நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 29, 2015

மார்கழித் தென்றல் - 13

குறளமுதம்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.. (0191)

பலரும் வெறுக்கும்படியாக பயனில்லாத சொற்களைப் பேசுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.. 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 13

திவ்ய தேசம் - திருக்கூடல்
- மதுரை மாநகர் -



எம்பெருமான் - ஸ்ரீ கூடலழகர்
தாயார் - மதுரவல்லி 
உற்சவர் - ஸ்ரீ வியூக சுந்தரராஜன்

ஸ்ரீ அஷ்டாங்க விமானம்

ஸ்ரீ அஷ்டாங்க விமானத்தின் கீழ் மூன்று தளங்கள்..
கீழ்தளத்தில் மூலவர் - ஸ்ரீ கூடலழகர்.


தேவியர் இருவருடன் வீற்றிருக்கும் திருக்கோலம்.
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்..

இரண்டாவது தளத்தில் - ஸ்ரீ ரங்கநாதன் 
புஜங்க சயனத் திருக்கோலம்

மூன்றாவது தளத்தில் - ஸ்ரீ சூரியநாராயணன்
நின்ற திருக்கோலம்..

நின்றும் கிடந்தும் அமர்ந்தும் - என
மூன்று நிலைகள் திகழ்கின்றன..


முக்தி தரும் தெய்வம் ஸ்ரீமந் நாராயணன் 
என - பெரியாழ்வார் நிறுவியபோது
வானில் கருட வாகனத்தில் 
சேவை சாதித்தவர் - கூடலழகர்..

அவ்வேளையில் தான், பெரியாழ்வார் 
திருப்பல்லாண்டு பாடி பெருமாளை சேவித்தார்..

மங்களாசாசனம்
பெரியாழ்வார், 
திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்.. 
* * *


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்த்துக் கலந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
***

சிவதரிசனம்

திருத்தலம் -  உத்தரகோசமங்கை 


இறைவன் - ஸ்ரீ மங்களநாதர் 
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை 
தீர்த்தம் - அக்னி தீர்த்தம்
தலவிருட்சம் - இலந்தை..

ஆதிசிதம்பரம் எனவும்
ரத்ன சபை எனவும்
புகழப்படும் திருத்தலம்..

ஈசன் - அம்பிகைக்கு 
வேதத்தின் பொருள் உபதேசித்த
திருத்தலம்..

திருக்கோயிலில் திகழும்
மரகத லிங்கமும் ஸ்படிக லிங்கமும்
நித்தமும் உச்சிப் பொழுதில்
அன்னாபிஷேகத்துடன் வழிபடப்படுகின்றன..




இத்திருத்தலத்தில் 
நடராஜர் மரகத சிற்பமாகத் திகழ்கின்றார்..

வருடம் முழுதும் சந்தனக்காப்பினில்
இலங்குகின்றது - ஆடவல்லானின் திருமேனி.. 

ஆண்டுக்கு ஒருமுறையாக
மார்கழித் திருஆதிரை நாளில் மட்டுமே சந்தனக்காப்பு நீக்கப்பட்டு 
சர்வ திரவிய அபிஷேகங்கள் நிகழ்கின்றன..



இத்திருத்தலத்தினை மாணிக்கவாசகப்பெருமான் - 
திருவாசகத்தில் பலமுறை பாடிப் பரவுகின்றார்..

சிவாலயங்களில் அர்த்தஜாம பூஜை முடிந்தபின்
நிகழும் திருப்பள்ளியறை வழிபாட்டின் போது 
அடியார்களால் ஓதப்படுவது பொன்னூசல்..

அத்திருப்பதிகம் முழுதுமே 
உத்தரகோசமங்கையைப் போற்றி
சிறப்பு செய்கின்றார் - மாணிக்கவாசகர்..




முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடிஇமை யோர்கள் தாம்நிற்பத்
தன்னீறு எனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை
மின்னேறு மாடவியன் மாளிகை பாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ!.. 
* * *
  
ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் அருளிச்செய்த
திருப்பாட்டு..

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயே!.. (7/29) 
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருஅம்மானை
திருப்பாடல்கள் 05 - 06


கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத்து அழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்!..

கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
நீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனஎல்லாங் காட்டிச் சிவங்காட்டி
நாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த 
ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்   
***

10 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள். படங்கள் அனைத்துமே நன்று. இங்கிருந்தபடியே தெய்வ தரிசனம்..... நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான தகவல்கள். பாடல்கள். திருப்பாவை, திருவெம்பாவை அறிந்தாலும் படங்களுடன் வேறு தகவல்களுடன் இறைவனைக் காணக் கிடைப்பது நன்றாக இருக்கின்றது. பயணத்தில் இருந்ததால் வலைப்பக்கம் வர இயலவில்லை...தொடர்கின்றோம்...நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருளாளர் அய்யா தரும் ஆகம அருள் கருத்துகள்
    படியெடுத்து பாதுகாக்கப் பட வேண்டிய அருள் மொழி அமுதம்.
    மார்கழித் தென்றல் மனதை தாலாட்டியது.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அனைத்தும் அருமை, குறளமுதம் , அதனைத் தொடர்ந்து தகவல்கள், விளக்கம், புகைப்படங்கள் அனைத்தும் அருமை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  5. வணக்கம் ஜி மார்கழித் தென்றலின் 13 ஆம் நாள் தகவல் களஞ்சியம் அழகிய படங்களுடன் அறிந்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..