நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மாரியம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாரியம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 21, 2025

அம்மன் தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 8
செவ்வாய்க்கிழமை

தை மாதத்தின் முதல் வெள்ளியன்று தஞ்சை புன்னைநல்லூர் தரிசனம்..




கோயில் திருப்பணி  நிறைவடைகின்ற நிலையில் உள்ளது..  திருக்குட முழுக்கிற்கான நாள் இன்னும் தெரியவில்லை..

கோயிலின் தென் புறத்தில் இருந்த பழைமையான மண்டபம் அகற்றப்பட்டு விட்டது..




















திருக்குளத்தின் தண்ணீர் முழுதும் அகற்றப்பட்டு உள்ளது.. 


இயன்ற அளவில் படமெடுத்துள்ளேன்.. கண்டு மகிழுங்கள்..
**

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**


ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

ஆயி மகமாயி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 10 
 ஞாயிற்றுக்கிழமை


ஆதி பராசக்தி திரைப் படத்திற்காக
பாரம்பர்ய மாரியம்மன் தாலாட்டினை ஒட்டி
கவியரசர் இயற்றிய பாடல்

பாடியவர் சுசீலா
இசை 
திரை இசைத் திலகம்
இயக்கம்
இயக்குனர் திலகம்


ஆயி மகமாயி ஆயிரம்
கண்ணுடையாள் 
நீலி திரிசூலி நீங்காத
பொட்டுடையாள்

சமயபுரத்தாளே 
சாம்பிராணி வாசகியே 
சமயபுரத்தை விட்டு 
சடுதியிலே வாருமம்மா..

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே..

சிலம்பு பிறந்ததம்மா
சிவலிங்கப் பாறையிலே 
பிரம்பு பிறந்ததம்மா 
பிச்சாண்டி சந்நிதியில்

உடுக்கை பிறந்ததம்மா
உருத்திராட்ச பூமியிலே 
பம்பை பிறந்ததம்மா  
பளிங்கு மா மண்டபத்தில்

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே..

பரிகாசம் செய்தவரை 
பதைபதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா
பக்கத்துணை நீ இருப்பே..
மேல்நாட்டுப் பிள்ளையிடம் 
நீ போட்ட முத்திரையை 
நீ பார்த்து ஆத்தி வச்சா 
நாள் பார்த்து பூஜை செய்வான்..

மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே..

குழந்தை வருந்துவது 
கோயிலுக்குக் கேட்கலையோ 
மைந்தன் வருந்துவது 
மாளிகைக்கு கேட்கலையோ..

ஏழைக் குழந்தையம்மா
எடுப்போர்க்கு பாலனம்மா 
உன் தாளில் பணிந்து விட்டான்
தயவுடனே பாருமம்மா..

கத்தி போல் வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்
வித்தை தனை யார் அறிவார்..


ஆயா மனமிரங்கு
என் ஆத்தா மனம் இரங்கு
அம்மையே நீ இரங்கு என்
அன்னையே நீ இரங்கு..
 

குழந்தை வருந்துவது 
கோயிலுக்குக் கேட்கலையோ 
மைந்தன் வருந்துவது 
மாளிகைக்கு கேட்கலையோ..
***
 
ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

அம்மன் தரிசனம் - 03

ஆடிப் பதினெட்டாம் நாள்.

ஸ்ரீரங்கம். பூலோக வைகுந்தம். ஆழ்வார்கள் பாடியருளிய திருத்தலம். 

பொங்கிப் பெருகிய புது வெள்ளம் தவழும் அம்மா மண்டபத்தின் படித்துறை.   


அரங்கனை எதிர்நோக்கி அங்கேயே - பூங்கொடியாள் பொன்னி  - சுழித்துக் கொண்டிருக்கின்றாள். 

அதோ  - காவிரிப் பூம்பாவைக்கு என மங்கலப் பொருட்கள் - யானையின் மீது ஊர்வலமாக வருகின்றன. யானையின் மீது  வந்த மங்கலப் பொருட்கள் அனைத்தும் அரங்கனின் முன்னிலையில் சரி பார்க்கப்படுகின்றன. 

நிறை மங்கலங்களை, நிறைந்த மனதுடன் - காவிரிக்கு சீர் செய்கின்றான் - அரங்கன். 

அகமும் புறமும் குளிர்கின்றது. ''..இன்றுபோல் என்றும் பொங்கிப் பெருகி வாழ்க!..'' -  என மங்கல வாழ்த்தொலி கேட்கின்றது!..

இப்படி அரங்கனின் சீர் செய்வது காவிரிக்கு மட்டும் தானா!.. 

அன்புக்கோர் அண்ணன் என - அரங்கன் முன் நின்று -  சீர் செய்யும் மற்றோர் நாள் - தை பூசம்.

சங்கொடு சக்கரம் தாங்கிய திருக்கரத்தான் -  வழங்கும் சீர்வரிசையை வாஞ்சையுடன் ஏற்று மகிழ்பவள் -  சஞ்சலம் தீர்க்கும் சமயபுரத்தாள்!..

தன் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கென -  பச்சைப் பட்டினி விரதம் ஏற்பவள் - சமயபுரத்தாள்!..


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை தொடங்கி இருபத்தேட்டு நாட்களுக்கு அம்பிகை மேற்கொள்ளும் பச்சைப் பட்டினி விரதம் ஒன்றே அவளது பாசத்தைச் சொல்லும்!..

அதனால் தானே, அந்தப் பூவாடைக்காரிக்கு - அன்பின் மிகுதியால் அன்பர்கள் கூடி - பூச்சொரிந்து -  புது மலர்த் தாளைத் தலைமேற் சூடிக் கொள்கின்றனர்.

(முந்தைய பதிவு -   பூச்சொரிதல் - 2013 )

''..எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா!..'' - என,  எங்கிருந்தும் வேண்டிக் கொள்பவர் தம் - இன்னல்களையும் இடையூறுகளையும் நீக்குவதனால்,

''..சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்!..'' - என்று நம்மால் நிம்மதியுடன்  வாழ முடிகின்றது.


அபயக்கரம் கொடுத்து ஆதரிக்கும், ஆயிரங்கண்ணுடைய அம்பிகையை ஆராதிக்கும் பாடல்களுள் மிகச்சிறப்பானது - மாரியம்மன் தாலாட்டு.

தாளமுடியாத வெப்பத்தினால் ஏற்படும்  அம்மை நோயால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களுக்கு  ஆறுதலும் தேறுதலும் தருவது - மாரியம்மன் தாலாட்டு.

சமயபுரம், தஞ்சை புன்னைநல்லூர், வலங்கைமான் , நாகை நெல்லுக் கடை இன்னும் பல்வேறு - மாரியம்மன் திருக்கோயில்களிலும், இந்த மாரியம்மன் தாலாட்டினைப் பாடி நோய் நீங்கப்பெறும் மக்களைக் காணலாம்.

பழைமையான மாரியம்மன் தாலாட்டு - இன்று வலைத்தளங்களில் காணக் கிடைக்கின்றது.  மாரியம்மன் தாலாட்டு - எந்த நேரத்திலும் வாசிக்கலாம் எனக் குறிப்பிடுகின்றனர். அது எவ்வளவு தூரம் சரியானது என்று எனக்குத் தெரியவில்லை.


ஸ்ரீமகாசக்தி -  காளி என வடிவு கொண்டு வரும் போது சில குற்றங்குறைகளை பொருட்படுத்துவதில்லை. ஆனால்,

மாரியம்மன் எனத் திருக்கோலம் தாங்கி வரும் போது  - அகந்தூய்மையையும் புறந்தூய்மையையும் மிகப் பெரிதாகக் கொள்கின்றாள்.

ஆருயிர்களிடத்தில் இரக்கம் உடையவள் அன்னை. எனினும்  நோய்களைத் தீர்ப்பவள். ஆதலால் - ஆசாரக் குறைவுகள் இருக்கக் கூடாது என்பது திருக் குறிப்பு. நோயுற்ற மக்கள் நலம் பெற வேண்டி மாரியம்மனை அழைக்கும் போது சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகின்றது.

மாரியம்மன் தாலாட்டினை வாசிக்கும் போது அன்னை - தன் பரிவாரங்கள் சூழ வந்து  நிற்பாள். எனவே, மாரியம்மன் தாலாட்டினை வாசிக்க ஏற்றது - மிகவும் சுத்தமான வசிப்பிடம். அல்லது,

அவளது திருக்கோயிலே!..

மாரியம்மன் தாலாட்டினை -  மனதின் உள்வாங்கி - அதன் சாயலாக -  சில வரிகளை என்னளவில் பதிவிடுகின்றேன்!.. 

குற்றங்குறைகளை அன்னை மன்னிப்பாளாக!..

மக்களோடு மக்களாய், மனையிருக்கும் மாதரசி - மாரியம்மன் திருவடிகளைத் தொட்டு வணங்கி -

அம்மன் தரிசனம்!.. 


மாயி மகமாயி மணிமந்திர சேகரியே
ஆயி உமை ஆனவளே ஆஸ்தான மாரிமுத்தே!..
மாநிலத்தைப் பெற்றவளே மாதரசி வாருமம்மா 
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா!.. 

குழந்தை வருந்துறதுன் கோயிலுக்குக் கேட்கலையோ 
மைந்தன் வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கலையோ!..
வருந்தி அழைக்கின்றேன் வண்ண முகங்காணாமல் 
திருந்தி அழைக்கின்றேன் தேவி முகங் காணாமல் 

உன்னைப் போல்ஒரு தெய்வம் உலகத்தில் கண்டதில்லை 
என்னைப் போல்பிள்ளையும் தான்எங்குமுண்டு வையகத்தில்!..
தங்கமுத்து வடம் அசைய கொங்கை ரெண்டும் பாலொழுக 
ஏற்று எனை வரந்தருவாய் என் தாயே  மாரியம்மா!.. 

உற்றவளாய் நீயிருந்து உத்தமியே காத்திடம்மா 
பெற்றவளே பெரியவளே மங்கலமாய் காத்திடம்மா!..
பக்கத்தில் நீயிருந்து பாலகனைக் காத்திடம்மா 
எக்கணமும் இங்கிருந்து உன்மகனைக் காத்திடம்மா!..


ஏழைக் குழந்தையம்மா எடுப்போர்க்குப் பாலனம்மா 
பச்சைக் குழந்தையம்மா பரிதவிக்கும் பிள்ளையம்மா!..
உற்றவளாய் நீயிருக்க உன்மடியில் நானிருக்க
பெற்றவளாய் நீயிருக்க என்மனதில் என்ன குறை!..

தீவினையும் தீர்ந்தழிய திருநீற்றில் காத்திடம்மா 
திக்கெல்லாம்  நிற்பவளே தீர்த்தத்தில் காத்திடம்மா!..
கோலவிழியழகி குங்குமத்தில் காத்திடம்மா 
மாரி மகமாயி மஞ்சளிலே காத்திடம்மா!..

வேம்பு ரதமேறி வித்தகியே வாருமம்மா 
பச்சிலை ரதமேறி பார்வதியே வாருமம்மா!..
வெள்ளிப் பிரம்பெடுத்து வீதிவழி வந்திடம்மா
தங்கப் பிரம்பெடுத்து தயவுடனே வந்திடம்மா!.. 


இந்தமனை வாழுமம்மா  ஈஸ்வரியே வந்திடுவாய் 
வந்தமனை வாழுமம்மா வடிவழகி வந்திடுவாய்!..
சொல்லத் தெரியவில்லை சோதியுள்ள மாரிமுத்தே 
சொன்னதும் போதவில்லை நீதியுள்ள மாரிமுத்தே!..

ஞாயிறு, ஜூலை 21, 2013

அம்மன் தரிசனம் - 01

அன்னை புற்றுருவாக புன்னை வனத்தினுள் எழுந்த திருத்தலம்.

வேண்டி நின்ற மன்னனுக்காக  - தான் இருக்கும் இடத்தைத் தானே - ஒரு சிறுமியின் வடிவாக வந்து காட்டியருளிய திருத்தலம்.


அம்மையினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்த  - இளவரசியின் விழிகள் மீண்டும் கிடைக்கப் பெற்ற திருத்தலம்.

ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரரின் திருக்கரங்களால் - ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்யப் பெற்ற திருத்தலம்.

ஸ்ரீ பைரவஉபாசகரான மகான் பாடகச்சேரி சுவாமிகள் பலகாலம் தங்கி இருந்த திருத்தலம். 

அவர் திருக்கரங்களால்  நிறைவான அன்ன தானங்கள் வழங்கப்பட்ட திருத்தலம். நோயுற்ற மக்களுக்கு- ஸ்ரீபாடகச்சேரி மகான் செய்த நன்மைகளை நினைவு கூரும் வகையில் அவர் தம்  திருவடிவம் விளங்கும் திருத்தலம். 

 ஸ்ரீ முத்துமாரியம்மனுடன் - ஸ்ரீ விஷ்ணுதுர்கையும் ஸ்ரீ காளியம்மனும் விளங்கும் தலம்.


மூர்த்தி தலம் தீர்த்தம் - எனும் மூன்றினாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலம்.

அம்மை நோய் கண்டவர்கள்  பெருமளவில் வந்து தங்கி பிரார்த்தனை செய்து குணமடையப் பெறும் திருத்தலம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் - செய்யப்படும் தைலக்காப்பின் போது உக்ர ஸ்வரூபிணியாக விளங்கி  - அம்பாள் -  தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திருத்தலம்.

கோடையில்- அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்துமுத்தாக  வியர்வைத் துளிகள் பூக்கும் திருத்தலம்.

ஆறடி உயரத்தில் எழில் தவழும் திருமுகத்துடன் - அம்பாள் அருள் பொழியும் திருத்தலம்.


சோழ வளநாட்டின் திருத்தலங்களுள் சிறப்பிடம் பெற்று விளங்கும் திருத் தலம். 

அந்தத் திருத்தலம் தான் - தஞ்சை  புன்னைநல்லூர்.

அங்கே - குடிகொண்டு விளங்குபவள்,

தாய் மகமாயி ஸ்ரீ முத்து மாரியம்மன்!..

வல்வினையின் வசப்பட்டு  - வாடி வந்தோர்க்கும்
தொல்வினையால்  துயருற்றுத் - தேடி வந்தோர்க்கும் 
அல்லலுற்று அவதியுற்று  - நாடி வந்தோர்க்கும்
உற்றதுணை ஏதுமின்றி  - ஓடி வந்தோர்க்கும் 

வற்றாது தான்சுரக்கும் கருணையின் ஊற்று!..
வழியென்று ஒளிகூட்டும் வெண்ணிலவின் கீற்று!.. 

அவள் -


குடி கெடுக்கும் பகை கெடுத்தாள் 
கூட வரும் பழி கெடுத்தாள்
வினை கெடுத்தாள் நோய் கெடுத்தாள் 
வழி மறிக்கும் தடை கெடுத்தாள்!..

கரு கொடுத்தாள்  உரு கொடுத்தாள்  
ஒளி கொடுத்தாள்  மொழி கொடுத்தாள் 
மணங்கொடுத்தாள் குணம் கொடுத்தாள் 
தனங்கொடுத்தாள் தவம் கொடுத்தாள்

கோடி கோடி நலம் கொடுத்தாள் 
குன்றாத வளங் கொடுத்தாள்
சொல் கொடுத்தாள் பொருள் கொடுத்தாள்  
பொன்றாத புகழ் கொடுத்தாள்

அருள் கொடுத்தாள்  பொருள் கொடுத்தாள்  
ஆயுளையும் தான் கொடுத்தாள்
நெல் கொடுத்தாள்  நீர் கொடுத்தாள்  
நீள்விசும்பில் இடம் கொடுத்தாள்!..

மீண்டும் நான் பிறவி கொண்டால் - 

மகிழ்ந்தெனக்கு மடி கொடுப்பாள் -   மார்மீது சேர்த்தெடுப்பாள்!..
''மகனே நீ வாழ்க!..'' என்று - வாஞ்சையுடன் வார்த்தெடுப்பாள்!..

தொடர்புடைய பதிவு :

ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

புன்னைநல்லூர்


தமிழகத்தில் மாரியம்மன் குடிகொண்டுள்ள சிறப்பான தலங்களுள் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலும் ஒன்று..


தஞ்சையின் கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் பசுமையான வயல்களுக்கு மத்தியில்  அமைந்துள்ளது  புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்.  



இன்றும் காணக்கூடிய அதிசயமாக - ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்தில்,  முத்து முத்தாக  வியர்த்து தானாக உலர்கின்றது.  இதனாலேயே  அன்னை முத்துமாரி எனப்பட்டாள்.

கோபுரத்தடியில் விநாயகர், முருகன், நாகர் சந்நிதிகள். தென்புறத்தில் ஸ்ரீகாளியம்மன் மற்றும்  பூர்ண புஷ்கலைதேவியருடன் ஸ்ரீ ஐயனார் வீற்றிருக்கின்றார்.

 

ஆடி மாதம் - முத்துப் பல்லக்கு ஆவணி மாதம் - கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாதம் - தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா.. 

தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசித்து பேரானந்தம் அடைகின்றனர். 

வருடத்தின் சிறப்பு நாட்களான - தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.

புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.

அம்மை நோய் கண்டவர்கள் பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் சிறப்பு.

இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுவது கண்கூடு.

அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு  போடுகிறார்கள். குறிப்பாக கண் நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர். 

வயிறு பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வயிற்றில் மாவிளக்கு இடுகின்றனர். 

உடம்பில் கட்டிகள் இருந்து குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போடுகின்றார்கள்.

பொதுவாக உப்பு வாங்கிப் போடுதல் நேர்த்திக் கடனாகின்றது. 

ஆடு, மாடு, கோழி காணிக்கை தருகின்றனர். 

பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதல், முடிக்காணிக்கை, பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்தில் முக்கிய நேர்த்திகடன்கள் 

தவிர - அம்மனுக்கு எலுமிச்சம் பழங்களால் நிலைமாலை சாத்துதல் சிறப்பு வழிபாடு. 

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உஷ்ணத்தால் நோய்கள் ஏற்படும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து கொண்டு உள்தொட்டி,  வெளித் தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைதல் இன்றுவரை கண்கூடாக நிகழ்கின்றது.

தஞ்சை புன்னைநல்லூர் மாரிம்மன் கோயில் பிராம்மணாள் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் வருடந்தோறும் வெகு சிறப்பாக நேற்று பால்குடத் திருவிழா நடைபெறும். 

முதல் நாள் நிகழ்ச்சியாக தஞ்சை மேல ராஜவீதி சங்கரமடத்தில் அம்பாள் கடஸ்தாபனமும், அம்பாளுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெறும். 

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. 

மூன்றாம் நாள் காலையில் சண்டிஹோமம். மதியம்12 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் கஞ்சி வார்த்தல்.

மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெறும்.

இதைத் தொடர்ந்து நான்காம் நாள் காலை 7.30 மணியளவில் ஏறத்தாழ 1,500 பேர் பால்குடங்கள் எடுத்து கொண்டு தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்படுவர். 

மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி, கீழவாசல் வழியாக பிற்பகலில் மாரியம்மன் கோயில் சென்றடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வர்.. 

திருக்கோயில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு அம்மன் புறப்பாடு நிகழும்.

இந்த ஆண்டு பால்குட வைபவம் கடந்த 2/4/2013 அன்று நடந்தது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றாக தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது.

அம்பாளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். 


ஆடி மாதம் முத்து பல்லக்கு , ஆவணி மாதம் வருடாந்திர திருவிழாவும், கடைசி ஞாயிற்றுக்கிழமையும் தேரோட்டமும் , புரட்டாசி மாத தெப்ப உற்சவம் விடையாற்றி மற்றும் நவராத்திரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.

ஆகம விதிப்படி பூஜைகள்  நிகழும் இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாகும்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்கும் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன. 

கண் திறந்து பார்க்கும் அருள் தெய்வம் நீயம்மா!..
இந்த மண்ணில் உன்னை மறவாத வரம் வேண்டும் அம்மா!..
* * *

சனி, ஏப்ரல் 06, 2013

சமயபுரம்


திருச்சி - சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது..

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கவும், உலக நன்மைக்காகவும் மாரியம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் (மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை) பூச்சொரிதல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.


ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். 

இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது. 

இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று  அழைக்கப்படுகிறது.

பூச்சொரிதலையொட்டி அதிகாலையில் கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணமும், தொடர்ந்து அம்பாளுக்கு காப்புக் கட்டுதலும் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து, யானை மீது பூக்கூடைகளை வைத்தும், திருக்கோவில் பணியாளர்களும் பூத்தட்டுகள், பூக்கூடைகளை ஏந்தியும் தேரோடும் வீதி வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு பூக்களை சாத்தினர்.

திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பூக்கள் சாத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமயபுரத்தைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மனுக்கு கூடைகளிலும், தட்டுகளிலும் பூக்களைக் கொண்டுவந்து அம்மனுக்கு சாத்தினர்.

இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விடிய,விடிய பக்தர்கள் வந்து அம்மனுக்கு பூக்களை சாத்தினர்.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) தொடங்குகிறது.

மாரியம்மன் மேற்கொண்ட 28 நாள் பச்சைப்பட்டினி விரதம் ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைகிறது.

சிவபெருமானிடம் உள்ள படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்  ஆகிய ஐந்தொழில்களையும் அம்பாள் அருள் புரிந்து வருவதாக இத்தலத்தின் ஐதீகம்.

புகழ்மிக்க சித்திரை பெருந்திருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக் கிழமை காலை 6.40 மணிக்கு நடைபெறுகிறது. 

தொடர்ந்து சிம்மம், பூதம், அன்னம், ரிஷப, யானை, சேஷ, மரக்குதிரை என ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொருவாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா.. 

வெள்ளிக் குதிரை வாகனப் புறப்பாடு ஏப்ரல் 15 ஆம் தேதியும், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 16 ஆம் தேதியும் நடைபெறுகிறது. 

இதைத் தொடர்ந்து 13 ஆம் திருநாளான ஏப்ரல் 19 ஆம் தேதி தெப்பத்தில் வாண வேடிக்கையுடன் உத்சவ அம்பாள் எழுந்தருளி வலம் வருதல் நடைபெற உள்ளது.

சித்திரைத் பெருந்திருவிழாவில் தேரோட்டத்தன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குரிய ஏற்பாடுகள் எய்யப்படுகின்றன.. 


அன்னை நம்மை அரவணைத்து நம்மிடம் காட்டும் அன்பு அலாதியானது. தனிப்பெருங்கருணைக்கு அவளே அடையாளமானவள். 

அதே சமயம் கோபங் கொண்டு 
நம்மைத் திருத்தி நல்வழியினைக் காட்டுபவளும் அவளே!...

நமக்காக விரதம் நிறைவேற்றி, நாமும் - நம் சந்ததியும் நன்றாக வாழ்வதற்கு -  

திருவீதி எழுந்தருளி,  வலம் வந்து அருள் புரியும் அன்னைக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகின்றோம்?...

நல்ல மலர்களைத் தூவி வழிபட்டு அவள் திருப்பெயரைச் சொல்லி அர்ச்சித்து வணங்குவோம்!... 

அன்னையைச் சிந்தித்து அவள் சந்நிதியில் மாவிளக்கு ஏற்றுவோம்!... 

துள்ளுமாவு, மோர், இளநீர், பானகம் - எனப் பரிவுடன் சமர்ப்பித்து நிறைவாக - கூழ் வார்ப்போம்!....

சமயபுரத்தாளே!... சரணம்!...

வெள்ளி, பிப்ரவரி 08, 2013

தை வெள்ளி - 04

ஸ்ரீதுர்கை, பட்டீஸ்வரம்.
சக்தி வழிபாடு என்பது நம் மண்ணில் வேரூன்றிய ஒன்று. சக்தி என்பவள் எல்லாவற்றையும்  கடந்த மகாசக்தியாக, பராசக்தியாக போற்றப்படுவள். அவளே பக்தி, ஞானம்,அமைதி, கோபம்,  பசி, தாகம், இன்பம், துன்பம், ஒளி, இருள் - என எல்லாவற்றிலும் விரவி நிற்பதாக - எல்லா படைப்புகளிலும் தாயாக நின்று அன்புடன் அரவணைத்துக் காப்பதாக சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர். 

பராசக்தி தத்துவம் பன்னெடுங்காலமாக பாரதத்தில் நிலைத்துள்ள ஒன்று. ''சக்தி இல்லையேல் சிவம் இல்லை -  சிவம் இல்லையேல்  சக்தி இல்லை'' என்று இணைத்து  ஆணையும் பெண்ணையும் சரிபாதியாக நிலை நிறுத்தியதே அதன் உச்சம்.

காஞ்சியில் காமாட்சி, மதுரையில் மீனாட்சி, காசியில் விசாலாட்சி, குமரியில் கன்னி, தில்லையில் சிவகாம சுந்தரி - என  எங்கெங்கும் அம்பிகை கொலு வீற்றிருக்கின்றாள்.
ஸ்ரீவடபத்ரகாளி, தஞ்சை.
ஒரு புறம் கோபாக்னி வீச கொடுமைகளை வேரறுக்கும் மகாகாளி எனில் மறுபுறம் சிம்ம வாஹினியாய் சீறிச் சினந்து சிறுமைகளைச் சிதறடிக்கும் ஸ்ரீதுர்க்கை என அம்பிகை நம்முடன் துணைக்கு வருகின்றாள்.

இவற்றையும் தாண்டி - மற்றொரு அம்சமாக - தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும்   எதிரொலிக்கும் திருப்பெயர் - மாரியம்மன். 

தமிழகத்தில் மாரியம்மன் திருக்கோயில் இல்லாத ஊரும் உண்டோ!.....

சமயபுரத்தில், தஞ்சையில், மதுரையில், திருவேற்காட்டில், திண்டுக்கல்லில், காரைக்குடியில், பட்டுக்கோட்டையில், பன்னாரியில், பெரியபாளையத்தில், சேலத்தில், ஈரோட்டில், மருவத்தூரில் - திசையெங்கும் அன்னை மாரியின் திருக்கோயில்கள்.
ஸ்ரீமாரியம்மன், புன்னைநல்லூர், தஞ்சை.
மக்களின் பிணிகளைப் போக்குவதில் அவளுக்கு ஈடு இணை கிடையாது. நோயுற்ற மக்கள் மாரியம்மனின் திருக்கோயில்களில் தங்கி - நலம் பெறுவது இன்றளவும் கண்கூடு. வேப்பிலையும் மஞ்சளும் எலுமிச்சையும் அவளுடைய புனித அடையாளங்கள்.

வழக்கமான திருவிழாக்கள் ஒருபுறம் இருந்தாலும் - கிராமங்களிலும், நகரங்களிலும் - ஆங்கே வீற்றிருந்து அருள் புரியும் மாரியம்மனுக்கு சிறப்பாக, அபிஷேக அலங்காரம் என வழிபாடுகளை நடத்தி மகிழும் நாள் - தை வெள்ளிக் கிழமை.

இயன்றவரை திருக்கோயில்களுக்குச் சென்று வணங்கி வழிபட்டாலும் , நாம் குடியிருக்கும் வீடு விளங்க - வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு  வருவதாகும். 

தினமும் காலை, மாலை வேளைகளில் திருவிளக்கில் நல்லெண்ணெய்  ஊற்றி  சுத்தமான வெள்ளை நூல் இழைகளால் திரியிட்டு தீபமேற்றி - சிவப்பு நிற மலர்களைச் சூட்டி,  "பாயஸன்ன ப்ரியை"   - என அன்புடன் அழைக்கப் படும் அன்னைக்கு, பால் பாயசத்துடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக சமர்ப்பித்து மஹிஷாசுரமர்த்தனி ஸ்தோத்திரம், செளந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி - என இயன்றவரை தெரிந்த பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு.

செவ்வாய், வெள்ளி - இரு தினங்களும் அம்பிகை வழிபாட்டுக்கு ஏற்றவை. பிரத்யேக பிரார்த்தனை எனில் ஞாயிறு உகந்தது.

ஆடி மற்றும் தை மாத வெள்ளிக் கிழமைகளில் திருக்கோயில்கள் தோறும் குத்துவிளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. கன்னியரும் சுமங்கலிகளும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் திருவிளக்கினை அம்பிகையாக வணங்கி குங்குமம் மலர்களால் தாமே அர்ச்சனை செய்து பெரும்பேறு எய்துகின்றனர்.

அம்பிகை - '' நம் வாழ்வின் துன்ப இருளை அகற்றி, இன்ப ஒளியினைப் பெருக்கும் திருவிளக்காகி  சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றாள் '' - என்பதே திருவிளக்கு பூஜையின் தத்துவம். 

"அம்பிகையைச்  சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்..." என்பது மகாகவி பாரதியாரின் திருவாக்கு.

"முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே..." என்கின்றார் அபிராமி பட்டர்.

'' யா தேவி சர்வ பூதேஷூ: சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ''

'' எல்லா உயிர்களிலும் சக்தி வடிவாக நிறைந்திருக்கின்ற தேவி அவளுக்கு எங்கள் வணக்கம்...'' - என்று பணிந்து புகழ்வது தேவி மஹாத்மியம்.

அம்பிகையைச் சரணடைவோம்!... அதிக நலம் பெறுவோம்!...
திருச்சிற்றம்பலம்.