நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


ஞாயிறு, டிசம்பர் 01, 2013

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 3

அடர்ந்த வனத்தினுள் -  இந்திராணியைக் கண்டு குதுகலித்தாள் அஜமுகி. 

அதுவும் ஆதரவின்றித் தனித்திருப்பதாக எண்ணியதில் மேலும் சந்தோஷம் பீறிட்டது.

 

சப்த மாதருள் ஒருத்தியெனத் திகழ்பவள் - இந்திராணி என்பதை அறிந்திராத சிறுமதியளான அஜமுகி -  இந்திராணியின் பின்புறமாகச் சென்று,

கையைப் பிடித்து இழுக்கவும் -  இந்திராணி நிலைகுலைந்தாள்.

அபயக் குரலெடுத்து வீறிட்டாள்!..

தேவேந்திரன்  - தனக்குத் துணை எனக் காட்டிச் சென்ற ஸ்ரீஹரிஹர புத்ரனை எண்ணிக் கதறினாள். 

ஆரணச் சுருதி சார் அடல் உருத்திரன் என்று ஏத்தும் 
காரணக் கடவுள் ஓலம் கடல் நிறத்து எந்தாய் ஓலம் 
பூரணைக்கு இறைவா ஓலம் புட்கலைக் கணவா ஓலம் 
வாரணத்து இறைமேல் கொண்டு வரும் பிரான் ஓலம்!.. 

என்றாள்!..  அந்த அளவில், 

மின்னொளி போல வெய்யரில் பெரிதும் வெய்யோன் என வெளிப்பட்டு வந்தான் - வீரமாகாளன் - என்கின்றார் - கச்சியப்ப சிவாச்சார்யார்!.

நான்முகன் முதற்கொண்டு ஏனைய தேவர் எல்லாம் மலர்களைத் தூவி வணங்கிட, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்ட சிவபெருமானின் திரு நாமத்துடன்  - காலனுக்கும் காலனைப் போல -

ஸ்ரீவீரமாகாளர் - வெளிப்பட்டார்.


அவர் வரும் போதே -

''..அஞ்சேல்!.. அஞ்சேல்!.. இம்மியும் இவளைக் கண்டு அஞ்சேல்!.. அஜமுகியின் கொடுமையைத் தடிந்து காப்பேன்!..'' 

- என இடி போல முழங்கியவாறே வந்தார்.

வீரமாகாளரின் வரவைக் கண்டு மகிழ்ந்து, தலை வணங்கி வரவேற்ற -    இந்திராணி - அவர் தம் ஆறுதல் மொழிகளால் மழைமுகம் கண்ட பயிர் போல மகிழ்ந்தாள்!..

ஆனால் - அஜமுகியோ - ஆணவத்தின் உச்சியில் நின்றவளாய், 

''..ஒருங்கு முத்தொழிலும் ஆற்றும் மூவரும்,  துறக்கம் வைகும் முதல்வனும் திசை காப்பாளர் எவரும் என் முன் நில்லார்!.. அப்படி இருக்க இங்கு என் முன் நிற்பதற்கு தைரியமும் உடையவனோ - நீ!..'' - எனத் தகித்தாள். 

அதைகேட்டு சினந்த வீரமாகாளர் - தன் சினத்தை அடக்கிக் கொண்டவராக,

''..அசுர குலத்தினை அடியோடு அழிப்பதற்கு, அக்னி என வந்த அஜமுகியே கேள்!.. வானவர் கோனின் மனைவி - தனியளாக வனத்தில் இருக்கின்றாள் என்று எண்ணி இறுமாந்து விடாதே!.. சசி தேவியைக் காக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளேன். பெண்மைக்கு இடறேதும் செய்யாமல் சென்று விடு!..'' - என்றார். மேலும் அறவுரைகளையும் கூறினார்.

''..ஆ!.. அதைச் சொல்லவும் என்னைத் தடுக்கவும் நீ யார்!..'' - அண்ட பகிரண்டமும் அதிர ஆர்ப்பரித்தாள் அஜமுகி!..

''..நானா!.. ஆலகால நஞ்சினை  உண்டு கறுத்த நீல கண்டனும், பொன் அனைய ஸ்ரீதேவி தங்கும் திருமார்பினன் மாதவனும் - கூடி நல்கிய நற்புதல்வனும் , வெள்ளை யானையின் மீது ஆரோகணித்து வரும் ஐயனும் ஆகிய ஹரிஹர சுதனின் படைத்தளபதிகளில் ஒருவன்!.. என் ஐயன் எனக்கு அளித்த பணி இது. என் பேர் வீரரில் வீரன் ஆன வீரமாகாளன் !..'' - என்றார். 

அஜமுகி - இதைக் கேட்டது கொஞ்சம் அரண்டாள். மருண்டாள். 

எனினும், மறுபடியும் மனதினுள் வன்மம் தலை தூக்கியதால்  - சிலிர்த்துக் கொண்டவளாய் -

 ''..இவனெல்லாம் ஒரு பொருட்டா!..'' 

 - என்றபடி, மாயை பெற்றெடுத்த  மகளாகிய அஜமுகி,  வீரமாகாளர் மீது - பற்பல மந்த்ராயுதங்களைப் பிரயோகித்தாள்.

ஆனால் அந்த மாய அஸ்திரங்கள் அத்தனையும் வீரமாகாளரின் காலடியில் - வீழ்ந்து பயனற்றுப் போயின. 

''..அளப்பரிய ஆற்றலுடன் திகழும் அசுர குலத்தின் அற்புத ஆயுதங்களுக்கு இது தான் கதியா!..''

- என்று சிந்தித்தவள் - மீண்டும், கொடிய ஆயுதங்களை அவர் மீது ஏவினாள்.

ஒரு நிலையில், வீரமாகாளரும் - தன் கை வாளைக் கொண்டு அஜமுகி ஏவிய அஸ்திரங்களை  எதிர் கொள்ளவேண்டியதாயிற்று. 

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர எண்ணிய வீரமாகாளர் -


''..இந்திரன் தேவியை விட்டு விட்டு சென்று விடு!.. இங்கொரு பழி நேரும்படி செய்து விடாதே!..'' - என்று இறுதியாக எச்சரித்தார். ஆனால்,  

பழுதுபட்ட செவிகளையுடைய பாதகியான அஜமுகி, பதிலுக்கு - 

''..வீரமாகாளனே!.. நீ மிகவும் நல்லவன். பெண்மையைக் காப்பதில் பெரும் சிரத்தையுடன் இருக்கின்றாய்!.. ஆனாலும் நான் இவளை என் அண்ணன் சூரபத்மனுக்கு விருந்தாக்க முடிவு செய்து வெகு நேரம் ஆகிவிட்டது. நீ என்னைத் தடுக்க முயற்சி செய்யாதே!.. உனக்கு வெற்றி கிடைப்பது என் கையில் உள்ளது!.. ஆயினும், அதற்கு நான் இடம் தர மாட்டேன்!.. எனவே, பெண்ணாகிய நானும் பெருந்தன்மையுடன் சொல்கின்றேன்!.. நீ, வந்த வழியே ஓடிப் போய்விடு!.. என் சகோதரர்கள் குறிப்பாக தாரகன் - உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கே வந்தானாகில் - நீயும் உனைச் சேர்ந்த மற்ற தேவர்களும் பிழைப்பது கஷ்டம்!..''  

- என்றபடி நச்சரவம் போன்ற முத்தலைச் சூலத்தை எறிந்தாள்.

இதைக் கேட்டு - எட்டுத் திக்குகளும் அதிரும்படி நகைத்தார் வீரமாகாளர். 

அந்த நகைப்பொலியைக் கேட்டு, அதுவரையில் வெற்றிக் களிப்பில் மிதந்து களைத்திருந்த அசுரர் பெருங்கூட்டம் அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தது.

வீரமாகாளரின் நகைப்பொலியால் - அஜமுகி வீசிய முத்தலைச் சூலமும் பயனற்றுப் போனது. 

தன் திறம் அத்தனையும், தந்திரம் அத்தனையும், வீரமாகாளர் முன் - பயனற்றுப் போனதை எண்ணித் தகித்த - அஜமுகி ஆத்திரம் தலைக்கேற - ''..வீரமாகாளரை வெல்லுதல் அரிது!..'' - என்பதை உணர்ந்தவளாய்,

தன் தோழியுடன் கூடி - சசிதேவியின் கையைப் பிடித்து இழுத்தாள்.

கொதித்தெழுந்த  கோபத்தையெல்லாம் அது வரையில் அடக்கி வைத்திருந்த வீரமாகாளர், சீறிச் சினந்தவராக,

''..நில்!..''  - என்று கர்ஜனை செய்தார்.

கேளாச் செவியளாகிய அஜமுகி -  இந்திராணியை உந்தித் தள்ளி வழி நடத்தினாள்.

’’..இனியும் பொறுப்பதற்கில்லை!.. எடடா கொடுவாளினை!..'' - என்று ஓங்காரமிட்டபடி, எழுந்த வீரமாகாளர்,

தன் செயலால் தரங்குன்றிய அஜமுகியின் கூந்தலை செங்கையால் பற்றி ஈர்த்து - தோகையைத் தொட்டு இழுத்த கையைத் துணித்தார். தீங்குறு மனத்தினளைத் திருவடியால் உதைத்தார்.

இதைக் கண்ட வானோர் யாவரும் - அதிர்ச்சி தாங்க மாட்டாமல் - துள்ளிக் குதித்தனராம்.


மதர்த்திடு துன்முகி வன்கை வாளினால் 
சிதைத்திடு மொய்ம்புடைச் சேனைக் காவலன் 
உதைத்தனன் அனையளும் ஓ என்றே உளம் 
பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே!.. 

என்பது கச்சியப்ப சிவாச்சார்யரின் திருவாக்கு!..

ஸ்ரீவீரமாகாளர் எத்தனை அறிவுரைகளைச் சொல்லியும் அஜமுகி தலைக்கேறிய ஆணவத்தினால் அதைக் கேட்டாளில்லை!.. அஜமுகி அரக்க வடிவினள் தான்.

ஆனாலும், அவளுக்குத் துன்பம் விளைவிப்பது ஸ்ரீ வீரமாகாளரின் நோக்கம் அல்ல!..


அஜமுகியே தனது அடாத செயலினால்  - தன் கையை இழந்ததோடு - அசுர குலத்தின் அடிவேரினையும் அறுத்தாள் - என்பது இந்த வரலாற்றின் உட்பொருள்!..

ஸ்ரீ ஹரிஹரசுதனே சரணம் சரணம்!..

20 கருத்துகள்:

 1. //அவர் வரும் போதே -

  ''..அஞ்சேல்!.. அஞ்சேல்!.. இம்மியும் இவளைக் கண்டு அஞ்சேல்!.. அஜமுகியின் கொடுமையைத் தடிந்து காப்பேன்!..''

  - என இடி போல முழங்கியவாறே வந்தார்.//

  மிக அருமையான வர்ணனைகள். நல்லதொரு கட்டுரை. படங்களும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும் - இனிய பாராட்டுரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி!..

   நீக்கு
 2. பக்திப் பரவசமூட்டும் சிறப்பான பகிர்வுக்கு என் நன்றி கலந்த
  வாழ்த்துக்கள் ஐயா !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகைக்கும்
   இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!.

   நீக்கு
 3. மிகவும் சிறப்பான விளக்கங்கள் + பகிர்வு... & தகவல்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்!..
   தங்களின் வருகைக்கும்
   இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 4. அறியாத தகவலை அழகிய படங்களுடன் அருமையான விளக்கத்துடன் கொடுத்தமைக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்!.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 5. மிகவும் சிறப்பான விளக்கங்களுக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 6. அருமையான கவித்துவமான நடையழகு
  காட்சிப்படுத்துகிறது போர்க்கள சூழலை..

  பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!..
   தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்!..
   தங்களின் பாராட்டினைக் கண்டு நெகிழ்ந்தேன்!..
   மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 7. உங்கள் பதிவின் மூலம் தெரியாத கதையொன்று தெரிந்து கொண்டேன். ஆன்மீக மனம் கமழும் பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்.. தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.. மிக்க நன்றி!..

   நீக்கு
 8. ஐயா உங்கள் எழுத்தின் திறமை கதையைக் காட்சிப்படுத்தி எழுதுவதிலேயே தெரிகிறது.

  அற்புதம் ஐயா! கண்முன்னே காட்சியாகக் கண்டேன். வியக்க வைக்கின்றது வரலாறு.

  மிக அருமை! தொடருங்கள் ஐயா!

  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி!..
   என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை!..
   தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 9. வீரமாகளரின் விபரம் இன்று தான் அறிந்தேன் அருமையான வரிகளுடன் கூடிய வரலாறை காட்சிப் படுத்தி எமக்கு வழங்கியதற்கு நன்றி உங்கள் வலைதளத்தை அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி....!
  எதோ ஒரு தேடுதல் இருந்தது என்னுள் அது இது தான் என்பதை உணர்ந்தேன். இனி தொடர்கிறேன். தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக.. வருக.. தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!.. கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி!..

   நீக்கு