நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மாசிமகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாசிமகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 23, 2019

மாசித் திருவிழா

திருஞான சம்பந்தப்பெருமான் தமது திருப்பதிகத்தில்
குறித்தருளும் திருநாட்களுள் மாசி மகமும் ஒன்று...

பற்பலத் திருக்கோயில்களில் மாசி மகத்தை அனுசரித்து
திருவிழாக்கள் நிகழ்ந்துள்ளன..

தல புராணங்களின் படி பிரம்மதேவன் தொடக்கி வைத்த
திருவிழாக்கள் - ப்ரம்மோத்ஸவங்கள்..

மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தை அனுசரித்து நிகழும்
திருவிழாக்கள் - மகோத்ஸவங்கள்..

மாசித் திருவிழாவின் படங்களை நண்பர்கள் வழங்கியுள்ளனர்..
அவற்றுள் சில இன்றைய பதிவில்...

படங்களை வழங்கிய உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்...

ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி - திருப்பரங்குன்றம்
ஸ்ரீ சண்முக நாதன் - சங்கரன்கோயில் 
ஸ்ரீ அண்ணாமலையார் 
ஸ்ரீ உண்ணாமுலை நாயகியுடன் அண்ணாமலையார் 
இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமானார்
தழைத்த சடையார் விடையொன் றேறித் தரியார் புரம் எய்தார் 
பிழைத்த பிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்தங்கு உறங்குஞ் சாரல் அண்ணாமலையாரே.. (1/69) 
- : திருஞானசம்பந்தர் :-

ஸ்ரீ கும்பேஸ்வரர் 
ஸ்ரீ மங்களாம்பிகை
ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி 
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி 
காவிரியில் தீர்த்தவாரி
ஸ்ரீ அக்னீஸ்வரர் - கஞ்சனூர் 
ஸ்ரீ கற்பகாம்பாள் - கஞ்சனூர்
ஸ்ரீ திருச்சோற்றுதுறை நாதர்- திருச்சோற்றுத்துறை  
ஸ்ரீ அன்னபூரணி - திருச்சோற்றுத்துறை
கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும் 
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.. (7/94)
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்:-


ஸ்ரீ கோடீஸ்வரஸ்வாமி
கொட்டையூர்
  
ஸ்ரீ பந்தாடு நாயகி
கொட்டையூர்
கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்
வருமணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமரும் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே...( 6/73)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ கஜசம்ஹார மூர்த்தி - வழுவூர்..  
ஸ்ரீ அகோர மூர்த்தி - திருவெண்காடு 
 பற்றவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்றவன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓரம்பால்
செற்றவன் திருவெண்காடு அடை நெஞ்சே..(5/49)  
-: திருநாவுக்கரசர்:-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

திங்கள், பிப்ரவரி 15, 2016

மகாமகப் பெருவிழா 3

மகாமகத் திருநாளின் மூன்றாவது நாள் - இன்று..

பெருந்திரளாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்திப் பரவசத்துடன் மக்கள் குடந்தையில் கூடி மகாமக தீர்த்தத்தில் நீராடி மகிழ்கின்றனர்..

சகல ஆலயங்களில் இருந்தும் கோலாகலமாக -
திருவீதியுலாக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன..



இந்நிலையில் -
இன்று காலையில் முகநூலில் கண்ட செய்திகள்..

1) மகாமகக் குளக்கரையில் நின்று கொண்டு
குளிக்கும் பெண்களை ஒரு கும்பல் படம் எடுப்பதாக..

2) அங்கே உடை மாற்றிக் கொள்ள மறைவிட வசதி இல்லை என்று..

சிந்தையில் நெருடின - இந்த செய்திகள்..


நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களுமாக -
மகாமகத் திருக்குளத்தில் நீராடிக் கொண்டிருக்கின்றார்கள்..

மேலும் -

குளக்கரை முழுதும் காவல்துறையினர் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்..

அப்படியிருக்க - தகாத செயல்களில் ஈடுபடக்கூடுமா?..

அப்படியே நடந்தாலும் -

பொதுமக்களில் யாராவது ஒருவர் சென்று பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களிடம் முறையிட்டாலும் போதும்..

தகாத செயல் செய்பவர்கள் கண்டிப்பாக சிக்கிக் கொள்வார்கள்..

அப்படியும் இல்லாமல், கோபங்கொண்ட எவரேனும் -
தடியர்களுக்கு ஒரு அறை கொடுத்தாலும் போதும்!..

தர்ம அடி ஆயிரக்கணக்கில் நிச்சயம் கிடைக்கும்..

எதற்கும் நாம் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது அவசியம்..

அடுத்ததாக உடை மாற்றிக் கொள்வது பற்றி..

மகாமகத் திருக்குளத்தில் தீர்த்தமாடுதல் என்பது - மற்ற குளங்களில் மூழ்கி எழுவது போன்றதன்று..

மகாமகத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் கரையேறி அப்படியே ஈர உடையுடன் நடந்து -

ஸ்ரீ சார்ங்கபாணித் திருக்கோயிலின் பின்புறம் உள்ள பொற்றாமரைத் திருக்குளத்திலும் நீராடி -

அதன்பின் தொடர்ந்து நடந்து வடக்குப் புறமாக காவிரி ஆற்றி நீராடுதல் வேண்டும்..

மகாமகத் திருக்குளத்திலிருந்து பொற்றாமரைக் குளத்திற்கு செல்லவும் அங்கிருந்து காவிரிக்குச் செல்லவும் சாலைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன..

இது தான் நடைமுறை.. தொன்றுதொட்டு வரும் வழக்கம்..

நடைமுறையை மீறி நடந்து கொள்ள நினைப்பவர்கள் 
எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்.. 




காவிரியின் கரையில் மறைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நினைவு..

1980 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் மகாமகத் தீர்த்த வாரியில் கலந்து கொண்டிருக்கின்றேன்..

1968 ல் சிறுவயது என்பதால் குடந்தை செல்வதற்கு அனுமதிக்கவில்லை..

1992 ல் வளைகுடா வசிப்பிடமானது.. 

இங்கே குவைத்தில் - நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு செய்தித் தாள்களே துணையாயின..

நிகழும் மகாமகத் திருவிழாவில் - தகவல் தொடர்புத் துறையின் உயர் நுட்பங்களும் பங்கெடுத்துக் கொண்டுள்ளன..

நமது தளத்திலும், - வலது பக்க பட்டியலில் -

நிகழ்வுறும் மகாமகத் திருவிழாவினைப் பற்றிய தகவல் களஞ்சியத்திற்கான இணைப்பினைக் கொடுத்துள்ளேன்..

அந்த இணைப்பினை கீழேயும் வழங்கியுள்ளேன்..

மகாமகம் 2016  - தகவல் களஞ்சியம்



Android முதலான தொழில் நுட்பத்தில் இயங்கும் நுண்ணலை பேசிகளில்
Google Play Store சென்று - Mahamaham என்று தேடினால் -

நிகழும் மகாமகத்தைப் பற்றிய விவரங்கள் கொண்ட Apps வெளியாகியுள்ளன..

நிறைந்த செய்திகள் காணப்படுகின்றன..
தரவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறுக.. 

இனி வருங்காலத்தில் எப்படியோ!?..

சென்ற பதிவிற்குக் கருத்துரைக்கும் போது -
அன்புக்குரிய கரந்தை JK அவர்கள்,

தாங்கள் குவைத்திலிருந்தாலும் மனம் கும்பகோணத்தில் தானே இருக்கும்!. -

என்று கேட்டிருந்தார்கள்..

திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தமிழாய்ந்த ஆசிரியப் பெருமகன் அல்லவா!..

அவர் கூறிய வார்த்தையின் நியாயம் பலித்து விட்டது..


இதற்கு அடுத்த பதிவு - சில தினங்கள் தாமதம் ஆனாலும்,
தஞ்சையிலிருந்து வெளியாகக் கூடும்!..

ஏனெனில் -

இந்தப் பதிவு வெளியாகும் வேளையில் - 

ஈசன் எம்பெருமானின் நற்றுணையுடனும்
வலைத்தள நண்பர்களின் நல்வாழ்த்துகளுடனும்

நான் குவைத்திலிருந்து புறப்படுகின்றேன் - 

மகாமகத் தீர்த்தமாடுவதற்கு!..

இதெல்லாம் எம்முன்னோர்கள் செய்த புண்ணியம்..
அதுவன்றி வேறெதுவும் அல்ல!..

அனைவரைப் போல நானும் 
என் குடும்பத்தினருடன் தீர்த்தமாடுதற்கு 
எல்லாம் வல்ல இறைவன் 
மேலும் நல்லருள் புரிவானாக!..    

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
-: திருநாவுக்கரர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
* * *

ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

மாசி மகம் - 02

மாசியில் சிறந்தது விளங்குவது மக நட்சத்திரம். அதன்படி மாசி மாத பௌர்ணமியில் மக நட்சத்தித்தில் மாசிமகம் எனும் புராதனமான திருவிழா கொண்டாடப்படுகின்றது.

திருக்கோயில்களில் திருவிழாக்களைத் கொண்டாடுவது முழுமதி திகழும் நன்னாளாகவே அமையும். மாசி மக நட்சத்திரத்தில் நடைபெறும் திருவிழா  மூர்த்தி, தலம், தீர்த்தம் என முக்கியத்துவம் அளிக்கப்படும் விழாவாக அமைந்துள்ளது. மனிதர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று.

தமிழகத்தில்  கும்பகோணம் எனப்படும் திருக்குடந்தையில் மகாமகத் திருக் குளத்தில் மாசி மகத்தன்று புனித நீராடுவது சிறப்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

பிரளய காலத்தில் இமயமலையிலிருந்து மிதந்து வந்த அமுத கும்பம்  இங்கே வந்து தங்கியது. நான்முகன் உயிர்களைப் படைக்க வேண்டி இறைவனைப் போற்றி வணங்கிய போது  -
தஞ்சையம்பதி
அருள்மிகு கும்பேஸ்வரன் திருக்கோயில்
சிவபெருமான் வேட வடிவம் தாங்கி வந்து, அமுதகும்பத்தை ஓர் அம்பினால் பிளந்தார். சிதைந்த கும்பத்திலிருந்த அமுதம் திரண்டு நின்ற இடமே "மகாமகத் திருக்குளம்''.

அதன் பின்னர் அமுதம் பரவிய மணலால் சிவலிங்கம் அமைத்து வணங்கிய நான்முகன் தன் படைப்பினைத் தொடங்கியதாவும்  குடந்தை தல புராணம் கூறுகின்றது.

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலினுள் திருச்சுற்றில்  வேடவடிவம் தாங்கி ''கிராதமூர்த்தி'' எனத் திருப்பெயர் கொண்டு திகழும் சிவ மூர்த்தியைத் தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் மாலை வேளையில் கிராத மூர்த்தியைத் தொழுது வணங்க வல்வினை அகலும். பில்லி சூனிய தீவினைகள் தொலையும். ஆறாத கொடுநோய்கள் ஆறும்

பாரதத்தில் உள்ள அனைத்துப் புண்ணிய நதிகளும் தங்களுடைய பாவச் சுமைகளை இங்கு வந்து நீராடி போக்கிக்கொள்வதாக ஐதீகம். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி முழுமதி நாளில் குரு சிம்மராசிக்குச் செல்லும் போது மகாமகப் பெருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

இந்த மாசிமகப் பெருவிழா கடற்கரையை ஒட்டியுள்ள திருக்கோயில்களில்  உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளச் செய்யப்பட்டு, "தீர்த்தவாரி' நடைபெறுவதைத் தரிசிக்கலாம்.

மகாமகச் சிறப்பு கும்பகோணத்திற்கு ஏற்படுவதற்கு முன்பே "மாசி மக தீர்த்தவாரி' நடைபெற்ற சிறப்புடையது "திருநல்லூர்" என்பர் . "மகம் பிறந்தது நல்லூரில்'' என்ற பழமொழி தஞ்சை மாவட்டத்தில் பேச்சு வழக்கில் சொல்லப் படுவது உண்டு.

மகாபாரதத்தில்,  குந்திதேவி - தன் குழந்தையை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் தேடியபோது - மாசி மகத்தன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றறியப்பட்டது. ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும் எனத் திகைத்தாள் குந்திதேவி. அப்போது, இறைவன் -

திருநல்லூர் திருக்கோயிலில் "பிரம தீர்த்தம்'' என்று வழங்கப்பெற்ற தீர்த்தத்தில் உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்த நீரின் சுவைகளை உடைய ஏழு கடல் தீர்த்தங்களை  வரவழைத்து அருளினார்.

குந்தியும் அதன்படி நீராடி பாபவிமோசனம் பெற்றாள் - என்பது தலவரலாறு.

அந்த பிரம தீர்த்தமே - சப்த சாகர தீர்த்தம் என வழங்கப்படுகின்றது.

இறைவன் கல்யாணசுந்தரேசுவரர். இறைவி கல்யாணசுந்தரி. சிவலிங்கத் திருமேனி சமயங்களில் நிறமாறுபாடுடையது. எனவே பஞ்சவர்ணேஸ்வரர் எனவும் வழங்குவர். ''சப்தசாகர தீர்த்தம்'' கோயிலுக்கு எதிரில் உள்ளது. திருக்கோயில் மாடக்கோயில் ஆகும். தல விருட்சம் வில்வம்.

அகத்தியருக்குத் திருமணக் கோலங்காட்டியருளிய தலங்களுள் இதுவும் ஒன்று. இத்திருக்கோயிலினுள் குடிகொண்டுள்ள ''நல்லூர் காளி'' எனப்படும் மகாகாளியம்மன் மிகவும் வரப்பிரசாதியானவள்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் தரிசித்து, பதிகம் பாடி மகிழ்ந்த தலம்.  திருநாவுக்கரசருக்கு  இறைவன் திருவடி சூட்டியருளிய திருத்தலம்.

திருநல்லூர், தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில், பாபநாசத்தை அடுத்து வலங்கைமான் செல்லும் வழித்தடத்தில் உள்ளது.

தஞ்சையிலிருந்து வலங்கைமான் செல்லும் பேருந்துகள் திருநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

மாசி மகத்தன்று  புனித நீர் நிலைகளில் நீராடி, திருக்கோயில்களைத் தரிசித்து - இயன்றவரை ஏழை எளியோர்க்கு அன்னதானம், வஸ்திரதானம் அளித்து மகத்தான புண்ணியத்தைத் தேடிக் கொள்வோம்.

திருச்சிற்றம்பலம்!...

மாசி மகம் - 01

பௌர்ணமி எனும் முழுமதி  நாள், இந்துக்களின் வாழ்வில் ஒரு முக்கியத் திருநாளாக மாதந்தோறும் கொண்டாடப்படுகின்றது. 

சித்திரை முதல் பங்குனி வரையில் பௌர்ணமி நாளும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமும் இணைந்து  பன்னிரண்டு விசேஷ நாட்களாக அமைந்துள்ளன.  இந்த நாட்களைத் திருக்கோயில்களில் விழாக்களாகச் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மாசி முழுமதி நாளில் மக நட்சத்திரத்தில் நடைபெறும் திருவிழா  மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் விழாவாக அமைந்துள்ளது.

சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலான நாட்கள் முருகனுக்குரிய சிறப்பான திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

தட்சனின்  சாபத்தால் சந்திரனின் கலைகள் தேய்வுற்றன. இதனால் அழகிழந்த சந்திரன் சிவபெருமானிடம் அடைக்கலமானான். தேய்வுற்ற சந்திர கலையினைத் தன் தலையில் சூடி - சந்திரன் தேய்வதிலிருந்து காத்தருளினார். சிவபெருமானுக்கு - "சந்திரசேகரர்'' என்ற திருப்பெயரும் அமைந்தது.

சந்திரனே நமது மூளையையும் மனதையும் ஆட்சி செய்பவன். இதனாலேயே சந்திரன் "மதி''  எனப்படுகின்றான்

"முழுமதி நாளில் நமது மூளையின் இயக்கம் பூரண நிலையில் இருப்பதால் அன்றைய தினம் சந்திரனைப் போல சிவபெருமானை வழிபாடு செய்து  திருவருள் பெறலாம்...'' என்பதே இதன் அடிப்படை

மாசிமாத மகநட்சத்திர நன்னாளில் - திருத்தலங்களில், நீராடல் நிகழ்வதை திருஞானசம்பந்தர், தேவாரத்தில்  திருமயிலை - கபாலீச்சரத் திருப்பதிகத்தில் பாடியருளியுள்ளார்.


திருமயிலையில் சிவனடியாரான சிவநேசன் எனும் பெருவணிகரின் அன்பு மகள் பூம்பாவை நந்தவனத்தில் அரவு தீண்டி மாண்டு விடுகின்றாள். இவள் திருஞானசம்பந்தருக்கு மணம் முடித்துக் கொடுப்பது  என்று நிச்சயித்திருந்த சிவநேசப் பெருந்தகை நடந்ததை எண்ணி மனம் வருந்தினாலும்  எல்லாம் ஈசன் செயல் என -  திருஞானசம்பந்தப் பெருமானின் வரவை எதிர்நோக்கிக் கபாலீச்சரத்தில் கன்னி மாடத்தில்  - அப்பெண்ணின் அஸ்திக் கலசத்தைப் பாதுகாத்து வருகிறார்.

பின்னொரு நாளில் திருமயிலைக்கு வருகை தந்த சம்பந்தமூர்த்தி - இந்த விவரத்தினை  அறிந்து மனம் நெகிழ்ந்தார். 

பூம்பாவை உயிர் பெற்று எழ வேண்டி திருமயிலைக் கபாலீச்சரம் அமர்ந்த பெருமானிடம் முறையிட்டார். 

''மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம்  அமர்ந்தான்
அடலானேறு  ஊரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்...'' (2/47/6)

''பூம்பாவையே!... நிறைந்த மடல்களுடன் கூடிய செழுமையான தென்னை மரங்கள் மிகுந்து விளங்கும் மயிலையில், கபாலீச்சரம் என்னும் திருப் பெருங்கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை நிறைந்த காளையின் மீது ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன்  - புகழ் மிக்க மாசிமக நாளில் கடலாட்டு கொள்வதையும்,  எம்பெருமான் ஆனந்த நடனம் ஆடுவதையும் கண்டு இன்புற்று அவனடி பரவிப் போற்றுதற்கு (மீண்டெழுந்து) வருவாயாக!..''

- என்று  திருப்பதிகம் பாடியருளினார். திருப்பதிகம் பாடுங்கால்,

மயிலை மாசிமக கடலாட்டுப் பெருவிழாவினையும் மற்ற திருநாட்களையும் சிறப்பித்துப் பாடினார் சம்பந்தர்.

திருப்பதிகத்தின் நிறைவில் உயிர்த்தெழுந்த பூம்பாவையைத் தன் மகளாக வாழ்த்தியருளினார் திருஞானசம்பந்தப் பெருமான்.


கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் மக்களின் பாவங்களைச் சுமக்கும் புண்ணியநதிகள் நீராடி - தங்கள் பாவங்களைத் தீர்த்துக்கொள்வதாக ஐதீகம். மகாமகக் குளத்தில் -  பித்ரு கடன் தீர்க்க எள்ளும் நீரும் வழங்குவதை மாசி மகத்தன்று  காணலாம்.

கும்பகோணத்தில் உள்ள சைவ - வைணவ ஆலயங்களிலிருந்து உற்சவத் திருமேனிகள் வீதியுலா எழுந்தருளி மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நிகழும்.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் மாசி மகத்தன்று தீர்த்தவாரி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

திருச்செந்தூர், திருமறைக்காடு, நாகப்பட்டினம் - ஆகிய தலங்களிலும்  மாசிமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. 

இறைவனுக்கு மாசிமக விழாவில் "பெருந்திருஅமுது' செய்ய நிலம் அளித்த செய்திகள்  ராஜராஜசோழ மாமன்னனின் கல்வெட்டுகளில்  காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மக்கள் தமக்கும் தமது சந்ததியருக்கும் - நன்மைகளைப் பெருக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று. 

திருச்சிற்றம்பலம்!...