நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 3
சனிக்கிழமை
உணவு உண்டதற்குப் பின் வெற்றிலையோடு ஒரு பாக்கு ஒரு ஏலக்காய் வைத்து சுண்ணாம்பு சேர்த்து தாம்பூலம் என்று தரிக்கின்ற பழக்கம் நம்மிடையே இருந்தது..
அன்றைய எளிய உணவு செரிமானத்தின் போது சமன் ஆகவே தாம்பூலம்..
இன்று அதெல்லாம் இல்லை..
தாம்பூலம் தருவது உயரிய மரியாதை..
இருவீட்டார் மனம் உவந்து பேசி வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டு விட்டால் திருமணம் நிச்சயம் ஆகி விட்டது என்பது மரபு..
அடிதடி பஞ்சாயத்துகளின் நிறைவில் - இனி எப்போதும் வம்பு தும்பு இல்லை என்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் மாற்றிக் கொள்வது வழக்கம்..
குருஷேத்திரப் போரின் போது யுத்தத்திற்கு தாம்பூலம் வழங்கப்பட்டிருக்கின்றது..
தாம்பூலம் - வெற்றிலையும் பாக்கும் அற்புதமான மருந்துகள்.. இப் பழக்கம் - வழக்கம் கெட்ட ஒரு சிலரால் அழிந்து போனது..
கருப்பட்டியும் வெல்லமும் நம் மண்ணின் அறிவியல் தயாரிப்புகள்.. இவற்றுள் பின்னாட்களில் தூய்மைக் குறைவும் கலப்பும் புகுந்திருந்தன..
அதனால் பரிதவித்துக் கிடந்த மக்களிடையே அச்சமயத்தில் இனிப்புக்காக புகுந்தது தான்
வெள்ளைச் சீனி..
வெள்ளைச் சீனி
திணிக்கப்பட்டதால்
தரமான கருப்பட்டியும் வெல்லமும் கூட
சந்தையில் காணாமல் போயின..
தேநீர் காபி இவை பொது வணிகத்தில் அறிமுகம் செய்யப்பட்டன...
நாளடைவில்
டீக்கடைகளில் தரமில்லாத தேயிலை வகையறாக்கள், கறந்த பாலில் தண்ணீர் (அது என்ன தண்ணீரோ?.. ) ஊற்றுதல் என்கிற சுகாதாரக் குறைவுகள் என்பதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகின..
இந்த மா நகரில் தேநீர் விலையை 12 ரூபாய் ஆக்கி விட்டார்கள்..
தரம்?...
அது யாருக்குத் தெரியும்?..
யாருக்கு வேண்டும்!..
இப்போது டீயும் காஃபியும் தமிழர்களின் பாரம்பரியம் என்ற முன்னெடுப்புகள் - விளம்பரங்களில்..
டீ காஃபி குடித்தால் தான் நீ டம்ளன் என்கிற அளவுக்கு ஆகி விட்டது..
அளவற்ற
ஆரோக்கியத்தை அளிக்கின்ற
தேங்காய் இன்றைக்கு கைக்கெட்டாத விலையில்!..
தேங்காயை உணவில் சேர்ப்பதற்கே அச்சப்படுகின்ற சூழ்நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது நவீன விஞ்ஞானம்..
வயிற்றுக் கோளாறுகள் வராமல் இருப்பதற்கு மிக எளிய - மிக இனிய உணவு தேங்காய்ப் பால்..
அரிசி, பயறு, மிளகு, , கருப்பட்டி, என்றிருந்த தமிழர் உணவில் , சீனி, மிளகாய் மைதா, சாராயம், புகையிலை
என்று, எதை எதையெல்லாமோ திணித்தான் - வெளிநாட்டுக் காரன்...
நமக்கும் சிந்திக்கின்ற திறன் அற்றுப் போனதால் அமைதியாக இருந்தோம்... விளைவு?..
உணவின் வழி நோய்களின் பெருக்கம்..
இந்நிலையில் - அவன் கொண்டு வந்த ஆப்பிளை உடலுக்கு நல்லது என்று பரப்பி விட்டான்..
அப்படி சொல்லித்தான் அதை இங்கே பயிரிட்டான்...
அவன் நாட்டில் ஆப்பிள் பழத்தின் மகிமையால் நோய்கள் ஒழிந்தா போய் விட்டன?..
ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்?.. குளிரில் விளைகின்ற பயிர்கள் பலவற்றைக் கொணர்ந்தான்,
அவை அவனளவில் சரி..
அத்தோடு விட்டானா?
அவன் ஏற்படுத்திய உலகப் போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.
விளைவு..?
தமிழருக்குப் பழக்கமே இல்லாத உணவுகள் அறிமுகம் ஆயின ...
ரொட்டி எனும் வறட்டு உணவினைக் கொடுத்தானே!..
அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிருடன் உண்பர், வட நாட்டினர் நெய்யுடன் உண்பர், அதை உண்ணத் தெரியாமல் உண்டவன் - தமிழன் மட்டுமே..
நோய்கள் பெருகின....
உஷ்ணமான பூமியில் உடலுக்கு மேலும் உஷ்ணம் கொடுக்கின்ற உணவினை உட்கொண்டு நம்மை நாமே கெடுத்துக் கொண்டோம்...
அவனுக்குத் தெரியும், இதன் விளைவுகளைப் பற்றி!..
அவன் தனது சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்..
வெள்ளையன் அவனது நாட்டில ஒரு வேளையாவது அரிசி கஞ்சியையும் மாவடுவையும் உண்பானா?..
அவன் போய்த் தொலைந்த பிறகும் அவனது உணவு வகைகளுக்கு அடிமைகளாக இருக்கின்றோம்..
உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..
இங்கு சரீர உஷ்ணத்தைக் கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இருந்தன..
பழைமைத்தனம் என, அனைத்து நல்ல பழக்கங்களும்
ஒழித்துக் கட்டப்பட்டன
இன்று எண்ணெய்யும் செயற்கை..நெய்யும் செயற்கை
ஏதோ ஒன்றை சுத்தமான நெய் என்றும் ஏதோ ஒன்றை ஆரோக்கியமான எண்ணெய் என்றும் உளறிக் கொண்டு திரிகின்றது சமுதாயம்...
உண்மையில், இப்போதுள்ள தலைமுறைக்கு சுத்தமான நெய் என்றால் என்னவென்று தெரியாது.. உண்மையான
நெய்யும் அதன் நறுமணமும் எப்படி இருக்கும் தெரியவே தெரியாது....
எண்ணெயில் கலப்படம், உணவுப் பொருளில் கலப்படம் , இன்று எங்கெங்கும் இதுதான் ருசி என்ற பெயரில் தரம் இல்லா உணவுகள்...
உணவு வணிகமும்
ஆரோக்கியமில்லா உணவினை விற்கத் தலைப்பட்டு விட்டது..
பாலும் வெண்ணெய்யும் நெய்யும் போலி என்று வெளிப்படையாகவே தெரிகின்றது...
தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டதுவே விதிமுறை மீறலின் நிலையென்றால்
பொது வணிகம் எப்படி இருக்கும்?..
எதை எதையோ தின்று எதை எதையோ அருந்தி நோய்கள் பலவற்றையும் தனக்குள் இழுத்துக் கொண்டு விட்டது இன்றைய சமுதாயம்..
பரோட்டாவும் பிரியாணியும் நன்மை தருவன என்றால் -
வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் தீமை தருகின்றவையா?
அவற்றை ஏன் உணவு ஏவாரிகள் தமது பட்டியலில் சேர்த்துக் கொள்வதில்லை?.. ஏன் அவற்றுக்கு படாடோப விளம்பரங்கள் இல்லை?..
வேம்பும்
பாகலும் மீண்டும் தமிழ் மரபின் உணவில் வசமாகி விட்டால் நோய் நொடிகளின் தாக்கம் ஒழிந்தே போகும்..
வேப்பம் பூவும்
பாகற்காயும் பருவ காலத்தின் அருட்கொடைகள்..
வேப்பம் பூவையும்
சிறு பாகல் எனும் வகையையும் அவை கிடைக்கின்ற காலத்தில் சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது..
மாதத்தில் ஒரு முறையாவது
சமையலில் இருக்க வேண்டியவை..
வேப்பம் பூவையும்
சிறு பாகற் காயையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதனால் நீரிழிவு எனும் கொடுமை ஏற்படாது..
இப்போது
புரிகிறதா?.. இவற்றில் இருந்து நாம் ஒதுக்கப்பட்ட காரணம்!..
இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இந்நாட்டில் இல்லை.
பாலில் காப்பி, டீ , சீனி என்பன வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.
காபியும் டீயும் பருகித் தீரவேண்டியவை அல்ல..
அவை இன்றியும் வாழமுடியும்...
அதுபோக பேக்கரிகள் என, முட்டை கேக், இறைச்சி ரொட்டி - தயாரிக்கின்ற ஐயங்கார் கடைகள் வந்து நிரம்பி இருக்கின்றன.
பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் நமக்கு ஏற்ற விஷயங்களே அல்ல..
இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.
உணவின் நல்ல விஷயங்களை நாகரீகம் என்ற பெயரில் இழந்து - இச்சமூகம்
சீரழிந்து நிற்பதை நினைக்கும் பொழுது விதி வலியது என்றே தோன்றுகின்றது..
நமக்கான நலம்
நம்முடைய கையில்..
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
நன்றாகச் சொன்னீர்கள் பாவற்காயும் வேப்பம்பூவும் இக்காலம் இவ்வுணவுகள் வயது போனதுகளின் உணவு என்றாகிவிட்டது.
பதிலளிநீக்குஆங்கிலேயர் புகுத்திய உணவுதான் இப்பொழுதுள்ள இளம்சமூகம் உட்கொண்டு முப்பது வயதுகளிலேயே நோய் வந்து பைநிறைய மருந்து கொண்டு திரிகிறார்கள்.
காலை எழுந்ததும் பேக்கரியில் சென்று உணவு அருந்துவதும் அல்லது காப்பி ஷாப் களில் இருந்து உண்பதும் காப்பி அருந்துவதும் இச் சமூகம் எங்கே போகப் போகிறது இரவானால் கொத்துரொட்டிக்கடைகள்
:(, நாங்கள் புலம்ப வேண்டியதுதான்.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குஉணவின் நன்மைகளை தெரிந்து கொள்ளாமல், தீமையான உணவுகளில் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது.
இப்பொழுது சமையல் வீடியோக்களை பார்த்தால் கீரை, மற்றும் சிறுதானியத்தின் மீது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் நல்ல சத்துள்ள உணவுகள் கொடுக்கப்படுகிறது.
உணவில் கசப்பை தவிர்க்காமல் இருந்தால் நல்லதுதான்.
வாரம் ஒரு முறை வேப்பம் கொழுந்து உருண்டை அம்மா கொடுப்பார்கள். எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வார்கள்.
இப்போது ஆங்கில மருத்துவர்கள் கீரை பூச்சிக்கு ஆறுமாதம் சாப்பிட ஒரு மாத்திரை கொடுக்கிறார். எண்ணெய் குளியலால் பயன் இல்லை என்கிறார்.
.ஆயுர்வேதா, சித்தா மருத்துவர்கள் மட்டுமே பரிதுரைக்கிறார்கள்.