தஞ்சை நகரை அடுத்துள்ள (11கி.மீ.) திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைப்
பெருவிழா 16/4 அன்று, கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.
தொடர்ந்து - பல்வேறு வாகனங்களில் ஐயனும் அம்பிகையும் வீதியுலா எழுந்தருள, 24/4 அன்று திருத்தேரோட்டமும் இனிதே நிகழ்ந்தது.
பக்தர்களுக்கு வர்த்தகப் பெருமக்கள் மற்றும் ஏனைய சிவநெறிச் செல்வர்கள் சார்பில் நீர்மோர்
அன்னதானம் வழங்கப்பட்டு திருத்தேர் நிலையடி வந்து சேர்ந்தவுடன் காவிரியாற்றில் வாணவேடிக்கையும் சிறப்பாக
நடந்துள்ளது. இத்திருவிழாவின் சிகரமாக - வரும் 27/4 - அன்று சப்தஸ்தான பெருவிழா.
ஆதியில் சிவசக்தியரின் சுவீகார புத்திரனாகிய நந்தியம் பெருமானுக்கும் - வியாக்ரபாதரின் அன்பு மகள் சுயம்பிரகாசை தேவிக்கும், திருமழபாடியில் பங்குனி மாத புனர்பூசத்தன்று மங்கலகரமாக திருமணம் நிகழ்ந்த வேளையில் - திருப்பழனத்திலிருந்து பல்வகையான பழவகைகள் அனுப்பி சிறப்பித்தனர்.
திருச்சோற்றுத்துறையினர் திருமணவிருந்து உபசரிப்பு முழுவதையும்ஏற்றுக் கொண்டனர். திருவேதிக்குடியின் வேதவித்துக்கள் கல்யாண மங்கலங்களை நிர்வகித்துக் கொண்டனர்.
மாலை நேர சித்ரான்ன உபசரிப்புகள் திருக்கண்டியூரின் வசம் வந்தது. மங்கல வைபவங்களுக்கான பூக்கள் திருப்பூந்துருத்தியில் இருந்து வந்து குவிந்தன. திருநெய்த்தானத்திலிருந்து வந்த நெய் எட்டுத் திக்கும் நறுமணம் வீசியது.
மங்கல வைபவம் நிகழ்ந்ததும் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் மாப்பிள்ளையாகிய நந்தியம்பெருமானை விழுந்து வணங்கிய அதிசயம்- இங்குதான் நிகழ்ந்தது. மனம் நிறைந்திருந்த வேளையில் அருள்மிகு ஐயாறப்பரும் - அறம்வளர்த்த நாயகியும் விருந்தினர்களை வாழ்த்தியருளினர்.
அச்சமயம் - இந்த ஆறு ஊர் மக்களும் ஒருமித்தகுரலாக - மாப்பிள்ளையும் பெண்ணும் எங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் - என வேண்டிக் கொண்டனர். அதன்படி,
சித்ரா பெளர்ணமியை அடுத்த விசாகத்தன்று அதிகாலை ஆறு மணியளவில் அருள்மிகு ஐயாறப்பர் - அன்னை தர்மசம்வர்த்தனி கண்ணாடி பல்லக்கிலும், புதுமணத் தம்பதியரான நந்திகேஸ்வரர் - சுயசாம்பிகை வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருள, மாடவீதிகளில் வலம் வந்து புஷ்யமண்டபத்தில் பிரசாதித்த பின், காவிரியின் வடகரையில் கிழக்கே உள்ள திருப்பழனத்தை நோக்கி பல்லக்குகள் செல்கின்றன.
திருவையாற்றில் இருந்து புறப்பட்டு வரும் மாப்பிள்ளை ஊர்வலத்தினை -
திருப்பழனத்தில், பெரியநாயகி - ஆபத்சகாயேஸ்வரரும்
திருச்சோற்றுத்துறையில், அன்னபூரணி - ஓதவனேஸ்வரரும்
திருவேதிக்குடியில், மங்கையர்க்கரசி - வேதபுரீஸ்வரரும்
திருக்கண்டியூரில், மங்களாம்பிகை - பிரம்மசிரக்கண்டேசரும்
திருப்பூந்துருத்தியில், செளந்தர நாயகி - புஷ்பவனேஸ்வரரும்
திருநெய்த்தானத்தில், பாலாம்பிகை - நெய்யாடியப்பரும்
- எதிர்கொண்டு அழைக்கின்றனர். ஐயாறப்பர் பல்லக்குடனேயே தாமும் தனித் தனியே பல்லக்குகளில் எழுந்தருளி உடன் வருகின்றனர். அன்று இரவு திருநெய்த்தானத்தில் காவிரி ஆற்று மணலில் எல்லா பல்லக்குகளும் நிலை தாங்கப்பட்டு - வாணவேடிக்கையும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
மறுநாள் காலையில் புறப்பட்டு, ஆறு தலங்களின் பல்லக்குகளுடன் வரும் ஐயாறப்பரையும் நந்தியம்பெருமானையும் சிறப்பாக வரவேற்கின்றனர்.
ஏழூர் பல்லக்குகளுடன் திருவையாற்றின் வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் நந்திகேஸ்வரர் உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
நிறைவாக தேரடியில் பொம்மை பூமாலை சூட்டுகின்றது. ஐயாறப்பருக்கு வேதமந்த்ரங்களுடன் தேவாரம் இசைத்து மங்கள ஆரத்தி செய்யும்போது ஐயாறப்பன் ஆனந்தமாக பண்டரங்கம் எனும் திருக்கூத்தினை நிகழ்த்தியபடி ஆலயப் பிரவேசமாகின்றார்.
திருவிழா இனிதே நிறைவடைய சந்தோஷமாக எல்லா பல்லக்குகளும் அவரவர் நிலைக்குத் திரும்புகின்றன.
சுமார் 20 கி.மீ. தூரம் உடைய இந்த வழித்தடம் எங்கும், பல்லக்குகளுடன் வரும் தொண்டர்களுக்கும் தேவார திருவாசகங்களைப் பாடிப் பரவியபடி வரும் சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் - நீர்மோர், பானகம், சித்ரான்னங்கள், மதிய உணவு - என வழங்கி மக்கள் அன்புடன் உபசரிப்பது சிறப்பானதாகும்.
திருவையாற்றில் தொடங்கி ஆறுதலங்களையும் தரிசித்து மீண்டும் திருவையாற்றை அடைவதே சப்தஸ்தானம் எனப்படும் ஏழூர் வலம் வரும் திருவிழா ஆகும்.
இந்த ஏழு திருத்தலங்களும் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலங்களாகும். இந்தப் பெருவிழா பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற விழா ஆகும். இந்த விழாவினை அருணகிரிநாதர் தரிசித்து ஆறு தலங்களையும் திருவையாற்றுடன் இணைத்துத் திருப்புகழ் பாடிப் பரவியுள்ளார்.
ஏழூர் பல்லக்குகளும் திருவையாற்றில் திருவீதியுலா வந்து, தேரடியில் பொம்மை பூமாலை போடும்
நிகழ்ச்சி 28/4- அன்று நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை ஐயாறன் அருட்துணையுடன் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை
குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் தலைமையில், ஆலய நிர்வாகிகளும், அன்பர்களும், பொதுமக்களும்
செய்து வருகின்றனர்.
அனைவரும் கலந்து கொண்டு திருவையாற்றுடன் ஆறு தலங்களையும் தரிசித்து வலம் வந்து வணங்கி, பெரும் பயன் பெற்றுய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் எனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறார்க்கு ஆளாய் நானுய்ந்தேனே. 4/13.
பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் எனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறார்க்கு ஆளாய் நானுய்ந்தேனே. 4/13.
- திருநாவுக்கரசர்
ஐயாறன் அடித்தலமே போற்றி!... போற்றி!...
நாங்களும் பகிர்வு மூலம் கலந்து கொண்ட திருப்தி...
பதிலளிநீக்குதகவல்களுக்கு சிறப்பு பகிர்வுக்கும் நன்றிகள்... வாழ்த்துக்கள் பல...
வணக்கம்.. தனபாலன் அவர்களே...தங்களை நேரில் அழைத்துச் செல்ல ஆசைதான்... என்ன செய்வது... விரைவில் கூடிவரும் அந்த நேரம்....
பதிலளிநீக்கு