நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 29, 2019

கலை விருந்து 2

சென்ற ஆண்டில் தீபாவளிக்கு முன்னதாக
தொடங்கப்பட்ட தொடர் பதிவு...

அடுத்தடுத்த பதிவுகளால்
தூங்கிக் கிடந்தது - இந்த தொடர்...

இனி அவ்வப்போது படங்களுடன் மலரும் என நம்புகிறேன்...

இதன் முதற்பகுதிக்கான இணைப்பு - கலை விருந்து 1

ஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ளது - இந்தக் கொன்றை... 

சமீபத்திய கஜா புயலில் சாய்ந்து விட்டது என்றார்கள்...


அழிந்து போன இனமாகிய டைனோசரின் முட்டைகள் 
இப்பூவுலகில் ஆங்காங்கே கிடைக்கின்றன...

அதனால் அதனை நம்புகின்றனர் அனைவரும்...

ஆனால்
அதனையும் மிஞ்சியதாக நமது புராணங்களில் சொல்லப்படுவது யாளி!..

அவை சிங்கமுக யாளி, கஜமுக யாளி என்று இரண்டு வகை..

அப்படியான சிங்கமுக யாளி சிற்பங்கள் எந்தக் கோயிலையும் விட
தஞ்சை பெரிய கோயிலில் அதிகம்...

அதுவும் அந்த யாளியை அடக்கிய வீரர்கள் -
அதன் மீது வெகு சந்தோஷமாகப் பயணம் செய்வது போன்ற சிற்பங்கள்...

மாமன்னனின் சிந்தனை எப்படியெல்லாம் விரிந்து பரந்திருக்கின்றது.. 
- என்பதை நினைக்குபோது புல்லரிக்கின்றது...

யாளியின் மீது வீரர்கள்..
யாளியின் மீது பயணிக்கும் வீரர்களின் சிற்பத்தொகுதியின் ஒரு பகுதி..

கருவறையின் தெற்கு வாசல்.. 
இந்தக் கல்வெட்டுத் தொகுப்பில்
மாமன்னன் ராஜராஜசோழனின் திருப்பெயரைத் தரிசிக்கலாம்!..


இனி வரும் இரண்டு படங்களையும் பெரிதாக்கிப் பாருங்கள்...

மறுமுறை வாய்ப்புக் கிடைக்கும்போது தஞ்சைக்குச் சென்று
பெரிய கோயிலின் கல்வெட்டுகளை மெல்ல வருடி விட்டு
அவற்றில் காதை வைத்துக் கேளுங்களேன்!...



ஸ்ரீசண்டேஸ்வரரின் சந்நிதிக்கு எதிரில்
ராஜராஜ சோழப்பெருந்தகையின் மெய்க்கீர்த்தி உள்ளது என்கின்றனர்..

என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை..

கருவறையின் வடக்கு திருவாசலில் இருந்து முருகனின் திருக்கோயில்..
தஞ்சை பெரிய கோயிலின்
கந்த கோட்டம் காணத் திகட்டாத கலையமுது!...

முருகப்பெருமான் திருக்கோயிலின் எந்த ஒரு பகுதியிலும்
சோழன் எந்த ஒரு எழுத்தையும் பதிக்கவில்லை...

எனவே - இது பிற்கால மன்னர்களின் கைவண்ணம் என்கின்றார்கள்...

ஆனால், உண்மை வேறு...

சொன்னால் சண்டைக்கு வருவார்கள்... நமக்கு எதற்கு ஊர்வம்பு!...

முருகன் கோயிலின் மேற்குக் கோட்டம்..
மேலே உள்ள சிற்பத் தொகுப்பு எளிதில் புரியும்...

பரணில் நின்று கவண் வீசும் வள்ளி நாயகியைத் தேடிக் கொண்டு
வேடனாக விருத்தனாக வந்த முருகன்...

வேங்கை மரமும் தெரியும்..
வேழமுகன் வந்து ஆர்ப்பரிப்பதும் புரியும்...

முருகன் கோயிலின் தெற்குக் கோட்டம்.. 
மேலே உள்ள படத்தில் வலப்புறம் மீனாட்சி அம்மன்..
அவளுக்கு மேலே வலை வீசும் மீனவனாக சிவபெருமான்...

இந்தப்பக்கம் - வளையல் வியாபாரி..
கீழே அதிகார நந்தி..

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தனி  
மேலே, அம்பிகையின் திருவடியைத் - தன் முதுகில் தாங்கும் மகிஷன்..

நிசும்பனின் முதுகெலும்பை முறிக்கும் முண்டகக்கண்ணி..
என்ன ஒரு கலைப்படைப்பு!...

பூமி அழுந்தும்படிக்கு இடக் காலை ஊன்றிய மாகாளி
வலக் காலை எடுத்து வீசி - நிசும்பனை மிதிக்கும்போது
அந்த வேகத்தில் ஆடை ஆபரணங்கள் பின்னோக்கிப் பறக்கின்றதே!...

இந்த ஒரு திருக்காட்சியே போதும்...
இவ்வையகம் சிறப்புடன் வாழ்வதற்கு..

மீண்டும் அடுத்தொரு பதிவில் சந்திப்போம்...
படங்களைப் பற்றிய கருத்துரைகளுக்காக
ஆவலுடன் காத்திருக்கின்றேன்..

வாழ்க நலம் 
ஃஃஃ

33 கருத்துகள்:

  1. காலை வணக்கம். மிக மிக அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. யாளியின் முன்புறம் மட்டும் தெரியும் வண்ணம் உள்ளது சிற்பங்கள். முழு யாளி படம் எடுத்திருக்கிறீர்களா? இருந்தா அங்கே? (இதைக் கேட்பதற்கு சற்றே கூச்சமாக இருக்கிறது!!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாளி முழு உருவம் எடுத்திருப்பதாகத்தான் நினைக்கின்றேன்....

      சேமிப்பில் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்...

      இதைக் கேட்க என்ன கூச்சம்!...

      நீக்கு
    2. முழு உருவமே அவ்வளவுதானா? இன்னமும் இருக்கிறதா என்றொரு கூச்... நானும் தஞ்சாவூரில்தான் இருந்தேன் என்பதொரு கூச்....

      நீக்கு
    3. ஸ்ரீராம்,துரை செல்வராஜு சார் - எனக்கு நேரமில்லையே... இதற்கு பின்னூட்டம் இடுவதற்கு.

      யாளி என்பது நம்முடைய (தெற்கத்தைய) பாணி ஜுராசிக் மிருகம் என்ற அளவில்கூட ஒரு ஆராய்ச்சியும் நடைபெறவில்லை. வெறும் கற்பனையாகவா இத்தனை சிற்பங்கள் செய்திருப்பார்கள்?

      தஞ்சை கோவிலில் முக்கியமான படங்கள் எடுத்திருக்கிறேன். இங்கு ஷேர் பண்ண இடுகை பாதியில் இருக்கு, ஆனால் துரை சார் அதற்குள் அவருடைய படங்கள் வெளியிட்டுவிட்டார். நீங்கள் சொன்ன இடத்தில் நான் ராஜராஜன் கல்வெட்டு பார்த்துப் புகைப்படம் எடுத்திருக்கிறேன். இன்னொரு கல்வெட்டில் பதினைஞ்சு கழஞ்சு (இதுதான் மினிமம் பெற்றுக்கொண்டது என்று தோணுது) என்ற கணக்கில் நிறையபேர் பெயர் இருக்கிறது.

      நீக்கு
    4. யாழி படம் அனுப்பி விளக்க எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. நம்மிடம் (அதாவது நம் கோவில்களில்) 4-5 வகையான யாளிகள் உண்டு. அதில் ஒன்று யானையைவிட மிக மிகப் பெரியது. இன்னொன்று சிங்கமுக யாளி. இன்னொன்று வாலில் வித்தியாசம் இருக்கும். பெரிய யாளியின் படத்தை விளக்குவதற்குத்தான் கூச்சம். அதற்கு நீங்கள் யானையைப் பற்றிய டிஸ்கவரி சேனலில் வரும் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்திருக்கணும்.

      நீக்கு
  3. கண் டாக்டர் முன்னே அமர்ந்திருந்தார் அந்த நோயாளி.

    டாக்டர் கீழே உள்ள வரிசையில் கைகாட்டி "இதைப் படிக்க முடிகிறதா?" என்றார்.

    "முடியவில்லை" என்றார் அந்த நோயாளி.

    சற்றே மேலே குச்சியால் காட்டி "இது படிக்க முடிகிறதா?" என்றார் மருத்துவர்.

    "இல்லை டாக்டர்" என்றார் நோயாளி.

    அடுத்தடுத்து காட்டி எல்லாவற்றுக்கும் நோயாளி இல்லை என்றதும், மேலே பெரிய எழுத்தில் உள்ளெழுத்துகளை குச்சியால் ஆவேசமாகத்தட்டி "இந்த அ ஆ வாவது படிக்க முடிகிறதா?" என்றார் கண் டாக்டர்.

    "அதுதான் அ, ஆ வா டாக்டர்? நீங்கள் காட்டியது எல்லாமே தெரிந்தது.. ஆனால் எனக்குப் படிக்கத் தெரியாது" என்றாராம் நோயாளி!!!

    பழைய ஜோக்... இங்கே உதவுகிறது!


    என்ன பெரிதாக்கிப் பார்த்தாலும் அந்தக் கல்வெட்டு எழுத்துகளைப் படிக்கத் தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம்....அதே அதே....படிக்கத் தெரியவில்லை. ஜ ஞ என்று ஏதோ தெரிந்தது. ஆனால் இப்போதைய மலையாள எழுத்துகள் போலவும் இருக்கு சில....

      கீதா

      நீக்கு
    2. அவை கிரந்த எழுத்துக்கள். என்னால் படிக்க முடியவில்லை! :(

      நீக்கு
    3. அந்தக் கல்வெட்டில்
      ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு என்ற வரி தங்களுக்குப் புலப்படவில்லையா!?.

      நீக்கு
    4. புலப்பட்டால் நான் ஏன் உதாரணக் கதை எல்லாம் சொல்லித்திரியப்போகிறேன்?!!!! ஹிஹிஹி...

      நீக்கு
    5. கல்வெட்டு படிக்கக் கொஞ்சம் கஷ்டம். உடையார் என்ற பெயர் சிதிலமைந்திருக்கும். ராஜ ராஜ தேவர் என்று எழுதியிருக்கும் பல இடங்களில். எபி குழுமத்துக்கு இப்போ படம் அனுப்பறேன்.

      நீக்கு
    6. எழுத்துப் படிக்க முடியவில்லை என்று சொன்னேன். பெரிசாக்க முடியலை! :( அல்லது எனக்கு வரலை! ஓரளவுக்கு கிரந்தம் புரிந்தாலும் இதில் படிக்கையில் வரலை! :(

      நீக்கு
  4. சிற்படங்கள் யாவும் அற்புதம். நிறுத்தி நிதானமாக அழகாக எடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் அன்பினுக்கு நன்றி..

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் கதை சொல்கிறது.
    கல்லும் கவிபாடும் , கதை சொல்லும்.
    அற்புத வேலைப்பாடுகள். முன்பு வருட வ்ருடம் போய் பார்ப்போம்.
    எத்தனை முறை பார்த்தாலும் புதுமை தரும் கோவில்.
    சரக்கொன்றை மரம் சாய்ந்து விட்டது வருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகிய படங்கள் சிற்பங்களின் சிறப்பு அருமை. தொடர்ந்து வரட்டும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. படங்கள் அட்டகாசம். சிற்பங்கள் தெளிவாக உள்ளன. என்ன அழகான வேலைப்பாடு இல்லையா? கலைநயம். நிஜமாகவே கலை விருந்துதான்...ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொல்லுகிறது.

    யாளியில் இரு வகை என்பதும் இப்போதுதான் அறிந்தோம் அண்ணா...

    அருமை தொடர்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஆஹா... அருமையான படங்கள்.
    முருகன் பற்றிய சேதியையும் சொல்லுங்கள் அய்யா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அழகிய படங்கள். அருமையான படப்பிடிப்பு. தஞ்சைக்கோயிலில் இத்தனை நிதானமாகவும் அழகாகவும் படம் எடுக்க விடுகின்றார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! நாங்க போனப்போ எல்லாம் வெளிப் பிரகாரத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் படம் எடுக்க விட்டதில்லை. பையர் ஒரு முறை பெரிய நந்தியைப் படம் பிடிக்கையில் கோயில் ஊழியர் வந்து காமிராவைப் பிடுங்கிக் கொண்டு படத்தை அழித்துவிட்டுத் திரும்பக் கொடுத்தார்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தடவை கர்ப்பக்கிருகத்துக்கு எதிர்ப்புறம் ராஜராஜன் சிலையை (மீட்ட சிலை) பார்த்தேன். படம் எடுக்க ஆசைப்பட்டேன். போலீஸ்காரரும் ஒண்ணும் சொல்லலை, ஆனா கேமரா எல்லா இடங்களிலும் இருக்குன்னார். அப்புறம் தேவையில்லாமல் எதுக்கு ரிஸ்க் என்று விட்டுவிட்டேன். மற்றபடி எல்லா இடங்களிலும் படம் எடுத்தேன்.

      நீக்கு
    2. >>> கோயில் ஊழியர் வந்து காமிராவைப் பிடுங்கி...<<<

      அப்படியெல்லாம் கிடையாதே... மூலஸ்தானத்து அருகில் மட்டும் தான் மிரட்டுவார்கள்...

      பெரிய நந்தியின் அருகில் எல்லாம் படம் எடுக்க எவ்விதத் தடையும் இல்லையே...

      எவனாவது அரைக் கிறுக்கனாக இருந்திருப்பான்!..

      நீக்கு
  10. இன்னொரு முறை போக நேர்ந்தால் இவை எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொண்டு போக வேண்டும். மதுரைக்கோயிலில் தெற்கு கோபுரத்தில் இருந்து ஊஞ்சல் மண்டபம் தாண்டி அம்மன் சந்நிதி போகும் வரை உள்ள தூண்களில் கஜமுக யாளி! இந்த யாளி பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் ஆய்வு செய்து வைத்திருந்தேன். தேடணும்.

    முண்டகக்கண்ணி அம்மன் கண்ணெதிரே தோன்றுகிறாள்.

    பதிலளிநீக்கு
  11. பழைய கலை விருந்தையும் போய்ப் பார்க்கணும். நேரம் தான் இல்லை. ஒரு நாளைக்கு ஒருத்தர் பதிவுனு வைச்சுக்கணும்! :))))

    பதிலளிநீக்கு
  12. மறந்துட்டேனே, அந்த முருகன் பற்றிய விபரம், எனக்கு மட்டும் சொல்லிடுங்க! :)))) மண்டை காய்ஞ்சுடும் போல இருக்கு!

    பதிலளிநீக்கு
  13. அழகிய படங்கள்... அறிய வேண்டிய தகவல்கள்...

    பதிலளிநீக்கு
  14. சிற்பங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. மிகவும் தெளிவாகவும் இருக்கின்றன. புகைப்படங்கள் அருமை.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுதி தனி தனி எழுத்துகளாகச் சில புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சேர்த்து வாசிக்க இயலவில்லை. ரா ஜ தெரிகிறது.

    யாளி பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. பெரிய கோவிலில் நானும் இந்த யாளி சிலைகளை ரசித்து பார்த்து, படம் எடுத்தேன்..

    பிரமிப்பான நிமிடங்கள் ...பசங்களுக்கும் மிக பிடித்த இடம்


    தங்கள் படங்களும் வெகு அழகு ...

    பதிலளிநீக்கு
  16. அற்புதமான படங்கள்... ஒவ்வொன்றும் கலைநயம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..