நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 31, 2015

மார்கழித் தென்றல் - 15

குறளமுதம்

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.. (987) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 15


திவ்ய தேசம் - குருவாயூர் 
அபிமானத் திருத்தலம்

எம்பெருமான் - ஸ்ரீ குருவாயூரப்பன் 
உற்சவர் - ஸ்ரீ உன்னிகிருஷ்ணன் 

ஸ்ரீ விமானம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

தேவ குருவாகிய பிரகஸ்பதியும் வாயுவும் சேர்ந்து
எழுப்பிய திருக்கோயில்..



ஸ்ரீ கோயிலில் விளங்குவது 
பாதாள அஞ்சனம் எனும் மையினில்
விளைந்த திருமேனி..

துவாபர யுக முடிவில் ஸ்ரீ கிருஷ்ணன், 
தானே - தன் மேனியை இவ்வாறு - 
வழங்கியதாகவும், இத் திருமேனியை
சிவபெருமான் தன் திருக்கரத்தால் நீராட்டினார் 
என்பதும் வழிவழியாய் வரும் அரும்செய்தி..


யானை ஓட்டம்
ஸ்ரீ கிருஷ்ணன் - பாலகோபாலனாக விளங்குவதால்
இங்கு நிகழும் வைபவங்கள் அனைத்தும் 
குழந்தைக்கானதைப் போலவே நிகழ்கின்றன..



குழந்தைகளுக்கு முதற் சோறூட்டுவதும்
துலாபாரம் வழங்குவதும்
யானைகள் பராமரிக்கப்படுவதும்
இத்திருத்தலத்தில் வெகு சிறப்பு.. 
***

இத்திருத்தலம் ஆழ்வார்களால் 
மங்களாசாசனம் செய்யப்படவில்லை..

எனினும்,
ஆயிரமாயிரம் அன்பர்களின் நெஞ்சத்தில் வீற்றிருப்பவன்
ஸ்ரீ குருவாயூர் கோகுல கிருஷ்ணன்..
***


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண் ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
***

சிவதரிசனம்
திருத்தலம் - சபரிமலை 


இறைவன் 
ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன்
ஸ்ரீ ஐயன் ஐயப்பன் 

கலியுக வரதனாகிய ஸ்ரீ தர்மசாஸ்தா
பிரம்மச்சர்ய விரதம் பூண்டு
ஸ்ரீ கருப்ப ஸ்வாமியையும் 
ஸ்ரீ பெரிய கடுத்த ஸ்வாமியையும்
காவல் நாயகர்களாகக் கொண்டு
சத்தியமான பொற்படிகள் 
பதினெட்டின் மீது விளங்கும் 
ஸ்ரீ கோயில் எனும் சந்நிதானத்தில்
பட்டபந்தனத்துடன் யோக நிலையில்
வீற்றிருகின்றான்..

தீர்த்தம் - பம்பை நதி
தலவிருட்சம் - அரசு

திரேதா யுகத்தில்
மதங்க மாமுனிவரின் தபோவனத்தில்
எவ்வித எதிர்பார்ப்புமின்றி
தொண்டு புரிந்தனள்
அன்னை சபரி..

ஸ்ரீ ராமன் இங்கு வரும் காலத்தில் 
சபரிக்கு நலம் விளையும் என 
மதங்க மகரிஷி நல்லாசி கூறினார்..

அப்படி வரும் காலத்தில் ஸ்ரீராமனுக்கு
உண்ணக் கொடுத்து உபசரிப்பதற்கென 
அந்த வனத்தில் பழுத்து உதிரும் பழங்களைச் 
சேகரித்தாள்..

அவற்றுள் சுவையுள்ள பழங்கள் எவை!. 
- என சுவைத்துப் பார்த்தாள் - சபரி..
அவற்றை உலர்த்தி பக்குவப்படுத்தி
வைத்தாள்..

காலம் கனிந்து வந்தது..

அன்னை ஜானகியைத் தேடி வந்தனர்
ஸ்ரீ ராமபிரானும்
இளவல் இளைய பெருமாளும்..


அவர்களை வணங்கி வரவேற்ற
சபரி அன்னை 
தான் சுவைத்த பழங்களையே 
பரமனுக்குத் தந்து மகிழ்ந்தாள்..

ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு
அன்னையாகிப் பொலிந்தனள் - சபரி..

அந்தப் பிறவியில் எவ்விதமான
அருட்செயலையும் நிகழ்த்துவதில்லை என,
சங்கல்பம் கொண்டிருந்த பரம்பொருள்
சபரி அன்னையைத் 
தன் நினைவிலும் நெஞ்சிலும் கொண்டது..



பின்னும் காலம் கனிந்த நல்லதொரு பொழுதில்
ஹரிஹர சங்கமத்தில் விளைந்த ஆனந்த ஜோதி
மண்ணுலகில் 
மானுடம் வாழ்வதற்கென
மணிகண்டன் என வந்துற்றது..

மண்ணுலகில் - மணிகண்டனை
மடியேற்று சீராட்டிப் பாராட்டி 
தாய் என நின்றனள் புண்ணியள் ஒருத்தி..

ஆயினும், அவளும் தனக்கென வந்தபோது
தடுமாறினாள்.. தடம் மாறினாள்..
தனக்கு - தலை நோய்.. என, பொய் புகன்றாள்..

அவளுடைய புத்தி தெளியும் பொருட்டு
பொல்லா வனத்திற்குள்
புலி தேடி வந்தனன் மணிகண்டன்..

வந்த இடத்தில் மகிஷி எனும் 
அநீதியை அழித்தான்..

அன்றைக்குத் தன்னை உபசரித்த 
தவமூதாட்டி சபரி அன்னையைக் கண்டு 
பணிந்து வணங்கினான்.. 

அருஞ்செயல்கள் பலவற்றை நிகழ்த்திய நிலையில்
அன்னை சபரிக்கு முக்தி நலம் வழங்கி
சிறப்பித்ததோடு - மதங்க மாமலையின் 
சிகரத்திற்கு சபரி என திருப்பெயரும் சூட்டினான்..

அன்றைக்குச் சூட்டப்பட்ட திருப்பெயர்
ஆயிரம் லட்சம் கோடி என்ற நிலைகளைக் கடந்து

கோடானுகோடி அன்பர்களால் போற்றப்படும்
திருப்பெயராக இன்றளவும் விளங்குகின்றது..

இனியும் விளங்கும் என்பது தெளிவு..



இன்றைய குறளமுதம்
ஐயப்ப வழிபாட்டின் உயிர்நாடி..

அதுமட்டும் அல்லாமல்
தன்னலமற்ற தொண்டும் அன்பும் 
என்றும் சிறப்பிக்கப்படும் என்பதே
சபரிமலை நமக்கு அருளும் பாடம்..

அதை உபதேசிப்பவனே 
ஸ்ரீ ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பன்!..

அவனே குருஸ்வாமி!..

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..

 * * *

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்

ஸ்ரீ ஐயப்ப வழிபாடு மிகவும் தொன்மையானது..

தமிழகத்தில் சாத்தன் எனக் குறிப்பிடப்படுகின்றார்..
சாஸ்தா என்பதன் வழிச்சொல் சாத்தன்..

மலையாள தேசத்தின் சபரி மலையில்
தவநிலையில் விளங்கும் ஸ்ரீ ஐயப்பனின் 
தொன்மை கல்யாணத் திருக்கோலம் ஆகும்.



ஸ்ரீ பூரணகலை ஸ்ரீ பொற்கலை - எனும்,
தேவியர் இருவருடன் 
ஸ்ரீ ஐயனார் திகழ்கின்றார்..

ஊர் காக்கும் நாயகன் - ஸ்ரீ ஐயனார்..

அவரது திருத்தோற்றத்தினை 
ஸ்ரீ கந்த புராணம் உரைத்தாலும்,
அதற்கு முன்பே
அப்பர் பெருமான் தனது திருப்பாடல்களில்
குறிப்பிட்டு சிறப்பிக்கின்றார்..

அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே!.. 
எனப் புகழ்ந்துரைத்த அப்பர் ஸ்வாமிகள்
திருப்பயற்றூர் எனும் தலத்தில் 
அருளிய திருப்பதிகத்தின் திருப்பாடல் இது..

பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பரை ஆடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதங்
கூத்தொடும் ஆடவைத்தார் கோளரா மதியம்நல்ல
தீர்த்தமும் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே!.. (4/32) 
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்



திருஅம்மானை
திருப்பாடல் 09 - 10

துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுதல் ஆயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க்கு ஈந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்!..

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

புதன், டிசம்பர் 30, 2015

மார்கழித் தென்றல் - 14

குறளமுதம்

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச்சுடும்.. (0293)
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 14

திவ்ய தேசம் - திருக்கோளூர்


எம்பெருமான் - ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள்
தாயார் - குமுதவல்லி, கோளூர்வல்லி
உற்சவர் - நிக்ஷோபவித்தன்

ஸ்ரீ கர விமானம்
ஆதிசேஷன் மீது சயனத் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

தேவியர் இருவருடன் வைத்த மாநிதிப் பெருமாள்



திருக்கயிலை மாமலையில் சிவதரிசனத்தின் போது
அம்பிகையை உற்று நோக்கிய பாவத்தினால்
இரு கண்களிலும் பார்வை இழந்ததுடன்
தன்னுடைய செல்வம் முழுதையும்
இழந்தான் - குபேரன்..

மன்னிப்பு வேண்டி நின்ற குபேரனுக்கு
மீண்டும் ஒருகண்ணில் மட்டும் பார்வை அருளினாள்
அன்னை பராசக்தி..

மீண்டும் செல்வத்தையும் இழந்த பதவியையும் 
வேண்டி நின்ற குபேரனுக்கு,
வைத்த மாநிதிப் பெருமாளிடம் 
கேட்டுப் பெற்றுக்கொள்!.. 
என, அருளினாள்..

அதன்படி, 
வைத்த மாநிதிப் பெருமாளிடம் 
தன்னைப் பொறுத்தருளுமாறு விண்ணப்பித்து
இழந்த செல்வத்திலிருந்து ஓரளவை மட்டும் 
மீண்டும் பெற்றுக் கொண்டான் என்பது தலபுராணம்..

நவதிருப்பதிகளுள்
செவ்வாய்க்குரிய திருத்தலம்..

வைத்தமாநிதிப் பெருமாளை சேவித்தால்
செவ்வாய் தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம்..


பன்னிரு ஆழ்வார்களுள்
எந்த ஒரு திவ்ய தேசத்தையும் பாசுரங்கொண்டு
துதிக்காதவர் - மதுரகவி ஆழ்வார்..

நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டார்..
அவரையே போற்றிப் பாடினார்..
பரமபதம் எய்தினார்..

மதுரகவி ஆழ்வார் அவதரித்த
திருத்தலம் - திருக்கோளூர்..

உண்ணும் சோறும் பருகும்நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன்சீர் மல்கி அவனூர்வினவி
தண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே!..
- நம்மாழ்வார் -
* * *

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
***

சிவதரிசனம்
திருத்தலம் - பொதிகை மலை
- பாபநாசம் -


இறைவன் -  ஸ்ரீ பாபநாசநாதர்
அம்பிகை - ஸ்ரீ உலகம்மை
தீர்த்தம் - தாமிரபரணி 
தலவிருட்சம் - களா மரம்

அம்பிகையின் சக்தி பீடம்.
விமலை எனத் திருப்பெயர்



அகத்தியர் அருந்தமிழ் வளர்த்த
பொதிகை மலையே பாபநாசம் எனப்படுகின்றது..

திருக்கயிலாயத்தில் அம்மையப்பனுக்கு
நிகழ்ந்த திருக்கல்யாணம்
அகத்திய மாமுனிவருக்கு
திருக்காட்சியாகிய திருத்தலம்.

திருக்கோயிலினுள்
அகத்தியருக்கு அருளிய திருமணக்காட்சியை 
சிலாரூபமாக நாமும் தரிசிக்கலாம்..

திருக்கோயிலில் அம்பிகையின் 
சந்நிதி முன்பாக இருக்கும் கல்லுரலில்
மஞ்சள் இடித்துக் கொடுப்பது சிறப்பு..

இதனால்
தடைபட்டு நிற்கும் மங்கலங்கள்
விரைவில் நிகழும் என்பது கண்கண்ட உண்மை..  

நெல்லைச்சீமையில் திகழும்
நவ கயிலாயங்களுள்
முதலாவதான திருக்கோயில்..

எனவே சூர்ய ஸ்தலம்..
பித்ரு தோஷங்கள் சாபங்கள் அகலுகின்றன..



திருக்கோயிலின் எதிரில் தாமிரபரணி
சலசலத்துக்கொண்டு ஓடுகின்றாள்..


பொதிகை மலையிலிருந்து புறப்பட்டு 
ஆங்காங்கே அருவிகளாகி இறங்கி வரும் 
தாமிரபரணி 
திருக்கோயிலின் எதிரில் 
சமநிலை அடைவதாகக் கூறப்படுகின்றது..


ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில்

திருக்கோயிலுக்கு 2.கி.மீ மேலே சிற்றருவி உள்ளது.

அதையும் கடந்து மேலே சென்றால்
ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் திருக்கோயில்..

அதற்கும் மேலே கல்யாணி தீர்த்தம்..

அங்கெல்லாம் செல்வதற்கு வனத்துறையின் அனுமதி வேண்டும்..
இந்தப் பகுதி முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குள் உள்ளது..

சேர்வலாறு அணையும் பாபநாசம் அணையும் 
இயற்கை எழில் கொஞ்சுவன..


அகத்தியர் அருவி - கல்யாணி தீர்த்தம்

நீர்த்தேக்கத்தைக் கடந்து மேலே சென்றால் 
கல்யாணி தீர்த்தம், பாண தீர்த்தம், அகத்தியர் திருக்கோயில் 
ஆகியன திகழ்கின்றன.

அதற்கும் மேலே அகத்தியர் மலை என சிகரம் உள்ளது..
ஆயினும், ஆபத்தான காட்டுவழி.. மலைப்பாதை..

முன்னை நல்வினைப் பயனுடன்
ஈசன் அருளும் கூடிவருமேயானால்
பொதிகை எனும் பாபநாசத்தில்
ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் தரிசனம் கிட்டும்!..


சில ஆண்டுகளுக்கு முன் - குடும்பத்துடன்
பாபநாசம் திருக்கோயிலுக்குச் சென்றிருந்தபோது
முன்னோர்களின் தவப்பயனாக - ஆங்கே
அகத்திய மாமுனிவரின் திவ்ய தரிசனம் பெற்றோம்..
***

பொதிகை மலை
திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான் ஆகியோரின் 
திருவாக்கில் இடம் பெற்ற
 வைப்புத் தலமாகும்..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்

வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரிநூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்பூசிய வேதியனே!.. (4/112) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்


திருஅம்மானை
திருப்பாடல் 07 -08

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்!..

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *