நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 19, 2025

நாரத்தங்காய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 7
 புதன் கிழமை

இன்று
நாரத்தை ஊறுகாய்


நமது பாரம்பரியம்..

அபிஷேக திரவியங்களுள் இதுவும் ஒன்று.. நாரத்தம் பழச் சாறு அபிஷேகத்தினால் ஜன்ம பாவங்கள் தீர்கின்றன...

நாரத்தம் பழத்தினால்
உடல் சூடு தணிந்து பித்தம் குறையும்..

உப்பில் இட்டு வைப்பதற்கு நாரத்தங்காய்கள் ஏற்றவை.. இது சற்று இனிப்புச் சுவை உடையதால் குறைவான அளவில் உப்பு போடுவதே சிறந்தது..


தேவையானவை :

நார்த்தங்காய் 10
வெந்தயம் 50 கி
கல் உப்பு தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் ஒரு tsp
மிளகாய் வற்றல் 7
பால் பெருங்காயம் சிறிது 

தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய்  தேவைக்கு
கடுகு ஒரு tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு

செய்முறை :

பால் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர
வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.. 

நார்த்தங்காய்களை கழுவிக் கொள்ளவும்..  

தண்ணீரை தளதள என்று கொதிக்க வைத்து நார்த்தங்காய்கள் மூழ்கும் படிக்கு   ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருந்து ஆறியதும் எடுத்து வெயிலில் உலர வைக்கவும்..

வெந்நீர் ஊற்றப்பட்ட
நாரத்தங்காய்கள் முழுதாக வெந்திருக்காது.. அரை வேக்காட்டில் இருக்கும்.. இந்தக் காய்களை முழுதாக பக்குவப்படுத்துபவன் சூரியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. 

இந்த முறையில் செய்கின்ற போது காய்களின் உள்ளிருக்கும் சாறு வீணாவதில்லை..

மூன்று நாட்களுக்குப் பிறகு 
நார்த்தங்காய்கள் சற்றே சுருங்கி இருக்கும்..

இந்நிலையில்
காய்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மேலும் இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்...

இனி நாரத்தங்காய் ஊறுகாய் தான்!..

இருப்புச்சட்டி ஒன்றை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் விடாமல் தனித்தனியாக மிளகாய் மற்றும் வெந்தயத்தை சிவக்க வறுத்து -

வறுத்த மிளகாய் வற்றல் வெந்தயம் இவற்றை ஆறியதற்குப் பின் ஒன்றாக மிக்ஸியில்  அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும்.

சுத்தமான ஜாடியில்
நார்த்தங்காய்களைப் போட்டு, அதன் மேல் மஞ்சள்தூள் மற்றும் அளவான கல் உப்பு சேர்த்து, வறுத்து அரைத்த மிளகாய்ப் பொடி பெருங்காயப் பொடியையும் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்..

ஒரு வாணலியில் தளர எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை  தாளித்து - 

கடுகு பொரிந்ததும்,   நாரத்தை துண்டுகளைச் சேர்த்துக் கிளறி அப்படியே இறக்கி வைக்கவும்.

சூடு ஆறிய பின்பு, சுத்தமான ஜாடிக்கு ஊறுகாயை மாற்றி விடவும்.

ஜாடி அல்லது பாட்டிலில் நிரப்பப்பட்ட நார்த்தங்காய்த் துண்டுகளைத் தினமும் இரண்டு முறை - மரக் கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.. 

ஊறுகாயில் உள்ள எண்ணெய், ஊறுகாய்க்கு மேலாக  நிற்க  வேண்டும் என்பது முக்கியம்..

இந்த வகைக்கு நாரத்தங்காய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானவை - கல் உப்பும் நல்லெண்ணெயும்..

இந்த ஊறுகாய் பயன்படுத்துவதைப்  பொறுத்து ஆறு மாதங்களுக்கு மேலாக வரும்..
நமது நலம்
நமது கையில்..

ஓம் நம சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. அருமையான குறிப்பு.  வெயிலில் உலரவைத்த பிறகுதான் எடுத்து ஊறுகாய்க்கு நறுக்குகிறீர்கள்.  அடுத்த முறை நானும் இப்படி முயற்சித்துப் பார்க்கிறேன்.  நாங்கள் அப்படியே துண்டங்களிட்டு உப்பு மட்டும் போட்டு 12 முதல் 14 மணி நேரம் வரை ஊறவைத்து அப்புறம் அதில் வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி, காரப்பொடி சேர்த்து நல்லெண்ணெய் காய்ச்சி ஊற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிச் செய்வதால் தான் நாரத்தையின் சாறு திரட்சியாக நமக்குக் கிடைக்கும்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. நாரத்தையை அப்படியே சுருள்சுருளாக நறுக்கி மஞ்சள், உப்பு திணித்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வோம்.  கெட்டே போகாது.  எப்போது வேண்டுமானாலும் மோர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.  வாந்தி வருவது போல இருந்தால், மற்றும் ஜீரணமாகாமல் இருந்தால் இதில் சிறு துளி எடுத்து வாயில் அடக்கிக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நாரத்தையை அப்படியே சுருள் சுருளாக நறுக்கி மஞ்சள், உப்பு திணித்து வெயிலில் காயவைத்து///

      ஆகா...

      இப்படித்தான் பள்ளிக்கு எடுத்து வருவார்கள்...

      குறிக்க மறந்து போனது..

      நீக்கு
  3. நாரத்தை இலையை வைத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் உப்பு சேர்த்து பொடி செய்து பயன்படுத்துவோம்.  கடைகளிலும் விற்பார்கள்.  அதில் உப்பு தூக்கலாக இருக்கும்.  ஏனோ அதை அவர்கள், மற்றும் சிலர் வேப்பிலைக் கட்டி என்று அழைப்பார்கள்!  சுவை ப்ளஸ் ஆரோக்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நாரத்தை இலைபொடி....நான் ஓமமும் சேர்ப்பேன் ஸ்ரீராம்.ஆமா உப்பு தூக்கலாக இருக்கும். வீட்டில் அளவாக உப்பு போடுவேன். ஆமா அதென்னவோ வேப்பிலைக்கட்டினு சொல்றாங்க ஏன்னு தெரியலை.

      கீதா

      நீக்கு
    2. இதுவும் உகந்த ஒன்றே... ஆனால் நான் தின்றதில்லை..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
    3. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  4. மிகவும் நல்லதொரு குறிப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்

      நீக்கு
  5. நாரத்தை கெட்டுப் போகாத ஊறுகாய். வெயிலில் காய வைத்து எடுத்துக் கொண்டால்.

    நீங்க சொல்லிருப்பது போலத்தான் போடுவது. இதை சுருள் சுருளாகக் கட் செய்து பொடியை அடைத்து ஊறியதும் காய வைத்து எடுத்துக் கொண்டால் செம ஊறுகாய்.

    ஓ நீங்க நாரத்தையை முதலில் முழுவதுமாக இப்படிச் செய்துவிட்டு அப்புறம் நறுக்கி ஊறுகாய் போடறீங்க...புதுசா இருக்கு

    செய்து பார்த்துவிட்டால் போச்சு. நல்ல குறிப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான செய்முறை

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ

      நீக்கு
  6. நாரத்தை ஊறுகாய் நல்ல செய்முறை.

    இம்முறையில் செய்து பார்க்கிறோம். நாங்கள் துண்டங்களாக வெட்டி மாங்காய் ஊறுகாய் போல நல்லெண்ணெயில் கொட்டி கிளறுவோம். உங்கள்முறை நீண்டகாலத்துக்கு இருக்கும் என தெரிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நார்த்தங்காய் ஊறுகாய் செய்முறை மிகவும் நன்றாக உள்ளது. நாங்களும் காயை சுத்தப்படுத்தி, நறுக்கி உப்பு, மஞ்சள் போட்டு சில நாட்கள் ஊறியதும், காரம், ந. எண்ணெய் சேர்த்து பயன்படுத்துவோம். உங்கள் முறைப்படி செய்ததில்லை. முன்பு அம்மா வீட்டிலும், எங்கள் மாமியார் இருந்த போதும் ஊறுகாய் பயன்பாடு நிறைய இருந்தது. இப்போது எங்களுக்கு ஊறுகாய் ஒத்துக் கொள்ளவில்லையாததால், நிறைய பயன்பாடு கிடையாது. உங்கள் பக்குவ முறை நன்றாக உள்ளது. இனி செய்யும் போது, இது போல் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான செய்திகள்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியம்மா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    உங்கள் பதிவில் இன்று தலைப்பு சிவ, சிவ என்று உள்ளது. நானும் ஆன்மிகப் பதிவு என்று நினைத்து வந்தேன். ஒரு வேளை அது நாளைய தினத்தின் தலைப்பு இன்று மாறி வந்து விட்டதோ..? நன்றி இன்றைய பகிர்வுக்கு.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையம் சரியில்லை.. தக்கு தக்கு என்று குதிப்பதால் ஏற்பட்ட கோளாறு..

      இப்போது சமையல் வாரம்..

      அந்தப் பதிவு சிவராத்திரிக்கானது

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..