ஓம்
தமிழமுதம்
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை..(411)
*
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 24
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
*
அன்று திரிவிக்ரமனாக
மூவுலகும் அளந்த நின் திருவடிகள் போற்றி..
ஸ்ரீராமசந்த்ரனாக கோதண்டம் ஏந்தி
தென்னிலங்கை அரக்கனை வீழ்த்திய
நின் தோள் வலிமை போற்றி..
மாயச் சகடம் பொடிப்பொடியாகி உதிரும்படிக்கு
உதைத்தருளிய புகழ் போற்றி..
இவனைக் கொண்டு அவன் என்று
கன்றாக வந்த அரக்கனை
ககனத்தில் வீசி எறிந்து
மாற்றானையும் மாய்த்தொழித்த
நினது கழல்கள் போற்றி..
குன்றினைக் குடையாய் எடுத்து
பிருந்தாவனத்தைக் காத்தருளிய
கோவர்த்தனனே போற்றி..
பகைமையான குணத்தைக் கெடுப்பதுடன்
எதற்கும் அடங்காத பகைவரை முடிக்கும்படிக்கு
கூர்வேலினைத் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும்
தேவதேவனே போற்றி.. போற்றி!...
இனிமையான இந்த வேளையில்
என்றென்றும் நினது பணியையே ஏற்று நடத்தும்படிக்கான
மங்கலங்களை நினது திருக்கரங்களால்
பெறுவதற்காக வந்திருக்கின்றோம்...
எங்கள் மீது இரக்கம் கொண்டு
திருவருள் புரிவாயாக!...
*
தித்திக்கும் திருப்பாசுரம்
நாமம் பலசொல்லி நாராயணா என்று
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே வாமருவி
மண்ணுலகம் உண்டுமிழ்ந்த வண்டறையும் தண்துழாய்
கண்ணனையே காண்கநம் கண்.. (2289)
-: ஸ்ரீ பேயாழ்வார் :-
இயற்கையின் சீதனம்
சுரை
நமது மண்ணுக்கே உரிய
மற்றுமொரு சீதனம்...
முற்றிய சுரைக்காயைப் பக்குவம் செய்து
அதனைக் குடுவையாகப்
பயன்படுத்திய நாகரிகம் நம்முடையது...
அந்தக் காலத்தில்
பனையிலிருந்து கள் சேகரிப்பது
சுரைக் குடுவையில் தான்..
இப்படியான பயன்பாட்டிலும்
சமையலறையின் பலவகையான
செய்முறைகளிலும்
சுரைக்காயின் பங்கு மகத்தானது..
இதுவும் நீர்ச்சத்து மிக்கது...
உடற்சூட்டைக் குறைக்கின்றது...
உஷ்ண ஆதிக்கத்தால் விளையும்
பலவிதமான குறைபாடுகளை
சுரைக்காய் நீக்குகின்றது...
சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்துகின்றது..
பித்த நீர் சுரப்பினை சமன்படுத்துகின்றது..
இரத்த சோகையைப் போக்குவதுடன்
இரத்த விருத்தியைத் தூண்டுகின்றது..
மேற்குறித்த விஷயங்கள்
இயல்பான சமையலறைச் சார்ந்தவை..
சுரைக்காய் இலைக் கஷாயம்
மஞ்சள் காமாலைக்கு மருந்து என்கிறார்கள்..
இதெல்லாம்
தக்க மருத்துவர்களைக் கொண்டு
அணுகவேண்டியவை...
*
சிவ தரிசனம்
திருந்துதேவன்குடி
இறைவன்
ஸ்ரீ கர்கடகேஸ்வரர்
ஸ்ரீ கர்கடகேஸ்வரர்
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - தாமரைத் தீர்த்தம்
நண்டு வழிபட்டு உய்வடைந்த தலம்...
அரசன் ஒருவனுக்கு ஏற்பட்ட நோயை
அம்மையப்பன் மருத்துவராக எழுந்து
குணப்படுத்தியதாக ஐதீகம்...
திருந்துதேவன்குடி எனும் திருத்தலம்
இப்போது இல்லை..
திருக்கோயில் மட்டுமே உள்ளது..
தற்காலத்தில்
நண்டாங்கோயில் என, வழங்கப்படுகின்றது..
ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு
மருந்து வேண்டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே.. (3/25)
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்
கல்லாகிக் களறாகிக் கானும் ஆகிக்
காவிரியாய்க் காலாறாய்க் கழியும் ஆகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடும் ஆகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளும் ஆகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழல் ஆகி
நெல்லாகி நிலனாகி நீரும் ஆகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.. (6/94)
*
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத்தொகை
திருப்பாடல் 04
ஸ்ரீ திருநாவுக்கரசர் |
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39)
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
குட்மார்னிங். கற்றலிற் கேட்டல் நன்று!
பதிலளிநீக்குஅவன் புகழ்ப்பாடினாலாவது மயங்கி எழுந்து வரமாட்டானா மணிவண்ணன்?!!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை அண்ணா...
பதிலளிநீக்குஅன்று இவ்வுலகம் அளந்தவனைக் காண வரேன்...வேலை முடித்துவிட்டு..
கீதா
நேற்று சொன்ன மாதிரிதான்! சுரைக்காய் உடம்புக்கு நல்லது. ஆனால் ஒருமுறை கூட நான் அதைச் சுவைத்ததில்லை!!! ஹிஹிஹி...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகர்கடகேஸ்வரரையும் அருமருந்து அம்பிகையையும் வணங்கிக்கொள்கிறேன்!
பதிலளிநீக்குஇன்றைய சுரைக்காய் குறித்த விடயங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குபகைவர்களை அழிக்கும் உன் கையிலுள்ள வேல் போற்றி..
பதிலளிநீக்குஅருமருந்து அம்பிகை , அபூர்வ நாயகி தரிசனம் கிடைத்தது ...
சுரையின் சிறப்பு மிக அருமை ...
திவ்ய தரிசனம்... அருமை ஐயா...
பதிலளிநீக்குஅமுதம் அனைத்தும் அருமை. இதில் மூன்று அவதாரங்கள் சொல்லப்படுகிறது..
பதிலளிநீக்குதிருந்துதேவன் குடி படங்கள் அழகு. சென்றதில்லை.
சுரைக்காயின் பலன்கள் அறிந்தோம். இதுகான்சருக்கும் நல்லது என்று மருத்துவரால் சொல்லப்பட்டு என் நாத்தனாருக்கு உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அப்போதுதான் அவர்கள் பழகினார்கள்....என் புகுந்தவிட்டில் சுரைக்காய், பீர்க்கங்காய் எல்லாம் சேர்த்ததில்லை. இப்போதும் எங்கள் குடும்பத்தில் ஒரு குடும்பம் பீட்ரூட், காலிஃப்ளவர் பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற காய்களைச் சேர்த்துக் கொள்வதில்லை...
நம் வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு...
கீதா
மாதவன் தரிசனம் அருமை.
பதிலளிநீக்குசிவதரிசனம் பார்த்த கோவில் கண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தேன்.
திருந்துதேவன் குடி கோவில் அடிக்கடி போய் இருக்கிறோம்.
பழுதுபட்டு இருந்த போதும், கோவில் நல்லநிலை ஆனபோதும்.
இரண்டு அம்மன் உண்டு.
நண்டு பூஜை செய்த துவாரம் சிவலிங்க திருமேனியில் இருப்பதை மலர்சரத்தை துவாரத்தில் விட்டு குருக்கள் காட்டுவார்.
அந்த கோவிலில் கிடைக்கும் அருமருந்து எண்ணெய் நோய்தீர்க்கும் மருந்து என்று மக்கள் நம்பிக்கையுடன் வாங்கி செல்வார்கள்.
வட நாட்டில் பேறுகாலம் நடைபெற்ற தாயுக்கு தினம் உணவில் சேர்த்துக் கொள்ள சொல்வார்கள்.
பதிலளிநீக்குஅங்கு எல்லோரும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வர்.
எங்கள் வீடுகளில் சுரைக்காய் அடை, பஜ்ஜி, சிறுபருப்பு போட்டு கூட்டு செய்வோம்.
ருசியாக இருக்கும்.
திருப்பாவைக்கான படம் வெகு அழகு. இந்த ஓவியர் வரைந்த படங்களை கீதா அக்கா முக நூலில் பகிர்ந்திருக்கிறார்.
பதிலளிநீக்குசுரைக்காய்க்கு சுற்றுப்புறத்தில் உள்ள நெகட்டிவ் எனர்ஜிகளை ஈர்த்துக் கொள்ளும் தன்மை உண்டாம். அதனால்தான் அதை வீட்டுக் கூரை மேல் படர விடும் பழக்கம் இருந்தது, அதனால் நெகட்டிவ் எனர்ஜி வீட்டிற்குள் நுழையாதாம். ஒருவேளை இந்த காரணத்தினால்தான் சுரைக்காயை சாப்பிடக்கூடாது என்று சொன்னார்களோ என்று ஒரு சந்தேகம்.
கற்கடேஸ்வரர் கோவிலுக்கு ஒரு முறை சென்றிருக்கிறோம். அங்கு நான்கு பைரவர்கள் உண்டு. வேலையில் மேலதிகாரிகளால் ஏற்படும் தொல்லைகளுக்கு அந்த பைரவர்களை வணங்குவது நலம் என்பார்கள்.
படங்கள் அழகு. தகவல்கள் சிறப்பு.
பதிலளிநீக்குஇங்கே சுரைக்காய் அதிகம் பயன்படுத்துவார்கள். கோஃதா செய்வது உண்டு.