நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 30, 2013

வான் மழையே வருக!

மழை தவறிய காரணத்தினால் இந்த வருடம் காவிரியில் தண்ணீர் இல்லை. மீதமிருக்கும் ஏரி, குளம், குட்டைகள் எல்லாம் வறண்டு விட்டன. 


மக்களுக்கும் இதர உயிரினங்களுக்கும் சோதனையான வருடம் இது. 

லட்சக்கணக்கான துளைகளையிட்டு ஆழ் குழாய் கிணறுகள் என்ற பெயரில் நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டோம்!.. விளைவு -

நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்குப் போனது! 


மரங்களை வெட்டிச் சாய்த்ததால்  - தாறுமாறான தட்பவெப்ப நிலை.  பருவ மழை பொய்த்தது. கடும் வறட்சி. விவசாயம் பாதிப்பு. விளைச்சல் இல்லை. கால்நடைத் தீவனம் தட்டுப்பாடு.

தென்னையுடன் பனை மரங்களும் சாய்கின்றன. அரசே மினரல் வாட்டர் என்று குடிநீருக்கு விலை வைத்து விற்க ஆரம்பித்து விட்டது.  


மேட்டூர்  அணை வறண்டது!. மின் பற்றாக்குறை.. இப்படியான நிகழ்ச்சிகளால், தமிழகம் சோகத்தில் ஆழ்ந்தது.

சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் பன்னிரு ஆண்டுகள் பஞ்சம் நேர்ந்ததாம். 

சோழ நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு - திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் - திருவீழிமிழலையில் - இறைவனை வேண்டி திருப்பதிகம் பாடி, படிக்காசு பெற்று பஞ்சம் தீர்த்த திருப்பணியை  அறிந்திருக்கின்றோம்!..

ஒரு கொடிய பஞ்சம் (1876 - 1878)   தாது - வருடத்தில் ஏற்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. 

அப்போது  உண்ண உணவின்றி - தழைகள், வேர் கிழங்குகளைத் தின்று, நோய் நொடிகளுக்கு இலக்காகி மடிந்தனர்.

பின்னும் வெள்ளையர் நம்மை அடிமைகளாக அடக்கி ஆண்ட (1939 -1940) வெகு தான்ய - வருடத்தில் பஞ்சம் ஏற்பட்டதாக வரலாறு கூறுகின்றது.  

சமீபத்தில் 2001-2002, சித்ரபானு - ஆண்டில் கடும் வறட்சியும், குடிநீர் பஞ்சமும், ஏற்பட்டது.  2002ல்  தானிய சேமிப்பின் காரணமாக  உணவுக்குப் பஞ்சமில்லை.

இம்மூன்று பஞ்சங்களும் - 60 ஆண்டுகள் இடைவெளியில் ஏற்பட்டவையாக குறிப்பிடப்படுகின்றன. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் என்று சில தொன்மைக் கருத்துக்கள் உள்ளனவாம்!...

மனிதர்கள் முயன்றால் - அதனைப் பொய்யாக்கி விட முடியும்!.. 


ஆதியில் மாதம் மும்மாரி பொழிந்த காலமுண்டு. அது வெறும் கற்பனை அல்ல -   இயற்கைச் சூழலில் சமச்சீர் காக்கப்பட்டதால் - அது உண்மைதான் என்கின்றார்கள்.   

ஆனால் தற்போதைய நிலைமையே வேறு... மனிதனின் பேராசையால் இயற்கைச் சமச்சீர் அழிக்கப்பட்டது. எனவே தான், தாறுமாறான தட்ப வெப்ப நிலையும் சுற்றுச் சூழலில் சீர்கேடுகளும் .

இயற்கையின் சமநிலை கெடுவதற்குக் காரணம் - ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை - என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இனி வருங்காலத்திலும் இந்நிலை தொடருமேயானால் - ஒரு கால கட்டத்தில், இயற்கையான சுற்றுச் சூழல் மனித வாழ்க்கைக்கு பாதகமாகவே அமையும் என்பது அவர்கள் தரும் எச்சரிக்கை..


மக்கள் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, பெருகும் வாகனங்களின் ஆகியவற்றால் - காற்று, நீர், மண் இவை மாசுபட்டு விட்டன. எதிர்காலத்தில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

தற்போதைய மானிட சமுதாயம் எதிர்கால சந்ததியினரைப் பற்றிய கவலை இன்றி - தாம் மட்டும் சுகமாக வாழ்ந்தால் போதும் என எண்ணுகிறது. 

இயற்கை வழங்கும் கொடைகளில் மழை மிகச் சிறந்தது. அந்த மழையை வருவிப்பவை மரங்கள்.  

சங்க இலக்கியமான அகநானூறு கூட - இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகக் கற்றறிந்தோர் கூறுகின்றனர்.

திருவள்ளுவர் - வான் சிறப்பினை பத்து குறட்பாக்களால் சிறப்பிக்கின்றார். 

சிலப்பதிகாரமும் மாமழை போற்றுதும்!. மாமழை போற்றுதும்!. என மங்கல வாழ்த்துடன் தொடங்குகின்றது.

காவினை இட்டுங் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில்மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்து எமைத்தீண்டப்பெறா திருநீலகண்டம்.  (1/116/2)
                                                                                                        - திருஞானசம்பந்தர்

தேவாரமும் சரி திருமந்திரமும் சரி  - இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இயற்கைச் சூழலை மனிதன் காக்கவில்லை எனில் - என்ன நேரும் என்பதற்கு சமீபத்தில் இமாலய சாரலில் நிகழ்ந்த பெரும் சோகமே சாட்சி!.



Thanks To Facebook
இயற்கையை மனிதன் வென்றதாக தகவல் ஏதும் இல்லை!...

எனவே - இயன்றவரை இயற்கையைப் பாதுகாப்போம்!..

இந்நிலையில் காவிரித் தண்ணீரையே பெரிதும் நம்பி இருக்கும் நமக்கு நல்ல செய்தியாக -

கர்நாடகா - காவிரி படுகை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் -

தமிழக, கர்நாடகா மாநில வனப்பகுதியில் எல்லைகளை தொட்டபடி, காவிரி ஆறு பெருக்கெடுத்து வருவதாகவும்,

ஒகேனக்கல் நீர்ப்பெருக்கு
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் பகல்12:00 மணி நிலவரப்படி 32,000 கன அடியும் நேற்று பகல் 12:00 மணி நிலவரப்படி 36, 550 கன அடியும் தண்ணீர் வந்து -  அருவிகளில் வெள்ளமென கொட்டுவதால் - பயணிகள் குளிக்கவும்,  பரிசலில் பயணிக்கவும் - தடை விதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 


காவிரியில் பெருகி வரும் நீரால் 

மண்ணும் குளிர வேண்டும்!.. 
மக்கள் மனமும் குளிர வேண்டும்!..

வயலும் விளைய வேண்டும்!..
மக்கள் வாழ்வும் மலர வேண்டும்!..

இயற்கையும் நம்மை வாழ்த்துவதாக!...

வெள்ளி, ஜூன் 28, 2013

நலந்தரும் வைத்யநாதன்

வளந்தரும் வைத்யநாதனின் சந்நிதியினை அடுத்து
பிரகாரத் திருச்சுற்றில் முதன்மையாக விளங்குவது
ஸ்ரீ செல்வ முத்துக்குமர ஸ்வாமியின் சந்நிதி.


அருணகிரிநாதர் வந்து வணங்கி  - திருப்புகழ் பாடிய அழகனின் சந்நிதி.

குமரகுருபரர் நின்று வணங்கி - பிள்ளைத்தமிழ் பாடிய பெருமானின் சந்நிதி.


வள்ளி தேவசேனாபதியாக காட்சி தரும் கந்தவேளை நாளெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

அம்மையப்பனின் செல்லப் பிள்ளை செல்வமுத்துக்குமரன். ஆனதால் -

எல்லா கட்டளை வழிபாடுகளிலும் முருகனுக்கே முதலிடம்.

செல்வ முத்துக்குமரனுக்கு - கிருத்திகை நாட்களில் சிறப்பான அபிஷேக அலங்காரத்துடன் வழிபாடு நிகழும்.

முத்துக்குமரனின் திருமேனியில் சாத்தப்படும் சந்தனத்தை அருந்தினால் குழந்தையில்லா குறை தீரும். வடிவேல் குமரன் திருவடி வாழ்க!..


அம்பலத்தாடும் ஐயனின் அருட்கோலம். ஆடும் அழகனின் திருவடி வாழ்க!..

வடக்கு நோக்கியவளாக அன்னை ஸ்ரீ துர்கையின் சந்நிதி.  மகிஷம் எனும் மூர்க்கம் இங்கே அவள் திருவடிகளின் கீழ்!...  

நம் சந்ததி வாழ அருள் புரியும் துர்கை -
சாந்த ஸ்வரூபிணியாக விளங்குகின்றாள்.

சண்டேசர் சந்நிதி!.. இவருக்கு எந்நேரமும் சிவசிந்தனை.

எனவே சொடக்குப் போடாமல் கைகளைத் தட்டாமல் - சிவ அபராதமாக எதையும் செய்யவில்லை - என்ற பாவனையில் அவருக்கும் வணக்கம்.. 

திருச்சுற்றில்  மூலஸ்தானத்தை நோக்கியபடி -  சுவாமிக்கு பின்புறம் -

ஒரு சேர நின்று வைத்யநாதரை வணங்கும் பாவனையில் நவக்கிரகங்கள்!.. ஆளுக்கொரு திசையாக இவர்கள் இங்கே ஆர்ப்பரிக்க முடியாது!.. 

திருக்கோயிலின் கீழ்க்கோட்டம். கம்பீரமாக விளங்கும் லிங்கோத்பவர்.

தெற்கு திருச்சுற்று. ஞானப் பெருங்கடலாக தக்ஷிணாமூர்த்தி.

இங்கும் ஓசை எழுப்புதல் கூடாது. கண்டிப்பாக - கொண்டைக் கடலை மாலை போடக்கூடாது!..

நமக்கும் ஞானத்தினை வழங்க வேண்டி தலைதாழ்ந்து வணங்குவோம்!.

இதோ எதிரில் ஜடாயு குண்டம். இத்தலத்தில் சம்பாதி ஜடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற விவரத்தினை எல்லாம் வரும் வழியில் அறிந்திருப்பீர்கள். 

ஸ்ரீராமபிரான் இவ்விடத்தில் ஜடாயுவின் உடலை  தகனம் செய்ததாகவும் வைத்யநாதப் பெருமானை வழிபட்டதாகவும்  தலபுராணம் விவரிக்கின்றது.

தற்போது ஜடாயு குண்டத்தில் நிறைய திருநீறு வைக்கப்படுகின்றது. பக்தர்கள் ஜடாயு குண்டத்தினை வணங்கி - அதிலிருக்கும் திருநீற்றினை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.


அடுத்து  - செவ்வாய் எனப்படும் அங்காரகன் அருள்பாலிக்கும் சந்நிதி.

அங்காரகனுக்கு ஏற்பட்ட தோல்நோய் - சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி ஸ்வாமியை வணங்கியதால் குணமாகியது. இதனால் செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன்  ஆட்டுக் கிடா வாகனத்தில்  எழுந்தருளி  - இறைவனை வலஞ்செய்து வணங்குகின்றான்.

அன்பர்களும் பெருமளவில் வந்திருந்து இந்த வைபவத்தினைக் கண்டு மகிழ்கின்றனர்.

திருச்சுற்றில் வலமாக வந்து, மீண்டும் நந்தி மண்டபத்தினை அடையும் போது அம்பிகையின் சந்நிதி!..

கருணையே வடிவாக அன்னை தையல்நாயகி - அஞ்சேல் - என்று சொல்வது நம் காதுகளில் கேட்கின்றது!..

வைத்யநாத ஸ்வாமியின் - அபிஷேக விபூதி, அபிஷேக சந்தனம், அபிஷேக தீர்த்தம், புற்று மண், வேப்பிலை - இவைகளைக் கொண்டு  தயாரிக்கப்படும்  "திருச்சாந்து' எனப்படும் மிளகு அளவிலான  மருந்து உருண்டை சர்வரோக நிவாரணியாக பக்தர்களால் போற்றப்படுகின்றது.

உடலில் தோன்றும் கட்டிகள், பரு , வடு போன்ற பிணிகள் நீங்க வேண்டி  - இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர்.


திருக்குளத்து மீனுக்குப் பொரி
நோய் தீர்ந்து நலம் பெற்ற பக்தர்கள் - அவள் சந்நிதியில் உப்பு, மிளகு,  வெள்ளி கண் மலர்கள் என காணிக்கை செலுத்துகின்றார்கள்.

அன்பர்கள் தம் பிள்ளைகளுக்கு முடிஇறக்கி காதுகுத்தும் மங்கலச் சடங்கினை இத்தலத்தில் நிறைவேற்றுகின்றார்கள். 

கீழைக் கோபுர வாயிலில் உள்ள வேப்ப மரம்
திருக்கோயிலின் கீழ்க் கோபுர வாயிலில் - ஸ்தல விருட்சமாகிய வேப்ப மரத்தின் நிழலில் ஆதி வைத்யநாதர் சந்நிதி. அருகே வீரபத்ரஸ்வாமி.

கிருத யுகத்தில்  இத்தலத்தின் தல விருட்சம் - கடம்ப மரம்.
திரேதா யுகத்தில் வில்வ மரம். துவாபர யுகத்தில் மகிழ மரம்.

கலி யுகத்தில் வேப்ப மரம்.  கடம்ப மரம் தான் வேம்பாக - உருமாறி தற்போது ஸ்தல விருட்சமாக விளங்குகின்றது என்பது ஐதீகம்.

ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி
திருக்கோயிலின் கீழ்த் திசையில் வீரபத்ரரும் தெற்கே விநாயகரும் மேற்கே பைரவரும், வடக்கே  ஸ்ரீபத்ரகாளியும் அமர்ந்து கண்காணிக்கின்றனர்.


திருக்கோயிலில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி பைரவர் சந்நிதிகள் விளங்குகின்றன.

வெளித் திருச்சுற்றில் ஸ்ரீபத்ரகாளியம்மன் தனிக்கோயிலில் அருள்கின்றாள்.

திருக்கோயிலில் பங்குனியில் கோலாகலமாக பிரம்மோற்ஸவம்.

திருக்கயிலாய பரம்பரைதருமபுர ஆதீனத்தின்ஆட்சிக்குட்பட்ட திருக்கோயில்.  

மயிலாடுதுறைக்கும்,  சீர்காழிக்கும் இடையில் உள்ள தலம்.
சாலை வழி, ரயில் வழி  - என திருக்கோயிலுக்கு வந்து தரிசிக்க வசதி.

மூலஸ்தானம் - கீழைக்கோபுரம் - வேம்பு - நீராழி மண்டபம்
தமிழர் தம் வாழ்வுடன்  கலந்ததும் - மகத்துவம் நிறைந்ததுமான வேப்பமரம்

அபிஷேக அமிர்தம் வழிந்து   -நிறைந்த சித்தாமிர்த திருக்குளம்.


பயன் கருதாது அறச்செயல் புரிந்த ஜடாயு வழிபட்ட திருத்தலம்.


வணங்குவோரின் உடற்பிணிகளை மட்டுமின்றி, பிறவிப் பிணியையும்  தீர்த்து அருளும் ஸ்ரீவைத்யநாத ஸ்வாமி.

வேறென்ன வேண்டும் நமக்கு!...

மூர்த்தி, தலம், தீர்த்தம்!. கண் பெற்ற பயனாக - காண்கின்றோம்!... வேறு சாட்சிகள் தேவையே இல்லை!...

கொடிமரத்தின் அருகில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகின்றோம்.

நீயின்றி யாருமில்லை வழி காட்டு! - இறைவா
நெஞ்சுருக வேண்டுகின்றோம் ஒளி காட்டு!..

நெஞ்சு நெகிழ்கின்றது!... கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிகின்றது!..


உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள உள்க வினைகெடும் மெய்ம்மையே
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. 5/79/8

- திருநாவுக்கரசர் - 
சிவன் என சிந்திப்போம்!.. 
வைத்யநாதன் பதங்களை வந்திப்போம்!.. 

''சிவாய திருச்சிற்றம்பலம்!.''

புதன், ஜூன் 26, 2013

வளந்தரும் வைத்யநாதன்

 வைத்தீஸ்வரன் திருக்கோயில் 


''வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே!.'' (2/43/5)


என்று திருஞானசம்பந்தப்பெருமானும்,

''பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை

மந்திரமுந் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்

போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!.''  (6/54/8)

என்று திருநாவுக்கரசு சுவாமிகளும் பாடிப் பரவிய திருத்தலம்.

அப்படிப்பட்ட திருத்தலத்தை - நாமும் கண் குளிரத் தரிசிப்போம் வாருங்கள்!..


தமிழகம் மட்டுமின்றி  - பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.  

ஏனெனில் -
எல்லா விதமான உடற்பிணிக்கும் மருந்தாக ஐயனின் சந்நிதி விளங்குகின்றது.

ஆதியில் தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் ஒன்றுகூடி  - ''..அனைவரும் நோயின்றி நல்வாழ்வு வாழ வேண்டும்!..'' - என விரும்பி , அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டபோது, 

எம்பெருமான் சுயம்புவாகப் புற்றுருவில் வெளிப்பட்டார். அமிர்த சஞ்ஜீவினி மூலிகையுடன் ஐயன் தோன்றிய போது அம்பிகையும் தைலம் நிரம்பிய கலசத்துடன் உடன் வந்தாள்.

அனைவரும் ஈசனை வணங்கி தங்களின் விருப்பத்தினை முன் வைத்தனர்.

அவர்களிடம் நோய்கள் உண்டாவதற்கான காரண காரியங்களை விளக்கிய ஈசன் -  அதனின்று காப்பாற்றிக் கொள்ளும் வழிவகைகளையும் அருளினார். 

வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவ பீடமாக இத்திருத்தலம் விளங்கும் எனத் திருவாய் மொழிந்தார்.

அவ்வண்ணமாகத் தெளிவடைந்த  - தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் - ''ஐயனே உலகம் உய்யும் பொருட்டு தாம் இத்தலத்திலேயே இருந்தருள வேண்டும்!..'' - என வேண்டிக் கொண்டனர்.

அதன்படி - ஐயனும் மருத்துவத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் இத்தலத்தில் வைத்யநாதன் எனத் திருப்பெயர் கொண்டு எழுந்தருளினார்.

சித்தாமிர்த தீர்த்தம்
ஈசன் கொணர்ந்த அமிர்தம் தான் - சித்தாமிர்த தீர்த்தமாக விளங்குவது.

ஈசன் அருளியபடி  - இன்றும் 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமைப் பீடமாக இத்தலம் திகழ்கின்றது. 

நோய்கள் எதுவானாலும் அதன் அடிப்படைக் காரணம் - இரத்தம். 

இரத்தத்தின் தேவதை செவ்வாய் எனப்படும் அங்காரகன்.


இந்த விஷயம் தான் - வைத்தீஸ்வரன் கோயில் - செவ்வாய் கிரகத்துக்கு உரிய தலம் என்று குறிப்பிடப்படுவது.

வைத்தீஸ்வரன் கோயிலில் அங்காரகன் எம்பெருமானின் திருவடிகளைப் பணிந்து கிடப்பதன் ரகசியத்தைப் புரிந்து கொண்டால் -

மனிதன் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் - நோய்நொடிகள் ஏது!... 

அப்புறம் எல்லாம் இன்பமயம் தானே!..



மூர்த்தி, தலம், தீர்த்தம்  - என சிறப்புற்று விளங்கும் வைத்தீஸ்வரன் கோயில் மேற்கு நோக்கிய திருத்தலம்.  மேற்கு நோக்கிய திருத்தலங்கள் எல்லாம் தொழுவார் தம் துயர் துடைக்கும் திருத்தலங்கள் என்பது ஐதீகம். 


மக்களின் இன்னல் தீரும்படிக்கு -
ஸ்ரீ வைத்யநாதப் பெருமான் மேற்கு நோக்கியவாறு திருவருள் புரிகின்றார்.

இத்தலத்தின் சித்தாமிர்த தீர்த்தத்தில் மீன்களைத் தவிர வேறு உயிர்கள் கிடையாது.

இக்குளத்தில் வாழும் மீன்களைக் கூட  - சித்தர்களின் அம்சம் எனக் கொள்வர். எனவே விவரம் அறிந்தவர்கள் அந்த மீன்களுக்கு உணவாக பொரி போடுவர்.

திருக்கோயில் உள்ளேயே விளங்கும்- திருக்குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் விளங்குகின்றது.

தென்னஞ்சோலைக்கு பின்னால் - மேலைக் கோபுரம்
குளத்தின் நாற்புறமும் நீராடுவதற்கு ஏதுவாக வசதியான படிக்கட்டுகள். விசாலமான சுற்றுப் பிரகார மண்டபம்

தீர்த்தத்தில் பெருமானின் அபிஷேக திரவியங்கள் கலப்பதாகக் கூறுகின்றனர். எனவே உடல் நலிவுற்ற மக்கள் தீர்த்தத்தில் மூழ்கி எழுகின்றனர்.

இப்படி பக்தர்கள் தீர்த்தமாடி - பெருமானை வணங்க வருவதனால் கோயில் தளம் எப்போதும் ஈரமாகவே இருக்கின்றது. இருப்பினும் திருக்கோயில் பணியாளர்களால் அவ்வப்போது சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றது.

ஸ்ரீ கற்பக விநாயகர் சந்நிதி
திருக்குளக்கரையில் -  ஸ்தல விநாயகர் சந்நிதி. காக்கும் கணபதியின் திருப் பெயர் - ஸ்ரீ கற்பக விநாயகர். விநாயகரை வணங்கி விட்டு மண்டபத்தில் நுழைந்தால் - தங்கக்கொடி மரம். அழகு ததும்பும் அதிகார நந்தி.


தெற்கு முகமாக திருக்குளத்தினை நோக்கியபடி அன்னை தையல் நாயகியின் சந்நிதி.

கூட்ட நெரிசல் இல்லையெனில் கொடி மரத்தின் அருகில் இருந்தபடியே - 
அன்னையையும் ஐயனையும் ஒருசேரக் கண்டு கைகூப்பித் தொழலாம்.


அலங்காரமாகத் திகழும் அணி விளக்குகளின் ஒளியில் - அல்லல் எல்லாம் தீர்த்தருளும் ஐயன் ஸ்ரீ வைத்தீஸ்வரன் பிறவிப் பிணியினைத்  தீர்த்தருளும் பெருமருத்துவராக வருபவர்க்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளலாக - ஜோதி மயமாக விளங்குகின்றார்.

கற்பூர ஒளியில் ஆனந்தமான தரிசனம். 
கண்கள் பனிக்கின்றன. 

ஐயனைக் கண்ட பின் மற்றொன்றினைக் காண விரும்பாதபடி 
சிந்தை சிலையாக நிலைத்திருக்கின்றது!..

கதிர் கண்ட இருளாக துயர் விலகுகின்றது!..
மனம் அனல்பட்ட நெய்யாக உருகுகின்றது!..

வாழும் நாள் எல்லாம் வளமாக வாழ வேண்டும்!..
அத்துடன் நலமாக வாழ வேண்டும்!..
ஐயன் திருவருள் புரிய வேண்டும்!..
***

திங்கள், ஜூன் 24, 2013

கவியரசர் கண்ணதாசன்



கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாள் (24 ஜூன் 1927) இன்று.

வாழ்க்கையின் ஓட்டத்தோடு  திருக்குறள் வருவதைப் போல கண்ணதாசன் அவர்களின் திரைப்படப்பாடல் வரிகளும் கூடவே வரும்.

காவியத் தாயின் இளையமகன் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தவர்.

ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களையும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும்  - அவர் எழுதியதாக சொல்லப்படுகின்றது.

அவர் எழுதியவற்றுள் எத்தனை எத்தனையோ மேற்கோள்கள் காட்டலாம்!..

இருப்பினும் - ஒன்றே ஒன்று!...

பாடல் இடம் பெற்ற திரைப்படம் - சாந்தி நிலையம். இயக்குநர் - திரு.ஸ்ரீதர்.
மெல்லிசை மன்னர் இசையமைப்பில் சுசிலாஅம்மா பாடிய பாடல் இது.


கடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்!


கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது!
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது?
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது!
இன்பம் துன்பம் என்னும் எண்ணம் ஏன் வந்தது?

இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்!


பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்
பச்சைப் பிள்ளை மழலை மொழியில் தன்னைக் கண்டாராம்
உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பைத் தந்தாராம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றாராம்!...


கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளுடன் தான் 
பொழுது விடிகின்றது!

தமிழ் அறிந்தோர் - உள்ளங்களிலும் இல்லங்களிலும்!..

ஞாயிறு, ஜூன் 23, 2013

ஆனந்தம் தரும் ஆனி


சூரியன்  - தை முதல் நாளில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தொடங்கிய  உத்ராயண பயணம் நிறைவுறும் இனிய மாதம் ஆனி.

கோடைக் காலத்தின் கடைசி மாதமாகிய ஆனியில்சைவ, வைணவ திருக்கோயில்களில் பற்பல புண்ணிய விசேஷங்கள் நிகழ்கின்றன.


ஆனி மாதத்தில் தான்   தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடவல்லானாகிய எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் நிகழ்வுறுகின்றது

அதே நாளில் திருஆரூரில் தியாகராஜப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்வுறும்

அன்றைய தினம்  - தில்லையில்  நடராஜப்பெருமானும் திருஆரூரில் தியாகராஜப் பெருமானும் தேரில் எழுந்தருளி திருவீதி பவனி வருவர். தில்லையில் ஆனந்த நடனம் எனில் திருஆரூரில் அஜபா நடனம் என்பது திருக்குறிப்பு.


தில்லையை - பொற்கோயில் என்றும் திருஆரூரை - பூங்கோயில் என்றும் சான்றோர் குறிப்பிடுவர்

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில், திருமஞ்சனப் பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. திருமஞ்சனத் திருவிழாவினைத் தரிசிக்கும் கன்னியர்  விரைவில் கல்யாணக் கோலம் கொள்வர் என்பதும் சுமங்கலிகள் மாங்கல்ய பாக்கியம் பெறுவர் என்பதும் ஐதீகம்.

தில்லையிலும் திருஆரூரிலும் போலவே -

எல்லா சிவாலயங்களிலும் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கும்  சிவகாமசுந்தரிக்கும்  திருமஞ்சன வைபவத்தினை சிறப்புடன் நடத்தி அன்பர்கள் மகிழ்கின்றனர்.

மேலும்ஆனி மாதத்தில் கோலக்குமரன் குடிகொண்டுள்ள பழனியில்,   அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.  

கேட்டைநட்சத்திரத்தன்று - மலைக்கோயிலில் உச்சி காலத்தில் உற்சவ மூர்த்திக்கும் , மூல நட்சத்திரத்தன்று  - திருஆவினன்குடியாகிய அடிவாரத் திருக்கோயிலில்  மாலை வேளையில் குழந்தை வேலாயுதப் பெருமானுக்கும்  அன்னாபிஷேகம் நிகழ்கின்றது

பழனியில் - ஜேஷ்டாபிஷேகம் எனும் ஆனித் திருமஞ்சனம் - விசாக நட்சத்திரத்தில் நடைபெறும்

ஆனி மாத பெளர்ணமியை அனுசரித்து - காரைக்காலில் மாங்கனித் திருவிழா வெகு சிறப்புடன் நடைபெறுகின்றது.

கையிலாய நாதர் பிட்க்ஷாடனராக வீதியுலா வரும் போது நேர்த்திக் கடனாக மாம்பழங்களை வீசி மக்கள் இன்புறுகின்றனர்.

ஆனி - மக நட்சத்திரத்தன்றுதான் தில்லை நடராஜப் பெருமானுடன் மாணிக்க வாசகர் ஜோதியாக இரண்டறக் கலந்தார். ஆனிமாதத்தின் தேய்பிறை ஏகாதசி அன்று - பெருமாளைத் திரிவிக்ரமப் பெருமானாக வழிபட, குருநிந்தனை செய்ததும், பொய் சாட்சி கூறியதுமான பாவ வினைகள் விலகும் என்பர்

ஆனி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்களும் ஆஷாட நவராத்திரி எனப்படும்.  பொதுவாக ஆஷாட நவராத்திரி வடமாநிலங்களில்  கொண்டாடப்படுகின்றது.

தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி வெகு சிறப்பாக அனுசரிக்கப்பெறுகின்றது


ஒன்பது நாட்களும் காலையில் ஸ்ரீவராஹி அம்மனுக்கு  மூல மந்திரத்துடன் யாகசாலை பூஜையும்மாலையில் மகாஅபிஷேகத்துடன் அலங்காரமும் மகாதீப ஆராதனையும் நிகழும்.  

ஒன்பது நாளும் ஒன்பது வகையான அலங்காரத்துடன் திகழும் அன்னை வராஹி - பத்தாம் நாள் அன்று,

கோயில்யானை முன் செல்ல, செண்டை வாத்யங்களும் சிவகண கயிலாய வாத்தியங்களும் சேர்ந்திசைக்க - கோலாகலமாக நான்கு ராஜவீதிகளிலும் எழுந்தருள்கின்றாள்

திருச்சி - உறையூரில்,   வெயில், மழை, பனி, காற்று  - என எதுவானாலும் தாங்கிக்கொண்டு வெட்டவெளியில் வீற்றிருக்கும் ஸ்ரீவெக்காளி அம்மனுக்கு ஆனி பெளர்ணமியில் மாம்பழ அபிஷேகம் நடத்தப்படுகின்றது


மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானஸ்வாமிக்கும் மட்டுவார்குழலி அம்பிகைக்கும் - நேர்த்திக் கடனாக வாழைத்தார்களை அன்பர்கள் செலுத்துவதும் ஆனி பெளர்ணமியில் தான்

அம்பலமாகிய தில்லையில் ஸ்ரீநடராஜனுக்கு திருமஞ்சனம் என்றால்

அரங்கமாகிய ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனுக்கு ஆனியில் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுகின்றதுகேட்டை நட்சத்திரமே ஜேஷ்டா எனப்படுவது.

கங்கையினும் புனிதமாய காவிரியிலிருந்து தங்கக்குடத்தில் தீர்த்தம் எடுத்து யானை மேல் வலம் வந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன் தைலக்காப்பு நடைபெறும். இவ்வேளைகளில் அரங்கனின் திருமுக தரிசனம் மட்டுமே!. 


அதன்பின் - திருஅரங்கனுக்கு பலவகையான பழவகைகளுடன் தேங்காய்த் துருவலும் நெய்யும் நிவேத்யம் செய்யப்படும். அடுத்த வெள்ளியன்று ஸ்ரீரங்க நாயகிக்கு இதேபோல ஜேஷ்டாபிஷேக வைபவம் சிறப்புடன் நடைபெறும்.

இவ்வண்ணமாக

ஆனி மாதத்தில் மங்கள வைபவங்களைக் கண்டருளும் -

நடராஜனும் ரங்கராஜனும் 

நம் அல்லல்களைத் தீர்த்து வைத்து 

ஆனந்தமான வாழ்வினை அருள்வார்களாக!...