நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வியாழன், ஜனவரி 30, 2014

நிலவு வந்த நேரம்

இன்று தை அமாவாசை.

கிட்டத்தட்ட  210 ஆண்டுகளுக்கு முன், இதே  - தை அமாவாசை நாள்.

தலம் : - திருக்கடவூர்.

இடம் : - வம்பளந்தான் திண்ணை.

நேரம் : - (அறியாமை) சாயுங்காலம்.

சூழல் :- ஊர் முழுதும் பரபரப்பு.

 அதே சமயம் அழுத்தமான மௌனம். என்ன நடக்குமோ என்ற திகைப்பு!..


''..என்னவாம்!?..''

''.. நம்ம சுப்ரமண்ய குருக்கள் இருக்காரே!..''

''..யாரு?.. அம்பாள் சந்நிதியில உட்கார்ந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களை அபிராமி.. அபிராமி..ன்னு வம்புக்கு இழுப்பாரே.. அவரா?..''

''..அவரே தான்.. இன்னைக்கு சரியா மாட்டிக் கொண்டார்!..''

''..யார் கிட்டே!..''

''..மகராஜாவிடம்!..''

''..என்னது மகராஜாவா!.. அவர் எங்கே இங்கே வந்தார்?.. நான் மாயவரத்ல இருந்து இப்பதானே வர்றேன்.. கொஞ்சம் புரியும்படி சொல்லு..''

''..தஞ்சாவூர்ல இருந்து சரபோஜி மகராஜா பூம்புகார் கடல் கரைல அமாவாசை தர்ப்பணம் செய்துவிட்டு -  இங்கே அம்பாளை தரிசிக்க வந்திருக்கார்..''

''.. ம்!..''

''..கோயிலுக்கு வந்தவர் .. கோயில்ல நம்ம சுப்ரமணியம் அரை மயக்கத்தில இருக்கிறதை பார்த்து விட்டார்..''

''..அடடே!!..''


''..நம்ம ஆளுங்க குருக்களோட அடாவடிகளை சொன்னப்போ ராஜா நம்பற மாதிரி இல்லை!.. ராஜாவே அவரைப் பார்த்து, குருக்களே!.. இன்னிக்கு என்னங்காணும் திதி..ன்னு கேட்டதும், அரை மயக்கத்தில் இருந்த சுப்ரமணி பௌர்ணமின்னு உளறிட்டார்!..''

''..அடப்பாவி மனுஷா!.. நெறஞ்ச அமாவாசை!.. அதுவும் தை அமாவாசை!.. ''

''..அப்பறம் என்ன.. இன்னிக்கு பௌர்ணமின்னா ஆகாயத்தில நிலா வருமா.. ன்னு .. ராஜா கேட்க...

இவரும்.. வரும் போய்யா.. சர்தான்.. அப்படின்னுட்டார்...''

''..ராஜா கடுப்பாயிட்டார். இன்னிக்கு சாயுங்காலம் நிலா வரல்லேன்னா.. உன்னைய அடுப்புல போட்டு வறுத்துடுவேன்னுட்டார்.. ''

''..ஐயையோ!..''

''.. அவருக்காக  நெருப்பு மூட்டி - அதுக்கு மேல ஊஞ்சல் கட்டி இருக்காங்க!.. ''


''..அடப்பாவமே.. புள்ளகுட்டிக்காரர் ஆச்சே!... கோயிலுக்கு வந்தோமா.. பஞ்சாங்கம் படிச்சு ரெண்டு பாட்டு பாடுனோமா..ன்னு இல்லாம.. வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிட்டாரே!.. சரி..  போனா போவுது குருக்களை விட்டுடுங்க.. ன்னு  அவருக்காக யாரும் ராஜாக்கிட்டே பேசலியா!..''

''..யார் பேசுவா!.. எப்ப பாத்தாலும்.. அவனோட என்ன கூட்டு!.. இவனோட என்ன சேர்த்தி..ன்னு  புலம்பிக்கிட்டே இருந்தா யார் தான் அவரை பக்கத்தில சேர்த்துக்குவாங்க!.. நீயே சொல்லு!..''

''..அதுவும் சரிதான்!...''

''..அதுவும் இல்லாம.. கோயிலுக்கு வர்ற பொண்ணுங்களைப் பார்த்து நீ அம்பாள் மாதிரி இருக்கேன்னு சொன்னாக் கூட பரவாயில்லே!..  நீ வராஹி மாதிரி இருக்கே.. நீ பத்ரகாளி மாதிரி இருக்கே.. நீ சாமுண்டி மாதிரி இருக்கே...ன்னு சொன்னா.. நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு கோவம் வருமா.. வராதா?..''

''..வரும் தான்.. ஆனாலும் பாவங்க.. நம்ம குருக்கள்!.. ''

''..நீங்க வேறே...  ராஜாக்கிட்டேயே உளறிட்டோமே.. அப்படின்னு ஒரு வருத்தம் கூட குருக்கள் கிட்ட இல்லையே!.. ''

''..அப்படியா!..''


''..என்ன அப்படியா?.. எல்லாம் அவ பாத்துக்குவா.. அவ தானே என்னய இந்த மாதிரி பேச வெச்சி வம்புல மாட்டி விட்டா... அப்படி இப்படின்னு ஒரே பிடிவாதம்.. அதனால தான் இப்ப சிக்கல்ல சிக்கி ஊஞ்சல்ல ஆடப்போறார்..''

''..சரி .. அப்ப இதுக்கு என்னதான் முடிவு?..''

''..முடிவா.. அதை அவரே தேடிக்கிட்டார்!.. அம்பாள் எனைக் காப்பாத்துவா.. ன்னு சொல்லிட்டு இருக்கார். கீழே நெருப்பை உண்டாக்கி மேலே ஊஞ்சல் தொங்க விட்டிருக்காங்க.. அதுல இருந்து தான் இன்னும் கொஞ்ச நேரத்தில.. பாடப் போறார் நம்ம சுப்ரமணி!.. ''

''..நெருப்பு மேலே பாட்டா!?.. ''

''..ஆமா.. அந்தாதி..ன்னு ஒரு பாட்டு வகை இருக்கு .. ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசில உள்ள எழுத்து அசை, சீர்,  ....''

''..இதெல்லாம் நமக்குப் புரியாதுங்க.. தெளிவா சொல்லுங்க..''

''..ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசி சொல்லை - அடுத்த செய்யுளோட முதல் சொல்லாக வச்சி பாடுறது.. அதுக்குப் பேர் தான் அந்தாதி.. அந்த மாதிரி பாடுறதா இருக்கிறார்..இப்ப புரியுதா!.. ''

''..புரியுது.. நல்லாவே புரியுது!.. அப்போ.. பாட்டு பாடுனா நிலா வருமா!?..''


''..யாருக்குத் தெரியும்!.. அங்கே போய் பார்த்தால் தானே தெரியும் .. நான் அதுக்குத் தான் கோயில் வாசலுக்குப் போறேன்!..''

''..அப்போ.. சாமி கும்பிட இல்லையா?.. ''

''..அதுக்கெல்லாம் வயசான காலத்தில பாத்துக்கலாம்!..''

''..அப்போ... நானும் வர்றேன்!... என்ன தான் நடக்குதுன்னு பாக்கணும்!..''

''..ஆமா.. ஏதோ.. பாட்டு சத்தம் காதுல விழலே!...''

''..ஆமாமா!.. குருக்கள் தான் பாடுறார்... அப்ப முன்னாலேயே கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரா!..'' 

''..இரு ..இரு.. என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு.. ஊரே கூடி நிக்குது போல.. முதல்ல பாட்டைக் கவனி.. ''

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் 
பழிக்கே உழன்று வெம்பாவங்களே  செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே!..

''..கேட்டியா.. இப்பவும் என்ன சொல்றார் பார்.. கயவர்  தம்மோடு என்ன கூட்டு.. ன்னு.. அதாவது நம்மள ... அட ஏன் மேல இடிக்கிறே!.. கண்ணு தெரியலயா?.. பட்டப் பகல் மாதிரி நிலவு இருக்குறப்ப!...''

''..நிலவா!... அது எங்கேயிருந்து வந்திச்சி.. இன்னிக்கு அமாவாசை.. மறந்து போச்சா!..''

''..என்ன உளர்றே!.. இவ்வளவு வெளிச்சம் நிலவு இல்லேன்னா எப்படி வரும்!?.. ஆ.. ஆ.. அதோ.. பார்யா.. நிலா.. அது .. வானத்து.. மேலே!..''

''..என்னா அதிசயமா இருக்கு!.. நம்பவே முடியலயே!.. இப்படியும் நடக்குமா!.. ''

''..நடந்திருக்கே!..  குருக்கள் விஷயமான ஆள்தான்யா!.. பாட்டு பாடி நிலாவ கொண்டாந்துட்டாரே!..''

''..  இங்கே பாரு... அன்னிக்கு அவரை குறை சொன்ன  பொண்ணுங்கள்ளாம் ... இப்ப ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து கும்புடுறதை!.. அப்பப்பா.. இந்தப் பொண்ணுங்கள நம்பவே முடியலயே...''


''..கோயில்ல குடியிருக்கிற அம்பாளையே நம்ப முடியலையே... இவ தானே அன்னிக்கு பௌர்ணமி.. இன்னிக்கு அமாவாசைன்னு உருவாக்கி வெச்சா.. இப்ப - அவளே.. பாட்டுக்கு மயங்கி நிலாவைக் காட்டிட்டாள்... ன்னா!..''

''..அதுவும்..  தமிழ் பாட்டுக்கு!.. அம்பாளே மயங்கிட்டாள்...ன்னு அர்த்தம்!..''

''..நாம தான் தப்பு கணக்கு போட்டுவிட்டோம்.. அங்கே பார்.. ராஜாவே எந்திரிச்சு வந்து குருக்களைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு ... என்னது.. அபிராமி பட்டர்..ன்னு பட்டயமா!.. சரிதான்.. நல்ல மனுஷனுக்கு மரியாதை செய்ய வேண்டியது தான்யா!..''

''..இன்னும் பாடறார்.. கேளுங்க.. ஆஹா!.. மனசு கரையுதே... ''

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ் 
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல் 
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!...

''..பார்.. பார்.. அம்பாளை நமக்கெல்லாம் தரிசனம் செய்து வைக்கிறார்.. ஆஹா.. தாயே.. தயாபரி.. எங்க பிழையெல்லாம் பொறுத்துக்கம்மா!.. எங்களுக்கு நல்ல புத்தியக் கொடும்மா!.. அபிராமி!.. அபிராமி!..''

''..என்னய்யா.. கண்ணுல ... ''

''..ஆனந்த கண்ணீர்!..  ஐயா!.. ஆனந்தக் கண்ணீர்!.. உங்க கண்ணுலயுந்தான்.. கண்ணீர் வருது!.. ''

''..நாம எல்லாம் குருக்களை தப்பு தப்பா சொல்லியும், அவரு நமக்கும்  அம்பாள் தரிசனம் செஞ்சு வெக்கிறார்..ன்னா..  அவரு தான்யா மனுசன்..''

''..உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் ..ன்னு ஆரம்பிச்சு - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!.. ன்னு நூறு பாட்டு பாடி அந்தாதிய பூர்த்தி செஞ்சிருக்கிறார்!..'' 

''..நூல் பயன் என்ன சொல்றார்..ன்னு கவனி..''


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்கக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!..

''..கேட்டீங்களா.. அம்பாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லை.. ன்னு.. சொல்லி நம்ம கண்ணைத் தெறந்து வச்சிருக்கார்.. ''

''..வாங்க நாமளும் போய் அவர்கிட்ட நல்லதா நாலு வார்த்தை சொல்லுவோம்.. இனிமே.. எனக்கு அபிராமி தான் விழித்துணையும்.. வழித்துணையும்!..''

''..எனக்குந்தான்!..''

அபிராம பட்டர் வாழ்க!.. வாழ்க!..
அபிராமவல்லி வாழ்க!.. வாழ்க!..
அமிர்தகடேசர் வாழ்க!.. வாழ்க!..

- : ஓம் சக்தி ஓம் :-

சேர்மன் ஸ்வாமிகள்

 தை அமாவாசை

சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது. 

இதனால் - தை மாதத்தின்  அமாவாசை மிகவும் விசேஷமானது.


இறந்த பின்னும் - வாழ்வு தொடர்கிறது என்பது நமது சமய நம்பிக்கை. 

எனவே - முன்னோர்கள் நற்கதி அடையவும், அவர்களின் நல்லாசி வேண்டியும் சந்ததியினர் தர்ப்பணம் செய்கின்றனர்.

திதி நாட்களில்  செய்யும் வழிபாட்டை - அவர்கள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

அமாவாசையில்  - கடற்கரை, ஆறு, திருக்குளங்கள்  இவற்றால் புகழ் பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வது வழக்கம்.


இறப்புக்கு பிறகும் வாழ்வு தொடர்கிறது என்பது நம்பிக்கையின் அடிப்படையில் - பிதுர் கடனை முறையாக சிரத்தையுடன் - அக்கறையுடன் செய்ய வேண்டும் என்பர். 

இதனை வைதீக முறைப்படி என்றில்லாமல் அவரவர் குல வழக்கப்படி  செய்யலாம்.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் வழிபாட்டினை நம்மிடம் இருந்து பெற்று பிதுர்களிடம்  வழங்குபவன் சூரியன். அதனால் தான் சூரியனுக்கு பிதுர்காரகன் என்று பெயர்.

பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த குணமுடைய காகத்திற்கு ஒருபிடி உணவிடுவதன் மூலம் தேவதைகளின் நல்லாசியைப் பெற முடியும். 

அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீரை அள்ளி விடுவது) மிகுந்த நன்மை தரும்.


புண்ணிய தீர்த்தங்களில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பரிபூரணமாக பெறமுடியும்.

திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் புனிதமானது.

மணிகர்ணிகை தீர்த்தம்
இக்கோயிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் - கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி - புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். 

இந்தக் கோவில் எதிரே உள்ள கடல், ஆதி சேது என்று அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரத்துக்கு சமமானது இந்த கடல் தீர்த்தம். இதில் ஒரு முறை நீராடுவது ராமேசுவரத்தில் நூறு தடவை நீராடுவதற்கு சமம் என்பர். 

தை அமாவாசை, ஆடி அமாவாசை , மகாளய அமாவாசைகளில் இங்கு நீராடுவர். 

வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோடியக்கரையும் சிறப்புடையது.

கன்னியாகுமரி, உவரி, ராமேஸ்வரம், தாமிரபரணிக் கரையில் பாபநாசம் மற்றும் காவிரியின் கரையில் - பவானி கூடுதுறை, ஸ்ரீரங்கம், திருவையாறு  - இத்தலங்களில் எல்லாம் பக்தர்கள்  கூட்டம் அதிகமாக இருக்கும்.


தை அமாவாசை தினத்தன்று - ராமேஸ்வரத்தில்  ஸ்ரீதர்மசம்வர்த்தனி அம்பாள் சமேதரராக  ஸ்ரீ ராமநாத ஸ்வாமி,  அக்னி தீர்த்தம் எனப்படும் கடற்கரைக்கு எழுந்தருளி  புனித நீராடல் நடைபெறும். 

திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அன்னை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் திருக்கோயில்  ஜோதி மயமாக விளங்கும்.

ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலம் ஸ்வாமிகள்

திருச்செந்தூர் அருகில் மேலப்புதுக்குடி எனும் கிராமத்தில் ராமசாமி நாடார் அவர்களுக்கும் சிவனணைந்தாள் அம்மாளுக்கும் இளைய மகனாக, 1880 - அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று - தோன்றியவர் அருணாசலம். 

வளரும் பருவத்திலேயே யோகம் தியானம் மந்திரம்  - இவைகளை அறிந்து ஞானம் கூடிவரப் பெற்றார்.

அது முதற்கொண்டு ஏழை எளியோர் தம் துயர் தீர்ப்பதிலேயே அருணாசலத்தின்  நாட்டம் சென்றது. 

அவரால் நலம் பெற்றவர்கள் அவரை அன்புடன் அருணாசலம் ஸ்வாமிகள் என்றழைத்தனர்.


அவருடைய புகழ் எங்கும் பரவியது. ஸ்வாமிகளின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி - அன்றைய ஆங்கிலேய அரசு,

1906  செப்டம்பர் ஐந்தாம் நாள் - ஏரல் நகரத்தின் சேர்மன் பதவியைத் தாமகவே முன் வந்து வழங்கியது. 

அது முதற்கொண்டு -  ஏரல் சேர்மன் ஸ்வாமிகள் என வழங்கப் பெற்றார். 

மக்கள் பணியினை மகேசன் பணியாகச் செய்து வந்தார் ஸ்வாமிகள். தான் பெற்ற அற்புத சக்தியால் - அற்றார்க்கும் அலந்தார்க்கும் அளப்பரிய உதவிகளைச் செய்து வந்த ஸ்வாமிகள் பிரம்மசர்யம் கொண்டு விளங்கினார். 

தனது வாழ்வு பூரணமாகும் நாளையும் அதன்பிறகு செய்ய வேண்டியதையும் தனது சகோதரரிடம் முன்னதாகவே தெரிவித்தார். 

சேர்மன் பதவியினை   1908  ஜூலை  27 அன்று திரும்ப ஒப்படைத்தார். தான் முன்பே கூறியிருந்தபடி -  ஆடி அமாவாசை (28 ஜூலை 1908) அன்று நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு பூரணம் எய்தினார்.


ஸ்வாமிகள் கூறியபடியே ஏரல் நகரின்  தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் நிற்கும் ஆலமரத்தின் அருகில் சமாதி கோயில் எழுப்பப்பட்டு -இஷ்ட மூர்த்தியான முருகன் பிரதிஷ்டை நிகழ்ந்தது.

ஸ்வாமிகள் சித்தியடைந்த பின்னும் இன்று வரை - நம்பிவரும் பக்தர்களுக்கு கலங்கரை விளக்கமாக நின்று கை கொடுத்து காப்பாற்றி வருகின்றார். 

ஒவ்வொரு அமாவாசை தினமும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன. 

எனினும் ஆடி மற்றும் தை மாத அமாவாசை தினங்களை அனுசரித்து பன்னிரண்டு நாட்கள் விசேஷ வைபவங்கள் நிகழ்கின்றன. சாதி சமயபேதம் இல்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த ஆண்டு தை அமாவாசை தினத்தை ஒட்டி - ஜனவரி 21 அன்று திருக் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பத்தாம் நாளாகிய இன்று - மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் மாலை விலாமிச்சை வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலமும் இரவு சிவப்பு சாத்தி - கற்பகப் பொன் சப்பரத்தில் தரிசனம்.

பதினோராம் திருவிழா நாளை - வெள்ளிக்கிழமை (ஜன. 31)

அதிகாலை 5 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம். காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம் பிற்பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம். 

மாலையில் ஏரல் முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி. இரவு 10.30 மணிக்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேர்தல்.


பன்னிரண்டாம் நாள் திருவிழாவாக  சனிக்கிழமை (பிப்.1) காலையில் தாமிர வருணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறை நீராடலும்,

பிற்பகல் 12.30 மணிக்கு மகாஅன்னதானமும் நிகழும்.

இரவில் ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது.

திருவிழாவினை முன்னிட்டு தென் மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன. 

திருவிழா ஏற்பாடுகளை  பரம்பரை அறங்காவலர் அ.ரா.க.கருத்தப்பாண்டியன் நாடார் அவர்கள் செய்து வருகின்றார்.

குருவே சரணம்.
சிவாய திருச்சிற்றம்பலம்

செவ்வாய், ஜனவரி 28, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 13

காலத்தை உருவாக்கும் காரணன் - பரிபூரணன் - தான் உருவாக்கிய -

காலத்தின் கைகளுக்குள் - தன்னையும் ஒப்படைத்தபடி  - கானகத்தினுள் நுழைந்த போது -


விண்ணும் மண்ணும் கை கூப்பி வணங்கி நின்றன.

''..ஐயனே.. ஒரு புலியின் பொருட்டுத் தாங்கள் வனத்திற்குள் வர வேண்டுமா!.. பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும்  தாங்கள் -  திருவிழியால் நோக்கினாலும் போதுமே!..  தங்களின் திருவடியைத் தேடிவந்து  காத்துக்கிடக்குமே!..''   - என்று பணிவுடன் கூறியவாறு வனதேவதைகள் எதிர் வந்து வணங்கினர்.

வனதேவதைகளை வாழ்த்திய மணிகண்டன், - 

தர்மம் தழைப்பதற்குத் தான் -  தவம் மேற்கொள்ளும் வேளையில் - தர்மத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை விவரித்து - தர்மத்தை நாம் காப்பாற்றினால் - தர்மம் நம்மைக் காக்கும் என்ற வேத வாக்கினை எடுத்துரைத்தான்.

இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப் பட்டிருப்பதையும், அதைச் செவ்வனே செய்து தர்மத்தைக் காக்க வேண்டிய கடமை இருப்பதையும் நினைவூட்டிய மணிகண்டன் -

தனக்கு விதிக்கப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக செய்து முடித்திட துணை இருக்குமாறு வனதேவதைகளை  கேட்டுக் கொண்டான்.

மணிகண்டனின்  வார்த்தைகளைக் கேட்டு வனதேவதைகள் மனம் மகிழ்ந்தன.

''.. பூமி ப்ரபஞ்சனே!.. போற்றி!.. பூலோக நாதனே!.. போற்றி!..'' 

வனதேவதைகளை அவரவர் நிலைகளில் நிறுத்திய மணிகண்டன் 

பின்னாளில் தான் கடந்து வந்த பாதை - பெருவழிப்பாதை என புகழப்படும் என்றும் அதில் கடும் விரதத்தைனை அனுசரித்து பாதயாத்திரையாய் - லட்ச லட்சமாக பக்தர்கள் வருவர் என்றும் அருளினான். 

அப்போது - ''.. கடும் விரதத்துடனும் ஆசாரஅனுஷ்டானங்களுடனும் ஒருமித்த சிந்தையராக பெருமானைத் தரிசிப்பதற்கு வரும் பக்தர்களுக்கு உற்ற துணையாக இருப்போம்!..  அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் காப்போம்!..'' - என்று வனதேவதைகள் வாக்களித்தன.

வனதேவதைகளை மீண்டும் வாழ்த்திய மணிகண்டன் - தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

வனத்தினில் ஆங்காங்கே தவமிருந்த முனிவர்களும் யோகியரும் கந்தர்வரும் பெருமானைக் கண்டதும் ஆவலுடன் திரண்டு வந்து பணிந்து வணங்கி நின்றனர்.

''.. ஜய விஜயீ பவ!..'' என வாழ்த்தி தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அவர்களுடைய அன்பின் வாழ்த்தொலிகளில் மனம் குளிர்ந்து நின்றான் மணிகண்டன்.


''.. ஐயனே!.. உனது  திவ்யதரிசனம் பெற நாங்கள் என்ன தவம் செய்தோமோ!.. எங்களுக்கும் நல்லருள் பொழிய வேண்டுமென்று - இங்ஙனம் ஒரு நாடகம் நடத்துகின்றாய் போலும்!..  நீ நடத்தும் நாடகத்தின் உட்பொருளை நாங்கள் அறியவும் கூடுமோ!?..''

''..கொடுமைகள் நிறைந்ததாக விளங்கும் இக் கலியுகத்தில் சாது ஜனங்களைக் கரையேற்ற வந்த சத்யஸ்வரூபனே!..   எம்மை ஆட்கொண்டு அருள்வாயாக!..''

''.. ஹரிஹரசுதனே போற்றி!.. அனாத ரட்க்ஷகனே போற்றி!..'' 

- என்று கூப்பிய கரங்களுடன் முனிவர்களும் யோகியரும் நின்றிருந்தனர்.

''.. ஞானிகளும் உத்தமர்களும் ஆன தவசிரேஷ்டர்களே!..  தங்களது தவ வலிமையால் அன்றோ நாடும் மன்னனும் மக்களும் சிறப்படைகின்றனர்.  தங்களை எல்லாம் சந்தித்ததில் நானும் பெருமகிழ்ச்சி எய்துகின்றேன்!..''

- என மொழிந்து பெரியோர்களாகிய அவர்களை அன்புடன் வணங்கினான் மணிகண்டன்.

''..ஆஹா!.. அற்புதம்!.. அற்புதம்!.. வழிவழியாய் வரும் வாத்ஸல்யம் அல்லவா நின் திருவாய் மொழியில் ததும்புவது!.. மேல் என்றும் கீழ் என்றும் புரளும் பேதங்களை நீக்கி மேன்மை அடையும் வழியைக் காட்டுதற்கு வந்திருக்கும் ஸ்ரீதர்மசாஸ்தா எங்களிடம் காட்டும் அன்பினால் பெருமை கொள்கின்றோம்!..''

''.. ஹரிஹரசுதனே!.. திருக்கயிலாய மாமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற  இராவணனுக்கு நாளும் வாளும் கொடுத்தருளிய வள்ளல் சிவபெருமானின் மகனல்லவா நீ!..''

''..அனாதரட்க்ஷகனே!.. திருமகள் அகலாது உறையும் திருமார்பில் உதைத்த பிருகு முனிவரின் கால் நோகுமே என வருந்தி, அவருக்கு உபசாரம் செய்த செல்வத் திருமாலின் செல்வனல்லவா நீ!..''

''.. உன்னிடத்தில் அன்பும் பண்பும் பெருகி வழிவதற்கு - கேட்கவா வேண்டும்!..''

''.. ஆதியில் அவதார நோக்கம் கொண்டு இளைய பெருமாளுடன் கானகம் புகுந்து சபரியின் குடிலில் உலர்கனி உண்டருளிய ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியை உன்னில் காண்கின்றோம்!..''

''.. வைகையின் கரை அடைக்க என்று வந்து - வந்தியின் கரத்தினின்று உதிர்ந்த பிட்டு தனை உண்டு  - மாணிக்கம் விற்ற மதுரையில் மண் கொண்டு நடந்து பிரம்படியும் கொண்ட சோமசுந்தரப் பெருமானை உன்னில் காண்கின்றோம்!..''

''.. இருப்பினும் எங்களுக்கோர் ஆவல் உண்டு!.. அன்பின் செல்வமே!.. அருள் வடிவே!..  அதனைத் தயவு கூர்ந்து நிறைவேற்றித் தரவேண்டும்!..''

முனிவர்களின் வார்த்தைகளைக் கேட்டதும் - மணிகண்டனின் திருவிழிகள் வியப்பால் விரிந்தன.

''.. அன்று நீ நடத்தியருளிய மகிஷி வதத்தினை  - இன்று நாங்கள் தரிசிக்கும் படியான பாக்கியத்தினைத் தந்தருளவேண்டும்!..'' -  பணிவுடன் விண்ணப்பம் செய்து கொண்டனர்.

அதன்படியே - அவர்களுக்கு மகிஷி வதம் உணர்த்தப்பட்டது.


அப்போது அருவமாக வெளிப்பட்ட  லீலா -

''..ஸ்வாமி!.. என்னை அனுக்ரஹித்து அருள வேண்டும்!..'' - என்றாள்.

''.. கலியுகத்தில் - கலியுக வரதனாக , பக்த ஜன பரிபாலகனாக - தர்மத்தைக் காக்க வேண்டி பிரம்மச்சர்ய விரதம் பூண்டு அமருங்காலத்தில் - எனது இட பாகத்தில் மஞ்சமாதா என விளங்கி - எனைத் தேடி வரும் பக்தர்களின் மனோபீஷ்டங்களை மங்கலகரமாக நிறைவேற்றித் தருவாயாக!..'' 

ஐயனின் அருள் வாக்கினைக் கேட்டதும் லீலா சுகந்த மணம் கொண்டு காற்றினில் கரைந்தாள்.

''.. மகிஷி சம்ஹாரனே போற்றி!.. மதகஜ வாகனனே போற்றி!..''

- என்று, துஷ்ட நிக்ரஹம் செய்தருளிய தூயவனைத் தொழுது வணங்கினர் முனிவர்கள்.

அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட மணிகண்டன் - மேலும் தொடர்ந்து நடந்தான்.


ஆங்காங்கே வன விலங்குகள் சர்வ சுதந்திரத்துடன்.

அன்பு மீதூற விளையாடிக் கொண்டும் -


ஆக்ரோஷத்துடன்  ஒன்றோடொன்று அடித்துப் புரண்டு கொண்டும் -
என்ன நடந்தாலும் சரி - தூக்கமே பெரிது என உறங்கிக் கொண்டும் -

உள் உணர்வினால் உணர்ந்து கொண்ட விலங்குகள்  ஓடிவந்து - இயற்கையின் அழகினை ரசித்தவாறு நடந்த மணிகண்டனை உரசியவாறு தங்கள் அன்பினை வெளிப்படுத்தி அவனுடன் நடந்தன.

அப்படி நடந்த விலங்குகள் தங்களின் வினைப்பயனையும் கடந்தன.

வழியில்  -  சலசலக்கும் சிற்றோடையுடன் சற்றே சமவெளியாக இருந்த இடத்தில் - அன்னை பகவதி காட்சியளித்தாள்.

மணிகண்டன் -  பகவதியை வழிபட்டு, பந்தளத்தில் தன் அன்னைக்கு நலம் விளைய வேண்டிக் கொண்டான்.  அன்பு மகனை வாழ்த்திய அன்னை அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கூறினாள்.

புலியைத் தேடி வந்த புண்ணியன் - மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கிய போது - எதிரே பிரம்மாண்டமாக விளங்கிய மலையைக் கண்டான். அதன் உச்சியில் மீண்டும் ஒளி வடிவாக அன்னை பகவதி தோன்றினாள்.


அன்னையின் நல்லாசியினால் - கடினமான மலை  ஏற்றம் இலகுவானது. தோளில் கோதண்டமும் கரத்தினில் சிவதண்டமும் கொண்டு நடந்த மணிகண்டனைச் சுற்றிலும் யானைக் கன்றுகள் தோழமையுடன் பிளிறி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

சற்றே - இறக்கத்தில், கங்கைக்கு நிகரான பம்பா நதி. அதனுடன் கல்லாறு , காட்டாறு  ஆகியன கலக்கும் - திரிவேணி சங்கமம்.


கூட்டங்கூட்டமாக யானைகள் - நதியில் அளைந்து கொண்டிருந்தன.

பாப விநாசினி ஆகிய பம்பா நதியைக் கண்டதும் கைகூப்பி வணங்கிய ஐயன் - மந்த்ரங்களை உச்சரித்தவாறு பம்பா நதியில் நீராடி - சூரியனை நமஸ்கரித்து தீர்த்தம் கொடுத்தான்.

தனது தேரிலிருந்து இறங்கிய சூரியன்  - சிவகுமரனைப் பணிந்து வணங்கி, தீர்த்தத்தினைப் பெற்றுக் கொண்டான்.

''.. ஐயனே.. யான் செய்ய வேண்டுவது யாது?..''

''.. சூர்யதேவனே!.. பின் வரும் நாட்களில் கடும் விரதம் ஏற்று ஆயிரம் ஆயிரமாக லட்சம் லட்சமாக  பக்தர்கள் இங்கு வர இருக்கின்றனர்.   புண்ய நதியாகிய பம்பையில் நீராடும் - அவர்களுடைய தோஷங்களை - குறிப்பாக பித்ரு தோஷத்தை நீக்கி அருள்வாயாக!..''

''..உத்தரவு!..''

பம்பையில் நீராடி முடித்த மணிகண்டன் நித்ய பூஜைக்கென அமர்ந்தான்.

ஓம்!.. 
"ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் 
பர்கோ தேவஸ்ய தீமஹி. தியோ: யோந: ப்ரசோதயாத்"
ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

ஞாயிறு, ஜனவரி 26, 2014

வாழ்க பாரதம்

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!.. 
 

பெற்றதாயும் பிறந்த பொன் நாடும் 
நற்றவ வானினும் நனி சிறந்தனவே!.. 

 
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந் நாடே  - அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
முடிந்ததும் இந் நாடே  - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
சிறந்ததும் இந் நாடே  -இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை 
வந்தேமாதரம் வந்தேமாதரம்
என்று வணங்கேனோ!..  
  

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா 
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா 
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா!..

 

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா!.. 

 
இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயிறொப்பவே வா வா வா!..


களையிழந்த நாட்டிலே முன்போலே
களி சிறக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போலே
விழியினால் விளக்குவாய் வா வா வா!.. 


வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்முகத்தினாய் வா வா வா!..
 

கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம் 
ஒருபெ ருஞ்செயல் செய்குவாய் வா வா வா!..
- மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்.


வந்தேமாதரம்!.. வந்தேமாதரம்!..
வந்தேமாதரம்!..

வியாழன், ஜனவரி 23, 2014

உவரியில் தேரோட்டம்

புகழ் பெற்ற ஸ்ரீஉவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்  தேரோட்டம் ஜனவரி பதினேழாம் தேதி கோலாகலமாக நடந்தது. 

கடற்கரையில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சிவ தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள  கிராமம் உவரி.

இங்குதான் புகழ் பெற்ற சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.


சிவபெருமான் சுயம்புலிங்கமாகத் தோன்றியருளிய திருத்தலம் - உவரி. 

தென் தமிழகத்திலுள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இத்திருக் கோயில் விளங்கி வருகின்றது.


மேலும் - மார்கழி மாதத்தின் எல்லா நாட்களிலும் காலையில் சூரியனின் இளங்கதிர்கள்  கருவறையில் படரும் பெருஞ்சிறப்பினை உடையது  - உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில்.

இத்திருக்கோயிலில் - ஆண்டுதோறும் சிறப்புடன் நிகழும் தைத்திருவிழா கடந்த - ஜனவரி ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை அன்று காலை ஆறு மணி அளவில் அதிர்வேட்டுகள் முழங்க துவஜாரோகணம் நிகழ்ந்தது.


முன்னதாக அதிகாலை மூன்று மணியளவில் திருநடை திறக்கப்பட்டது. நித்ய வழிபாடுகளுக்குப் பின் மங்கல வாத்யங்களுடன் - யானை மீது  கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது.

யதாஸ்தானத்திலிருந்து ஸ்வாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகையுடன் அலங்கார மண்டபம் எழுந்தருளினார். பதினோரு வகையான அபிஷேக ஆராதனைகளுடன் உதய மார்த்தாண்ட பூஜை செய்விக்கப்பட்டது.


தொடர்ந்து விநாயகர் திருவீதி உலா, உச்சி காலபூஜை, சிறப்பு அபிஷேகம்.  மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் சுவாமி இந்திர விமானத்தில் ரதவீதிகளில் எழுந்தருளினார்.

தைத்திருவிழா ஜனவரி ஒன்பது முதல் ஜனவரி பதினெட்டாம் தேதி வரை வெகு சிறப்பாக நடந்தது.

திருவிழா நாட்களில் தினமும் காலை 8.30 மணிக்கு விநாயகர் வீதி உலா.

ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு மேல் சுவாமி சந்திரசேகரர்  மனோன்மணி அம்பிகை சமேதராக -

வெட்டி வேர் சப்பரம் மற்றும் கஜ வாகனம், அன்ன வாகனம், இந்திர விமானம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், கைலாய பர்வதம் - என, பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா எழுந்தருளினர்.

ஒன்பதாம் திருநாள் - பதினேழாம் தேதி வெள்ளிக் கிழமை காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை. உதய மார்த்தாண்ட பூஜை.

திருக்கோயிலில் இருந்து சுவாமி - அம்பிகையுடன் மேளதாளம் முழங்க  தேருக்கு புறப்பாடு செய்தனர்.

திருத்தேரில் ஸ்வாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

காலை 7.50 மணியளவில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டவுடன் - 7.55 மணி அளவில் பக்த கோஷங்கள் முழங்க பெரிய திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

அப்போது வானில் கருடன்கள் வட்டமிட்டதைக் கண்டு பக்கர்கள் ஆனந்த முழக்கமிட்டனர்.

ஹரஹர கோஷங்களுடன்  திருத்தேர் இழுக்கப்பட்டது.

ரத வீதிகளில் வலம் வந்த தேரை பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

உவரி சுயம்புலிங்க சுவாமி  திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ளது.

வங்கக்கடல் ஒரு புறமும்  பக்தர்கள் வெள்ளம் ஒருபுறமுமாக திருத்தேர் அசைந்து வந்த காட்சி, கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. 

நன்றி - தினத்தந்தி
கடற்கரையில் தேரோடும் அழகை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து குவிந்தனர்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.

வழக்கம் போல தைப்பூச விழாவையொட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், பெட்டியில் கடலில் இருந்து மண் எடுத்து சுமந்து வந்து கரையில் கொட்டி, தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினார்கள்.

குலதெய்வமாக வழிபடும் அன்பர்களுடன் - நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த திரளான பக்தர்களும்   கலந்து கொண்டனர்.
 
திருத்தேர் நிலைக்கு வந்ததும் தீர்த்த வாரி. உற்சவர் சிறப்பு அபிஷேகம், உச்சி கால பூஜை, ராக்கால பூஜை, இரவு ஒரு மணிக்கு ஸ்வாமி – அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருளினர். 

ஸ்ரீ விநாயகர் திருக்கோயில்
பத்தாம் திருநாள்  - ஜனவரி 18  - காலை விநாயகர் வீதி உலாவும் ,  திருவிளக்கு பூஜையும் - தெப்ப உற்சவமும்.

சுவாமி, அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளி உற்சவமும் வெகு சிறப்பாக நடந்தது. 

பதினோராம் திருநாள்  பஞ்சமூர்த்திகள் வீதி உலா. உற்சவ சாந்தி, சுவாமி அம்பிகை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா இனிதே நிறைவேறியது.

விழா நாட்களில் - தேவார திருவாசக பாராயணங்களும், அன்னதானமும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும், சமய சொற்பொழிவுகளும்  நிகழ்ந்தன.

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா திருக்கோயில்
பக்தர்களின் வசதிக்காக - நெல்லை, திருச்செந்தூர்,  நாகர்கோவில், திசையன் விளை - நகர்களிலிருந்து உவரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

திருவிழாவின் ஏற்பாடுகளை - திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் திரு. ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன், செயலாளர் திரு.தர்மலிங்க உடையார், ராஜகோபுர திருப்பணி குழுவின் தலைவர் திரு.முருகேசன், செயலாளர் திரு.வெள்ளையா நாடார், திரு.பொருளாளர் செண்பகவேல் நாடார் மற்றும் முக்கியஸ்தர்கள் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் முன்னின்று சிறப்புற செய்திருந்தனர்.  

என் அன்பு மகளின் திருமணத்திற்கான முதல் அழைப்பாக - குலதெய்வத்தின் திருக்கோயிலில் முறைப்படி அழைப்பிதழ் வைத்திருக்கின்றனர். அத்துடன்,

திருவிழா நிகழ்வுகளும் ஆனந்த தரிசனம்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

சனி, ஜனவரி 18, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 12

வானகமும் வையகமும் அதிர்ந்து நின்றன. 

கால தேவனின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. 


இந்தக் கலியுகத்தில்  தர்மத்தைப்  பரிபாலிக்க வந்த - காருண்ய மூர்த்தி - கண் கண்ட தெய்வம் - கலியுக வரதன்  -  பக்த ப்ரியன் - ஸாது ஜனரட்க்ஷகன் - சர்வ லோக நாயகன் -

பாவப்பட்ட மக்களைக் காப்பதற்கென்று எப்படியெல்லாம் துன்பப்பட வேண்டியிருக்கின்றது!..

''..இது சரியா?.. இது தர்மமா?..''

மகரிஷிகள் செய்வதறியாது திகைத்து கண் கலங்கி நின்றனர். 

கொந்தளித்துக் குமுறி எழுந்த பேரலைகளால் - பாற்கடலில் ஆதிசேஷன் நிலை தடுமாறித் தவித்தான். வைகுந்த வாசனின் துயில் கலைந்தாற் போலிருந்தது.

அட்டதிக்குப் பாலகர்களும் நவக்ரஹ நாயகர்களும் அரற்றியவாறு - திருக் கயிலாயத்தினுள் நுழைந்தபோது  - அங்கே அவர்களுக்கு முன் நான்முகனும் வாணியும் மனம் பேதலித்து நின்றிருந்தனர். 

தளிர்க் கரங்களால் - தன்னைக் கட்டிக் கொண்ட கந்தனையும் கரிமுகனையும் அரவணைத்தவாறு - அன்னை பராசக்தி உலகமுழுதுடைய நாயகி - 

''.. இனி என்ன செய்வதாக உத்தேசம்!..'' - என்று விழியால் வினவ,

சிவமோ ஏதும் அறியாததைப் போல் புன்னகை பூத்தது.

நந்தியம்பெருமான் விநயத்துடன் - ஐயன் திருமுகத்தினை நோக்கினார்.

''.. கலங்க வேண்டாம். கலியுக வரதனை - யாம் காத்தருள்வோம்!..''

ஐயன் -  மஹாவைத்யநாதனாக எழுந்தார்.


அந்த அளவில் -  ஜகன் மோகினியாக திருக்கோலங்கொண்ட அம்பிகை - திருக்கரத்தினில் ம்ருத்யு சஞ்ஜீவினி மூலிகைத் தைலம் நிறைந்த கலசத்தைத் தாங்கியவாறு ஐயனைத் தொடர்ந்தாள். 

அங்கே கூடியிருந்தோர் முகங்களில் வாட்டம் நீங்கி  - அடுத்து என்ன நிகழும் என ஆவல் படர்ந்தது.

ஊர் உறங்கிக் கிடந்த வேளையில்  ஒளி வடிவாக வந்த உலகாளும் நாயகனும் நாயகியும் - பந்தள மன்னன்  செய்த புண்ணியத்தினால்  -  அரண்மனையினுள் திருப்பாதம் பதித்து நடக்கலாயினர்.  

மணிகண்ட ப்ரபுவின் சயன அறை. மணிக் கதவங்கள் தாமாகவே வழி விட்டு நின்றன. 

ஐயனையும் அம்பிகையையும் கண்ட மாத்திரத்தில் - படபடத்துக் கொண்டிருந்த தூண்டாமணி விளக்கின் சுடர்  - நிம்மதியாக நின்று விளங்கியது.

அம்பிகை - தன் அன்பு மகனை நோக்கினாள். 

ஆலகால விஷத்தை உண்டதால் -   கண்டம் நீல நிறமாகப் பொலிந்து விளங்க   மணிகண்டன் எனவும் நீலகண்டன் எனவும் போற்றப்படும்  -

சிவபெருமானின் திருக்குமரன்   - திட்டி விடத்தின் நஞ்சினால் - நீலத் தாமரை போலக் கிடந்தான். 

( சிவபெருமானை - மணிகண்டன் என திருஞான சம்பந்தப்பெருமானும் (2/46/8) அப்பர் பெருமானும் (6/8/10) சுந்தரமூர்த்தி சுவாமிகளும் (7/16/8) மாணிக்க வாசகப் பெருமானும் (8/10/9)  போற்றிப் புகழ்கின்றனர்.) 

திருமேனி  - தீப்பிழம்பினால் சுட்டதைப் போல ரணமாகி இருந்தது. 

அந்த வேதனையிலும் தெய்வத் திருமகனின் செவ்விதழ்கள் சிவ பஞ்சாட்க்ஷர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தன. 

தாய்மை பரிதவித்தது.  ''.. இப்படியும் ஆகலாமோ என் பிள்ளைக்கு !?..'' - என கருந்தடங்கண்ணியின் கண்கள் கசிந்தன.

பிள்ளைப் பாசத்தினால் மருகிய மருவார் குழலியைப் பரமன் தேற்றினார். 

அம்பிகை மயிலிறகினால் மூலிகைச் சாற்றினைத் தொட்டு மணிகண்டனின் திருமேனி முழுதும் பூசினாள். 

கடும் விஷத்தினால் பொங்கிப் பூரித்து குருதி கசிந்திருந்த காயங்கள் - கதிர் கண்ட பனியைப் போல - உலர்ந்தன. உதிர்ந்தன.

விஷம் வீரியமற்று - மீண்டும் வியர்வைத் துளிகளாய் வழிந்தது. அப்படி வழிந்த விஷம் ஒரு துளியாய் உருக் கொண்டு ஒதுங்கிக் கிடந்தது. 

அதை எம்பெருமான் - திரு விழியினால் நோக்கினார்.

அந்த விஷத்துளி  - காற்றில் ஏறிப் பறந்து - பணத்துக்காகப்  பாதகம் புரிந்த பாம்புப் பிடாரனின் உச்சந்தலையில்  விழுந்தது.  

தடம் மாறிச் சென்றவனின் தடயம் அத்தோடு அழிந்தது.

விஷ முறிவு ஆனதும் - மெல்ல விழி மலர்ந்தான் மணிகண்டன். 

எதிரே - தாய் தந்தையரைக் கண்டதும் சந்தோஷத்துடன் துள்ளி எழுந்து வலஞ்செய்து வணங்கினான். 

ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டாள் அம்பிகை. 

நடந்ததும் இனி நடக்க இருப்பதும் மணிகண்டனுக்கு உணர்த்தப்பட்டது. 

மணிகண்டனின் திருமேனியை - திருநீற்றால் திருக்காப்பு செய்தார் பெருமான். 

''..மணிகண்டா.. இனி உன்னால் மக்களுக்கு மங்களம் உண்டாகும்.  உன் மேனியைத் தீண்டும் காற்று கூட சர்வரோக நிவாரணியாகும்!..'' 

- என வரம் அருளினார்.

(இந்த வரத்தினால் தான் ஸ்ரீ ஐயப்பனின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட -  நெய் மருந்து என ஆகி தீராத வினைகளைத் தீர்ப்பது!)

''..தங்கள் சித்தம் தந்தையே!..'' - தயாபரனையும் தயாபரியையும் தலை தாழ்ந்து வணங்கினான் மணிகண்டன்.

பொழுது விடிந்தது. அத்துடன்  மந்திரி எழுப்பியிருந்த மனக்கோட்டையும் இடிந்தது. 

உப்பரிகையில் மனிகண்டனைக் கண்ட மாத்திரத்தில் - சப்த நாடியும் ஒடுங்கியது. ஓடினான் - பாம்புப் பிடாரனைத் தேடி - தன்னை ஏமாற்றி விட்டான் என்று நினைத்தவனாக!.. 

ஆனால்  - அன்று மாந்த்ரீகனுக்கு நேர்ந்தது போல - பிடாரனுக்கும் நிகழ்ந்தது கண்டு - திரும்பி வந்தான் - அச்சத்தினால் வியர்த்து மேனியெல்லாம் நனைந்தவனாக!..

''..ஒன்றும் புரியவில்லையே. மாந்த்ரீகன் சொல்லிவிட்டுப் போனான். இவனோ சொல்லாமலேயே போய் விட்டான்!.. ஒருவேளை அப்படியும் இருக்குமோ!..''  - தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

''.. வேண்டாம் இத்தோடு விட்டு விடு!..'' -  என்று ஒருபுறம் தடுத்த மனம் -

''..முன் வைத்த காலை பின் வைக்காதே!..'' - என்று மறுபுறம் கெடுத்தது.

யுவராஜன் எனப் பட்டம் சூட்டப்படுவதற்கு இன்னும் சில தினங்களே என்று - நாட்கள் நகர்ந்தன.

அதற்குள் - அரசியின் பிரத்யேக  அழைப்பு . 

வஞ்சகத்தில் வார்த்தெடுத்த வார்த்தைகளால் - நடந்தவற்றை விவரித்து விட்டு -  ''.. தங்கள் மகனை அரியணையில் அமர்த்தாமல் ஓய மாட்டேன்!.. எனினும் தங்களது ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது!..'' -  என்று முடித்தான்.

''.. என்ன செய்ய வேண்டும்!..''  - எனக்கேட்ட அரசியாரிடம்  தனது திட்டத்தினை விவரித்தான்.

''..இது சரியாய் வருமா!..''

''.. நிச்சயம் சரியாய் வரும்!.. இதுதான் வழி!..''

நந்தவனத்தில் பிள்ளைகளுடன் உலவிக் கொண்டிருந்த மன்னருக்கு அவசர செய்தி ஒன்று வந்தது.  அரசியார் திடீரென உடல் நலிவுற்றார் என!..

அந்தப்புரத்தில் -  குளிகைகளும் சூரணங்களும் தைலங்களும் என - ஏதேதோ மருந்துகள் பரவிக் கிடந்தன. ராஜ வைத்தியன் மூலிகைகளுக்குப் பதிலாக தன் கைகளை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தான்.


''..அரசே.. என்னால் இயன்ற அனைத்தையும் செய்து விட்டேன். அரசியாருடைய தலைவலிக்கு சரியான மருந்தினை என்னால் தர இயல வில்லை. ஆயினும் பழைமையான சுவடிகளை ஆராய்ந்ததில்  - ஒரு அற்புத மருந்து தென்படுகின்றது. ஆனால் -  ''

''.. என்ன.. ஆனால் - சொல்லுங்கள் சீக்கிரம்!..'' - மன்னர் அதிர்ந்தார்.

''.. அந்த சூரணத்தைக் குழைப்பதற்கு - புலிப்பால் தேவைப்படுகின்றது!..''

''.. அடே..  உனக்குப் பைத்தியமா!..''  - வேகமாகச் சீறிப் பாய்ந்தான் மந்திரி.

''..அமைச்சர்.. ஆத்திரப்படக்கூடாது. தலைவலியின் வீர்யம் அப்படி. இதற்கான சூரணத்தை தேனிலோ பாலிலோ குழைத்துக் கொடுக்க இயலாது. இதை நான் சொல்லவில்லை. காலங்காலமாக முன்னோர்கள் வகுத்து வைத்த வைத்ய சாஸ்திரம்  சொல்லுகின்றது!..''- ராஜ வைத்தியன் சாதுர்யமாகப் பேசினான்.

''..எனில் - உடனே நமது வீரர்கள் புறப்படுக.. வனத்தில் சென்று வேட்டையாடி எல்லாப் புலிகளையும் கொண்டு வருக!..''  - மந்திரி பரபரத்தான். 

''..மந்திரியார் மறுபடியும் மன்னிக்கவும். பயமுறுத்திப் பிடிக்கப்படும் புலியின் பால் பிரயோஜனப்படாது!.. ''

''.. பிறகு!.. ''

''.. புலியை வசப்படுத்திக் கொண்டு வரவேண்டும்!. அதுவாகப் பாலைப் பொழிந்து தர வேண்டும்!..''


''.. என்ன.. புலி - அதுவாகப் பாலைப் பொழிந்து தர வேண்டுமா!.. நடக்கின்ற விஷயமா இது!.. பந்தள நாட்டிற்கு இப்படியும் ஒரு சோதனையா!..''

''.. பந்தள நாட்டிற்கு சோதனை தான். விவேகம் இருந்தால் -  உங்களுக்கே வெற்றி!..'' - மந்திரியை வாழ்த்தினான் வைத்தியன்.

அரசியாரின் தலைவலி நீங்குதற்கு  - புலிப்பால் கொணர்பவர்களுக்கு தக்க சன்மானம் என நாடெங்கும் அறிவித்தும் - விரும்பி வந்தார் யாருமில்லை.

மன்னர் தவித்தார். அரசி தலைவலியினால் அரற்றுவதைத்  தாங்கிக் கொள்ள இயலவில்லை.

''.. சரி.. நானே புறப்படுகின்றேன்!..'' - மன்னர் எழுந்தார். 

''..தந்தையே!.. புலிப்பால் கொண்டு வரும் பணியை எனக்கு அருளுங்கள்!..''

மணிகண்டன்  - தந்தையின் முன் நின்றான். 

'' .. என்ன!..''  - மன்னர் அதிர்ந்தார்.  


''.. இளவரசே!.. வனத்தினுள் சென்று புலியைக் கொண்டு வருவது பூப்பறிக்கும் வேலை அல்ல!..'' - மந்திரி திறமையுடன் காய் நகர்த்தினான்.

''.. தந்தையே!.. தங்களின் நல்லாசியும் எம்பெருமானின் கருணையும் என்னுடன் வரும் போது - வெற்றி நிச்சயம். அனுமதிக்க வேண்டுகின்றேன்!..''

''..மணிகண்டா!. அன்புச்செல்வமே!. உன்னை நான் குறைத்து மதிப்பிடுவேனா!. ஆயினும் கொடிய மிருகங்கள் வாழும் காட்டினுள் - ''


''..தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!.. இது வேத வாக்கு அல்லவா!.. அப்படி இருக்க, தாங்கள் என்னை வாழ்த்தி வழியனுப்பினால் ஆகாததும் உண்டோ?..''

ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிய மணிகண்டனை அணைத்துக் கொண்டார் - மன்னர். 

அரசியின் நெஞ்சமும் ஒரு கணம் அதிர்ந்தது. '' எல்லாம் வெறும்  நாடகம்!.. நகைச்சுவை!..'' -  என்று எழுந்து விடலாமா - என நினைத்தாள். 

''..ஆனால்,  மணிகண்டன்  என்னையும் என் மகனையும் - காட்டுக்குத் துரத்தி விட்டால்?. ஐயகோ!.. ''

மீண்டும் அழுதாள். அரற்றினாள். துடித்தாள். துவண்டாள்.

''..தந்தையே!..தாய் படும் வேதனையை என்னால் தாள முடியவில்லை!..'''

''..சரி.. மகனே!.. பொழுது விடியட்டும். விடியும் பொழுது எல்லாருக்கும் நல்ல பொழுதாக விடியட்டும்!..''

''..போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே!.''  - என்று ஆதவனும் கிழக்கினில் ஆர்வமுடன் எழுந்தான். 


கற்பூர ஆரத்தியுடன் சிவ பூஜையை நிறைவு செய்த மன்னர் - தீர்த்தமும் திருநீறும் கொடுத்தார்.

தம் முன்னோர்களால் வழங்கப்பட்ட சிவதண்டத்தினை மணிகண்டனின் திருக்கரத்தினில் கொடுத்தார். 

தந்தையைப் பணிந்து வணங்கி சிவதண்டத்தினைப் பெற்றுக் கொண்ட மணிகண்டன்  தனது கோதண்டத்தினையும் மந்த்ராஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டான்.. 

அத்துடன்  நித்ய சிவபூஜை கடமைக்கென  - அவல் பொரி சர்க்கரை - இவைகளையும், இவற்றுடன் மணிகண்டனின் தேவைக்கென உலர்ந்த திராட்சை கற்கண்டு முந்திரி ஆகியனவற்றையும் இருமுடியாகக் கட்டி அன்பு மகனிடம் வழங்கினார். 

தந்தை கொடுத்ததைத் தனயன் வாஞ்சையுடன் தன் தலைமேல் தாங்கிக் கொண்டான்.

திருமுடி திகழ வேண்டிய சிரத்தினில் இருமுடி இருந்தது.

தலையினில் இருமுடிக் கட்டுடனும் ஒரு கரத்தினில் சிவதண்டத்துடனும் மறுகரத்தினில் கோதண்டத்துடனும் திவ்ய தேஜோமயமாக தன்முன் நின்றிருந்த மகனைக் கண்டு  - ஒரு கணம் மயங்கினார் - பந்தள ராஜன்.

''..சர்வேஸ்வரா.. உற்ற துணையாக இருந்து என் மகனைக் காத்தருள்வாயாக!.''

தந்தையைக் கனிவுடன் நோக்கினான் மணிகண்டன்.

வெண்மேகத் திரளில் இருந்து வெளிப்பட்ட - வெங்கதிர்ச் செல்வன் - தன் கதிர்களை விரித்தான்!..

விடிந்தும் விடியாத மனத்தினனான  - மந்திரி,   மறைவில் இருந்தபடி தான் - வெற்றி பெற்றதாக எண்ணிச் சிரித்தான்!..


ஆனால்,   அன்பின் வடிவமாகிய மணிகண்டன் -
தாயின் தலைவலிக்கு   -  புலிப் பால் தேடி -  
ஆனைகளும் புலிகளும் கரடிகளும் அலைந்து 
திரியும் கொடும் கானகத்தை நோக்கி - 

பூம்பாதங்கள் சிவக்க நடந்தான்.

ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

வெள்ளி, ஜனவரி 17, 2014

அருட் பெருஞ்ஜோதி

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.  

ஆறுபடை வீடுகள் அன்றி மற்றுமுள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச நாளில் முருகனை தரிசிப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டுள்ள பக்தர் அநேகர். 


ஆயிரக்கணக்கான அடியார்கள் விரதம் ஏற்று - பழனிக்கு பாதயாத்திரை சென்று   தைப்பூச நாளில் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

தைப்பூசத்தன்று  -  காவடியுடன்  முருகனைத் தரிசிப்பதே பிறவிப் பயன் எனக் கருதும்  பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் - உலகம் முழுதும்!..

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயிலிலும் மலேஷியாவில்  - தண்ணீர்மலை, பத்துமலை எனும் திருத்தலங்களில் உள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச விழா வெகுசிறப்பாக நிகழும். சீனர்கள் கூட முருகனை வேண்டி நேர்த்திக் கடன் செலுத்துவதைக் காணலாம். 


பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்பு காவடி என பல்வேறு வகையான காவடிகளைச் சுமந்து வந்து முருகப் பெருமானை  தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பத்து  நாட்கள் நடைபெறும் தைப்பூச  விழாவில் - கடந்த நாட்களில் ஸ்ரீமுத்துக்குமாரசாமி காலையிலும் மாலையிலும் தந்த பல்லக்கு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்கக் குதிரை - என பல்வேறு  வாகனங்களில்  திருவீதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


வியாழன்று முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 8.30 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஜனவரி17) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் நடைபெறுகிறது. 

இதில்  கலந்து கொண்டு முருகப்பெருமானைத் தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் பழனியம்பதியில் குழுமியுள்ளனர். 


திருத்தேரில் பவனி வருகின்றான் திருமுருகன். - வடிவேல் முருகன்!.. 

கந்தனைக் கண்ணாரக் கண்டு கை தொழும் வேளையில் - 

அவனிடம் ஏதாவது கேட்கலாம்!.. 
அவன் கொடுப்பான்!.. 
அவனிடம் கேட்டுப் பெறலாம்!.. 

வாட்டம் தீர்க என்று  - வாரி வாரி வளங்களைக் கொடுப்பதற்கென்றே,
வள்ளி தேவயானையுடன் வருகின்றான்  - வள்ளல் பெற்ற திருக்குமரன்!..

ஏந்திய கரங்களில் இட்டு மகிழ்பவன் - மலை நின்ற மால் மருகன்!.. 

எனில் - என்ன கேட்பது!.. 

இதோ ஒரு ஞான விண்ணப்பம்!..

1823 அக்டோபர் ஐந்தாம் நாள்  - சிதம்பரம் நகருக்கு அருகிலுள்ள மருதூர் கிராமத்தில் - ராமையா சின்னம்மாள் தம்பதியினருக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவரும் ,

வளரும் பருவத்திலேயே - இறை நாட்டம் விளைந்து, தொடர்ந்த பக்தியினால் வடிவேலவனை - நிலைக் கண்ணாடியில் தரிசனம் கண்டவரும்,


வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்  - என்று ஞானப்பயிர் வளர்த்தவரும்,

''..பிற உயிர்களிடம் அன்பு செலுத்தி, அவற்றின் பசி தீர்ப்பதே - புண்ணியம். பசிப்பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு  ஈடானது என்று எந்தப் புண்ணியத்தைச் சொல்லமுடியும்?..  ஜீவ காருண்யமே - மோட்சத்தினை அளிக்க வல்லது!..''  - என்று உபதேசித்தவரும் - ஆன,

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் - நம் பொருட்டு அருளிய திருப்பாடல்!..

முருகப் பெருமானிடம் கேட்டுப் பெறுவதற்கு - 
இவைகளை விடவும்  வேறு உளவோ!..

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர் தம் உறவு வேண்டும் 
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் 
உறவு கலவாமை வேண்டும் 

பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும் 
பொய்மை பேசாதிருக்க வேண்டும் 
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 

மருவு பெண்ணாசை மறக்க வேண்டும் 
உனை மறவாதிருக்க வேண்டும் 
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் 
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் 

தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் 
தலமோங்கு கந்தவேளே 
தண்முகத்துய்ய மணி உண்முகச் சைவ மணி 
சண்முகத் தெய்வமணியே!..

வள்ளலார் சுவாமிகள் - தாம் எழுப்பிய - மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையில், 1874ல்  ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு  சித்தியடைந்து ஒளி வடிவாகினார்.


வள்ளலார் சித்தியடைந்த நாள் - 
புனர்பூசமும் பூசமும் கூடிய - தைப்பூசம்.

அருட்பெரும் ஜோதி!.. அருட்பெரும் ஜோதி!..
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி!..