நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

காமாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 16, 2019

கண் கொடுத்த காமாக்ஷி

தொண்டை மண்டலத்தின் சிவாலயங்களைத்
தரிசனம் செய்து கொண்டு வரும் வேளையில்
முந்தை வினையின் பயனாக -

திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் காணுகின்றார் சுந்தரர்..

சங்கிலி நாச்சியார் பால் தனது மனம் சென்றதை உணரும் சுந்தரர்
அவரைத் திருமணம் செய்து கொள்ள விழைகின்றார்..

மேலைச் சிவப் பரம்பொருளின் அருளாணையும்
அவ்வண்ணமாகவே இருந்தபடியால்
திருமணமும் இனிதே நிறைவேறுகின்றது..

மாதங்கள் உருண்டோட
சுந்தரர் மனதில் ஆரூரின் நினைவுகள் மூண்டெழுகின்றன..

அந்தவகைக்கு திரு ஆரூர் நோக்கிப் புறப்படும்போது
எம்மைப் பிரியமாட்டேன் என்று வாக்கு அளிக்க வேணும்!.. - என
சங்கிலி நாச்சியார் கேட்டுக் கொள்கிறார்..

அப்போது
பெருமானே.. நாளை வாக்களிக்கும்போது
தாம் மகிழ மரத்து நிழலில் எழுந்தருளியிருப்பீராக!...  - என்று,


தம்முள் வேண்டிக் கொள்கிறார் சுந்தரர்..

அவருடைய எண்ணம் சந்நிதியில் வைத்து வாக்களிப்போம் என்பது...

அன்றிரவு சங்கிலி நாச்சியாரின் கனவில் எழுந்தருளிய ஸ்வாமி -
மகிழ மரத்தினடியில் வைத்து வாக்குக் கேட்குமாறு பணிக்கின்றார்...

பொழுது விடிந்ததும் சுந்தரரிடம்
மகிழ மரத்தினடியில் வைத்து வாக்களிக்குமாறு சங்கிலியார் கேட்கின்றார்..

வேறொன்றும் சொல்ல இயலாத சுந்தரரும்
மகிழ மரத்தினடியில் வைத்து வாக்களிக்கின்றார்..
உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்!.. - என்று...

ஆனாலும் அடுத்த சில தினங்களில் திரு ஆரூருக்குப் புறப்பட
திரு ஒற்றியூரின் எல்லையில் சுந்தரரின் கண்ணொளி குறைந்து போகின்றது...

ஒளி குன்றிய விழிகளுடன் தட்டுத் தடுமாறி நடக்கும் சுந்தரர்க்கு
திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் அருளுகின்றான் - இறைவன்...

அவ்வேளையில்
கருணை கொண்ட அம்பிகை மின்னல் கொடியாக வழிகாட்டி
சுந்தரரை வழி நடத்துகின்றாள்...

ஒரு வழியாகக் காஞ்சி மாநகரை வந்தடைகின்றார் சுந்தரர்..

காஞ்சிப்பதியில் ஏகம்பரேஸ்வரரைத் தரிசிக்கும் வேளையில்
வலக்கண்ணில் பார்வை நலம் எய்துகின்றார்...

கண்ணாரக் காண்க!.. என்று
காமாக்ஷி அம்பிகையே கண் வழங்கினாள் என்பது திருக்குறிப்பு..

கண் பெற்ற மாத்திரத்தில்
இன்தமிழால் ஏத்திப் பாடுகின்றார் சுந்தரர்..

இந்தத் திருப்பதிகம் முழுதும்
அம்பிகையை வாயாரப் புகழ்ந்து போற்றும் சுந்தரர் -
தல வரலாற்றுச் சிறப்பினை
பத்தாவது திருப்பாடலில் குறித்தருள்கின்றார்...

இத்திருப்பதிகத்தை நாளும் பாராயணம் செய்தால்
கண் நோய்கள் நீங்குவதோடு மற்ற உபாதைகளும் தீரும் என்பது
ஆன்றோர் தம் திருவாக்கு...

இரண்டாண்டுகளுக்கு முன் எனது இடது கை தளர்வுற்றிருந்தபோது
உற்றதுணையாக இருந்தது - இத்திருப்பதிகத்தின் நான்காவது திருப்பாடல்...

அங்கே - அன்பிற்குரிய
ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
கச்சிப்பதியின் பெருமைகளைத் தொடர் பதிவுகளாக வெளியிடுகின்றார்...

அந்தப் பதிவுகளை இந்த இணைப்பில் காணலாம்...


இவ்வேளையில்
காஞ்சியம்பதியை நாமும் சிந்தித்திருப்போமே!..
- என்பதால் இன்றைய பதிவில் இத்திருப்பதிகம்...

மேலும் இன்றைக்கு ஆனி மாதத்தின் நிறைநிலா..
இன்று சிவாலயங்களில் ஈசனுக்கு பழங்களால் 
அபிஷேகம் நிகழும் நாள்...

நிறைநிலா நாளில்
குறைவிலா நலம் சேர்வதற்கு
அம்மையப்பனை
வேண்டிக்கொள்வோம்..
*** 

திருத்தலம்
திருக்கச்சி ஏகம்பம்


இறைவன் - ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீகாமாக்ஷி, ஏலவார்குழலி
தலவிருட்சம் - மா
தீர்த்தம் - கம்பை நதி..

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் - 61

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (01)

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்று டையான் உம்பர் கோனைப்
பற்றினார்க் கென்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (02)

திரியும் முப்புரந் தீப் பிழம்பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காமனைக் கனலால் விழித் தானை
வரிகொள் வெள்வளை யாள் உமைநங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (03)

குண்டலந் திகழ் காதுடை யானைக்
கூற்றுதைத்த கொடுந் தொழிலானை
வண்டலம் பும்மலர்க் கொன்றை யினானை
வாளரா மதிசேர் சடையானைக்
கெண்டை யந்தடங் கண் உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (04)

ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி - தஞ்சை 
வெல்லும் வெண்மழு ஒன்று டையானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை
அருமறை அவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாள் உமைநங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (05) 

திங்கள் தங்கிய சடை உடையானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடையானைச்
சாம வேதம் பெரிது (உ)கப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளானைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (06)


விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதந் தான் விரித்த் தோத வல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (07)

சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள்
சிந்தையில் திகழுஞ் சிவன் தன்னைப்
பந்தித்த வினைப் பற்று அறுப்பானைப்
பாலொடு ஆனஞ்சும் ஆட்டுகந்தானை
அந்தமில் புகழாள் உமைநங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (08)

வரங்கள் பெற்றுழல் வாளரக்கர்தம்
வாலிய புரம் மூன்றெ ரித்தானை
நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி
நிரந்தரஞ் செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புகழாள் உமைநங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (09)


எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. (10)

பெற்றம் ஏறுகந்து ஏற வல்லானைப்
பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர்பொழில் திருநாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெறி உலகு எய்துவர் தாமே.. (11)
- திருச்சிற்றம்பலம் - 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, மார்ச் 25, 2017

ஸ்ரீ காமாக்ஷி வைபவம்

கடந்த வியாழக்கிழமையன்று (பங்குனி பத்தாம் நாள் - 23 மார்ச் )
காலை பதினொரு மணியளவில் - உத்ராட நட்சத்திரம் கூடிய சுபவேளையில்

தஞ்சை மேலராஜவீதி ஸ்ரீ பங்காரு காமாக்ஷியம்மன் திருக்கோயிலுக்கு புனராவர்த்தன ஜீர்ணோத்தார மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தப்பெற்றது..

தஞ்சை ஸ்ரீ பங்காரு காமாக்ஷி
தஞ்சை மாநகர் மேலராஜவீதியில் -
ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலுக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயிலுக்கும் நடுவே குடிகொண்டியிருப்பவள் ஸ்ரீ தங்கக் காமாக்ஷி..

காஞ்சி மாநகரிலிருந்து - தஞ்சையம்பதிக்கு எழுந்தருளி குடிகொண்டவள்..

அன்னை காமாக்ஷி அளப்பரிய கருணை கொண்டு இலங்குபவள்..

அவளுடைய புகழைப் பேசுதல் என்பது பெரும் புண்ணியம்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சீரிய நிர்வாகத்திற்குட்பட்டது இத்திருக்கோயில்..

ஸ்ரீ காமாக்ஷி அம்மனின் மூலஸ்தான விமானமும் ஸ்ரீ காமகோடி அம்மனின் மூலஸ்தான விமானமும் முழுதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன..

ஸ்ரீ காமாக்ஷி அம்மனின் சந்நிதிக் கதவுகள் வெள்ளித் தகடுகளால்
திருப்பணி செய்யப்பெற்றுள்ளன..

மேலும் கூடிய திருப்பணிகளாக - திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரமும் யாகசாலை கோசாலை ஆகியனவும் புதுப்பிக்கப்பட்டுள்ளன..

அத்துடன் மேற்கு வாசலில் புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது..

கடந்த 17 மார்ச் அன்று காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய திருப்பணி மங்கலங்கள் -

23 மார்ச் காலை ஏழாம் கால யாகபூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்துள்ளது...

இன்றைய பதிவில் கும்பாபிஷேக நிகழ்வுகள்... 













படங்களை வழங்கிய நண்பர்
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே..(050)
- அபிராமி அந்தாதி -

காமாக்ஷியின் கருணை 
அனைவரையும் காத்து நிற்கட்டும்

ஓம் சக்தி ஓம் 
***

வெள்ளி, ஜூலை 24, 2015

சக்தி தரிசனம் - 2

ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை..


காஞ்சி காமாக்ஷி!.. அவள் சந்நிதி தான் இன்றைய தரிசனம்!..

கண் கொடுத்தவள் காமாட்சி!.. கண் கொடுப்பவள் காமாட்சி!.. 

நடுநாடு..

வடக்கே பல்லவர்க்கும் தெற்கே சோழருக்குமாக நடுவில் விளங்குவது..

திருநாவுக்கரசர் முதலான நல்லோர் பலரும் அவதரித்த பொன் நாடு..

நடுநாட்டின் கண் சிறப்புற்றிருந்த திருநகரங்களுள் ஒன்று திருநாவலூர்.

அதற்கு அருகாமையில் அமைந்திருந்தது - புத்தூர்.

அவ்வூரில் வாழும் சடங்கவி சிவாச்சார்யாரின் இல்லத்தில் திருமண விழா..

ஊரே திரண்டிருந்தது..

மணமகள் - சடங்கவி சிவாச்சார்யாரின் அருந்தவப் புதல்வி சுகுணவதி.

மணமகன் -

சடையனார் - இசைஞானியார் தம்பதியரின் செல்வக்குமரன் நம்பி ஆரூரன்.

நம்பி ஆரூரனின் அழகு கண்டு அனைவரும் அழைத்த பெயர் - சுந்தரன்..

அது மட்டுமல்லாமல் -

அந்நாட்டின் அரசரான நரசிங்கமுனையரையர் - நம்பி ஆரூரனின் அறிவையும் அழகினையும் கண்டு வியந்து -  தன் மகனாக தத்தெடுத்துக் கொண்டார் - எனில், வேறொன்றும் சொல்ல வேண்டுவதில்லை..

முகூர்த்த நேரம். மங்கலச் சடங்குகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் சிறு பொழுதில் திருமாங்கல்யதாரணம்..  அவ்வேளையில்,

எதிர் வழக்கிட்டு - திருமணத்தைத் தடுத்தார் முதியவர்..


இங்கே அமர்ந்திருக்கும் நம்பி ஆரூரன் எனக்கு அடிமை.. இதோ அவனது பாட்டன் எழுதித் தந்த ஓலை!.. - என்றார்.

திருமண மன்றம் அதிர்ந்தது..

அங்கும் இங்குமாக கூச்சல்கள்.. பெரியவர்கள் சிலர் முதியவரை நெருங்கி உமது சொல்லுக்கு எது ஆதாரம்?.. என்றனர்.

தனது - மண வாழ்வினைக் கெடுத்த முதியவரை - பித்தன் என்றும் பேயன் என்றும் வசை பொழிந்தார்..

முதியவர் தம் கையிலிருந்த சாசன ஓலையைத் தந்தார்..

அதைப் பற்றியிழுத்துக் கிழித்துப் போட்டார் நம்பி ஆரூரர்.

முதியவர் விடாப்பிடியாக நின்றார்.

உண்மையை உணர விரும்பினர் அனைவரும்.. ஆதலால் -

அற்றை நாளில் - திருவெண்ணெய் நல்லூரிலிருந்த வழக்காடு மன்றத்திற்குச் சென்றது - இவ்வழக்கு..

ஆங்கிருந்த பெரியோர்கள் இரு தரப்பினரையும் விசாரித்தனர்.

ஆதார ஓலையைத் தான் சுந்தரன் கிழித்து விட்டானே.. இனி முதியவர் எதைக் கொண்டு நிரூபிப்பார்!?.. - என சிரித்து மகிழ்ந்தனர் சிலர்..

அது ஆதார ஓலையின் பிரதி ஓலை.. இதோ.. என்னிடம் இருப்பதே மூல சாசனம்!.. - என்று, முதியவர் அதிர்ச்சி கொடுத்தார் அனைவருக்கும்.

அந்தக் காலத்திலேயே, பிரதி ஓலை (Xerox) கூட இருந்திருக்கின்றது.

திருநாவலூரிலிருந்து நம்பி ஆரூரரின் பாட்டனாருடைய கையெழுத்துப் பிரதிகள் கொண்டுவரப்பட்டன.

ஓலைகளைச் சரிபார்த்தனர். ஒத்தி வைக்கப்படாமல் அப்பொழுதே தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்படி - வழக்கிட்டு வென்ற முதியவருக்கு அடிமையானார் - நம்பி ஆரூரர்.

என் இருப்பிடத்திற்கு வா!.. - என இழுத்துக் கொண்டு சென்றார் - முதியவர்.

இவர் யாராக இருக்கக்கூடும்!.. - என்ற ஆவலினால் அனைவரும் பின் சென்றனர்.

அருட்துறையாகிய திருவெண்ணெய் நல்லூர் சிவாலயத்தை நெருங்கியதும் - முதியவர் ஒளி வடிவங்காட்டி மறைந்தார்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்..

தேவ துந்துபிகள் முழங்க - வானில் விடை வாகனத்தில் அம்பிகையுடன் திருக்காட்சி நல்கினார் - சிவபெருமான்..

அந்த அளவில் - சுந்தரரின் நெஞ்சில் முன்னை நினைவுகள் மூண்டெழுந்தன.

கூடியிருந்தோர் - எம்பெருமானின் தாள் மலரில் வீழ்ந்து வணங்கினர்.

கரங்கூப்பி வணங்கியவாறு - கண்களில் நீர் வழிய நின்றிருந்தார் சுந்தரர்.

ஆரென்று அறிய இயலாத அசடனாக - அடாத மொழிகள் கொண்டு ஐயனைப் பழித்தேனே?.. இழைத்த வல்வினைகள் தீர ஏது செய்வேன்?..

பாடுக!.. பாடிப் பரவுக!.. - என்றனன் எம்பெருமான்.

பேசவும் ஒரு மொழியின்றிப் பிதற்றும் பித்தனானேன்..ஐயனே.. எதைக் கொண்டு பாடுவேன்!?..

எம்மைப் பித்தன் என்றனையே!.. நின் சொல்லெல்லாம் அருச்சனைப் பாட்டாகும்!.. - சிவம் வாழ்த்தி மறைந்தது..

சுந்தரர் தம் திருவாக்கில் இருந்து செந்தமிழ்த் தேனருவி பிறந்தது.

நாடெங்கும் நடந்து திரிந்து - சிவாலயங்கள் தோறும் செந்தமிழ்ப் பண் முழங்கிய சுந்தரர் - தம்பிரான் தோழர் எனப்பட்டார்..

ஈசனோடு எதிர் வழக்காடியதால் - வன்தொண்டர் எனவும் புகழப்பட்டார்..

திரு ஆரூரில் பரவை நாச்சியாரைக் கண்டார்..

முன்னைப் பழநினைவுகள் முகிழ்த்தன..

திருக்கயிலாயத்தில் ஈசனுக்கு அணுக்கத் தொண்டராகத் தாம் இருந்ததும் - ஒரு மாலை வேளையில்,

மலர் வனத்தில் கமலினி, அநிந்திதை என்னும் கன்னியர் இருவரை அரை விநாடிப் பொழுது கண் கொண்டு நோக்கியதால் மண்ணுலக வாழ்வு வந்துற்றதும் நினைவுக்கு வந்தன..

பெரியோர்கள் துணை கொண்டு பரவையாரை மணம் புரிந்து கொண்டார்..

பின்னும் தலயாத்திரையில் - திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டார். இவரே முற்பிறப்பில் அநிந்திதை..

ஈசனின் ஆணை நிறைவேறும் பொருட்டு - திருவொற்றியூர் திருக்கோயிலில் மகிழ மரத்தின் கீழ் - உனைப் பிரியேன்!.. என வாக்களித்து ஏற்றுக் கொண்டார்.

ஆயினும் - மீண்டும் திருஆரூர் செல்ல வேண்டும் என்ற ஆசையினால் - ஊர் எல்லையைக் கடந்தபோது இருவிழிகளிலும் பார்வை இழந்தார்..

ஈசனின் அருளால் - திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் ஒன்று கிடைத்தது..

ஆயினும், மின்னல் கீற்றாக ஒளி காட்டி வழி நடத்தியவள் அன்னை பராசக்தி..

தகப்பன் தண்டித்தாலும் - தாய் அன்புடன் அரவணைத்துக் கொண்டாள்..

தட்டுத் தடுமாறி - சுந்தரர் வந்து சேர்ந்த திருத்தலம் - திருக்கச்சி!..

இன்று காஞ்சிபுரம் என வழங்கப்படும் திருத்தலம்..

அம்பிகை - காமாட்சி எனும் திருப்பெயர் கொண்டு விளங்கும் திருத்தலம்..

ஈசன் அளந்த நாழி நெல் கொண்டு - முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றிய திருத்தலம்..

கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்யும் பொழுது வெள்ளம் பெருகி வர -


பெருமானே!..  - என, பதறித் துடித்து ஐயனை மார்புறத் தழுவிக் கொண்டனள்..

அவ்வேளையில் அன்னையின் திருமுலைத் தடமும் திருவளைத் தடமும் கொண்டனன் - எம்பெருமான்..

அம்பிகையின் திருப்பெயர்களைக் குறித்த வரிசையில் ,
முதலில் போற்றப்படும் பெருமைக்குரியவள் - காஞ்சி காமாட்சி!..

சிவபெருமானின் இடப்பாகத்தில் கலந்திருப்பவள் - காமாட்சி..

கருணையை விழிகளாகக் கொண்டவள் - காமாட்சி..

சுந்தரர் கேளாமலேயே - அவர் மீது பரிவு கொண்டு - இடக் கண்ணில் பார்வையைக் கொடுத்தருளினாள்..

சுந்தரர் திருப்பதிகம் பாடித் துதிக்கும் போது - பத்துப் பாடல்களிலும் காமாட்சி அன்னையைக் குறித்துப் போற்றுகின்றார்..

ஏலவார் குழலாள் உமை நங்கை, அற்றமில் புகழாள் உமை நங்கை,
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை, கெண்டையந் தடங்கண் உமை நங்கை,

எல்லையில் புகழாள் உமை நங்கை, மங்கை நங்கை மலைமகள்
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை, அந்தமில் புகழாள் உமை நங்கை,
பரந்த தொல்புகழாள் உமை நங்கை - என்றெல்லாம் புகழ்ந்துரைத்த சுந்தரர்

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே!.. (7/61)

- என்று காஞ்சியின் தலவரலாற்றைப் பதிவு செய்கின்றார்..


கருணை மிகும் காமாக்ஷி அன்னையைப் பற்றி என்ன சொல்ல முடியும்!..

காஞ்சி முழுமைக்கும் காமாக்ஷியே முதலானவள்..

அதனால் - இங்குள்ள மற்ற சிவாலயங்களில் அம்பிகைக்கு தனியாக சந்நிதி கிடையாது..

மாமரத்தின் கீழாக ஐயன் தரிசனம் நல்கியதால் - ஸ்ரீ ஏகாம்பர நாதர்.

தல விருட்சம் - மா மரம்..

தீர்த்தம் கம்பையாறு... இன்றைய சூழலில் குளமாகத் திகழ்கின்றது..

சொல்லுகின்ற சொல்லெல்லாம் அவளே!..
காணுகின்ற காட்சியெல்லாம் அவளே!..

சுந்தரர்க்கு வழிகாட்டி விழி கொடுத்த காமாட்சி
நமக்கும் வழிகாட்டி விழி கொடுக்க வேண்டும்!..

காஞ்சியில் இடக்கண் பெற்ற சுந்தரர் - ஆரூரில் வலக் கண்ணையும் பெறுகின்றார்..

நாடெங்கும் நற்றமிழ்ப் பயிர் வளர்த்த சுந்தரர் - நாளும் நல்லறம் புரிந்தார்..


அவிநாசியில் முதலை உண்ட பாலகனை மீட்டுக் கொடுத்தருளினார்.

காவிரி வெள்ளம் - இவருக்காக - திருஐயாற்றில் விலகி வழி விட்டது.

திருக்குருகாவூருக்கு சுந்தரர் வரும் வழியில் - ஈசன் தயிர் சோற்றுப் பொதியுடன் காத்திருந்து - பரிமாறி பசி தீர்த்தனன்.

நாகை, திரு முதுகுன்றம், திருப்புகலூர் முதலான தலங்களில் ஈசனிடமிருந்து பெற்ற பொன்னையும் பொருளையும் ஏழை எளியவர்க்கு வாரிவழங்கினார்.


சோழ நாட்டில் - குண்டையூர் கிழார் கொடுத்த நெல் பொதிகளை - வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பிக்க ஆவன சேய்யுமாறு ஆரூர் தியாகேசரைக் கேட்டுக் கொண்டார்.

ஈசனும் பூத கணங்களை அனுப்பி வைக்க - நெற்பொதிகள் ஒன்றுக்குப் பத்து நூறு ஆயிரம் எனப் பெருகி திருஆரூர் வீதியெல்லாம் நெற்பொதிகளாகின.

ஆயிரமாயிரம் பொதிகளையும் - அத்தனை மக்களுக்கும் பிரித்தளித்து மகிழ்ந்தார்..

திருஆரூர் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்களைக் கண்டு - இவர் தமக்கு என்றைக்கு அடியனாவேனோ!.. - என்று வியந்தார்..

அந்த அளவில் எழுந்ததே - திருத்தொண்டத்தொகை!..


இவர் காலத்தில் இவரோடு வாழ்ந்த நாயன்மார்கள் - ஏயர்கோன் கலிக்காமர், சோமாசி மாறனார், கோட்புலியார், காடவர்கோன் கழற்சிங்கர், சேரமான் பெருமாள் - முதலானோர்..

கோட்புலியார் தம் மகள்களாகிய - வனப்பகை, சிங்கடி எனும் இருவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு சுந்தரரைப் பணிந்தார்..

பெருங்கருணையுடன் - இனி இவ்விருவரும் எனது மகள்களாவர்!.. - என அன்புடன் மொழிந்தார் - சுந்தரர்..

வனப்பகை, சிங்கடி - இருவரையும் திருப்பதிகங்களில் குறித்து மகிழ்கின்றார்..

சுந்தரர் நிகழ்த்திய அருஞ்செயல்கள் மிகப் பலவாகும்..

அவற்றை - திருவருள் துணை கொண்டு வேறொரு பொழுதில் சிந்திப்போம்..

சேரநாட்டின் திருவஞ்சைக் களத்தில் சேரமான் பெருமாளுடன் இருக்கும் போது - திருக்கயிலைக்கு திரும்பிச் செல்ல விழைகின்றார்.

ஈசன் தானும் வெள்ளை யானையை அனுப்பி வைத்தருள்கின்றனன்.

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுடன் சேரமான் பெருமாளும் செல்கின்றார்..


வானவர்கள் வரவேற்று பூமழை பொழிகின்றனர்..

முன்னர் திருமணம் தடைப்பட்ட - சுகுணவதி - தன் தவத்தால் திருக்கயிலை மாமலையில் உமையாம்பிகையின் பணியேற்கின்றார்.

பரவை நாச்சியாரும் சங்கிலி நாச்சியாரும் - திருவருள் திறத்தால் - மீண்டும்  அம்பிகைக்கு அணுக்கத் தோழியராகின்றனர்.

திருக்கயிலாய ஞான உலா பாடிய சேரமான் பெருமாள் சிவ கணங்களுள் ஒருவராகின்றார்..

அம்மையப்பனை வலம் வந்து - திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் - சுந்தரர்.

அந்த அளவில் - திருநீற்று மடல் ஏந்திய வண்ணம், மீண்டும் -
சிவபெருமானின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்தார்..

சுந்தரர் அருளிய - நூறு திருப்பதிகங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

பின்னை நாட்களில் - திருமுறைகள் தொகுக்கப்பட்டபோது - சுந்தரரின் திருப்பதிகங்கள் - திருப்பாட்டு எனும் திருப்பெயரில் தேவார அடங்கன் முறையுள் வைக்கப்பட்டது..

இன்று ஆடி சுவாதி.. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் சிவசாயுஜ்யம் பெற்ற நாள்..

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே!.. (7/29)

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்..
* * *

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

தேவி தரிசனம் - 5

இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்
தாய்த் திருநாட்டின் சுதந்திரத் திருநாள்
சுதந்திர தேவியின் ஆனந்த தரிசனம்!..


வந்தே மாதரம்!..

வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்
வந்தே மாதரம்!..

ஸுப்ரஜ் யோத்ஸனா புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல ஸோபினிம்
சுஹாசினிம் சுமதுர பாஷினிம்
சுகதாம் வரதாம் மாதரம்
வந்தே மாதரம்!..

கோடிகோடி கண்ட கலகல நி னாத கராலே
கோடிகோடி புஜைத்ருத கரகரவாலே 
அபலாகேனோ மா யேதோ பலே
பஹூபல தாரிணீம் நமாமி தாரீணீம் 
ரிபுதல வாரிணீம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா த்வம்ஹி ப்ராணா: சரீரே 
பாஹூதே துமி மா சக்தி 
ஹ்ருதயே துமி மா பக்தி 
தோமராயி ப்ரதிமாகடி மந்திரே மந்திரே!.. வந்தே மாதரம்!..

த்வம் ஹி துர்கா தசப்ரஹரண தாரீணீம் 
கமலாம் கமல தள விஹாரிணீம் 
வாணீ வித்யா தாயினீம் 
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம் 
சுஜலாம் சுபலாம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

ஸ்யாமளாம் ஸரளாம் 
ஸூஸ்மிதாம் பூஷிதாம் 
தரணீம் பரணீம் மாதரம்!.. 
வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..


வந்தே மாதரம்!.. 

தேசத்தின் சுதந்திரப்போராட்ட வேள்வியில் மந்திரமாகப் பொலிந்த சொல்!..
வங்காளத்தின் ஸ்ரீபங்கிம் சந்திர சட்டர்ஜி (1838 - 1984) அவர்கள் எழுதி தாய்த் திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்த இந்த திருப்பாடலில் இருந்தே பிறந்தது.

1896ல் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்கள் குழுவினருடன் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். இதுவே  இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்ச்சியாகும். 

ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது வந்தே மாதரம் பாடல்.

ஆங்கிலேய அரசின் தடையையும் மீறி , பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் -  ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி. இவர் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களின் அன்பு மருமகள். 

மகான் ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ஆகஸ்டு 7, 1906 அன்று துவக்கிய தினசரியின் பெயர் -  வந்தே மாதரம்!.. 

பஞ்சாப் சிங்கம் என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் 1906ல்  லாஹூரில் ஆரம்பித்த சஞ்சிகைக்குப் பெயர்  -  வந்தே மாதரம்!..

1906  மார்ச் மாதம் வங்காளத்தில் பரிசால் என்ற இடத்தில் தொடங்கிய பரிசால் பரிஷத் ஊர்வலம் ஆங்கிலேய அரசின் அடக்கு முறைத் தடியடிகளினால் மண்டை உடைபட்டு தொண்டர்கள் இரத்தம் சிந்தி மண்ணில் வீழ - பாதியிலே  நின்று போனது. 

காரணம் அவர்கள் முழங்கிய கோஷம் - வந்தே மாதரம்!..

மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) அவர்களும் அவர் தம் நண்பர்களும் 1905 ல்  கொடி ஒன்றினை வடிவமைத்து  ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் (1907) மாநாட்டில் பறக்க விட்டனர். 

அது - மேலே பச்சையும் இடையே காவியும் கீழே சிவப்பும் கொண்டிருந்தது.

அந்த மூவர்ணக் கொடியின் நடுவில் திகழ்ந்த சொல் -  வந்தே மாதரம்!..

தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் (1943-1945) அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 

அக்காலத்தில் அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.

( தகவல்தொகுப்பில் உதவி - விக்கி பீடியா )

வந்தேமாதரம் பாடலைக் கேட்டு மகிழுங்கள்!..


வந்தே மாதரம்!.. - என்கிற மந்திரத்தை முழங்கியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுள் - 

இன்னும் நம் கண்முன்னே திகழ்பவர் - கொடி காத்த குமரன்!..

தேச விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த எண்ணிலடங்காத தியாக சீலர்களை மனதார நினைவு கூர்ந்து அவர்களைப் போற்றி வணங்கி -

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

மகாகவி சுப்ரமண்ய பாரதியார்
வழங்கிய
வந்தே மாதரம் பாடலின் தமிழாக்கம்.
* * *

இனியநீர்ப் பெருக்கினை இன்கனி வளத்தினை
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை..

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை
மலர்மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை
நல்வகை இன்பம், வரம்பல நல்குவை..

முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?..
அருந்திறல் உடையாய்!அருளினை போற்றி
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை..


நீயே வித்தை நீயே தருமம்
நீயே இதயம் நீயே மருமம்
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே!..
தடந்தோள் அகலாச் சக்திநீ அம்மே.
சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே..
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவிஇங் குனதே!..

ஒருபது படைகொளும் உமையவள் நீயே
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ!
போற்றி வான்செல்வீ! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப் பெருக்கினை இன்கனி வளத்தினை!

சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்.. இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய்.. தாயே! போற்றி!..

வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..      
* * *
ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனம்

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்!..
 நாடு நலம் பெற நல்லருள் புரிக தாயே!..


துக்க நிவாரண அஷ்டகம்

மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாராணி காமாக்ஷி!.. (1)
 

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாய்
தானுறு தவ ஒளி தாரொளி மதி ஒளி தாங்கியே வீசிடுவாய்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாய்
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (2)
 
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எங்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (3)
 
தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீவருவாய்
கணகண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீவருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீவருவாய்
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (4)

 
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேலனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நல்சக்தி எனும் மாயே
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (5)
 
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எங்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (6)
 
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
 

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (7)
 
ஜயஜய பாலா சாமுண்டேஸ்வரி ஜயஜய ஸ்ரீதேவி
ஜயஜய துர்கா  ஸ்ரீபரமேஸ்வரி  ஜயஜய ஸ்ரீதேவி
ஜயஜய ஜயந்தி மங்களகாளி ஜயஜய ஸ்ரீதேவி

ஜயஜய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!.. (8)

ஓம் சக்தி ஓம்..
மங்கள ரூபிணி மதியணி சூலினி சரணம் சரணம்!..
* * *

புதன், மார்ச் 13, 2013

பங்குனி உத்திரம் - 01


பங்குனி மாதம் தமிழ் மாதத்தின் கடைசி மாதம்.  ஜோதிட சாரத்தில் சூரியன் மீன ராசியில் பிரவேசிப்பதால் மீனமாதம் என்பர்

இந்த மாதத்தில் சந்திரன் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து முழுநிலவாக வரும் நாள் பங்குனி உத்திரம் எனும் உற்சாகப் பெருந்திருவிழாவாக எல்லா திருத் தலங்களிலும் கொண்டாடப்படுகின்றது. 

பங்குனியில் - சந்திரன் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, கன்னிராசியில் நின்று,  பூர்ணகலைகளுடன்  முழுநிலவென பூமிக்கு ஒளி வழங்குகின்றான்.

நிகழும் நந்தன வருடத்தில்  பங்குனி 13 ( 26.3.2013 )  செவ்வாய் அன்று உத்திரம்.
 
பங்குனி உத்திர நாள் நிறைந்த சிறப்புகளை உடையது. இந்த நாளில் சிவபெருமானை கல்யாணசுந்தர மூர்த்தியாக வணங்க வேண்டும்.  ஏனெனில்,

பர்வத ராஜனாகிய இமவான் தன் மகள் பார்வதியை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்தது பங்குனி உத்திர நாளில் தான்.

ஆதியில் - அங்கயற்கண்ணி மீனாட்சிக்கும் ஐயன் சோமசுந்தரேசருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது பங்குனி உத்திர நாளில் தான். 

காஞ்சியில் அன்னை காமாட்சியாக வழிபாடு செய்து கயிலைநாதனின் மெய் தழுவியதும் பங்குனி உத்திர நாளில் தான்.

திருக்கயிலையில் ஐயனுக்கும் அம்பிகைக்கும் வழக்கம் போல பிரச்னை. வேறொன்றுமில்லை அது.  

 ஐயனும் அம்பிகையும் ஏகாந்தமாக இருந்த வேளை.  

விநாயகனும் வேலவனும் வெவ்வினைகளை வெகு தொலைவிற்கு விரட்டிக் கொண்டு சென்றதால் திருக்கயிலை ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது.

சில முனிவர்களுக்கு -  '' சும்மா இரு; சொல்லற!..''   என்று உபதேசிக்க வேண்டி  இருந்தது எம்பெருமானுக்கு. யோக நிலையில் யோசித்துக் கொண்டிருந்தார். 

அந்தவேளையில் தான் அம்பிகை ஆனந்தம் பொங்கிப் பெருக - பெருமானின்,

இருவிழிகளையும் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் முழுதும்  இருண்டு இயக்கம் நின்றது. அதிர்ச்சியடைந்த நந்தியம்பெருமான் சட்டென எழுந்து நின்றார். இது நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது ஸ்வாமிக்கு. 

தவறு செய்து விட்டதை உணர்ந்தாள் அம்பிகை. மன்னித்தருள வேண்டினாள். அவரோ - ''....அதெல்லாம் முடியாது. தவறுக்கு தண்டனை அனுபவித்தேயாக வேண்டும். எனவே எமைப் பிரிந்து பூவுலகிற்குச் சென்று தவம் செய்து வழிபடுக. வந்து ஆட்கொள்வோம்!....'' என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு - தவத்தில் ஆழ்ந்தார். அம்பிகைக்குத் தெரியாதா என்ன!... ஐயனின் கோபம்!....
 
அதன்வழி -  அம்பிகை,  காமாட்சி  எனும் திருப்பெயர் கொண்டு,  நம் பொருட்டு காஞ்சியம்பதியில் சிவபூஜை இயற்ற வந்தனள். அம்பிகையை சோதிக்க வேண்டி - ஈஸ்வரன்  ஒரு நாழி நெல்லை மட்டும் அளந்து கொடுத்தார். 

அன்னை, நாழி நெல்லைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது செய்தனள். கம்பை ஆற்றின் கரையில் மாமரத்தின் நிழலில் ஆற்று மணலில் சிவலிங்கம் அமைத்து பெருமானின் அருளைப் பெறவேண்டி ஒருமனதாக வழிபட்டும் வந்தனள்.  எம்பெருமானுக்கு மிக்க மகிழ்ச்சி!.  

கருந்தடங்கண்ணி இல்லாத கயிலையும் என்னவோ போலிருந்தது. இரண்டு பேரும் ராசியாகி விடுவோம் என்று எண்ணினார் எம்பெருமான். இருப்பினும், மேலும் ஒரு சோதனையாக, 

அன்னை வழிபாடு செய்து கொண்டு இருக்கையில் - திடீரென கம்பையாற்றில் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தி புதிதாக திருவிளையாடலை நிகழ்த்தினார். 

திகைத்த அன்னை. ''..கள்ளக் கம்பனே!.. அதுவா விஷயம்!..''  - புன்னகைத்தாள்.

'' பெருகி வருவது ஆற்று  வெள்ளம் அல்ல!..  ஐயனின் அன்பு உள்ளம்!..'' - என உணர்ந்து கொண்டாள். அப்படியே ஆனந்தத்துடன் மணல் லிங்கந்தனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அப்போதுதான் அன்னையின் திருக்கரங்களில் விளங்கிய வளையல்களின் தழும்பும்,  சந்தனச் சாந்து  இலங்கிய திருமுலைத் தழும்பும் சிவலிங்கத்தின் மீது பதிந்தன.  


ஸ்வாமி பேரானந்தத்துடன் வெளிப்பட்டு திருமணக்கோலம் கொண்டார். பெருமானின் திருநாமம் ,  ''தழுவக் குழைந்த நாதர் '' - என்றாயிற்று. 

மூலமூர்த்தியின் திருமேனியில் கைவளைத்தழும்பும், திருமுலைத்தழும்பும் இன்னும்  உள்ளதாகக் கூறுவர்.   

காஞ்சியில் ஆற்று மணலால்  அமைந்த ஏகாம்பர லிங்கத்திற்கு புனுகு மற்றும் நறுமணப் பொருட்களைப் பூசி, வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்குத் தான். 

மாமரம் தல விருட்சம் . திருத்தலமும்  பஞ்சபூத தலங்களில் முதன்மையான பிருத்வி (மணல் - நிலம்) தலம்  என்றானது.  

திருக்கயிலை மாமலையில் அம்பிகையின் பணிப்பெண்கள் - அனிந்திதை, கமலினி.  அங்கே பெருமானுக்கு திருநீற்று மடல் ஏந்திப் பணிபுரிபவர் சுந்தரர். ஒருநாள் நந்தவனத்தில் வழிபாட்டுக்கு மலர் பறித்துக் கொண்டிருந்த அனிந்திதை, கமலினி  என்ற கன்னியரை அரை நொடிப்பொழுது - சுந்தரர் கண்டதன் விளைவாக - '' கண்கண்ட காட்சியினைக் கொண்டு வாழ்ந்து வருக''  -  என மூவருக்கும் ஈசன் ஆணையிட்டார். 

அதன்படி - பூவுலகில் திருநாவலூரில் சுந்தரர் பிறந்தார். இளம் பருவத்தில் திருமண நேரத்தில் - இறைவன் முதியவராக வந்து , அடிமை ஓலை காட்டி - சுந்தரரைத் தடுத்தாண்டு கொண்டார். பின்னர் முந்தைய விதிப்படி,

திருஆரூரில் பிறந்திருந்த பரவை நாச்சியாரை மணம் கொண்டு வாழ்ந்த சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருத்தல யாத்திரையாக - திருவொற்றியூருக்கு வந்தபோது  முற்பிறவியில் நிகழ்ந்ததன்படி, சங்கிலியாரை இரண்டாவதாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரை விட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று திருவொற்றியூரில் மகிழ மரத்தின் கீழ் சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சிவதரிசனம் செய்யப் புறப்பட்டதால்   இருகண்களிலும் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் தலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்தருளினார் பெருமான். காமாட்சி அன்னை மின்னல் கொடி போன்று உடன் வந்து வழிகாட்டினாள். 


தட்டுத் தடுமாறி வழியில் பலதலங்களையும் தரிசித்துக் கொண்டு காஞ்சியை வந்தடைந்த சுந்தரர் -  

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து  உள்கிஉகந்து  உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடியேன் பெற்ற வாறே... ( 7/61/10)


 - தன் பிழையினை வேதனையை - நினைந்து உருகித் திருப்பதிகம் பாடினார். அந்தவேளையில், தான் தன் பங்கிற்கு இடது கண்  பார்வையை அருளினாள் காமாட்சி.   அதன் பின்னர் -

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு வலக்கண் கிடைத்தது திருஆரூரில். ஆரூரும் பிருத்வி தலம் தான். ஆரூரில் பெருமானின் திருப்பெயர் புற்றிடங்கொண்டார் - (வன்மீகநாதர்). திருஆரூரிலும் சிவலிங்கத்திற்கு புனுகு பூசி, வெள்ளிக்கவசம் சாத்தியே வழிபடுகின்றனர்.

திருக்கயிலையில், ஐயனின் விழிகளை அம்பிகை மூடியபோது எழுந்து நின்ற நந்தியம்பெருமான் இன்னும் நின்றபடியே சேவை சாதிப்பது திருஆரூரில்....

பெருமானின் திருமேனியில் ஒரு பாதியாகிய அம்பிகையாயினும் - ஐயனின் காலடியில் பணிபுரியும் சேவகமாக இருந்தாலும் - இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதும், அப்படி அனுபவிக்குங்கால் -

பெருமானே பெருந்துணையாக வந்து - தன்னைத் தானே -  நமக்குக் காட்டி - தடுத்து ஆட்கொள்வார் என்பதும் திருக்குறிப்பு!....

எனவே, காஞ்சி காமாட்சியிடம் வேண்டிக்கொண்டால் - செய்த தவறுகளுக்கு மன்னிப்பும் கிடைக்கும், கண் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.  

அத்துடன் - ஞானக்கண் கிடைக்கும் என்பதும் உறுதி. அது எப்போது ?...

 
இல்லறமாகிய நல்லறத்தில் வழுவாது நழுவாது கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு - ''..நீயின்றி நானில்லை..'' என்று, ஒருபோதும் பிரியாது வாழ்வாங்கு வாழும் போது!... 

சிவசக்தி ஐக்கிய திருமணக்கோல நிகழ்வுகள் - இதைத்தான் காட்டுகின்றன.

இல்லறம் நல்லறம் ஆகும் போதுதான் - யாரும் வாழ்வாங்கு வாழ முடியும்!.. அப்படி வாழ்வாங்கு வாழ்ந்தால் தான் - நாமும் நாம் வாழ்ந்த வாழ்வும்  வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவோம்!... 

இது வழிகாட்டும் வள்ளலாகிய வள்ளுவப்பெருமானின் வாக்கு!...


ஏகம்பத்துறை  எந்தாய் போற்றி!...
பாகம் பெண்ணுரு  ஆனாய் போற்றி!...

திருச்சிற்றம்பலம்!...