நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

விநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 07, 2024

நிறைகனி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
விநாயக சதுர்த்தி

ஆவணி 22
சனிக்கிழமை

அனைவருக்கும்
விநாயக சதுர்த்தி
நல்வாழ்த்துகள
..

ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்திதரும் சித்திதரும் தான்..
-: பழந் தமிழ்ப் பாடல் :-


கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ... னடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியி லுறைபவ
     கற்பகம் எனவினை ... கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
     மற்பொரு திரள்புய ... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ... பணிவேனே..


முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புனம் அதனிடை ... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ... பெருமாளே.
-: அருணகிரிநாதர் :-

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
:- ஒளவையார் :-


சில ஆண்டுகளுக்கு முன்பு எளியேன் எழுதிய
போற்றி மாலை மீண்டும்
இன்றைய பதிவில்..


ஓரானைக் கன்று என 
வந்தானை போற்றி
சிவசக்தி வலம் செய்து 
நின்றானை போற்றி..

மாமேரு மலைதன்னில்
மலர்ந்தானை போற்றி
மா பாரதம் தன்னை 
வரைந்தானை போற்றி..

அன்றமரர் துயரங்கள்
தீர்த்தானை போற்றி
ஔவைக்கு அருந்தமிழ்
தந்தானை போற்றி..

காவேரி கடுஞ்சிறை
தீர்த்தானை போற்றி
கைதொழ எல்லாமும்
ஆனானை போற்றி..


அரங்க மாநகர் தனை
அளித்தானை போற்றி
ஆங்கொரு குன்றிலே
அமர்ந்தானை போற்றி..

தேவாதி தேவர் தொழ
நின்றானை போற்றி
தேவாரம் தனை மீட்டுத்
தந்தானை போற்றி..

அச்சிறுத் தருள் செய்த
அழகானை போற்றி
ஆயிரத் தெழுவருடன்
வந்தானை போற்றி..

புன்கூரில் குளமொன்று
புரிந்தானை போற்றி
புறம்பயத்தில் தேனோடு
பொலிந்தானை போற்றி..

மருதீசர் மலைக் குன்றில்
மிளிர்ந்தானை போற்றி
உப்பூரில் வெயில் தனில்
அமர்ந்தானை போற்றி..


அமரர்க்கு அமுதென்று
ஆனானைப் போற்றி
கந்தனுக்கு வள்ளிதனைத்
தந்தானை போற்றி..

கும்பமுனி கும்பிடக்  
குளிர்ந்தானை போற்றி
குறை தீர்த்து குலங்காத்து
நிறைந்தானை போற்றி..

வாதாபி தனை வென்று
வந்தானை போற்றி
வளர்பிறை அதனுடன்
நின்றானை போற்றி

கலங்காமல் உயிர்தனைக்
காத்தானை போற்றி
கருதியே வந்தார்க்கு
கதியானை போற்றி..

ஓங்கார ரூபமாய்
ஒளிர்ந்தானை போற்றி
ஓலமிட்டொரு குரல்
விளித்தானை போற்றி..


செவிகேட்டு செந்தமிழ்
மகிழ்ந்தானை போற்றி
விதிமாற்றி விளக்கேற்றி
வைத்தானை போற்றி..

ஞானமே வடிவாக
வந்தானை போற்றி
தானமே தவமாக
இருந்தானை போற்றி..

கோள்வினைகள் எல்லாமும்
தீர்த்தானைப் போற்றி
நாளெலாம் நல்வினை
சேர்த்தானை போற்றி..

கல்லானைக் கவியென்று
காத்தானை போற்றி
பொல்லானைப் பொறுத்தருள்
புரிந்தானை போற்றி..18

போற்றியே போற்றி எனப்
போற்றிடு மனமே..
போற்றியே போற்றி என
வாழ்த்திடு மனமே..
**

ஓம் கம் கணபதயே நம:

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், செப்டம்பர் 05, 2019

பிள்ளையார் தரிசனம் 2

தன்னிடம் துடுக்காக நடந்து கொண்டாள் என்பதற்காக
காவிரியைத் தனது கமண்டலத்துக்குள் அடைத்து விட்டார் அகத்தியர்...

நதியின் ஓட்டம் தடைப்பட்டதால் நாடு வறண்டு விட்டது...

தேவாதி தேவர்களுக்கு தமிழ் காத்த அகத்திய முனிவரைக் கண்டு நடுக்கம்..

கடலைக் கையில் அள்ளிக் குடித்தவராயிற்றே!...

அவரிடம் சென்று காவிரி துள்ளி விளையாடினாள்..
குள்ள உருவங்கண்டு எள்ளி நகையாடினாள்...

சிறுபிள்ளைத் தனத்தால் சிறைப்பட்டாள்...

அகத்தியரின் சினம் குறைந்திருக்குமோ?..
காவிரிக்காக பரிந்து பேச நமக்கும் கூடுமோ?..

தவித்து நின்ற தேவர்கள் ஈசனின் தலைமகனாகிய
விநாயகப் பெருமானிடம் முறையிட்டனர்...

அந்த அளவில் - காக்கை வடிவங்கொண்டு
அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டு
காவிரியை இப்பூமியில் ஓடவிட்டார்...

அகத்தியரின் கோபத்தைத் தான் தாங்கிக் கொண்டார்...

சிறை மீட்ட செல்வக் கணபதி 
தமிழகத்தை வாழச் செய்த வழங்கப்படும்
இந்த ஐதீகத்தை யார் மறந்தாலும் தஞ்சை மக்கள் மறக்கவே மாட்டார்கள்...

நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை... - என்று,
அகத்தியரின் கோபத்தைத் தான் தாங்கிக் கொண்டார் பிள்ளையார்..

அவரைத் தான் பிள்ளை யார்?... என்று கேட்கிறார்கள்
தமிழகத்து நல்லோர்களுள் சிலர்!...

மகாபாரதத்தை எழுதுவதற்காக வியாசர் வேண்டி நின்றபோது

எழுத்து வேகம் தடைப்படாமல் சொல்ல வேண்டும்!.. என்ற
நிபந்தனையை முன்வைத்தார் கணபதி..

வியாசரும்
தாமும் தடைப்பட்டு நிற்காமல் எழுதவேண்டும்!.. என்று வேண்டிக் கொண்டார்...

ஆனாலும் இறைவனின் சித்தமாக
விநாயகரின் திருக்கரத்திலிருந்த எழுத்தாணி முறிந்து போயிற்று..

கணமும் தாமதிக்காத கணபதி தனது தந்தத்தினை உடைத்து
எழுத்துப் பணியைத் தொடர்ந்தார் என்பது புராணம்...

ஸ்ரீ ஹரித்ரா கணபதி
பிள்ளையார்பட்டி - தஞ்சாவூர் 
பிள்ளையார் பட்டி - தஞ்சாவூர் என்றதும் சற்றே யோசிப்பீர்கள்...

தஞ்சை மருத்துவக் கல்லூரியைக் கடந்து வல்லம் செல்லும் வழியில் உள்ளது பிள்ளையார்பட்டி எனும் கிராமம்...

பெரிய கோயிலுக்கு மூத்தவர் இந்தப் பிள்ளையார்..
சாலையின் ஓரத்திலேயே பிள்ளையார் கோயில் உள்ளது..

மேலதிக விவரங்களை வேறொரு பதிவில் தருகிறேன்..

ஆக - 
இன்றைய பதிவிலும் பிள்ளையார் தரிசனம்..

அழகிய படங்களை வலையேற்றித் தந்த
சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றி...

ஸ்ரீ செந்தூர கணபதி
திரு அண்ணாமலை
 
திரு ஆமாத்தூர் 
ஸ்ரீ கள்ள வாரணர் - திருக்கடவூர் 
கஞ்சனூர் 
ஸ்ரீ சுந்தரகணபதி - கீழ்வேளூர் 
ஸ்ரீ மணக்குள விநாயகர்
விநாயக சதுர்த்தியன்று பிள்ளையார் பட்டி திருக்கோயில் நிகழ்ந்த
பஞ்ச மூர்த்தி தரிசனம்...






கடல் கடந்தும் கணபதி 
மேலே காணப்படும் விநாயகர் ஊர்வலம் ஆப்பிரிக்காவில்!..
எந்த நாடென்று தெரியவில்லை...


ஸ்ரீ மாணிக்க விநாயகர்
திருச்சி மலைக்கோட்டை அடிவாரம் 
குரு வடிவாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகை தான் வந்தெனக்கு அருளி
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே...

- என்று, விநாயகப் பெருமானிடம் - ஔவையார் வேண்டிக் கொள்கிறார்...


இன்று குருவாரம் எனும் வியாழக்கிழமை..
கூடவே ஆசிரியர் தினம்...

குரு தேவோ மகேஸ்வர .. என்று வணங்கும் நாள்...
நாமும் அவ்வாறே வாழ்த்தி வணங்கி நிற்போம்...

ஸ்ரீ சங்க சக்ர கணபதி
ஓத வினை அகலும் ஓங்கு புகழ் பெருகும்
காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்
பனிக்கோட்டு மால்வரைமேல் பாரதப் போர் தீட்டும்
தனிக்கோட்டு வாரணத்தின் தாள்..
-: பெருந்தேவனார் :-

ஓம் கம் கணபதயே நம: 
ஃஃஃ 

புதன், செப்டம்பர் 04, 2019

பிள்ளையார் தரிசனம் 1

வேழ முகத்து விநாயகனைத் தொழ 
வாழ்வு மிகுத்து வரும்...
வெள்ளிக் கொம்பன் விநாயகனைத் தொழ
துள்ளி ஓடும் தொடர் வினைகளே!...

இந்தப் பழம்பாடல் அந்தக் காலப் பள்ளிக் கூடங்களில் பால பாடம்!..

பிள்ளைகள் மனதில் பிள்ளையாரை உற்ற தோழனாக
உருவகப்படுத்திய பாடல் இதுவே...

இந்நிலையில்,
பிள்ளையாரை - பிள்ளை யார்?... - என்று கேட்டு
நம்மவர்கள் சிலர் குதுகலப்படுவதும் வழக்கம்...

ஸ்ரீ மஹாகணபதி - தஞ்சை பெரியகோயில் 
பிள்ளை யார்!?..

இதற்கு நிறைய சொல்லலாம்...
ஆனாலும் ஒன்றினை மட்டும் சிந்திப்போம்...

தேவாரத்தில்
ஞானசம்பந்தப் பெருமானும், நாவுக்கரசரும்
பல இடங்களில் பிள்ளையாரைக் குறிக்கின்றார்கள்...

சுந்தரரரோ -
பல தலங்களிலும் பிள்ளையாரைத் தரிசிக்கின்றார்...

விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்தில்
இறைவன் சுந்தரர்க்கு பொற்காசுகளை அருளுகின்றார்...

அருகிலுள்ள பிள்ளையாரைச் சாட்சி வைத்துக் கொண்டு
மணிமுத்தாற்றில் அவற்றை இடுகின்றார்...

திரு ஆரூர் திரும்பிய சுந்தரர் அங்குள்ள கமலாலயத் திருக்குளத்தில் அவற்றை எடுக்கும் போது அவற்றை உரசிப் பார்த்து தரமானவை என்று சான்றளித்தவர் பிள்ளையார்...

இதனாலேயே திருஆரூர் குளக்கரைப் பிள்ளையாருக்கு
மாற்றுரைத்த பிள்ளையார் என்று திருப்பெயர்...

கண்டியூரிலிருந்து திருஐயாற்றுக்குச் செல்ல வேண்டும்..

வழியில் காவிரியில் வெள்ளப் பெருக்கு...

தென் கரையில் நின்றிருந்த சுந்தரர் ஓலமிடுகின்றார் - ஐயாறப்பருக்குக் கேட்கட்டும் என்று!...

அந்த வேளையில் கோயிலின் தெற்கு வாசலில் இருக்கும் பிள்ளையாரும் சுந்தரருடன் சேர்ந்து பெருங்குரல் கொடுத்ததாகத் தலபுராணம்...

ஓலமிட்ட விநாயகர் என்றே திருப்பெயர்...

திருநாட்டியத்தான்குடி எனும் தலத்தை அடைந்தபோது
ஸ்வாமியும் அம்பிகையும் திருக்கோயிலில் இல்லை...

ஸ்வாமியும் அம்பிகையும் உழவனும் உழத்தியுமாக வயல்வெளியில் மக்களோடு மக்களாக நாற்று நட்டுக் கொண்டிருந்தனர்..

இதையறியாத சுந்தரர் -
அங்கும் இங்கும் தேடுகின்ற வேளையில்
இறைவன் இறைவியை சுட்டிக் காட்டியவர் பிள்ளையார்...

திருநாட்டியத்தான் குடியில்
விநாயகரின் திருப்பெயர் கைகாட்டி விநாயகர்...

திருமாகாளத்தில் சோமாசிமாற நாயனாருடைய யாகசாலைக்கு
புலையர் கோலத்தில் வந்த அம்மையப்பனை சுந்தரர்க்கு உணர்த்தியவர் பிள்ளையார்...

காலங்களைக் கடந்ததாக பிள்ளையாரின் பெருமைகள் விளங்கினாலும்
பிள்ளையாரின் காலம் மட்டும் இன்னும் பிடிபடவில்லை...

ஸ்ரீ வாதாபி கணபதி
திருச்செங்காட்டங்குடி 
நரசிம்ம பல்லவனின் தளபதியாகிய பரஞ்சோதி சாளுக்கியர்களை
வெற்றி கொண்டபின் வாதாபியில் இருந்த விநாயகர் சிலையை பெயர்த்துக் கொண்டு வந்து மன்னனின் அனுமதியுடன் தனது சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் நிறுவுகின்றார்...

அந்தக் காலத்தில் போரில் வீழ்ந்த மன்னனின் தலைநகரிலிருந்து எதையாவது கவர்ந்து கொண்டு வருவது வழக்கம்...

கரிகால் பெருவளத்தானும் அப்படித்தான் வடக்கிருந்து முத்துப் பந்தர் தோரணவாயில் இவற்றைக் கொணர்ந்ததாக ஆன்றோர் இயம்புவர்..

அப்படியானால் அதற்கு முன்
சோழமண்டலத்தில் முத்துப் பந்தர் இல்லாமல் இருந்ததா?...

நரசிம்ம பல்லவனின் தளபதியாகிய பரஞ்சோதியின் சொந்த ஊர்
திருச்செங்காட்டங்குடி எனக் கண்டோம்...

அப்படியானால் பரஞ்சோதி இப்பூவுலகில் பிறப்பதற்கு முன்பே
திருச்செங்காட்டங்குடி இருந்ததாக அர்த்தம் ஆகின்றது...

அப்படியான திருச்செங்காட்டங்குடியில் சிவாலயம் ஒன்றிருக்கின்றது..

இவ்வூருக்கான தலபுராணம் -

கஜமுகாசுரனை அழிப்பதற்காக
விநாயகப்பெருமான் அவனுடன் போர் புரிந்தார்...
அப்போது அசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்தால்
இந்த மண் செந்நிறமாகியது.. அதனாலேயே செங்காட்டங்குடி என்று பெயர்..
கஜமுகாசுரனை வீழ்த்தியபின் விநாயகப்பெருமான் சிவ வழிபாடு செய்தது இங்கே தான் என்று அறியத் தருகின்றது...

இந்தத் தலபுராணத்தினை -

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்
கயமுகாசுரனை அவனால் கொல்வித்தார் போலும் .. (4/53)

- என்று திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில்
அப்பர் பெருமானும் குறித்தருள்கின்றார்...

ஆக -
பரஞ்சோதி வாதாபியிலிருந்து விநாயகர் சிலையைக் கொணர்வதற்கு முன்பே
தமிழகத்து திருச்செங்காட்டங்குடி மக்கள் விநாயகப் பெருமானைப் பற்றி அறிந்திருக்கின்றார்கள் தானே!...

விநாயகரையும் விநாயகர் வழிபட்ட சிவலிங்கத்தையும் மக்கள் 
வணங்கியிருப்பர் தானே!...

அப்படியிருக்க
விநாயக வழிபாடு வடக்கேயிருந்து வந்தது என்று சொல்வது எங்ஙனம்?...

பரஞ்சோதி -  வாதாபியிலிருந்த விநாயகர் சிலையைக் கொணர்ந்தாரே அன்றி
விநாயகர் வழிபாட்டினைக் கொணரவில்லை என்பது தெளிவு...

இன்றைய பதிவில் திருக்கோயில்கள் பலவற்றிலும் நிகழ்ந்த விநாயக வழிபாட்டின் படங்கள் இடம்பெறுகின்றன...

வலையேற்றம் செய்த சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றி...


ஸ்ரீ முக்குறுணிப் பிள்ளையார் - மதுரை 
ஸ்ரீகொங்கணேஸ்வரர் கோயில்
தஞ்சை
ஸ்ரீ நாகநாதப் பிள்ளையார்
தஞ்சை 
திருவலஞ்சுழி 
திருஐயாறு 
ஔவையார் விநாயகர் அகவல் பாடிய தலம் திருக்கோவிலூர் என்று அறியப்படுகின்றது...

திருக்கோவிலூரிலுள்ள விநாயக மூர்த்தியே
ஔவையாரைக் கயிலாய மாலையில் கொண்டு சேர்த்ததாக ஐதீகம்...

அந்த விநாயக மூர்த்தியின் தரிசனம் இதோ!..






ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திரசம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தரும்தான்... 
-: பழம் பாடல் :-

ஓம் கம் கணேசாய நம:
ஃஃஃ

திங்கள், செப்டம்பர் 02, 2019

விநாயக போற்றி



வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு!..


மலரில் இருந்து மணத்தைப் பிரிக்க முடிந்தாலும் -
தமிழில் இருந்து பிரித்தறிய முடியாத சொல் - ஒளவையார்.

விநாயகப்பெருமானின் அருளைப் பெற  -  நமக்கு, 
அவர் அறிவுறுத்தும் எளிய வழி..

கடும்விரதம் , அருந்தவம் என - உடலை வருத்திக் கொள்ளாமல் -
பவளம் எனச் சிவந்த திருமேனியையும் தும்பிக்கையையும் உடைய
விநாயகப் பெருமானது திருவடிகளை,  
நாளும் தவறாது நல்மலர்களால் வணங்குவோர்க்கு -
கலைமகளின் அருளால்  பேச்சு வன்மையும்  நல்ல மனமும் உண்டாகும்.. மலர்களுள் சிறந்ததாகிய செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளின் அருட்பார்வையும்  கிட்டும்... 

இதில் -
மேனி நுடங்காது என்பதற்கு -
பெருமானை வணங்குபவர் மேனி பிணிகளால் வருந்தாது...
உடல் நலங்கொண்டு விளங்கும் எனவும் கொள்ளலாம்... 


ஆக, விநாயகப் பெருமானை அன்புடன் அருகம் புல் அல்லது அன்றலர்ந்த மலர்  கொண்டு வணங்கி வருவோர்க்கு - அறிவும் திருவும் ஆரோக்கியமும் கிட்டும் என்பது ஒளவையாரின் அமுத மொழி.

இத்திருப்பாடல் - ''மூதுரை'' எனும் நீதி நூலின்  காப்புச் செய்யுள் .

இந்த மூதுரையில் தான்,

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்..

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ (டு)
இணங்கி இருப்பதுவும் நன்று.

அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.    

- என  அமுத விருந்தளிக்கின்றார் - ஒளவையார்..
பின்னும், 


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா..

என்று - ''நல்வழி'' எனும் நூலில் -
மக்கள் இயற்ற வேண்டிய அறச்செயல்களை வகுத்தளிக்கும் போது
துங்கக்கரி முகத்துத் தூமணியாகிய கணபதியை
வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றார்...

இந்த நூலில் தான்-

ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும்; ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
'இல்லை' என மாட்டார் இசைந்து..

செய்தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்றறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்..

ஆற்றங் கரையின் மரமும், அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும், விழும்அன்றே; ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்;
பழுதுண்டு வேறோர் பணிக்கு..  

- போன்ற இன்சுவைப் பாடல்கள் விளங்குகின்றன. 

இந்தப் பாடல்களை ஊன்றிக் கவனித்தால் அறிவின் மகத்துவத்தையும் செல்வத்தின் அவசியத்தையும் ஒளவையார் வலியுறுத்துவதை அறியலாம்.

சொல்வாக்கும் செல்வாக்கும் பெற்றுய்ய வேண்டும் எனில் -
நல்ல அறிவு வேண்டும் என்பது திண்ணம்...

அப்படிப்பட்ட அறிவின் வடிவாகத் திகழ்வது - 

தமிழ்!..  

அமுதத்தமிழ்.. தமிழமுதம்.. - சொல்லிப் பாருங்கள். நாவினில் தேனூறும்.

மற்ற மொழிகளுடன் அமுதம் கலந்திருக்கின்றதா!.. அறியோம்!..

மற்ற மொழிகள் அறியத் தருபவை...
தமிழ் ஒன்றே - அறிவைத் தருவது!.

அதனால் தான் - பாரதிதாசன்,

''தமிழுக்கும் அமுதென்று பேர்!..'' - என்று முழங்கினார்..


இப்படி அமுதாக விளங்கும் தமிழை - இயல், இசை, நாடகம் - எனும் மூன்றின் வடிவாகத் தனக்கு வழங்குமாறு ஒளவையார் வேண்டிக் கொள்ளும் போது - 

அவர் - கணபதிக்கு  சமர்ப்பிப்பது - பால், தேன், பாகு, பருப்பு எனும் நான்கு...

பால் - தன்னுடன் நான்கு நற்பொருள்களைக் கொண்டு விளங்குவது...

தேன் - தனித்து மருந்தென விளங்குவது..
தானும் கெடாது... தன்னுடன் சேர்ந்தவைகளையும் கெடுக்காது.

பாகு - மூலிகைகளுடன் சேர்ந்து மருந்தெனத் திகழ்வது...

பருப்பு - சாத்வீக உணவுப்பொருட்களுள் முதன்மையானது...

இவை நான்கும் - நிவேதிக்கப்பட்ட பின் பிரசாதமாகின்றன...
இந்தப் பிரசாதமே - விருந்தெனவும் மருந்தெனவும் ஆகின்றது...

இதுவே மூளையின் இயக்கத்தினை அறவழியில் தூண்டுகின்றது...


எனவேதான் விநாயகர் - சிற்சில தலங்களில்
தூண்டுகை விநாயகர் எனும் திருப்பெயர் கொண்டு விளங்குகின்றார்...

இப்படி  - மூளையின் இயக்கம் தூண்டப்பட்டு விட்டால்,
எல்லாம் ஒன்றென உணர்ந்து சித்தம் - சிவம் ஆகிவிடும்..

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்..

இப்படி உணரச் செய்வது தான் - இந்த நிலையை எய்துவதைத்தான்,

''சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டி..''

என்று விநாயகர் அகவல் மூலமாக நிலைநிறுத்துகின்றார் - ஒளவையார்..


ஒளவையார் நமக்களித்த நல்வழிப்படி  
விநாயகப் பெருமானைச் சரணடைவோம்!..

பெருமானின் திருவருள்
நல்லோர் அனைவரையும் வாழ்விப்பதாக!..

துங்கக்கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா..

ஓம் கம் கணபதயே நம:
ஃஃஃ 

சனி, செப்டம்பர் 15, 2018

கணபதி வாழ்க 2

ஓதவினை அகலும் ஓங்கு புகழ்பெருகும்
காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்
பனிக்கோட்டு மால்வரைமேல் பாரதப்போர் தீட்டும்
தனிக்கோட்டு வாரணத்தின் தாள்..
-: பெருந்தேவனார் :-

சிவ வைணவ மரபின் வழிவந்த நல்லோர்கள் அனைவரும்
மட்டில்லா மகிழ்ச்சியுடனும் உற்சாகத்தினோடும்
ஸ்ரீ விநாயக சதுர்த்தியினைக் கொண்டாடியிருக்கின்றனர்..

இவ்வேளையில் -
பல ஊர்களிலும் கொண்டாடப்பட்ட வைபவங்களின்
திருக்காட்சிகளை நண்பர்கள் அனுப்பியிருக்கின்றனர்..

அவற்றுள் சிலவற்றை
இன்றைய பதிவினில் வழங்குகின்றேன்...

வழக்கம் போல படங்களை வழங்கியிருக்கும்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!...

ஸ்ரீ மகாகணபதி - திருக்கோயிலூர்.
இவருக்கு முன்பாகத் தான்
ஔவையார் அகவல் பாடினார்..
ஸ்ரீ கற்பக விநாயகர்
பிள்ளையார்பட்டி
ஸ்ரீ சித்தி புத்தி சமேத ஸ்ரீ மகாகணபதி
கணபதி அக்ரஹாரம். 
ஸ்ரீ செந்தூர கணபதி
திருஅண்ணாமலை..
ஸ்ரீ ராஜகணபதி - சேலம்..
ஸ்ரீ மாணிக்க விநாயகர்
மலைக்கோட்டை - திருச்சி
திருவலஞ்சுழி
கஞ்சனூர் 
கீழ்வேளூர் 
திரு ஐயாறு 
திருஆரூர் 
திருக்கடவூர் 
திங்களங் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
கங்கையாய் மகிழுஞ் செல்வக் கணேச நின்கழல்கள் போற்றி
-: வள்ளலார் ஸ்வாமிகள் :-

ஸ்ரீ செல்வ விநாயகர் - கனடா 
ஸ்ரீ செண்பக விநாயகர் - சிங்கப்பூர்
ஸ்ரீ மகாகணபதி., தஞ்சை பெரியகோயில்..
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சதுர்த்தியன்று சந்தனக்காப்பு அலங்காரம்..  
எளியேனின் வழிபாடு 
அன்பின் சமர்ப்பணம்
உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர் காதரவுற் றருள்வாயே..
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருட்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே...
-: அருணகிரியார் :-

ஓம் கம் கணபதயே நம: 
ஃஃஃ