நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 16, 2014

ஐயப்ப தரிசனம்

ஸ்ரீசபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளைப் பற்றி அறியாதார் யார்!..

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக ஸ்ரீசபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த 2013 நவம்பர்  15 அன்று திருநடை திறக்கப்பட்டது.


அந்த அளவில் - துளசி மாலை அணிந்து நாற்பத்தொரு நாட்கள் விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி தாங்கி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து மகிழ்ந்தனர்.

தங்க அங்கியும் - மண்டல பூஜையும்.

ஐயப்பனின் திருமேனியில் அணிவிப்பதற்காக  426 பவுன் எடை கொண்ட தங்க அங்கியினை - திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973 ஆம் ஆண்டு காணிக்கையாக வழங்கினார்.

இந்த அங்கி மண்டல பூஜைக்கு முதல் நாளிலும் மண்டல பூஜை நாளிலும் ஸ்வாமியின் திருமேனியை அலங்கரித்திருக்கும் . இதன்படி -

ஆரண்முளா ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயிலிலிருந்து டிசம்பர் - 22 அன்று பக்தர்களின் தரிசனத்திற்குப்பின் காலை 7 மணியளவில் புறப்பட்ட தங்க அங்கி - டிசம்பர் 25 - பகல் 2 மணி அளவில் பம்பை வந்தடைந்தது.

தங்க அங்கியை வரவேற்று மரியாதை அளித்த பின்னர், பம்பை கணபதி கோயிலின் முன், பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி வைக்கப்பட்டது. 

மாலை 3.30 மணி அளவில்  தங்க அங்கி மீண்டும் பெட்டிக்குள் வைக்கப்பட்டு சபரிமலையை நோக்கிப் புறப்பட்டது. ஐயப்பா சேவா சங்கத்தினர்  தங்க அங்கியை தலைச் சுமையாக தூக்கி வந்தனர்.


மாலை 5.40 மணியளவில் சரங்குத்தியில் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 6.15 மணிக்கு, கோயிலின் பதினெட்டாம் படி வழியாக வந்த அங்கியை, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் பெற்று -  திரு நடை அடைத்தனர்.  

பின்னர், திருநடை திறக்கப்பட்டு தீபாராதனை நடந்தபோது  தங்க அங்கியுடன் ஜொலித்த ஐயப்பனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர்.  

டிசம்பர் 26 அன்று மண்டல பூஜை நடைபெற்றது.

விபூதி தரித்து ருத்ராட்ச மாலைகளுடன் கூடிய திருக்கோலங்கொண்டு  யோக நிஷ்டையில் ஸ்ரீ ஸ்வாமி வீற்றிருக்க - இரவு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

திரு ஆபரணமும் மகர ஜோதியும்

மகர விளக்கு பூஜைக்காக - 2013 டிசம்பர் 30 அன்று  திருநடை திறக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக இருமுடி சுமந்து வந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டு மகிழ்வெய்தினர்.


பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவாய் காட்சி தரும் ஐயப்பனைக் காண வேண்டி  பெரிய பாதை வழியாகவும் பாரம்பரிய நடைபாதை வழியாகவும், புல்மேடு வழியாகவும்  - பக்தர்கள் திரண்டனர்.


மகர ஜோதி தரிசன நாளான மகர சங்கராந்தி தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே - தை முதல் நாள் நெருங்கிய வேளையில் - 

அபிஷேகம் செய்தபின்  - சபரிமலையில் இருந்து ஜோதி தரிசனம் காண வேண்டி ஆயிரக் கணக்கான பக்தர்கள் - ஆங்காங்கே இடம் பிடித்து விரி அமைத்து முகாமிட்டு பஜனைப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தவாறு இருந்தனர்.

திருஆபரண பெட்டி ஊர்வலம்.

முன்னதாக - ஜனவரி 11 அன்று அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்த சங்கங்களின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நடந்தது. 

இதனைத் தொடர்ந்து - பந்தளத்தில் இருந்து திரு ஆபரணப்பெட்டி புறப்பட்டது.

மகர விளக்கு பூஜையின்போது ஸ்வாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க  ஆபரணங்கள், ஜனவரி 12 - ஞாயிறன்று காலை 8 மணி அளவில் பந்தளம் அரண்மனையிலிருந்து -  பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயில் மேல்சாந்தி தலைமையில், ஸ்ரீசாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு,

திருக்கோயிலுக்கு  பல்லக்கில் அழைத்து வரப்பட்ட பந்தளம் கொட்டாரம் வலிய தம்புரான் ரேவதி திருநாள் ராமவர்மா  அவர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

பூஜைகளில் - துறை தொடர்பான கேரள அரசு அதிகாரிகளும் திரளான ஐயப்ப பக்தர்களும்  கலந்து கொண்டனர்.


மதியம் ஒரு மணிக்கு பூஜைகள் நிறைவுற்றதும் - திருவாபரண பெட்டிகள் ஸ்ரீசாஸ்தா கோவிலில் இருந்து  சபரிமலையை நோக்கி சரண கோஷம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டன.



இந்த ஊர்வலம் - எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக 14 - ஆம் தேதி செவ்வாய் பிற்பகல் பம்பையை வந்தடைந்தது. 

பம்பை விருந்து - பம்பை விளக்கு.

ஸ்வாமி ஐயப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடுகளில் முக்கியமானவை - பம்பை விளக்கும் பாரம்பரிய அன்ன தானமும். 

திங்கட்கிழமை  மாலை பக்தர்கள் தங்கள் கொண்டு வந்துள்ள அரிசி மற்றும் சமையல் பொருட்களைக் கொண்டு பம்பை நதிக்கரையில் சமையல் செய்து, ஐயனுக்கு படைத்து பஜனைப் பாடல்கள் பாடி வழிபட்டு ஏனைய பக்தர்களுக்கு வழங்கி தாங்களும் உண்டு மகிழ்வது - பம்பை விருந்து.

மாலை நேரத்தில் -   மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  மூங்கிலால் ஆன சிறு தேரில் விளக்குகள் ஏற்றி - அதை,

பம்பையில் மிதக்க விட்டு மகிழ்வார்கள். இதுவே பம்பை விளக்கு வழிபாடு.

மகர சங்ரம பூஜை

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 12 ஞாயிறு அன்று சுத்திகிரியை பூஜையும்,   திங்கள் அன்று உச்ச பூஜைக்கு பின்னர் ஐயப்பன் கோவிலில் பிம்ப சுத்தி பூஜையும் நடத்தப்பட்டது.

இதன்படி - உச்ச பூஜை பகல் 11.45 முதல்  12.45 வரை  நடைபெற்றது. 

மகர விளக்கின் முன்னோடியாக நடைபெறும் மகர சங்ரம பூஜை - செவ்வாய் பகல் 1.14 மணிக்கு நடத்தப்பட்டது. 


சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் முகூர்த்த வேளையில் ஸ்ரீஐயப்பனுக்கு  நடத்தப்படும் பூஜையே - மகர சங்ரம பூஜை.

இந்த பூஜையில் - சிறப்பு அபிஷேகமாக,

திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து - கவடியார் கொட்டாரம் கன்னி ஐயப்ப பக்தர்களால் கொண்டு வரப்பட்ட நெய் மட்டுமே - ஐயப்பனின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 5.30 மணிக்கு சரங்குத்திக்கு வந்து சேர்ந்த திருவாபரணங்கள் முறைப்படி வரவேற்கப்பட்டன. 

தொடர்ந்து - மாலை 6.30 மணியளவில்  சந்நிதானம் வந்தடைந்த  பெட்டிகளில்  இரண்டு பெட்டிகள் ஸ்ரீ மாளிகைப்புரத்திற்குச் சென்றன. பதினெட்டாம் படி கடந்து மேலே வந்த திருஆபரணப் பெட்டியை தந்திரியும் மேல்சாந்தியும் பெற்றுக் கொண்டு நடை அடைத்தனர்.


தொடர்ந்து திருவாபரணங்கள் ஸ்வாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு திருநடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. 

தீபாராதனை  முடிந்த, சிறு பொழுதில், பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் பிரகாசித்தது.

தொடர்ந்து, மகரஜோதி மூன்று முறை காட்சியளித்தது.


மகரஜோதியை - லட்சக் கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன்,
சாமியே சரணம் ஐயப்பா!.. என்ற ஆரவார கோஷத்துடன் -  தரிசித்தனர்.

சந்நிதானம் மட்டுமின்றி பாண்டித்தாவளம், நீலிமலை உச்சி, மரக்கூட்டம், சபரி பீடம், அப்பாச்சி மேடு ஆகிய இடங்களில் இருந்தும் மகர ஜோதியைக் கண்டு மகிழ்ந்தனர்.

அன்று இரவு 9.30 மணிக்கு மாளிகைப்புறம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

படி பூஜை

இன்று முதல் மூன்று நாட்கள் (ஜனவரி 16 -18 வரை)  -  படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகள்  நடைபெறுகின்றன. 

மாலை வேளையில் சந்நிதானத்தில் தீபாராதனைக்கு பின்னர் - சிறப்பு வாய்ந்த படிபூஜை .  பதினெட்டு படிகளிலும் பட்டு வஸ்திரம் விரிக்கப்பட்டு பூக்களாலும் மாலைகளாலும்  அலங்கரிக்கப்படும்.


திருப்படிகளின் இருபுறமும் ஒளிரும் திருவிளக்குகள் திகழ, படிபூஜை நிகழும்.

இதைத் தரிசிக்க வேண்டி சபரிமலையில் -  பதினெட்டாம் திருப்படிகளின் முன் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருப்பார்கள்.
 
மேலும், ஜனவரி 18 அன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு சந்தன அபிஷேகமும், 19 அன்று மாளிகைப்புரத்தம்மன் கோவிலில் குருதி பூஜையும் நடைபெற இருக்கிறது. 

அன்றைய தினம் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஜனவரி 20 - காலையில் பந்தளம் கொட்டாரம் வலிய தம்புரான் ரேவதி திருநாள் ராமவர்மா  அவர்கள் - ஸ்ரீஐயப்பன் சந்நிதியில் ஏகாந்த தரிசனம் செய்வார். 

அதன் பின்னர் ஐயப்பன் திருக்கோயிலின் நடை அடைக்கப்படும்

மீண்டும்  மாசி மாத பூஜைக்காக  பிப்ரவரி 12 அன்று மாலை 5.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு,   ஐந்து  நாட்கள் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும்.

இந்த வருடம் - பாரம்பரிய நடைபாதை வழியினில் ஆங்காங்கே  வனவிலங்குகள் தென்பட்டதால் - இரவு நேரத்தில் மலையேறுவதைத் தவிர்க்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


எல்லாவற்றையும் கடந்து ஐயனே சரணம் என்று வந்த பக்தி வெள்ளத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை நிறையவே திணறியிருக்கின்றது. 

சரங்குத்தியிலிருந்து பம்பை வரை  - எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மலைச் சரிவில் பக்தர்கள் - பரிதவிப்புடன் காத்திருக்கும்படி ஆனது.


கொடிய காட்டு மிருகங்கள் நிறைந்த வனத்தின் வழியே இன்னல்களையும் இடையூறுகளையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் - கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை  என்ற முழக்கத்துடன் நடந்து - 

சபரி பீடத்தினைக் கடந்து பதினெட்டாம் படிகளைக் கண்ட மாத்திரத்தில் -  நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து எழுமே - ஒரு விம்மல்!..

அத்தோடு  - துன்பங்களும் தொல்லைகளும் தொலைந்து போயிருக்கும்.

பதினெட்டுப் படிகளையும் கடந்து  - ஐயனின் சந்நிதி!.. 
ஸ்ரீ ஹரிஹர சுதனின் திவ்ய தரிசனம்!..

அதுவரையிலும் - 
ஐயனிடம் அதைக் கேட்க வேண்டும்  
இதைக் கேட்க வேண்டும் 
என்று ஆவலுற்றுத் திரிந்த மனம் 
அமைதியில் ஆழ்ந்து கிடக்கும்!.. 

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் 
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல!..

ஐயன் அருள் உண்டு என்றும் பயமில்லை!.. 
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..

10 கருத்துகள்:

  1. ஒவ்வொரு நிகழ்வின் விவரிப்பும் அருமை... சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு
  2. படங்களும் தகவல்களும் அருமை ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும்
      இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. பம்பை விளக்கு வழிபாடு.படி பூஜை ,மகரஜோதி தரிசனம் என நிறைவான பகிர்வுகள்.பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும்
      கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. ஸ்வாமி சரணம்....

    சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  5. ஐயன் அருள் உண்டு என்றும் பயமில்லை!

    ஸ்வாமி சரணம்.
    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..