நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 08, 2013

சித்திரைத் திருமகள்

சித்திரைத் திருமகளே வருக!... வருக!... 


பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்தும் சித்திரை மாதத்தில் தான் - மக்கள் மனம் மகிழ மல்லிகையும் முல்லையும் மலர்கின்றன.



சித்திரை மாதத்தில் தான் தேமாங்கனிகளும் திகட்டாத தேன்பலா சுளைகளும் இயற்கை அன்னையின் அருட்கொடையால் ஊர் முழுக்க மலிந்து கிடக்கின்றன.

"சைத்ர '' என்று அழைக்கப்பெறும் சித்திரை  முதல் நாளன்று,  பிரம்மதேவன் உலகைப் படைத்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 


வருடம் பிறந்ததும் நித்ய மங்கலங்களான சிவலிங்கம், பசு, வலம்புரிச்சங்கு நிறைகுடம், மலர்கள், கண்ணாடி, தீபம், நகைகள் - ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தரிசித்தல் அவசியம். 

விடியற்காலையில் குளித்து முடித்து நெற்றியில் சம்பிரதாயமாக திருநீறு பூசி - சந்தனம், குங்குமம்  சூடி, நறுமலர்களைச் சூட்டி திருவிளக்கேற்றி வைத்து மஹாகணபதியை வணங்கி வழிபடவேண்டும்.  குலதெய்வத்தின் ஆலயத்தில் புத்தாடைகளை சமர்ப்பித்து வழிபாடு செய்வது இன்னும் விசேஷமானது.  

சூரிய பகவானுக்கு சர்க்கரைப் பொங்கல்  நிவேத்யம் செய்து வணங்குதல் கூட பாரம்பர்யத்தின் பழக்கமாகும்.

அன்றைய தினம் இயன்றவரை புத்தாடையும் பொன்நகையும் அணிதல் சிறப்பு. பொன்நகையினும் மேம்பட்ட புன்னகை துலங்கத் திகழ்வது அதனினும் பெருஞ்சிறப்பு. 

இல்லத்தில் வழிபாடு செய்தபின் பெற்றோர், மூத்தோர், குரு - ஆகியோரை வணங்கி, அவர்களிடம் ஆசி பெறுவது நம்மை மேல்நிலைக்கு உயர்த்தும். வேப்பம்பூ சேர்த்து அறுசுவைகளுடன்  உணவு உண்டு மகிழ்தலும் மரபாகும்.


மக்களும், கால்நடைச் செல்வங்களும், பயிர் வகைகளும் தழைத்து இன்புற வேண்டும் என - வேண்டிக்கொண்டு வருடத்தின் முதல் நாளில் ஆலய தரிசனம் செய்தல் முறையாகும்.

தொடர்ந்து பெரியவர்கள் மூலமாக அல்லது ஆலயங்களில் பஞ்சாங்க வாசிப்பு நிகழ்வில் இவ்வருடத்துக்குரிய பஞ்சாங்க பலனைக் கேட்டறிதல் வேண்டும். 

பஞ்சாங்க பலன் கேட்பதன் மூலம் -  வருடம் முழுவதும் நமக்கும் நாட்டுக்கும் எத்தகைய விளைவுகள் நிகழக் கூடும் என்பதை  மேலோட்டமாக அறிந்து - சில பிரச்னைகளில் நம்மை ஓரளவுக்கேனும் தற்காத்துக் கொள்ள முடியும். 

அன்றைய தினம் இயன்ற அளவு தானம் செய்தலும் நற்செயலாகும்.

வருடப் பிறப்பன்று ஆலய தரிசனம், குலதெய்வ பொங்கல், விருந்துண்ணல், இயன்ற அளவு தான தருமம் செய்தல், பஞ்சாங்க பலன் கேட்டல், உறவினர் வீடு செல்லல் ஆகியன  தொன்று தொட்டு நிகழ்வன.  

கிராமப்புறங்களில்  பண்பாட்டின் வெளிப்பாடாக  ஆடல், பாடல், பாரம்பரிய விளையாட்டு, பட்டிமன்றம், கவிதை அரங்கம் - என  மகிழ்ச்சியுடன் சித்திரைப் புத்தாண்டைச் சிறப்பித்துக் கொண்டாடுதல் குறிப்பிடத்தக்கது.. 


இந்த வகையில் நாம் இப்புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடுவோம். அத்துடன் நல்லனவற்றை எண்ணி, நல்லனவற்றையே செய்வோம். 

வீடும் நாடும் நலம் பெற வேண்டிக்கொண்டு, இப்புத்தாண்டு தினத்தில் பெண்மையைப் பேணிக் காக்க உறுதி பூணுவோம்.

வாழ்க வையகம்!... வாழ்க வளமுடன்!...


பற்பல சிறப்புகள் நிறைந்த சித்திரை மாதத்தினை ''வருக... வருக'' என்று இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்போம்!...

பிறக்கும் புதிய ஆண்டில் நன்மைகள் பலவற்றை நாம் எய்தும்படிக்கு நம் உள்ளம் நல்ல வழியில் செல்லவேண்டுமெனெ  -

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக!
 * * *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..