நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 10, 2019

மங்கல மார்கழி 26

ஓம் 

தமிழமுதம்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.. (416)
*

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 26


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே 
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே 
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்...
*
மாலே.. எங்கள் மணிவண்ணா..

மார்கழி நீராடி
ஆன்றோர்கள் உரைத்த வண்ணம்
நோன்பினை நோற்பதன் முன்
அதற்கான மங்கலங்களாகிய

பாஞ்ச சன்னியத்தைப் போன்று
முழங்க வல்ல சங்குகளையும்
சாலப் பெரும் புகழுடைய பறைகளையும்
பல்லாண்டு இசைத்துப் பாட வல்லார்களையும்
கோல விளக்கினையும் திருக்கொடியினையும்
முத்து விதானத்தையும்
எமக்கு நல்குதல் வேண்டும்!...

ஆலின் இலையில்
அன்றொரு பாலகனாக அவதரித்தவனே..
ஆண்டருள் புரிதல் வேணும் எம்பெருமானே!..
*


தித்திக்கும் திருப்பாசுரம் 

ஸ்ரீ ராஜகோபாலன் - மன்னார்குடி  
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்குதீ நீருருவும் ஆனான் பொருந்தும் சுடராழி
ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நீநெஞ்சே தொழுது.. (2305)
-: ஸ்ரீ பேயாழ்வார் :-

இயற்கையின் சீதனம்  

சுண்டைக்காய்



இதெல்லாம்
எனக்கு சுண்டைக்காய் மாதிரி!..
- என்று, பலரும் மார் தட்டுவார்கள்...

அத்தனை சின்ன விஷயமாகக்
கருதப்படும் சுண்டைக்காய்
மக்களுக்கு செய்யும் நலன்கள்
பலப்பல!...



கத்தரியின் குடும்பம் தான் இதுவும்..

கத்தரி சதைப் பிடிப்பாக இருக்கிறது..
சுண்டைக்காய் விதை நிறைந்ததாய் இருக்கிறது...
அவ்வளவு தான்!.. ஆகவே,

கத்தரிக்கு தங்கை என்றே கொள்ளலாம்...

வற்றலாக்கிப் பயன்படுத்துவதும்
சுண்டைக்காயின் சிறப்பைக் காட்டும்...

இதுவும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுடன்
சிறுநீரகத்தையும் மேம்படுத்தி
இன்றைய மானுடர்க்கு மகத்தான
நன்மையைச் செய்கின்றது..

அத்துடன்
இரத்தத்தில் சர்க்கரையைச்
சமன் செய்கின்றது...



நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கு
மிகச் சிறந்த வரப்ப்ரசாதம்...

வயிற்றிலுள்ள கிருமிகளை அழித்து
குடல் புண்களை ஆற்றுகின்றது..

சற்றே கசப்புச் சுவையுடைய சுண்டைக்காயை
வாரம் ஒருமுறை சாப்பிட்டாலே போதும்...
*

சிவதரிசனம் 
திரு இரும்பூளை
- ஆலங்குடி -


இறைவன் - ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஏலவார்குழலி  

தலவிருட்சம் - இரும்பூளை  
தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி

இன்றைக்கு 
குரு ஸ்தலம் என்று
சுட்டிக் காட்டப்படும் திருத்தலம்..

குரு என்றால்
ஆன்மீக வணிகமும் ஊடகங்களும் குறிப்பது
நவக்ரஹ மண்டலத்திலுள்ள
 வியாழன் எனப்படும் பிரகஸ்பதியை!..

வியாழ தோஷங்களைப் போக்கிக் கொள்வதற்கு
பிரகஸ்பதிக்குத் தான் பரிகாரங்களே தவிர

எல்லாம் வல்ல எம்பெருமானின்
திருவடிவங்களுள் ஒன்றான
 தென்முகத் திருக்கோலத்துக்கு அல்ல!...



எம்பெருமானின்
ஆலமர் செல்வன் எனும் 
தென்முகத் திருக்கோலம்
சனகாதி முனிவர்களுக்கு
வேதப்பொருளை உபதேசிக்கும்
திருக்கோலமாகும்...

இவ்வேளையில் - இடையூறு செய்து
சாம்பலாகிப் போனவன் தான்
மன்மதன்...

வியாழ மூர்த்தியாகிய
ஸ்ரீ ப்ரகஸ்பதிக்கு செய்வதாகிய
மஞ்சள் வஸ்த்ரம் சாற்றுவது
அவருக்கு உகந்ததான
கொண்டைக்கடலை சமர்ப்பிப்பது
முதலானவற்றை
ஆலமர் செல்வனின் சந்நிதியில் செய்வது
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை...
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

சீரார் கழலே தொழுவீர் இதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் உடனாகி
ஏரார் இரும்பூளையிடங் கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ்சு அமுதுண்ட கருத்தே.. (2/36)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 

ஸ்ரீ ஆலமர் செல்வன்
ஆலங்குடி..
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறும் ஆகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி ஆகி
நீள்விசும்பாய் நீள் விசும்பின் உச்சிஆகி
ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வன் ஆகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே..(6/94)
*

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை
திருப்பாடல் 06


வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக் கோன் அடியேன்
ஆரூரர் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
*** 

12 கருத்துகள்:

  1. குட்மார்னிங். சிறுவயதில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த குறள்!

    பதிலளிநீக்கு
  2. அதேபோல இந்த திருப்பாவையும் திருப்பாவை என்று அறியாமலே சிறுவயதிலிருந்து எம் எல் வி குரலில் கேட்டு ரசித்து பழக்கம்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா.. மன்னார்குடி ராஜகோபாலரை தரிசித்திருக்கிறேன். சுண்டைக்காய் எனக்குப் பிடிக்கும். மதுரை சுண்டைக்காய் என்று இதில் ஒரு ரகம் இருக்கிறது. அது இன்னும் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுண்டைக்காய் தகவல் புதிது ஸ்ரீராம்...ஓ மதுரை வெரைட்டி சிறந்ததா...கீதாக்கா ஓடி வருவாங்களே!!!

      கீதா

      நீக்கு
    2. ஆமாம், அங்கே சுண்டைக்காயும் மிதுக்க வத்தலும் ரொம்பவே பிரபலம். வேறே ஊர்களில் மிதுக்க வத்தல் கிடைச்சுப் பார்த்ததில்லை.

      நீக்கு
  4. ஆலங்குடி - பக்திப் பாடல்கள் எழுதும் ஆலங்குடி சோமு இந்த ஊர்க்காரர்தானோ!

    பதிலளிநீக்கு
  5. சுண்டைக்காயை பெரும்பாலும் பலர் விரும்புவது இல்லை.
    இன்றைய தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் துரை அண்ணா...

    குறள் மிகவும் அருமை...நன்றாகத் தெரிந்த குறள்..பள்ளியில் படித்ததால் ஹா ஹா ஹா..

    மாலே மணிவண்ணா அருமையான ராகத்தில் அமைந்த பாடல் குந்தலவராளி...

    மன்னார்குடி ராஜகோபாலன் கோயில் போயிருக்கிறேன் என்று நினைக்கிறேன் பசபசப்பான நினைவு...

    ஆலங்குடி சென்றதில்லை. படங்கள் எல்லாமே அழகு...

    சுண்டைக்காய் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்...பல வகை செய்வதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான தரிசனம் ....

    பதிலளிநீக்கு
  8. அழகான ஓவியத்திற்கேற்ற அருமையான பாசுரம். மன்னார்குடி ராஜகோபாலன் அழகை எத்தனை முறை கண்டாலும் அலுக்காது. ஆலங்குடி போயிருக்கோம். சுண்டைக்காய்க் குழம்பு வைச்சால் சுண்டைக்காயை மட்டுமே தொட்டுக்கொண்டு சாப்பிடும்படி அவ்வளவு போடுவேன். இங்கேயும் எல்லோருக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அருமையான பதிவு.
    பாடல் விளக்கம், சுண்டைக்காய் பயன்கள் எல்லாம் மிக அருமை.
    சுண்டைக்காய் வற்றல், பச்சைசுண்டைக்காய் குழம்பு எல்லாம் பிடிக்கும்.
    மன்னார்குடி, ஆலங்குடி எல்லாம் அடிக்கடி போய் இருக்கிறோம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அன்பு துரை செல்வராஜு.
      பாசுரங்கள் திருமாலைத் தெரிசிக்க வைத்தன.

      திருவெம்பாவைப் பாடல்கள் அனைத்தும் மனப்பாடம் செய்து பாடவேண்டும் எங்கள் ஊர் திருமங்கலத்தில். மீனாட்ச்கி அம்மன் கோவிலில்.
      பொங்கலுக்காக்ப் பாடியவை மனதில் பதிந்து விட்டன.

      ஓ மதுரை சுண்டைக்காய். நினைத்தே பார்க்கிறேன். மதுரை ஸ்பெஷல் தான் எல்லா விதத்திலும்.
      மிக நன்றி துரை ம. தை மகள் பிறக்கும் போது அகக் குளிர் புறக் குளிர் விலகி நல்ல மாற்றம் வந்து செழிப்பாக இருக்கணும் நீங்கள்.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..