நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

குருநாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருநாதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 04, 2013

ஸ்ரீ குருஸ்வாமி

ஸ்ரீ குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி!..


காவிரியின் நடுவில் கருமணி துயில்கின்ற,  ஸ்ரீரங்கத்தில்  -
200 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்..


அடுத்த சில தினங்களில் வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!..  எங்கும் ஆரவாரமாக  கோலாகலமாக இருக்கின்றது!..

சேவார்த்திகளுடன் - அரங்கன் தங்கி இளைப்பாற பிரம்மாண்டமான பந்தல்!.. 

தஞ்சாவூரில் இருந்து வந்திருக்கும் கலைஞர்கள் அலங்கரிக்கின்றனர் என்றால் - கேட்கவா வேண்டும்!.. அதிலும் திருஆரூர் அருணாசலம் பிள்ளை அவர்களின் பந்தல் அலங்காரம் என்றால்  - காணக்கண் கோடி வேண்டுமே!.. 

அவரே முன் நின்று பந்தல் வேலைகளைச் செய்கின்றார்!. 

அதோ - ஒரு பனை மர உயரத்தில் அமர்ந்தபடி  தங்க நிற ஜரிகைப் பட்டிகளை இணைத்து அழகான பூவின் வடிவமாக ஆக்கி - அதை, உச்சி முகட்டில் கட்டி அலங்கரிப்பதை - மக்கள் கூடி ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

''ஆஆ!... பிடிப்பு நழுவி கீழே விழுகின்றாரே!..''

''குருநாதா அபயம்!..''  - கீழே விழும் அருணாசலம் பிள்ளை அரற்றுகின்றார்.

அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் கதறுகின்றது!..  உச்சியில் இருந்து கீழே ஜனத்திரளின் மத்தியில் விழுந்த அருணாசலம் பிள்ளை எவ்வித காயமும் இன்றி எழுந்தார். கைகால்களை நன்றாக உதறிக் கொண்டார், பெருமாளை நோக்கி வணங்கினார். தொடர்ந்து வேலைகளை மேற்பார்வையிடச் சென்று விட்டார். அரங்கனின் அருளால் ஆபத்தின்றி உயிர் தப்பியதாக ஜனங்கள் பேசிக் கொண்டனர்.

அடுத்த மூன்று நாட்களில் பந்தல் வேலைகள் முடிவடைந்தன. அருணாசலம் பிள்ளை அவசர வேலை ஒன்று இருப்பதாகக் கூறிவிட்டு திருஆரூருக்கு விரைந்தார். விரைந்து வந்தவர் - தம் வீட்டுக்குக் கூட செல்லவில்லை.

அங்கே - இங்கே, விசாரித்துக் கொண்டு அவர் சென்ற இடம் - 

ஆரூர் கமலாலயத் திருக்குளத்தின் மேல்கரை. தாயைக் கண்ட கன்றாகக் கதறியபடி - ஓடிச் சென்று அவருடைய திருவடிகளில் தலை வைத்து அழுது தொழுதார்.

அவர்!...


குரு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்!..

அருட்பெருங்கடலே!.. கொட்டகைப் பந்தலின்றும் தவறி விழுந்த என்னைத் தாங்கிக் கொண்ட தயாநிதியே!.. மாசில்லா மாமணியே!. உம்முடைய அருட்திறத்தை எவ்விதம் இயம்ப வல்லேன்!.. இனிமேல் தங்களுக்குத் திருத்தொண்டு புரிவதே எனது வேலையாகும் !.. என்றபடி வணங்கி நின்றார்.

அப்போதுதான் - அங்கிருந்தவர்களுக்கு, ஸ்ரீரங்கத்தில் நடந்த அதிசயம்  புரிந்தது!.. மூன்று நாட்களுக்கு முன் ஸ்வாமிகள் - தன் வலக்கையினை உயர்த்தி எதையோ தாங்கிய பாவனையில் மெதுவாகக் கீழே வைத்தது - அருணாசலம் பிள்ளையைக் காப்பாற்றும் பொருட்டே என்று அனைவரும் விளங்கிக் கொண்டனர். அதன் பின் அருணாசலம் பிள்ளையும் பற்றறுத்து ஸ்வாமிகளின் திருத்தொண்டில் தம்மை இணைத்துக் கொண்டு இன்புற்றார்.

பின்னும் ஒரு சம்பவம்.

ஆரூரில் தியாகராஜப் பெருமானையும் பெருந் தேர்த் திருவிழாவினையும்  தரிசித்த - தஞ்சை சரபோஜி மன்னர் ஸ்வாமிகளைத் தரிசிக்க விரும்பி அவர் தம் அடியார்களுக்கு தகவல் அனுப்பினார். அத்துடன்  திருமடத்துக்கு வழங்குவதற்காக - சில கிராமங்களைக் குறித்து அவற்றில் ஸ்வாமிகளின் விருப்பத்தினை எதிர்பார்த்து சீட்டு ஒன்றினையும் அதிகாரி மூலம் வழங்கியிருந்தார். அதன்படி, மாலையில் ஸ்வாமிகளுக்குச் சமர்ப்பிப்பதற்காக சகல மங்கல திரவியங்களுடன்  சென்றார். மன்னர் வரும் போது கட்டிலில் படுத்திருந்த ஸ்வாமிகள்,

''சகல உலகமும் நம்மிடத்தில் ஆகாயத்தில் நீலபீதாதி போல் ஏகதேசத் தோற்றமாயிருக்க, ஒருவன் சிறிது நிலம் கொடுக்கிறானாம். அதை ஒருவன் பெற்றுக் கொள்கிறானாம்!..'' - என்று திருவாய் மலர்ந்தருள, அருகில் இருந்த அடியார், அரசன் வழங்கியிருந்த சீட்டினைத் தூர எறிந்து விட்டார்.


சரபோஜி மன்னர் - தாம் வழங்க இருந்த தானத்தினை ஸ்வாமிகள் மறுத்து விட்டது புரிந்தது. இருப்பினும், திரு மடத்துக்கு ஏதாவது அறப்பணி செய்ய வேண்டுமென  விரும்பி, ஸ்வர்ண பாதுகைகளையும் தந்தத்தினால் ஆன யோக தண்டத்தையும் பீதாம்பரங்களையும் சமர்ப்பித்து பணிவாக வணங்கி நின்றார். இவை யாதொன்றையும் கருதாது இருந்த ஸ்வாமிகள் அடியார்களின் விருப்பத்தின் பேரில் - மடலில் இருந்து விபூதியினை எறிந்தனர். அது மன்னரின் கரங்களில் சென்று கிடைக்க, மகிழ்ச்சியடைந்த மன்னர், ''..நம்மால் இவ்விடத்திற்கு செய்யத்தக்கது யாது?.. கட்டளையிட வேண்டும்!..''- என்றார்.

''மன்னர் இவ்விடம் சிரத்தை வைக்க - யாதொரு குறையும் இல்லை!.'' என, திரு உளக்குறிப்பு வெளிப்பட்டது. எனினும் மன்னர் நூற்றெட்டு பொற்காசுகளால் ஸ்வாமிகளின் திருவடிகளில் அர்ச்சித்தார். மேலும் பொற்காசுகளை வழங்கினார். 

மன்னர் வழங்கிய நகரா எனும் முரசு
தமது யானையின் மேலிருந்த பெரிய நகராவினை மடத்திற்குச் சமர்ப்பித்தார். ஸ்வாமிகளை வணங்கி - தஞ்சைக்குத் திரும்பினார்.

இப்படி மக்களும் மன்னரும்  - தொழுது வணங்கிட  - இருந்த பெருமான்,

குரு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்!.

சோழநாட்டில் - கீழ ஆலத்தூர் எனும் பதியில், சிவசிதம்பரம் பிள்ளை - மீனாம்பிகை அம்மையார் செய்த தவப்பயனாய் - அண்ணாமலையாரின் திருவருளினால் - தோன்றியவர். 

அருணாசலம் என்பது பெற்றோர் சூட்டி மகிழ்ந்த திருப்பெயர். ஐந்து வயது வரையில் ஏதுமே பேசாதிருந்தவர். அந்த வயதிலேயே நிஷ்டையில் அமர்ந்து விடும் தன்மையர். மிக வருந்திய பெற்றோர் தம் துயர் தீர  - சிவயோகி ஒருவர் வந்தருளினார். அவரிடம் தம் குறையினை முறையிட, 

சிவயோகியும் - பாலகனை நோக்கி, ''இவன் பேசுவான்!.. நீர் இவனுடன் பேசும்!..'' -  என்று அறிவுறுத்த - தந்தையார், தன் குழந்தையை நோக்கி,

''குழந்தாய்!.. ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்கின்றாய்!..'' - என,

பாலகன் - ''..சும்மா இருக்கின்றேன்!..'' - என பதில் அளித்தான்.

அது சமயம் - சிவயோகியார், ''..சும்மா இருக்கின்ற நீ யார்?..'' - என வினவ,

''..நீயே நான்!.. நானே நீ!..'' - என விடையிறுத்தான் பாலகன். அக்கணமே,  சிவயோகியார் ஒளிவடிவாகி மறைந்தார்.  தம் மகனைப் பேசச் செய்தவர் அண்ணாமலையாரே - என அகமகிழ்ந்தனர்.

சர்வக்ஞராக முக்காலமும் உணர்ந்து விளங்கிய ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்கா.  ஸ்வாமிகளும் பள்ளிக்குச்சென்று அரிய பெரிய சுவடிகளைக் கண்ணால் கண்ட மாத்திரத்தில் அவற்றுள் பொதிந்து இருக்கும் விஷயங்களைக் கூறுவாயினராயினர். இவரிடைய மகத்துவத்தைக் கண்ட ஆசிரியர் இவருக்கு மரியாதை அளிக்க  - ஸ்வாமிகள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டார்.

இவரை உள்ளபடி உணர்ந்த பெற்றோர் - விரும்பிக் கேட்டுக் கொண்டதால் - அவர்களுக்கு எட்டாம் நாளில் - திருநீறிட்டு சிவபதத்தினை அளித்து அருளினார். 

அதன் பின் தேசாந்திரமாகக் கிளம்பிய ஸ்வாமிகள் - வைத்தீஸ்வரன் கோயில், அதிராமபட்டினம், பட்டுக்கோட்டை, ஆவுடையார் கோயில், விராலிமலை, நீடாமங்கலம் ஆகிய ஊர்களில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தினார்.


திருஆரூர் திருத்தலத்தில் இஷ்டம் கொண்டு தங்கினார். வீதிகள் தோறும் நடந்து கொண்டும், கமலாலயத் திருக்குளக்கரையில் ஏகாந்தமாக வீற்றிருந்தும் மக்களுக்கு அருள் புரிந்தார்.

பாம்புக்கடியால் மாண்டவர்களை எழுப்பியதும், தீப்பிடித்த வீட்டில் இருந்து குழந்தையைக் காத்ததும், பேய் பிசாசுகளை விரட்டியதும் தீராதகொடு  நோய்களிடம் இருந்து மக்களைக் காத்ததும், அன்பர்களுக்கு வழித் துணையாக ஸ்ரீமுனீஸ்வரன், ஸ்ரீவீரன் முதலான  காவல்நாயகர்களை அனுப்பி உதவியதும் - அவற்றுள் சில.

ஸ்வாமிகளின் கீர்த்தியினை - பட்டுக்கோட்டை ஸ்ரீவெங்கிடு சுப்பையா ஸ்வாமிகள், தம் தவ வலிமையால் மக்களிடம்  குறித்துள்ளார் எனில் சமகாலத்தவர் என அறிய முடிகின்றது!.

மக்களிடம் பெருங்கருணை உடையவராக வாழ்ந்த ஸ்வாமிகளுக்கு, அவர் வாழுங்காலத்திலேயே - அவர் தமக்கு சமாதி ஆலயம் அமைக்கப்பட்டது. 

திருஆரூரில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் ஸ்வாமிகள் குறித்த இடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டு அதனுள் கீழே சமாதிக் குகையும் அமைத்தனர். குகையின் மேல் தஞ்சை சரபோஜி மன்னர் காசியில் இருந்து கொணர்ந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகள் நடந்தன. இந்தக் கோயிலில் தான் சரபோஜி மன்னர்,  முன் கூறியபடி - ஸ்வாமிகளை பொற் காசுகளால்   பாதபூஜை செய்தார்.

ஒரு சமயம் திருஆரூருக்கு ஸ்ரீ கிருஷ்ணானந்த கிரி ஸ்வாமிகள், ஸ்ரீ சங்கர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீராமானந்த பாரதி ஸ்வாமிகள் ஆகியோர் விஜயம் செய்தபோது, ஸ்வாமிகள் வெட்ட வெளியில் வெயிலில் படுத்திருந்தார்கள். 

அதைக் கண்ட துறவியர் மூவரும் தம் மனதில், ''..விருட்சத்தின் நிழலில் படுத்திருக்கலாமே!..'' - என நினைக்க,

''..சேதனமாகிய ஆன்மாவுக்கு அசேதனமாகிய விருட்சமா சுகத்தைத் தரும்?. தரும் எனில் கானல் ஜலமும் உஷ்ண  பூமியைக் குளிரச் செய்யும்!.. ''என  அவர்களுக்கு மெளனத்தால் ஞான உபதேசம் செய்வித்த மகான்.

துறவியர் மூவரும், இந்த உபதேசத்தினை -  ''..ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் வாக்ய சிந்தனம்..'' எனும் வடமொழி நூலாக வெளியிட்டனர் எனில் ஸ்வாமிகளின் மகத்துவத்துவம் எத்தகையது!..

அத்தகைய மகான் ஸ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்,

''..முடிந்தது! முடிந்தது! முற்றிலும் முடிந்தது!..'' - எனத் திருவாய் மொழிந்து நிஷ்டையில் அமர்ந்தார். அன்றிலிருந்து எட்டாம் நாள் கலியுகம் 4936 மன்மத வருடம் ஆவணி மாதம் பனிரண்டாம் நாள், புதன் கிழமை பூர்வபட்சம் திருதியை திதி உத்திர நட்சத்திரம் கூடிய வேளையில் நடுப்பகல் 12 மணிக்கு, சச்சிதானந்தப் பெருவெளியில் கலந்தனர்.

அப்போது, அமிர்த வர்ஷம் போல சந்தன மழைத் துளிகள் வீழ்ந்தன. எங்கும் நறுமணத்துடன் கூடிய காற்று வீசியது.


முன்பே எழுப்பியிருந்த - சமாதிக் குகையினுள் ஸ்வாமிகளின் திருமேனியை எழுந்தருளச் செய்தனர்.  சிலகாலம் முன்பு வரை ஸ்வாமிகளின் திருமேனி விளங்கும் சமாதிக்குகை, எல்லாரும் கீழே சென்று தரிசிக்கும்படியாக இருந்தது. தற்போது பூட்டப்பட்டு விட்டது. மூலஸ்தான தரிசனம் மட்டுமே!.. 

ஆயினும், ஸ்வாமிகளின் குரு பூஜை நாளில் மட்டும் கீழே சமாதிக்குகையில் ஆராதனை நிகழ்கின்றது. எனினும் கீழே செல்ல அனுமதி - திருமடத்தின் அணுக்க ஸ்வாமிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மட்டுமே!..

எதிர்வரும் 6.9.2013 - ஆவணி உத்திரம் -  வெள்ளிக்கிழமை குருபூஜை நாள்.

தம்மை நாடி வந்த அன்பர்களுக்கு  - நோய் தீர்த்தும், புத்திரப் பேறு அருளியும், வறுமை தீர்த்தும், உயர் ஞானம் அருளியும் அற்புதங்கள் புரிந்த, 

ஸ்ரீகுரு தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்

இன்றும்,  சரணம் அடைந்து வேண்டியவர்க்கு - வேண்டியவாறு அருள்வது நிதர்சனமான உண்மை!..

இங்கே குறிக்கப்பட்டுள்ள செய்திகள் - திருமடம் வெளியிட்டுள்ள வரலாற்று நூலில் இருந்து பெறப்பட்டவை.

ஸ்ரீ குருஸ்வாமிகளின்  அதிஷ்டானத்தில் தரிசனம் செய்யும் போதெல்லாம் - விவரிக்க இயலாத பரவச நிலையினை அடைந்திருக்கின்றேன். அன்பர்களும் பெற்று உய்வதற்கு அழைக்கின்றேன்.


திருஆரூர் நகரில், ஸ்ரீ தியாகராஜப் பெருமானின் திருக்கோயிலுக்குத் தென் புறமாக,  மடப்புரத்தில் ஸ்ரீ குரு ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.

அதிஷ்டானத்தின் பின்புறம் ஓடம்போக்கி ஆறு. முன்புறம் திருக்குளம்.

தமிழகத்தின் எங்கிருந்தும் எளிதில் பயணித்து வரக்கூடிய நகர் - திருஆரூர்.

சந்நிதி வந்து வணங்குபவர்க்கு சஞ்சலம் தீர்கின்றது!..
சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் சேர்கின்றது!..

வள்ளல் குரு ஸ்வாமியைத் தேடி வாருங்கள்!.. 
வாழ்வில் வற்றாத வளம் சேர்வதைப் பாருங்கள்!..

குருவே சரணம்!.. 
திருவே சரணம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

திங்கள், மார்ச் 11, 2013

ஸ்ரீ பஞ்சநத பாவா

தஞ்சை ராஜதானி.  மராட்டியர் ஆட்சிக் காலத்தில் 215 ஆண்டுகளுக்கு முன் -

1787 க்கும் 1798 க்கும் இடைப்பட்ட  காலத்தின் ஒருநாள்.

அதுவும் ஐப்பசி மாதத்தின் அடைமழை நாள். இடைவெளியின்றி - இடி மின்னல் இன்றி - பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து நல்ல மழை!...


''...அது கெட்ட மழையாகி விடக்கூடாதே!...'' என்று பெருங்கவலையுடன் உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தார் மன்னர் அமர்சிங். மழைச்சாரல் மன்னரின் முகத்தில்  சில்லென - பரவிற்று. 

அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த செய்திகள் கூட - இந்த சில தினங்களில் தடைப்பட்டு விட்டது. காரணம் காவிரியின் வடக்கில் கொள்ளிடத்திலும் தெற்கில் குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாற்றிலும் கரை தழுவி ஓடும் வெள்ளம்.

கரை மீறிய வெள்ளப் பெருக்கு எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற நிலை. இதோ கண்ணுக்கு  எட்டிய வடவாற்றில் கூட மழை நீர் பொங்கிப் பிரவாகமாக ஓடுகின்றது.

மன்னரின் முகத்தில் கவலையின் ரேகைகள்.  

''... அஞ்சவேண்டாம். தஞ்சையின் கிழக்கே நாகப்பட்டினம் முதற்கொண்டு கோடியக்கரை தென்கிழக்கே சேதுபாவாசத்திரம் வரை கடல் கொந்தளிக்கவோ சூறாவளி சுழற்றியடிக்கவோ வாய்ப்புகள் ஏதுமில்லை...''

மன்னனின் மனதையும் - வானிலையையும் ஆராய்ந்த வல்லுனர்கள் சொன்னார்கள். இருப்பினும் மன்னன் அமர்சிங் அமைதி கொள்ளவில்லை. 

மன்னர் அருந்துவதற்கென்று - மழைச்சாரலின் குளுமைக்கு இதமாக, விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட வெதுவெதுப்பான மூலிகை ரசம் வந்தது. அதை நிராகரித்த மன்னர் - ''அமைச்சரை வரச்சொல்லுங்கள்'' -  என்றார்.

அடுத்த அரை விநாடியில் அரசரின் அருகில் அமைச்சர்.

'' உடனடியாக தஞ்சைக்கு வடக்கே உள்ள நிலவரம் தெரிய வேண்டும்!...'' 

'' உத்தரவு..'' - தலை வணங்கிய அமைச்சர் பலவகையிலும் திறமையான ஆட்கள் உடன் வர - தஞ்சை மாநகரின் வட எல்லையில், வடவாற்றினை நெருங்கினார்.  

மாமன்னன் ராஜராஜசோழனின் ஆன்மீக குருநாதராகிய கருவூர் சித்தரின் திருவாக்கினால் புகழப்பெற்ற ஆறல்லவா வடவாறு!... சற்று சிணுங்கலுடன் நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. மிதமாக - மழை பெய்து கொண்டு இருந்தது.

ஓடக்காரர்கள் தயாராக நின்றார்கள். வடவாற்றின் தென்கரையில் சற்று தொலைவில் - திருக்கோயில் கொண்டிருந்த அமிர்தவல்லி அம்பிகை சமேத சிதானந்தேஸ்வர ஸ்வாமியை  கைகூப்பி, கண்களை மூடித் தொழுதார். 

கண் விழித்தவருக்கு பெரும் அதிர்ச்சி. காண்பது கனவா!... இதுவரைக்கும் காணப்படாத இவர் - இப்போது எப்படித் தோன்றினார்?... எங்கிருந்து வந்தார்?...

மழை நீர் தழுவிச் செல்லும் வடவாற்றின் தென்கரைப் படித்துறையில், மழையில் நனைந்தபடி தவக்கோலத்தில் - சிவயோகத்தில் அமர்ந்திருந்த பெருந்துறவி ஒருவரைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.

வடவாறு வற்றினாலும் வற்றாத - கருணை வெள்ளத்தினை அவர் திருமுகத்தில் கண்டனர். அமைச்சரின் முகக்குறிப்பினை உணர்ந்த பணியாளர்கள் -  பெரிய குடை ஒன்றினை மழையில் நனையும் துறவிக்கு ஆதரவாகப் பிடித்தனர். தவநிலை தடைப்பட்டது. 

துறவியார் மெல்ல கண் விழித்தார். அமைச்சரும் மற்றவர்களும் அவருடைய பாதம் தொட்டு வணங்கினார்கள். துறவியார் திருவாய் மலர்ந்தருளினார்.

''...அஞ்ச வேண்டாம்!... எந்தத் தீங்கும் நேராது. சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.

ஓடங்கள் பயணித்தன. சில தினங்களாயின. ஆங்காங்கே ஊர் மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களைக் கொண்டே ஆற்றின் கரைகளை செம்மைப்படுத்தி -

அவசர காலத்தில், உணவு, உறையுள், மருத்துவம், பாதுகாப்பு என - மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயிர் விளைந்து செழித்த நிலங்களுக்குமாக, எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு விரைவாகத் திரும்பினார்.  இதற்குள் மழையும் ஓய்ந்து விட்டது.

அரசருக்கு செய்தி அறிவிக்கும்படி - ஓலைதாங்கிகள் அனுப்பப்பட்டனர்.

திரும்பி வரும்போது - வடவாற்றின் படித்துறையில் - சில தினங்களுக்கு முன் கண்ட கோலத்திலேயே - அந்தத் துறவி அமர்ந்திருக்கக் கண்டனர். அச்சமும் வியப்பும் மேலிட்டது. ஆரவாரங்களினால் கண் விழித்த துறவியார் மீண்டும் கூறினார்.

''சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார்.

அமைச்சர் விரைந்து அரண்மனைக்குச் சென்றார். தஞ்சை வடக்கு வாசலில் பெருந்தோரணங்கள். எங்கும் ஆரவார - ஜயகோஷங்கள். என்ன விசேஷம்!... வியப்படைந்த  அமைச்சரை பட்டத்து யானை மாலையிட்டு வரவேற்றது.

மங்கல வாத்தியங்கள் முழங்கின.  அரசர் எதிர்கொண்டு நின்றார். அறிவிற் சிறந்த அமைச்சர் அல்லவா!.. விஷயம் விளங்கிற்று.  நாணம் கொண்டார்.

அரசரை வணங்கியபடி சொன்னார் - '' நான் என் கடமையைத்தான் செய்தேன்!'' 

அரசர் சொன்னார் - '' அதையும் செம்மையாய் செய்தீர்கள் அல்லவா!...''

பெருமதிப்புடைய நவரத்ன மாலையினை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

''செய்ததெல்லாம் குருநாதர்..'' - அன்று நடந்ததை அமைச்சர் விவரித்தார்.

அரசரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். வடவாற்றின் படித்துறையில் அதே நிலையில் குருநாதரைக் கண்டு தொழுது வணங்கினர். அனைவரையும் வாழ்த்தியருளினார் குருநாதர். மக்கள் வெள்ளமென வந்து அடி பணிந்தனர். அந்த மகானின் பார்வையினால் அனைவருக்கும் நலம் விளைந்தது.

மக்கள் அந்த மகானை '' பாவா '' என்று அன்புடன் அழைத்து அகமகிழ்ந்தனர். பின்னர் '' பஞ்சநத பாவா '' என்று அறியப்பட்டு,   பலகாலம் வீற்றிருந்தார்.

கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும்  கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்ந்தார் மகான் பஞ்சநத பாவா. அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்பட்டனர்.

எல்லோருக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்த - அந்த ஞானஒளியும் தன்னை ஒளித்துக் கொள்ளும் நாள் வந்தது. கண்ணீர் வெள்ளத்தில் மக்கள் வெள்ளம்.

அனைவருக்கும் நல்லாசி சுரந்த கருணையின் ஊற்று நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தது. அப்படி ஆழ்ந்த நாள் மாசி மாதத்தின் அமாவாசை தினம். 

மகாசிவராத்திரியன்று தவநிலையில் -  சிவமாகப் பொலிந்த தவம், பொழுது விடிந்த வேளையில்,  விடிந்தது பொழுது என்று சிவநிலையினை எய்தியது.

நிர்விகல்ப சமாதியை நிலைப்படுத்தி சிவலிங்கம்  நிறுவினர்.

பாவா சிவயோகத்தில் அமர்ந்திருந்த படித்துறை
இன்றும்,  குருநாதர் பஞ்சநத பாவா ஸ்வாமிகள் -

கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும் கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்கின்றார். அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்படுகின்றனர்.

பூமிக்குக் கீழ் 15 அடி ஆழத்தில் உள்ள நிர்விகல்ப நிலை
இன்று (11.3.2013) மாசி அமாவாசை தினம். நம் குருநாதருக்கு ஆராதனை நாள்.

தஞ்சை மாநகரின்  ஒருபகுதியாக விளங்குவது வசிஷ்ட மகரிஷி சிவபூஜை நிகழ்த்திய பெருமையுடைய கரந்தை எனும் கரந்தட்டாங்குடி. கரந்தையில் பழைய திருவையாறு சாலையில் வடவாற்றின் கரையில் அமைந்துள்ளது குருநாதர் பஞ்சநதபாவா ஸ்வாமிகள் அருளும் நிர்விகல்ப சமாதி அதிஷ்டானம்.

குருநாதரின் கருணை விளக்கு கவலைகளை ஓட்டும். கலங்கரை விளக்காகக் கரை காட்டும்.  

'' பஞ்சநத பாவா திருவடிகள் சரணம்!...''