நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வியாழன், நவம்பர் 28, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 2

என்ன தான் செய்யமுடியும்!.. 

''தட்க்ஷன் ஆகுதி கொடுக்கின்றான்!'' - என்று அங்கே போனால்  -  பிறகுதான் தெரிந்தது - அது சிவப்பரம்பொருளை மதிக்காமல் செய்யப்படும் யாகம் என்று!.. 


அதன் பிறகாவது -  நல்லபுத்தி சொல்லி தட்க்ஷனைத் திருத்த முயற்சி செய்திருக்கலாம். அல்லது, ''..நீயும் உன் யாகமும்!..'' - என்றாவது திரும்பி வந்திருக்கலாம்!.. 

மதி வேலை செய்யாததனால் - விதி புகுந்து விளையாட,

பின்னர் ஸ்ரீ வீரபத்ரஸ்வாமி தோன்றி - தட்க்ஷனின் விருந்தினர்களை வேட்டையாடும்படி ஆகிவிட்டது!..

''அப்படி  - வீரபத்ரரின் திருக்கரங்களால் தண்டிக்கப்பட்டு  - அந்தக் காயங்கள் ஆறுவதற்குள், மாயையின் மகனாகிய சூரபத்மனிடம் சகல போகங்களையும் இழந்து சீரழியும் நிலை வந்ததே!..''

''பட்டத்துக்குதிரை உச்சைச்சிரவம் எங்கே ஓடிப் போனதென்று இதுவரைக்கும் தெரியவில்லை!.. பிரியத்துக்குரிய ஐராவதமோ களையிழந்த காட்டு யானையாகி - திருவெண்காட்டில்!..''

''..மகன் ஜயந்தன் - மகேந்திர புரத்தின் சிறையில்!.. மனைவியுடன் நான் - இங்கே - மூங்கில் காட்டில்!.. சே.. என்ன வாழ்க்கை!..''

- இவ்வாறு எண்ணிக் கலங்கிக் கண்ணீர் வடித்தவன்  - தேவேந்திரன்!..

சூரபத்மனுக்கு அஞ்சி நடுங்கி இந்திராணியுடன் ஒளிந்து கொண்ட மூங்கில் வனம் - வேணுபுரம் எனப்பட்டது. அத்துடன் அஞ்சி நடுங்கிய இந்திரனுக்கு ஆறுதலான புகலிடம் ஆனதால் - புகலி எனவும் புகழப்பட்டது.

இத்தகைய பெருமைக்குரிய திருத்தலம்  - (இன்னும் ஒன்பது - என பன்னிரு திருப் பெயர்களுடன் விளங்கும் ) சீர்காழி!..

 
இப்படி மனக்கலக்கத்துடன் ஒளிந்து வாழ்ந்த தேவேந்திரன் - திருக்கயிலாய மாமலைக்குச் சென்று ஈசனைத் தரிசிக்க விரும்பினான்.

இதனை அறிந்த இந்திராணி, ''யாதொரு துணையும் இல்லாத நிலையில் - அசுரர்களின் குணத்தை அறிந்தும் - என்னைத் தனியே விட்டு விட்டுச் செல்லலாமா?..'' - என்று கலங்கினாள். இமையாத விழிகளில் இருந்து நீர் வழிந்தது.

அப்போது தான், 

ஸ்ரீ தர்ம சாஸ்தா எனவும் ஸ்ரீபூதநாதன் எனவும் போற்றப்படும் ஸ்ரீஹரிஹர புத்ரனைப் பற்றி இந்திராணியிடம் எடுத்துரைத்தான் தேவேந்திரன்.  

''பெண்மையைக் காக்கும் பெருந்தகையாளனாகிய பெருமான் இருக்கும் போது - நீ கவலை கொள்ளலாகாது. அடைந்தவரைக் காக்கும் ஐயனாகிய அவர் உனக்கு  அடைக்கலம் அருள்வார்!..'' - என ஆறுதல் கூறிய தேவேந்திரன் -

ஸ்ரீஹரிஹரபுத்ரனைத் தியானித்து தொழுது வணங்கி நின்றான்.

இந்திரனின் வேண்டுதலைக் கேட்ட பெருமானும் பெருங்கருணையுடன் தோன்றினான்.

எப்படி!..

கந்தபுராணம் அருளிய கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் கூறுகின்றார்!..

(இந்தப் பதிவில் எடுத்தாளப்பட்டிருக்கும் கந்த புராணத் திருப் பாடல்கள் - Project Madurai - எனும் தளத்தில் இருந்து பெறப்பட்டவை. அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்!..)


காருறழ் வெய்ய களிற்றி டையாகிப்
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ

வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்!..

இப்படி - பெருங்கருணையுடன் தோன்றிய பெருமானைப் போற்றி வணங்கி நின்றனர் தேவேந்திரனும் இந்திராணியும்.

பொன்னடி தாழ்ந்து புகழ்ந்து நின்ற இந்திரனிடம் -

''..தேவேந்திரனே!.. என்ன வேண்டும் என இயம்பு!..'' - எனக் கேட்டான் ஸ்ரீ ஹரிஹரசுதன்.

''..  மூவுலகுக்கும் முதல்வன் ஆகிய முக்கண் மூர்த்தியைக் தரிசித்து - எமக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களைக் கூறி,  கதறி அழுவதற்காக - கயிலை மாமலையை நோக்கிச் செல்கின்றேன். இவ்வேளையில் -''

தஞ்சம் இலாது தனித்த இவ்வனத்தே 
பஞ்சுறழ் செய்ய பதத்தியை வைத்தால் 
வஞ்சகர் கண்டிடின் வெளவுவர் என்றே 
அஞ்சினள் உந்தன் அடைக்கலம் ஐயா!.. 

- என்று கூறிக் கலங்கி நின்றான் இந்திரன்.

இதைக் கேட்ட பெருமான் புன்னகையுடன்,

''..உன் மனைவி தனித்திருப்பாள் எனக் கவலையுற வேண்டாம். எவ்விதக் குற்றமும் இலாத,  நின் ஏந்திழை தன்னைத் தீது அடையாது காப்பேன்!..'' - என்று அருளினார்.

அத்துடன்,  மகாகாளன் எனும் சேனைத் தலைவரை - இந்திராணிக்கு மெய்க்காவலாக நியமித்து -

மூவரின் முந்திய மூர்த்தி வரைக்குப் 
போவது உன்னினன் பொன்நகர் மன்னன் 
தேவி இருந்தனள் தீங்கு வராமே 
காவல் கொள் நீ!.. என - 

- ஸ்ரீ மகாகாளருக்கு கட்டளையிட்டு அருளினார்.


இந்த மகாகாளரே -  ஐயப்ப வழிபாட்டில் விளங்கும் ''ஸ்ரீ கருப்ப ஸ்வாமி!..''

அந்த அளவில் நிம்மதி அடைந்த தேவேந்திரன் - தாமரைத் தண்டினுள் விளையும் நூலிழையாக மாறி,  காற்றில் மிதந்தபடி  கயிலை மாமலையை நோக்கிச் சென்றான். 

ஸ்ரீ மகாகாளர் தோன்றாத் துணையாயிருக்க - திடம் கொண்ட மனத்தினளாக   - இந்திரன் விட்டுச் சென்ற சிவபூஜையைத் தொடர்ந்தாள் இந்திராணி. 

அதேவேளையில் அண்ட பகிரண்டம் முழுதும்  - இந்திரனைத் தேடி அலைந்து களைத்துப் போனது - அசுர சேனை. 

''..இந்தத் தடியன்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள்!..'' - என உணர்ந்து கொண்ட அஜமுகி - சூரபத்மனின் தங்கை - தானே தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தாள்.

அங்குமிங்கும் அலைந்து திரிந்தபோது - அண்டபகிரண்டமும் தங்களது அராஜகத்தால் - ஆர்ப்பாட்டத்தால் - வறண்டு கிடப்பதைக் கண்டாள்.

இந்த வறட்சியைக் கண்டு அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி!..ஆனாலும் -

அதோ அந்தப் பகுதி மட்டும்  பச்சைப் பசேல் என  விளங்குவதெப்படி!..

அவளுக்குள் அதிர்ச்சி!.. 


பொதுவாகவே - மூங்கில் காடுகள் எளிதாக உலர்ந்து விடுவதில்லை. அதிலும் இப்போது - இந்திராணி - சிவ வழிபாட்டில் இருக்கின்றனள். எனவே தான் முன்னை விட அழகாகத் தழைத்திருந்தது - அந்த மூங்கில் வனம்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை  - அல்லவா!..

இதை அறிந்து கொண்ட அஜமுகியின் முகத்தில் மலர்ச்சி!..

தேவேந்திரனைத் தேடித் திரிந்த அஜமுகி  - சிவபூஜை செய்து கொண்டிருந்த இந்திராணியைக் கண்டு கொண்டாள். இந்திராணியின் அழகைக் கண்டு அஜமுகி மருண்டாள்.

''..விநாச காலே விபரீத புத்தி!..'' - என்பதற்கிணங்க -

''..தன் அண்ணனுக்கு இவள் விருந்தாகட்டும்!..'' - என்ற  குரூர எண்ணத்துடன்  - இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள்!..

நிலைமை விபரீதமாகிப் போனது.


வீறிட்ட இந்திராணி - ''..அபயம் அபயம்!..'' என்று  அலறினாள்  கண்ணீர் வழிந்தோடக் கதறினாள்!..

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும் 
ஐயனே ஓலம்! விண்ணோர் ஆதியே ஓலம்! செண்டார் 
கையனே ஓலம்! எங்கள் கடவுளே ஓலம்! மெய்யர் 
மெய்யனே ஓலம்! தொல்சீர்வீரனே ஓலம்! ஓலம்!..

இந்திராணியின் அபயக் குரல் அந்த மூங்கில் வனம் எங்கும் எதிரொலித்தது!..

அதன் பின் நடந்ததென்ன!..

ஸ்ரீஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

12 கருத்துகள்:

 1. ஹரிஹரபுத்ரன் இதுவரை அறியாதன அறிந்தேன் ஐயா. தொடர்கின்றேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. //''பெண்மையைக் காக்கும் பெருந்தகையாளனாகிய பெருமான் இருக்கும் போது - நீ கவலை கொள்ளலாகாது. அடைந்தவரைக் காக்கும் ஐயனாகிய அவர் உனக்கு அடைக்கலம் அருள்வார்!..'' //

  //இந்த மகாகாளரே - ஐயப்ப வழிபாட்டில் விளங்கும் ''ஸ்ரீ கருப்ப ஸ்வாமி!..''//

  அழகான தகவல்கள். பதிவும் படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல் அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 3. இந்த மகாகாளரே - ஐயப்ப வழிபாட்டில் விளங்கும் ''ஸ்ரீ கருப்ப ஸ்வாமி!..''

  அருமையான தகவல்கள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 4. கந்த புராணத் திருப் பாடல்கள் மிகவும் அருமை ஐயா...

  சிறப்பான தகவல்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 5. ஐயப்ப வழிபாட்டில் விளங்கும் ''ஸ்ரீ கருப்ப ஸ்வாமி” விளக்கம் அறியத்தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா!

  எத்தனையோ இதுபோல் எனக்குள் இப்படியான கேள்விகள்...
  அதற்கு உங்கள் வலைத்தளத்தில் அருமையான பதிவுகளும் மிகுந்த உதவியாக, தேடல்களுக்கு நல்ல தரவுகளைத் தகவல்களைத்தரும் பதிவுகளாகத் தருவது சொல்லமுடியாத மனச் சந்தோஷத்தைத் தருகிறது.

  யாவருக்கும் பயந்தரும் அருமையான பணியினைச் செய்கின்றீர்கள் ஐயா!

  உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி!.. தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

   எனது பதிவுகள் தங்களுக்கு சந்தோஷத்தைத் தருகின்றது எனில் - அதுவே நான் பெற்ற பேறு!.. எல்லாம் ஈசன் செயல்!..

   நீக்கு
 6. கருப்பஸ்வாமி குறித்த தகவலுக்கு நன்றி. அழகர் கோவிலின் வெளியே மிகவும் சிலாகித்து வழிபடும் காவல் தெய்வமும் இவரும் ஒன்றா. ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   கந்தபுராணத்தில் சொல்லப்படும் ஸ்ரீ மகாகாளர் தான் - அழகர் கோயிலில் திகழும் பதினெட்டாம் படி கருப்பசாமி!..

   ஐயனார் கோயில்களில் இவரே பிரதான காவல் தெய்வம்!..

   நடை முறை வாழ்வில் மக்கள் பல்வேறு மாறுபட்ட பெயர்களையும் பழக்கங்களையும் புகுத்தி விட்டார்கள்..

   நீக்கு