நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 07, 2019

மங்கல மார்கழி 23

ஓம்

தமிழமுதம்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.. (396) 
*

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 23


மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி 
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் 
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த 
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்..
*

மழைக்காலத்தின் பொழுதுகளில்
மலைக் குகைக்குள் 
உறங்கிக் கிடந்த சிங்கமானது
உணர்வுற்று விழித்து
தீ எனச் சிவந்த விழிகளால் நாற்புறமும் நோக்கி
பிடரி முடிகளைச் சிலுப்பிக் கொண்டு
நீட்டி நிமிர்ந்து களை தீர்த்தபடி
பெருங்கர்ஜனை செய்தவண்ணம்
வேட்டைக்குப் புறப்படுவதைப் போல

காயாம்பூ வண்ணனே.. கண்ணனே..

நீயும் நின் திருமாளிகையிலிருந்து
புறப்பட்டருளல் வேண்டும்...

இங்கே உனது வருகைக்காக சீரிய சிங்காசனம்
காத்துக் கிடக்கின்றது...

அந்த சிங்காசனத்தின்
வென்கொற்றக் குடைக்கீழ் இருந்து
நாங்கள் வந்திருக்கும் காரியத்தினை ஆராய்ந்து
எமக்கு அருள் புரிதல் வேண்டும் பெருமானே!...
*

தித்திக்கும் திருப்பாசுரம் 

ஸ்ரீ கல்கருடன்
நாச்சியார்கோயில்  
கழல்தொழுதும் வாநெஞ்சே கார்கடல்நீர் வேலை
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன் எழிலளந்தங்கு
எண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை
நண்ணற் கரியானை நாம்.. (2288)
-: ஸ்ரீ பேயாழ்வார் :-

இயற்கையின் சீதனம்

புடல்


நமது மண்ணுக்கே உரித்தானவற்றுள்
புடலையும் ஒன்று...

சமையலறைக் காய்களுள்
மருத்துவ மாமணியாய்த் திகழ்வது..

நீர்ச் சத்து மிக்கது...
சிறுநீரகத்தை சுத்திகரிக்கின்றது..
குடல் புண்ணை ஆற்றுகின்றது...

நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால்
வயிற்றுக் கோளாறுகள்
நீங்குகின்றன..

உடல் மெலிந்து வலுவிழந்து
நலிவடைந்திருப்பவர்களுக்கு
புடலங்காய் மிகச் சிறந்த வரப்ரசாதம்...


சாதாரணமாக
வாரம் இருமுறை உட்கொண்டாலே போதும்...

ஆண்களுக்கு
உயிரணுக்களைப் பெருக்கி
வலிமையூட்டுகின்றது...

மிகவும் பாதிப்புற்று இருப்பவர்கள்
இதன் விதைகளை நிழலில் உலர வைத்து
ஒன்றிரண்டாக இடித்து
பாலுடன் கொதிக்க வைத்து
அருந்தினால் பலன் கிடைக்கும்...

இயற்கை சீயக்காய் தூளுடன்
இரண்டங்குல நீள புடலங்காய் துண்டையும்
சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்தால்
தேமல் முதலான தோல் நோய்கள் நீங்கும்...
 *

சிவ தரிசனம்
திருவைகாவூர்


இறைவன் -  ஸ்ரீ வில்வவனேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சர்வஜனரக்ஷகி

தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - யமதீர்த்தம்



அம்பிகை
ஈசனுக்கு இடப்புறமாக
கிழக்கு நோக்கிய வண்ணம்
விளங்குகின்றாள்..

மூலஸ்தானத்திற்கு இருபுறமும்
நான்முகனும் மாலவனும்
திகழ்கின்றனர்..



அகத்திய மாமுனிவர் 
வழிபட்ட திருத்தலம்..

ஏதும் அறியாத வேடன் ஒருவன்
இராப்பொழுதில் புலிக்கு அஞ்சி
வில்வமரத்தின் மீதிருந்து
இலைகளை உதிர்த்துப் போட்டபடி
இரவு முழுதும் விழித்திருந்தான்..

அந்தப் புண்ணியத்திற்காக
சிவதரிசனம் பெற்று முக்தி நலம் எய்தினான்...

சிவராத்திரி
பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது..
*  

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை
ஆளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல் கர்ந்தசிவ
லோகன் அமர்கின்ற இடமாம்
அஞ்சுடரொடு ஆறுபதம் ஏழின்
இசையெண் ணரிய வண்ணம் உளவாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது
சேரும் வயல் வைகாவிலே.. (3/71)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


மண்ணாகி விண்ணாகி மலையும் ஆகி
வயிரமுமாய் மாணிக்கம் தானே ஆகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியும் ஆகிக்
கலையாகிக் கலைஞானந் தானே ஆகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணும் ஆகிப்
பிரளயத்துக்கு அப்பால் ஓரண்டம் ஆகி
எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்தும் ஆகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.. (6/94) 
*

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத்தொகை
திருப்பாடல் 03

ஸ்ரீ நந்தனார் (திருநாளைப்போவார்)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39) 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

19 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    சிங்காசனத்தில் தங்கமகனை அமர அழைக்கும் அழைப்பைப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. தெரிந்த குறளும், சென்று வந்த திருத்தலங்களும் பதிவில் இடம்பெறும்போது ஒரு சிறு சந்தோஷம், அறிமுக உணர்வு! கல்கருடனைப் பார்திருக்கிறேனே...!

    பதிலளிநீக்கு
  3. மருத்துவ குணமுண்டா? நல்ல காயா? அப்பா நமக்குப் பிடிக்கக் கூடாதே... ஹிஹிஹி... ஆமாம்.. புடலை எனக்குப் பிடிக்காது!

    பதிலளிநீக்கு
  4. திருவைகாவூர் - கேள்வி(மட்டும்)ப்பட்ட ஊர்!

    பதிலளிநீக்கு
  5. திருவைகாவூர், நாச்சியார்கோயில் பல முறை சென்றுள்ளேன்.இன்று உங்கள் மூலமாக மறுபடியும் சென்றேன். புடலங்காயின் பெருமை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பாசுரம், அழகான ஓவியம். எளிமையான விளக்கம். திருவைகாவூர் சென்றதில்லை. புடலை இங்கே அடிக்கடி வாங்குவார். அவருக்கு ரொம்பப் பிடித்தமான காய்களில் ஒன்று. நீங்க சொல்றாப்போல் புடலை விழுதை அரைத்துத் தேய்ச்சுச் சின்ன வயசில் குளிச்சிருக்கேன். அரைகுறை நினைவு. நாம தான் விக்கிரமாதித்தன் மனைவியான இளவரசி போல் சந்திர ஒளி பட்டாலே கொப்புளிக்கும் தேகம் கொண்டவங்களாச்சே. வெயில் காலத்தில் உடலில் தோன்றும் ராஷஸை நீக்க இதைப் பயன்படுத்தி இருக்கேன். குப்பைமேனியும், வேப்பிலையும் கூட!

    பதிலளிநீக்கு
  7. நாச்சியார் கோயில், கல்கருடனைப் பார்த்திருக்கேன். நேரில் பார்க்கிறாப்போல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. இன்றைய தரிசனத்தோடு புடலங்காயின் மகிமை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  9. புடலை விழுதில் சிலர் துவையல் அரைக்கறாங்க. என்றாலும் நாங்க சாப்பிட்டதில்லை. விழுதை எடுத்துத் தூக்கித் தான் எறிவோம், இம்மாதிரிப் பயனுக்கு என்றால் எடுத்து வைப்போம்.

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம் துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. குறள் அமுதம், பாசுரம் விளக்கம் சிறப்பு..நாச்சியார்கோவில் கல்கருடன் தரிசனம் செய்ததுண்டு. திருவைகாவூர் சென்றதில்லை.

    படங்கள் அனைத்தும் அருமை.

    புடலங்காய் சிறப்பு சூப்பர். அடிக்கடி பயன்படுத்துவதுண்டு...ஏஞ்சல் புடலங்காய் தோசை போட்டுருந்தாங்க. நான் செஞ்சும் பார்த்தாச்சு...விதை ஆராய்ச்சி நல்லதா கெட்டதான்னு அங்கங்க்கே நடக்குது ஹா ஹா...நான் இளம் விதை மற்றும் புடல் உட்புறம் உள்ளதை துவையல் செய்வதுண்டு...

    அதே போல் அகத்தியர் பற்றி எபியில் பேசப்பட்டதும் உடனே ஏஞ்சல் அகத்தியர் படம் தன் மகளோடு பார்த்ததாகக் பெண்ணின் கேள்விகளோடு பதிவும் வந்திருக்கு...இங்கயும் அகத்தியர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. புடலங்காய் தகவல் புதுமை. கோவில் பற்றிய தொகுப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  13. குறள், படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
    பதிவு மிக நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. புடலை பூ மிக அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. அனைத்து அமுதமும் அருமை. படங்களும் நன்றாக இருக்கின்றன. புடலங்காயின் சிறப்பும் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. புடலங்காய் இங்கே அவ்வளவாகக் கிடைப்பதில்லை.

    தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  17. ஆஹா அற்புத தரிசனம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..