நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


புதன், ஏப்ரல் 03, 2013

திருநெடுங்களம்

நினைத்து எழுவார் தம் இடர் களையும் இறைவன் உறையும் தொன்மையான திருத்தலம் - திருநெடுங்களம்.

அம்பிகை தவம் செய்த திருத்தலங்களுள் ஒன்று..

ஐயன் அருள் வடிவங்காட்டி அம்பிகையை ஆட்கொண்டருளிய திருத்தலம்..

 
மூலத்தானத்தில் சிவலிங்கத் திருமேனியுடன் அம்பிகையும் அருவமாக உறைவதாக ஐதீகம். 

எனவே மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்துள்ளன..
     
ஆலமர் செல்வன், இடக்காலைச் சுற்றி யோக பட்டம் அணிந்து, யோக தட்சிணாமூர்த்தி என விளங்குகின்றனர். அருணகிரி நாதர் பாடிப் பரவிய திருமுருகன் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் திருச்சுற்றில் திகழ்கின்றனன். 

அகத்தியர் வணங்கிய திருத்தலம். 
வங்கிய சோழன் பூஜித்த தலம். 
திருஞானசம்பந்தர் பதிகம் பாடி இன்புற்ற திருத்தலம்.


இறைவன் - ஸ்ரீநித்தியசுந்தரர். 
அம்பிகை - மங்கலநாயகி, ஒப்பிலாநாயகி. 
தீர்த்தம் - அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
தல விருட்சம் - வில்வம். 

திருஞானசம்பந்தர் அருளிய - இடர் களையும் திருப்பதிகம் 
முதல் திருமுறை. திருப்பதிக எண் - 52 .

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுஉனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால்  உயர்ந்த
நிறையுடையார்  இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 1
... 

கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடல்ஆடல் பேணிஇராப் பகலும்
நினைத்து எழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 2
...

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற்று உதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 3
...

மலைபுரிந்த மன்னவன்தன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும்  அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்  தாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 4
...

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்  தாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 5
...

விருத்தனாகிப் பாலனாகி வேதம்  ஓர்நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 6
...

கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டிஓர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம்எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தம் ஈதென்று  எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 7
...

குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற  அரக்கர்கோனை  அருவரைக்கீழ்  அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால்  ஏத்திஇராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 8
...

வேழவெண்கொம்பு  ஒசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழஎங்கும் நேட ஆங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம்பு  அணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 9
...

வெஞ்சொல் தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவம்  ஒன்று அறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே. - 10
...

நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. - 11

*  *  *

திருநெடுங்களம் - சோழநாட்டின் காவிரி தென்கரையில் உள்ள திருத்தலம். திருஎறும்பூருக்குக் கிழக்கே உள்ளது. தஞ்சை - திருச்சி பேருந்து வழியில் துவாக்குடி வந்து அங்கிருந்து வடக்கே - மாங்காவனம் வழித்தடத்தில் செல்ல வேண்டும். திருச்சியிலிருந்து பேருந்து வசதிகள்  உள்ளன.

அனைத்து விசேஷங்களும் பிரதோஷ வழிபாடுகளும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன.

நம்பிக்கையுடன் ஒருமுறை திருநெடுங்களம் சென்று வாருங்கள்!.


திருக்கோயிலின் கோபுர வாசலில் ஸ்ரீ கருப்பஸ்வாமியைக் கண்டதுமே நம் கெட்ட வினைகள் ஓடிப்போகும்.

இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட முயற்சி செய்யுங்கள்.

வரமருளும் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் - ஸ்ரீதேவி, பூதேவியருடன்  திருச்சுற்றில் விளங்குகின்றார். தவிரவும் - அன்னை ஜேஷ்டா தேவியும் விளங்குகின்றாள்..

நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் எதுவாயினும் சரி. திருநெடுங்களம் சென்று வந்தால், திரும்பிப் பார்க்கும் பொழுதுக்குள் அந்தப் பிரச்னைகளை  விட்டு  - நாம் வெகு தூரத்தில் இருப்போம்!.

திருநெடுங்களம் - 

மீண்டும் தரிசிக்கும்படியான உணர்வினை நல்கும் திருத்தலம்.

நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!...

திருச்சிற்றம்பலம்!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக