நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 09, 2021

துள்ளி வருகுது வேல்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***


ஆறுமுகன் தான் இருக்க
அவன் அருள் துணையிருக்க
ஆடும் மயில் தான் இருக்க
அணிசேவல் சிலிர்த்திருக்க
பாடும் தமிழ் அமிழ்திருக்க
பண்பும் தலை நிமிர்ந்திருக்க
துயரினைத்  தொலைத்தழிக்க
பயத்தினைப் பிளந்தழிக்க
துள்ளி வருகுது வேல்
பகையே சுற்றி நில்லாதே போ!..

அகத்தினில் அறிவிருக்க
அறிவினில் அழகிருக்க
அகத்தினில் தனித்திருக்க
அன்பினில் லயித்திருக்க
புறந்தனில் பொலிந்திருக்க
புலனைந்தில் விழித்திருக்க
நோயினைத் தான் தடுக்க
தூய்மையில் தான் சிறக்க
துள்ளி வருகுது வேல்
பிணியே சுற்றி நில்லாதே போ!..

ஊரும் ஓய்ந்திருக்க
உயிரும் விழித்திருக்க
ஊழும் முன்னிருக்க
உதிரம் கொதித்திருக்க
வாழ்வும் தவித்திருக்க
வயிறும் பசித்திருக்க
நெஞ்சம் பிழைத்திருக்க
அஞ்சலென்று ஒலித்திருக்க
துள்ளி வருகுது வேல்
பிணியே சுற்றி நில்லாதே போ!..

வள்ளல் எனக் கொடுத்திருக்க
வாங்கும் மனம் சிரித்திருக்க
வாழ்வதுவும் தழைத்திருக்க
வந்த கலி தொலைந்திருக்க
எங்கும் இனி மகிழ்ந்திருக்க
ஏற்றம் அது நிறைந்திருக்க
வன்கணமும் அழிந்திருக்க
வையகமும் செழித்திருக்க
துள்ளி வருகுது வேல்
பிணியே சுற்றி நில்லாதே போ!..

***காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

ஃஃஃ