நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


செவ்வாய், ஜனவரி 28, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 13

காலத்தை உருவாக்கும் காரணன் - பரிபூரணன் - தான் உருவாக்கிய -

காலத்தின் கைகளுக்குள் - தன்னையும் ஒப்படைத்தபடி  - கானகத்தினுள் நுழைந்த போது -


விண்ணும் மண்ணும் கை கூப்பி வணங்கி நின்றன.

''..ஐயனே.. ஒரு புலியின் பொருட்டுத் தாங்கள் வனத்திற்குள் வர வேண்டுமா!.. பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும்  தாங்கள் -  திருவிழியால் நோக்கினாலும் போதுமே!..  தங்களின் திருவடியைத் தேடிவந்து  காத்துக்கிடக்குமே!..''   - என்று பணிவுடன் கூறியவாறு வனதேவதைகள் எதிர் வந்து வணங்கினர்.

வனதேவதைகளை வாழ்த்திய மணிகண்டன், - 

தர்மம் தழைப்பதற்குத் தான் -  தவம் மேற்கொள்ளும் வேளையில் - தர்மத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை விவரித்து - தர்மத்தை நாம் காப்பாற்றினால் - தர்மம் நம்மைக் காக்கும் என்ற வேத வாக்கினை எடுத்துரைத்தான்.

இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப் பட்டிருப்பதையும், அதைச் செவ்வனே செய்து தர்மத்தைக் காக்க வேண்டிய கடமை இருப்பதையும் நினைவூட்டிய மணிகண்டன் -

தனக்கு விதிக்கப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக செய்து முடித்திட துணை இருக்குமாறு வனதேவதைகளை  கேட்டுக் கொண்டான்.

மணிகண்டனின்  வார்த்தைகளைக் கேட்டு வனதேவதைகள் மனம் மகிழ்ந்தன.

''.. பூமி ப்ரபஞ்சனே!.. போற்றி!.. பூலோக நாதனே!.. போற்றி!..'' 

வனதேவதைகளை அவரவர் நிலைகளில் நிறுத்திய மணிகண்டன் 

பின்னாளில் தான் கடந்து வந்த பாதை - பெருவழிப்பாதை என புகழப்படும் என்றும் அதில் கடும் விரதத்தைனை அனுசரித்து பாதயாத்திரையாய் - லட்ச லட்சமாக பக்தர்கள் வருவர் என்றும் அருளினான். 

அப்போது - ''.. கடும் விரதத்துடனும் ஆசாரஅனுஷ்டானங்களுடனும் ஒருமித்த சிந்தையராக பெருமானைத் தரிசிப்பதற்கு வரும் பக்தர்களுக்கு உற்ற துணையாக இருப்போம்!..  அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் காப்போம்!..'' - என்று வனதேவதைகள் வாக்களித்தன.

வனதேவதைகளை மீண்டும் வாழ்த்திய மணிகண்டன் - தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

வனத்தினில் ஆங்காங்கே தவமிருந்த முனிவர்களும் யோகியரும் கந்தர்வரும் பெருமானைக் கண்டதும் ஆவலுடன் திரண்டு வந்து பணிந்து வணங்கி நின்றனர்.

''.. ஜய விஜயீ பவ!..'' என வாழ்த்தி தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அவர்களுடைய அன்பின் வாழ்த்தொலிகளில் மனம் குளிர்ந்து நின்றான் மணிகண்டன்.


''.. ஐயனே!.. உனது  திவ்யதரிசனம் பெற நாங்கள் என்ன தவம் செய்தோமோ!.. எங்களுக்கும் நல்லருள் பொழிய வேண்டுமென்று - இங்ஙனம் ஒரு நாடகம் நடத்துகின்றாய் போலும்!..  நீ நடத்தும் நாடகத்தின் உட்பொருளை நாங்கள் அறியவும் கூடுமோ!?..''

''..கொடுமைகள் நிறைந்ததாக விளங்கும் இக் கலியுகத்தில் சாது ஜனங்களைக் கரையேற்ற வந்த சத்யஸ்வரூபனே!..   எம்மை ஆட்கொண்டு அருள்வாயாக!..''

''.. ஹரிஹரசுதனே போற்றி!.. அனாத ரட்க்ஷகனே போற்றி!..'' 

- என்று கூப்பிய கரங்களுடன் முனிவர்களும் யோகியரும் நின்றிருந்தனர்.

''.. ஞானிகளும் உத்தமர்களும் ஆன தவசிரேஷ்டர்களே!..  தங்களது தவ வலிமையால் அன்றோ நாடும் மன்னனும் மக்களும் சிறப்படைகின்றனர்.  தங்களை எல்லாம் சந்தித்ததில் நானும் பெருமகிழ்ச்சி எய்துகின்றேன்!..''

- என மொழிந்து பெரியோர்களாகிய அவர்களை அன்புடன் வணங்கினான் மணிகண்டன்.

''..ஆஹா!.. அற்புதம்!.. அற்புதம்!.. வழிவழியாய் வரும் வாத்ஸல்யம் அல்லவா நின் திருவாய் மொழியில் ததும்புவது!.. மேல் என்றும் கீழ் என்றும் புரளும் பேதங்களை நீக்கி மேன்மை அடையும் வழியைக் காட்டுதற்கு வந்திருக்கும் ஸ்ரீதர்மசாஸ்தா எங்களிடம் காட்டும் அன்பினால் பெருமை கொள்கின்றோம்!..''

''.. ஹரிஹரசுதனே!.. திருக்கயிலாய மாமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற  இராவணனுக்கு நாளும் வாளும் கொடுத்தருளிய வள்ளல் சிவபெருமானின் மகனல்லவா நீ!..''

''..அனாதரட்க்ஷகனே!.. திருமகள் அகலாது உறையும் திருமார்பில் உதைத்த பிருகு முனிவரின் கால் நோகுமே என வருந்தி, அவருக்கு உபசாரம் செய்த செல்வத் திருமாலின் செல்வனல்லவா நீ!..''

''.. உன்னிடத்தில் அன்பும் பண்பும் பெருகி வழிவதற்கு - கேட்கவா வேண்டும்!..''

''.. ஆதியில் அவதார நோக்கம் கொண்டு இளைய பெருமாளுடன் கானகம் புகுந்து சபரியின் குடிலில் உலர்கனி உண்டருளிய ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியை உன்னில் காண்கின்றோம்!..''

''.. வைகையின் கரை அடைக்க என்று வந்து - வந்தியின் கரத்தினின்று உதிர்ந்த பிட்டு தனை உண்டு  - மாணிக்கம் விற்ற மதுரையில் மண் கொண்டு நடந்து பிரம்படியும் கொண்ட சோமசுந்தரப் பெருமானை உன்னில் காண்கின்றோம்!..''

''.. இருப்பினும் எங்களுக்கோர் ஆவல் உண்டு!.. அன்பின் செல்வமே!.. அருள் வடிவே!..  அதனைத் தயவு கூர்ந்து நிறைவேற்றித் தரவேண்டும்!..''

முனிவர்களின் வார்த்தைகளைக் கேட்டதும் - மணிகண்டனின் திருவிழிகள் வியப்பால் விரிந்தன.

''.. அன்று நீ நடத்தியருளிய மகிஷி வதத்தினை  - இன்று நாங்கள் தரிசிக்கும் படியான பாக்கியத்தினைத் தந்தருளவேண்டும்!..'' -  பணிவுடன் விண்ணப்பம் செய்து கொண்டனர்.

அதன்படியே - அவர்களுக்கு மகிஷி வதம் உணர்த்தப்பட்டது.


அப்போது அருவமாக வெளிப்பட்ட  லீலா -

''..ஸ்வாமி!.. என்னை அனுக்ரஹித்து அருள வேண்டும்!..'' - என்றாள்.

''.. கலியுகத்தில் - கலியுக வரதனாக , பக்த ஜன பரிபாலகனாக - தர்மத்தைக் காக்க வேண்டி பிரம்மச்சர்ய விரதம் பூண்டு அமருங்காலத்தில் - எனது இட பாகத்தில் மஞ்சமாதா என விளங்கி - எனைத் தேடி வரும் பக்தர்களின் மனோபீஷ்டங்களை மங்கலகரமாக நிறைவேற்றித் தருவாயாக!..'' 

ஐயனின் அருள் வாக்கினைக் கேட்டதும் லீலா சுகந்த மணம் கொண்டு காற்றினில் கரைந்தாள்.

''.. மகிஷி சம்ஹாரனே போற்றி!.. மதகஜ வாகனனே போற்றி!..''

- என்று, துஷ்ட நிக்ரஹம் செய்தருளிய தூயவனைத் தொழுது வணங்கினர் முனிவர்கள்.

அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட மணிகண்டன் - மேலும் தொடர்ந்து நடந்தான்.


ஆங்காங்கே வன விலங்குகள் சர்வ சுதந்திரத்துடன்.

அன்பு மீதூற விளையாடிக் கொண்டும் -


ஆக்ரோஷத்துடன்  ஒன்றோடொன்று அடித்துப் புரண்டு கொண்டும் -
என்ன நடந்தாலும் சரி - தூக்கமே பெரிது என உறங்கிக் கொண்டும் -

உள் உணர்வினால் உணர்ந்து கொண்ட விலங்குகள்  ஓடிவந்து - இயற்கையின் அழகினை ரசித்தவாறு நடந்த மணிகண்டனை உரசியவாறு தங்கள் அன்பினை வெளிப்படுத்தி அவனுடன் நடந்தன.

அப்படி நடந்த விலங்குகள் தங்களின் வினைப்பயனையும் கடந்தன.

வழியில்  -  சலசலக்கும் சிற்றோடையுடன் சற்றே சமவெளியாக இருந்த இடத்தில் - அன்னை பகவதி காட்சியளித்தாள்.

மணிகண்டன் -  பகவதியை வழிபட்டு, பந்தளத்தில் தன் அன்னைக்கு நலம் விளைய வேண்டிக் கொண்டான்.  அன்பு மகனை வாழ்த்திய அன்னை அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கூறினாள்.

புலியைத் தேடி வந்த புண்ணியன் - மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கிய போது - எதிரே பிரம்மாண்டமாக விளங்கிய மலையைக் கண்டான். அதன் உச்சியில் மீண்டும் ஒளி வடிவாக அன்னை பகவதி தோன்றினாள்.


அன்னையின் நல்லாசியினால் - கடினமான மலை  ஏற்றம் இலகுவானது. தோளில் கோதண்டமும் கரத்தினில் சிவதண்டமும் கொண்டு நடந்த மணிகண்டனைச் சுற்றிலும் யானைக் கன்றுகள் தோழமையுடன் பிளிறி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

சற்றே - இறக்கத்தில், கங்கைக்கு நிகரான பம்பா நதி. அதனுடன் கல்லாறு , காட்டாறு  ஆகியன கலக்கும் - திரிவேணி சங்கமம்.


கூட்டங்கூட்டமாக யானைகள் - நதியில் அளைந்து கொண்டிருந்தன.

பாப விநாசினி ஆகிய பம்பா நதியைக் கண்டதும் கைகூப்பி வணங்கிய ஐயன் - மந்த்ரங்களை உச்சரித்தவாறு பம்பா நதியில் நீராடி - சூரியனை நமஸ்கரித்து தீர்த்தம் கொடுத்தான்.

தனது தேரிலிருந்து இறங்கிய சூரியன்  - சிவகுமரனைப் பணிந்து வணங்கி, தீர்த்தத்தினைப் பெற்றுக் கொண்டான்.

''.. ஐயனே.. யான் செய்ய வேண்டுவது யாது?..''

''.. சூர்யதேவனே!.. பின் வரும் நாட்களில் கடும் விரதம் ஏற்று ஆயிரம் ஆயிரமாக லட்சம் லட்சமாக  பக்தர்கள் இங்கு வர இருக்கின்றனர்.   புண்ய நதியாகிய பம்பையில் நீராடும் - அவர்களுடைய தோஷங்களை - குறிப்பாக பித்ரு தோஷத்தை நீக்கி அருள்வாயாக!..''

''..உத்தரவு!..''

பம்பையில் நீராடி முடித்த மணிகண்டன் நித்ய பூஜைக்கென அமர்ந்தான்.

ஓம்!.. 
"ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் 
பர்கோ தேவஸ்ய தீமஹி. தியோ: யோந: ப்ரசோதயாத்"
ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

10 கருத்துகள்:

 1. ஒரு படம் பார்த்தது போல், காட்சிகள் அப்படியே கண்முன்னே தெரிந்தன...

  சுவாமியே சரணம் ஐயப்பா...!

  நன்றி ஐயா...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 2. பரிபூரணன் -ஹரிஹரசுதனே போற்றி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 3. திரைப்படம் போல் காட்டிசிகள் ஓடுகின்றன
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 4. இப்பூவுலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தர்மம் தெரிந்து விட்டால்...... ! ஏன் மீறவேண்டும்.. ? சிந்திக்கச் செய்யும் பதிவு நல்ல கதை வடிவில். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா!..
   தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி..
   மனம் மகிழ்ச்சியாக இருக்கின்றது..

   நீக்கு
 5. அருமையான கட்டுரை ஐயனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்,
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

   நீக்கு