நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 16, 2025

ஏன் இப்படி?


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 4
  ஞாயிற்றுக்கிழமை



திருக்கோயில் நடை முறையில் ஏகபட்ட விஷயங்களை இழந்து விட்டோம்..

குறிப்பாக
நந்தவனத்தார், பூத்தொடுப்போர், ஓதுவார்மூர்த்திகள்,
வாத்தியக் கலைஞர்கள்..

முக்கியமாக மூன்று கால பூஜைகளிலும்  
நாகஸ்வர இசையுடன் மேளம் முழங்குவது நின்றே போயிற்று..

இவை போதாதென்று
கோயில்களின் திருவிழாக் கால அறிவிப்புகள் அழைப்பிதழ்கள் கூட பாரம்பரிய முறையில் வருவது
இல்லை..

பாரம்பரிய மாதத்தின் நாள் நட்சத்திரங்கள் முகூர்த்த நேரங்கள் இவை அறிவிப்புகளில் குறிக்கப்படுகின்ற வழக்கமும் குறைந்து விட்டது..

நாளின் பொழுதையும் நட்சத்திரத்தையும் திதியையும் அடிப்படையாகக் கொண்டு தான் பூஜைகள் விழாக்கள் நடத்தப்படுகின்றன..

இவற்றை மறைப்பதால் யாருக்கென்ன பயன்?..

ஆனால் இதையெல்லாம் இழந்தோம் என்பதை  ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் 
காணலாம்..

ஜனவரி பதினான்காம் தேதிக்கும்  பொங்கலுக்கும்
 என்ன சம்பந்தம்?..

ஜனவரி பதினான்காம் தேதி பொங்கல் தினத்தன்று - என்று  தமிழ் நாட்டின் தோக்காக்களின் (தொ.காட்சி) செய்தி வாசிப்பில் சொன்னார்கள்..

ஜனவரி பொங்கல் என்று விளம்பர அமைப்புகளும் கவர்ச்சி காட்டி ஆடின..

தை முதல் நாள் தைப்பொங்கல் நாள் என்றெல்லாம் ஏன் இவர்கள்  சொல்வதில்லை?..

தொல்லைக் காட்சியினருக்குத் தெரியாவிட்டால் தொலையட்டும்..

நம்மவர்களும் இப்படியே உளறித் திரிகின்றனர்..

இதேபோல தைப் பொங்கல் அன்று ஈவு இரக்கமின்றி
 இங்கிலிபீசைக் கொண்டு வந்து ஒட்ட வைத்துக் கொள்கின்ற அநாகரிகமும் வளர்ச்சி அடைந்துள்ளது..

கூடுதல் தகவலாக கல்யாண பிரியாணி என்ற விளம்பரங்களுடன் எல்லா தரப்பினரும்  இறைச்சிக் கடை திறக்கின்றனர்.. 

எதிர்காலத்தில் தைப் பொங்கல் - பிரியாணி தினம் என்று கூட மாற்றப்படலாம்.

இதற்கு ஏற்றார்போல
பொங்கல் தினத்தை ஒட்டி - இரண்டு மூன்று நாட்களுக்கு  விருந்து என்ற பெயரில் பலவித உபசரிப்பு நடத்துவதில் இரு பாலரும் முனைப்பு காட்டி தீராப் பழிக்கு ஆளாகின்றனர்..

தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக சமர்ப்பிக்கபடும் பழங்கள் கூட
 ஏவாரிகளின் விருப்பத்திற்கு மாற்றப்பட்டு விட்டன.. 

பாரம்பரிய பழங்கள்
 எல்லாம் உடலுக்கு  நல்லவையே.. நன்மை அளிப்பவையே.. 

ஆனால்,
இன்றைக்கு  வெளிநாட்டுப் பழங்கள் தான் விற்பனை முன்னனியில்..

குளங்கள் அழிக்கப்பட்டதால் தாமரைப் பூவுக்கு பற்றாக்குறை.. 

வேளாண் நிலங்களில் பூந்தோட்டங்களும் குறைவு  படுவதால் நல்ல மலர்கள் கிடைப்பதில்லை..
அவற்றுக்குப் பதிலாக வாசனையற்ற மலர்களே அர்ச்சனைத் தட்டில்..

துளசி போல அருமருந்தில்லை.. ஆனாலும் அதனிடம் ஈடுபாடு கொள்வோர் வெகு சிலரே.. 

பல் கூச்சத்தைப் பேசுகின்ற நிகழ்ச்சிகள் ஏராளம்.. ஆனால் பொது இடத்தில் சபைக் கூச்சம் பேசப்படுவதில்லை..

முடி உதிர்வதைப் பற்றிக் கவலை கொள்கின்ற இளைய தலைமுறையினர் உறவுகள் உதிர்ந்து போனதை உணர வில்லை..

கோயிலில் வழங்கப்படுகின்ற பஞ்சாமிர்தம் முதல் எலுமிச்சம் பழம் வரை எல்லாமே நன்மை அளிப்பவை...

ஆனால் எல்லாவற்றிலும் கலப்படம்.. ரசாயனம்..

தாம்பூலத் தட்டில் வைக்கப்படும் வெற்றிலை பாக்கு
 சுண்ணாம்பும் ஆரோக்கியமே..

மாரியம்மன் கோயில்களின் அடையாளங்களாகிய மஞ்சளும் வேம்பும்
காணிக்கையாக இடப்படுகின்ற மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.. பலர் கூடுகின்ற இடத்தின் கிருமி நாசினிகளே.

விழாக் காலங்களில் அலங்காரத் தோரணங்கள் ஆகின்ற வாழைகளும் மா இலைகளும் சில நாள் கழித்து உலர்ந்து சருகு ஆகுமே அன்றி அழுகும் தன்மை உடையவை அல்ல... தென்னை பனை ஓலைகளும் அப்படியே!..

அந்தப் பாரம்பரியங்கள் தொடர்கின்றனவா எனில் இல்லை..

ஏன் இப்படி?.. 
என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்..

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

சனி, பிப்ரவரி 15, 2025

தாம்பூலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 3 
 சனிக்கிழமை

உணவு உண்டதற்குப் பின் வெற்றிலையோடு ஒரு பாக்கு ஒரு ஏலக்காய் வைத்து சுண்ணாம்பு சேர்த்து தாம்பூலம் என்று தரிக்கின்ற பழக்கம் நம்மிடையே இருந்தது..


அன்றைய எளிய உணவு  செரிமானத்தின் போது சமன் ஆகவே தாம்பூலம்.. 

இன்று அதெல்லாம் இல்லை..

தாம்பூலம் தருவது உயரிய மரியாதை.. 

இருவீட்டார் மனம் உவந்து பேசி வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டு விட்டால் திருமணம் நிச்சயம் ஆகி விட்டது என்பது மரபு..

அடிதடி பஞ்சாயத்துகளின் நிறைவில் - இனி எப்போதும் வம்பு தும்பு இல்லை என்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் மாற்றிக் கொள்வது வழக்கம்..

குருஷேத்திரப் போரின் போது யுத்தத்திற்கு தாம்பூலம் வழங்கப்பட்டிருக்கின்றது..

தாம்பூலம்  -  வெற்றிலையும் பாக்கும் அற்புதமான மருந்துகள்.. இப் பழக்கம் - வழக்கம் கெட்ட ஒரு சிலரால் அழிந்து போனது..

கருப்பட்டியும் வெல்லமும் நம் மண்ணின் அறிவியல் தயாரிப்புகள்.. இவற்றுள் பின்னாட்களில் தூய்மைக் குறைவும் கலப்பும் புகுந்திருந்தன.. 

அதனால் பரிதவித்துக் கிடந்த மக்களிடையே அச்சமயத்தில் இனிப்புக்காக புகுந்தது தான் 
வெள்ளைச் சீனி..

வெள்ளைச் சீனி
 திணிக்கப்பட்டதால்
தரமான கருப்பட்டியும் வெல்லமும் கூட
சந்தையில்  காணாமல் போயின..

தேநீர் காபி இவை பொது வணிகத்தில் அறிமுகம் செய்யப்பட்டன... 

நாளடைவில்
டீக்கடைகளில் தரமில்லாத தேயிலை வகையறாக்கள்,  கறந்த பாலில் தண்ணீர் (அது என்ன தண்ணீரோ?.. ) ஊற்றுதல் என்கிற சுகாதாரக் குறைவுகள் என்பதெல்லாம்   சர்வ சாதாரணம் ஆகின.. 

இந்த மா நகரில் தேநீர் விலையை 12 ரூபாய் ஆக்கி விட்டார்கள்..

தரம்?... 

அது யாருக்குத் தெரியும்?.. 

யாருக்கு வேண்டும்!.. 

இப்போது டீயும் காஃபியும்  தமிழர்களின் பாரம்பரியம் என்ற முன்னெடுப்புகள் -  விளம்பரங்களில்..

டீ காஃபி குடித்தால் தான்  நீ டம்ளன் என்கிற அளவுக்கு ஆகி விட்டது.. 

அளவற்ற
ஆரோக்கியத்தை அளிக்கின்ற
தேங்காய் இன்றைக்கு கைக்கெட்டாத விலையில்!.. 
 
தேங்காயை உணவில் சேர்ப்பதற்கே அச்சப்படுகின்ற சூழ்நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது நவீன விஞ்ஞானம்.. 

வயிற்றுக் கோளாறுகள் வராமல் இருப்பதற்கு மிக எளிய -  மிக இனிய உணவு தேங்காய்ப் பால்..

அரிசி, பயறு, மிளகு, , கருப்பட்டி,  என்றிருந்த தமிழர் உணவில் , சீனி, மிளகாய் மைதா, சாராயம், புகையிலை
என்று, எதை எதையெல்லாமோ திணித்தான் - வெளிநாட்டுக் காரன்... 

நமக்கும் சிந்திக்கின்ற திறன் அற்றுப் போனதால் அமைதியாக இருந்தோம்...  விளைவு?..

உணவின் வழி நோய்களின்  பெருக்கம்..

இந்நிலையில் - அவன் கொண்டு வந்த ஆப்பிளை உடலுக்கு நல்லது என்று பரப்பி விட்டான்..
அப்படி சொல்லித்தான் அதை இங்கே பயிரிட்டான்...

அவன் நாட்டில் ஆப்பிள் பழத்தின் மகிமையால் நோய்கள் ஒழிந்தா போய் விட்டன?..

ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்?.. குளிரில் விளைகின்ற பயிர்கள் பலவற்றைக் கொணர்ந்தான், 

அவை அவனளவில் சரி..
அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப் போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.

 விளைவு..?

தமிழருக்குப் பழக்கமே இல்லாத உணவுகள் அறிமுகம்  ஆயின‌ ...

ரொட்டி எனும் வறட்டு உணவினைக் கொடுத்தானே!.. 

அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிருடன் உண்பர், வட நாட்டினர் நெய்யுடன் உண்பர்,  அதை உண்ணத் தெரியாமல் உண்டவன் - தமிழன் மட்டுமே..

நோய்கள் பெருகின....

உஷ்ணமான பூமியில் உடலுக்கு மேலும் உஷ்ணம் கொடுக்கின்ற உணவினை உட்கொண்டு நம்மை நாமே கெடுத்துக் கொண்டோம்...

அவனுக்குத் தெரியும், இதன் விளைவுகளைப் பற்றி!..
அவன் தனது சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்..

வெள்ளையன் அவனது நாட்டில ஒரு வேளையாவது அரிசி கஞ்சியையும் மாவடுவையும் உண்பானா?.. 

அவன் போய்த் தொலைந்த பிறகும் அவனது உணவு வகைகளுக்கு அடிமைகளாக இருக்கின்றோம்..

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு சரீர உஷ்ணத்தைக் கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும்  இருந்தன..

பழைமைத்தனம் என, அனைத்து நல்ல பழக்கங்களும்
ஒழித்துக் கட்டப்பட்டன

இன்று எண்ணெய்யும் செயற்கை..நெய்யும் செயற்கை 

ஏதோ ஒன்றை சுத்தமான நெய் என்றும்  ஏதோ ஒன்றை   ஆரோக்கியமான எண்ணெய் என்றும் உளறிக் கொண்டு திரிகின்றது சமுதாயம்...

உண்மையில்,  இப்போதுள்ள தலைமுறைக்கு சுத்தமான நெய் என்றால் என்னவென்று தெரியாது..  உண்மையான 
நெய்யும் அதன் நறுமணமும் எப்படி இருக்கும் தெரியவே தெரியாது.... 

எண்ணெயில் கலப்படம், உணவுப் பொருளில் கலப்படம் ,  இன்று எங்கெங்கும்  இதுதான் ருசி என்ற பெயரில் தரம் இல்லா உணவுகள்...

உணவு வணிகமும் 
ஆரோக்கியமில்லா உணவினை  விற்கத் தலைப்பட்டு விட்டது..

பாலும் வெண்ணெய்யும் நெய்யும் போலி என்று வெளிப்படையாகவே தெரிகின்றது... 

தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டதுவே விதிமுறை மீறலின்  நிலையென்றால்  
பொது வணிகம் எப்படி இருக்கும்?..

எதை எதையோ தின்று எதை எதையோ அருந்தி  நோய்கள் பலவற்றையும் தனக்குள் இழுத்துக் கொண்டு விட்டது இன்றைய சமுதாயம்..

பரோட்டாவும் பிரியாணியும் நன்மை தருவன என்றால் -
வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் தீமை தருகின்றவையா? 

அவற்றை ஏன் உணவு ஏவாரிகள் தமது பட்டியலில் சேர்த்துக் கொள்வதில்லை?.. ஏன் அவற்றுக்கு படாடோப விளம்பரங்கள் இல்லை?..

வேம்பும் 
பாகலும் மீண்டும் தமிழ் மரபின் உணவில் வசமாகி விட்டால் நோய் நொடிகளின் தாக்கம் ஒழிந்தே போகும்..

வேப்பம் பூவும் 
பாகற்காயும் பருவ காலத்தின் அருட்கொடைகள்..

வேப்பம் பூவையும் 
சிறு பாகல் எனும் வகையையும் அவை கிடைக்கின்ற காலத்தில் சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது..

மாதத்தில் ஒரு முறையாவது
சமையலில்  இருக்க வேண்டியவை..

வேப்பம் பூவையும் 
சிறு பாகற் காயையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதனால் நீரிழிவு எனும் கொடுமை ஏற்படாது..
 
இப்போது
புரிகிறதா?.. இவற்றில் இருந்து நாம் ஒதுக்கப்பட்ட  காரணம்!.. 

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இந்நாட்டில் இல்லை.

பாலில் காப்பி, டீ , சீனி என்பன வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. 

காபியும் டீயும் பருகித் தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்...

அதுபோக பேக்கரிகள் என, முட்டை கேக், இறைச்சி ரொட்டி -  தயாரிக்கின்ற ஐயங்கார் கடைகள் வந்து நிரம்பி இருக்கின்றன.

பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் நமக்கு ஏற்ற விஷயங்களே அல்ல.. 

இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. 

உணவின் நல்ல விஷயங்களை நாகரீகம் என்ற பெயரில் இழந்து - இச்சமூகம்
சீரழிந்து நிற்பதை நினைக்கும் பொழுது விதி வலியது என்றே தோன்றுகின்றது..

நமக்கான நலம்
நம்முடைய கையில்..
**

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், பிப்ரவரி 13, 2025

ஆடு பாம்பே..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி முதல் நாள்
வியாழக்கிழமை


" விதையொன்று போட சுரை ஒன்று முளைக்குமா?.. " - என்பது பழந்தமிழர் வாழ்வியல்..

இன்றைய சூழலில் விதையென்று விதைத்தாலும் - முளை என்று முளைக்காது.. தழை என்று தழைக்காது..

ஏனெனில் இன்றைக்கு இயற்கையின் வித்துகள்  பலவும் முளைப்புத் திறன் அற்றவை...
இந்த வளையத்துக்குள் மனிதமும் சிக்கிக் கொண்டிருக்கின்றது..

ஆனாலும்,

வாழ்க அறிவியல்.. என்றே கூச்சல்..

காளையின் அணைதல் இன்றிக் 
பசுக்கள் - கருக் கொள்கின்றன.. அதனால் சுரக்கின்ற பாலைச் சுரண்டிச் சுரண்டி சத்துக்களை எல்லாம் எடுத்து விட்டு இதுவாக அந்தப் பாலில் செயற்கையை ஏற்றி விட்டு ஆரோக்கியம் என்கின்றது விஞ்ஞானம்.. 

வாழ்க அறிவியல்!..

பிரியாணிக் கடையில் உணவாகின்ற கோழிகள் ஆரோக்கியமானவை என்கின்றது விஞ்ஞானம்.. 

அப்படியானால் கரு தரிக்க வேண்டுமே.. முட்டை இட வேண்டுமே.. 

அதெல்லாம் நடக்கவே நடக்காது.. ஏன் எனில் அதற்கு லாயக்கற்றவை அந்தக் கோழிகள்.. 

கொத்தித் திரியும் அந்தக் கோழி.. - என்கின்றார் மகாகவி..

நிலத்தில் மேய்ந்து தீனி தின்பதற்கும் திறனற்றதான பிராய்லர்
கோழிகளைத் தின்கின்றவர்களுக்கும்  - உடல் உபாதைகள் ஏராளம்  என்கின்றனர் விவரம் அறிந்தோர்..

இப்படி - 
எதற்கும் லாயக்கற்ற கோழிகள் என்றால்?.

வாழ்க அறிவியல்!..

இதுதான் கலி காலம்..


அன்றைக்குக் கூரை வீடுகள்..
அரைகுறை இருட்டில்  அடுக்களைகள்..  

ஆனாலும்  ஆரோக்கியம் மிகுந்து இருந்தது...  ஆறேழு பிள்ளைகள் என,
அன்பின் ஆனந்தம் தவழ்ந்திருந்தது.. 

வாழ்வில் வறுமை இருந்த போதும் செம்மை செழித்திருந்தது... 

இருந்த போதும் தேசத்துக்கு ஆகாதென்று  தேடிப் பிடித்து கருவின் நரம்பை நறுக்கினார்கள்..

இன்றைக்கு எடுப்பான வீடுகள்.. வறுமை என்ற வார்த்தைக்கே இடமில்லை.. அங்கிருந்தும் இங்கிருந்தும் லட்சக் கணக்கில் வருட வருமானம்.. 
பளீரென்ற அழகுடன் கிச்சன்கள்..  

இதயங்களில் மட்டும் இருட்டு..

எவனோ எப்படியோ எங்கோ சமைத்ததை வரவழைத்துத் தின்று விட்டு, 

குழந்தைப் பேற்றுக்காக - காசு கொடுத்து வாங்கிய குளு குளுப்பான சிற்றுந்தில் அமர்ந்து கருத்தரிப்பு கூடத்திற்கு -  
முன் பதிவுடன்
ஓடுகின்ற காலம் என்றாகி விட்டது...

வாழ்க அறிவியல்!..

: நீதி :
கதை என்று களித்தாலும்
விதை என்று விதைத்தாலும்
காசுக்குப் போகாதது காலின்
தூசுக்கு ஆகாத தென்றாடு பாம்பே..
விதையில்லா விதை எல்லாம்
வீதியிலே வீசியபின் வீரியமே
கதியாக ஆடு பாம்பே நல்ல 
நீதியாக தமிழோடு ஆடு பாம்பே.. 
பாம்பாட்டிச் சித்தர் 
மன்னிப்பாராக..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2024

உப்பு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 2
ஞாயிற்றுக்கிழமை


உப்பு இயற்கையின் கொடை.. 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.. என்று உயிரோடு இணைத்தது தமிழ்..

ஆனால், இன்றைக்கு உப்பு இரசாயனம்.. 

அளவான உப்பு உடலுக்கு ஆரோக்கியம்..  
உப்பு சுப மங்கலங்களுள் ஒன்று.. மகாலக்ஷ்மி என்பர் சான்றோர்..

உப்பு விளைகின்ற தளம் உப்பளம்..

தேவாரத்தில் - கழி என்றும் களர் என்றும் உப்பளங்கள் குறிக்கப்பட்டு உள்ளன..

பொதுவாக உப்பு 99.99% சோடியம் குளோரைடு..

உப்பு உணவில் பயன்படுத்தப்படுகின்ற கனிமம்..  உடல் நலத்துக்குத் தேவையான முக்கியமான பொருள்.. 

சாதாரண உப்பு என்பது நாம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இது "NaCl" என வேதியலில் குறிக்கப்படுகிறது..


1) What is table salt and sea salt?..

Table salt is harvested from salt mines, and sea salt comes from ocean water that has been evaporated. Both salts are made from sodium chloride. According to Oregon State University, Sodium and chloride are major electrolytes needed in the body that work together to regulate fluid outside.


2) Is table salt pure?

It is not. 
Rock salt (from the ground) and sea salt have various other compounds in them. Table salt is not pure NaCl because it has an ant-caking agent in it. Sodium chloride NaCl is a pure substance by definition.

Regular table salt comes from salt mines and is processed to eliminate minerals. In addition to iodine — an essential nutrient that helps maintain a healthy thyroid — table salt usually contains an additive to prevent clumping.

Experts recommend limiting salt of any kind in your diet because this common food topper contains sodium. For some people, sodium can increase blood pressure because it holds excess fluid in the body. 

The sodium content of sea salt and table salt is identical - 40% when measured by weight. However, some sea salt may have larger crystals than table salt, so the sea salt may have less sodium by volume because fewer crystals will fit in a measuring device such as a spoon.

Whether you choose to use sea salt or table salt, remember to use in moderation. Better yet, experiment with herbs and spices to add flavor to your food and keep the salt shaker off the table.

... நன்றி : விக்கிப்பீடியா


பொதுவாக -
மழைக் காலங்களில் உப்பு நீர்த்து விடும்.. கால சூழ்நிலை மாறியதும் திரள் திரளாக ஆகி விடும்..


இப்படியெல்லாம்
கட்டியாகாமல் வருடம் முழுதும் தூளாகவே பொலபொல என்று இருப்பதற்காகவும் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காவும்
இப்போது சிலவிதமான ரசாயனங்கள் இரண்டறக் கலக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றது... 
இதுதான் உடம்புக்கு நல்லது!.. - என்ற வியாபாரக் கூச்சலுடன் 
உணவுக்கும்
உடலுக்கும்,  கேடு விளைவிக்கின்ற பொருட்கள் சந்தையில் பெருகிக் கொண்டு  இருக்கின்றன...

நாம் தான் தப்பிப் பிழைக்க வேண்டும்...

இந்த வேதிப்பொருட்கள்  உடலுக்கு நல்லதல்ல..

கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பு தான் தலை சிறந்தது.. கல்லுப்பை நாமே  பொடியாக்கி நுணுக்கிக் கொண்டு பயன்படுத்தலாம்..

நவீன ரசாயனங்கள் இங்கே நுழைவதற்கு முன்பே இயற்கையின் துணை  கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நாம்.. 

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே...

என்றெல்லாம் உப்பின் பயன்கள் நமக்குத் தெரியும்.. 

எலுமிச்சை, நாரத்தை
வேறு சில காய்கள், மீன், இறைச்சி - இவற்றை உப்புடன் அல்லது உப்பு கலந்த நீருடன் சேர்த்துப் பதப்படுத்தும்  நம்முடைய நுட்பமும் ஆதியானது...

உப்பு தானம் சிறப்பானது.. 

குறிப்பாக  நோய் தீர்வதற்கு நேர்ந்து  கொண்டு மாரியம்மன் கோயில்களில்
உப்பினைக் காணிக்கை செலுத்துவது சமயம் சார்ந்த தமிழர்களின் வழக்கம்..

தென் தமிழகத்தில் சில சமுதாயத்தில் கல்யாணம் நிச்சயம் செய்யப்பட்டதும் இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் உப்பினைப் பரிமாறிக் கொள்வது வழக்கம்.. 

எனது மகள் திருமண நிச்சயத்தின் போது இப்படி நடந்தது..

வீட்டுக்குள் புகுந்து நாட்டாமை செய்கின்ற  
இரசாயன விளம்பரங்களில் இருந்து மீள்வதற்கு முயற்சிப்போம்..

உப்பிட்டவரை உள்ளளவும் நினை..

இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஜூலை 23, 2024

கரிசாலை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 26
புதன்கிழமை


கரிசலாங்கண்ணி..

தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில் கரிசாலை, கையாந்தரை
என்பனவும் செல்லப்பெயர்கள்..

பிரிங்கராஜ் என்று வடநாட்டில் பெயர்..
(நன்றி : விக்கி)

ஈர நிலத்தில் விளைகின்ற மூலிகை..

வயல் வரப்புகளிலும் குளக்கரைகளிலும் தளதள என்று அடர் பச்சை நிறத்தில் மண்டி வளர்கின்ற அற்புதம்..

மஞ்சள் வெள்ளை எனப் பூக்கின்ற இரு வகைகள்.. கிழக்கு ஆசிய நாடுகளில் வேறு சில ரகங்களும் இருக்கின்றனவாம்..

காயகல்ப மூலிகையான
கரிசலாங்கண்ணி சற்றே கசப்புச் சுவை உடையது..


சிறு பருப்புடன் இக்கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் மஞ்சள் காமாலை முதலான பல்வேறு நோய்கள் குணமாவதாக சித்த வைத்தியத்தில் சிறப்பு..

தகுந்த சித்த மருத்துவரிடத்தில் ஆலோசனை பெறுவது அவசியம்..
 

வெள்ளைக் கரிசலாங்கண்ணியை தலைமுடியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது வழக்கம்..

இலையை உலர்த்திப் பொடியாக்கிப் பல் துலக்குவதில் தொடங்கி மது, புகையிலை இவற்றில் இருந்து மீள்வது வரைக்கும் கரிசாலாங்கண்ணி கை கொடுக்கின்றது..


இதனாலேயே அருட்பிரகாச வள்ளலார் ஸ்வாமிகள் கரிசாலாங்கண்ணியை தெய்வீக மூலிகை என்று புகழ்ந்துரைத்தார்..


ரத்தச் சோகை, இளநரை, பார்வைக் குறைபாடுகள், பல் நோய்கள், சளி, ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள், ரத்த அழுத்தம் என, அனைத்திற்கும் கரிசாலாங்கண்ணி பயனாகின்றது.. 

மஞ்சள் வெள்ளை இரண்டிலுமே மருத்துவ குணங்கள் இருந்தாலும், மஞ்சள் கரிசலாங்கண்ணியே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது..
( மருத்துவக் குறிப்புகள் நன்றி : விக்கி )


கரிசலாங்கண்ணித் தைலத்தினால் கபாலச் சூடு குறைகின்றது.. இதனால் நீரிழிவு முதலான பற்பல நோய்களுக்குத் தீர்வு கிடைக்கின்றது...

இதனால், மார்க்கெட்டிங் வாலாக்களுக்கு என்ன பிரயோசனம்?..

அதனால் தான் நமது கவனத்தைச் சிதற அடிப்பது!..


கரிசாலாங்கண்ணித்
தைலம் தயாரிக்கின்ற முறைகள்..

1)
கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதை 200 மிலி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி எடுத்து - எண்ணெயை தலைமுடிக்கு தேய்த்துக் கொண்டால் போதும்.. கூந்தல் வளர்ச்சி பெறும். முடி உதிராது.. பொடுகுகள் ஏற்படாது..

2)
கரிசலாங்கண்ணி இலைகளைக் கழுவி விட்டு மெல்லியதாக நறுக்கி 200 மிலி சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் வாணலியில் மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் சுட வைக்கவும்..

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தீயை அணைத்து 
விட்டு, எண்ணெயை ஆற வைக்கவும். 

ஆறியதும் வடிகட்டி -
தூய்மையான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். 
சில நாட்களுக்கு வெயிலில் காய வைத்து, அதன் பின், எண்ணெயைப்  பயன்படுத்தவும்..

கரிசலாங்கண்ணியின் ஊட்டச் சத்துக்கள் முழுதுமாக தேங்காயெண்ணெயுடன் கலந்திருக்கும்..

அவ்வப்போது இதே போலத் தைலம் தயாரித்து தினமும்
பயன்படுத்துவது நல்லது.. 

நம்மைப் போன்ற ஏழை எளியவர்களுக்கு
வெட்டிச் செலவு மிச்சம்..

ஆனால், 

ஹேர் பாலுக்கு டிரை செய்றேன் நானும் ஜின் ஜினக்கா ஷாம்பூ!.. -

என்ற, 
அல்ப பெருமை டமில் குமரிகளுக்குக் கிடைக்காதே!..

இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூன் 24, 2024

கூட்டாஞ்சோறு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 10 
திங்கட்கிழமை

கூட்டாஞ்சோறு..

நமது பாரம்பரிய கலாச்சாரங்களுள் ஒன்று...  இன்றைய சூழலில் நடைமுறையில் இருப்பது சந்தேகமே!..


தேவையான பொருள்கள் :
பொன்னி அரிசி 500 gr
துவரம் பருப்பு 150 gr
உருளைக்கிழங்கு ஒன்று
காரட் ஒன்று
பீன்ஸ் 15
மஞ்சள் பரங்கி சிறு துண்டு
காலிஃப்ளவர் சிறியதாக
முருங்கைக்காய் 2
பச்சைப் பட்டாணி கையளவு
சின்ன வெங்காயம் 15
பச்சை மிளகாய்  3
பூண்டு 5 பல்

மஞ்சள் பொடி 1⁄2 Tbsp
சாம்பார் பொடி ஒரு Tbsp
கல் உப்பு - தேவைக்கு

அரைப்பதற்கு :
தேங்காய் ஒரு மூடி
சீரகம் ஒரு Tbsp 
மிளகு ஒரு Tbsp 

தாளிப்பதற்கு :
கடுகு ஒரு tsp
சீரகம் ஒரு tsp
உளுத்தம் பருப்பு - ஒரு tsp
பெருங்காயம் 1⁄2 tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
மல்லித் தழை - தேவைக்கு

நெய் - தேவைக்கு


செய்முறை :
காய்கறிகள் அனைத்தையும் 
கழுவி வழக்கப்படி நறுக்கிக் கொள்ளவும்.. பச்சை மிளகாயைத் தூளாக அடிக்காமல் நெடுக்காக கீறிக் கொள்ளவும்..

வெங்காயத்தை உரித்து வைக்கவும்.. நறுக்க வேண்டாம்.

தேங்காயைத் துருவி அதனுடன் குறித்துள்ள
 பொருட்களைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரம் ஒன்றில்
துவரம் பருப்பினை அலசி விட்டு அளவான தண்ணீருடன் மஞ்சள் பொடி  இட்டு அடுப்பில் ஏற்ற வேண்டும்..

தண்ணீரில் ஆவி படரும் போது மேலாக சிறிது எண்ணெய் விட்டு தேவையான  உப்பு போட்டுக் கொள்ளவும்.

வேறொரு பாத்திரத்தில்
பருப்பை அலசி விட்டு , அதனுடன் மஞ்சள் பொடி சாம்பார் பொடி சேர்க்கவும்..

அரை வேக்காட்டில்
 பருப்பை சற்று மசித்து அதனுடன்  நறுக்கிய காய்கறிகளையும் தேங்காய் விழுதையும் சேர்க்கவும். 

வேறொரு பாத்திரத்தில் ஒன்றுக்கு இரண்டு என தண்ணீர் வைத்து அரிசியை வேக வைக்கவும்.. 

அரிசி முதல் கொதி வந்ததும் சிறிது உப்பு இட்டு - கிளறி வேகவிடவும்..

அரை வேக்காட்டில் அடுப்பை நிறுத்தி வெந்திருக்கும் பருப்பு காய்களை இதனுடன் கூட்டி  -
கண்களால் பதம் பக்குவம் பார்த்து - தளதளத்து வரும் போது - 

வாணலியில் சிறிது கடலெண்ணெய் விட்டு , உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துச் சேர்த்து -

நெய் விட்டுக் கிளறி - மல்லித் தழை தூவி இறக்கி வைக்கவும்...

அந்த நாட்களில் அறுவடை முடிந்ததும் 
கன்னியர் சுமங்கலிப் பெண்கள் கூடி நின்று மரபு வழக்கப்படி பழ வகைகளுடன் அம்மனுக்கு 
கூட்டாஞ்சோறு படையல் இடுவர்..

இங்கே சொல்லப்பட்ட காய்கள் தான் என்றில்லை..
சூழ்நிலைக்கு ஏற்றபடி தான்...


உதிரியாக இல்லாமலும் பொங்கல் மாதிரி குழைவாக  இல்லாமலும் தளர்வாக இருத்தல் வேண்டும் - கூட்டாஞ்சோறு..

கூட்டாஞ்சோறு ஆக்கும்போது  ஒவ்வொன்றையும் சேர்ப்பதில் முன் பின் இருந்தாலும் அம்மன் வழிபாட்டில் வேறுபாடு இருக்காது...

 கூட்டாஞ்சோறு - இதன் நோக்கம் உயர்வு தாழ்வு இன்றி ஊர் நன்றாக இருக்க வேண்டும் உறவு நன்றாக இருக்க வேண்டும் என்பது தான்..

அவ்வண்ணமே 
ஊரும் உறவும் நன்றாக இருக்கட்டும்..

வாழ்க வளம்
வளர்க நலம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூன் 16, 2024

நீர் மோர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 2   
ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில்

சில தினங்களுக்கு முன்பு 
 Indian Council of Medical Research (ICMR) National Institute of Nutrition (NIN)  வழங்கியுள்ளதாக ஒரு செய்தி
(Revised Dietary Guidelines)..

However, what the country would be shocked to know that the ICMR has advised the country to avoid consuming sugarcane juice. Yes, sugarcane juice is a beverage that the country loves to consume, but it could be risky to consume..


கருப்பஞ்சாற்றில் ஒவ்வொரு 100 மிலியிலும் 13 முதல் 15 grams வரை சர்க்கரைச் சத்து இருப்பதால் - குறைத்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்..

கரும்புச் சாறு  அருந்துவதன் மூலம், இதயம் மற்றும் நுரையீரல்கள் பலம் அடைகின்றன. வயிற்று புண்களையும் இது சரி செய்கின்றது என்றாலும் இன்றைய சூழலில் மனிதருக்கு அச்சம் ஊட்டுவதாகி விட்டது..

ICMR has suggested that sugarcane juice comprises 13 to 15 grams of sugar in every 100 milliliters. The sugarcane juice contains high sugar levels. Therefore, the ICMR has suggested that the consumption of sugar should be minimized.

மேலும் - 
sugary soft drinks வகைகளையும் packaged fruit juices, energy drinks, and drinks containing alcohol - வகைகளையும் தவிர்க்கும்படி சொல்லப்பட்டுள்ளது..




குறைத்துக் கொள்ள வேண்டியவை ;
Coffee, Tea and other Caffeinated drinks.. 

பரிந்துரைக்கப்பட்டிருப்பவை :
இளநீர்,மோர், எலுமிச்சை சாறு ஆகியன.. எல்லாவற்றுக்கும் மேலாக சுத்தமான குடிநீர்..


இருக்கிற இருப்புக்கு (இருப்பு எனில் கையிருப்பு அல்ல)
இளநீர் எல்லாம் கட்டுப்படி ஆகாது.. 

குரும்பையாய் இருப்பது நாற்பது ரூபாய்.. கொஞ்சம் வழுக்கையாய் இருந்தால் ஐம்பது என்ற அளவில் போய்க் கொண்டிருக்கின்றது எளநி.. எளநீய்!..

என்னை மாதிரி ஆட்களுக்கு நன்னாரி அல்லது வெட்டி வேர் ஊறிய பானைத் தண்ணீர் தான் சிறந்தது.




வீட்டில் தயாரிக்கப்பட்ட மோருடன் சுத்தமான நீர் அருந்தி வெயிலின் தாக்கத்தை எதிர் கொள்வோம்..

இயற்கையே வளம்
இயற்கையே நலம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஏப்ரல் 11, 2024

வயல் 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 29 
வியாழக்கிழமை


வயல் என்ற வார்த்தை மங்கலத்துடன் தேவாரத்தில் பொதிந்திருக்கும் பற்பல பாடல்களுள்  ஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு ஸ்வாமிகளும் அருளிச்செய்த பாடல்களில் சிலவற்றைக் கடந்த பதிவுகளில் சிந்தித்தோம்..

அந்த வழியில் 
சுந்தர மூர்த்தி  ஸ்வாமிகள் அருளிச் 
செய்த திருப்பாடல்கள் 
சிலவற்றை இன்று சிந்திப்போம்..
 

திருநாட்டியத்தான்குடி
சுந்தரருக்கு உழவன் 
உழத்தியாக தரிசனம் அளித்த திருத்தலம்


குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டாரார் ஆகிலுங் கொள்ளக்
கண்டாலுங் கருதேன் எருதேறுங்
கண்ணா நின்னல தறியேன்
தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக
நண்டாடும் வயல் தண்டலை வேலி
நாட்டியத்தான்குடி நம்பீ. 7/15/9

திருக்கோளிலி
(திருக்குவளை)


வண்டமருங்குழலாள் உமை
நங்கைஓர் பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன்றெரி
செய்தஎம் வேதியனே
தெண்திரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம் அது ஆயவனே அவை
அட்டித் தரப்பணியே.. 7/20/2

திருக்கற்குடி
(உய்யக்கொண்டான்)

வருங்காலன் உயிரை மடியத் திரு மெல்விரலால்
பெரும்பாலன் தனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே
கரும்பாரும் வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே. 7/27/9

திருநீடூர்

குற்றமொன்று அடியார் இலரானாற்
கூடுமாறு தனைக்கொடுப் பானைக்
கற்ற கல்வியிலும் இனி யானைக்
காணப் பேணும்  அவர்க்கு எளியானை
முற்ற அஞ்சுந் துறந்திருப் பானை
மூவரின் முதலாயவன் தன்னைச்
சுற்று நீர்வயல் சூழ் திரு நீடூர்த்
தோன்றலைப் பணியாவிட லாமே.. 7/56/5

திருக்கானப்பேர்
(காளையார்கோயில்)


தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்சு
உண்டு அதனுக்கிறவா தென்றும் இருந்தவனை
ஊழி படைத்தவனோடு ஒள்ளரியும் உணரா
அண்டனை அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும்
ஆதியை மேதகு சீரோதியை வானவர் தம்
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்றுகொலோ
கார்வயல் சூழ்கானப்பேர் உறை காளையையே.. 7/84/8

திருநாகேச்சரம்
(திருநாகேஸ்வரம்)

பாலனது ஆருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்தாக்கிய தென்னைகொலாம்
கோல மலர்க்குவளைக் கழுநீர் வயல் சூழ் கிடங்கில்
சேலொடு வாளைகள்பாய் திருநாகேச்சரத்தானே.. 7/99/3
**
தேடலில் துணை
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

இத்தகைய வளங்கள் தான்
நிறைவும் நிம்மதியும்..

வயலே வாழ்வு
வாழ்வே வயல்!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், ஏப்ரல் 10, 2024

வயல் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 28
புதன்கிழமை


வயல் என்ற வார்த்தை மங்கலத்துடன் தேவாரத்தில் பொதிந்திருக்கும் பற்பல பாடல்களுள்  ஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்த சில பாடல்களை நேற்று சிந்தித்தோம்..


அந்த வழியில் -  திருநாவுக்கரசர் அருளிச்செய்த சில பாடல்களை இன்று சிந்திப்போம்..

தில்லை


பாளையுடைக் கமுகு ஓங்கிப்பன் மாடம் நெருங்கி எங்கும்
வாளையுடைப்புனல் வந்தெறி வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவுடைக்கழற் சிற்றம் பலத்தரன் ஆடல்கண்டாற்
பீளையுடைக்கண்க ளாற்பின்னைப் போய்த் தொண்டர் காண்பதென்னே. 4/80/1

திரு அதிகை
வீரட்டானம்

ஆரட்டதேனும் இரந்துண்டு அகம் அகவன் திரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்றதால் விரி நீர்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச் சூழ் வயலார் அதிகை
வீரட்டத்தானை விரும்பா வரும்பாவ வேதனையே. 4/104/5

திருக்கோழம்பம்

முன்னை நான்செய்த பாவ முதலறப்
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது
அன்னமார் வயல் கோழம்பத்துள் அமர்
பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.  5/64/7

திருமணஞ்சேரி

துள்ளு மான் மறி தூமழு வாளினர்
வெள்ள நீர் கரந்தார் சடை மேலவர்
அள்ளலார் வயல்சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே.. 5/87/5

திருவலம்புரம்


மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை
மறையவனும் வானவரும் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி யுடையார் ஒற்றை
கதநாகங் கையுடையார் காணீரன்றே
பண்மலிந்த மொழியவரும் யானுமெல்லாம்
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே.. 6/58/1

திருப்புன்கூர்

கையுலாம் மூவிலை வேல் ஏந்தினாருங்
கரிகாட்டில் எரியாடுங் கடவுளாரும்
பையுலாம் நாகங்கொண்டு ஆட்டுவாரும்
பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
திருப்புன்கூர் மேவிய செல்வனாரும்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்தாரும்
வெண்ணியமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.. 6/59/3
**
தேடலில் துணை
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

இத்தகைய வளங்கள் தான்
நிறைவும் நிம்மதியும்..

வயலே வாழ்வு
வாழ்வே வயல்!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***