நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆலய தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலய தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 02, 2023

அன்பின் தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 16
 வியாழக்கிழமை

அன்னாபிஷேக நாளாகிய சனிக்கிழமை இனியதொரு நாளாக அமைந்தது..

அன்று காலையில் அன்பின் திரு நெல்லை அவர்களுடன் சந்திப்பு..

திரு ஆதனூர் தலத்தில் பவித்ரோத்ஸவ தரிசனம் முடித்து விட்டு அங்கிருந்து கண்டியூருக்கு வந்திருந்தார்..

அவருடன் தஞ்சை மாமணிக் கோயில்கள், தஞ்சபுரீஸ்வரம், தாழமங்கை, புள்ளமங்கை, கபிஸ்தலம், ஒப்பிலியப்பன் கோயில், திருச்சேறை ஆகிய திருக்கோயில்களைத் தரிசித்தது மகிழ்ச்சி..

கூடலூர் ஜகத் ரட்சகப் பெருமாள் கோயிலில் உச்சி கால நடையடைப்பு..
நாச்சியார் கோயிலில் சந்திர கிரஹணத்தை முன்னிட்டு நடையடைப்பு.. இதனால் சந்நிதி தரிசனம் செய்வதற்கு இயலவில்லை..

வாகன சாரதியாக கும்பகோணம் திரு. வெங்கடேசன்.. 

நல்ல மனிதர். அறப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர்..

இனிமையான பயணம்
மாலையில் குடந்தை ரயில் நிலையத்தில் நிறைவு பெற்றது.. 

பெங்களூர் விரைவு வண்டியில் அன்பின் திரு நெல்லை அவர்கள் புறப்பட்ட பிறகு - குடந்தை மகாமகக் குளக்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேக தரிசனம் செய்து விட்டு தஞ்சைக்குத் திரும்பினேன்..

இனியதொரு நாளை வகுத்துத் தந்த இறைவனுக்கு நன்றி.. நன்றி..

தஞ்சை மாமணிக் கோயில்
மணிக்குன்றப்
 பெருமாள் சந்நிதி




தஞ்சபுரீஸ்வரம்
குபேரன் வழிபட்ட திருக்கோயில்






திரு தாழமங்கை
ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் கோயிலில்
நிறைநிலா நாள் வழிபாட்டிற்கு 
மின்னலங்கார ஏற்பாடுகள்







திரு புள்ளமங்கை
ஸ்ரீ ஆலந்துறையார்
கோயில் தரிசனம்
 








சிவாலயத்தின்
வெளிப்புற அதிஷ்டானத்தில் ராமாயணக் காட்சிகள்
வேறெங்கும் காணக் கிடைக்காதவை..





சரித்திரப் புகழ் பெற்ற 
ஸ்ரீ துர்கை


கலைக் கோயில்களின் வரிசையில்
புள்ளமங்கை கோயிலுக்கு 
எனத் தனியிடம் உண்டு..


திருக்கூடலூர் 
திவ்ய தேச ராஜகோபுர தரிசனம்




ஹரியொடு ஹரனும் 
இலங்கிடும் தலங்கள்
தரிசனம் செய்திடத்
துலங்கிடும் நலங்கள்.
***
ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, ஜூன் 22, 2019

சிக்கல் 2

ஸ்ரீ வேல்நெடுங்கண்ணியம்மை உடனாகிய
ஸ்ரீ வெண்ணெய் நாதர் திருக்கோயில்...



ஞானசம்பந்த மூர்த்தியின் திருப்பதிகம் பெற்ற பெருமான்..

எனினும்
பேரையும் புகழையும் தனது திருக்குமாரனுக்கே கொடுத்து விட்டு
சிவனே!.. என்றிருக்கின்றது சிவம்...

இந்த சிவாலயம் மாடக்கோயில்...

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடு எட்டு மற்றும்..

- என்று, க்ஷேத்ரக் கோவையில் அப்பர் பெருமான் குறிப்பிட்டருளும்
மாடக்கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று...

இவ்வகையான மாடக்கோயில்களை எடுப்பித்தவர் கோச்செங்கட்சோழர் என்பது தெளிவு..

யானை ஏற முடியாதபடிக்கு படிகளுடன் கூடிய திருக்கோயில்..

இவரே முற்பிறப்பில்
திருஆனைக்காவில் ஜம்புகேஸ்வரருக்கு
வலைப்பந்தல் இட்டு வழிபாடு இயற்றிய சிலந்தி...



திருக்கோயிலுக்கு முன்புறம் நிழற்கொட்டகை இருந்தபடியால்
ராஜகோபுரத்தின் அழகைக் காட்ட முடியவில்லை...

நீண்ட மண்டபத்தைக் கடந்து செல்ல திருக்கொடிமரம்..

கொடிமரத்தின் வடபுறம் அம்பிகையின் சந்நிதி..

தென்புறமாக மேலேறிச் செல்லும் படிக்கட்டுகள்..

எத்தனை என்று எண்ணவில்லை.. பதினைந்து இருபது இருக்கலாம்...

படிகளைக் கடந்து மேலே சென்றால் நேரெதிரே
அருள் தரும் வெண்ணெய் நாதர்.. ஸ்ரீ நவநீதேஸ்வரர்..

ஐயனின் அழகைக் காண ஆயிரங்கண்ணும் போதாது..

ஜோதி மயமாக சிவலிங்கம்...



ஸ்வாமி சந்நிதிக்கு வடபுறமாக தெற்கு நோக்கிய நிலையில்
ஸ்ரீ சிங்கார வேலன் தேவியரோடு திருக்காட்சி நல்குகின்றனன்..

என்ன தவம் செய்தனம்!... - என்று அரற்றுகின்றது மனம்...  

ஸ்ரீ சனைச்சரன்  

பிரகாரத்திலுள்ள முருகன் சந்நிதி 
திருக்கோயிலில் வடக்குப் பிரகாரத்தில்
ஸ்ரீ கோலவாமனப் பெருமாளின் சந்நிதி...

ஸ்ரீ கோலவாமனப் பெருமானின் சந்நிதிக்கு வடமேற்குப் பக்கமாக
ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானின் சந்நிதி..

வரசித்தி ஹனுமான் என்றும் புகழப்படுகின்றார்..

இங்கே அனுமனுக்கு தயிர் சாத நிவேதனம் என நேர்ந்து கொள்கின்றனர்...

அனுமன் சந்நிதியின் வாசலில் பெரிது பெரிதாக விளம்பரங்கள்..
எனவே திருவாசலைப் படமெடுக்கவில்லை...

தவிரவும் பெண்களும் ஆண்களுமாக திருக்கூட்டம் நிறைய.. அதனால்
மண்டபங்களையும் சுற்றுப் பகுதிகளையும் படமெடுக்க மனமில்லை.

ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி 


திருச்சுற்றில் வலம் வந்து
அன்னையின் சந்நிதியை அடைந்தால் -



துன்பங்களைத் தூள் ஆக்கு..
வெற்றிதனைப் பேர் ஆக்கு!..

- என்று, அருள்கின்றாள் அம்பிகை...

வேல்நெடுங்கண்ணி...

வேளாளன் காணி எனப்பட்ட கடற்கரைக் கிராமத்தில்
கையில் குழந்தையுடன் தோன்றியவள் இவளே!...

புயல் மழைக்கு இடையில் கரை காணாமல் கடலில் தவித்த 
போர்ச்சுக்கீசிய மாலுமியர்க்கு கலங்கரை விளக்காக
ஒளிகாட்டி வழிகாட்டிக் கரை சேர்த்த கற்பகம் இவளே!..

ஆங்கு அற்புதங்கள் அனைத்தையும் நிகழ்த்தியவள் இவளே!..

இன்றைக்கு வேளாங்கண்ணி எனப்படும் தலத்தில்
வெள்ளியங்கிரிநாதர் என்றொரு சிவாலயம் உண்டு...

இந்துக்கள் இன்னும் அறியாதிருக்கும் திருக்கோயில் அது...

சிக்கல் தலத்தை அடுத்து கருங்கண்ணி, அகலங்கண்ணி என்றெல்லாம் தலங்கள் உள்ளன...

பிற சமயத்தினரால் வேளாங்கண்ணிக்குச் சொல்லப்பட்ட
கதைகளைப் போல அவ்வூர்களுக்குச் சொல்லுதற்கு இயவில்லை...

வேல் நெடுங்கண்ணி அம்பிகை தான்
வேளாங்கண்ணி மாதா என்று மாற்றப்பட்டு நிற்கின்றாள்...

எவரெவர் என்னை எப்படி எப்படி நினைத்து அர்ச்சிக்கின்றார்களோ
அவரவர்க்கு நான் அப்படியே அருள் செய்து நிற்கின்றேன்!..

- என்பது பரமனின் திருவாக்கு...


வேல்நெடுங்கண்ணியம்மை சீராட்ட - தந்தை
வெண்ணெய் நாதர் வந்து பாராட்ட
போர் வந்ததென்ன இவன் வேல் கேட்டான் - வீரப்
பொட்டு வைத்த தாயிடம் விடைகேட்டான்..

சீர்காழியாரின் ஆஸ்தானக் கவிஞர்களான
திரு நெல்லை அருள்மணி அல்லது
உளுந்தூர் பேட்டை ஷண்முகம் அவர்கள்
இயற்றிய பாடலின் வரிகள் அவை...


சோழ வளநாட்டில் முருகனின் புகழ்க்கொடி பறக்கும்
திருக்கோயில்களுள் சிக்கலும் ஒன்று...

ஹிந்து சமயத்தின் கீழ்ப்பிறந்த தமிழ்க்குடி மக்கள் ஒவ்வொருவரும்
தரிசிக்க வேண்டிய திருத்தலம் சிக்கல் என்பதில் ஐயமேதும் இல்லை...

கிடா வாகனத்தில் ஐயன் (கந்த சஷ்டி) 

மொய்தாரணி குழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம்போல்
கைதான் இருபதுடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே..
-: கந்தரலங்காரம் :-

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்.. 
ஃஃஃ

வெள்ளி, ஜூன் 21, 2019

சிக்கல் 1

செந்தூரில் போர் முடிப்பதற்கு - முருகன்
சிக்கலிலே வேல் வாங்கினான்!..

- என்றுரைப்பர் ஆன்றோர்...

மிகப்பெரும் சிவாலயம்.. எனினும்,
இத்திருக்கோயிலில் குடிகொண்டிருக்கும்
திருமுருகனின் புகழ் அளவிடற்கரியது...

முன்பு ஒரு ஊழியில் -
காலமல்லாத காலத்தில் பெரும்பஞ்சம் வந்துற்றது..

அவ்வேளையில் ஏதோ ஒரு வினையினால்
உண்ணக் கூடாத ஒன்றை உண்ணும் நிலைக்கு ஆளானது - காமதேனு..

அந்தத் தவறினால் - நிலை தடுமாறிய காமதேனுவை
பூமிக்குச் சென்று வழிபாடு இயற்றும்படிக்கு ஆணையிட்டார் எம்பெருமான்..

கயிலாய நாதனின் கருணையின்படி
ஆரூர் எனும் பெரும்பதிக்கு நேர் கிழக்காக விளங்கிய
மல்லிகை வனத்தை வந்தடைந்தது - காமதேனு....

பக்தி மேலிட்ட நிலையில் -
காமதேனுவுக்கு அது கொண்ட இயல்பினால்
பால் சுரந்து வழிந்திட - அது குளமாகக் கூடி நின்றது...

அந்த நேரத்தில்
அக்குளக்கரையில் சிவபூஜை நிகழ்த்துமாறு
வசிஷ்ட மகரிஷியை அனுப்பி வைத்தார் சிவபெருமான்..

ஈசனின் ஆணையைத் தலைமேற்கொண்ட
வசிஷ்ட மகரிஷி திருப்பாற்குளத்தை அடைந்தபோது
இறையருளால் அங்கே வெண்ணெய் திரண்டு நின்றது...

வசிஷ்ட மகரிஷி அவ்வெண்ணெய்யைத் திரட்டி
லிங்கமாக சமைத்தார்...

அனைத்து வித உபசாரங்களுடன் சிவ வழிபாட்டினை நடத்தி
மகா தீப ஆராதனையை நிகழ்த்தினார்...

காமதேனுவும் அருகிருந்து தரிசித்து பேறு பெற்று
பழி நீங்கிடப் புண்ணியம் எய்தியது...

வசிஷ்டர் தேவலோகத்திற்குத் திரும்புதற்கான வேளை நெருங்கியது..

தாம் வெண்ணெயில் வடித்த சிவலிங்கத்தை விசர்ஜனம் செய்திட எண்ணி
லிங்கத்தை அதன் பீடத்திலிருந்து எடுத்தபோது இறுகி இருந்தது..

எவ்வளவு முயற்சித்தும் எள்ளளவு கூட அசையவில்லை...

தன்னளவில் திகைத்திருந்த வசிஷ்டர்
வழிபாட்டில் பிழையேதும் நேர்ந்ததோ என்று மனம் அயர்ந்தார்...

அப்போது -
அம்பிகையுடன் விடைவாகனத்தில் திருக்காட்சி நல்கிய எம்பெருமான்
தாம் இத்தலத்திலேயே நிலைத்திருக்க திருவுளம் கொண்டிருப்பதாக அருளினார்...

அந்த அளவில்
அத்திருத்தலம் - சிக்கல் எனத் திருப்பெயர் கொண்டது..

ஐயன் இத்திருத்தலத்தில் வெண்ணெய் நாதர் எனத் திருப்பெயர் கொள்ள
அம்பிகை வேல் நெடுங்கண்ணி எனத் திருப்பெயர் கொண்டாள்...

இங்கே - 
ஸ்ரீஹரி பரந்தாமன் வாமனாவதாரத்தில் சிவ வழிபாடு செய்ததாக ஐதீகம்..

பெருமான் - கோலவாமனப் பெருமாள் என, குடிகொள்ள
ஸ்ரீ மஹாலக்ஷ்மி வழிபட்டு நின்றாள் என்பது தலபுராணம்...

இங்குள்ள மற்றொரு தீர்த்தம் - லக்ஷ்மி தீர்த்தம்...

கூடவே ஸ்ரீ ஆஞ்சநேயரும் நல்லருள் புரியும் திருத்தலம்...

ஆலய தரிசனம் செய்யும் நிலையில்
சில படங்கள் - தங்களுக்காக!...




ஸ்ரீ விமான தரிசனம் 

அறுபத்து மூவர் தரிசனம் 



வேல் வாங்கிய வேலவனின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் 
தேவியருடன் ஸ்ரீ சிங்காரவேலவன் 
திருச்செந்தூரில்
ஸ்ரீஹரி பரந்தாமன் சயன திருக்கோலத்தில் அருள்பாலிப்பது போலவே
சிக்கல் எனும் இத்திருத்தலத்தில்
கோலவாமனப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில்
சேவை சாதிக்கின்றனன்..

வாமன மூர்த்தியாகி மண்ணையும் விண்ணையும் அளந்த
ஸ்ரீஹரி பரந்தாமனின் மருகனாகிய முருகப்பெருமானின் திருவடிகளை
நினைந்து அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரத் திருப்பாடலை
இவ்வேளையில் சிந்தை செய்வோம்...

தாவடியோட்டு மயிலிலும் தேவர் தலையிலும்என்
பாவடியேட்டிலும் பட்டதன்றோபடி மாவலிபால்
மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே...
-: கந்தர் அலங்காரம் :-

கந்தா போற்றி.. கடம்பா போற்றி..
சிக்கலில் வளரும் செல்வா போற்றி!...
ஃஃஃ