நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 30
புதன்கிழமை
ஒன்றை நினைவு கூர்தல் வேண்டும்....
சிறு வயதில் பள்ளி நாட்களில் -
அரைப் பரீட்சை விடுமுறை எப்போது வரும்? அத்தை வீட்டுக்குப் போகலாம்... என்று மனம் துடித்துக் கிடக்கும்...
அதைப் போலவே மாம்பழம் எப்போது சந்தைக்கு வரும்?... பலாப் பழம் சந்தைக்கு வருவது எப்போது?.. என்றெல்லாம் மனம் தவித்துக் கிடக்கும்..
இப்பொழுது
வாழைப்பழம் போன்ற பாரம்பரியப் பழ வகைகள் தவிர்த்து தெருக் கடைகளில் ஏகப்பட்ட பழங்கள்..
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா..
- என்று, பருவத்தில் பூத்து காய்த்து பழங்களாகப் பழுத்து வருவதைக் குறித்து
பாடல் ஒன்றைப் பாடியும் வைத்திருக்கின்றார் தமிழ் மூதாட்டி ஔவையார்..
இயற்கையை இறைவன் என்று போற்றிய ஔவையாரை விடவா நாம் அறிவாளிகள்?..
சாதாரண முருங்கை வருடத்திற்கு இரண்டு முறை மகசூல்... அது வருடத்தில் ஆறு முறை பலன் தருகின்றது என்றால் அது என்ன?
அது எப்படி?..
அங்கே நிற்பவை தான் நவீன விஞ்ஞானமும் சந்தைப் படுத்துதலும்!..
இப்போது விஷயத்திற்கு வருவோம்..
குளிர் பிரதேசத்தில் உஷ்ணம் கொடுக்கின்ற உணவு வகைகள், பாலை நிலத்தின் வெப்பத்தையும் குளிரையும் சமன் செய்து இவற்றுக்கேற்ப சக்தி கொடுப்பவை என - அந்தந்த சூழலுக்கும் வகை வகையாகப் படைத்திருக்கின்றான் இறைவன்..
அதை தனது வசதிக்கென்று அப்படியும் இப்படியுமாக மாற்றி சந்தோஷத்தையும் சங்கடத்தையும் ஒருசேர அனுபவித்துக் கொண்டிருக்கின்றது இன்றைய மனித சமுதாயம்..
தமிழகத்தின் பனை கொடுக்கின்ற பலன்களுக்கு ஈடு இணை உண்டோ..
பதநீருக்கு நிகர் வேறு இல்லை.. பதநீர் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சி.
இங்கு விளைகின்ற அரிசி முதல் பயிறு வரை நமது உடலுக்கு ஏற்றவை..
எங்கெங்கும் மணல்..
பாலைப் பெருவெளி.. அருவிகளோ ஆறுகளோ குளம் குட்டைகளோ கிடையாது அரேபிய தேசத்தில்.. ஆயினும் அங்கே பேரீச்சை எனும் அற்புதக் கனி...
அது அந்தச் சூழலுக்கு மட்டுமே ஏற்றது..
அங்கு வீசுகின்ற புழுதிப் புயலைத் தாக்குப் பிடித்து வாழ்வதற்கு மூக்குத் துளைகளில் சதைத் துணுக்குகளுடன் ஒட்டகங்கள் படைக்கப்பட்டிருப்பதைப் போல அங்கே வாழுகின்ற மக்களுக்கானது பேரீச்சங்கனி.
ஆப்பிள் உடலுக்கு வெப்பம் கொடுக்கின்ற பழம், குளிர் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கானது..
ஆப்பிள் பழம் நமக்கு அத்தியாவசியமானதா என்றால் இல்லை என்பதே விடை..
ஆயினும் வணிகம் என்ற பெயரினால் நாம் சுரண்டப்படுகின்றோம்..
இன்றைய மங்கல நிகழ்வுகளில் முன்னிலைப்படுத்தப் படுவது ஆப்பிள்..
அம்மா என்று நமது அரிச்சுவடியும் ஆன்மீகமும் ஆரம்பிக்க -
நம்மைக் கொள்ளையிட வந்த வெள்ளையனின் அரிச்சுவடியோ ஆப்பிளில் இருந்து ஆரம்பமாகின்றது..
ஆப்பிளில் இருந்தே இந்நாளில் நமது பிள்ளைகளுக்கான கல்வியும் - என்பது சிந்திக்கத்தக்கது..
மா, பலா ,வாழை என, இம்மண்ணுக்குச் சரியான காய் கனி வகைகளையும் பிறவற்றையும் இந்தப் பூமி இங்கேயே விளைவித்துக் கொண்டது..
நாம் ஆரோக்கியமாக வாழ்ந்த காலத்தில் இத்தனை வெளிநாட்டுப் பழங்கள் இங்கே விற்கப்பட்டதில்லை..
வெள்ளையன் இங்கே
வருவதற்கு முன்பு வரை எல்லாம் சரியாகத் தான் இருந்தன...
உஷ்ண சரீரத்தை மேலும் சூடேற்றி உடற் கோளாறுகளக் உருவாக்கும் பழமோ உணவோ இங்கு ஒருபோதும் இருந்ததில்லை.
மிளகைத் தேடி வந்தவன் தென் அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்திருந்த
மிளகாய் வற்றலை இங்கே விற்பனை செய்து காசு பார்த்தான்..
தக்காளியும் உருளையும் அப்படி வந்தவையே...
புகையிலையும் எனும் பெரும் தீமையும் அப்படி வந்ததுவே...
இங்கு உணவின் காரத்துக்கு மிளகைப் பயன்படுத்தும் முறையே இருந்தது..
நாம் நமது அறியாமையினால் பிறரது வலைக்குள் சிக்கிக் கொண்டோம்...
இந்நிலையில்
நம்மிடையே ஆகாத பழக்க வழக்கங்களைப் பயிற்றுவித்தவனை நொந்து கொண்டு எவ்விதப் பயனும் இல்லை..
நாம் தான் உறுதியுடன் இருந்து அவற்றில் இருந்து மீள வேண்டும்..
இறைவன் எல்லா விஷயங்களையும் மிக அழகாகவே செய்திருக்கின்றான்.. அவனை உணர்ந்தவர்களுக்கே அவையெல்லாம்
விளங்கும்..
நமது ஆரோக்கியம்
நமது கையில்!..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
An Apple a day; keeps
பதிலளிநீக்குthe Doctor away
என்று சொல்லி நம்மை ஏமாற்றி இருக்கிறார்களோ! இரும்புச்சத்து வேண்டுமா, ரத்தம் ஊற வேண்டுமா பேரீச்சை தினமொன்று சாப்பிடவும் என்கிறார்கள்.
மாற்றம், முன்னேற்றம் என்கிற பெயரில் எங்கோ வெகு தூரம் வந்து விட்டோம். இனி திரும்பிப் போகக் கூட முடியாது, பெரிய ஊழிக்கலவரம் ஒன்று வந்து நிலை மாறினாலொழிய!
பதிலளிநீக்குஇன்றைய நிலையில் மிளகாய் இல்லாமல் மிளகை மட்டும் பயன்படுத்தி சாம்பார், குழம்பு என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாய் இருக்கிறது! ஒன்றிரண்டு நாள் சாப்பிடலாம்!
பதிலளிநீக்குஉருளைக்கு அடிமையாகி இருக்கிறோம். பற்பல பயன்கள் அதனால்.
பதிலளிநீக்குதக்காளி இல்லாமல் சமையலே இல்லை!