களும் - நிலம், நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களுடன் சூரியன், சந்திரன் மற்றும் ஆத்மா என்பனவற்றைக் குறிப்பவை - என்றும் கூறுவர். 

தற்போது  வெளியிடப்படும் ஆன்மீகக் கட்டுரைகள் என்பனவற்றில் -

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெய்க்கு என்ன பலன்?
எந்த எந்த திசைக்கு - என்ன என்ன பலன்?
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய எண்ணெய்!

என்றெல்லாம் எழுதப்படுகின்றன. அவற்றை எல்லாம் ஓரமாக ஒதுக்கித் தள்ளுங்கள். 

விளக்கிற்கு - பசு நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் - இம்மூன்று மட்டுமே உகந்தவை.


தீபங்களின் ஒளி - மனதில் சஞ்சலத்தை நீக்கும். தீப ஒளியினைக் கூர்ந்து நோக்கி - பின் அதை அப்படியே நெற்றியில் தியானிக்க - அற்புதமான காட்சிகளைத் தரிசிக்கலாம்.

சுபம் கரோதி கல்யாணம் ஆயுர் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி விநாசாய தீபஜோதி நமோஸ்துதே..

மங்கலகரமான சுபகாரியங்கள் தடையின்றி நடக்கவும், உடல் நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும், புத்தியில் இருக்கும் இருள் விலகவும் ஜோதி வடிவான தீபலட்சுமியே!.. - உன்னைத் துதிக்கிறேன்!.. 

அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக 
இன்புருகி சிந்தை இடுதிரியா - என்புருகி 
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு 
ஞானத்தமிழ் புரிந்த நான்!.. 

- என்பது பூதத்தாழ்வார் அருளிய திருப்பாசுரம்.


''தீப மங்கல ஜோதி நமோ நம!..'' - என்று அருணகிரி நாதர் முருகனைப் புகழ்கின்றார்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு!.. 

- என்பது ஐயன் திருவள்ளுவப் பெருமானின் திருவாக்கு.

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி!..
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி!..

- என்பது வள்ளலார் ஸ்வாமிகளின் அருள் வாக்கு.


பன்னிரு திருமுறைகளில் எம்பெருமானை ஜோதிவடிவாகக் கண்டு தொழும் திருப்பாடல்கள் ஏராளம்.

அவற்றுள்  ஒன்றாக - திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தின்  இனிய பாடல்!..

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..

விளக்கேற்றுவோம்!..
இல்லத்திலும் உள்ளத்திலும்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

சரணம் ஐயப்பா

இருமுடி தாங்கி ஒருமனதாகி 
குரு எனவே வந்தோம்!..
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் 
திருவடியைக் காண வந்தோம்!..


பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்பா!..
ஸ்வாமி சரணம்!.. ஐயப்ப சரணம்!..

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்போ!..  
ஐயப்போ ஸ்வாமியே!.. 

நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே!.. 
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே!.. 
ஐயப்பன்மார்களும்  கூறிக் கொண்டு 
ஐயனை நாடிச் சென்றிடுவார்!..
சபரி மலைக்குச் சென்றிடுவார்!.. 

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 

கார்த்திகை மாதம் மாலையணிந்து 
நேர்த்தியாகவே விரதம் இருந்து 
பார்த்தசாரதியின் மைந்தனே உனைப் 
பார்க்க வேண்டியே தவமிருந்து 
இருமுடி எடுத்து எருமேலி வந்து 
ஒருமனதாகி பேட்டை துள்ளி 
அருமை நண்பராம் வாவரைத் தொழுது 
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்!..

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 


அழுதை ஏற்றம் ஏறும் போது 
ஹரிஹரன் மகனைத் துதித்துச் செல்வார் 
வழிகாட்டிடவே வந்திடுவார் 
ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்!..
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் 
கருணைக் கடலும் துணை வருவார் 
கரிமலை இறக்கம் வந்த உடனே
திருநதி பம்பையைக் கண்டிடுவார்!..

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம் 
பம்பையில் நீராடி சங்கரன் மகனைக் 
கும்பிடுவார் சங்கடம் இன்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்!..

தேக பலம் தா!.. பாத பலம் தா!..
தேக பலம் தா!.. பாத பலம் தா!.. 

தேக பலம் தா - என்றால் 
அவரும் தேகத்தைத் தந்திடுவார்!.. 
பாதபலம் தா  - என்றால் 
அவரும் பாதத்தைத் தந்திடுவார்!..
நல்ல பாதையைக் காட்டிடுவார்!..

ஸ்வாமியே ஐயப்போ!.. 
ஐயப்போ ஸ்வாமியே!.. 

சபரி பீடமே வந்திடுவார்!.. 
சபரி அன்னையை பணிந்திடுவார்!.. 
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும் 
சரத்தினைப் போட்டு  வணங்கிடுவார்!..
சபரிமலை தனை நெருங்கிடுவார் 

பதினெட்டுப் படி மீது ஏறிடுவார் 
கதி என்று அவனைச் சரணடைவார் 
மதிமுகம் கண்டே மயங்கிடுவார் 
ஐயனைத் துதிக்கையிலே 
தன்னையே மறந்திடுவார்!..


பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்பா!..
ஸ்வாமி சரணம்!.. ஐயப்ப சரணம்!..

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
ஸ்வாமியே ஐயப்போ!..  
ஐயப்போ ஸ்வாமியே!..

சரணம் சரணம் ஐயப்பா!..
ஸ்வாமி சரணம் ஐயப்பா!..
சரணம் சரணம் ஐயப்பா!..
ஸ்வாமி சரணம் ஐயப்பா!.. 

முப்பது வருடங்களுக்கும் மேலாக - ஐயப்ப பக்தர்களின் உயிரில் கலந்து ஒலித்துக் கொண்டிருக்கும் இப் பாடலை - மீண்டும், ஐயப்ப பக்தர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன். 


ஐயப்பா சரணம்!.. 
உன் அருளாலே உன்னை வணங்கி 
மாலையணிந்து 
விரதம் ஏற்கின்றேன்!.. 

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..