நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 27
ஞாயிற்றுக்கிழமை
தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலுக்கு -
நாளை திங்கட்கிழமை காலை (தை/28) 9:30 மணிக்கு மேல் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா..
திருப்பணி எனும் சுதை வர்ண வேலைகள் நிறைவடைந்து விட்டன.. கோயிலுக்குள் மக்களை ஒழுங்கு செய்யும் நடை தடுப்பு வேலைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன..
நேற்று முன் தினம் வியாழக்கிழமை மதியம்
கோயிலுக்குச் சென்றபோது
எடுக்கப்பட்ட படங்களில் ஒருசில இன்றைய பதிவில்..
.
கடந்த திங்கட்கிழமை (தை 21) விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கிற்கான திக் பாலகர் வழிபாடுகள் தொடங்கி கோபுர கலசங்கள் பிரதிஷ்டை ஆகியுள்ளன..
வழிநெடுகிலும் உள்ளூரிலும் வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களுடன் கூடிய குடமுழுக்கு அறிவிப்புகள்..
எல்லா அறிவிப்பு அழைப்புகளிலும் ஆங்கிலத் தேதி...
ஆங்கிலத் தேதி மட்டுமே...
திருக்கோயிலின் நிகழ்வுகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வடிவமைத்து ஒட்டி வைத்து பக்தர்களை அழைக்காதது மட்டுமே குறை...
அப்படியான காலமும் விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகின்றது..
ஆங்கில மொழிக்கு அடி வருடி ஆலவட்டம் வீசி குற்றேவல் புரிகின்ற பணியை தமிழர்களே செம்மையாகச் செய்வர் என்பது மட்டும் உறுதி..
மரபு சார்ந்த நிகழ்ச்சி நிரல் எதுவும் கண்ணில் படவில்லை..
திருக்கோயிலின் அருகில் இருக்கின்ற திருக்கோயில் அலுவலகத்திற்குச் சென்று கேட்டதற்கு - அப்படியான அழைப்பிதழ்கள் தீர்ந்து விட்டன.. ஏதும் இப்போது கை வசம் இல்லை.. - என்று சொல்லியதோடு இருந்து விட்டார்கள்.
மன வருத்தத்துடன் சாலையில் நடந்தபோது சாலை அலங்கார வளைவின் அருகில் பழ வியாபாரி ஒருவரின் கைகளில் நான் தேடிய அழைப்பிதழ் - புத்தக வடிவில்...
விவரம் சொல்லிக் கேட்டபோது அவர் முகத்தில் தயக்கம்..
எவனோ வந்து
அழைப்பிதழைக் கேட்கின்றான்.. கொடுத்தால் எடுத்துக் கொள்வானோ !?.. - என்று சந்தேகம்...
அழைப்பிதழைப் பார்த்து விட்டுத் தந்து விடுகின்றேன் என்று சொன்னதும் செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் - என்றார்...
அங்கே பழ வண்டியில் அழைப்பிதழை விரித்து வைத்து படம் எடுப்பதற்கு சூழ்நிலை கூடி வரவில்லை..
ஆனாலும்,
சில விஷயங்களை மட்டும் பதிவு செய்து கொண்டு அழைப்பிதழைத் திருப்பிக் கொடுத்து விட்டு -
அன்னையின் நினைவுடன்
அங்கிருந்து புறப்பட்டேன்....
அன்னை அலகிலா விளையாட்டு உடையவள்..
அடியேனின் பாமாலை
ஆனபடி அத்தனையும்
அம்மா நீ அறிவாயே
ஆயிரங்கண் உடையவளே
அத்தனையும் அறிந்தவளே
நிறை எதுவோ குறை எதுவோ
ஆனதுவும் விதி வழியே
போனதுவும் போகட்டுமே
நலங்காட்டு விழி வழியே..
பொன்னாட பூவாட
அனலாடப் புனலாட
வேம்பாட கனியாட
காற்றாடி வருபவளே
செம்பவள நெற்றியிலே
சேர்ந்த முத்து தானாட ஒளி
சிந்து மணி சேர்ந்தாட
சிரித்தாடி வருபவளே..
சிங்கம் உந்தன் வாகனமாம்
அன்னத்துடன் பூ ரதமாம்
தங்கப் பரி மேலே அமரும்
வித்தகியே வாருமம்மா..
தங்கம் எனும் குணத்தழகு
தாமரையின் நிறத்தழகு
கோல மஞ்சள் முகத்தழகு
குங்குமத்துப் பொட்டழகு..
கொடியோர் தம் செயலறவே
வாள்தனை ஏந்தும் இயல்பினளே
பறையொடு கூத்தொலி முழங்கிடவே
படை வெட்டி நிற்கின்ற பொன்மயிலே
இடியாய் இறங்கி நின்றாடி
எருமைத் தலையனை வென்றவளே
பதமலர் சரணம் சரணம் அம்மா
அச்சம் தீர்த்தே அருள்வாயே..
மங்கல மாமுக கணபதியை
மார்புறத் தழுவும் தாயானாய்
குன்றுடைக் குமரனைப் பெற்றவளே
கொடியுடன் வந்தே குறை தீர்ப்பாய்..
புல்லர்கள் புன்மை தீர்த்திடவே
நல்லவர் தோள்களில் வர வேண்டும்
நல்லவர் என்றும் வாழ்ந்திடவே
நலங்களை வாரித் தர வேண்டும்
கொடியோர் கூட்டம் கூத்தாடிக்
கொடுஞ்செயல் புரிவதும் சரிதானோ
தடியோர்தடி எனத் தண்டம்
எடுத்திடத் தாமதம் இன்னும் ஏனம்மா
அண்டம் நடுங்கிட அக்கினி வடிவாய்
வந்தவள் நீயே மகமாயி
கண்கள் இரண்டும் தீப்பிழம்பாக
தீயவர் வீழ்ந்திட வருவாயே..
அடியார் துயரற நலம்பல
நல்கும் தாயே மகமாயி..
விடியும் பொழுதில் புது நலமாக
நல்லருள் பொழிக மகமாயி
கொடியது ஆன வல்வினை தீர்த்துக்
குளிர்முகம் காட்டுக மகமாயி
அடியவர் மனையில் அருளொளியாக வருவாய் வருவாய் மகமாயி..
அன்னை மாரி வருவாயே..
அன்னை மாரி வருவாயே..
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
படங்கள் அழகு. அம்மனைப் பணிந்து அருளாசி கோருகிறோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பினுக்கு நன்றி.
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்
அழைப்பிதழை கையில் கொடுக்க அவருக்கு அவ்வளவு தயக்கமா?.. ஹா.. ஹா.. ஹா...
பதிலளிநீக்குஅவ்வளவு தயக்கம் அவருக்கு...
நீக்குஎன்ன காரணமோ...
குற்றவேல் என்றால் என்ன? பொருள் தெரிகிறது. அந்த வார்த்தை எதிலிருந்து எப்படி வந்தது?
பதிலளிநீக்குசிறப்பான சந்தேகம்..
நீக்குவிளக்கத்தை
தனிப் பதிவாகத் தருகின்றேன்..
நன்றி ஸ்ரீராம்
புன்னை நல்லூர் அம்மன் குடமுழுக்கு காண வண்ணமயமாக ஒளிவீசுகிறாள்.
பதிலளிநீக்குபடங்கள் கண்டு வணங்கினோம்.
உங்கள் பாமாலை அருமை பாடி அன்னை அருளை வேண்டினோம்.
அவளருள் எல்லா உயிர்களையும் காக்கட்டும்.