நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 30, 2017

சொல்மாலை 2

இன்று விஜயதசமி


பொலிவுற்ற பொன்னனையாள்  
போர் முடித்த பொன்னாள்..
புல்லரைத் தன் பொன்னடிக் கீழ்
பொருது நின்ற நன்னாள்!..

பெண்மை என்றும் வாழ்க!.. என்று
புகழ் போற்றுவோம்!..
பெண்மை என்றும் வெல்க!.. என்று
சுடர் ஏற்றுவோம்!..
***


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே..(001)

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே..(004)

ஸ்ரீ வடபத்ரகாளி - தஞ்சை
சுந்தரி எந்தை துணைவி என்பாசத் தொடரை எல்லாம் 
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே..(008)

கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன்செய்த
புண்ணியம் எதுஎன் அம்மே புவிஏழையும் பூத்தவளே..(012)

ஸ்ரீ கோடியம்மன் - தஞ்சை
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில்தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே..(021)

சொல்லும் பொருளும் எனநடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே..(028)

ஸ்ரீ வராஹி - தஞ்சை
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி ஆதியுடையாள் சரணம் அரண் நமக்கே..(050)
-: அபிராமி பட்டர் :-
***

இன்று புரட்டாசி மாதத்தின் 
இரண்டாம் சனிக்கிழமை..

இன்றைய பதிவில்
பூதத்தாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்கள் திகழ்கின்றன..

ஸ்ரீ நீலமேகப்பெருமாள் - தஞ்சை
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.. (2182)

நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்
அங்கம்வலங் கொண்டான் அடி..(2185)

ஸ்ரீ சௌரிராஜன் - திருக்கண்ணபுரம் 
கொண்டது உலகம் குறளுருவாய்க் கேளரியாய்
ஒண்டிறலோன் மார்வத்து உகிர்வைத்தது - உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்
வான்கடந்து செய்த வழக்கு..(2199)

தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக் கீழ்க்கொண்ட அவன்..(2204) 

ஸ்ரீ சாரநாதன் - திருச்சேறை
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான் - எனப்பலரும்
தேவாதிதேவ னெனப்படுவான் முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்..(2209)

இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே
திருந்து திசைமுகனைத் தந்தாய் - பொருந்தியநின்
பாதங்க ளேத்திப் பணியாவேல் பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லாம் எமக்கு..(2218)

ஸ்ரீ பார்த்தசாரதி - திருஅல்லிக்கேணி
சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்
மறந்தாரை மானிடமே வையேன் - அறந்தாங்கும்
மாதவனே என்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு..(2225)
*** 

நாடு நலம் பெறுதற்கு 
நாராயணன் திருவடிகள் காப்பு

ஓம் ஹரி ஓம் 
* * *

வெள்ளி, செப்டம்பர் 29, 2017

சப்தமங்கை 4

சப்த மங்கையர் வழிபட்ட தலங்களைப் பற்றிய குறிப்புகள் தொடர்கின்றன..

இதன் தொடர்புடைய பதிவுகளைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்..


சப்த மங்கை தரிசனம் - 7
 புள்ளமங்கை...

ஸ்ரீ சாமுண்டி வழிபட்ட திருத்தலம்..


அம்பிகையின் கண்களில் மகிழ்ச்சி வெள்ளம்...

எவ்விதத் தடங்கலும் இல்லை..
ஆறு திருத்தலங்களில் ஆறு விதமான திருக்கோலத்துடன் ஐயனை தரிசனம் செய்தாயிற்று..

இனி ஏழாவது தலம்!..

அதோ - புள்ளமங்கை எனும் திருத்தலம்...

இந்தத் தலத்தில் அல்லவோ -
தேவர்களுக்கு முன்பாக - அன்றைக்கு பாற்கடலில் மூண்டெழுந்த ஆலகாலத்தை அருந்திய கோலத்தில் ஐயன் திருக்காட்சியளித்தான்...

அகிலாண்ட கோடி பிரம்மாண்டத்தைக் காத்தருள்வதற்காக
ஐயன் ஆலகால நஞ்சினை அருந்தியதைக் கண்டு மனம் பொறுக்காமல்
ஐயனின் கண்டத்தைத் தடவிக் கொடுத்து ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டதும் இந்தத் தலத்தில் அல்லவோ நிகழ்ந்தது..

அம்பிகையின் மனதில் பழைய நினைவுகள் மூண்டெழுந்தன..

ஆலந்தரித்த நாதன்!.. - என, முப்பத்து முக்கோடித் தேவரும் பணிந்து நின்றதும் இந்தத் தலத்தில் அல்லவோ!..

ஆலகால நஞ்சின் கொடுமை நீங்கியதும்
நான்முகப் பிரம்மன் ஆயிரத்தெட்டு நற்றாமரை மலர்களைக் கொண்டு
பாதபூஜை செய்து போற்றி நின்றதுவும் இந்தத் தலத்தில் அல்லவோ!..

எம்பெருமானின் திருவிளையாடல்களை நினைக்கையில்
அம்பிகையின் மனம் சந்தோஷத்தால் விம்மியது..

மகிஷாசுர வதத்தின் போது
கோர சௌந்தர்யம் கொண்டு சாமுண்டியாக எழுந்ததும்
அவ்வண்ணமே உக்ரம் அடங்காமல் சிவபூஜை செய்ததும்
அம்பிகையின் நினைவுக்கு வந்தன..

அதோ!..
ஆயிரங்கோடி சூர்யப் பிரகாசம் என - சிவலிங்க மூர்த்தி..


அன்பினால் நெக்குருகிய நிமலை
சிவமூர்த்தியின் அருகில் அமர்ந்தாள்...

நினைவுகளை நெற்றிப் புருவத்தின் இடையே நிறுத்தியவள்
நிமலனைத் தியானித்தாள்..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்!..

அண்டப் பிரபஞ்சம் எங்கிலும் எதிரொலித்தது - அம்பிகையின் தியான மந்திரம்..

அடுத்த சில நொடிகளில் சகஸ்ராரப் பெருவெளியில் சர்வாலங்கார பூஷிதனாக நாகாபரணம் இலங்கிட சதாசிவமூர்த்தி திருக்காட்சி நல்கினான்..

பண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ் சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!..

தனக்கு முன்பாக பேரொளிப் பிழம்பாக நின்ற
எம்பெருமானை அம்பிகை வலஞ்செய்து வணங்கினாள்..

அந்தளவில் அம்மையும் அப்பனும் ஆனந்தத் திருக்கூத்து நிகழ்த்திட
அதனைக் கண்ட ஆருயிர்கள் அத்தனையும் கண் பெற்ற பேற்றினை எய்தின..


இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர்
அம்பிகை - அல்லியங்கோதை, சௌந்தர்யநாயகி
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், குடமுருட்டி ஆறு
தலவிருட்சம் - ஆலமரம்

சக்கராப்பள்ளி சப்த ஸ்தானத்தின் 
ஏழாவது திருக்கோயில் - இது..


மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே..(1/16)
- திருஞான சம்பந்தர் -

சப்தமங்கைத் தலங்களை வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியர்
இத்தலத்தில் - பெண்ணின் ஏழாவது பருவமாகிய
பேரிளம் பெண் எனும் திருக்கோலத்தில் தரிசனம் கண்டனர்..

குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்கோயில் உள்ளது..
திருஞானசம்பந்தப்பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..

திருக்கோயில் ஆலந்துறை எனவும்
திருத்தலம் திருப்புள்ளமங்கை எனவும் கொள்ளப்படும்..

இன்றைக்கும் புள்ளமங்கை எனவே வழங்கப்படுகின்றது..
எனினும் பசுபதிகோயில் கிராமத்தின் ஒருபகுதியாகவே உள்ளது..


முதலாம் பராந்தக சோழரின் திருப்பணி..
கலைப்பெட்டகமாகத் திகழ்கின்றது - திருக்கோயில்..

திருமூலஸ்தானத்தைச் சுற்றிலும் நீராழி அமைந்துள்ளது..

மிகச்சிறப்பாக குறிக்கப்படவேண்டிய செய்தி -
இத்திருக்கோயிலில் விளங்கும் ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியின் திருமேனி..


ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கொற்றக்குடையின் கீழ் - 
எருமைத் தலையின் மீது நிற்கின்றாள்..

பிரயோகச் சக்கரத்துடன் சங்கு, வாள், வில், கதை, திரிசூலம், கேடயம், அங்குசம் முதலான ஆயுதங்களுடன் அம்பறாத் தூணியைத் தரித்தவளாக  விளங்குகின்றாள்..

தேவியின் இருபுறமும் சிங்கமும் மானும் விளங்குகின்றன..

மேலும் ஸ்ரீதுர்கையின் இருபுறமும்
தன்னைத் தானே அரிந்து தருகின்ற வீரர் சிலைகளையும் காணலாம்.. 

நாட்டியக் கலையின் 108 கரணங்களும் புராணக் கதைகளும்

நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன..

சோழ நாட்டின் சிற்பிகள் -

மிகச் சிறிய அளவில் நேர்த்தியாக படைத்திருக்கின்றனர்..

கலை வடிவங்களை நாளெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்..


மாலை நேரத்தில் திருக்கோயிலில் - கருட பட்சிகள் வந்து அடைகின்றன..
காலகாலமாக இவ்வாறு நடந்து வருவதாக சொல்கிறார்கள்..

தஞ்சை குடந்தை நெடுஞ்சாலையில்
பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வழி கேட்டால் சொல்வார்கள்..

ஒன்றரை கி.மீ தொலைவு.. உட்புறமாக நடந்து செல்ல வேண்டும்..
திருக்கோயில் வரைக்கும் நல்ல சாலை வசதி உள்ளது

சிற்றுந்து மற்றும் ஆட்டோக்களில் செல்லலாம்..

ஆனால் - சிறிய ஊராகிய பசுபதிகோயிலில் ஆட்டோக்கள் இயங்குவதாகத் தெரியவில்லை..

திருக்கோயில் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே காலைப் பொழுதில் திறக்கப்பட்டிருக்கின்றது..

மற்றபடி பகல் 12 மணிக்கு முன்பாக திறந்து ஒருகால பூஜை நடைபெறுகின்றது..

மாலையில் நாலரை மணிக்குத் திறக்கப்படும் கோயில்
இரவு ஏழரை அல்லது எட்டு மணி வரையிலும் திறந்திருக்கின்றது..

கோயில் திறக்கப்படும் நேரம் விசேஷ நாட்களில் மாறுபடுகின்றது...

காலையில் தரிசனம் செய்வதற்காகச் சென்ற நான் -
கோயில் திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பினேன்...

ஆலய வழிபாட்டுக்கான பொருட்களை
பசுபதிகோயில் கடைத்தெருவில் வாங்கிச் செல்வது நல்லது..

இந்த அளவில் சப்த மங்கைத் தலங்கள் ஏழையும் தரிசனம் செய்துள்ளோம்..

ஆனந்த விகடன் எனும் பத்திரிக்கையின் மின் தளத்தில் -
சப்த மங்கை தலங்கள் ஏழினையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்கள்..

எந்த வகையில் அப்படி சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை..
அது மிகவும் சிரமம் என்பது மட்டும் நிச்சயம்....

வருந்தி வருவார் குறைவு என்பதால் பெரும்பாலும்
மாலை நேரங்களிலேயே கோயில்கள் திறந்திருக்கின்றன..

பங்குனி மாதத்தில் நடைபெறும் சப்த ஸ்தானத்தின் போது கூட
பல்லாக்குடனேயே நாமும் சுற்றி வந்தால் -
ஏழு தலங்களையும் தரிசித்து முடிக்க இரண்டு நாட்களாகும்...

சக்கராப்பள்ளி
சப்தமங்கைத் தலங்கள் ஏழும் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன..

அந்தவகையில் இந்தக் கோயில்கள் சந்தைக் கடையாக மாறாமல் இருப்பது புண்ணியம்..

எனினும் - நெடுஞ்சாலையின் அருகாக அமைந்திருந்தாலும்

நலிந்த நிலையில் உள்ளதை குறிப்பிட்டாக வேண்டும்...

மாபெரும் மன்னர்கள் ஆண்ட அந்தக் காலத்தில் 
தஞ்சையிலிருந்து சக்கராப்பள்ளி - குடந்தை - மானம்பாடி வழியாக 
வீராணம் செல்லும் இந்தச் சாலை வணிகப் பெருவழி என்பது குறிப்பிடத்தக்கது..

அத்தகைய சாலை இன்று ஆக்ரமிப்புகளால் ஒடுங்கிக் கிடப்பதையும் சொல்லியாக வேண்டும்...

பசுபதி கோயில் - ஐயம்பேட்டை - சக்கராப்பள்ளி - பாபநாசம் வரையிலான சாலையை ஆக்ரமிப்பின் பிடியிலிருந்து விடுவித்து அகலப்படுத்துதற்கு இயலவில்லை...

பல்வேறு இடையூறுகளாலும் பிரச்னைகளாலும் 
பல வருடங்களாக நின்று போயிருந்த சக்கராப்பள்ளி சப்த ஸ்தானம்
கடந்த சில வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது..

பங்குனியில் சித்திரை நட்சத்திரத்தை அனுசரித்து காலையில் சக்கராப்பள்ளியில் புறப்படும் பல்லாக்கு எல்லா ஊர்களையும் சுற்றி விட்டு மறுநாள் காலையில் புள்ளமங்கையில் இருந்து புறப்பட்டு -

ஐயம்பேட்டை மதகடி கடைத்தெருவில் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் கோயில் வாசலில் பூமாலை மரியாதையை ஏற்றுக் கொண்டு மதியத்திற்குப் பிறகு திருக்கோயிலை அடைவதை அவசியம் கண்டு மகிழ வேண்டும்..

நல்லதொரு சமயம் கிடைக்கும் போது அனைவரும் சப்த மங்கைத் தலங்களைத் தரிசிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்..

இந்தப் பதிவுகள் முழுமையானவை அல்ல என்பதை உணர்கின்ற வேளையில்

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மேலும் பல தகவல்களுடன் எழுதுதற்கு அம்பிகை துணையிருப்பாள் என நம்புகின்றேன்..
* * *

இன்று கலைமகள் திருவிழா
ஸ்ரீ சரஸ்வதி பூஜை


இசையாய் தமிழாய் வீற்றிருப்பவள் அவள்..
அன்னையின் திருவருளை வேண்டி நிற்போம்..




நல்லவர் தம் வாழ்வில் இன்னல்கள் தொலைந்திடவேண்டும்..
நாடி நிற்கும் அவர் தமக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும்!.. 
- என, அம்பிகையை மனதார வேண்டிக் கொள்வோம்...
***

ஓம்
ஒருத்தியை ஒன்றுமிலா என்மனத்தில் உவந்து தன்னை
இருத்தியை வெண்கமலத்து இருப்பாளை எண்ணெண் கலைதோய்
கருத்தியை ஐம்புலனும் கலங்காமல் கருத்தை எல்லாம்
திருத்தியை யான்மறவேன் திசை நான்முகன் தேவியையே..
- கம்பர் -

வாணியைச் சரண் புகுந்தேன் - அருள்
வாக்களிப்பாள் எனத்திடம் மிகுந்தேன்
பேணிய பெருந் தவத்தாள் - நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்..
- மகாகவி பாரதியார் -

அனைவருக்கும் 
அன்பின் இனிய
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..

ஓம் சக்தி ஓம் 
* * * 

புதன், செப்டம்பர் 27, 2017

சப்தமங்கை 3


சப்த மங்கையர் வழிபட்ட தலங்களைப் பற்றிய குறிப்புகள் தொடர்கின்றன..

இதன் தொடர்புடைய பதிவுகளைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்..

சப்த மங்கை தரிசனம் - 5
 பசுமங்கை...

ஸ்ரீ வராஹி வழிபட்ட திருத்தலம்..


- பசுபதிகோயில் -

எம்பெருமான் உரை செய்தருளிய தலங்கள் ஏழினுள்
நான்கு திருத்தலங்களைத் தரிசனம் செய்தாகி விட்டது - என்ற மகிழ்ச்சியுடன்
ஐந்தாவது திருத்தலத்தினை நோக்கி நடந்தாள் அம்பிகை..

மகிஷாசுர வதத்திற்கு முன்பாக -
வராஹி எனத் திருக்கோலங்கொண்டு
இத்தலத்தில் ஈசனை வழிபட்டு நின்றதை நினைவில் கொண்டாள்..

மெல்லிய புன்னகை அன்னையின் திருமுகத்தில்...


இறைவன் - ஸ்ரீ பசுபதீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பால்வளநாயகி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காமதேனு தீர்த்தம்

காமதேனு பூஜித்ததாலேயே பசு மங்கை என்னும் திருப்பெயர்..

அத்துடன் ஐராவதமும் சிலந்தியும்
ஈசன் எம்பெருமானைப் பூஜித்து நின்ற
நாட்கள் நினைவுக்கு வந்தன..

எம்பெருமானின் திருமுன் நெக்குருகி அமர்ந்தாள் - அம்பிகை..

சிவ தியானத்தில் ஆழ்ந்தாள்..
அதற்கு மேலும் சோதிக்க விரும்பாத ஐயன் உடுக்கையினை
ஏந்திய வண்ணம் திருக்காட்சி நல்கியருளினன்..

ஐயனின் அன்பினில் கரைந்தாள் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி..

இந்நாளில் பசுபதிகோயில் என்றழைக்கப்படுகின்றது - இத்தலம்..


காமதேனு பூஜித்து தனது சந்ததிக்காக வேண்டி நின்றதால்
கால்நடைகளுக்கு எவ்வித குறையும் வராதவாறு
எம்பெருமானும் அம்பிகையும் காத்தருள்வதாக நம்பிக்கை..

சப்தமங்கைத் தலங்களை வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியருக்கு
இத்தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான
அரிவை எனும் திருக்கோலத்தில் தரிசனம் தந்தாள் - அம்பிகை..

சப்த மங்கைத் திருத்தலங்களுள் -
இத்திருக்கோயிலே மாடக்கோயில் ஆகும்..

கோச்செங்கட்சோழருடைய திருப்பணி..

சோழர்களால் கட்டப்பட்டு - பின் வந்த மன்னர்களால் பராமரிக்கப்பெற்ற இத்திருக்கோயிலை மாலிக்காபூரும் அவனுக்குப் பின் வந்தவர்களும் தாக்கிக் கொள்ளையிட்டு அழித்ததாக சொல்லப்படுகின்றது..

நல்லிச்சேரியிலிருந்து கிராம சாலை வழியாக சற்றே வடக்காக
மூன்று கி.மீ., தொலைவில் உள்ளது பசுபதிகோயில்..

பசுபதிகோயில் எனப்படும்
ஸ்ரீ பசுபதீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலுக்கு அருகிலேயே
ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயிலும் உள்ளது..

பசுபதிகோயில் சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தின் ஐந்தாவது கோயிலாகும்..

தஞ்சை குடந்தை நெடுஞ்சாலையில் பசுபதி கோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்காகச் செல்லும் பிரிவு சாலையில் இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ளது திருக்கோயில்..

தொலை தூர பேருந்துகள் தவிர்த்து -
அனைத்து புறநகர் பேருந்துகளும் பசுபதிகோயிலில் நின்று செல்கின்றன..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசத்திற்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பசுபதிகோயில் வழியாகவே செல்கின்றன..

பசுபதிகோயில் நிறுத்தத்திலிருந்து ஆட்டோக்களில் செல்லலாம்...

கோயில் வழிபாட்டுக்குரிய பொருள்களை
பசுபதிகோயில் கடைத்தெருவில் வாங்கிக் கொள்ளலாம்..

இனி -
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தின் ஆறாவது தலமாகிய
தாழமங்கையை நோக்கிச் செல்வோம்...

சப்த மங்கை தரிசனம் - 6
 தாழமங்கை...


ஸ்ரீ மாகேந்திரி வழிபட்ட திருத்தலம்..


சப்த மங்கைத் தலங்களுள் இதுவரை ஐந்தினைத் தரிசித்து விட்டோம்!..
- என்ற சந்தோஷம் அம்பிகையின் மனதில் பொங்கி வழிந்தது..

இனி ஆறாவது திருத்தலம்..

மகிஷாசுர சம்ஹார காலத்தில் மகேந்த்ரியாக தான் வழிபட்டு நின்றது அந்தத் திருத்தலத்தில் என்பதும் நினைவுக்கு வந்தது...

இதோ - அந்தத் திருத்தலம்..

அம்பிகை அந்தத் திருத்தலத்தை நெருங்கியபோது
பூரண நிலவின் பொற்கிரணங்கள் அந்தத் தடாகத்தில் பட்டு
அங்கே தாழை வனத்தில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தின் மீது
பிரதிபலித்துக் கொண்டிருந்தன..

கூடவே தாழை வனத்தின் ஊடாக நாகங்களும்
மனம் போன போக்கில் இழைந்து கொண்டிருந்தன..

அவை அத்தனையும் அம்பிகையைக் கண்ட மாத்திரத்தில்
அஞ்சி நடுங்கி விலகி ஓடிப் போயின..

அம்பிகை மனம் குளிர்ந்தவளாக - சிவலிங்கத்தின் முன்பாக அமர்ந்து
உற்று நோக்கினாள்.. உள்ளக்கிழியில் ஐயனின் உரு எழுதினாள்..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்!..
- என்று பஞ்சாட்சர மந்திரத்தினை மனமார தியானித்தாள்..

அம்பிகையின் தியானத்தில் லயித்த
சகல ஆன்மாக்களும் நற்கதியடைந்து நின்றன..

அம்பிகையின் தியானத்திற்கு வசப்பட்ட எம்பெருமான்
பிறை அணிந்த பேரருளாளனாக திருக்காட்சி நல்கினான்..

கண்ணார் அமுதக் கடலே போற்றி..
கயிலை மலையானே போற்றி.. போற்றி!.

என்று கசிந்துருகி நின்றாள் - அம்பிகை...


இறைவன் - ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீராஜராஜேஸ்வரி
தல விருட்சம் - தாழை
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்..

தட்சனின் சாபத்தால் தனது ஒளியை இழந்து மனம் கலங்கிய சந்திரன்
ஈசன் எம்பெருமானை சதய நட்சத்திர நாளில் சந்தனக் குழம்பினால் திருமுழுக்கு செய்து வழிபாடு செய்து நலம் பெற்றதாக ஐதீகம்..

இதனைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட மாமன்னன் ராஜராஜசோழன் இத்திருக்கோயிலில் ஆத்மார்த்தமாக வழிபாடுகள் இயற்றியதாக சொல்லப்படுகின்றது..

மாதந்தோறும் சதய நட்சத்திரம் மற்றும் பௌர்ணமியின் போது - எம்பெருமானுக்கு சந்தனக்காப்பு செய்வித்தும் 
அம்பிகைக்கு தாழை மடல் சாத்தியும் வழிபடுவோர் 
தாம் விரும்பிய நற்பேறுகளை எய்துவர் என்பது ஐதீகம்.. 

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பிகை
சப்தமங்கைத் தலங்களை வழிபாடு செய்து வந்த 
அநவித்யநாதர் - அனவிக்ஞை தம்பதியர்
இத்தலத்தில் - பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான
தெரிவை எனும் திருக்கோலத்தில் தரிசனம் கண்டனர்..

ஐந்தாவது திருக்கோயிலாகிய பசுபதி கோயிலுக்கு நேர் மேற்கே 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது - தாழமங்கை ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர் திருக்கோயில்..

இன்றைக்கு தாழ மங்கை எனும் திருக்கோயில் மட்டுமே உள்ளது..

திருக்கோயிலைச் சுற்றிலும் வயற்காடு தான்.. எந்தவொரு வீடும் கிடையாது..

தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல
சாலையின் மேற்குப் புறமாக திருக்கோயில் அமைந்துள்ளது..

நெடுஞ்சாலைக்குக் கிழக்காக சந்திர தீர்த்தம் எனும் குளம்..

கோயிலின் வழியாக நகரப் பேருந்துகள் சென்றாலும் 
கோயிலின் அருகில் நிறுத்தப்படுவதில்லை..

ஒன்றரை கி.மீ தொலைவிலுள்ள பசுபதி கோயில் நிறுத்தத்தில் தான் 
நிறுத்தப்படுகின்றன..

அங்கிருந்து திரும்ப நடந்து வரவேண்டும்...

தாழமங்கை திருக்கோயில் எப்போதும் திறந்திருக்காது..

முற்பகலுக்குள் ஒரு காலம் பூஜை நடைபெறுகின்றது..
சாயரட்சையின் போது சற்று அதிக நேரம் திறக்கப்பட்டிருக்கின்றது..

பிரதோஷம், வெள்ளிக்கிழமை, மற்றும் பௌர்ணமி நாட்களில்
மாலை வேளையில் கோயிலுக்குச் செல்வது நலம்..

கோயிலின் அருகில் வீடுகளோ கடைகளோ இல்லாததால்
பூஜைக்கான பொருட்களை பசுபதிகோயிலில் வாங்கிக் கொள்வது உத்தமம்..

அம்பிகையின் துணையுடன் -
நாமும் ஆறு திருத்தலங்களைத் தரிசித்து விட்டோம்...

அடுத்தது ஏழாவது திருத்தலமாகிய - புள்ளமங்கை..
* * *


நலந்தரும் நவராத்திரி வைபவத்தில் - தற்போது
ஸ்ரீ மஹாசரஸ்வதிக்கு உரிய நாட்கள்..

எங்கெங்கும் சிறப்பாக ஆராதனைகள் நடைபெறுகின்றன..


நல்லவர் தம் வாழ்வில் இன்னல்கள் தொலைந்திடவேண்டும்..
நாடி நிற்கும் அவர் தமக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும்!.. 
- என, அம்பிகையை மனதார வேண்டிக் கொள்வோம்...

ஓம்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் என் அன்னை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என்உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்..
- கம்பர் -

ஓம் சக்தி ஓம் 
* * *