நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வெள்ளி, நவம்பர் 08, 2013

வெற்றி வேல்

இன்று கந்தசஷ்டி. 

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்!.. 

ஆணவ, மாயா, கன்ம  - மலங்கள் வீழ்த்தப்பட்ட நாள்.


அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..

ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு  - உலகம் உய்வதெற்கென உதித்த திருமுருகன்,

தீவினைப் பகை முடித்து ஜோதியாய் நின்றருளிய திருநாள்!..

அலைகடலும் அடங்கிப் போகும்படிக்கு - லட்சோபலட்சம் பக்தர்கள் ஆரவாரிக்கும் - மந்த்ர கோஷம் - 

''..வெற்றிவேல்!.. வீரவேல்!..'' 

மாயையால் எழுந்து நின்ற கிரெளஞ்ச மலையையும், மா மரமாய் நின்ற சூரபத்மன் உடலையும் ஊடுருவித் தனி ஆண்மை கொண்ட நெடுவேலைப் புகழ்ந்து - வேல் வகுப்பில் -  அருணகிரிநாதர் பாடும் பாடல்களுள் ஒன்று!..

வெங்காள கண்டர்கைச் சூலமும் திருமாயன் 
வெற்றிபெறு சுடராழியும்
விபுதர்பதி குலிசமும் சூரன் குலங்கல்லி 
வெல்லாதெனக் கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில்
உருவியே தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி 
கெளமாரி கமலாசனக்
கன்னி நாராணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாட்சி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரயம்பகி அளித்த செல்வச்
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே!..


ஆதியில் கங்கைக் கரையில் - முனிவர் ஒருவர், தமது மகனுடன் தபோவனம் அமைத்து தவ நெறியில் ஒழுகி வரும் போது, ஒருநாள் - 

சூழ்நிலையால் தவறிழைத்த ஒருவன் - பாவ விமோசனம் தேடி முனிவரைக் காண வந்தான். அது முனிவர் அறச்சாலையில் இல்லாத சமயம்.  

அப்போது அங்கிருந்த முனி குமாரன் - அந்த எளியவனுக்கு - திருநாமம் ஒன்றினை உபதேசித்து, இதனை மும்முறை உச்சரித்தால் உன் பாவம் தீரும் - என்று சொல்லி அனுப்பி விட்டான். 

முனிகுமாரன் உபதேசித்த திரு நாமம் - கந்தப்பெருமானின் திரு நாமங்களுள் ஒன்று!.. 

சிறிது நேரம் கழித்து ஆசிரமத்துக்கு வந்த முனிவர், நிகழ்ந்ததை அறிந்து கொண்டு கடுஞ்சீற்றத்துடன் - தன் மகனைச் சபித்து விட்டார்.


''கந்தனின் திருநாமத்தினை ஒருமுறை உச்சரித்தாலும் போதுமே!.. நீ ஏன் மூன்று முறை சொல்லும்படி சொன்னாய்?.. பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டாயே!..'' 

''பிழை பொறுத்தருள வேண்டும் எந்தையே!..''  - என, பணிந்து நின்ற மகனுக்கு,  
''வைகுந்த வாசன் - ஸ்ரீராமன் என அவதார நோக்கங்கொண்டு கங்கை கரைக்கு எழுந்தருளும் போது - நீ  ஓடம் செலுத்தி ஸ்ரீராமனுக்கு சேவை செய்து பாவம் நீங்கப்பெறுவாய்!..'' - என்று முனிவர் சாப விமோசனம் அளித்தார்.

இந்த முனிகுமாரனே - கங்கைக் கரையில் ஓடத்துறை தலைவனாகிய - குகன்!..

இதனால்தான் - அருணகிரிநாதர்,

''மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்!..'' - என்கின்றார். 

முருகனின் பெருமைகள் அளவிடற்கரியன. 

''ஆயுதம் தரித்த சேனாபதிகளுள் நான் ஸ்கந்தனாக திகழ்கின்றேன்!..''

என்று, பகவத்கீதையில் பரந்தாமன் பறைசாற்றியதற்கு மேல் - சொல்லுதற்கு வேறு ஒன்று ஏது!..

முருகன் - திருச்செந்தூரில் போர் முடித்தான். தேவர்களின் தீவினைகளைத் தொலைத்தான். 


அதற்கு நன்றி கூறும் முகமாக - இந்திரன் தேவயானையாகிய, ஐராவதம் வளர்த்த தேவகுஞ்சரியை முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததோடு - உன் அடியார்களை - முன்வினைப் பகையின் பேரால் வருத்த மாட்டோம் என வாக்கும் கொடுத்தான். 

அந்த வாக்கு இதோ - இந்த கந்தரலங்காரத் திருப்பாடல் மூலம் வெளிப்படுகின்றது.

நாள்என் செய்யும் வினைதான் என்செய்யும் எனை நாடிவந்த
கோள்என் செய்யும் கொடுங்கூற்று என்செய்யும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமுந்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!.. 

மேலும் - 

மயிலேறும் ஐயன் காலுக்கு அணிகலன் வானோர் முடி (முடி எனில் கிரீடம், தலை) என்றும், 

''மாவலிபால் மூவடி கேட்டு, மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடி - தேவர்களின் - தலைமேல் பட்டது!.. எனவே நாளும் கோளும் குறித்து அஞ்ச வேண்டாம்!..'' 

- என்றும் நம்மைத் தேற்றுகின்றார் அருணகிரிப்பெருமான்.


நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் 
கோலக் குறத்தியுடன் வருவான்!..  

எந்த நேரத்திலும் நம் பொருட்டு, வண்ண மயில் மீதேறி வள்ளியம்மையுடன் முருகன் வருவான் - எனில்,

நாம் அந்த முருகனுக்காகச் செய்யவேண்டியது யாது?.. 

அதையும் அருணகிரிநாதர் கூறுகின்றார்!.. 

கதிர்வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும் 
நொய்யிற் பிளவு அளவேனும் பகிர்மின்!.. 

வள்ளுவப் பெருந்தகை வகுத்தருளினாரே - 

''வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை!..'' - என்று, அது தான் இது!.. 

உமியோடு இருக்கும் வரை - நெல். உமி பிரிந்தபின் அதன் பெயர் அரிசி. அரிசி இரண்டாக பிளவு படும் போது நொய். அந்த நொய் இரு கூறாகும் போது - அதன் பெயர் - குறுநொய்.

அந்த குறுநொய் அளவாவது அறம் செய்து வாழுங்கள்!.. 

வாழும் காலத்திலேயே - 

வருவான் வடிவேலன்!.. 
வந்தருள் புரிவான் கதிர்வேலன்!..

என்று வழிகாட்டுகின்றார் - அருணகிரிநாதர்.

முந்து தமிழ் மாலை கோடிக் கோடி 
சந்தமொடு நீடு பாடிப் பாடி 
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி - உழலாதே 

முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை ஆளத் தானு - முனைமீதே

திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு - நடமாடுஞ்

செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅனு கூலப் பார்வை தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது - வருவாயே!..


அந்தண்மறை வேள்வி காவற்கார
செந்தமிழ்சொற் பாவின்  மாலைக் கார
அண்டருபகார சேவற்கார - முடிமேலே

அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார - எழிலான

சிந்துரமின் மேவு போகக்கார
விந்தைகு றமாது வேளைக் கார
செஞ்சொல் அடியார்கள் வாரக் கார - எதிரான

செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்திநகர் வாழும் ஆண்மைக் கார - பெருமாளே!.. 

முருகப் பெருமானை மனதார வணங்கி , அவன் திருப்பெயர் துணை கொண்டு ஏழை எளியோர்க்கு - இயன்றவரை உதவி, வினைப்பகை நீங்கப் பெறுவோம்!.. 


ஆறிருதடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் 
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க 
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்!.. 

வெற்றிவேல்!.. வீரவேல்!..

8 கருத்துகள்:

 1. ”வெற்றிவேல்” அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்களுடன் மிகச்சிறப்பான இன்றைய தினத்திற்குப்பொருத்தமான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. அன்புடையீர்.. தங்களின் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!.. தங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 3. வெற்றிவேலன் துணை.
  பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்ததே முருகனின் அருள்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்..நன்றி!..

   நீக்கு
 4. வெற்றி வேல் முருகன் அழகுத்தமிழில்
  அருமையாக உலவவிட்ட பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்கள்து வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.. மிக்க நன்றி!..

   நீக்கு
 5. அழகன் முருகன் குறித்து படங்களுடன் அருமையான கட்டுரை...
  வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்.. த்ங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி!..

   நீக்கு