நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

ஸ்ரீவிஜய விநாயகர்

விநாயகர் வழிபாடு - பாரதத்தின் தனிச் சிறப்பு. 

எளிமையின் தனிப்பெரும் அடையாளம் விநாயக மூர்த்தி!..

தங்கத் தகடுகள் போர்த்தப்பட்ட ஆடம்பரமான மூலஸ்தானமாகட்டும்.. தளிரும் இலைகளும் தழைத்து சரியும் அரச மரத்தின் நிழலாகட்டும்!... எங்கும் ஒரே மாதிரியாகப் பொங்கிப் பெருகும் அருள் வெள்ளத்துக்கு உரியவர் அவரே!...

எல்லா மூல மந்திரங்களுக்கும் முதலான,   ஓம் - எனும் ப்ரணவமே அவர் தம் இருப்பிடம். விநாயகப்பெருமானை ஓம் எனும் ப்ரணவத்தால் தியானித்து வணங்கினால் ஓஜஸ் எனும் நினைவாற்றலும் தேஜஸ் எனும் வடிவழகும் நமக்கு சித்தியாகும்.

காதுகளின் கீழ் நுனியை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்து, நாம்  சமர்ப்பிக்கும் வணக்கத்தினால் காதுகளின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்புகளால் நினைவாற்றல் தூண்டப்படுகின்றன என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மையாகும்.

மக்கள் நலன் கருதி தன் தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை மேரு மலையில் எழுதிக்கொடுத்த தியாக மூர்த்தி. நம் உடலில் மூலாதாரத்துக்கு அதிபதி.

சிவ - சக்தி அம்சங்களாகத் திகழ்ந்த - சமஷ்டி , வியஷ்டி எனும் ப்ரணவ ரூபங்களை, அப்பனும் அம்மையும் நோக்கிய மாத்திரத்தில் ப்ரணவ ரூபமாக பேரொளிப் பிழம்பில் தோன்றியவர் கணபதி!...


கஜமுக அசுரனை அழிப்பதற்கென - சிவபெருமானால்  தோற்றுவிக்கப்பட்டவர் கணபதி என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவாக்கு...

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறைஇறையே...

என்று - தம்மை வழிபடும் அன்பரின் இடர்களைக் களைவதற்காக  எம்பெருமானும் அம்பிகையும் கணபதியை அருளினர் என்பது திருஞான சம்பந்தப் பெருமானின் திருவாக்கு!...

இந்தத் திருக்கோலத்தைத்தான் -

காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!...,

என்று திருஐயாற்றில், தாம் கண்டு இன்புற்றதை நமக்கும் காட்டியருள்கின்றார் திருநாவுக்கரசு சுவாமிகள்.

எனவே இந்த அளவில் - புத்தாண்டின் முதல் நாளில் நம் முன்னோர் நமக்குக் காட்டியருளிய -

காக்கும் கணபதியைக் கைகூப்பித் தொழுது வணங்குவோம்!...

அவர்தம் பொற்பாதங்களைப் பணிந்து போற்றி இன்புறுவோம்!..

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை...

நம் வாழ்வில் தடுமாறும் பல தருணங்களிலும் நமக்குக் கை கொடுத்துத் தூக்கி விடுபவர் அவரே!...


விஜய எனும் புத்தாண்டின் நற்பலன்களை 
நம் கைமேல் தந்தருள்வார் விநாயகப் பெருமான்!...


ஸ்ரீ கணேச சரணம்!... சரணம்!...

2 கருத்துகள்:

  1. சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகையை இருகரம் நீட்டி வரவேற்கின்றேன். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி. ஸ்ரீவிஜய வருடம் நம் எல்லோருக்கும் நன்மைகளைத் தருவதாக!..

    பதிலளிநீக்கு