திருச்சி - சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது..
தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கவும், உலக நன்மைக்காகவும் மாரியம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் (மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை) பூச்சொரிதல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று ஸ்ரீமாரியம்மன் உலக நன்மைக்காக பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.
இந்த விரத நாட்கள் மொத்தம் 28. இந்த காலங்களில் அம்மனுக்கு தளிகை நெய்வேத்தியம் கிடையாது. இந்த விரத நாட்களில் துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டும் அம்மனுக்கு நிவேதிக்கப்படுகிறது.
இந்த விரதம் இனிதே நிறைவேற மூலஸ்தான அம்மனுக்கு பூக்களால் அபிசேகம் செய்வதே பூச்சொரிதல் என்று அழைக்கப்படுகிறது.
பூச்சொரிதலையொட்டி அதிகாலையில் கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணமும், தொடர்ந்து அம்பாளுக்கு காப்புக் கட்டுதலும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, யானை மீது பூக்கூடைகளை வைத்தும், திருக்கோவில் பணியாளர்களும் பூத்தட்டுகள், பூக்கூடைகளை ஏந்தியும் தேரோடும் வீதி வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு பூக்களை சாத்தினர்.
திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பூக்கள் சாத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமயபுரத்தைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மனுக்கு கூடைகளிலும், தட்டுகளிலும் பூக்களைக் கொண்டுவந்து அம்மனுக்கு சாத்தினர்.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விடிய,விடிய பக்தர்கள் வந்து அம்மனுக்கு பூக்களை சாத்தினர்.
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) தொடங்குகிறது.
மாரியம்மன் மேற்கொண்ட 28 நாள் பச்சைப்பட்டினி விரதம் ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைகிறது.
சிவபெருமானிடம் உள்ள படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் அம்பாள் அருள் புரிந்து வருவதாக இத்தலத்தின் ஐதீகம்.
புகழ்மிக்க சித்திரை பெருந்திருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக் கிழமை காலை 6.40 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்ந்து சிம்மம், பூதம், அன்னம், ரிஷப, யானை, சேஷ, மரக்குதிரை என ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொருவாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா..
வெள்ளிக் குதிரை வாகனப் புறப்பாடு ஏப்ரல் 15 ஆம் தேதியும், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 16 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து 13 ஆம் திருநாளான ஏப்ரல் 19 ஆம் தேதி தெப்பத்தில் வாண வேடிக்கையுடன் உத்சவ அம்பாள் எழுந்தருளி வலம் வருதல் நடைபெற உள்ளது.
சித்திரைத் பெருந்திருவிழாவில் தேரோட்டத்தன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குரிய ஏற்பாடுகள் எய்யப்படுகின்றன..
அன்னை நம்மை அரவணைத்து நம்மிடம் காட்டும் அன்பு அலாதியானது. தனிப்பெருங்கருணைக்கு அவளே அடையாளமானவள்.
அதே சமயம் கோபங் கொண்டு
நம்மைத் திருத்தி நல்வழியினைக் காட்டுபவளும் அவளே!...
நமக்காக விரதம் நிறைவேற்றி, நாமும் - நம் சந்ததியும் நன்றாக வாழ்வதற்கு -
திருவீதி எழுந்தருளி, வலம் வந்து அருள் புரியும் அன்னைக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகின்றோம்?...
நல்ல மலர்களைத் தூவி வழிபட்டு அவள் திருப்பெயரைச் சொல்லி அர்ச்சித்து வணங்குவோம்!...
அன்னையைச் சிந்தித்து அவள் சந்நிதியில் மாவிளக்கு ஏற்றுவோம்!...
துள்ளுமாவு, மோர், இளநீர், பானகம் - எனப் பரிவுடன் சமர்ப்பித்து நிறைவாக - கூழ் வார்ப்போம்!....
சமயபுரத்தாளே!... சரணம்!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..