நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

அம்மன் தரிசனம் - 03

ஆடிப் பதினெட்டாம் நாள்.

ஸ்ரீரங்கம். பூலோக வைகுந்தம். ஆழ்வார்கள் பாடியருளிய திருத்தலம். 

பொங்கிப் பெருகிய புது வெள்ளம் தவழும் அம்மா மண்டபத்தின் படித்துறை.   


அரங்கனை எதிர்நோக்கி அங்கேயே - பூங்கொடியாள் பொன்னி  - சுழித்துக் கொண்டிருக்கின்றாள். 

அதோ  - காவிரிப் பூம்பாவைக்கு என மங்கலப் பொருட்கள் - யானையின் மீது ஊர்வலமாக வருகின்றன. யானையின் மீது  வந்த மங்கலப் பொருட்கள் அனைத்தும் அரங்கனின் முன்னிலையில் சரி பார்க்கப்படுகின்றன. 

நிறை மங்கலங்களை, நிறைந்த மனதுடன் - காவிரிக்கு சீர் செய்கின்றான் - அரங்கன். 

அகமும் புறமும் குளிர்கின்றது. ''..இன்றுபோல் என்றும் பொங்கிப் பெருகி வாழ்க!..'' -  என மங்கல வாழ்த்தொலி கேட்கின்றது!..

இப்படி அரங்கனின் சீர் செய்வது காவிரிக்கு மட்டும் தானா!.. 

அன்புக்கோர் அண்ணன் என - அரங்கன் முன் நின்று -  சீர் செய்யும் மற்றோர் நாள் - தை பூசம்.

சங்கொடு சக்கரம் தாங்கிய திருக்கரத்தான் -  வழங்கும் சீர்வரிசையை வாஞ்சையுடன் ஏற்று மகிழ்பவள் -  சஞ்சலம் தீர்க்கும் சமயபுரத்தாள்!..

தன் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கென -  பச்சைப் பட்டினி விரதம் ஏற்பவள் - சமயபுரத்தாள்!..


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை தொடங்கி இருபத்தேட்டு நாட்களுக்கு அம்பிகை மேற்கொள்ளும் பச்சைப் பட்டினி விரதம் ஒன்றே அவளது பாசத்தைச் சொல்லும்!..

அதனால் தானே, அந்தப் பூவாடைக்காரிக்கு - அன்பின் மிகுதியால் அன்பர்கள் கூடி - பூச்சொரிந்து -  புது மலர்த் தாளைத் தலைமேற் சூடிக் கொள்கின்றனர்.

(முந்தைய பதிவு -   பூச்சொரிதல் - 2013 )

''..எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா!..'' - என,  எங்கிருந்தும் வேண்டிக் கொள்பவர் தம் - இன்னல்களையும் இடையூறுகளையும் நீக்குவதனால்,

''..சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்!..'' - என்று நம்மால் நிம்மதியுடன்  வாழ முடிகின்றது.


அபயக்கரம் கொடுத்து ஆதரிக்கும், ஆயிரங்கண்ணுடைய அம்பிகையை ஆராதிக்கும் பாடல்களுள் மிகச்சிறப்பானது - மாரியம்மன் தாலாட்டு.

தாளமுடியாத வெப்பத்தினால் ஏற்படும்  அம்மை நோயால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களுக்கு  ஆறுதலும் தேறுதலும் தருவது - மாரியம்மன் தாலாட்டு.

சமயபுரம், தஞ்சை புன்னைநல்லூர், வலங்கைமான் , நாகை நெல்லுக் கடை இன்னும் பல்வேறு - மாரியம்மன் திருக்கோயில்களிலும், இந்த மாரியம்மன் தாலாட்டினைப் பாடி நோய் நீங்கப்பெறும் மக்களைக் காணலாம்.

பழைமையான மாரியம்மன் தாலாட்டு - இன்று வலைத்தளங்களில் காணக் கிடைக்கின்றது.  மாரியம்மன் தாலாட்டு - எந்த நேரத்திலும் வாசிக்கலாம் எனக் குறிப்பிடுகின்றனர். அது எவ்வளவு தூரம் சரியானது என்று எனக்குத் தெரியவில்லை.


ஸ்ரீமகாசக்தி -  காளி என வடிவு கொண்டு வரும் போது சில குற்றங்குறைகளை பொருட்படுத்துவதில்லை. ஆனால்,

மாரியம்மன் எனத் திருக்கோலம் தாங்கி வரும் போது  - அகந்தூய்மையையும் புறந்தூய்மையையும் மிகப் பெரிதாகக் கொள்கின்றாள்.

ஆருயிர்களிடத்தில் இரக்கம் உடையவள் அன்னை. எனினும்  நோய்களைத் தீர்ப்பவள். ஆதலால் - ஆசாரக் குறைவுகள் இருக்கக் கூடாது என்பது திருக் குறிப்பு. நோயுற்ற மக்கள் நலம் பெற வேண்டி மாரியம்மனை அழைக்கும் போது சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகின்றது.

மாரியம்மன் தாலாட்டினை வாசிக்கும் போது அன்னை - தன் பரிவாரங்கள் சூழ வந்து  நிற்பாள். எனவே, மாரியம்மன் தாலாட்டினை வாசிக்க ஏற்றது - மிகவும் சுத்தமான வசிப்பிடம். அல்லது,

அவளது திருக்கோயிலே!..

மாரியம்மன் தாலாட்டினை -  மனதின் உள்வாங்கி - அதன் சாயலாக -  சில வரிகளை என்னளவில் பதிவிடுகின்றேன்!.. 

குற்றங்குறைகளை அன்னை மன்னிப்பாளாக!..

மக்களோடு மக்களாய், மனையிருக்கும் மாதரசி - மாரியம்மன் திருவடிகளைத் தொட்டு வணங்கி -

அம்மன் தரிசனம்!.. 


மாயி மகமாயி மணிமந்திர சேகரியே
ஆயி உமை ஆனவளே ஆஸ்தான மாரிமுத்தே!..
மாநிலத்தைப் பெற்றவளே மாதரசி வாருமம்மா 
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா!.. 

குழந்தை வருந்துறதுன் கோயிலுக்குக் கேட்கலையோ 
மைந்தன் வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கலையோ!..
வருந்தி அழைக்கின்றேன் வண்ண முகங்காணாமல் 
திருந்தி அழைக்கின்றேன் தேவி முகங் காணாமல் 

உன்னைப் போல்ஒரு தெய்வம் உலகத்தில் கண்டதில்லை 
என்னைப் போல்பிள்ளையும் தான்எங்குமுண்டு வையகத்தில்!..
தங்கமுத்து வடம் அசைய கொங்கை ரெண்டும் பாலொழுக 
ஏற்று எனை வரந்தருவாய் என் தாயே  மாரியம்மா!.. 

உற்றவளாய் நீயிருந்து உத்தமியே காத்திடம்மா 
பெற்றவளே பெரியவளே மங்கலமாய் காத்திடம்மா!..
பக்கத்தில் நீயிருந்து பாலகனைக் காத்திடம்மா 
எக்கணமும் இங்கிருந்து உன்மகனைக் காத்திடம்மா!..


ஏழைக் குழந்தையம்மா எடுப்போர்க்குப் பாலனம்மா 
பச்சைக் குழந்தையம்மா பரிதவிக்கும் பிள்ளையம்மா!..
உற்றவளாய் நீயிருக்க உன்மடியில் நானிருக்க
பெற்றவளாய் நீயிருக்க என்மனதில் என்ன குறை!..

தீவினையும் தீர்ந்தழிய திருநீற்றில் காத்திடம்மா 
திக்கெல்லாம்  நிற்பவளே தீர்த்தத்தில் காத்திடம்மா!..
கோலவிழியழகி குங்குமத்தில் காத்திடம்மா 
மாரி மகமாயி மஞ்சளிலே காத்திடம்மா!..

வேம்பு ரதமேறி வித்தகியே வாருமம்மா 
பச்சிலை ரதமேறி பார்வதியே வாருமம்மா!..
வெள்ளிப் பிரம்பெடுத்து வீதிவழி வந்திடம்மா
தங்கப் பிரம்பெடுத்து தயவுடனே வந்திடம்மா!.. 


இந்தமனை வாழுமம்மா  ஈஸ்வரியே வந்திடுவாய் 
வந்தமனை வாழுமம்மா வடிவழகி வந்திடுவாய்!..
சொல்லத் தெரியவில்லை சோதியுள்ள மாரிமுத்தே 
சொன்னதும் போதவில்லை நீதியுள்ள மாரிமுத்தே!..

6 கருத்துகள்:

  1. மாரியம்மன் தாலாட்டு மனதைத் தொட்டது. மாரியம்மன் அருள் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி!..

      நீக்கு

  2. அண்மையில் சமயபுரம் சென்றிருந்தேன். நிறையவே மாற்றங்கள். தஞ்சாவூர் ஓவியமாக சமய புரத்தாளைத் தீட்டீருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!.. தங்களின் மேலான வருகை என்னை மகிழ்விக்கின்றது!.. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு
  3. அகமும் புறமும் குளிர்கின்றது. ''..இன்றுபோல் என்றும் பொங்கிப் பெருகி வாழ்க!..'' - என மங்கல வாழ்த்தொலி கேட்கின்றது!..


    அகமும் கனமும்குளிரவைத்த அருமையான பகிர்வு ஐயா.. பாராட்டுக்கள்..

    ஆச்சரியம் தருகிறது ...
    சமயத்தில் காப்பாள் சம்யபுரத்தாள் என நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன் ..
    http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  4. தாங்கள் வருகை தந்து பாராட்டும் போது என் கண்கள் பனிக்கின்றன!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..